Sunday 24 May 2020

தேனீ - கடிதம்

                                                            தேனீ - கடிதம்

    நினைவு தெரிந்த நாள் முதல் உழைப்பு மட்டுமே செய்து முதுமை அடைந்து இறக்கும் பல்வேறு மனிதர்கள் நம்முடைய முந்தைய சமுதாயத்தில் நிறையே பேர் இருந்திருப்பார்கள். இதற்கு முக்கிய காரணமாக அந்த கால கட்டத்தில், வருமானம் பெற பலவகையான தொழில்கள் இல்லை. பெரும்பாலும் குடும்ப தொழிலை நம்பியே பிள்ளைகள் பிறக்கிறார்கள். இன்னொன்று, நுகர்வு கலாச்சாரம் என்பது மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை. இன்றுள்ளவர்களில், அந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்வது சற்றே கடினமானது என்றே நினைக்கிறேன். "எனக்கு என்ன கிடைச்சுதுன்னு ஒருத்தன் கணக்கு பாக்க ஆரம்பிச்சா அதோட அவன் கை குறுகிரும். மனசு மூடிரும்."  என்ற வரிகளின் ஆழம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
   
   தேனீ போல கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறார் சம்முகத்தின் அப்பா. வெறும் மூன்று மணி நேரம் தூக்கம். மூன்று வயது முதல் முதுமை காலத்தில் பக்கவாதம் வரும் வரை இதே பிழைப்பு தான். தனக்குப் பிடித்த 'திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை' அவர்களின் ஒரு கச்சேரியை கூட அவர் நேரில் சென்று பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் மற்றவர்கள் கேட்டு வந்து அதை பத்தி பேசும் போதே, அந்த வாசிப்பின் ராகங்களையும் இசையையும் அவரால் உணர முடிந்தது. இசை என்பது மனதின் உள்ளிருப்பது, அது வெளியில் இல்லை என்றே தோன்றுகிறது. இது அனைத்து கலைக்கும் பொருந்தும். கலையின் ஆக்கத்திற்கு மட்டுமில்லாமல், அதன் உள்வாங்களுக்கும் கூட இது பொருந்துவது போல் உள்ளது.

   பிள்ளை அவர்களின் இசையை கேட்க (அவர் இறந்த பல வருடங்கள் கழித்து) சம்முகம் பிள்ளை தன் அப்பாவுடன  சுசீந்திரம் சென்று அங்கே உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் சென்றமர்ந்தனர். அங்குள்ள தூண்களிலும், சிற்பங்களிலும் அவர் இசையைக் கேட்க ஆரம்பித்து, ஒரு முழு கச்சேரியை கேட்டு முடித்தது, பெரும் வியப்பாக உள்ளது. இசை அவரின் மூச்சில் ஒன்றாக கலந்தது, அதன் மேல் அவருக்கு அலாதி பிரியமும், அதை அனுபவிக்க அவர் காலம் முழுதாகவும் தவம் செய்து கொண்டே இருந்தார். அந்த தவத்தில், இசை தன்னை மீறி தன்னிடமிருந்து தோன்றி தனக்கு மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. அவர் இசையாகிய தருணம் அது.

   மிகப்பெரும் தவங்கள் கிட்டிய  பொழுது அதற்கு அப்பால் வாழ்வில் பொருள் ஏதும் இல்லாமல் மனம் தன்னைத்தானே சிதைத்து கொள்கிறதோ என்று தோன்றுகிறது. அந்த சிதைவின்  தொடக்கமே மரணமாக முடிகிறது.

 
   

Wednesday 20 May 2020

முதுநாவல் - கடிதம்

                                                  முதுநாவல் - கடிதம்

   'முதுநாவல்' சிறுகதையில் வரும் இடும்பன் நாராயணனும், தலைக்கெட்டு காதரும் ஓர் மனம் கொண்ட இரண்டு உடல்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.. இருவருக்கும் வித்தியாசமே இல்லை. உலகுக்கு ஒருவன் ரவுடி, இன்னொருவன் போலீஸ். ஆனால், அவர்கள் ஒரே ஒருவர் தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போர் புரிந்திருந்த போது தான் அதை தாங்களே உணர்திருப்பர்.

