Wednesday 17 May 2023

வனவாசி

'விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய' அவர்களின் வனவாசி நாவல் வாசித்தேன். நான் வாசிக்கும் முதல் வங்காள நாவல் தமிழில். 

கல்கத்தா போன்ற பெரு நகரத்தினில் வாழ்ந்து, வக்கீலுக்கு படித்து, வேலையில்லாமல் அலைந்து, ஒரு ஜமீனின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காட்டினை நிர்வகிக்கும் வேலை நிமித்தமாக காட்டிற்குச் சென்று ஆறு அல்லது ஏழு வருடங்கள் அங்கேயே தங்கி அந்த காட்டிடமும், அதில் உள்ள விலங்குகள், பறவைகள், செடி கொடிகளிடமும் ஒன்றாக வாழ்ந்த அவரின் அனுபவங்களை சொல்கிறது இந்நாவல். 

நாவல் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.  கதைசொல்லியாக இந்நூலின் ஆசிரியரே வருகிறார். தான் காட்டினில் உணர்ந்த, அனுபவித்த அற்புதமான உச்ச தருணங்களை நாவல் முழுக்க சொல்கிறார். நேரடி அனுபவங்களை, தான் சந்தித்த கதை மாந்தர்களை வைத்துக் கொண்டு சம்பவங்களை மட்டும் கூறிக்கொண்டு செல்கிறார். காட்டின் எண்ணற்ற ரகசியங்களையும், அழகினையும், அமைதியையும், குரூரத்தையும், அதில் வாழும் அத்தனை உயிரினங்களைப் பற்றியும் சொல்கிறார்.

காட்டில் அவர் விதவிதமான செடி கொடிகளை கண்டது போல, அவர் சந்தித்த வினோதமான மனிதர்களை பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சொல்லிச் செல்கிறார். காட்டின் அழகினை பல்வேறு இடங்களில் கவித்துவமாக விவரிக்கிறார். தன் நேரடி அனுபவங்களை கூறினாலும் காட்டில் அவர் வாழ்ந்த நாட்கள் ஒரு மயிர்கூச்சளிக்கும் அனுபவமாகவே நமக்குள்ளது. தன் ஏழு ஆண்டு வனவாசத்தில், தான் கண்ட பல்வேறு இயற்கை காட்சிகளை சொற்களின் வழியே நமக்கு ஓவியமாக தீட்டிக்காட்டுகிறார். அவர் அனுபவித்த ஒன்றை நேரடியாக சொல்லும் போதும் அது கவித்துவமாகவே விளங்குகிறது.

இந்தியாவில் 1930 களிலும், 1940 களிலும் கிராமங்களிலும், மலைகளிலும் வாழ்ந்த மனிதர்களின் வறுமையின் சித்திரத்தை சொல்கிறது இந்நாவல். பீகார், வங்காளப் பகுதிகளில் இருந்த பூர்ணியா, லப்துலியா, மோகன்புரா, புல்கியா போன்ற காட்டுப் பகுதிகளைச் சுற்றியே நாவல் அமைந்துள்ளது. 

தன்னுடைய வேலை, ஜமீன் காட்டுப்பகுதிகளை அளப்பதும், அதனை மக்களுக்கு குத்தகை விடுவதுமே. ஒரு வகையில் காட்டை அழிக்கும் வேலை. அதை அவரே பல்வேறு தருணங்களில் உணர்கிறார். ஒரு பக்கம் இயற்கையின் ஒப்பற்ற இக்காட்டின் அழகை ரசித்து வந்தாலும், மற்றொரு பக்கம் அதனை அழிக்கும் தொழிலையே செய்கிறார் என்பது நகைமுரண்.

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் காட்டில் நடக்கும் இயற்கை மாற்றங்களும், மக்களின் செயல்களும், விழாக்களும் நாவல் முழுவதும் வந்து செல்கிறது. கோடையில் குடி நீருக்காக மக்கள் கஷ்டப்படுகின்றனர். குளம், குட்டை, ஆறு என்ற அனைத்தும் வற்றி விடுகிறது. ஆற்றின் மணலில் குழி தோண்டி கிடைக்கும் நீரையே பயன்படுத்துகின்றனர். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் விலங்குகளுக்கும் கோடை கொடியது. நீர் இல்லாமல் காடு விட்டு காடு வந்து  அலையும் விலங்குகள். அவரின் மஞ்சம் புள் போட்ட குடிசையின் பக்கத்தில் ஒரு சிறு குளம் உள்ளது. அதில் இந்த கோடையிலும் சற்று நீர் உள்ளது. 

ஒரு கோடை நாளில் அந்தி வேலையில் அந்த குளத்தின் அருகே அவர் செல்கையில், அதன் நாலு புறமும் பல்வேறு பாம்புகள் இருக்க, ஒரு புறம் காட்டு பசு மாடுகள் தன் கன்றுகளுடன் நீர் குடித்துக்  கொண்டியருக்கிறது. அதன் மறுபுறம் கழுதைப்புலி ஒன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. இரண்டின் கண்களும் ஒரு சமயம் சந்திக்கிறது. ஆனால் அவை பழைய போலவே மீண்டும் தண்ணீரைக் குடிக்கிறது. கழுதைப்புலி பசுங்கன்றை துரத்தவில்லை. பசுவும் அங்கிருந்து ஓடவில்லை. 

காட்டினில் எளிதாக வழி தவறி போய்விட வாய்ப்புள்ளது. அப்படி வழி தவறி ஒருவன், வெய்யிலில் தேடி அலைந்து நீர் கிடைக்காமல் தன் சுயத்தை இழந்து திரிகிறான். அவனைக் கண்டு அவனுக்கு தண்ணீர் கொடுக்கலாம் என்று வாயைத் திறக்க சொன்னால், அவனுடைய நாக்கு மேலே ஒட்டிக்கொண்டு விட்டது. இவ்வாறு பல்வேறு விசித்திரமான சம்பவங்கள் நாவல் முழுவதும் வந்து கொண்டிருக்கிறது.  காட்டில் வெயிலின் கோர தாண்டவமும், மழையின் உக்கிரமும் மாறி மாறி வந்து செல்கிறது.

