Showing posts with label Book-Reviews. Show all posts
Showing posts with label Book-Reviews. Show all posts

Saturday, 25 January 2025

கங்கைத்தாய் - நூல் குறிப்பு

                                                              கங்கைத்தாய் 





கங்கை கரையில் வாழும் மக்களின் வாழ்க்கையை சொல்லும் நாவல் 'கங்கைத்தாய்'. ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி மூலமாக அக்காலகட்ட சமூக அவலங்களை சொல்கிறது. முக்கியமாக விதவை மறுமணம் செய்து கொள்வதில் உள்ள சமூக இறுக்கங்களை பேசுகிறது.

மாணிக், கோபி என்ற சகோதரர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் வீழ்ச்சியை சொல்லி, அதனூடாக ராஜபுத்திர வம்சங்களில் கடைபிடிக்கப்படும் சாதிய வழக்க முறைகளை சொல்கிறது. 

மட்டுரூ வழியாக கங்கையின் பிரவாகத்தையும், அதன் கரையின் வாழும் மக்களின் அன்றாடங்களையும், ஜமீன்தாரி முறையின் கொடுமைகளையும், அரசின் அடக்குமுறையும் சொல்கிறது. கங்கை கரையில் வாழும் மக்கள் நீரின் அளவை பொறுத்து தங்களின் குடிசையை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கங்கையை எப்பொழுதும் தங்கள் அன்னையாக, தங்களுக்கு உணவிடும் தாயாகவே நினைக்கிறார்கள்.

முழுக்க முழுக்க விவசாய கிராமங்களை பற்றிய கதை இது. பயிர் விளைந்தால்தான் அந்த வருஷம் சாப்பாடு என்றிருந்த காலத்தில் நடக்கிறது கதை.

கோபியின் விதவை அண்ணியின் மன ஓட்டங்களையும், சஞ்சலங்களையும் வாசிக்கையில்  S. L பைரப்பா அவர்கள் எழுதிய "வம்ச விருட்சம்" நாவல் தான் நினைவிற்கு வந்தது. இந்திய இலக்கியங்களில் எழுதிய ஒரு சிறப்பான படைப்பு "வம்ச விருட்சம்". 

கங்கைத்தாய் நாவல் படிப்பதற்கு எளிமையாகவும், இந்தியாவில் மக்கள் மனதில் பண்பாட்டு ரீதியாக தொடங்கிய சமூக மாற்றத்தை சொல்கிறது. 


Saturday, 21 December 2024

அசோகமித்திரன் சிறுகதைகள் வாசிப்பனுவம் - 1 - 10






அசோகமித்திரனின் சிறுகதைகளின் வாசிப்பனுவம்    


1. நாடகத்தின் முடிவு:

படைப்புத் தொழில் ஒரு வகையில் தன்னால் நிகழ் உலகில் செய்ய முடியாத ஒன்றை, கற்பனையில் செய்து பார்த்து, அதிலிருந்து கடந்து செல்வதும் தான். ஆனால் தான் கற்பனையில் உயிர் கொடுத்தவை தன்னை நோக்கியே மீண்டும் வருவது என்றால், அந்த படைப்பாளி அதிலிருந்து கடக்கவில்லை என்று தான் அர்த்தம். மேலும் அதிலேயே சிக்கி அந்த சுருள் வட்டத்திற்குள் சென்று மாய்ந்து விடுவதை தவிர வேறு வழியில்லை போலும். அதனால் தான் படைப்பாளிகள்  தன் சதைத் துண்டின் ஒரு பகுதியாகவே தன்  படைப்பினை வைக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். 

