Saturday, 23 November 2024

குற்றம்

                                                                          (1)  

"திட்டம்போட்டு தாண்டா மாப்ள செஞ்சிருப்பா " என்றான் சரவணன், கறியினை கடித்துக்கொண்டே.

"அப்படி எதும் தெரில மச்சான், நல்லா தான் இருந்தாங்க. ஏன் இப்புடி செஞ்சானே இன்னய வரைக்கும் புரில", சாப்பிட்டு முடித்தாலும் சரவணனுடன் பேசிக்கொண்டிருப்பதால், எண்ணெய் பிசுக்கான கையுடன், தட்டில் கோடு போட்டுக்கொண்டே பதில் சொன்னான் செல்வம்.

ஐந்து வருடம் முன்பு நடந்த ஒரு கொலையினை பற்றி தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

செல்வத்தின் தங்கை வசந்தி தான் அந்த கொலையை செய்தவள். மேட்டுக்கட்டியூர் தான் செல்வமும் அவனுடைய தங்கையும் பிறந்து, வளர்ந்த ஊர். அவனுடைய அப்பா அந்த ஊரில் "பெரிய மனிதர்கள்" என்று சொல்லிக் கொள்பவர்களில் ஒருவர். அரசாங்கத்தில் ஒரு பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

வசந்தியின் திருமணம் பத்து வருடங்கள் முன்பு அந்த ஊரே மெச்சும் அளவுக்கு தட புடலாக நடத்தி வைத்தார். அப்போது செல்வத்திற்கு வயது இருபத்தைந்து. வசந்திக்கு இருபத்திமூன்று. மாப்பிள்ளை பக்கத்துக்கு ஊரான சிவபள்ளத்தில் அரசாங்க பணியில் உள்ளார். அவருடைய சொந்த ஊரும் அதுவே. திருமணம் முடிந்து ஐந்தாவது வருடத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஏனோ அன்றிலிருந்து அவர்கள் இருவருக்கும் சண்டைகள் அதிகமாக ஆரம்பித்தன. 

செல்வத்தின் நினைவுகள் மீண்டும் அந்த சம்பவத்தை பற்றியே சுற்றி கொண்டிருந்தது. அவனால் அதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாப்பிட்டு முடித்து வெளியில் டீ குடிக்க அவனும், சரவணனும் நடந்து போய் கொண்டிருந்தார்கள். மதிய வெயில் சுளீரென்று முகத்தில் அறைந்தது. அந்த தெருவிலேயே டீ கடை இருந்தாலும்,  இரண்டு  தெரு தள்ளி  இருக்கும் கடைக்கு சென்றனர். இரண்டு பேர் டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து 'பிக் பாஸ்' பற்றி பேசிக் கொண்டிருந்தனர். கிங்ஸ் சிகரெட்டுடன் ஆளுக்கொரு டீயினை வாங்கிக் கொண்டு, கடையின் பின்பக்கம் சென்றனர். 

"மச்சான். நீயாச்சும் எங்கப்பா கிட்ட சொல்லி பாருடா", என்றான் செல்வம் எரிந்து கொண்டிருந்த திரிகயிற்றில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு. 

"நான் சொன்னா மட்டும் உங்கப்பா கேட்பாராடா? அவர் குணம் பத்தி உனக்குத் தெரியாதா!" என்றான் சரவணன் புகையினை வட்ட வட்டமாக விட்டுக் கொண்டு.

"இல்ல டா, வசந்தி புருசனும் அவள விட்டுட்டான், அவளுக்குனு இப்ப யாருமே இல்ல", கடையின் பின்பக்கம் ஓடும் சிறு ஓடையினை பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

"நாளைக்கு வக்கீல் வராரு டா, அதுக்குள்ள எங்கப்பாகிட்ட பேசிப் பாருடா" என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு  அங்கிருந்து கிளம்பினான் செல்வம்.

                                                                        (2)

வசந்திக்கும் அவள் கணவனுக்கும் குழந்தை பிறந்ததிலிருந்து சண்டைகள் அதிகமானது. வசந்தி அடிக்கடி கணவனுடன் சண்டை போட்டு கொண்டு அவள் அம்மா வீட்டுக்கு வந்து விடுவாள். செல்வத்தின் அப்பாவும், அம்மாவும் எவ்வளவு தான் கேட்டு பார்த்தாலும், என்ன பிரச்சனை என்று இருவரும் சொல்லவில்லை. செல்வத்தின் திருமணத்தின் போதும் வசந்தியும் அவள் கணவரும் சந்தோஷமாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்படியே இருந்தது.

வசந்தி, குழந்தை பெற்ற பின்னர் அவள் கணவன் மீது விலக்கம் அதிகமாகியது. அதற்கு முன்னாலும் இருவரும் மனமொத்து இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. அவனின் அரசாங்க வேலையால் அவர்களால் "ஆடம்பரமாகவே" வாழ முடிந்தது. அவளும் அதில் எந்த குறையும் சொல்லவில்லை. ஆனாலும் அவளால் அவனிடம் சந்தோஷமாக வாழ முடியவில்லை. 

ஒரு நாள் அவளும், பக்கத்துக்கு ஊரில் இருக்கும் மனோகர் என்பவனும் சேர்ந்து இருந்த போது, தூங்கிக் கொண்டிருந்த அவள் பையன் அதனை பார்த்து விட்டான். மனோகரும் அங்கிருந்து கிளம்பி போனவுடன், அவளுக்கு இதை எப்படி சமாளிப்பதென்றே தெரியவில்லை. அவள் பையனுக்கு ஐந்து வயது தான் ஆகிறது. 