காட்டில் சில இரவுகளில்  மிருகங்களுக்கு அஞ்சாமல், காட்டின் அழகினை முழு நிலா நாளில் ரசிக்க வேண்டியே அவர் துணீகரமான செயல்களை மேற்கொள்கிறார். சரஸ்வதி குண்டத்தில் அவர் காணும் நிலவு வெளிச்சமும், பூக்களின் வாசமும், குளிர்ந்த இரவும் நம்மை பரவசம் அடைய செய்கிறது. இதுபோல் தன் பல்வேறு உச்ச அழகியல் அனுபவங்களை வார்த்தைகளால் தர முயன்றிருக்கிறார்.

நாவல் முழுவதும் விசித்திரமான மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். தன் குலத் தொழில் கடன் கொடுப்பது என்பதற்காக தன்னிடம் உள்ளவற்றை கடனாக கொடுத்து ஏமாந்தாலும் மீண்டும் அதையே செய்யும் தாவ்தால். தன் குடும்பத்தை விட்டு ஒரு சிறு நிலத்தில் குத்தகை எடுத்து வரகு விவசாயம் செய்து கொண்டே தனிமையில் தினமும் காலையும் மாலையும் பாராயணம் செய்யும் ராஜு பாண்டே. கல்வி கற்பிக்க மாணவர்களை தேடும் வடுகநாத பண்டிதன். இரவில் போய் விளைந்த பூமியில் சிந்திய தானியங்களை பெருக்கும் பெண்டீர். நாட்டியக்கார சிறுவன் தவதியா. பரம சாது கிரிதாரி லால். காட்டை உருவாக்கும் யுகல் பிரசாத். அறுவடைக்கு வரும் மஞ்சி. காட்டு இளவரசி பானுமதி. காட்டு ராஜா தோப்புறு பன்னா. குந்தா.

யுகல் பிரசாத் என்பவர் காட்டில் வேறோர் இடத்தில கிடைக்கும் செடி கொடிகளை சரஸ்வதி குண்டத்து காட்டில் நட்டு வைத்து அங்கே அவரே உருவாக்கிய ஒரு காடு வளர்கிறது. அக்காடு என்றாவது ஒரு நாள் அழிக்கப்பட்டுவிடும் என்று இறுதியில் அறியும்போது, திரும்பவும் இன்னொரு இடத்தில வேறொரு காட்டை உருவாக்க மறுபடியும் செடி கொடிகளைக் தேடிக் கொண்டு செல்கிறார். 

காட்டு அரசர் தோப்புறு பன்னா தன் நிலங்களை இழந்தாலும், அவர் மக்களுக்கு இன்னும் அரசராகவே வாழ்கிறார். அவர்களின் வரலாறு மனித வரலாறு தோன்றுவதற்கு முன்பே ஆரம்பமாகி இருக்கும் என்று சொல்லும் ஆசிரியர், அவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள யாரும் முயலவில்லை என்கிறார். அவர்களின் வரலாறு காட்டுவாசிக்கும், நாகரிகம் கொண்ட மனிதனுக்கும் இருக்கும் பள்ளத்தாக்கில் சிக்கிக் கொண்டுள்ளது. அங்கு அரசரின் பெயரப்பெண்ணான பானுமதியிடம் காதல் கொள்கிறார். அவர்களின் அரசவையான பாதாள குகைகள், அவர்களின் மூத்தோர் சமாதிகள், அதைக் காக்கும் ஆல  மரம் என்று அவர்களின் வாழ்க்கையும் வரலாறும் அந்த காட்டின் ஒரு பகுதியோடு நின்று விடுகிறது.

மஞ்சி, ஒரு காட்டு நாடோடிப் பெண் நாகரிக உலகத்திற்குள் நுழைய விரும்பும் ஒரு குறீயீடாக வருகிறாள். காட்டில் வாழும் நாடோடி பெண்களுக்கு புதியதாக சந்தையில் வரும் சிறு சிறு அழகு சாதனப் பொருள்களின் மேல் மோகம் வருகிறது. அதனை வைத்தே நகர் வாழ்க்கையினை தாங்களே ஒரு கற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். அதை ஏதோ ஒரு புள்ளியில் ஒரு ஆண் பயன்படுத்திக் கொண்டு அவர்களை சீரழிக்கிறான். இன்று வாழும் நகரத்து பெண்களின் வாழ்க்கை ஆயிரமாயிரம் மஞ்சி போன்ற சீரழிந்த பெண்களின் ஆன்மாவின் மேலே கட்டப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

நாட்டு வைத்தியங்களையும், காட்டு வைத்தியங்களையும் நம்பி வாழும் மக்கள், ஊர் ஊராக அடித்து செல்லும் வைசூரி நோய், அவர்களின் சுகாதாரமற்ற வாழ்க்கை என அனைத்தையும் விவரிக்கிறார். அத்தனையிலும் நம்மால் முடிந்த வரை உதவி செய்யலாம் என்று அவர் நினைக்கிறார். அவரும் ராஜு பாண்டேவும் சேர்ந்து பல்வேறு மக்களை முயன்ற வரை காப்பாற்றுகிறார்கள். 