அப்படி ஒரு கதை தான் "நாடகத்தின் முடிவு". கதையின்  ஆரம்பத்தில்  "உடல் பிணியும், மனப்பிணியும் உள்ளவர்களை தவிர அனைவரும் தூங்கிவிட்டார்கள்" என்ற வரியிலிருந்தே கதை தொடங்கிவிட்டது. ஏழு வருடம் எழுதிய நாடகத்தின் முதல் அரங்கேற்றத்தில் கிடைத்த வெற்றியே துன்பத்தை கொடுக்குமானால், மனிதனின் குற்ற உணர்வுகள் தூண்டும் இடமும் நேரமும் எப்போதென்று யாராலும் சொல்லிவிடவும் முடியாது. தனக்கு கிடைக்காத எந்த ஒன்றும் கற்பனையில் கூட இன்னொருவருக்கு கிடைக்கவிடாமல், அந்த சுய நிந்தனையில் இறக்கிறார் அந்த நாடக ஆசிரியர். நம்முடனேயே இயங்கி கொண்டிருக்கும் நம் எண்ணங்கள் நமக்கெதிராக திரும்புவதற்கு எப்போதும் ஒரு சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டு தான் இருக்கின்றன.  

2. இந்த ஒரு ஞாயிற்று கிழமை மட்டும்:

இந்த கதையினை வாசித்த பின் எனக்கு ஒரு கேள்வி உருவானது.  தன்னை வளர்த்தவர்கள் அல்லது செதுக்கியவர்களை தாண்டி செல்லும்போது ஏற்படும் முரணை எப்படி உணர்வுபூர்வமாக ஏற்று கொள்வது அல்லது சமாளிப்பது. இங்குள்ள அனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் தன்னை ஒரு தனித்துவமான ஆளாக உருவகம் செய்து கொண்டே தான் வாழ்கிறார்கள். ஒரு சந்தர்ப்பம் வரும்போது அதனை பயன்படுத்திக் கொள்வது மனித இயல்பே. ஆனால் அந்த செயலால் ஏற்படும்  இழப்புகளைப் பற்றி ஒரு போதும் ஒருவர் நினைத்து பார்ப்பதில்லை. 

தன்னை ஒரு பெரிய நாடக நடிகையாக வளர்த்த நாடக குழுவிலிருந்தும் அதன் ஆசிரியரிடமிருந்தும் திடீரென்று விலகி செல்வது ஒரு  துரோகம் தான். அதனால் அங்கு ஏற்படும் பொருளியல் மற்றும் உளவியல் இழப்புகளை ஒரு போதும் அந்த நடிகையால் சரி செய்ய முடியாது. அவள் பெறப் போகும் புகழும், செல்வமும் அவனால் அடைய முடியாது.  அதனால்தான் அந்த நடிகையை அவன் வன் புணர்வு செய்ய நினைக்கிறான். எந்த உடல் அழகினை வைத்து தன்னை விட்டு விலகி செல்ல நினைக்கிறாளோ அந்த அழகினை அவள் விருப்பமே இல்லாமல் இருந்தாலும் வெறும் உடல் பலத்தால் அதனை அடைய நினைக்கிறான் அந்த ஆசிரியன். அது அவளை பழி வாங்கும் ஒரு முயற்சியே. காயம் பட்ட இடத்திற்கு கட்டு போடுவது போல. கட்டினால் மட்டும் காயம் ஆறாது என்றாலும், அது செய்தால் தான் நம் மனம் நிம்மதி அடையும்.


3. விபத்து:

ஒவ்வொரு சிறுவனுக்கும் தன்னை ஒரு வாலிப / வயது வந்த ஆளாகவே அனைவரும்  பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். அந்த சமயத்தில் அவன் தன்னை மீறிய செயல்களில் ஈடுபடுவான். இது அவன் மீது மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் எண்ணத்தை மாற்றுவதற்காக. தன்னை விட பெரிய அக்காவுக்கோ அண்ணனுக்கோ கிடைக்கும் மரியாதையை தனக்கும் வேண்டும் என்றுதான் எல்லா சிறுவர்களும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தில் இருக்கும் ஒரு சிறுவனின் பற்றிய கதை தான் இது.

