Thursday 23 February 2023

அஞ்சலை



நான் என் சிறு வயதில் கிராமத்தில் வாழும்போது எப்போதுமே ஏதாவதொரு ஒரு நிகழ்விற்காக பங்காளிகளுக்குள் சண்டைகளும் வாய்த்தகராறுகளும் வந்து கொண்டே இருக்கும். அதை அப்பொழுது ஒரு வினோத நிகழ்வாக எண்ணத் தோன்றவில்லை. இன்று எண்ணிப் பார்க்கையில் அதில் உள்ள குரூரங்களும், வஞ்சங்களும், பழிகளும் தெரிகின்றன. ஆனால் அதில் உள்ளே இருக்கும் பொழுது அதனுள் நாமும் ஒரு அங்கமாகவே ஆகிறோம்.


கண்மணி குணசேகரன் அவர்கள் எழுதிய "அஞ்சலை" நாவலில் வரும் கதாபாத்திரங்களும்  1980களின் தமிழ்நாட்டு கிராமிய வாழ்க்கைச்சூழலை ஒட்டியே இருக்கிறது. நாவல் ஒரு குறிப்பிட்ட சமுதாய வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், கிராமத்தில் வாழும் மற்ற அனைத்து சமூகங்களுக்கும் பொருந்துவதாகவே அமைந்துள்ளது. மனிதர்களின் காமம், கோபம், விரக்தி, பயம்,பேராசை, வஞ்சம், பாசம், பொறாமை ஆகிய அனைத்தும் கலந்ததே இந்நாவல்.


எப்படி ஒரு துடுக்கான, அழகான இளமை ததும்பும் பெண்ணான அஞ்சலை, ஒரு சபிக்கப்பட்ட, கைவிடப்பட்ட எப்பொழுதும் வசைபாடப்படும் பெண்ணாக மாற்றப்படுகிறாள் என்பதே கதை. அந்த மாற்றத்திற்கு இங்குள்ள சமூக அமைப்புகளும், மக்களின் இயற்கையாகவே உள்ள வஞ்சங்களுமே முதன்மைக் காரணங்களாகும்.


தன் முதல் அக்கா புருஷனுக்கு இரண்டாம் தாரமாக  போக விரும்பாததால், அவனால் ஏமாற்றப்பட்டு ஒரு சோப்ளாங்கி மாப்பிளைக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். மணமகனை பெண் பார்க்கும்போது ஆள் மாறாட்டம் செய்து (மாப்பிள்ளையின் அண்ணனை மாப்பிள்ளை என்று ஏமாற்றி) அவளையும், அவள் அம்மாவையும் ஏமாற்றி திருமணம் செய்து விடுகிறார்கள். கார்கூடலில்  இருந்து, மணல்கொல்லைக்கு திருமணமாகிப் போகிறாள்.


அங்கு சென்று அவனுடன் வாழ பிடிக்காமல் வீட்டில் தனியாகவே வாழ்கிறாள். அவன் வேலைக்கு போவான். இவள் வீட்டில் சமையல் மட்டும் செய்து போடுவாள். அவள் பக்கத்தில் இருக்கும் தனது மூத்தாரைப் பார்க்கும் போதெல்லாம் அவன்மேல் ஏக்கம் கொள்கிறாள். அவளுக்கு அங்கு நாத்தனார் முறை கொண்ட  வள்ளி என்பவளே துணையாக இருக்கிறாள். அங்கு அவள் முந்திரிக் காட்டில் அவளோடு வேளைக்கு போவதும் வருவதும் தன் பொழுதைக் கழித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறாள். 


தன் கணவனோடு சண்டைப்பிடித்துக் கொண்டு  அம்மா வீட்டுக்கு போகும் வழியில், தன் பெரிய அக்காவால் அவளின் கொழுந்தனாருக்கு அன்றே மறுமணம் செய்து வைக்கப்படுகிறாள். இரண்டாவதாக தன் கழுத்தில் ஏறிய தாலியல் தமக்கு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்று சந்தோஷமாக இருக்கிறாள்.  அவளுடைய புது வாழ்க்கையில் முதல் இரண்டு வாரங்கள் நன்றாக போகிறது. 


மனிதர்கள் எப்போதும் ஒரு செயலை சுயநலமில்லாமல் செய்ய முடியுமா என்ற சந்தேகம் தான் வருகிறது. எவ்வளவு தான் சிந்தனையால் சுயநலமில்லாமல் இருந்தாலும் ஆழ்மனதில் எங்கோ ஓரிடத்தில் அது தனக்கு ஒரு லாபத்தைத் தரும் என்றே அவன் அதை செய்கிறான். அது தான் ஒருவேலை தன் இருப்பை நிலை நாட்டிக்கொள்ள உதவும் கருவியாகவும் இருக்கலாம். தன் மூத்த அக்காவுக்கும் அவள் கொழுந்தனுக்கும் இருக்கும் உறவை மறைக்கவே அவள் தன் தங்கையினை அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறாள். இது தெரியும் நேரத்தில் அஞ்சலை கர்ப்பமாக இருக்கிறாள். வயிற்றில் பிள்ளையை சுமந்துக் கொண்டு, அவள் கணவனிடமும், அக்காவிடமும் கொடுமைப்படுகிறாள். 