இரவில் மட்டுமே முளைக்கும் தாமரையாய் குந்தா அறிமுகம் ஆகிறாள். இரவில் அவர் சாப்பிட்ட எச்சி இலையில் ஒட்டிக் கொண்டிருப்பவைகளை தனக்கும், தன் பிள்ளைக்கும் கொடுக்க அவள் அவர் குடிசை முன் பல மணி நேரங்கள் நின்று நடு இரவு நெருங்கும் நேரத்தில் அந்த எச்சி இலைகளை வாங்கி கொண்டு இரவில் வழி இல்லாத காட்டில் தன் பிள்ளைகளுக்காக நடந்து செல்கிறாள். அவள் ஒருராஜபுத்திர ஜமீனுக்கு மனைவியாகி அழிந்த கதையும், அவள் ஒரு தேவதாசிக்குப் பிறந்தவள் என்பதால் அவளை ஊரில் யாரும் சேர்த்துக் கொள்ளாது போனதையும் சொல்கிறார். 

தான் ஒரு ஜமீன் போன்றவள் என்பதால் அவள் ஒரு போதும் தன் சுய கௌரவத்தை விட்டு கொடுக்கவில்லை. அவள் அவரின் எச்சி இல்லை சாப்பாட்டை சாப்பிட்டாலும் அது ஒரு ஜமீனுக்கு நிகரான ஒரு மேலாளர் உண்டதே. அவள் வேறு யாரிடமும் போய் இது போல் சென்று நிற்பதில்லை. அவள் ஒரு தாசியின் மகளாக இருந்தாலும் அவள் ஒரு போதும் தன சுயத்தை இழக்கவில்லை.

அவளுடைய நாடோடி வாழ்க்கை இறுதியில் அவரின் உதவியால் முடிவுக்கு வருகிறது. ஒரு சிறு நிலத்தை அவர் அவளுக்கு குத்தகைக்கு கொடுத்து பயிரிட்டு வாழ ஏற்பாடு செய்கிறார். எந்திரிக்கவே முடியாமல் நோயுற்று இருக்கும் கிரிதாரிலாலுக்கு மாதக்கணக்கில் பணிவிடை செய்து அவரை குணப்படுத்துகிறாள். அதற்கு ஊதியமாக அவரை அவள் 'அப்பா' என்று அழைக்கிறாள். அவள் வறுமையை காரணம் சொல்லி, அவள் செய்த இந்த பணிவிடைக்கு எளிதாக பணம் வாங்கி இருக்கலாம். தான் ஒரு தாசிக்கு பிறந்தவள் என்பதால் இயக்கையாககிடைக்கும் எந்த ஒரு உறவுகளும் அவளுக்கு கிடைக்காததால் அதன் வலியினை அவள் உணர்ந்ததால், அவளுக்கு மனித உறவுகளை பெறுவதே ஆத்ம திருப்தி. ஒரு வகையில் அவளே பெற்றடுத்த தந்தை தான் கிரிதாரிலால்.

ஒவ்வொரு அறுவடையின் போதும் அங்கு நடக்கும் சண்டைகள், விழாக்கள், நாடகங்கள் என்று அனைத்தும் நாவலில் வருகிறது. அங்கு வாழும் மக்களின் இன கட்டுப்பாடுகள், ஒரு இனத்தார் செய்த சாப்பாட்டை இன்னொரு இனத்தார் சாப்பிடாதது போன்றவையும் சொல்லப்பட்டிருக்கிறது. 

காட்டெருமைகளை காக்கும் தெய்வம், இரவில் குடிசைக்குள் வரும் வெள்ளை நாய் என்று மனித அறிவுக்கு எட்டாத நிகழ்வுகள் வருகிறது. அங்கு வாழும் மக்களின் உணர்வுகளில் அது இரண்டற கலந்துள்ளது. அதனை தன் அறிவினால் நம்ப முடியாவிட்டாலும், கண்ணில் காணும் காட்சியினாலும் அங்கு நடக்கும் சம்பவங்களினாலும் அதனோடு அவரும் ஒரு பகுதியாகவே வாழ்கிறார். 

ஒரு காட்டை அளந்து, குத்தகைக்கு விட்டு, அந்த குத்தகை எடுத்த மக்கள் காட்டினை திருத்தி, உழுது, பயிர் செய்து, அதனை காட்டு விலங்குகளிடம் இருந்து காப்பாற்றி, அறுவடை செய்து, அதில் வரும் சொற்ப பணத்தினால் தன் குடும்ப செல்வுகளை மேற்கொண்டு, அதிலும் பத்தாமல் வட்டிக்குக் கடன் வாங்கி, அதை திருப்ப கொடுக்க முடியாமல் எருமைகளையும், மாடுகளையும், அறுவடைகளையும் அடகு வைத்து வாழும் எளிய பஞ்சத்தினால் வாடும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களே இந்நாவல்.  இவர்களுக்கு எதிர்பார்ப்பென்று ஒன்றும் இல்லை. வரகரசி சோறு கிடைத்தாலே, உலகின் பெரிய மகத்துவமான ஒன்று கிடைத்தது போல சாப்பிடும் மக்கள். ஆனால் தங்களுக்குள் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற எண்ணம். முன்னேற்றம் அவர்கள் வைத்திருக்கும் எருமை மாட்டின் எண்ணிக்கையிலும், வரகரிசியின் அறுவடையிலும். அதனை தாண்டி எதுவுமே தெரியாத மக்கள்.

காட்டில் இருக்கும் பல்வேறு மலர்களின் பெயர்களும், மரங்களின் பெயர்களும் நாவல் முழுக்க வருகிறது. அவர் ஒவ்வொரு காட்டிற்கு சென்று அங்குள்ள புதிய வகை செடி கொடிகளின் அழகினில் தன்னை மறந்து வாழும் கணங்கள் நாவலில் பெரும்பகுதியாக வருகிறது. தான் கண்ட பல்வேறு பறவை வகைகளை  (கரிக்குருவி, பீசன்ட் கிரௌ, வல்லூறு, வெண்குருகு போன்றவை) வர்ணனை செய்கிறார். அவைகளின் சுததிரத்தினைக் கண்டு உள்ளூர மகிழ்கிறார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும், உலக யுத்தமும் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் நிகழ்ந்தவையாக இருக்கும் இந்நாவலில் ஒரு இடத்தில கூட அதன் சிறு குறிப்புகள் கூட இல்லை. நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் மனிதர்களையும், நகரங்களையும் அறியாத மக்களின் வாழ்க்கையில் அவை இல்லாதது இருப்பது தான் நியாயமானதும் கூட. காடழித்து ரோடு வந்த பிறகே தேசியப் பெருமிதங்களும் வந்து இறங்குகிறது என்றே நினைக்கிறேன். 