தனக்கு மட்டும் பால் மற்றவர்களுக்கு காபி , எண்ணெய் தேய்த்து குளிக்க தெரியாது என்று சொல்லும் அம்மா , சூ போலிஷ் போட வைக்கும் அப்பா, எப்போதும் தன்னிடம் சண்டை போடும் அக்கா, இப்படி ஏன் எல்லாரும் தன்னை மட்டும் ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது பாச்சாவிற்கு. அவன் அக்காவின் செய்கைகள் அவனை மேலும் குழப்பமடைய வைக்கின்றன. அவன் நண்பனும் கிரிக்கட்டில் கில்லாடி. ஆனால் இவனுக்கு அது விளையாட தெரியாது. அவன் நண்பன் சிகரெட் குடிக்க சொல்லும் போது இவன் முடியாது என்று பயந்து விட்டாலும், அதனை சரி கட்டி கொள்ள தனக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் என்று ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்து வந்து விபத்துக்குள்ளாகிறான். ஏன் அவன் சைக்கிள் எடுத்து வந்தான். அவன் தன்னை ஒரு பொருட்டாக யாரையாவது நினைக்க வைப்பதற்காக. அப்படி அவனை விபத்துக்குள்ளாக்கியது, அவன் பெற்றோரும் ஒரு காரணம் தான்.  அந்த "உதாசீனம்" என்ற புலி அவன் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது. அவன் அக்கா அவனுக்காக கண்ணீர் விட்டபோது அவன் எங்கோ மீண்டு விட்டான் அதனை கடந்து. 

4. டயரி:

பஸ்ஸில் செல்லும் ஒருவனின் டயரியினை பார்த்து அதில் இருக்கும் வாழ்க்கையினை பல்வேறு விதமாக கற்பனை செய்கிறார் அந்த பஸ் நடத்துனர். அந்த கற்பனையில் அவரின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஆசைகளையும், நிராசைகளையும் அதில் ஏற்றி இருக்கலாம். ஒரு முழு வருட வாழ்க்கையின் இன்ப  துன்பங்களை சுமந்து செல்லும்  அந்த டயரி ஒரு குறியீடாகவே எனக்கு தோன்றுகிறது.

பிறக்கிறோம், உண்கிறோம், சாகிறோம் என்பதை தாண்டி அர்த்தம் எதுவும் இல்லாத இந்த வாழக்கையை ஒரு டயரியில் அடக்கி, அதை தவிர்த்து வெளியில் ஒரு அர்த்தமும் இல்லை என்பதாகவே அந்த கதை எனக்கு விளங்குகிறது. அதில் ஆயிரமாயிரம் நிகழ்வுகள் இருந்தாலும் அது அதுற்குள் மட்டுமே அர்த்தமோடு இருக்கு முடியும். வெளியில் வெறும் டயரி தான்.

5. வாழ்விலே ஒரு முறை:

ஒரு நிகழ்வு நம்மை காலம் முழுக்க நம்மிடம் வடுவாக இருந்து கொண்டு இருக்கும். அந்த புள்ளியிலிருந்து நாம் வேறு ஒரு பாதைக்கு செல்வோம். அந்த நிகழ்வு பெரும்பாலும் நம் தவறால் நிகழ்ந்து, நாமே பாடம் கற்றுக்கொண்டது போலத்தான் இருக்கும். அது நாம் செய்ததனால் மட்டுமே அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். 

அப்படி தன் தம்பியை தன்னுடன் விளையாடுவதற்கு கூட்டிக்கொண்டு  போகாமல், அவன் காணாமல் போகவே அவனை தேடி அலைந்து, வெறும் கையுடன் வரும் அந்த சிறுவன், தன் தம்பி பொம்மை குதிரையில் அமர்ந்து விளையாடுவதை பார்த்து வெடித்து அழுகிறான். அந்த நிகழ்வு அவனை வேறு ஒரு ஆளாகவே மாற்றி இருக்கும். அவன் தம்பி பொம்மை குதிரையில் ஆடிக்கொண்டு "நான் போலீசுக்கு போயிருந்தேன்" என்று சொல்லும் போது, ஒரு வேளை "என்னை தேடிக் கொண்டு தான் அவன் போலீசுக்கு போயிருப்பானோ" என்று நினைத்து தான் அவன் அழுதிருக்கலாம். 