கட்டினவன் சரியில்லை என்று , தன் அக்காவை நம்பி இன்னொரு தாலியையும் கட்டிக்கொண்டு, அதனால் வயிற்றில் பிள்ளையையும் சுமந்துக் கொண்டு இப்போது கார்கூடலுக்கும் போக முடியாமல் ,மணல்கொல்லைக்கும்  போக முடியாமல் இருக்கிறாள். 


கிராமங்களில் நடக்கும் புறம் பேசுதல், வழிய வந்து சண்டைக்கு போதல், பிறரை குத்திக் காட்டி பேசுதல் அனைத்தும் இயல்பாக நுண் விவரங்களோடு சொல்வதாக  நாவல் அமைந்துள்ளது. கிராம மக்களின் அன்றாட வேலை, அவர்களின் உழைப்பு, பெண்களின் கிண்டல் பேச்சு, ஆண்களின் குடி, ஆண்பிள்ளைக்கு கொடுக்கும் மரியாதை, பெண்கள் ஆண்களை அண்டிப்பிழைக்கும் பிறவியாக பார்க்கும் மனநிலை  ஆகிய அனைத்தும்  நேரடியாகவும் மறைமுகமாகவும் நாவல் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது.


திருமணமாகியும் கணவனிடமிருந்து தனித்து வாழும்பெண்கள் தான் இந்த சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களிடம்  பெண்களும் அஞ்சுகிறார்கள். அவளால் தன் குடும்பத்தில் பிரச்னை வந்துவிடும் என்று அவளிடம் எப்போதும் ஒரு ஒவ்வாமையுடனேயே வாழ்கிறார்கள். ஆண்களும் அப்பெண் கொஞ்சம் அழகாக இருந்தால் அவளை அடைய துடிக்கிறார்கள். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலையும் அந்த சமூகம் இம்மாதிரி பிரிந்து வாழும் அல்லது கைவிடப்பட்ட பெண்களின்பால் கொண்டுள்ள உறவை வைத்தே சித்தரித்துவிட முடியும்.


திரும்பவும் கார்கூடலுக்கு கைப்பிள்ளையான வெண்ணிலாவைத்  தூக்கிக்கொண்டு வந்து வாழ்கிறாள் அஞ்சலை. ஆனால் அவளை இச்சமூகம்  மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வன்மம் கொண்டு அவளை குதறி எடுக்கிறது. எந்த ஒரு சிறு சண்டையோ, ஏதோ ஒரு ஆணிடம் பேசினாலோ அவளின் ஒட்டு மொத்த இருப்பையுமே சிதைத்து பேச ஆரம்பிக்கிறது. எங்கு சென்றாலும் அவள் ஓடிப்போனவள் என்றும், தகாத முறையில் பிள்ளை பெற்றவள் என்றே வந்து முடிகிறது. 


மனிதனின் ஆசைகள் வினோதமானது. மண்ணாங்கட்டி கணேசனுக்கு அவள் பொண்டாட்டியான அஞ்சலை ஓடிவிட்டாள் என்பதர்காக , மறுமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அவன் அந்த பெண்ணிடம் வாழாமல், அஞ்சலையின் நினைப்பாகவே இருக்கிறான். அவன் ஏன் அவ்வாறு இருக்கிறான்? அவனே ஒரு சோப்ளாங்கி. கிடைத்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் அவன் அஞ்சலையின் ஞாபகமாகவே இருக்கிறன். அவள் இவனை ஒரு இமி அளவுக்குக்கூட மதிக்கவில்லை என்றாலும், அவனால் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. அஞ்சலை கார்கூடலில் இருக்க முடியாமல் திரும்ப வந்தாலும் கூட, அவன் அவளிடம் ஒரு இடைவெளி விட்டே வாழ்கிறான். ஏற்கவும் முடியபவில்லை. விடவும் முடியவில்லை. அவர்கள் இருவருக்கும் 'அஞ்சாயா' பிறந்தபோது  தான் , அவனுக்கு ஒரு பிடிப்பு வருகிறது.