காட்டினை எவ்வாறு காண வேண்டும் என்று அவர் வழியாக நாம் உணர்ந்துகொள்ளலாம். காட்டில் வாழ தனிமை பயம் அறவே இல்லாமல் இருக்க வேண்டும். தனிமையில் மனம் பிறழாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி சுற்றி இருக்கும் மரம், செடி, கொடி, பறவை, விலங்குகள் என அத்தனையோடும் நாம் உரையாட தொடங்கும் போதுதான் நாம் உண்மையில் ஒரு காட்டுவாசியாக வாழ ஆரம்பிக்கிறோம். ஆனால் அங்கு எதுவும் நிச்சயம் இல்லை. ஆயிரமாயிரமாண்டுகள் அங்கே இருக்கும் கல்லும் ஏதோ ஒரு நொடியில் இல்லாமல் ஆகலாம். அங்கு காலம் இல்லாமல் ஆகிறது. அல்லது கரைந்து போகிறது.

காடு அழிக்கப்பட்டு , கடுகுப் பயிர்கள் விளைந்த அந்த வயல்களின் அழகைக் கண்டு, அதுவும் ஒரு அழகென்று ரசிக்கிறார் ஆசிரியர். மனிதன் அகத்தில் நிகழும் தன்  கற்பனைகளையும், ரசனைகளையும் புறத்தில் இருக்கும் அத்தனையையும் கொண்டு நிரப்ப முயல்கிறான். அல்லது புறம் தன்னை நிரப்பி கொள்வதற்காகவே அந்த கற்பனைகளை மனித அகத்தில் உருவாக்குகிறதோ என்ற கேள்வி எழுகிறது. கல்கத்தாவின் சந்துகளில் ஒரு சிறு வீட்டில் பின்னாளில் குடியேறிய பின்னர், அவர் அந்த காட்டின் நினைவுகளை அசை போட்டுப் பார்க்கிறார்.

காடழிந்து வயலாகி, வயலும் அழிந்து வரும் இக்கால கட்டத்தில் இந்நாவல் நாம் இயற்கையை அதன் முழு உயிர்ப்புடன் காண உதவுகிறது. காலம், வெளி போன்ற உணர்வுநிலைகளை காட்டில் இருப்பதற்கும், நம் அன்றாடத்தில் இருப்பதற்கும் வேறுபாட்டினை உணரச் செய்கிறது. இயற்கையை இயற்கையின் கண் கொண்டே பார்ப்பதற்கு இந்நாவல் உதவும். ஆனால் அது கடும் பயிற்சி இல்லாமல் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றல் நாம் கற்ற அன்றாட அறிவை அழித்துவிட்டோ  அல்லது மறைத்து வைத்தோ தான் நாம் இயற்கையை அதன் கன்னித்தன்மையை காண முடியும். அந்த கண்களை நாம் பெறுவதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும். 

இந்நாவல் அந்த கன்னி தன்மையை அப்படியே நமக்கு அளிக்கிறது. நாம் இதில் பயணம் செய்ய கூட நம் அன்றாடங்களை கழட்டி வைக்க வேண்டும். ஒரு வாசிப்பில் நாம் அனைத்தையும் உணர்ந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்த நாவலின் நுட்பமே அதன் நேரடியான, எளிமையான உணர்வுகளை அளிப்பது என்றே நினைக்கிறேன். 


Tuesday 2 May 2023

மகாராஷ்டிரா பயணம் (7)

zகாலை நான்கரைக்கெல்லாம் கிளம்பி 'நாசிக் ரோடு' இரயில் நிலையம் சென்றோம். இரயில் சரியான நேரத்தில் வந்தது. நாசிக்கிலிரிந்து மும்பை சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் வரை செல்லும் இரயில் அது. அமரும் இருக்கைகளில் நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம். ரயிலில் அந்நேரத்திலும் நல்ல  கூட்டம் இருந்தது. இருக்கையில் அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே நான் தூங்கிவிட்டேன். ஒரு மணி நேர பயணத்திற்கு பின்பு விழித்துப் பார்த்தால் இரயில் மலை இடுக்குகளில் குடைந்த சுரங்கப் பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. 


இரயில் 'தானே, கல்யாண்' வழியாக மும்பை செல்கிறது. என் பக்கத்தில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தார். கொஞ்சம் பதட்டமாக இருந்தார். சிறிது நேரம் கழித்து அவரே பேச்சு கொடுத்தார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். நான் சுற்றுலாவுக்காக வந்ததையும் இதுவரை பார்த்த இடங்களையும் நாசிக்கில் நாங்கள் பார்த்த இடங்களைப் பற்றியும் சொன்னேன். அவர் அதற்கு ஏதோ ஒரு கருத்தை சொல்லிவிட்டு மீண்டும் பதற்றமாக தென்பட்டர். அவருடைய அந்த பதற்றத்தை தனிப்பதற்காகவே அவர் பேச்சு கொடுத்தார் என்று தோன்றியது. அறை மணி நேரம் கழித்து, தான் ஒரு நேர்காணலுக்கு செல்வதாகச் சொன்னார்


இரயில் ஆறுகளையும், மலைகளையும் பிளந்து சென்று கொண்டிருந்தது. பத்து மணி அளவில் மும்பையின் புறநகர்ப் பகுதிகளை தாண்டி சென்று கொண்டிருந்தோம். இரயில் தண்டவாளத்தை ஒட்டியே தகர அட்டை போட்ட கூரைகள் தென்பட்டன.  தீப்பெட்டிக்குள் இருக்கும் குச்சிகள் போல இருக்கும் காட்சிதான் நீங்கள் மும்பையை  நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று உறுதிப்படுத்தும். 