6. மஞ்சள் கயிறு :

கதையின் தலைப்பிற்கும், சொல்லப்பட்ட கதைக்கும் இருக்கும் நகைமுரணை வெளிப்படுத்துவதாக இந்த கதை தலைப்பு உள்ளது. ஒரு வேளை சோற்றுக்கே அடிமையாக வேலை செய்தால் தான்  கிடைக்கும் என்னும் அவல நிலையில் உள்ள சுப்பு தான் மஞ்சள் கயிற்றினை திரித்து விற்பனை செய்பவன். குண்டு சாஸ்திரிகள் மூலமாக வலியோரின் பேராசையும், சுப்பு போன்ற எளியோரை ஏறி மிதித்து உறிஞ்சுவதையும் சொல்கிறது கதை.

தன்னை பார்த்து ஹோட்டலில் ஊசிப்போன சட்னி வைக்கும் சிறுவன், தன்னை விட்டு போன மனைவி , தன் எஜமானன் குண்டு சாஸ்திரிகள் என்று அனைவரையும் அவன் திரிக்கும் கயிறினாலே சுற்றி தூக்கில் தொங்க நினைக்கும் சுப்புவிற்கு மரணம் கூட கிடைப்பதில்லை. "பசியில் கால்களுக்கும் கண்கள் முளைக்கும்" என்ற வரி ரொம்ப நேரம் என்னை தொந்தரவு செய்தது. 

7. கோலம் :

சங்கராந்திக்கு வீட்டிற்கு வந்திருக்கும் சிற்றப்பா அவரின் குழந்தைகளின் பெருமைகளை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பட்டிக்காடு என்றால் பிடிக்காது. அவரது பிள்ளைகளின் வீணை வாசிப்பின் திறமைகளும், படிப்பு திறமையும்,  மற்றவற்றையும் பற்றி அவர் ஓயாது பேசிக் கொண்டே இருக்கிறார். அவருடைய குழந்தைகளை பற்றி பேசாமல் அவரால் இருக்க முடிவதில்லை. அவர் சுத்தமான புகையிலை சுருட்டைத் தான் பிடிப்பார். மிகவும் ரசனை உள்ள ஆள் அவர்.

அன்று காலையில் விஜயா அழகான ரங்கோலி கோலம் போடுகிறாள்.  அதை பார்த்து அவளுடைய சிற்றப்பா "சியாமளா கூட இப்படி கோலம் போட மாட்டாள்" என்று சொல்கிறார். ஆனால் அதனை ஒரு இளைஞன் நடந்து போகும் போது கொஞ்சம் அழித்து  விடுகிறான். விஜயா கண்களில் நீர் தளும்ப நிற்கிறாள்.  திடிரென்று வெறி வந்தவர் போல் அவனை இழுத்து வந்து திட்டுகிறார் விஜயாவின் சிற்றப்பா. மீண்டும் அதனை சரி செய்ய சொல்கிறார் அவரின் சிற்றப்பா. விஜயாவும் சரி செய்கிறாள். 

அவர்கள் வெளியில் சென்று வரும்போது, கோலம் எப்படி இருக்கிறது என்று கூட பார்க்காமல் வரும் விஜயா, மீண்டும் சென்று பார்க்கையில் அது முற்றிலுமாக அழிந்து விட்டிருக்கிறது. ஆனால் அதற்காக அவள் வருத்தப்படுவதில்லை. 

முதல் முறை ஏற்படும் இழப்பு / ஏமாற்றம் நம்மை ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்வது போல் செய்து விடுகிறது. மீண்டும் அதே போல் எந்த ஒரு ஏமாற்றம் வந்தாலும் அந்த தடுப்பூசியே நம்மை நிலை குலைவில் இருந்து காப்பாற்றுகிறது. "வாழ்விழே ஒரு முறை" கதையினை நியாபகப்படுத்தியது.

