Thursday, 26 December 2024

அசோகமித்திரன் சிறுகதைகள் வாசிப்பனுவம் - 11 - 20

 



11. இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்


இந்திரா, தனக்கு வீணை கற்று கொள்ள ஆசை என்பதை முதலில் அப்பாவிடம் சொல்ல சொன்ன அவளது அம்மா, கதையின் முடிவில் அவளே அப்பாவிடம் சொல்லி பணம் வாங்கி தருவதாக சொல்கிறாள்.  

இதற்கிடையில் நடப்பது தான் கதை. அம்மா பிள்ளைகளின் பரஸ்பர விட்டு கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலுமான கதை.


குடும்பத்தின் பொருளாதார நிலைமையை கண்டு பிள்ளைகள் தனக்கு பிடித்த விஷயங்களை சொல்லாமல் தவிர்ப்பதும், பெற்றோர்கள் அதனை புரிந்து கொண்டு மேலும் தங்களை வருத்தி பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சிப்பதும் சொல்லப்பட்டுள்ளது. 

அம்மாக்கள் செய்வது கஞ்சத்தனம் இல்லை, அதுவும் ஒரு சேமிப்பு தான் என்று இருந்த காலம். 


12. ஐந்நூறு கோப்பை தட்டுகள்


தன்னிடம் உள்ளதை பொருட்படுத்தாமல் எப்போதும் வேறு ஒன்றையே நினைத்துக் கொண்டிருக்கும் சய்யதின் கதை. அவர் செல்வந்தராக இருந்த போது, செல்வத்தில் அக்கறையே இல்லாதது போல் இருந்தார். அவருடைய செல்வம் எல்லாம் போன பின்பு தான் அவருக்கு பசி என்பதே அதிகமாகியது. 


ஒரு நிலையில் இருப்பவர்களால் அவர்கள் நிலையை ஏற்று கொள்ள முடியாமல், வேறு ஒன்றை மனம் பாவனை செய்ய தொடங்குகிறது. அதில் உருவாகும் ஆற்றாமையும், பொறாமையும் மற்றவர்கள் மேல் வெறுப்பாக உருவாகிறது. அதனாலேயே என்னமோ அவர் அந்த சந்தோஷமான முட்டாள் புறாவை கொல்ல முற்பட்டார். அவருக்கு வந்த  'ஐந்நூறு கோப்பை தட்டுகள்' ஆர்டர் பொய் என்று தெரிந்ததும், அந்த புறாவை அவர் நினைப்பது அதனை கொல்லாமல் விட்டு விட்டோமே என்ற ஆற்றாமையாக கூட இருக்கலாம். எதோ ஒரு வகையில் அந்த புறா கூட தப்பி பிழைக்கிறது, ஆனால் நமக்கு தான் எந்த ஒரு வழியும் இல்லை என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம். ஆனால் வெளி உலக மாற்றத்தை ஏற்காமல் , தன்னுள்ளே சுழன்று கொண்டிருப்பவர்களுக்கு அது பொறாமையும், எரிச்சலும் தவிர வேறு என்ன தர முடியும்?


13. ஒரு ஞயிற்றுக்கிழமை


தந்தையே தான் மகளுக்கு திருமணம் செய்து வைத்தால் அவள் சம்பாரிக்கும் பணம் தனக்கு கிடைக்காது என்றெண்ணி அவளின் திருமணத்திற்கு தன்னை அறியாமலேயே பல தடங்கல்கள் செய்கிறார். அதை அவரே உணரும் தருணம் தான் இந்த கதை. 


குடும்பம் என்ற அமைப்பு எவ்வளவு தான் உறவுகளின் மேல் அன்போடும், பரிவோடும் இருக்கச் செய்தாலும், சுய நலமில்லமல் எந்த ஒரு அமைப்பும், இயங்கி விட முடியாது என்றே நினைக்கிறேன். அது எந்த உறவில் எப்போது வெளிப்படும் என்று யாராலும் சொல்லி விட முடியாது. 


14. இரு நண்பர்கள்


ஒருவர் திருமணம் ஆனவர். இன்னொருவர் ஆகாதவர். இவர்கள் ஒரு மாலை வேளையில் சந்தித்து தங்கள் பொருளாதார நிலைமையும், சில தத்துவார்த்த உரையாடல்களையும் சொல்லிச் செல்கிறது கதை.

1960 இல்எழுதிய கதையில் அசோக மித்திரன், மக்கள் தங்கள் வாழ்க்கையில் "ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்" என்று எழுதி இருக்கிறார். அவர் இப்போது இருக்கும் வாழ்க்கையினை எழுதி இருந்தால், என்ன எழுதி இருப்பாரோ தெரியவில்லை. குடும்ப உருவுகளில் ஏற்படும் சிக்கல்களை சொல்லி அதிலிருந்து விலகி இருக்க நினைக்கும் ஒருவன். ஆனால் அதே சமயம் அவன் தான் திருமணம் செய்து கொண்டால் அந்த பெண் இறந்து விடுவாள் என்பதினால் தான் இவன் கல்யாணத்தை வேண்டாம் எங்கிறானோ என்றும் யோசிக்க வைக்கிறது. தனக்கு கிடைக்காத பழம் புளிப்பு எனது போல், தனக்கு நிகழாத ஒன்றை நினைத்து எங்குவதாக அது உள்ளது.


குடும்ப உறவில் சிக்கி அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னொருவன் அவனை அதிர்ஷ்டக்காரன் என்று சொல்வது இருவரும் தங்கள் கவலைகளை ஒரே காரணத்திற்காக மாற்றிக் கொள்வது போல் உள்ளது. 


15. அவனுக்கு மிகப் பிடித்தமான நஷத்திரம்


கதை ஆரம்பத்தில் சிரித்துக் கொண்டே வாசித்தேன். அந்த நடிகையின் (நஷதிரத்தின்) மேல் மலிவான புளி உருண்டைகள் ஒட்டிக் கொண்டதை ராமசாமி ஐயர் கஷ்டபட்டு எடுப்பதும், அதனால் ஸ்ரீராம் அவரை திட்டுவதும் ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டை இட்டுக் கொள்வது தான் என்று நினைத்தேன். அது ராமசாமியின் பிள்ளையை கொல்லும் வரை.பழி உணர்வு அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதன் தீ பரவிச் சென்று யாரை எப்படி தாக்கும் என்று சொல்லி விட முடியாது.


ராமசாமியின் மனைவி தன் பிள்ளை இறக்க காரணமாக இருந்த ஸ்ரீராமே (குற்ற உணர்வு தாளாமல்) அவளிடம் வந்து அதனை சொல்லிய போது, அவள் அதற்கு எதுவும் எதிர்வினை ஆற்றாமல் இருந்தது ஒரு தாயின் எதார்த்த மனநிலையை உணர்த்துவதாகவும் (ஒரு பிள்ளையின் மரணத்தை நினைத்து பழி கொண்டுவிட்டால் மற்ற பிள்ளைகளையும் அது பாதிக்கும் படியாக ஆகும் என்றெண்ணியோ என்னவோ) , அல்லது ஸ்ரீராமை ஒரு பொருட்டாக மதிக்காமல் ( பிள்ளையே போன பின்பு அவன் இறக்க காரணமாக இருந்தவனை திட்டி என்ன செய்வது) அமைதியாக இருந்து விடுகிறாள். மனதில் பழி கொண்டவர்களுக்கு தான் எப்போதும் பதட்டமும், நிம்மதி அற்ற நிலையும் இருக்கும். அவள் அவன் பழி உணர்வை ஒரு பொருட்டாக்காதது, அவனை வாழ்நாள் முழுவதும் நிம்மதி இல்லாமல் ஆக்கும் என்றே நினைக்கிறேன். 


16. விமோசனம்


குடும்ப வாழ்க்கையில், ஆண்கள் மட்டுமே பொருள் ஈட்டும் சமயத்தில், அவர்கள் பெண்கள் மீது செலுத்தும் அதிகாரத்தையும், இரக்கமின்மையயும் காட்டும் கதை. ஒரு சொல் எதிர்த்து பேசி விட்டதற்காக, வீட்டு  செலவுகளை செய்யாத கணவனிடம் காலில் விழுந்து கெஞ்சும் மனைவிமார்களின் கதை இது. ஒரு நடுத்தர ஆணாதிக்க சமூகத்தின் அவலம். 

அந்த கவலையிலிருந்து விமோசனம் கிடைக்க தெய்வ அம்சம் கொண்ட குருவிடம் இதை எல்லாம் சொல்ல காத்திருக்கும் மனைவி, அதை அவரிடம் சொல்ல முடியாமல் வீடு திரும்புகிறாள். அவள் கணவன் அதற்கு பிறகு எப்போதும் வீடு திரும்பவில்லை. அவளுக்கும் அவளை அறியாமலேயே விமோசனம் கிடைத்துவிட்டது என்றே நினைக்கிறேன்.


17. தப்ப முடியாது


இதுவும் குடும்ப அமைப்பில் இருக்கும் ஆணாதிக்கத்தை மையமாக வைத்து சொல்லப்பட்ட கதை. இந்த கதைகளை எல்லாம் படிக்கும் போது, பெண் என்னும் சரடு இல்லை என்றால், குடும்பம் என்ற அமைப்பை கட்டவே முடியாது என்று தோன்றுகிறது. அவர்களுக்கு இருக்கும் அசாதாரண மனோதிடம் ஒரு போதும் ஆண்களுக்கு இருப்பதில்லை.


இது நேரடியாகவே நாம் நம் "மனசாட்சி"யிடன் தப்ப முடியாது என்பதை சொல்லும் கதை. தெருவில், ஒருவன் தன் பொண்டாட்டியை அடித்து நொறுக்குவதை, பார்த்தும் பார்க்காதது போல் செல்லும் ஒருவனின் மனசாட்சி அவனை கேள்வி கேட்கிறது. அப்படியே அவனும் தூங்கி போகிறான். அடுத்த நாள் எல்லாம் சரியாகி விடுகிறது. இப்படி எத்தனை இரவுகள் நம்மை, நம் கையாலாகாத, சுயநலவாத எண்ண உறுத்தல்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறது. நடுத்தர மக்கள் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு சூழ்நிலை தான் இது. அது அப்படி இருப்பதால் தான் அவர்கள் நடுத்தர வர்கமாக இருக்கிறார்களோ என்னமோ!


18. நம்பிக்கை


மனதின் ஆழத்தில் சென்று விட்ட நம்பிக்கையை  அவ்வளவு சீக்கிரம் துடைத்து எரிய முடியாது. அது நம்மை அறியாமல் நம்முடன் எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது. 

ராவ் என்னதான் அந்த மகான் மேல் நம்பிக்கை இல்லை என்றாலும் அவன் அவரை தன் ஆழ் மனதில் நம்பிக்கொண்டு தான் இருக்கிறான்.

சில வேளைகளில் நம் மேல் மனதிற்கும் (நாம் பேசுவதற்கும் , செய்வதற்கும) முற்றிலும் வேறு விதமாய் நாம் செயல்படுவோம். 


ராவ் ஒரு perfectionist. அவன் செய்யும் தொழிலில் அவனுக்கு இருக்கும் நேர்த்தி தான், அவனுக்கு மற்ற அனைவர் மீதும் அதே எண்ணத்தை உருவாக்குகிறது. அதனால் தான் மகான் அவன் மகனை காப்பாற்றவில்லை புலம்புகிறான். அந்த நேர்த்திக்கு அடியில் வாழ்க்கையில் உள்ள எதார்த்தத்தை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை. அந்த இருமையில் இருந்து தப்பிக்கவே அவன் சாமியார்களிடம் , மந்திரவாதிகளிடமும் நம்பிக்கை வைக்கிறான் என்றே தோன்றுகிறது.


19. பார்வை


இதுவும் நம்பிக்கை சார்ந்த கதை தான். சலவை தூள் விற்கும் பெண் தன் தங்கை எப்படி இயேசு கிறிஸ்துவால் கண் பார்வை பெற்று அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள் என்பது தான் கதை. 

சலவைத் தூள் எப்படி துணிக்கும் அழுக்குக்கும் புகுந்து அழுக்கை நீக்கி விடுவது போல, கர்த்தர் நமக்கும் நம் துக்கங்களுக்கும் இடையில் இருந்து, துக்கங்களை எல்லாம் அகற்றுவார் என்றே இந்த கதை சொல்ல வருவதாக நினைக்கிறேன்.