   இடும்பன், காதர், இருவரின் வாழ்க்கை சித்தரிப்புகள் நேர்த்தியாக இருந்தன. அவற்றின் ஊடாக அவர்கள் புரிந்த சண்டையை பார்க்க முடிகிறது. 'தான்' என்ற மனநிலை கொண்ட இருவரும், அயராது சண்டை செய்யும் போது, அது அவ்விருவரிடமிருந்தும் விலகுகிறது. பாறசாலை சந்தையில் நடந்த அந்த கடும் போரில், அவர்கள் மாறி மாறி அடித்துக் கொண்டு அதனை கண்டடைந்தனர். இரு பெரும் மலைகளின் போர் போல் இருந்தது அவர்களின் யுத்தம்.

   போரின் உக்கிரதைப் பாடும் 'தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்' சந்தைப்பாடல்  உண்மையில் புலிக்கும், கழுதைப்புலிக்கும் நடக்கும் யுத்தம் போன்றே உள்ளன. இங்கே அவர்கள் 'அடியடி' என அடித்துக் கொண்டும், சமயங்களில் இருவரும் சேர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டும், ஆயுதங்களை இருவரும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தாமல் இருந்ததும் வியப்பாகவே இருந்தது. அவர்கள் போரிட்டது தங்களுக்காக, வேறு யாருக்காகவும் இல்லை. இதில் வெல்வதும், வீழ்வதும் அவர்களுக்கு சமமே.

   இருவரும் ஓயாமல் அடித்துக் கொண்டு அந்த முதுநாவல் மரத்தடியில் வந்தமர்ந்த போது, முதியவன் ஒருவனிடம் நீர் வாங்கி இடும்பன் குடித்து பிறகு காதருக்கு கொடுத்ததும், காதரை இடும்பன் கட்டி இழுத்து வர ஊர்மக்கள் அவன் மேல் எச்சில் துப்பியதைக் கண்டு இடும்பன் கோபம் கொண்டதும், இருவரும் மற்றோரின் மேல் தாங்கள் வைத்திருந்த மரியாதையைக் காட்டுவதாக உள்ளது. இது, உண்மையில் இவர்கள் இருவரும் தான் மூடர்களா அல்லது சுற்றிக் கூடி இச்சண்டையை வேடிக்கைப் பார்த்த மக்கள் தான் மூடர்களா என்ற சந்தேகமும் எழுகிறது.

   சண்டை முடிந்து, காதர் ஜெயிலிலும், இடும்பன் மலையிலும் வாழ்ந்த போதும், அவர்கள் இருவரும் அந்தச் சண்டைக்குப் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் பேச நினைத்த அத்தனை வார்த்தைகளும், அவர்களின் 'அடியடி'களே பேசி ஓய்ந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு பேச ஒன்றுமே இல்லை. அவர்களின் மனம் அந்த போரினால் ஆழ்ந்த அமைதி அடைந்தது. இடும்பன் ஊமைச்சாமி ஆனதும், காதர் அந்த முதுநாவல் மரத்தடியில் சூஃபி ஆனதும் மனித மனங்களின்  இரு எதிர் எல்லைகளின் வெளிப்பாடாக உள்ளது. ஒரு  எல்லையிலிருந்து மற்றோரு எல்லைக்கு செல்ல, ஒரு வினாடியும் ஆகலாம், அல்லது ஒரு வாழ்க்கை முழுதாக வாழ்ந்தாலும் முடியாமலும் போகலாம்.

   இம்மாதிரியான மனித மனங்களின் போர்களை அந்த முதுநாவல் மரம் காலந்தொட்டு பார்த்துக்கொண்டே இருக்கிறது. போர்களின் முறையில் மாற்றம் வந்தாலும், போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த முதுநாவல் மரத்தடியில் இருவருக்கும் நீர் தந்த அந்த வயதானவருக்கும் அந்த முதுநாவல் மரத்திற்கும் வேறுபாடே இல்லை. அது  நிழல் தந்தது, அவர் நீர் தந்தார், போருக்கு. அல்லது போர் முடிவிற்கு!