8. அம்மாவுக்காக ஒரு நாள்:

ரகு தன் கோவங்களையும் , எரிச்சல்களையும் அவன் அம்மாவிடம் தான் எப்போதும் காட்டுவான். காரணமே இல்லாமல் கூட அவன் எரிச்சலடைவது உண்டு. ஆனால் அவன் அம்மாவோ திரும்ப எதுவும் பேசாமல் பூமி மீது விழுந்த மழை போல் அனைத்தையும் ஏற்று கொள்வாள். 

ஆனால் ஒரு முறை அவள் அம்மாவை  படத்திற்கு கூட்டி போக நினைக்கும் போது, ரயில் ஓடாமல் போகிற போது, பஸ்ஸிற்கு பணம் இல்லாமல் போகும் பொது, நண்பர்கள் யாரும் இல்லாமல் இருக்கும் போது, நண்பன் வீட்டில் அவன் இல்லாமல் அவன் மனைவி மட்டும் இருப்பதனால் அவளிடம் பணம் வாங்க முடியாமல் போகும் போது, என்று ஒரு நாள் முழுவதும் அவன் அம்மாவையே நினைத்து கொண்டு, அவளை படத்திற்கு கூட்டி செல்ல நினைத்தும் போக முடியாமல் போகிறது. இதை அவன் அம்மா வெகு சாதாரமாக எடுத்து கொண்டு மற்றுமொரு நாளாக கடந்து செல்கிறாள். அவள் தன் மொத்த வாழ்நாளும் பிள்ளைகளுக்காகவே கொடுக்கும் போது , பிள்ளையினால் ஒரே ஒரு நாளைக் கூட தன் அம்மாவுக்காக கொடுக்க முடியாமல் போவதும் ஒரு முரண் தான். 

9. மழை:

முழுக்க முழுக்க சிறுவனின் மனதிலிருந்து எழுதி இருக்கிறார் இதை. மழை மேகங்களை யானையாக, எருமை மாடாக கற்பனை செய்யும் சிறுவன், ஒரு பெரிய மரம், ஒரு மிக பெரிய மரம், சிறிய செடிகள், தன் பழைய சட்டை இப்போது தனக்கு சிறியதாக உள்ளது, என்று இயற்கையில் சிறுவர்களுக்கே உள்ள கேள்விகளாலும், கள்ளமில்லா தன்மைகளாலும் அவர்கள் உருவாக்கும் அழகிய உலகித்திற்குள் நம்மை கூட்டி செல்கிறார் அமி. மழை, தனக்கும் சிறிய செடிக்கும், மரத்திற்கும் எருமை மாட்டிற்கும் என்று எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் சிறுவனை பார்க்க செய்கிறது.

10. மூன்று ஜதை இருப்புப்பாதைகள் :

Introvert களுக்கு இந்த கதை மிகவும் நெருக்கமானதாக இருக்கும். 

ஒரு தலை காதலினால் ரயிலில் தற்கொலை செய்துகொள்ள போகும் ரகுநாதனின் கதை. மூன்று வருடமாக ஒரு தலையாக காதலித்தாலும், ஒரு வார்த்தை கூட பேசாமால், அவள் வேறு தெருவிற்கு குடி போனதால் விரக்தி அடைந்து அவளின் தெருவில் ஆயிரம் முறை சுற்றி வந்தாலும் பத்து  முறை மட்டுமே அவளை பார்க்கிறான். அப்பொழுதும் அவனை அவள் சட்டை செய்யவில்லை. இதனால் மனம் உடைந்து ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்யும் பொது, ரயில் வந்து அவன் மேல் ஏறாமல் வேறு ஜதை பாதையில் செல்கிறது.