"யாரும்மா அவரு?" என்று மட்டும் அவன் கேட்டு விட்டு  விளையாட போய் விட்டான்.

ஏன் அவள் அப்படி நடந்து கொண்டாள் என்று அவளையே அவள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள். 'இது ஒரு தேவுடியா செய்யும் வேலை, அப்படியென்றால் நான் ஒரு தேவுடியாவா?' என்று அவள் மனம் அலைக்கழித்தது. மனோகர் இவளை பல்வேறு சமயங்களில் பார்த்து கொண்டிருந்தான் என்பது இவளுக்கும் தெரியும் தான். ஆனால் தான் இப்படி அவனுடன் இருப்பேன் என்று நேற்று கூட அவள் நினைத்து பார்த்ததில்லை. 

"அம்மா, பசிக்குது" என்று அவள் மகன் வீட்டிற்குள் வந்தான். அவனுக்கு சாப்பாடு போட்டு அவளும் கொஞ்சம் சாப்பிட்டாள். இருவரும் மதியத்தில் சிறு உறக்கம் போடுவார்கள். 'அவனிடம் இதை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்று சொல்லலாமா' என்று யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் மகன் படுத்த உடன் தூங்கி விட்டான்.

அவன் தூங்குவதையே பார்த்து கொண்டிருந்த அவள் திடீரென்று வீறிட்டு அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகை அவனை எழுப்பி விடும் என்று கழிவறையில் சென்று வெடித்து அழுது புலம்பினாள். ஏதோ சட்டென்று யோசித்தவள், வெளியே வந்து தலையணையை எடுத்து அவள் மகனை கொன்றாள்.

                                                                      (3)

வக்கீல் முருகன் வசந்தியின் அப்பா வீட்டிற்கு காலை பத்து மணிக்கெல்லாம் சொன்னது போல வந்து விட்டார். அவர் கடந்த ஒரு வருடமாக இங்கு வந்து போய் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நினைத்தது மட்டும் நடக்கவே இல்லை.

"அந்த தேவுடியாவ பத்தி பேசுறதா இருந்தா இந்த வீட்டுக்கு வராதீங்க" என்று வசந்தியின் அம்மா தன் பேத்தியை மடியில் வைத்துக் கொண்டு வக்கீலிடம் கத்தினாள்.

"நீ, சும்மா இரு, நான் பேசிக்கிறேன்" என்று வசந்தியின் அப்பா  அவளை உள்ளே போக சொன்னார். 

செல்வம் உள்ளே இருந்து வந்தான். அவனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. சரவணன், தூரத்து உறவாக இருந்தாலும், அவன் சொன்னால் அப்பா கேட்பார் என்ற எண்ணத்தில் தான் நேற்று அவனிடம் அப்பாகிட்ட பேச சொல்லியிருந்தான். ஆனால் அதுவும் உபயோகப்படாது என்றே அவனுக்கு தோன்றியது.  

"அவள நாங்க தல முழுகி அஞ்சு வருஷம் ஆச்சு. அவ யாருனே எங்களுக்கு தெரியாது" என்று பொறுமையாக வக்கீலிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

"இப்படி சொன்னா என்னங்க பண்றது. உங்க மகளுக்கு ஜாமீன் கெடச்சு ஒரு வருஷமாகுது. ஆனா ஐம்பதாயிரம் பணம் கட்டி, கையெழுத்து போட்டா  தான் ஜாமீன் இருந்தா கூட ஜெயில்ல இருந்து வெளியே விடுவாங்க" என்றார் வக்கீல்.

"நாங்க யாரும் கையெழுத்து போட முடியாது", என்று ஒரே மூச்சாய் சொன்னார் செல்வத்தின் அப்பா. 

"பணம் கூட கட்ட வேண்டாம். ஆனா ரத்த சொந்தம் யாரவது கையெழுத்து போட்டா தான் வெளில உடுவாங்க. அதுவும் இல்லாத, அந்தம்மா உள்ள போனதுல இருந்து யாரும் இது வரைக்கும் ஒரு முறை கூட வந்து பாக்கல, அதுவே அவளுக்கு ஜெயில் தண்டனைய விட பெரிய தண்டனை" என்று உள்ளூர வெதும்பி சொல்லிக் கொண்டிருந்தார் வக்கீல்.

வக்கீல் முருகன் தானாகவே வந்து பல முறை செல்வத்திடம் பேசி உள்ளார்.  செல்வமும் இதில் ஆரம்பத்தில் ஆர்வம் இல்லையென்றாலும், முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று கடந்த ஒரு மாதமாக இதில் இறங்கினான். ஆனால் இன்று அதற்கும் ஒரு முற்று புள்ளியாக அமைந்துவிட்டது. 

வக்கீல் செல்வத்திடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அவர் சென்றதும் செல்வத்தின் அம்மாவும், மருமகளும், பேத்தியும் அலங்காரம் செய்து கொண்டு ஊரில் நடக்கும் தேர் திருவிழாவிற்கு செல்ல ஆயத்தமாயினர். செல்வமும், அவன் அப்பாவும் அவர்களை பின் தொடர்ந்தனர்.


No comments:

Post a Comment