அவளின் அதீத நம்பிக்கை தான் அவளை அமைதியுடனும், எரிச்சல் இல்லாமலும் இது போன்ற விற்பனை வேலைகளை செய்ய முடிகிறதோ என்னவோ! 


20. வேலி


பக்கெட் பம்புகளை பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதனால், மக்கள் ஓரளவு தண்ணிரை பயன்படுத்த முடிகிறது. அவன் வீட்டுக்கு வேலி போடும் போது, ஆட்டுக்கும் ஒரு சிறு சந்து விட்டு தான் போடுகிறான். அப்படி செய்வது எதோ ஒரு சாத்தியத்தினை அடைத்து விடமால் திறந்து வைத்து கொண்டிருப்பது போல தான்.

இறுக்கமாக சட்டங்களையும், விதிகளையும் வைத்துக் கொண்டால் ஒரு போதும் மன நிம்மதி கிடைக்காது என்றே நினைக்க தோன்றுகிறது.  


ஆட்டுக்கு செடி தேவை, மனிதனுக்கு ஆடு தேவை என்று இங்கு ஓவ்வொன்றும் இன்னொன்றை சார்ந்து இருக்கும் போது நாம் திடீரென்று வெளி போட்டு இந்த சுழற்சியை தடுத்தால் என்ன நடக்கும் என்பதை உள்ளிற அறிந்தோ என்னவோ அவன் அந்த வேலியில் ஒரு சந்தை விடுகிறான். 

அந்த சந்து அவன் மனம் குற்ற உணர்வினில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அவனுக்கு தேவை படும் ஒன்றாக இருப்பது. 

Saturday, 21 December 2024

அசோகமித்திரன் சிறுகதைகள் வாசிப்பனுவம் - 1 - 10






அசோகமித்திரனின் சிறுகதைகளின் வாசிப்பனுவம்    


1. நாடகத்தின் முடிவு:

படைப்புத் தொழில் ஒரு வகையில் தன்னால் நிகழ் உலகில் செய்ய முடியாத ஒன்றை, கற்பனையில் செய்து பார்த்து, அதிலிருந்து கடந்து செல்வதும் தான். ஆனால் தான் கற்பனையில் உயிர் கொடுத்தவை தன்னை நோக்கியே மீண்டும் வருவது என்றால், அந்த படைப்பாளி அதிலிருந்து கடக்கவில்லை என்று தான் அர்த்தம். மேலும் அதிலேயே சிக்கி அந்த சுருள் வட்டத்திற்குள் சென்று மாய்ந்து விடுவதை தவிர வேறு வழியில்லை போலும். அதனால் தான் படைப்பாளிகள்  தன் சதைத் துண்டின் ஒரு பகுதியாகவே தன்  படைப்பினை வைக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். 

அப்படி ஒரு கதை தான் "நாடகத்தின் முடிவு". கதையின்  ஆரம்பத்தில்  "உடல் பிணியும், மனப்பிணியும் உள்ளவர்களை தவிர அனைவரும் தூங்கிவிட்டார்கள்" என்ற வரியிலிருந்தே கதை தொடங்கிவிட்டது. ஏழு வருடம் எழுதிய நாடகத்தின் முதல் அரங்கேற்றத்தில் கிடைத்த வெற்றியே துன்பத்தை கொடுக்குமானால், மனிதனின் குற்ற உணர்வுகள் தூண்டும் இடமும் நேரமும் எப்போதென்று யாராலும் சொல்லிவிடவும் முடியாது. தனக்கு கிடைக்காத எந்த ஒன்றும் கற்பனையில் கூட இன்னொருவருக்கு கிடைக்கவிடாமல், அந்த சுய நிந்தனையில் இறக்கிறார் அந்த நாடக ஆசிரியர். நம்முடனேயே இயங்கி கொண்டிருக்கும் நம் எண்ணங்கள் நமக்கெதிராக திரும்புவதற்கு எப்போதும் ஒரு சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டு தான் இருக்கின்றன.  

2. இந்த ஒரு ஞாயிற்று கிழமை மட்டும்:

இந்த கதையினை வாசித்த பின் எனக்கு ஒரு கேள்வி உருவானது.  தன்னை வளர்த்தவர்கள் அல்லது செதுக்கியவர்களை தாண்டி செல்லும்போது ஏற்படும் முரணை எப்படி உணர்வுபூர்வமாக ஏற்று கொள்வது அல்லது சமாளிப்பது. இங்குள்ள அனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் தன்னை ஒரு தனித்துவமான ஆளாக உருவகம் செய்து கொண்டே தான் வாழ்கிறார்கள். ஒரு சந்தர்ப்பம் வரும்போது அதனை பயன்படுத்திக் கொள்வது மனித இயல்பே. ஆனால் அந்த செயலால் ஏற்படும்  இழப்புகளைப் பற்றி ஒரு போதும் ஒருவர் நினைத்து பார்ப்பதில்லை. 

தன்னை ஒரு பெரிய நாடக நடிகையாக வளர்த்த நாடக குழுவிலிருந்தும் அதன் ஆசிரியரிடமிருந்தும் திடீரென்று விலகி செல்வது ஒரு  துரோகம் தான். அதனால் அங்கு ஏற்படும் பொருளியல் மற்றும் உளவியல் இழப்புகளை ஒரு போதும் அந்த நடிகையால் சரி செய்ய முடியாது. அவள் பெறப் போகும் புகழும், செல்வமும் அவனால் அடைய முடியாது.  அதனால்தான் அந்த நடிகையை அவன் வன் புணர்வு செய்ய நினைக்கிறான். எந்த உடல் அழகினை வைத்து தன்னை விட்டு விலகி செல்ல நினைக்கிறாளோ அந்த அழகினை அவள் விருப்பமே இல்லாமல் இருந்தாலும் வெறும் உடல் பலத்தால் அதனை அடைய நினைக்கிறான் அந்த ஆசிரியன். அது அவளை பழி வாங்கும் ஒரு முயற்சியே. காயம் பட்ட இடத்திற்கு கட்டு போடுவது போல. கட்டினால் மட்டும் காயம் ஆறாது என்றாலும், அது செய்தால் தான் நம் மனம் நிம்மதி அடையும்.


3. விபத்து:

ஒவ்வொரு சிறுவனுக்கும் தன்னை ஒரு வாலிப / வயது வந்த ஆளாகவே அனைவரும்  பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். அந்த சமயத்தில் அவன் தன்னை மீறிய செயல்களில் ஈடுபடுவான். இது அவன் மீது மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் எண்ணத்தை மாற்றுவதற்காக. தன்னை விட பெரிய அக்காவுக்கோ அண்ணனுக்கோ கிடைக்கும் மரியாதையை தனக்கும் வேண்டும் என்றுதான் எல்லா சிறுவர்களும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தில் இருக்கும் ஒரு சிறுவனின் பற்றிய கதை தான் இது.

தனக்கு மட்டும் பால் மற்றவர்களுக்கு காபி , எண்ணெய் தேய்த்து குளிக்க தெரியாது என்று சொல்லும் அம்மா , சூ போலிஷ் போட வைக்கும் அப்பா, எப்போதும் தன்னிடம் சண்டை போடும் அக்கா, இப்படி ஏன் எல்லாரும் தன்னை மட்டும் ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது பாச்சாவிற்கு. அவன் அக்காவின் செய்கைகள் அவனை மேலும் குழப்பமடைய வைக்கின்றன. அவன் நண்பனும் கிரிக்கட்டில் கில்லாடி. ஆனால் இவனுக்கு அது விளையாட தெரியாது. அவன் நண்பன் சிகரெட் குடிக்க சொல்லும் போது இவன் முடியாது என்று பயந்து விட்டாலும், அதனை சரி கட்டி கொள்ள தனக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் என்று ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்து வந்து விபத்துக்குள்ளாகிறான். ஏன் அவன் சைக்கிள் எடுத்து வந்தான். அவன் தன்னை ஒரு பொருட்டாக யாரையாவது நினைக்க வைப்பதற்காக. அப்படி அவனை விபத்துக்குள்ளாக்கியது, அவன் பெற்றோரும் ஒரு காரணம் தான்.  அந்த "உதாசீனம்" என்ற புலி அவன் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது. அவன் அக்கா அவனுக்காக கண்ணீர் விட்டபோது அவன் எங்கோ மீண்டு விட்டான் அதனை கடந்து. 

4. டயரி:

பஸ்ஸில் செல்லும் ஒருவனின் டயரியினை பார்த்து அதில் இருக்கும் வாழ்க்கையினை பல்வேறு விதமாக கற்பனை செய்கிறார் அந்த பஸ் நடத்துனர். அந்த கற்பனையில் அவரின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஆசைகளையும், நிராசைகளையும் அதில் ஏற்றி இருக்கலாம். ஒரு முழு வருட வாழ்க்கையின் இன்ப  துன்பங்களை சுமந்து செல்லும்  அந்த டயரி ஒரு குறியீடாகவே எனக்கு தோன்றுகிறது.

பிறக்கிறோம், உண்கிறோம், சாகிறோம் என்பதை தாண்டி அர்த்தம் எதுவும் இல்லாத இந்த வாழக்கையை ஒரு டயரியில் அடக்கி, அதை தவிர்த்து வெளியில் ஒரு அர்த்தமும் இல்லை என்பதாகவே அந்த கதை எனக்கு விளங்குகிறது. அதில் ஆயிரமாயிரம் நிகழ்வுகள் இருந்தாலும் அது அதுற்குள் மட்டுமே அர்த்தமோடு இருக்கு முடியும். வெளியில் வெறும் டயரி தான்.

5. வாழ்விலே ஒரு முறை:

ஒரு நிகழ்வு நம்மை காலம் முழுக்க நம்மிடம் வடுவாக இருந்து கொண்டு இருக்கும். அந்த புள்ளியிலிருந்து நாம் வேறு ஒரு பாதைக்கு செல்வோம். அந்த நிகழ்வு பெரும்பாலும் நம் தவறால் நிகழ்ந்து, நாமே பாடம் கற்றுக்கொண்டது போலத்தான் இருக்கும். அது நாம் செய்ததனால் மட்டுமே அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். 

அப்படி தன் தம்பியை தன்னுடன் விளையாடுவதற்கு கூட்டிக்கொண்டு  போகாமல், அவன் காணாமல் போகவே அவனை தேடி அலைந்து, வெறும் கையுடன் வரும் அந்த சிறுவன், தன் தம்பி பொம்மை குதிரையில் அமர்ந்து விளையாடுவதை பார்த்து வெடித்து அழுகிறான். அந்த நிகழ்வு அவனை வேறு ஒரு ஆளாகவே மாற்றி இருக்கும். அவன் தம்பி பொம்மை குதிரையில் ஆடிக்கொண்டு "நான் போலீசுக்கு போயிருந்தேன்" என்று சொல்லும் போது, ஒரு வேளை "என்னை தேடிக் கொண்டு தான் அவன் போலீசுக்கு போயிருப்பானோ" என்று நினைத்து தான் அவன் அழுதிருக்கலாம். 

6. மஞ்சள் கயிறு :

கதையின் தலைப்பிற்கும், சொல்லப்பட்ட கதைக்கும் இருக்கும் நகைமுரணை வெளிப்படுத்துவதாக இந்த கதை தலைப்பு உள்ளது. ஒரு வேளை சோற்றுக்கே அடிமையாக வேலை செய்தால் தான்  கிடைக்கும் என்னும் அவல நிலையில் உள்ள சுப்பு தான் மஞ்சள் கயிற்றினை திரித்து விற்பனை செய்பவன். குண்டு சாஸ்திரிகள் மூலமாக வலியோரின் பேராசையும், சுப்பு போன்ற எளியோரை ஏறி மிதித்து உறிஞ்சுவதையும் சொல்கிறது கதை.

தன்னை பார்த்து ஹோட்டலில் ஊசிப்போன சட்னி வைக்கும் சிறுவன், தன்னை விட்டு போன மனைவி , தன் எஜமானன் குண்டு சாஸ்திரிகள் என்று அனைவரையும் அவன் திரிக்கும் கயிறினாலே சுற்றி தூக்கில் தொங்க நினைக்கும் சுப்புவிற்கு மரணம் கூட கிடைப்பதில்லை. "பசியில் கால்களுக்கும் கண்கள் முளைக்கும்" என்ற வரி ரொம்ப நேரம் என்னை தொந்தரவு செய்தது. 