வாழ்நாள் முழுவதும் போட்டு வைத்திருந்த ஏக்கம், அவன் அழுகையில் கரைகிறது.  சாவதற்குக்  கூட தெரியாமல் போய் விட்டோமே என்று விம்மி அழும் போது, வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம், நினைக்கிற சமயத்தில் கிடைத்து விடாது (அது மரணம் கூடத்தான்) என்று அவன் அறிந்து கொள்வதாக நினைக்கிறேன். முதல் முறையாக அவன் வெளிப்படையாக செய்தது மீண்டும் இருப்புப் பாதையில் தலை வைக்காமல் இருந்தது தான்.


Tuesday, 5 September 2023

கோரை

கண்மணி குணசேகரன் அவர்களின் கோரை நாவல் வாசித்தேன். வாசிப்பின் இடைவெளியில் எங்கள் வயலுக்கு சென்று அங்கு இருக்கும் கோரைகளை நிண்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் கோரைக் கிழங்கினை வைத்துக் கொண்டு உத்தண்டியின் வாழ்க்கையை யோசித்துக் கொண்டிருந்தேன்.  சாதாரணமாகத்  தெரியும் ஒரு சிறு புல்வகை உத்தண்டி மற்றும் அவன் மனைவி மேல் செலுத்தும் தாக்கத்தையும் அதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு சிக்கல்களையும் சொல்வதாக அமைந்துள்ளது இந்நாவல்.

இங்கு கோரை என்பது ஒரு குறீயீடு தான் என்று நினைக்கிறேன். மனிதன் காடு திருத்தி வயலாக்கி, தன் நாடோடி குடித்தனத்தை ஒரு இடத்தில் அமைத்த பிறகு, உணவிற்கு மண்ணோடு போராடும்போது தான் அவன் மண்ணின் முழுமையான மகத்துவத்தை உணர்ந்திருப்பான் என்று நினைக்கிறேன். இதில் வரும் கோரை இயற்கையின், மண்ணின் குறீயீடே. மனிதனுக்கும் மண்ணிற்கும் நடக்கும் இடைவிடாத போராட்டத்தின் வெளிப்பாடு.

தான் புதிதாக வாங்கிய நிலத்தில் பன்றி எருவு வாங்கி கொட்டியதால், உத்தண்டியின் நிலம் பூராவும் கோரைகளாக முளைத்து விடுகிறது. மல்லாட்டை கொல்லையில் கோரை இருப்பதற்கு பதிலாக, கோரை கொல்லையில் மல்லாட்டை இருப்பதாக ஆகி விடுகிறது. கோரை முளைத்ததற்கு காரணம் புரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கும் போது, ஒரு கிழவர் அது பன்றி விட்டையிலிருந்து தான் வந்தது என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

உத்தண்டி, அவன் மனைவி பூரணி, பக்கத்துக்கு கொல்லைகாரன் சின்னச்சாமி, செட்டி, சக்கர என்று மிகவும் குறைந்த கதை மாந்தர்களோடு கட்டமைக்கபட்ட நாவல் இது. இவர்களுக்குள் பாலமாக இருப்பது உத்தண்டி வாங்கிய காலரைக் காணி நிலமும் அதில் முளைத்த கோரைகளும் தான்.

நாவலில் நிறைய வட தமிழ்நாட்டிற்குரிய வட்டார வழக்காடுகள் வருகிறது. கிராமத்தில் ஒருவன்  நிலம் வாங்கி விட்டால் மற்றவர்கள் அவன்மீது  கொள்ளும் பொறாமையும், புறம் பேசுதலும் உத்தண்டிக்கு அவன் காலரைக்காணி நிலம் வாங்கியபோது புரிந்தது.

உத்தண்டியின் பக்கத்து நிலத்துக்காரரான சின்னசாமி அவனின் நிலத்திற்கு தண்ணீர் விட்டு 

கொண்டிருந்தார்அதற்கு பலனாக உத்தண்டியிடம் பல வேலைகளை வாங்கிக் கொள்வார்பக்கத்து 

நிலத்துக்காரனின் நிலம் நாசமாக போவதை பார்க்கும் சந்தோஷத்தை சின்னசாமியிடம்  காணலாம்

இது மனிதர்களுக்கே உரிய எளிய பண்பானாலும்கிராமத்தில் இதை மிக தெள்ளத் தெளிவாக பார்க்கலாம்.