பதினொரு மணிக்கு ரயில் 'சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்' வந்தடைந்தது. அங்கிருக்கும் நடைமேடைகளை எண்ணிக் கொண்டு வந்தோம். இந்தியாவில் போட்ட முதல் இரயில் பாதை பம்பாய்க்கும் தானேவிற்கும் என்ற வரலாற்று நிகழ்வைப் பற்றி பேசிக்கொண்டு வந்தோம். விக்டோரியா முனையம் என்ற இந்த பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட இரயில் நிலையத்திற்கு, 1996 ஆம் ஆண்டு,  'சத்ரபதி சிவாஜி ரயில் முனையம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள இடமாகும்.

நிலையத்தில் உள்ளிருந்து பார்க்கும் போது சாதாரண இரயில் நிலையம் என்றே சொல்ல தோன்றும். வெளியில் இருந்து காணும் போது தான் அதன் கட்டுமான பிரம்மாண்டமும், அழகியலும் தெரியும். சுற்றுலா மையம்  சென்று மும்பை டூரிஸ்ட் கையேடு வாங்க உள்ளே அலைந்து கொண்டிருந்தோம். கடைசியில் அந்த சுற்றுலா மையம் மூடப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். மும்பை போன்ற பெருநகர இரயில் நிலையத்திலேயே இது இல்லையென்றால், மக்கள் மிகவும் சிரமப்படுவர் என்று பேசிக்கொண்டிருக்கையில், உண்மையில் இப்பொழுது யாரும் அங்கு செல்வதில்லை என்றும், எல்லாமே மொபைல் இன்டர்நெட்டில் வருவதாலும், எந்த ஒரு புதிய இடத்தையும், செய்தியையும் உடனுக்கடன் தெரிந்து கொள்ளும் வசதி இருப்பதால் சுற்றுலா மையத்திற்கான தேவை இல்லாமல் போயிருக்கலாம்.


உள்ளிருந்து நாங்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு வழியாக வெளியே வந்தோம். அங்கு எதிரிலேயே ஒரு ரோட்டுக் கடையில் வடா பாவ் சாப்பிட்டோம். அங்கிருந்து மும்பை தெருக்களில் நடக்க ஆரம்பித்தோம். விக்டோரியா காலத்திற்குள் நுழைந்து விட்டோமா என்று எண்ணும்படி காலனிய கட்டிடங்கள் இரயில் நிலையத்தை சுற்றி அப்படியே இருந்தது. இந்த இடத்தை அப்படியே பெயர்த்து எடுத்து லண்டனின் எந்த ஒரு இடத்திலேயும் பொருத்தி விடலாம்.


சிறிது நேர நடையிலேயே வெயில் நன்றாக உரைத்தது. வியர்வை வழிய ஆரம்பித்தது. ஒரு நாள் பஸ் பாஸ் எடுக்க மீண்டும் ரயில் நிலையம் எதிரில் உள்ள பஸ் நிலையத்திற்கு வந்தோம். ஒரு வலைப்பூவில் இந்த பாஸை பயன்படுத்தி மும்பை முழுவதும் ஒருநாள் இலவசமாக அனைத்து பஸ்களிலும் பயணம் செல்லலாம் என்று படித்தேன். AC பஸ்ஸிலும் பயணம் செய்யலாம். நாங்கள்  பாசை வாங்கிக் கொண்டு பஸ் தடத்திற்கு எதிரிலே நிற்கும் மக்கள் வரிசையில் சென்று நின்றோம். இங்கு பஸ் ஏறுவதற்கு முன்னாடியே நடத்துநர் வந்து டிக்கெட் வாங்கி விடுவார். டிக்கெட் எடுத்து விட்ட பிறகு தான் பேருந்தில் ஏற முடியும். அங்கிருந்து முதலில் 'இந்தியாவின் நுழைவாயிலிற்கு' (Gateway of India) சென்று கொண்டிருந்தோம்.





பத்து நிமிட பயணத்திலேயே gateway of indiaவிற்கு வந்துவிட்டோம். வங்கக் கடற்கரைக்கு எதிரே  கட்டப்பட்ட கட்டிடம். மக்கள் கூட்டம் அலைமோதியது. பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ் v இந்தியாவிற்கு வருகை புரிந்ததை ஒட்டி கட்டப்பட்ட நினைவுச் சின்னம் தான் இவ்விடம். இது இந்து மற்றும் முகலாய கட்டிட  வேலைப்பாடுகளுடன் சேர்ந்து கட்டப்பட்டதாகும். மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். வெயில் சுட்டெரித்தது. நாங்கள்  செல்லும் போது பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தனர். ஏதோ விழாவிற்காக ஒரு பக்கத்தில் அரங்கம் அமைத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து ஒரு மணி நேர படகுப்பயணம் செய்து 'எலிபண்டா குகை'க்கு செல்ல டிக்கெட் விநியோகித்துக் கொண்டிருந்தனர். அங்கு சென்று வந்தால் குறைந்தது 5 மணி நேரம் வேண்டும் என்பதால் அங்கு செல்லவில்லை. Gateway of Indiaவில் இருந்து  ஒரு நூறு அடிக்குள்ளாகவே பிரசித்திபெற்ற 'தாஜ் ஹோட்டல்' உள்ளது. 