7. கோலம் :

சங்கராந்திக்கு வீட்டிற்கு வந்திருக்கும் சிற்றப்பா அவரின் குழந்தைகளின் பெருமைகளை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பட்டிக்காடு என்றால் பிடிக்காது. அவரது பிள்ளைகளின் வீணை வாசிப்பின் திறமைகளும், படிப்பு திறமையும்,  மற்றவற்றையும் பற்றி அவர் ஓயாது பேசிக் கொண்டே இருக்கிறார். அவருடைய குழந்தைகளை பற்றி பேசாமல் அவரால் இருக்க முடிவதில்லை. அவர் சுத்தமான புகையிலை சுருட்டைத் தான் பிடிப்பார். மிகவும் ரசனை உள்ள ஆள் அவர்.

அன்று காலையில் விஜயா அழகான ரங்கோலி கோலம் போடுகிறாள்.  அதை பார்த்து அவளுடைய சிற்றப்பா "சியாமளா கூட இப்படி கோலம் போட மாட்டாள்" என்று சொல்கிறார். ஆனால் அதனை ஒரு இளைஞன் நடந்து போகும் போது கொஞ்சம் அழித்து  விடுகிறான். விஜயா கண்களில் நீர் தளும்ப நிற்கிறாள்.  திடிரென்று வெறி வந்தவர் போல் அவனை இழுத்து வந்து திட்டுகிறார் விஜயாவின் சிற்றப்பா. மீண்டும் அதனை சரி செய்ய சொல்கிறார் அவரின் சிற்றப்பா. விஜயாவும் சரி செய்கிறாள். 

அவர்கள் வெளியில் சென்று வரும்போது, கோலம் எப்படி இருக்கிறது என்று கூட பார்க்காமல் வரும் விஜயா, மீண்டும் சென்று பார்க்கையில் அது முற்றிலுமாக அழிந்து விட்டிருக்கிறது. ஆனால் அதற்காக அவள் வருத்தப்படுவதில்லை. 

முதல் முறை ஏற்படும் இழப்பு / ஏமாற்றம் நம்மை ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்வது போல் செய்து விடுகிறது. மீண்டும் அதே போல் எந்த ஒரு ஏமாற்றம் வந்தாலும் அந்த தடுப்பூசியே நம்மை நிலை குலைவில் இருந்து காப்பாற்றுகிறது. "வாழ்விழே ஒரு முறை" கதையினை நியாபகப்படுத்தியது.

8. அம்மாவுக்காக ஒரு நாள்:

ரகு தன் கோவங்களையும் , எரிச்சல்களையும் அவன் அம்மாவிடம் தான் எப்போதும் காட்டுவான். காரணமே இல்லாமல் கூட அவன் எரிச்சலடைவது உண்டு. ஆனால் அவன் அம்மாவோ திரும்ப எதுவும் பேசாமல் பூமி மீது விழுந்த மழை போல் அனைத்தையும் ஏற்று கொள்வாள். 

ஆனால் ஒரு முறை அவள் அம்மாவை  படத்திற்கு கூட்டி போக நினைக்கும் போது, ரயில் ஓடாமல் போகிற போது, பஸ்ஸிற்கு பணம் இல்லாமல் போகும் பொது, நண்பர்கள் யாரும் இல்லாமல் இருக்கும் போது, நண்பன் வீட்டில் அவன் இல்லாமல் அவன் மனைவி மட்டும் இருப்பதனால் அவளிடம் பணம் வாங்க முடியாமல் போகும் போது, என்று ஒரு நாள் முழுவதும் அவன் அம்மாவையே நினைத்து கொண்டு, அவளை படத்திற்கு கூட்டி செல்ல நினைத்தும் போக முடியாமல் போகிறது. இதை அவன் அம்மா வெகு சாதாரமாக எடுத்து கொண்டு மற்றுமொரு நாளாக கடந்து செல்கிறாள். அவள் தன் மொத்த வாழ்நாளும் பிள்ளைகளுக்காகவே கொடுக்கும் போது , பிள்ளையினால் ஒரே ஒரு நாளைக் கூட தன் அம்மாவுக்காக கொடுக்க முடியாமல் போவதும் ஒரு முரண் தான். 

9. மழை:

முழுக்க முழுக்க சிறுவனின் மனதிலிருந்து எழுதி இருக்கிறார் இதை. மழை மேகங்களை யானையாக, எருமை மாடாக கற்பனை செய்யும் சிறுவன், ஒரு பெரிய மரம், ஒரு மிக பெரிய மரம், சிறிய செடிகள், தன் பழைய சட்டை இப்போது தனக்கு சிறியதாக உள்ளது, என்று இயற்கையில் சிறுவர்களுக்கே உள்ள கேள்விகளாலும், கள்ளமில்லா தன்மைகளாலும் அவர்கள் உருவாக்கும் அழகிய உலகித்திற்குள் நம்மை கூட்டி செல்கிறார் அமி. மழை, தனக்கும் சிறிய செடிக்கும், மரத்திற்கும் எருமை மாட்டிற்கும் என்று எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் சிறுவனை பார்க்க செய்கிறது.

10. மூன்று ஜதை இருப்புப்பாதைகள் :

Introvert களுக்கு இந்த கதை மிகவும் நெருக்கமானதாக இருக்கும். 

ஒரு தலை காதலினால் ரயிலில் தற்கொலை செய்துகொள்ள போகும் ரகுநாதனின் கதை. மூன்று வருடமாக ஒரு தலையாக காதலித்தாலும், ஒரு வார்த்தை கூட பேசாமால், அவள் வேறு தெருவிற்கு குடி போனதால் விரக்தி அடைந்து அவளின் தெருவில் ஆயிரம் முறை சுற்றி வந்தாலும் பத்து  முறை மட்டுமே அவளை பார்க்கிறான். அப்பொழுதும் அவனை அவள் சட்டை செய்யவில்லை. இதனால் மனம் உடைந்து ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்யும் பொது, ரயில் வந்து அவன் மேல் ஏறாமல் வேறு ஜதை பாதையில் செல்கிறது.

வாழ்நாள் முழுவதும் போட்டு வைத்திருந்த ஏக்கம், அவன் அழுகையில் கரைகிறது.  சாவதற்குக்  கூட தெரியாமல் போய் விட்டோமே என்று விம்மி அழும் போது, வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம், நினைக்கிற சமயத்தில் கிடைத்து விடாது (அது மரணம் கூடத்தான்) என்று அவன் அறிந்து கொள்வதாக நினைக்கிறேன். முதல் முறையாக அவன் வெளிப்படையாக செய்தது மீண்டும் இருப்புப் பாதையில் தலை வைக்காமல் இருந்தது தான்.


Saturday, 23 November 2024

குற்றம்

                                                                          (1)  

"திட்டம்போட்டு தாண்டா மாப்ள செஞ்சிருப்பா " என்றான் சரவணன், கறியினை கடித்துக்கொண்டே.

"அப்படி எதும் தெரில மச்சான், நல்லா தான் இருந்தாங்க. ஏன் இப்புடி செஞ்சானே இன்னய வரைக்கும் புரில", சாப்பிட்டு முடித்தாலும் சரவணனுடன் பேசிக்கொண்டிருப்பதால், எண்ணெய் பிசுக்கான கையுடன், தட்டில் கோடு போட்டுக்கொண்டே பதில் சொன்னான் செல்வம்.

ஐந்து வருடம் முன்பு நடந்த ஒரு கொலையினை பற்றி தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

செல்வத்தின் தங்கை வசந்தி தான் அந்த கொலையை செய்தவள். மேட்டுக்கட்டியூர் தான் செல்வமும் அவனுடைய தங்கையும் பிறந்து, வளர்ந்த ஊர். அவனுடைய அப்பா அந்த ஊரில் "பெரிய மனிதர்கள்" என்று சொல்லிக் கொள்பவர்களில் ஒருவர். அரசாங்கத்தில் ஒரு பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

வசந்தியின் திருமணம் பத்து வருடங்களுக்கு முன்பு அந்த ஊரே மெச்சும் அளவுக்கு தட புடலாக நடந்தது. அப்போது செல்வத்திற்கு வயது இருபத்தைந்து. வசந்திக்கு இருபத்திமூன்று. மாப்பிள்ளை பக்கத்துக்கு ஊரான சிவபள்ளத்தில் அரசாங்க பணியில் உள்ளார். அவருடைய சொந்த ஊரும் அதுவே. திருமணம் முடிந்து ஐந்தாவது வருடத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஏனோ அன்றிலிருந்து அவர்கள் இருவருக்கும் சண்டைகள் அதிகமாக ஆரம்பித்தன. 

செல்வத்தின் நினைவுகள் மீண்டும் அந்த சம்பவத்தை பற்றியே சுற்றி கொண்டிருந்தது. அவனால் அதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாப்பிட்டு முடித்து வெளியில் டீ குடிக்க அவனும், சரவணனும் நடந்து போய் கொண்டிருந்தார்கள். மதிய வெயில் சுளீரென்று முகத்தில் அறைந்தது. அந்த தெருவிலேயே டீ கடை இருந்தாலும்,  இரண்டு  தெரு தள்ளி  இருக்கும் கடைக்குச் சென்றனர். இரண்டு பேர் டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து 'பிக் பாஸ்' பற்றி பேசிக் கொண்டிருந்தனர். கிங்ஸ் சிகரெட்டுடன் ஆளுக்கொரு டீயினை வாங்கிக் கொண்டு, கடையின் பின்பக்கம் சென்றனர். 

"மச்சான். நீயாச்சும் எங்கப்பா கிட்ட சொல்லி பாருடா", என்றான் செல்வம், எரிந்து கொண்டிருந்த திரிகயிற்றில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு. 

"நான் சொன்னா மட்டும் உங்கப்பா கேட்பாராடா? அவர் குணம் பத்தி உனக்குத் தெரியாதா!" என்றான் சரவணன் புகையினை வட்ட வட்டமாக விட்டுக் கொண்டு.

"இல்ல டா, வசந்தி புருசனும் அவள விட்டுட்டான், அவளுக்குனு இப்ப யாருமே இல்ல", கடையின் பின்பக்கம் ஓடும் சிறு ஓடையினை பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

"நாளைக்கு வக்கீல் வராரு டா, அதுக்குள்ள எங்கப்பாகிட்ட பேசிப் பாருடா" என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு  அங்கிருந்து கிளம்பினான் செல்வம்.

                                                                        (2)

வசந்திக்கும் அவள் கணவனுக்கும் குழந்தை பிறந்ததிலிருந்து சண்டைகள் அதிகமானது. வசந்தி அடிக்கடி கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு அவள் அம்மா வீட்டுக்கு வந்து விடுவாள்.அவளின்  அப்பாவும், அம்மாவும் எவ்வளவு தான் கேட்டு பார்த்தாலும், என்ன பிரச்சனை என்று இருவரும் சொல்லவில்லை. அவள்அண்ணன் செல்வத்தின் திருமணத்தின் போதும் வசந்தியும் அவள் கணவரும் சந்தோஷமாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்படியே இருந்தது.

வசந்தி, குழந்தை பெற்ற பின்னர் அவள் கணவன் மீது விலக்கம் அதிகமாகியது. அதற்கு முன்னாலும் இருவரும் மனமொத்து இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. அவனின் அரசாங்க வேலையால் அவர்களால் "ஆடம்பரமாகவே" வாழ முடிந்தது. அவளும் அதில் எந்த குறையும் சொல்லவில்லை. ஆனாலும் அவளால் அவனிடம் சந்தோஷமாக வாழ முடியவில்லை. 

ஒரு நாள் அவளும், பக்கத்துக்கு ஊரில் இருக்கும் மனோகர் என்பவனும் சேர்ந்து இருந்த போது, தூங்கிக் கொண்டிருந்த அவள் பையன் அதனை பார்த்து விட்டான். மனோகரும் அங்கிருந்து கிளம்பி போனவுடன், அவளுக்கு இதை எப்படி சமாளிப்பதென்றே தெரியவில்லை. அவள் பையனுக்கு ஐந்து வயது தான் ஆகிறது. 

"யாரும்மா அவரு?" என்று மட்டும் அவன் கேட்டு விட்டு  விளையாட போய் விட்டான்.

ஏன் அவள் அப்படி நடந்து கொண்டாள் என்று அவளையே அவள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள். 'இது ஒரு தேவுடியா செய்யும் வேலை, அப்படியென்றால் நான் ஒரு தேவுடியாவா?' என்று அவள் மனம் அலைக்கழித்தது. மனோகர் இவளை பல்வேறு சமயங்களில் பார்த்து கொண்டிருந்தான் என்பது இவளுக்கும் தெரியும் தான். ஆனால் தான் இப்படி அவனுடன் இருப்பேன் என்று நேற்று கூட அவள் நினைத்து பார்த்ததில்லை. 