 உத்தண்டி கோரையினை அழிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிவடையும்மனிதன் இயற்கைக்கு எதிராக செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றி அடைய இயற்கை மனது வைத்தால் தான் முடியும்ஒரு சிறு கோரையில் அவனின் மொத்த நேரமும் , உழைப்பும்  செலவாகிறது. இவ்வளவு நேர்த்தியாக புறவயமாக கோரைக்கும்உத்தண்டிக்கும் நடக்கும் போரினைஇயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் உறவின் குறியீடாக எழுதி இருக்கிறார் கண்மணி அவர்கள்.


பக்கத்து வீட்டுக்காரன் புது நிலம் வாங்கி விட்டால்சாலை பிரித்து புது ஓட்டு வீடு கட்டி விட்டால்கிணற்றில் தண்ணீர் மேல் மட்டத்திற்கு வந்து விட்டால் வெள்ளாமை நன்றாக விளைந்து விட்டால்வரப்பு அறை அடி உயர்ந்து விட்டால்பக்கத்தில் இருக்கும் புறம்போக்கினை கந்தாயம் கட்டி ஓட்டி விளைந்தால், பொதுவாக கிராமத்தில், இன்னொருவர் மீது இந்த பொறாமையும் புறம் பேசுதலும் இருக்கும். 


பூரணியை திருமணம் செய்த பிறகுதான் உத்தண்டிக்கு அந்த நிலம் வாங்கும் யோகம் அமைந்தது

அதனால் அவளும் இந்த நிலத்தை பற்றிய யோசனையாகவே இருப்பாள்முதலில் மிளகாய் நடுவதற்கு 

பதிலாக அவள் மல்லாட்டை போட சொன்னாள்ஆனால் பணம் இல்லாததால் மிளகாய் நட்டார்கள்

அதற்கு உரம் போடுவதற்காகத்தான் பன்றி எருவை வாங்கி வந்து வைத்தான்அந்த எருவிலிருந்து 

கிளம்பிய கோரைதான் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் அல்லும் பகலும் நிரப்பிக் கொண்டது.


கோரைக்கு நிலத்தினை விட்டுவிட்டு மீண்டும் வயிற்று பிழைப்பிற்காக காடு வெட்டுவதும்முந்திரி 

காட்டில் பழம் பெருக்குவதுமாக உத்தண்டியும் பூரணியும் இருந்தனர்அவன் காடு வெட்ட செல்லும் 

போதெல்லாம்ஊரார் அவனுக்கு அது தான் உகந்த தொழில் என்றும்அவனுக்கு நிலம் எல்லாம் 

லாயக்கு படாது என்றும் சொல்லி அவர்களின் பொறாமையையும் வயிற்றெரிச்சலையும் கொட்டினர். 

அந்த கோரையினை பார்க்காமல் அவன் பல தடவை தவிர்த்து வந்தாலும், திரும்பவும் அவன் சென்று அந்த நிலத்தை பார்க்கும் போது, நான் இங்கு தான் உள்ளேன் என்ற மாதிரி அது நன்றாக வளர்ந்து இருக்கும். 