என் நண்பன் ஒருவர் மும்பையில் அரசாங்க பணியில் உள்ளார். அவரிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சித்திவிநாயக் கோயிலுக்கு செல்லும் படி சொன்னார். நான் நேரம் இருந்தால் செல்வதாக சொன்னேன். மும்பையில் பஸ் பாஸ் வாங்குவது உபயோகமற்றது என்றும் பஸ்ஸில் பெரும்பாலும் யாரும் பயணம் செய்ய மாட்டார்கள் என்றும், நகர ரயிலில் மட்டுமே பயணம் செய்வர் என்றும், பஸ்ஸில் சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி எந்த இடத்திற்கு செல்வதாக இருந்தாலும் மிகவும் தாமதமாகும் என்றார். முடிந்தால் சித்திவிநாயக் கோவில் வரும் போது சந்திக்கலாம் என்றும் சொன்னார். 


நாங்கள் அங்கிருந்து நடந்து 'மேற்கு இந்தியாவின் வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம்' என இருந்து, 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்' என்று பெயர் மாற்றப்பட்ட அருங்காட்சியகத்திற்கு சென்றோம். Gateway of indiaவிலிருந்து ஐந்து  நிமிட நடை தான். 




'ஒலி வழிகாட்டி' பயன்படுத்தினால் அதற்கு தனியாக டிக்கெட் வாங்க வேண்டும். அதைப் பயன்படுத்தி நாம் அருங்காட்சியகத்தின் உள்ளே இருக்கும் காட்சி பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். அருங்காட்சியகம் உள்ளே நன்றாக பராமரிக்கப்படும் தோட்டம்  உள்ளது. இளவரசர் வேல்ஸ் அவர்களின் சிலை நுழைவாயிலுக்கு எதிரிலேயே உள்ளது. அருங்காட்சியகம் உள்ளே டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம்


நுழைவுச்சீட்டை காண்பித்து ஒலி கருவியை பெற்றுகொண்டடோம். ஒரு பெரிய சிவாஜி உருவ படம்  நுழைவாயிலில் உள்ளது. இந்திய வரலாற்று சின்னங்கள் மட்டும் இல்லாமல், எகிப்திய மம்மிகளைப் பற்றியும் காட்சி பொருட்கள் உள்ளன. கலை, தொல்லியல் மற்றும் இயற்கை வரலாறு என்று இந்த அருங்காட்சியகம் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கே 50000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


உள்ளே நுழைந்தவுடன் வலது புறம் உள்ள அறையில் பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கலைப் பொருட்களிற்கும் ஒரு எண் குறிக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணை நம் ஒலி கருவியில் அழுத்தினால், அந்த கலை பொருளினைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் பல்வேறு கால கட்டத்தில் செய்யப்பெற்ற கடவுள் சிலைகளும், ஓவியங்களும், தந்தத்தினால் செய்யப்பெற்ற பொருட்களும், சில வெளிநாட்டு பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.


முதலாம் தளத்திற்கு படியேறி செல்லும் போது, இடையிலேயே ஒரு அறை உள்ளது. அங்கு எகிப்திய மம்மிகளின் எச்சங்களும், இந்திய போர் கருவிகளாக பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகை கத்திகள், வாட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து மேலே முதல் தலத்தில் திபெத்திய, இந்திய பெளத்த காலத்து சின்னங்கள் இடம்பெற்றுள்ளது. 




இந்தியாவில் பல்வேறு தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை ஆவணப்படுத்தும் புகைப்படக் கண்காட்சிகளின் தொகுப்புஇங்குள்ளதுஇந்த கண்காட்சிகள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், பண்டைய காலத்தைப் பற்றிய நுண்ணறிவையும் வெளிப்படுத்துகின்றன.


சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களான ஹரப்பா மற்றும் மொஹெஞ்சதாரோவில் உள்ள அகழ்வாராய்ச்சிகள் அருங்காட்சியகத்தில் உள்ள சில புகைப்படக் காட்சிகளில்வைக்கப்பட்டுள்ளதுஇக்கண்காட்சிகள் தோண்டியெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள்முத்திரைகள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களின் புகைப்படங்களைக் காண்பிக்கின்றன. மேலும் இந்த பண்டைய நகரங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றன.




அஜந்தா மற்றும் எல்லோராவில் உள்ள புத்த குகைக் கோயில்கள் மற்றும் பண்டைய நகரமான ஹம்பி போன்ற இந்தியாவின் பிற முக்கியமான தொல்பொருள் தளங்களின் புகைப்படக் காட்சிகளும் உள்ளனஇவை இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலை பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றனமேலும் 

இந்த தலைசிறந்த படைப்புகளை உருவாக்கிய கைவினைஞர்களின் குறிப்பிடத்தக்க கைவினைத்தினை 

வெளிப்படுத்துகின்றன.


இந்திய சிற்பங்கள்: சிந்து சமவெளி நாகரிகம், மௌரியர் காலம், குப்தர் காலம் மற்றும் சோழர் காலம் போன்ற இந்திய சிற்பங்களின் பெரிய தொகுப்பு உள்ளது. சிற்பங்கள் சிறிய உருவங்கள் முதல் பெரிய கல் சிற்பங்கள் வரை உள்ளன.


மினியேச்சர் ஓவியங்கள்: ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மினியேச்சர் ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் அவற்றின் சிக்கலான விவரங்கள் மற்றும் துடிப்பான வண்ணங்களுக்காக அறியப்படுகின்றன.


ஐரோப்பிய ஓவியங்கள்: வில்லியம் டர்னர், ஜான் கான்ஸ்டபிள் மற்றும் ஜே.எம்.டபிள்யூ போன்ற கலைஞர்களின் படைப்புகள் உட்பட ஐரோப்பிய ஓவியங்களின் தொகுப்பு உள்ளது. டர்னர் சேகரிப்பில் நிலப்பரப்புகள், உருவப்படங்கள் மற்றும் மதக் கலை ஆகியவை அடங்கும்.