"அம்மா, பசிக்குது" என்று அவள் மகன் வீட்டிற்குள் வந்தான். அவனுக்கு சாப்பாடு போட்டு அவளும் கொஞ்சம் சாப்பிட்டாள். இருவரும் மதியத்தில் சிறு உறக்கம் போடுவார்கள். 'அவனிடம் இதை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்று சொல்லலாமா' என்று யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் மகன் படுத்த உடன் தூங்கி விட்டான்.

அவன் தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் திடீரென்று வீறிட்டு அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகை அவனை எழுப்பி விடும் என்று கழிவறையில் சென்று வெடித்து அழுது புலம்பினாள். 

                                                                      (3)

வக்கீல் முருகன் வசந்தியின் அப்பா வீட்டிற்கு காலை பத்து மணிக்கெல்லாம் சொன்னது போல வந்து விட்டார். அவர் கடந்த ஒரு வருடமாக இங்கு வந்து போய் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நினைத்தது மட்டும் நடக்கவே இல்லை.

"அந்த தேவுடியாவ பத்தி பேசுறதா இருந்தா இந்த வீட்டுக்கு வராதீங்க, பெத்த புள்ளைய கொன்ன சண்டாளி" என்று வசந்தியின் அம்மா தன் பேத்தியை மடியில் வைத்துக் கொண்டு வக்கீலிடம் கத்தினாள்.

"நீ, சும்மா இரு, நான் பேசிக்கிறேன்" என்று வசந்தியின் அப்பா அவளை உள்ளே போக சொன்னார். 

செல்வம் உள்ளே இருந்து வந்தான். அவனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. சரவணன், தூரத்து உறவாக இருந்தாலும், அவன் சொன்னால் அப்பா கேட்பார் என்ற எண்ணத்தில் தான் நேற்று அவனிடம் அப்பாகிட்ட பேச சொல்லியிருந்தான். ஆனால் அதுவும் உபயோகப்படாது என்றே அவனுக்கு இப்போ தோன்றியது.  

"அவள நாங்க தல முழுகி அஞ்சு வருஷம் ஆச்சு. அவ யாருனே எங்களுக்கு தெரியாது" என்று பொறுமையாக வக்கீலிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

"இப்படி சொன்னா என்னங்க பண்றது. உங்க மகளுக்கு ஜாமீன் கெடச்சு ஒரு வருஷமாகுது. ஆனா ஐம்பதாயிரம் பணம் கட்டி, கையெழுத்து போட்டா  தான் ஜாமீன் இருந்தா கூட ஜெயில்ல இருந்து வெளியே விடுவாங்க" என்றார் வக்கீல்.

"நாங்க யாரும் கையெழுத்து போட முடியாது", என்று ஒரே மூச்சாய் சொன்னார் செல்வத்தின் அப்பா. 

"பணம் கூட கட்ட வேண்டாம். ஆனா ரத்த சொந்தம் யாராவது கையெழுத்து போட்டா தான் வெளில உடுவாங்க. அதுவும் இல்லாத, அந்தம்மா உள்ள போனதுல இருந்து யாரும் இது வரைக்கும் ஒரு முறை கூட வந்து பாக்கல, அதுவே அவளுக்கு ஜெயில் தண்டனைய விட பெரிய தண்டனை" என்று உள்ளூர வெதும்பி சொல்லிக் கொண்டிருந்தார் வக்கீல்.

வக்கீல் முருகன் தானாகவே வந்து பல முறை செல்வத்திடம் பேசி உள்ளார்.  செல்வமும் இதில் ஆரம்பத்தில் ஆர்வம் இல்லையென்றாலும், முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று கடந்த ஒரு மாதமாக இதில் இறங்கினான். ஆனால் இன்று அதற்கும் ஒரு முற்று புள்ளியாக அமைந்துவிட்டது. 

வக்கீல் செல்வத்திடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அவர் சென்றதும் செல்வத்தின் அம்மாவும், மருமகளும், பேத்தியும் அலங்காரம் செய்து கொண்டு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழாவிற்கு செல்ல ஆயத்தமாயினர். செல்வமும், அவன் அப்பாவும் அவர்களை பின் தொடர்ந்தனர்.


Friday, 4 October 2024

புன்னகை

'உள்ள போங்கணா'  என்று பின்னாடிருந்து சொல்லிக்கொண்டே இருந்தான் கோல்காரன். உள்ள போய்  கடைசி சீட்டில் உட்கார்ந்து தலையில் கட்டின துண்டை எடுத்து துடைத்துக் கொண்டான் வேடி. இந்த புரட்டாசி மாசத்துலயும் அக்னி வெயில் கணக்கா அடிக்குதே, என்று நினைத்துக் கொண்டான். 

அந்த ஊரில் இருப்பவர்கள் வண்டிவைத்துக் கொண்டு குல தெய்வ கோவிலுக்கு போவது வழக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படி போக முடியவில்லை. ஏதோ ஒரு காரணம் தடங்கலாக வந்து கொண்டே இருந்தது. அதனால் தான் இந்த வருடம் மொத சனிக்கிழமையே போய்விடலாம் என்று ஊர்காரர்கள் ஒரு மனதாக முடிவு செய்திருந்தனர்.

நெல்லு வெளஞ்சாலும், இல்லனாலும், கூழு குடிச்சாலும் குடிக்கலனாலும் இத மட்டும் பண்ணணுமடா என்று ஊர் கிழவிகள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருந்தும் அஞ்சு வருஷம் போகாம போனது, எல்லார் மனசுலயும் ஒரு உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது. அதனால் இந்த வருஷம் சின்ன புள்ளயங்களிலிருந்து கிழவன், கிழவி வரைக்கும் எல்லாரும் சந்தோசமாக பழைய துணியா இருந்தாலும் நல்லா தொவச்சு கட்டி போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். 

ஊரென்றால் பெரிய ஊர் ஒன்றும் இல்லை. பதினைந்து குடும்பங்கள் மட்டுமே. அதனால் ஒரு பஸ்ஸிலேயே அடைத்துக் கொண்டு போக வேண்டியது தான் என்று முடிவு செய்தனர். ஊருக்கு ரோடெல்லாம் ஒன்றும் இல்லை. மண் சாலை தான். ஊருக்கு இன்னும் கவர்மெண்ட் பஸ் கூட வரவில்லை. அனைத்தும் சிறிய ஓட்டு வீடுகள். ஒரே ஒரு காரை வீடு. ரெண்டு குடிசை வீடு.

வேடிக்கு எப்படியாவது இந்த வருஷம் மண்ணுல போட்டதெல்லாம் வெளஞ்சருணும்னு ஆசை. ரெண்டு மூணு வருசமா எது வெரைச்சாலும், நட்டாலும் ஒண்ணமில்லாம போயிடுது. மூணு வேல கஞ்சிக்கே சில நாளு அல்லாட வேண்டியதா இருக்கு. அவனும் என்னென்னவோ செஞ்சி பாத்தான். ஒன்னும் பிரயஜோன படல. இயற்கையா இருக்கற உரமும் போட்டு பார்த்தான். ஆபீஸ் மருந்தும் அடிச்சி பார்த்தான். ஒன்னும் சரிப்பட்டு வரல. மழையும் பட்டத்துக்கு தவுந்தாப்புல வர்ரதுல்ல.

ஒரு முறை நல்லா வெளைஞ்சி வந்த நெல்லயும் எலியே கத்தரிச்சு போட்டுருச்சு. மழ பேஞ்சி தண்ணி இருக்கறப்ப வெளஞ்சதும் இப்படி ஆயிடுச்சேன்னு அவன் அதில இருந்து மனசே ஒடஞ்சி போய்ட்டான். பத்து வயசுலையும், அஞ்சு வயசுலயும் பசங்க மூக்கொழிகிகிட்டு அம்மணமா ரோட்ல நெஞ்சு பரி எலும்பு தெரிய நோஞ்சானுங்க மாதிரி விளையாடிட்டு இருக்கறது பாக்குற போது அவனை அறியாமலே கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு கீழ எறங்கி வந்துரும்.  

பஸ்ஸில் கடைசி சீட்டில் உட்கார்ந்து இதையெல்லாம் யோசித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் வேடி. அனைவரும் ஏறிய பிறகு புழுதியை கிளப்பிக்கொண்டு ஆலமர வளைவில் மேடேறி போய்க்கொண்டிருந்தது பஸ். காலை ஐந்து மணிக்கே கிளம்பியதுனால் தூக்க கலக்கமாகவும், குழந்தைகள் அழுது கொண்டும், அம்மாமார்கள் அவர்களை அதட்டிக்  கொண்டும் இருந்தார்கள். முக்கால் மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு கரட்டில் பஸ் நின்றது. அனைவரும் கீழே இறங்கினர். அவர்களைப் போலவே வேறு ஊர் காரர்களும் பஸ் பிடித்துக் கொண்டு வந்திருந்தார்கள். 

இவர்கள் ஊர் போல் இல்லாமல் மத்த ஊர் காரங்க கொஞ்சம் பரவால்ல. ஒத்தக் கல்லா இருந்த சாமிக்கு ஒரு கோயில் கட்டி இருக்காங்க. ஏதோ மத்த ஊர் காரங்க கொடுக்குற பணத்தால சாமிக்கு காரைல கோயிலும் எழுப்பியாச்சு. கோயில் எழுந்து மூணு வருஷம் ஆகியும் இந்த வருஷம் தான் அவுங்க ஊர் கண்களுக்கு கோயில பாக்கறதுக்கு குடுத்து வச்சிருக்கு. 

காலை ஆறு மணிக்கு வெயில் வரத் தொடங்கியது. குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான் விக்கிறவன், ஐஸ் விக்கிறவன், வளையல் விக்கிறவன் என்று ஒரே கூச்சலாக வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள், அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து கடை முன்னாடி நிற்க வைத்து நகர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரே ஒரு அடுக்கு கொண்ட காரை கட்டிடம் தான் கோவில். ஒரு சின்ன கல்லா இருந்த சாமிய சுற்றி இந்த கட்டிடத்தை கட்டி இருந்தார்கள். வேடி உள்ளே சென்று சாமியை கும்பிட்டான். சாமிக்கு வெட்ட வெளில இருந்தப்போ இருந்த உக்கிரம், கட்டடத்துக்குள்ள வச்சப்புறம் கொஞ்சம் கொறஞ்ச மாறி தோணிச்சு அவனுக்கு. உள்ள ஒரு பக்கம் மின்-விசிறி  ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் சாமிக்கு போட்ட மாலை காற்றில் ஆடி கொண்டிருந்தது. இந்த வருஷம் நல்லா பயிர் வெளைஞ்சி சாப்பாட்டுக்கு வழி பண்ணுனு சாமி என்று வேண்டிக்கிட்டான். 

வெளியே வந்து கோவிலை சுற்றிக் வந்து கொண்டிருந்தான். ஒரு மூலையில் கோவிலின் மேற்கு பக்கம் காரை கூரையில் ஒரு மாஞ்செடி இள மஞ்சள் நிறத்தில் இலைகளோடு காற்றில் அசைந்து கொண்டிருந்தது. காரையில் அந்தரத்தில் அசைந்து கொண்டிருந்த செடியையே அவன் ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை அறியாமலேயே அவன் உதட்டில் புன்னகை மலர்ந்தது. 

சத்தம்

உள்ளங்கையில் வைத்து கட்டை விரலால் மொபைலை நோண்டிக்கொண்டே 'ஊம்' கொட்டிட்டிருந்தான் தேவராஜன்.  

"என்ன மச்சி, மொபைலையே பாத்துட்டு இருக்க" என்றான் அருண். இருவரும் தினமும் வேலைக்கு இந்த இரண்டு மணி நேர ரயில் பயணத்தில் சேர்ந்தே செல்வார்கள். கூடவே மற்ற இளைஞர்களும் அவர்களுடன் அடுத்தடுத்த ஸ்டாப்பில் ஏறிக்கொள்வார்கள்.

"என்ன மச்சான் இவன் போனயே பாத்துட்ருக்கான், யார்ட்டயும் பேசாம" விக்கி, அருணிடம் கேட்டான். "போன வாரம்  நடந்த சம்பவத்துலுருந்து , இப்டி தாண்டா இருக்கான்" என்றான் அருண்.