நிலம் உள்ளவன் மேல் நிலம் இல்லாதவனுக்கு இருக்கும் பொறாமை தான் உண்மையான அடிமனதில் இருந்து எழும் பொறாமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மனிதனுக்கு நிலத்தின் மேல் இருக்கும் பற்று  இயற்கையாக ஒன்றாகும். ஏனென்றால் நிலம் தான் மனிதனுக்கு ஆதாரம். தன் காலடிக்கு கீழே உள்ள ஒரு அடியை தனக்கு சொந்தமென்று நினைப்பது நாகரிகத்தின் முதல் படியாக இருந்திருக்கும். மக்கள் குழுவாக, ஊராக இணைந்து வாழ அதுவே ஆதாரம். அந்த நிலம் உள்ளவன் மேல் இல்லாதவர் பொறாமை படுவது ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


கோரையைப் பற்றியே  எப்போதும் யோசித்து கொண்டிருக்கும் உத்தண்டி, பூரணியின் மேல் எதற்கெடுத்தாலும் எரிந்து விழ ஆரம்பிக்கிறான். அவன் தூக்கத்திலும், விழிப்பிலும் கோரையே இருப்பதால், அதனை அவனால் அழிக்க முடியாததால், தன்னுடைய இயலாமையை அவள் மேல் கோபமாக காட்டுகிறான். அவளும் அவனிடம் பெரிதாக நெருங்குவதில்லை. இருவருக்கும் இருக்கும் பிளவு, அடிக்கடி சண்டைகளாக மாறுகிறது. 


கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் பூரணி கர்ப்பமாகாததால் அவளின் அம்மாவும், அவனின் அக்காவும் இருவரையும் சென்று மருத்துவரை பார்க்கச் சொல்கிறார்கள். அவன் நிலத்திலோ கோரைகள் அழிக்க அழிக்க மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறது, அவனது வீட்டிலோ நேர்மாறாக இருப்பது ஒரு நகைமுரன்.  


கருவுற்ற சமயத்தில் துவரைக் குச்சிகளை வேரோடு பிடிங்கி போட்டதால், வேலை பழு காரணமாக அவளின் கரு களைந்து விடுகிறது. இரத்த வெள்ளத்தில் அவள் முடியாமல் விழுந்த போதிலும், அவள் அவனை தன்னை தூக்கக்கூட விடவில்லை. ஆனால் அவன் அதனை பொருட்படுத்தாமல் அவளை தூக்கி ஒரு சாக்கின் மேல் உட்கார வைக்கிறான். இது வேளாண் வேலை செய்யும் பெண்களின் தைரியமாகவும், அவர்கள் கடைபிடிக்கும் விடாப்பிடியான வறட்டு சடங்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.


செட்டி, பூரணியின் அப்பா- அம்மா,  அவனின் அக்கா என எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உத்தண்டிக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறார்கள். கோரையை அழிக்க உத்தண்டி பல்வேறு முயற்சிகள் செய்தும் அது திரும்ப திரும்ப வந்து கொண்டே தான் இருக்கிறது. இறுதியில் பன்றி  போட்ட விட்டையினால் விளைந்த கோரையினை பன்றிகளை வைத்தே நிண்ட வைத்து அழிக்க முயற்சி செய்து அதிலும் தோல்வி அடைகிறான் உத்தண்டி.


மண் நம் மீது செலுத்தும் எதிர்வினையே நாம் உணர்வாக மாற்றுகிறோம். மண் செழிப்பாக இருந்தால் நாம் மகிழ்வாக இருக்கிறோம். அதிலிருந்து பெருவதையே நாம் பெரும்பாலும் பிரதிபலிக்கிறோம். அதுவே நாமாக ஆகிறோம். அது நினைத்தால் ஒழிய நாம் அதன் மேல் எந்த ஒரு அதிகாரத்தையும் செலுத்த முடியாது. 


சிறு புல்லான கோரையை வைத்துஅதனால்  உத்தண்டி மற்றும் அவன் மனைவியின்  வாழ்கையில் 

நடக்கும் போராட்டத்தை புறவயமாக அவர்களின் வாழ்க்கை வழியாகவே ஒரு மிகப்பெரும் சித்திரத்தை அளித்திருக்கிறார் கண்மணி குணசேகரன் அவர்கள்மண்ணில் பிறந்து , மண்ணால் வளர்ந்து

மண்ணையே வாழ்வாக நினைத்து வாழும் வாழ்கையை நுட்பமாக எழுதி இருக்கிறார்.