அலங்கார கலைகள்: ஜவுளிகள் மற்றும் மட்பாண்டங்கள் உள்ளிட்ட அலங்கார கலைகளின் தொகுப்பு உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் சேகரித்த பொருட்கள் உள்ளன.


சீன மற்றும் ஜப்பானிய கலை: பீங்கான், அரக்கு மற்றும் ஜவுளி உள்ளிட்ட சீன மற்றும் ஜப்பானிய கலைகளின் தொகுப்பு உள்ளது. மிங் மற்றும் குயிங் வம்சங்கள் உட்பட பல்வேறு காலகட்டங்களில் இருந்து சேகரிப்புகள் உள்ளன.


தொல்லியல்வரலாறு அல்லது கலையில் ஆர்வமுள்ள எவரும் பார்க்க வேண்டியவை இவை.




பறவைகளின் அருங்காட்சியகமும் இங்கு கீழ் தளத்தில் உள்ளது. இந்தியாவில் அழிந்த, அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள், விலங்குகளை பதப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனர். நண்பர் பறவைகள் ஆர்வலர் என்பதால் நிறைய பறவைகளைக் பற்றி சொல்லி கொண்டிருந்தார். சில பறவைககளும், விலங்குகளும் கண்ணாடியை  உடைத்து வெளியில் எந்த நேரத்திலும் வந்து விடலாம் என்றே தோன்றும்.


ஆங்கிலேயர்களின் அகழாய்வு படங்களைக் காணும்போது அவர்கள் மேற்கொண்ட அளப்பரிய பணியை பாரட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. புதர் படர்ந்து  யாரும் அண்டவே முடியாத பல கலைச் சின்னங்களை மீட்டெடுத்து அதனை ஆராய்ந்து உலகிற்கு அளித்த பெருமை அவர்களையே சேரும். ஒரு வகையில் இந்தியாவின் பண்பாட்டினை மீட்டெடுத்தது ஆங்கிலேயர்களே. 


அங்கிருந்து கிளம்பி பன்னாட்டு விடுதிகள் அமைந்திருந்த பகுதியில், ஒரு மூலையில் இருந்தவொரு நடுத்தர சைவ உணவகத்தில் சாப்பிட்டோம். பெரிய கடையாக இல்லாவிட்டாலும், கூட்டமா இருந்தது. உணவும் நன்றாக இருந்தது. சாப்பிட்டு விட்டு பஸ்ஸிற்கு 15 நிமிடம் காத்திருந்து ஷாப்பிங் செய்ய 'crawford' சந்தைக்கு சென்றோம். அங்கு சென்றால் தரையில் கால் வைக்க கூட இடம் இல்லாதளவுக்கு கூட்டம். கிட்டதட்ட  நம் தி-நகர் போன்றே. ஆனால் கூட்டமும் கடையும் அதிகமாக இருந்தது. மனைவிக்கு துணி எடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் என்ன எடுப்பது என்று தெரியவில்லை. எடுத்தாலும் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. அதனால் ஒரு சில துணிகள் மட்டுமே எடுத்தேன். ஹிந்தியில் பேரம் பேச தெரிந்தால் நன்றாக குறைத்து இருக்கலாம். 


அங்கிருந்து கிளம்பி பஸ்ஸில் marine drive வந்தோம். மாலை 5:45க்கு கடற்கரை சென்றோம். கரை முழுவதும் மூன்று பக்கம் புடைத்திருக்கும் ஒரு வகையான செயற்கைக் கற்களினால் நிரப்பி இருந்தனர். கடல் கொந்தளித்து தண்ணீர் மேலே ரோட்டிற்கு வந்து விடாமல் தடுப்பதற்காக இருக்கும் என்று நினைத்தேன். அதற்கு மேலே நடைமேடை அமைத்திருந்தனர். ஒரு அரைவட்ட வடிவில் இருந்த அந்த நடைமேடை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மக்கள் சூரிய அஸ்தமனம் பார்க்க கூடியிருந்தனர். நாங்கள் அரைவட்ட வடிவின் நடுவில் அமர்ந்திருந்ததால் இரு புறமும் மக்கள் நிரம்பியிருந்தது காண முடிந்தது. 


அழகான இளம் பெண்கள், இளைஞர்கள் என்று அனைத்து வகையான மக்களும் அங்கிருந்தனர். கடலின் இளமை அலையினில் கொப்பளிப்பது போல, அங்கு கூடியிருந்த இளைஞர்களிடம் இளமை ததும்பியது. காதலர்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டும், பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒன்றாக அமர்ந்தும் அஸ்தமனத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். எந்த ஒரு உலகியல் கொண்டாட்டமும் இளமையிலேயே அதன் முழு அளவை எட்டுகிறது. பக்கத்தில் ஒரு இளைஞர் கூட்டம் மொபைலில் பாட்டு போட்டு கூடவே தாங்களும் பாடிக்கொண்டிருந்தனர். சுற்றியிருந்த ஒரு அடுக்குமாடி பன்னாட்டு விடுதியில் ஒரு கிரிக்கெட் போட்டியின் விளம்பரம் கட்டிடங்களின் மேல் வண்ணக்காட்சியாக ஓட்டப்பட்டது. 


இவ்வளவு அழகான பெண்களை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நான் எந்த ஒரு இடத்திலும் பார்த்தது இல்லை. மும்பை கனவுகளின் உலகம் என்று சொல்வதில் அர்த்தம் உள்ளது. கருப்பு வெள்ளையில் கனவுகள் இருந்தாலும், இளமையில் காணும் கனவுகளே வண்ணங்களாக மாறி மனதை உற்சாகப்படுத்துகிறது. பிரபஞ்ச உயிர் துடிப்பின், தன்னைப் பெருக்கி கொள்ளும் ஒவ்வோர் உயிரின் உந்துதல் இந்த சூரியன் அஸ்தமனத்தில் பார்ப்பது ஒரு நகைமுரண். 