Monday 18 May 2020

பிறசண்டு - கடிதம்

                                                 பிறசண்டு - கடிதம்

அன்புள்ள ஜெ,

   இரண்டு எதிரெதிர் துருவங்களாக 'பாட்டா'வும், 'கள்ள'னும் உள்ளார்கள். வாழ்வில் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று 'இறகு' போல மனம் கொண்டவன் கள்ளன். இப்படித்தான் நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து வாழ்பவர் 'பாட்டா'. அப்படி  அவர் இருந்ததனாலேயே அவர் 4 ஆண்டு காலம் சிறையில் இருக்க வேண்டியது ஆனது.
   கள்ளனோ திருட வந்த இடத்தில அமைதியாக குத்திட்டு ஒக்காந்து யோசித்ததை,  பாட்டாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை பொறுத்த வரையில் திருடன் என்பவன் அவசரத்திலும், பொறுமையின்மையிலும் செயல்படுபவன். அதனாலே அவன் திருடத்தான் வந்திருக்கான் என்று அவருக்கு தெரியவில்லை. மாறாக, கள்ளனோ அமைதியாக வந்து, அமைதியாக திருடி, அமைதியாக சென்றான்.
   சிரோமணி பாட்டா, தன்னைப்பற்றி மட்டுமே யோசித்து வாழ்வில் நன்றாக படித்து, அரசாங்க வேலைக்குப்போய்  கௌரவமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் லட்சியமாக வாழ்ந்ததால், அவர் ஒரு கடிவாளம் போட்ட குதிரை போல ஆனார். உலகின் நல்லது/கெட்டதுகளின் பிரித்தறியும் பக்குவம் அவருக்கு கிட்டவில்லை. சற்றே யோசித்துப் பார்த்தால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் முந்தைய தலைமுறையிலேயே பலபேர் இப்படித்தான் இருப்பார்கள். குறிப்பாக, குடும்பத்தில் முதல் பட்டதாரிகள். இவர்கள் தங்கள் ஊரையும் உடமைகளையும்  விட்டு வேறு எங்கோ சென்று படிப்பது, மிகப்பெரும் சவால். அவர்களால் தங்களின் இயல்பை விட்டு சமரசம் செய்து கொண்டு புதிய ஊர்களில் வாழசிரமப்படுவார்கள். அதனாலேயே அவர்கள் மிகவும் தனிமையாகிறார்கள். தனிமை ஆன பின்பு அவர்களுக்கு தெரிந்தது படித்து முன்னேறுவது மட்டுமே. இப்படிப்பட்ட ஒருவரகத் தான் சிரோமணி பாட்டாவை என்னால் பார்க்க முடிகிறது. 
   வீட்டில் உள்ளவர்களால் இவர்களை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அவர்களின் உலகம் வேறு. உலகத்தின் நிகழ்வுகள் வேறு. கள்ளன், தன்னைக் காட்டிக் கொடுக்க கூடாது என்று தன்னுடன் சொல்லும் போது கூட, அவர் அவனிடம் அமைதியாக உரையாடிக் கொண்டிருந்தார்.  
வீட்டில்  கிடைக்காத உறவின் உரையாடல்கள் அவருக்கு அந்த கள்ளனிடம் கிடைத்தது. அதனாலோ என்னவோ அவன் விடைபெறும் முன், 'அடிக்கடி வீட்டிற்கு வாடே' என்று சொல்லி அனுப்பினார். 