மணல்கொல்லை வந்து பிறகு அஞ்சலை இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள். அவளும் கூலி வேலை செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறாள். ஆனால் அப்படியும் அவள் வாழ்க்கை எப்போதும் நிம்மதியாக இருந்ததே இல்லை. எந்த ஒரு சண்டை வந்தாலும் இறுதியில் அவள் ஓடிப்போனவள் என்று வந்து நின்று விடுகிறது. அவளின் மூத்தார் மனைவிக்கும் இவளுக்கும் எப்போதும் சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது. கிராமங்களில் ஏன் மக்கள் 'ஒரு மயிர்' விஷயத்திற்காகக்கூட சண்டை வளர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களின் ஆற்றாமையும், வரலாற்றின் நெடுவாக வந்த அடிமைத்தனமும், பஞ்சமும், பட்டினியும் அவர்களை ஒரு இறுகிய மனிதர்களாக ஆக்கிவிட்டது என்றே நினைக்கிறேன். 


அஞ்சலை ஒவ்வொரு முறையும் பொறுத்து போனாலும் ஏதோ ஒரு புள்ளியில் அவளும் அதில் விழுந்து விடுகிறாள். அப்படி இருந்தால் மட்டும் தான் அங்கு வாழவும் முடியும் என்றே நினைக்கிறேன். இல்லையென்றால் மற்றவர் நம்மை தின்று விடுவர். குழாய் சண்டையில் படாச்சியின் குடத்தினை வீசி எரிந்தது , சொத்துத் தகராறில் போலீஸ் ஸ்டேஷன் போக தைரியமாக எல்லாத்தையும் எதிர்த்து நின்றது. அந்த முரட்டு குணம் தான் அவளை ஒவ்வொரு நாளும் வாழ வைத்துக் கொண்டிருந்தது.


அஞ்சலை ஆசைப்பட்டது எல்லாம் அவளுக்கு கிடைத்தாலும், அது உடனே அவளிடம் இருந்து பறிக்கப்படுகிறது . சாணி மெழுக ஒரு பசு மாடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த கொஞ்ச நாட்களில், அவள் அம்மா வீட்டில் இருந்த பசுங்கன்றுக்குட்டி ஒன்றை ஓட்டி வந்து வளர்க்கிறாள். ஏதோ ஒரு படாச்சி வீட்டு கன்றுக்குட்டி காணாமல் போக, அவள் வீட்டில் வளர்ப்பது தன் கன்றுக்குட்டி தான் என்று அவர்கள் சொன்னதும், பஞ்சாயத்து செய்கிறார்கள். இறுதியில் அவள் அம்மா வீட்டில் இருக்கும் பசுமாட்டையும்,படாச்சி பசுமாட்டையும் கட்டிவிட்டு கன்றினை அவிழ்த்து விட்டால் அது எந்த மாட்டிடமும் போகாமல் அங்கேயே நின்றது. இறுதியில் அவள் அம்மா பசுவினையும், கன்றையும் பிடித்துக் கொண்டு போகிறாள் அவளை வசைபாடிவிட்டு. 


வெண்ணிலா தன் அப்பாவைப் பார்க்க தொளாருக்கு  யாருக்கும் தெரியாமல் போனபோது , இவள் அங்கு சென்று அவளை நையப்புடைத்து வீட்டிற்கு கூப்பிடும் போது, அவளின் பெரியம்மாவிற்கும் ,பெற்ற தாய்க்கும்  நடுவே இருந்து கன்றுகுட்டி போல விழிக்கிறாள். இறுதியில் அம்மா கூடவே வந்து, கார்கூடலில் தன் பாட்டி வீட்டிற்கு சென்று விடுகிறாள். இதனால் கூட அஞ்சலையின் தம்பி வெண்ணிலாவை திருமண செய்யாமல்  வெறுத்திருக்கலாம். 


வெளிப்படையாக இருந்தாலும், பூடகமாக இருந்தாலும் சுயநலமே எந்த ஒரு உயிருடைய  இருப்பின் அசைக்க முடியாத பண்பாக உள்ளது. வெண்ணிலா கார்கூடலிலே வளர்கிறாள். அவள் பெரியமனுஷி ஆன பிறகு தன் தம்பிக்கு திருமணம் செய்துவிட்டால் மட்டும் தான் நாம் தப்பிக்க முடியும் என்று நினைக்கிறாள். அஞ்சலை தன் தம்பி வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்வான் என்று நம்பி இருந்தபோத, அவனை தன் பெரிய அக்கா மகளுக்கு நிச்சயம் செய்த பிறகு  அவளால் தாங்கி கொள்ள முடியவே இல்லை. அவன் அவர்கள் கொடுக்கும் சீர்வரிசைக்காக வெண்ணிலாவை மறுத்துவிட்டான். ஊரார் சொல்வது போல அஞ்சலைப்போலவே அவள் பெண்ணும் மாறிவிடுவாள் என்று கூட நினைத்திருக்கலாம்.