'ஆளுமா, டோலுமா' என்று ராகம் இழுத்து கோரஸாக பாடிக்கொண்டிருந்தார்கள். கையில் ஒரு கறுப்பு   ப்ளூடூத் ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு போகுமிடம் எல்லாம் இசையை தூக்கிக்கொண்டு போகும் கூட்டம். தேவராஜனுக்கு குத்துப் பாட்டுன்னா ஒரே குஷிதான். எதிரில், பக்கத்தில் யார் உட்கார்ந்திருந்தாலும் எந்த கவலையும் இல்லை.

காலைல வேலைக்கு போற இந்த ரெண்டு மணி நேரத்தை இசையால நிரப்பி அதை அந்த பெட்டில இருக்கும் எல்லாருக்கும் இலவசமா கொடுக்கறதுல இந்த பசங்க கில்லாடி. ஒவ்வொருத்தருக்கு ஒரு பாட்டு. ஒரு சுற்று முடிந்ததும் திரும்பவும் இன்னொரு சுற்று ஆரம்பிக்கும்.

ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மூட்ல பாட்டு போடுவான். காலையில் காதலி கிட்ட சண்டை போட்டவன் சோக பாட்டும், செல்லம் கொஞ்சனவன் குஷி பாட்டும் போடுவான். வெறும் வாய் பார்ப்பவன் அந்த சமயத்தில் ஹிட் ஆன பாடலை போட்டு கேட்பான். இவர்கள் கேட்கும் பாடலை வைத்தே எவன் என்னன்ன மூட்ல இருக்காங்கனு தெரிஞ்சிரும்.  

காலைல ஏழு  மணிக்கு வர வேண்டிய வண்டி, ஏழரை மணிக்கு தான் வந்தது, ஒன்பது மணிக்கு முன்னால லாகின் செய்யவில்லை என்றால் அரை நாள் சம்பளம் கட் ஆகிடுமே என்ற கவலையில் இருந்தான் தேவராஜன். ஒரு தனியார் கம்பெனியில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் உள்ளான். எப்போதும் வாடிக்கையாளர்களுடன் பேசும் வேலை. வெட்டிய தலையும், திருத்தி அழகுபடுத்தப்பட்ட தாடியும் வைத்திருந்தான். அவன் தான் அந்த கூட்டத்தில்  இருக்கும் alpha male. அருண் எப்போதும் தேவராஜனாக ஆக துடித்துக் கொண்டிருப்பவன். 

"மேஸ்திரி, வந்துட்டுருக்கன், கெலமங்கலம் வந்துட்டன். இன்னும் கால் மணி நேரத்துல வந்துருவன்" போனில் பேசினான் பச்சை சட்டை போட்டு படியோரம் நின்றிருந்தவன். பக்கத்தில், அவனை மாறியே முகத்தோற்றத்துடன், கையில் மதிய உணவு கொண்டு போகும் wire கூடையை வைத்திருந்தான் ஒருவன் . திரும்பவும் பச்சை சட்டை காரனுக்கு போன் வந்தது.

"இல்லனா, வந்துருவன். ரயில் லேட்டாயிடுச்சு. ஒரு 10 நிமிசம் தான. வேற எடத்துக்கு போல. அங்கேயே வந்துர்ரன். என்ன விட்டுட்டு போய்டாதீங்க." முகத்தில் வெறுப்புடன் படியிலிருந்து எச்சி மூஞ்சான். அவன் நின்று கொண்டிருந்த எதிர் இருக்கையில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பாட்டை போட்டு விட்டுட்டு அவனவன் போன் பார்த்துக் கொண்டிருந்தான்கள். 

"ஏன்டா சௌண்டு கம்மியா வச்சி கேட்க கூடாதா. பக்கத்தூரு வரிக்கும் கேக்குது." பச்சைசட்டைக்காரன் அருணைப் பார்த்து கேட்டான். "பாட்டு நல்லா தான இருக்கு" என்றான் அவன். "டேய் சௌண்ட கம்மியா வைங்கடான்னா பாட்டு நல்லாருக்கு, நாறிருக்குனு".

"வேண்ணா, நீ பக்கத்துக்கு பொட்டிக்கு போ" என்றான் தேவராஜன்,  மொபைலை ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே. பச்சை சட்டைக்காரன் "இவங்கப்பன் ஊட்டு ரயிலு, இவன் சொல்றான்" என்று எகிறினான். பாட்டு சத்தத்திலும் , இவர்கள் வாக்கு வாதத்திலும் அங்கு ஒரே இரைச்சலாக இருந்தது. திடீரென்று பச்சை சட்டை ப்ளூடூத் ஸ்பீக்கரை புடுங்கி கீழ போட்டான்.

"தேவிடியா பயா, என்ன மயிருக்கு ஸ்பீக்கர் மேல கைய வக்கிர" சீட்டில்  இருந்து எழுந்து அவனுக்கு முன்னாள் வந்தான் தேவராஜன். அவனுடைய தலை ஆடிக்கொண்டே இருந்தது. பச்சை சட்டக்காரன் அவன் இடது கன்னத்தில் சடாரென்று ஒரு அரை விட்டான். தேவராஜன் ஒரு நொடி கலங்கி, சுதாரித்து, அவனை அடிக்க கை ஓங்கினான். அதற்குள் அவன் நண்பர்கள் அவனை பிடித்து பின்னுக்கு தள்ளினார். பச்சை சட்டகாரனை அவன் கூட வந்தவன் இழுத்துக் கொண்டு பக்கத்துக்கு பெட்டியை நோக்கி சென்றான். ஓசூர் ரயில் நிலையத்திற்குள் வண்டி மெதுவாக வந்து கொண்டிருந்தது. 

"மச்சான், ஏன்டா இப்டி இருக்க, அதான் புது ஹெட்போன்ஸ் வச்சிருக்க இல்ல. அதுல பாட்டு கேளு. சும்மா போனயா நோண்டிட்டிருக்க" என்றான் அருண். 

"எனக்கு தெரியும், நீ கொஞ்சம் மூடு" என்றான் தேவராஜன் பதிலுக்கு. "மச்சி இந்த சனி, ஞாயிறு எங்கியாவது அமைதியான எடத்துக்கு போலாமா, பசங்களோட" என்றான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு.

"ஆமா, மச்சி, தெகினிக்கோட்ட பக்கத்துல யாருமே போகாத எடம்  ஒன்னுருக்கு. அங்க போலாம்" என்றான் அருண்.

ரெண்டு வண்டியில் சனி காலையில் அவர்கள் நான்கு பேர் அந்த இடத்திற்கு சென்றனர். சுற்றிலும் சிறிய சிறிய குன்றுகள். அதில் ஒரு குன்றின் மேல் ஏறிச்  சென்றனர். அங்கு  இருப்பதிலேயே அது தான் பெரிய குன்று. மேல செல்வது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. வழியென்று ஒன்றும் இல்லை.  முற்றிலும் ஆள் அரவமற்று இருந்தது. காட்டு மரங்கள் இருந்தாலும், அடர்த்தியாக இல்லை. பாறைகள் அங்கொன்று இங்கொன்றுமாக இருந்தது. கையில் ஆளுக்கொரு கோல் வைத்துக் கொண்டு மேலே  ஏறினார். அரை மணி நேரத்தில் உச்சிக்கு வந்துவிட்டனர்.

மேலே ஒரு சமதள புல்வெளி இருந்தது. அங்கிருந்து, அருகிலிருக்கும் சிறு கிராமங்களும் தூரத்தில் இருக்கும் நகரமும் தெரிந்தன. எங்கோ தூரத்தில் ஒரு அணை இருந்தது. காற்று ஆளை தள்ளும் அளவுக்கு வீசிக் கொண்டிருந்தது. மேகங்கள் இருந்ததால் வெயில் இல்லாமல் இதமாக இருந்தது.

"மச்சி, அருமையான எடம் டா, பயங்கர அமைதியா இருக்கு மச்சி. டேய் அந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் எடுத்துட்டு வந்துருக்க இல்ல" என்றான் தேவராஜன்.


Thursday, 29 August 2024

'காவிரிக்கரை' பயணம் - 2

 காவிரியின் வடகரை வழியாக வந்து, திரும்பி செல்லும்போது தென்கரை வழியாக போக திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவிரியின் மேல் நிறைய இடங்களில் பாலம் இருந்ததால், நாங்கள் குறுக்கும் நெடுக்குமாக காவிரியோடு சென்று கொண்டிருந்தோம். மோகனூரில் காலையில் "அசல தீபேஸ்வரர்" கோவிலுக்கு சென்றோம். காவிரி கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள தீபம் அனயா தீபம் என்றொரு ஐதீகம். காலையில் மழை தூறிக்கொண்டிருந்தது. முந்தைய நாள் முழுவதும் ஜெயவேல் வண்டி ஓட்டியதால், நான் வண்டியை ஓட்டினேன். மோகனூரிலிருந்து, ஸ்ரீராமசமுத்திரம் வழியாக சென்றோம்.

நேற்று நாங்கள் பார்த்த காவிரிக் கரையின் வளம் இங்கிருந்து குறைய ஆரம்பித்தது. ஓட்டு வீடுகளும், குடிசை  வீடுகளும் தென்பட்டன. சில இடங்களில் சாலை நன்றாக இல்லை. அதே காவிரி கரை ஒரு இடத்தில வளமுடனும், ஒரு இடத்தில் வளமில்லாமலும் இருந்தது. வீடுகளின் அடர்த்தியும் அதிகமாக  இருந்தது. மாயனூர் பெரிய பாலத்தில் வண்டியை நிறுத்தி காவிரியை பார்த்துக் கொண்டிருந்தோம். நண்பர் தானே வண்டியை ஓட்டிக் கொள்வதாகச் சொன்னார்.

மாயனூரிலிருந்து NH வழியாக காவிரியின் தென்கரையில் சென்று கொண்டிருந்தோம். பெரியார் பாலத்தின் வழியாக திரும்பவும் வடகரைக்கு இறங்கி, முசிறியில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து முக்கொம்பு சென்றோம். நண்பகல் நேரமாதலால் வெய்யில் ஏறிக்கொண்டிருந்தது. காவிரியின் முதல் கிளைநதியான (தமிழ்நாட்டில்) கொள்ளிடம் இங்கு தான் பிரிகிறது. நாங்கள் பார்த்த போது காவிரியை விட கொள்ளிடத்தில் மிகவும் குறைவாகவே நீர் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்த காவிரி பாலத்தின் மேல் சிறிது நேரம் மர நிழலில் வண்டியை நிறுத்தி ஓய்வெடுத்தோம். முக்கொம்பு ஒரு சுற்றுலா தலமாக நன்றாக பராமரித்து வருகின்றனர். நம் ஊரில், சுற்றுலா என்றால் பொதுவாக இருக்கும் ஒரு பூங்காவும் (அல்லது ஒரு பூங்கா இருந்தாலே அது சுற்றுலா தலமாக ஆகி விடுமோ?) இங்கு இருந்தது. நாங்கள் உள்ளே சென்று பார்க்கவில்லை.


                                                        முக்கொம்பு - மேலணை 

சமீபத்தில் சுற்றுலா என்ற சொல்லாடலே என்ன பொருள் கொள்கிறது என்று தெரியவில்லை. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்துவிட்டால் மொத்த ஊரும் காலி செய்து வேறு ஊருக்கு சென்று, சொந்த ஊரில் எப்படி இருக்கிறார்களோ அதே வசதிகளுடன், அதே அன்றாட செயல்களுடன் தான் இருக்கிறார்கள். பொதுவாக நாம் நம் அன்றாடத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, புதிய ஒன்றை அனுபவிக்க சுற்றுலா செல்வோம். ஆனால் இன்று வெறும் புகைப்படம் எடுப்பதற்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கும் நாம் சுற்றுலா செல்கிறோம். மேலும் விடுமுறை நாட்களில் எந்த சுற்றுலா தலமும் திருப்பதி ஏழுமலையான் கோவில் போல ஜனத் திரள்களால் நிரம்பி வழியும். அங்கு இயற்கையை இயற்கையாக காண முடியாது. அல்லது அதற்கான மனம் நம்மிடம்  எளிதில் அமையாது. 

இந்தியாவில் கடந்த இருபது வருடங்களின் அபாரமான வளர்ச்சி அடைந்த துறை சுற்றுலா. எல்லோரிடமும் இப்போது பணப் புழக்கம் இருப்பதால், கார் என்பது நடுத்தர வர்க்கத்தின் அவசியமான ஒரு பொருளாகி விட்டதால், காரை வாங்கி விட்டு, கார் வாங்கி விட்டோம் என்பதற்காக வெளியே எடுத்து கிளம்பி விடுகிறோம். ஹோட்டல்களில் ரூம்களும், பேருந்து / ரயில் / விமான பயண சீட்டுகளும் முன்பதிவு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் முன்னரே செய்து விட வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான சூழல் தான். ஆனால் இது மட்டும் போதாது என்றே நினைக்கிறேன். நம்மிடம் பண்பாட்டு பயிற்சி இல்லையென்றால் இதனை எல்லாம் ஒழுங்காக பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. 