ஒரு கட்டத்தில் சூரியன் அஸ்தமாவதை நோக்கி அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தோம். ஒரு வினாடி தான் சூரியன் மறையும் பொழுது. அப்பொழுது அனைவரும் ஒரு உற்சாக ஒலி எழுப்பினோம். சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து இருந்துவிட்டு ஏழு நாள் பயணத்தை நிறைவு செய்ய விமான நிலையம் செல்ல ரயில் நிலையம் சென்றோம். இரயில் நிலையத்தில் விசாரித்து, டிக்கெட் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.


ரயிலிலேயே மெதுவாக மற்றும் வேகமாக செல்லும் இரயில் எந்தெந்த நடைமேடையில் வரும் என்று எலக்ட்ரானிக் பலகையில் அறிவித்து விடுகிறார்கள். நாங்கள் வேகமான ரயிலில் ஏறினோம். அந்த இரயில், அங்கிருந்து தான் கிளம்பியதால் உட்கார இருக்கை கிடைத்தது. அலுவலகம் முடித்து வரும் கூட்டம் அதிகமிருந்தது. அனைவரும் பைகளை பின்னால் மாட்டாமல் முன்னாடி மாட்டிக்கொண்டு பயணம் செய்தனர்.


மும்பையில் இரயில் பயணம் செய்ய தனியாக பயிற்சி தேவை. ரயில் ஏறுவதுதான் அங்கு முதல் குறிக்கோள். ரயிலில் ஏறிவிட்டாலே ஒரு சாதனை தான். அதே போல தான் இறங்குவதும். நிறுத்தத்தில் இறங்குவதற்கு முன்பே ஏற ஆரம்பித்து விடுவார்கள். நிற்க இடம் கிடைத்தால் உட்கார்ந்துவிட்ட சந்தோசம் ஏற்படும் என்றே நினைக்கிறேன். இரயில் நிற்கும் முன்னே ஏறி உள்ளே நிற்க ஒரு இடமும், தன் பையை ஒரு கொக்கியில் தன் பக்கத்திலேயே மாட்டிக்கொள்ள ஒரு இடமும் கிடைத்தால் அடுத்த ஒரு மணி நேரமோ அரை மணி நேரமோ நிம்மதியாக பயணம் செல்லலாம். நாங்கள் 'அந்தேரி கிழக்கில்' இறங்கி அங்கிருந்து மெட்ரோவில் சென்று விமான நிலைய நிறுத்தத்தில் இறங்கினோம். மணி ஒன்பது ஆகியது. இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது விமானத்திற்கு.


நாங்கள் முனையம் 1 செல்ல வழி கேட்டோம். ஒருவர் முனையம் 1 இங்கில்லை என்றும், பக்கத்தில் 5 கிலோமீட்டர் தொலைவு போக வேண்டும் என்றார். எங்களுக்கு தூக்கி வாரிப்  போட்டது. யாரும் சரியாக பதில் சொல்ல வில்லை. அல்லது மாற்றி மாற்றி கூறினர்.


நாங்கள் நடந்து விமான சாலையில் போய்க்கொண்டிருந்தோம். அங்கு வந்த ஒருவரிடம் முனையம் 1 செல்லும் வழி கேட்டோம். அவர் எந்த விமானம் என்று கேட்டார்.நான் 'ஆகாசா ஏர்' என்றதும் அவர் மொபைல் செயலியில் பார்த்து அது முனையம் 1 என்றும், அது இங்கில்லை என்றும் சொன்னார். மணி 9:45க்கு மேல் ஆகியது. 


நண்பர் மிகவும் பதற்றப்பட்டார். வார இறுதியில் கூட்டம் இருப்பதால் மூன்று  மணி நேரம் முன்னதாகவே வரும் படி எனக்கு மின்னஞ்சல் வந்திருந்தது. விமானம் 12:05 மணிக்கு. இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளது. ஒரு ஆட்டோ பிடித்து முனையம் ஒன்றிற்கு கிளம்பினோம். ஆட்டோக்காரன் பிலைட் ஓட்டுவது போல ஓட்டிக் கொண்டு போனான். அவன் ஓட்டுவதைப் பார்த்தல் கண்டிப்பா எங்கேயாவது போய் இடித்து விடுவான் என்று பதறிக் கொண்டிருந்தோம். 'bhaiyya slow slow' என்று என்ன சொன்னாலும் கேட்காமல் வேகமாக ஓட்டினான். இத்தனைக்கும் நாங்கள விமானத்திற்கு அவசரம் என்றெல்லாம் சொல்லவில்லை


ஆட்டோவில் வரும் போதே மொபைலில் ஒரு சதவீதம் தான் பேட்டரி சார்ஜ் இருந்தது. எப்படியாவது   டிக்கெட்டை காண்பித்து விட்டு விமான நிலையம் உள்ளே சென்றுவிட்டால் போதும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக காவலாளியிடம் மொபைலில் டிக்கெட்டை சரி பார்த்துவிட்டு உள்ளே செல்லும் போது தான் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆனது


பைகளை செக் இன் செய்துவிட்டு உள்ளே  சென்றோம். 

12:05 க்கு  கிளம்ப வேண்டிய விமானம் 11:55க்கே நகர ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்திற்குள் பெங்களூரு வந்தோம். அங்கிருந்து AC பஸ்ஸில் சில்க் போர்டு வந்தடைந்தோம். உடனடியாக தர்மபுரி பேருந்து கிடைத்தது. ஜெயவேல் ஓசூரில் இறங்கிக் கொண்டார். நான் தர்மபுரி வந்தடைந்தேன்.