மணக்கொல்லையில் அவள் இருக்கும் போது, ஒரு நாள் வெண்ணிலா அங்கு வந்து சேர்கிறாள். பிறந்த வீட்டில் இல்லாமல், தாய் தந்தையிடம் வளராமல், வயதுக்கு வந்த பின்பு தன் பாட்டி வீட்டில் இருந்து தன் தாயினைத் தேடி வருகிறாள். அஞ்சலையால் சொத்து கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த அவள் மூத்தாரின்  பொண்டாட்டி , அவளை வம்புக்கிழுத்து, தன் மகன்களை வைத்து அவளை  அடித்து மிதிக்கிறாள். இதனால் மனம் நொந்து , இந்த மக்களின் பழிச்சொல்லுக்கு தினம் தினம் சாவதைவிட ஒரேயடியாக சாக, முந்திரி மரத்தில் தூக்குப் போட்டுக்க போகிறாள்.


அப்பொழுது வெண்ணிலா வீட்டிற்குள் ஒரு ஜடம் போல் அமர்ந்திருக்கிறாள். "அக்கா, அம்மா எங்களுக்கு தேவைப்படுறத விட, உனக்கு தான் ரொம்ப முக்கியம் ,போய்  அவளை காப்பது" என்று அஞ்சாயா சொன்னபொழுது, கனவில் இருந்து மீண்டவள் போல் அவள் அம்மாவை ஓடிப்போய் காப்பாற்றுகிறாள். "இந்த ஜனம் செத்தாலும் ஓடிப்போனவள் என்று தான் சொல்லும், வாழ்ந்தாலும் அதைதான் சொல்லும். பழிச்சொல் ஒரு நாளும் சாவாது. அதுக்கு நாம் ஏன் சாவணும். வாழலாம் வா" என்று தன் அம்மாவை இழுத்து வருகிறாள் வெண்ணிலா. தன் இருப்புக்கு ஒரு உயிராவது வேண்டும் என்று அம்மாவை காப்பாற்றுகிறாள் வெண்ணிலா. வெண்ணிலாவிடம் தன்  கைவிடப்பட்ட நிலையைச்  சொன்னால் தான் அவள் போய் அம்மாவைக் காப்பாற்றுவாள் என்று அந்த சமயத்தில் எப்படி தெரிந்தது அஞ்சாயாவிற்கு?


 ஏதோ ஒரு ஆற்றாமையால் , மனம் சற்று பிறழ்ந்து இருக்கும் தருவாயில் அஞ்சலை வீட்டை விட்டு ஓடுகிறாள். அவள் சென்று சேரும் ஒவ்வொரு இடமும் அவளை அதே நிலைமைக்கு மீண்டும் மீண்டும் தள்ளுகிறது. கார்கூடலிலிருந்து மணல்கொல்லைக்கு, அங்கிருந்து தொளாருக்கு, அங்கிருந்து கார்கூடலுக்கு, அங்கிருந்து மீண்டும் மணல்கொல்லைக்கு என்று அவள் பயணம் முழுவதும் ஒரு நிராசையினாலும், தூற்றலாலும் செல்கிறது.


நாவலில் கிராம மக்களின் வாழ்க்கை, விவசாயம், நெல், கரும்பு, முந்திரிக் காடுகள், இவற்றில் உழைக்கும் மக்கள். நெல் விதைத்தல் முதல், நடவு, களை, அறுவடை, அடித்தல் முதலான அனைத்து வேலைகளும் நுட்பமாக விவரிக்கப்படுகிறது. முந்திரிக் காட்டில் வாழ்க்கை முறை அங்கு நடக்கும் திருவிழாக்கள், கரும்பு பண்ணயம் என்று இயல்பாக  கிராம சித்தரிப்புகள் வருகிறது.


நாவலில் வரும் ஒவ்வொருவரும் அஞ்சலை என்றே  நினைக்கிறேன். அஞ்சலை என்ற பெண்ணிற்கு நடந்த கதை என்பதை விட, அஞ்சலை நிலைமையில் வேறு யாரவது இருந்து , வேறு ஒரு நிலையில் அஞ்சலை இருந்திருந்தாலும் அவளும் இதையே தான் செய்திருப்பாள் என்றே நினைக்கிறேன். அது கிராமங்களின் கூட்டு மனமே தவிர, அதில் தனி மனித உணர்வுக்கு ஒரு மதிப்பும் இல்லை. அப்படி ஒன்று இருக்கும் என்றே அவர்கள் அறிவதற்கு வாய்ப்பில்லை. தன் ரத்தம், தன் பிள்ளை என்று சந்ததியினைப் பெருக்கும் ஒரு இனக்குழுவின் கதை தான் அஞ்சலை. ஆனால் எல்லா நிலையிலும் அது மட்டும் தான் ஒரு சாதாரண மனிதன் செய்வது என்றே நினைக்கிறேன். இன்றும் நாம் அந்த குழு மனப்பான்மையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோன் என்றே நினைக்கிறேன்.