முக்கொம்பில் இருந்து  தென்கரை வழியாக ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டோம். ஸ்ரீரங்கம் நான் செல்வது இதுவே முதல் முறை. காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் தீவு போல் அமைந்துள்ளது ஸ்ரீரங்கம். மதிய நேர வெயில் சுட்டெரித்தது. ஸ்ரீரங்கம் கோபுரம் வெகு முன்னரே தெரிந்தது.  கோவிலுக்கு அருகில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறிது நேரம் யோசித்துவிட்டு, அடுத்த முறை கோவிலுக்குள்ளே சென்று பார்க்கலாம் என்று கோவிலின் வெளி மதில் சுவரை சுற்றி அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருக்கும் காவிரியை காண ஒரு ஆஷ்ரமத்தில் நுழைந்தோம். சில பிராமணர்கள் ஏதோ சடங்கு செய்து கொண்டிருந்தனர். உள்ளே சென்று கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிந்தது அது தனியார் இடம் என்று. அங்கிருக்கும் படித்துறையில் காவிரியை பார்த்து விட்டு, சிறிது நேரம்  ஓய்வெடுத்துவிட்டு கல்லணை நோக்கி கிளம்பினோம்.

கல்லணை என்றதுமே ஏதோ ஒரு பெருமிதம் நம்மை அறியாமல் நம்மிடம் வந்து விடுகிறது. பல ஆயிரம் போலி பெருமிதங்களைக் கொண்டு நமக்கு நாமே பெருமை அடித்துக் கொள்வதை விட, கல்லணை உண்மையில் ஒரு பெருமைப்பட வேண்டிய பொறியியல் அற்புதம் என்றே நினைக்கிறேன். முக்கொம்பில் காவிரியில் பிரிந்த கொள்ளிடம், கல்லணையில் காவிரியின் நீரை மீண்டும் பெற்று, வடகிழக்கு நோக்கி பாய்கிறது. கல்லணையிலிருந்து காவிரி வேணாறாக பிரிந்து காவிரிக்கு தெற்கில் செல்கிறது. காவிரிக்கு வடக்கில் கொள்ளிடமும், தெற்கில் வேணாரும் பாய்கிறது. 




                                                       கல்லணை - பாலம் மேல் 

முக்கொம்பில் கொள்ளிடம் பிரிந்து செல்லுமிடத்தில் இருக்கும் அணை மேலணை என்றும், கல்லணையில் கட்டப்பட்டது கீழணை என்றும் குறிப்பிடப்படுகிறது. கல்லணை கரிகால சோழனால் கட்டப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அதில் மாற்றம் கொண்டு வந்து, இப்பொழுது இருக்கும் அணையாக உள்ளது. காவிரியின் நீர் டெல்டா பகுதிகளுக்கு இவ்வணைக்கட்டு மூலமாகவே பிரிந்து வாய்க்கால் வழியாக செல்கிறது. வேணாற்றிருக்கு தெற்கே இந்த வாய்க்கால் வழியாக டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் பாய்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து பூம்புகார் வரை காவிரியின் பல்வேறு இடங்களில் சிறிய வாய்க்கால்கள் அமைத்து நீரினை பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ஜேடர்பாளையத்தில் காவிரிக்கு வடக்கில் ராஜ வாய்க்கால் பிரிந்து செல்கிறது. தெற்கிலும் ஒரு வாய்க்கால் பாசனத்திற்காக பயன்படுத்துகின்றனர். தெற்கில் செல்லும் வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்காலுடன் இணைகிறது. வடக்கில் பிரிந்த ராஜ வாய்க்கால், மேலும் இரண்டாக பிரிந்து செல்கிறது. மேலும் மாயனூரில் ஒரு வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இது மட்டுமில்லாமல் பல்வேறு சிறு வாய்க்கால்கள் காவிரியின் கிளை நதி போலவே செல்கிறது. கல்லணையிலிருந்து பிரியும் வாய்க்கால் ஒரு நதி போலவே டெல்டா பகுதிகளுக்கு நீரினை கொண்டு செல்கிறது. 

கல்லணையில் குளிக்கலாம் என்ற எங்கள் எண்ணம் காவிரியின் வேகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. கல்லணை ஒரு முட்கரண்டியில் (fork) இருக்கும் நான்கு முட்கள் போல, காவிரி நீரை நான்கு திசைகளில் பிரித்து அனுப்புகிறது. அதில் ஒன்றே புதுக் காவிரியாக பூம்புகார் வரை பாய்கிறது. ஏன் நான் புதுக் காவிரி என்று சொல்கிறேன் என்றால், கல்லணைக்கு மேலே வேறு பண்பாடாகவும், கல்லணைக்கு கீழே வேறு பண்பாடாகவும் இருக்கிறது.



                                                    காவிரி - மேலணை - கீழணை (கல்லணை)

                                          source - http://www.thanjavurtourism.com/kallanai-dam.html

கல்லணையிலிருந்து திருவையாறு நோக்கி கிளம்பினோம். மதிய சாப்பாட்டினை ஒரு சிறு  கடையில் முடித்துக்கொண்டு சென்றோம். காவிரியின் இடது புறமாக நாங்கள் சென்று கொண்டிருந்தோம். முக்கொம்பில் இருக்கும் போதே நண்பர் தண்டபாணி மொபைலில் அழைத்து இன்று இரவு ஆடுதுறை வந்துவிடுங்கள் என்று சொன்னார். நாங்களும் சரி என்று சொன்னோம். காவிரி கரையோரம் பூவரச மரங்கள் தென்பட ஆரம்பித்தது. செல்லும் வழியில் திருக்காட்டுப்பள்ளியில் வண்டியினை நிறுத்தி குடமுருட்டி ஆறு காவிரியிலிருந்து பிரிந்து செல்லும் பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தோம். காவிரிக்கு தெற்கில் குடமுருட்டி பிரிந்து செல்கிறது. 



அங்கு குளிக்கலாம் ஒரு படித்துறையில் இறங்கினோம். அங்கு ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு எங்கள் பின்னால் வந்தார். 

"இங்க ஆழம் எத்தன அடி இருக்கும், ணா" என்று கேட்டேன்.

"நானும் ஊருக்கு புதுசு தான். தஞ்சாவூர் பக்கத்துல. ஆத்த பாத்த ஒடனே குளிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அத்தான் படிதொறக்கி வந்தன்" என்று சொன்னார்.

நாங்களும் அங்கு படித்துறையில் கணுக்கால் அளவு நீரில் குளித்தோம். நீர் பயங்கர வேகமாக வந்து கொண்டிருந்ததால், உள்ளே சென்று குளிக்க முடியவில்லை. நீர் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருந்தது. ஆலமரத்தடியில் படித்துறையில் நான்கு, ஐந்து பேர் லுங்கி கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். நாங்கள் இறங்குவதை பார்த்த ஒருவர், பக்கத்தில் இருக்கும் சுவற்றிற்கு இப்பால் வந்து குளிக்கும் படி சொன்னார். அவரிடம் பேசிக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று கெட்ட வார்த்தையில் திட்டுவது கேட்டது. நாங்கள் திரும்பி பார்த்தபோது அவர்  மொபைலில் யாரையோ கெட்ட வார்த்தைகளில் ஒரு இரண்டு நிமிடம் விடாமல் பயங்கர கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு நிமிடம் கழித்து "தம்பி, உள்ள போகாதீங்க  மேலயே குளிங்க, தண்ணீல அடிச்சிட்டு போயிடுவீங்க" என்று எதுவுமே நடக்காதது போல் எங்களிடம் அமைதியாக பேசினார். அவ்வளவு கோபத்தையும் எப்படி விட்டுவிட்டு சாதாரணமாக பேசுகிறார் என்று ஆச்சரியப்பட்டோம். அப்படி பேசுவதே அந்த கோபத்தில் இருந்து வெளியே வருவதற்காக கூட இருக்கலாம்.




                                                          காவிரி - குடமுருட்டி பாலம் 

அரை மணி நேரம் நன்றாக குளித்து விட்டு, குடமுருட்டி ஆற்றுக்கும், காவிரிக்கும் இடையில் உள்ள வழியில் திருவையாறு நோக்கி கிளம்பினோம். நெல்லும், கரும்பும், வாழையும் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆனால் மக்களிடம் பெரிய வசதிகள் இல்லை. ஓட்டு வீடுகளும், சிறு மாடி வீடுகளும் இருந்தன. மொத்த ஊர்களுமே காவிரியை நம்பியே இருக்கிறது. பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இரண்டு புறமும் மர நிழலோடு நாங்கள் செல்லும் போது ஏதோ கேரளாவிற்குள் தவறி வந்து விட்டோமா என்றே நினைத்தோம். எங்கு பார்த்தாலும் நீரின்  வாசமும்,மரங்களும் இருந்தன. அங்கங்கே காவிரி ரோட்டிற்கு மிக அருகில் செல்கிறாள். ஆண்கள் பெரும்பாலும் லுங்கிகளிலேயே இருந்தனர். ரோட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அங்கங்கே காவிரியின் படித்துறைகளில் குளித்துக் கொண்டே இருக்கின்றனர். 

ஒரு இடத்தில் நடு ரோட்டில் ஒரு இளம் பெண்ணும் ஒரு முதியவரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆடு மேய்ப்பவர்கள். அப்பெண்ணை வண்டி போகிற வேகத்தில் சட்டென்று ஒரு நொடி பார்த்தேன. ஒரு இருபது வயது இருக்கும் இளம் பெண். கருப்பாக இருந்தாள். கையில் ஆடு ஓட்டும் குச்சுடன் இருந்தாள். அவள் கண்களில் இருந்த கள்ளமின்மை அவளை மிகவும் அழகாக காட்டியது. கல்லணைக்கு மேலிருக்கும் பெண்களிடம் இந்த கள்ளமின்மையும், அழகும் இல்லை. கல்லணைக்கு கீழிருந்து பெண்கள் கருப்பாகவும், அழகாகவும் இருந்தனர். உயரமும் சற்று குறைவாகவே இருந்தனர். 

இங்கு வாழை இலைகளை கட்டி ஏற்றிக்கொண்டிருந்தனர். தலைவாழை இலைகளை நன்றாக சுருட்டி வாழைக் தண்டுகளை கொண்டே மூடி எடுத்து செல்கின்றனர். 



திருவையாறு வந்து, ஒரு படித்துறையில் அமர்ந்து பேசி பேசிக்கொண்டிருந்தோம். திருவையாற்றில் காவிரி முழுவதும் தளும்பி  செல்கிறாள். நாங்கள் அமர்ந்த படித்துறைக்கு ஐந்தடி பக்கத்தில் வீடுகள் உள்ளன.திடீரென்று ஐந்து இளைஞர்கள் வந்து குளித்து செல்கின்றனர்.  திருவையாற்றில் அசோகா என்னும் இனிப்பு பிரபலம் என்று நண்பர் சொன்னார். அங்கு குளித்துக் கொண்டிருந்த  ஒருவரிடம் கேட்டோம். அவர் ரெண்டு கடை இருப்பதாக சொன்னார். பங்காளிகளா என்று தெரியவில்லை. ஒரு கடையில் சுத்த நெய்யில் அசோகா கிடைக்கும் என்றும், மற்றோரு கடையில் டால்டா அசோகா கிடைக்கும் என்றும் கடையின் பெயர்களை சொன்னார். நாங்கள் அவற்றைக் கேட்டுக்கொண்டு வழக்கம் போல் பெயரினை மாற்றி டால்டா அசோகாவினை வாங்கிச் சென்றோம்.

பதினெட்டு / பத்தொம்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த  இசை மேதை தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்ந்த வீடு இப்படித்துறையின் சாலையில் தான் உள்ளது.  வீட்டின் அருகிலேயே இசைப்பள்ளியும் ஒன்று உள்ளது. அவற்றை கடந்து ஆடுதுறை நோக்கி புறப்பட்டோம்.

"இந்த தேக்கு மரமெல்லாத்தையும் அரசாங்கமே வெட்டி மாற சாமான்கள் செய்து வித்தா நல்லாருக்குமில்ல" என்று காவிரியின் கரையோரம் நிறைய வளர்ந்திருந்த தேக்கு மரங்களை பார்த்துக் கொண்டே நண்பருடன் சொன்னேன்.

"அது பெரிய ஊழலாயிடும்" என்று நண்பர் சொன்னார்.

"ஊழல் நடக்காதுன்னு முடிவு செஞ்சு தான் ஒரு துறைய உருவாக்கணும்னா, எந்த ஒண்ணுத்தையும் உருவாக்கவே முடியாது" என்று சொன்னேன். தேக்கு மரங்களும், பூவரசு மரங்களும் ஒட்டி, முழு அளவோடு ஓடும் காவிரியை பார்த்துக் கொண்டு சென்றோம். 

இன்னொரு பொதுவான ஒரு அம்சம் மயில்கள். பவானியை தாண்டியதிலிருந்தே மயில்கள் அதிகமாக தென்பட்டன. முசிறியில் ஒரு இடத்தில் ஆண் மயில் ஒன்று அழகாக தோகை விரித்திரிந்தது. ஆனால் நண்பர் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டதால், ஒழுங்காக பார்க்க முடியவில்லை. ஒரு இடத்தில் காவிரிக் கரையின் மிக அருகில், மைல் கல்லில் மேல் தன் நீலக் கழுத்தினை ஒரு பக்கம் திருப்பிப் பார்த்துக் கொண்டு நீண்ட தோகைகளை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்த காட்சி ஒரு ஓவியம் போல் மனதில் பதிந்தது. 

திருவையாறிலிருந்து ஆடுதுறைக்கு சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து ஆடுதுறைக்கு கூகுள் மேப் போட்டுக்  கொண்டு சென்றோம். காவிரிக்கரை ஒட்டியே மாநில நெடுஞ்சாலை உள்ளதால் வழியில் காவிரியை விட்டு பிரிந்தும் சேர்ந்தும் சென்று கொண்டிருந்தோம். காவிரியுடன் செல்வது ஒரு ஒளிந்து விளையாடும் ஆட்டம் போலவே இருந்தது. கல்லணைக்கு கீழே காவிரியின் அகலம் குறைந்து கொண்டே செல்கிறது. மெத்திட்டாரு என்ற இடத்தில் அரசலாறு என்னும் ஆறு பிரிந்து காவிரியின் தெற்கே செல்கிறது. ஒரு இடத்தில் டீக்குடிக்க நிறுத்தினோம். மாலை நேரமானதால் டீக்கடையில் கூட்டம் இருந்தது. 

நான்கைந்து இளைஞர்கள் 'பொட்டணம்' வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். 18 முதல் 20 வரை வயதுள்ள இளைஞர்கள். ஐந்தாறு  பேர் இருந்தனர். எவரும் சிகரெட்டு அடிக்கவில்லை. அவர்கள் பேச்சும், கிண்டலும் கேலியாக இருந்தது. எங்கள் ஊரில் மட்டும் ஏன் நாலைந்து நண்பர்கள் சேர்ந்தால்  சிகரெட்டும், சினிமாவும் மட்டுமில்லாமல் ஏதோ ஒரு பெரிய சாதனை புரிவது போல் ஆளுக்கொரு வண்டியில் முறுக்கிக்கொண்டு போகிறார்கள் என்றே தெரியவில்லை. அல்லது நாங்கள் பார்த்த இளைஞர்கள் விதி விலக்குகலா என்று தெரியவில்லை. நாங்களும் பொட்டணம் வாங்கி சாப்பிட்டோம். எங்கள் ஊர் பக்கடா அளவில் ஒரு  பொட்டலத்தில் மடித்து கொடுத்தனர். நன்றாக இருந்தது.



திருப்பழனம், கபிஸ்தலம், சுவாமிமலை, திருவிசநல்லூ வழியாக சென்று கொண்டிருந்தோம். மேற்கே சூரியன் மறையும் மாலை ஒளி பக்கவாட்டில் காவிரியின் மேல் விழுந்து, வெள்ளி மின்னுவது போல் நீர் பிரதிபலித்தது. வண்டியில் சென்று கொண்டே இதை எல்லாம் பார்த்துச் சென்றதால், அந்த நொடியின் காட்சி அப்படியே ஒரு புகைப்படம் போல் மனதில் பதிந்து விடிகிறது. பைக்கில் திறந்த வெளியில் காற்றையும் , ஒளியையும்  நேரடியாக நாம் உணர்வதால் இது போன்றவற்றை அறிய முடிகிறது. காரில் பயணிக்கும் போது இந்த அனுப்பவும் நமக்கு ஏற்படுவதில்லை. காரில் செல்வதால் வேறு பயன்கள் இருந்தாலும், இது போன்ற சில அனுபவங்கள் கிட்டுவதில்லை.

ஆடுதுறைக்குள் காவிரியையும் , வீரசோழ ஆற்றையும் (காவிரியின் இன்னொரு கிளை ஆறு) கடந்து உள்ளே சென்றோம். ஆடுதுறை ஒரு சிறு டவுன். நண்பர் தண்டபாணியிடம் கால் செய்து வந்து விட்டதாக கூறினோம். அவரும் சிறிது நேரத்தில் வந்தார். ஒரு டீ குடித்துவிட்டு, அவரது வீட்டிற்கு  சென்றோம். ஆடுதுறை ரயில் நிலையம் அருகிலேயே அவருடைய பணியிடமும், வீடும் உள்ளது. இரவு நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 

Sunday, 25 August 2024

'காவிரிக்கரை' பயணம் - 1


 

"ஜி, எப்போ காவிரி பயணம் போலாம்" என்று நான் கேட்டேன்.

"அட, போற போக்குல சொன்னதெல்லாம் seriousa  எடுத்து கிட்ட" என்று நண்பர் சொன்னார்.

சிட்டி - தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய "நடந்தாய் வாழி - காவிரி" நூலினை வாசிக்கும் போது, இந்த உரையாடல்கள் நிகழ்ந்தன.

இப்படி ஆரம்பித்தது தான் எங்கள் 'காவிரிக்கரை' பயணம். 

காவிரியை ஒட்டியே, அதன் கூடவே முடிந்த வரை பயணம் செல்வது தான் எங்கள் திட்டம். இறுதியில் நாங்கள் இருவர் மட்டுமே (நானும், நண்பர் ஜெயவேலுவும்) பயணம் செய்வதாக முடிவானதால், பைக்கில் போகலாம் என்று முடிவு செய்தோம். பைக்கில் சென்றால் காரில் செல்ல முடியாத இடங்களுக்கும் காவிரியோடு சேர்ந்து செல்லலாம் என்ற ஆசையும் கூட.

எங்கிருந்து தொடங்குவது என்று ஒரு குழப்பம். தலைகாவிரியிலிருந்து தொடங்கினால் தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தென்-மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருந்ததால், நாங்கள் ஹொகேனக்கல்லிலிருந்து தொடங்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அங்கும் நீர் அதிகம் போவதால், உள்ளே அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டு, சரி, ஓடும் காவிரியை முதலில் பார்க்காமல், அடைந்திருக்கும் காவிரியை மேட்டூர் அணையில் பார்க்க புறப்பட்டோம்.

 NH ரோடுகளை தவிர்த்து, கிராம சாலைகளிலும், SH சாலைகளிலும் செல்வதே எங்கள் திட்டம். காலை ஆறு மணிக்கு தர்மபுரியில் இருந்து இன்னொரு நண்பரின் royal enfield பைக்கில் கிளம்பினோம். நண்பர் வண்டி ஓட்ட, நான் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு பின்னாடி அமர்ந்திருந்தேன். செல்லும் வழியில் நாகாவதி அணைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். 

கடந்த பதினைந்து தினங்களாக, நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால், வழியெங்கும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது. நண்பர் அவருடைய கல்லூரி நண்பனின் வீடுகளை காட்டி கொண்டு சென்றார். 
"அபாரமான வளர்ச்சி, இந்த இடம். வெறும் குடிசை வீடுகளும், ஒட்டு வீடுகளும் தான் இருந்தது. இப்போ வேற லெவல்ல இருக்கு" என்றார் நண்பர்.

"ஆமாம், கடந்த இருபது வருடங்களில் தர்மபுரி சுற்று வட்டாரங்களில் பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சி. முக்கால்வாசி வெளியூர் பணம். Bangalore NH-ல் முக்கியமான இடமாகிறதனால தர்மபுரியிலிருந்து - ஓசூர் வரை real estate exponential growth" என்று சொன்னேன்.

சாலை குறுகி இருந்தாலும் நன்றாக இருத்தது. தொப்பூர் மலை தொடர்களை பார்த்துக் கொண்டே சென்றோம். நாகாவதி அணைக்கு அருகில் புலம் பெயர் ஈழ குடியிருப்புகள் இருந்தன. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. ஒரு 50 நீர்காகங்களின் கூட்டம் மேலே பறந்து சென்றது. இளவெயில் அடிக்க தொடங்கியது. <படம்>

மேட்டூர் செல்லும் வழியில் பெரும்பாலையில் அகழ்வு இடம் இருப்பதாக முன்னர் படித்ததால், அங்கு செல்லலாம் என்று கூகிள் மேப்பில் வழி போட்டுக் கொண்டு சென்றோம். அங்கு அகழ்வு பணிகள் முடிந்து விட்டதாக அங்கு சென்ற பின் தெரிந்து கொண்டு, பக்கத்திலே ஒரு நடுகல் இடத்திற்கு சென்று பார்த்தோம். மூன்று நடுகற்கள் மூன்று திசையிலும் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டு கிழக்கு பக்கம் மட்டும் திறந்திருப்பது போன்று வைத்திருந்தனர். மேற்கு புறமும், தெற்கு புறமும் இருந்த நடுகற்கள் போர்  காட்சிகளாக செதுக்கப்பட்டிருந்தன. காலை சூரிய ஒளியில் அந்த கல்வெட்டுகள் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது. குதிரையில் இருந்து ஒரு போர் வீரன் சண்டையிடுவது போன்று அற்புதமாக செதுக்கப்பட்டிருந்தது. வடக்கில் இருந்த கல்லில் கல்வெட்டுகள் இருந்தன. 



மேச்சேரியில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு மேட்டூருக்கு சென்றோம். மேட்டூர் நீர்தேக்கத்திலிருந்து ஒரு கண்மாயில் மட்டும் நீர் திறந்து விடப்பட்டு பொங்கி வந்து கொண்டிருந்தது. அதனை பார்த்துக்கொண்டே மேலே மேட்டூர் அணைக்கு சென்றோம். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று பார்வை மண்டபத்தில் ஏறி பைனாகுலரில் மேட்டூர் அணையின் நீர்தேக்கத்தினை கண்டோம். 

அங்கிருந்து கீழே இறங்கி ஒரு நினைவுத்தூணுக்கு அருகில் இருந்து, பைனாகுலரில் நீர் கண்மாயிலிருந்து பொங்கி வருவதை கண்டோம். நீர் இறங்கி செல்லும் கால்வாயில், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் வரையில் வரிசையாக நீர்காகங்கள் வெயில் காய்ந்து கொண்டிருந்தன. நீர் காகங்களை இவ்வளவு எண்ணிக்கையில் நான் பார்த்ததே இல்லை. அதுவும் அனைத்து காகங்களும் வரிசையில் ஏதோ ராணுவ ஒழுங்கில் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தேன். நம் கண்ணுக்கு நாம் காணும் காட்சிகள், நாம் ஏற்கனவே அறிந்திருந்த ஒரு கணித அமைப்புக்குள் வந்தால் தான் அதனை நாம் அழகென்று ஏற்கிறோம். அப்படி வடிவமே இல்லாத ஒன்றை நம்மால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. நாம் இயற்கையை முதலில் அணுகுவது அதன் வடிவத்தைத் தான் என்று நினைக்கிறேன். நமக்கு முன்பே தெரிந்திருக்கும் வடிவத்திருந்து பார்க்கும் காட்சியினை ஒப்பிட்டுப் பார்த்து அர்த்தம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். 



நீர்காகங்களையே ரொம்ப நேரம் மாறி மாறி பைனாகுலரில் பார்த்துக் கொண்டிருந்தோம். வெளியில் கிளம்பி வந்து வண்டி பக்கத்தில் நண்பருக்கு காத்து கொண்டிருந்தேன். நண்பர் பக்கத்தில் இருந்த கருவேல மரத்தருகில் சென்று பார்த்து கொண்டிருந்தார். பக்கம் வந்து "கருவேல மரம் முழுக்க பூத்திருக்கிறது, நீ பார்த்தாயா?" என்றார். நான் இல்லை என்று சொல்லி அதன் அருகில் சென்று பார்த்தேன். இதுவரை நான் கருவேல மரம்  பூக்களை பார்த்தது இல்லை. பார்த்திருந்தாலும் நினைவில் ஏற்றியது இல்லை. மரம் முழுக்க பூத்திருந்தது. பூக்களை சுற்றி தேனீக்கள் மகரந்தம் குடிக்க ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. மகரந்த வாசனை காற்றில் மிதந்து கொண்டிருந்தது.



மேட்டூரிலிருந்து கிளம்பும் போது மீன்கூடைகளையும், மீன்கடைகளையும் திறந்து கொண்டிருந்தனர். எங்கள் இடது புறத்தில் காவிரி ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்கும் இடையில், காவிரியின் மேல் இரு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு பாலம் உள்ளது. காவிரி கிராஸ் என்ற இடத்தில நாங்கள் மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் நுழைந்து ஒரு பாலத்தின் பக்கம் வந்தோம். அங்கு ஒரு காவல் ஷெட் போல ஒன்று இருந்தது. அதில் உள்ளேயும் வெளியேயும் குட்டி நாய்களும், குட்டி பூனைகளும் இருந்தது. பாலத்தின் மேலே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தோம்.  திடீரென்று ஒரு பையன் வண்டியில் வந்து , ஒரு தட்டில் தீனிகளை வைத்தான். அந்த பூனைகளும், நாய்களும் ஒரே தட்டில் அவற்றை உண்டன. ஒரு நாய்க்குட்டிக்கு காலில் மருந்து  போட்டு விட்டான். அந்த ஷெட்டில் இருந்த அனைத்து குட்டிகளையும் வெளியே தூக்கி வைத்து அதனை கழுவி விட்டான். நாய்களும், பூனைகளும் உண்ட பிறகு தட்டினை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். அவன் கொஞ்ச தூரம் செல்லும் வரையில் சில பூனைகளும், நாய்குட்டிகளும் ஒன்றாக அவனை துரத்தின. 



 நண்பர் யுவராஜ் பவானி செல்லும் வழியில் அவருடைய ஊர் இருப்பதால் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தார். அவரை சந்தித்து காவிரியின் இன்னொரு குறுக்கணை  வழியாக சென்றோம். ஆற்றோர மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் ஜெயவேல் பேசிக் கொண்டே இருந்தார். யுவராஜ் அவரை சேலம் பாலம் சந்திப்பில் சில வருடங்களுக்கு முன் சந்தித்தது பற்றியும், அவர் "ஆரோக்கிய நிகேதன்" நூலினை அறிமுகப் படுத்தி பேசியதை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்று அவர் அந்நூலினை பற்றி அற்புதமாக பேசியதால், அன்றே அவர் அந்த நூலினை வாங்கியதாகவும் சொன்னார். தீவிரமாக அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். (பேசி கொண்டிருந்தார்). நண்பர் ஜெயவேல் பேசி கொண்டிருப்பதை பார்த்தபோது, எப்படி ஒருவரால் அவ்வளவு தீவிரமாகும் சரளமாகவும் பேச முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். முற்றிலும் இலக்கியம் சார்ந்தே பேசிக் கொண்டிருந்தோம்.

நண்பர் யுவராஜ் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரின் அப்பா இறந்து விட்டதால், துக்கம் விசாரிக்க அவரது வீடு தேடிச்சென்றபோது, எப்படி பக்கத்து வீட்டு காரர்களுக்குக் கூட அங்கு ஒரு சாவு ஏற்பட்டது தெரியாமல் இருந்தது என்றும், அந்த சாவு வீட்டிற்கு சென்றால், அனைவரும் குளித்து முடித்து இவர்களை நன்றாக உபசரித்து அனுப்பி வைத்தனர் என்றும் ஆச்சரித்தோடு சொன்னார். இத்தனைக்கும் சாவு நடந்தது காலையில், இவர்கள் சென்றது மதியத்தில். ஒரு ஆறு மணி நேரத்தில் ஒரு தந்தையின்  இல்லாமையின் வெற்றிடத்தை மறந்து, குளித்து முடித்து மேலுமொரு நாள் போல இருந்தனர் என்று சொன்னார். இது நகரத்தில் அல்ல. காவிரி கரையோர கிராமத்தில். எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. சடங்குகள் அற்ற வாழ்வு இருக்க முடியுமானால் அது அறிவின் உச்சத்தில் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நிலையை அடைய ஒரு சதவீத அளவுக்குக் கூட ஒரு சமூகமாக நாம் வளரவில்லை. 



மேட்டூரிலிருந்து பவானி செல்லும் வரை  எங்கு பார்த்தாலும் கரும்பும், வாழையும், பாக்கு மரங்களுமாக இருந்தன. காவிரியின் கருணை பச்சை வயல்களாக மாறி இருந்தது. நாங்கள் காவிரி கூடவே செல்ல விரும்பியதால், கூகிள் மேப் சொல்லும் வழியினை பின்பற்றாமல், மேப்பில் காவிரியின் ஓரமாக சிறு வழி இருந்தாலும் அதனை ஒட்டியே சென்றோம். சில இடத்தில அகன்றும், சில  இடத்தில குறுகியும், வேகம் குறைந்தும், வேகமாகவும் காவிரி சென்று கொண்டிருந்தாள். இருபது நாட்களுக்கு முன், காவிரியில் நீர் அதிகமாக சென்றதன் காட்சிகளை சில கரைகளில் கண்டோம். 

பவானியில் வந்து மதிய உணவு முடித்து பவானி சங்கமேஸ்வர் கோவில் அருகில் உள்ள படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தோம். குளிப்பதற்கு கம்பி கட்டி வைத்துள்ளனர். அந்த இடம் முழுவதும் சடங்கு செய்வதற்கு மக்கள் வந்து கொண்டே இருந்தனர். சடங்குகள் என்ற பெயரில் ஆறுகளை நாசம் செய்து கொண்டிருக்கிறோம். உடுத்திய உடைகள் அனைத்தையும் அப்படியே ஆற்றில் விட்டு விடுகிறார்கள். இத்தனைக்கும் அங்கேயே படிக்கட்டுகளில் ஒரு தொட்டி போன்று வைத்து துணிகளை தொட்டியில் போடவும் என்று எழுதி வைத்திருக்கின்றனர். நமக்கு ஏன் சடங்கின் மேல் இவ்வளவு மோகம் என்று தெரியவில்லை. நண்பர், ஒரு நடுத்தர பெண்மணி சேலையை ஆற்றில் போட முயலும் போது, அங்கே தொட்டியில் போடுங்கள் என்று சொன்னார், ஆனால் அந்த பெண்மணி கேட்காமல் ஆற்றில் போட்டு போனார். 

ஏன் நதிகள் மேல் இந்த உதாசீனம் என்றே தெரியவில்ல. ஒரு புறம் தண்ணீர் வரவில்லையெனில் கர்நாடகாவிடம் சண்டை பிடிக்கிறோம்.  ஆடி 18 அன்று, காவிரி முழுக்க பூ போட்டு கொண்டாடுகிறோம். ஆனால் அதிலேயே கண்டதையும் போட்டு நாசம் செய்கிறோம். ஏன் நமக்கு இந்த ரெட்டை வேஷம் என்றே தெரியவில்லை. சடங்குகள் ஒரு காலத்தில் செய்ததை நாம் அப்படியே பின்பற்றுவதால், நம் நதிகள் நாசம் அடைகின்றன. ஒரு காலத்தில் அனைத்து துணிகளும், மற்ற பொருட்களும் மட்கும் (கரிம) பொருட்களால் ஆனவை.ஆனால் நாம் இப்பொழுது பயன்படுத்தும் அனைத்தும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வது. மேலும் எங்குமே பிளாஸ்டிக் மயமாகிவிட்ட காலத்தில், இச்சடங்குகள் தேவை தானா? வனத்துறை சட்டங்கள் போன்று, ஆறுகளுக்கும் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் தான் இதனை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும் என்று நண்பரிடம்பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் நாங்கள் ரொம்ப நேரம் அங்கேயே குளித்துக் கொண்டிருந்தோம். பவானியும், காவிரியும் சங்கமிக்கும் இடத்தில காவிரி படித்துறையில் குளுமையான நீரில் குளித்துக் கொண்டிருந்தோம். மார்பளவு நீர் சென்று கொண்டிருந்ததால், குளிப்பதற்கு நன்றாக இருந்தது. நீரும் வேகமாக சென்று கொண்டிருந்தது. பவானி ஆறு வெறும் குப்பைகளாகவும், சாக்கடைகளாகவும் காவிரியுடன் கலக்கிறது. இதனை திரிவேணி சங்கமம் என்று சொல்கின்றனர். பூமிக்கு அடியில் இன்னொரு ஆறு செல்வதாக இருக்கும் ஐதீகத்தினால் இப்பெயர். 

குளித்து முடித்து காவிரி கரையோரமே சென்று கொண்டிருந்தோம். குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம் என்று சென்று கொண்டிருந்தோம். எங்கு காவிரியின் மேல் பாலம் வந்தாலும் உள்ளே சென்று பாலத்தின் மேல் வண்டியை நிறுத்தி, காவிரியை பார்த்துவிட்டு செல்வோம். பெரும்பாலான பாலங்களில் குறுக்கு அணைகள் அமைத்து காவிரியின் வேகத்தினை கட்டுப்படுத்தி ஒரே கண்மாயில் நீர் வேகமாக திறந்து விடுகின்றனர். அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். அப்படி மொத்த வேகமும் ஒரே கண்மாயில் வருவத்தால் நீர் நுரைத்துக் கொண்டு வேகமாக வெளியேறுவதை பைனாகுலரில் பார்த்து கடல் பொங்குவது போன்று ஒரு நொடி தோன்றியது. 

உள் கிராமங்களில் அங்குள்ள வீடுகளை பார்த்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தோம். பெரும்பாலும்  எங்கும் ஓட்டு வீடுகளையோ, குடிசை வீடுகளையோ பார்க்க முடியவில்லை. அனைத்தும் மாடி வீடுகளே. அதே போன்று சாதாரணமான மாடி வீடுகள் இல்லை. பெரிய பெரிய மாளிகை வீடுகளாகவே இருந்தன. வீடுகளின் நெருக்கமும் அதிகம் இல்லை. வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. பரமத்தி வேலூர்  அருகே கோரை புற்கள் சாகுபடி செய்து கொண்டிருந்தனர். நெல் போன்றே உயரத்திலும், வண்ணத்திலும் உள்ளது. கோரைப் பாய் அதிலிருந்து தான் செய்கின்றனர். 



நிறைய இடங்களில் வாத்துக் கறி கடைகள் இருந்தன. ஆனால் எங்களுக்கு தான் அதனை ருசிக்க நேரம் இருக்கவில்லை. ஒரு பாலத்தில் சாயங்கால வேளையில் நின்று கொண்டிருந்தோம். திடீரென்று பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது. ஒரு நாற்பது வயது பெண்மணி காரில் இருந்து இறங்கி, ஒரு கட்டப்பையில் வைத்திருந்தவற்றை ஆற்றில் அப்படியே பையோடு தூக்கி போட்டார். கெட்ட வார்த்தை மனதில் நினைத்துக் கொண்டு அவர்களை திட்டிக் கொண்டிருந்தோம். இவர்களின் நடு வீட்டில் யாராவது மலம் கழித்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இவர்கள் ஆறுகளுக்கு செய்வது. யாராவது உண்மையிலேயே அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இப்படி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அப்படி கூட இவர்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை. மனதினை வேறு திசையில் மாற்ற பைனாகுலரில் தூரத்தில் இருக்கும் நீர்க் காகங்களை பார்க்க  தொடங்கினேன். 

சாலைகள் அனைத்து இடங்களிலும் நன்றாக இருந்தது. கிராமங்களில் கூட. ஒரு இடத்தின் பொருளாதார முன்னேற்றத்தின் முதல் படியே அங்கு இருக்கும் சாலைகளின் வழியாகவே தெரிந்து கொள்ளலாம். வழியில் பல இடங்களில் சந்தைகளை கண்டோம். மோகனுர் சக்கரை ஆலையை கடந்து சென்று கொண்டிருந்தோம். வெளிச்சம் குறைந்து இரவானதால், ஒரு விடுதிக்கு சென்று A/C அறை போட்டு தங்கினோம்.