அன்புடன்,
பிரவின்
தர்மபுரி 

Thursday 14 May 2020

லீலை, நஞ்சு - கடிதம்

                                                            லீலை, நஞ்சு - கடிதம்

அன்புள்ள ஜெ,

தன்னிச்சையான செயல்கள் என்று ஒன்று உண்டா அல்லது அது ஆழ்மனதின் வெளிப்பாடா? தர்க்க ரீதியாக பார்த்தால் நம் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அனைத்து செயல்களிலும் தர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. காலத்தின் ஒரு புள்ளியில் ஒரு தன்னிச்சையான செயலில் எப்படி வாழ்க்கை முழுவதும் மாறி விடும் என்பதற்கு லீலாவும், 'நஞ்சு'வும் ஓர் உதாரணம் என்றே தோன்றுகிறது.

உலகில் அனைவரும் எப்போதுமே ஒரு விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். அந்த காத்திருப்பும் எதிர்பார்ப்பும் இல்லை என்றால் மனிதனுக்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அது சின்ன எதிர்பார்ப்பிலிருந்து மிகப்பெரிய இலட்சியங்கள் வரை பொருந்தும். லீலாவிற்கு வறுமையினிடமிருந்து, 'நஞ்சு'விற்கு பிடிக்காத கணவனிடமிருந்து.

அதே சமயம் உலகில் அனைவரும் எப்போதும் ஒரு பொருளை அடைய செயல்படுகிறார்கள். விடுதலை வேட்கை தூண்டியதால் பொருள் மீது நாட்டமா  அல்லது பொருள் மீது கொண்ட பற்றால் விடுதலை மீது வேட்கையா. இந்த இரண்டும் ஒன்று தானா இல்லை வெவ்வேறா? லீலாவின் பொருள் பற்றும் 'நஞ்சு'வின் காதல்/காம பற்றும் அவ்வாறே என்னால் காண முடிகிறது.

லீலாவின் சோகத்தைக் கேட்டு உரப்பன் வருந்தியது அவளின் உண்மையான கஷ்டங்களை எண்ணி என்பதைவிட , அவன் அவள் துன்பத்துக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற தன்னிரக்கத்தாலே அதிகம் வருந்தினான். அதனாலே அவள் நாடகம் தெரிய ஆரம்பித்தபின் அவன் தன் இயலாமையிடம் விடுதலை அடைந்து, உதட்டில் ஒரு பும்முறுவல் பூத்தான்.  இது ஒரு ஆழ்மன நாடகம் என்றே எனக்குப்படுகிறது. இரு மனங்கள் தாங்கள் பேசி உறவாட சில செயல்களை அது நம்மேல் தன்னிச்சையாக செய்ய வைக்கிறதோ.

'நஞ்சு' காரில் விசும்பியதை ஒரு நாடகம் என்றும் அதற்குள் தான் ஒரு கதாபாத்திரம் என்றும் உணர்ந்த அவன், அவள் மேல் தீராக்  கோபம் கொண்டதும், அவளின் நினைவு அடிக்கடி வந்து சென்றதும், அவளை மறுபடியும் எதேச்சயாக  பார்க்க நேர்ந்து, அவளை துரத்தி அவன் தன் சந்தேகத்தை கேட்டு தெரிந்து முடித்து, அவளை தொட்டதும் அவள் தன் மார்மீது விழுந்ததும் ஒரு தற்செயலா. இல்லை ஆழ் மனக்கனவா.  அந்த கனவு நடந்ததனால் தன் எண்ணத்தை அவன் உணர்ந்து திரும்பி சென்றானா. இதில் யார் நஞ்சு?

மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக தினம் வரும் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு கலை பொக்கிஷமாகவே நான் உணர்கிறேன்.

 

சீட்டு - என் பார்வை

                                                                       சீட்டு - என் பார்வை


சீட்டு சிறுகதையை வாசிக்க கீழே உள்ள சுட்டியை தட்டவும். 
https://www.jeyamohan.in/131253/#.XrYh8RMzafU

பெண்-ஆண் உறவுகளின் சமரசங்களை உள்ளடக்கிய கதை. மனிதனுக்கு உணவும், உறக்கமும் நன்றாக கிடைத்த பின் அவன்/அவள் ஏங்குவது இந்த உறவுக்காகத்தான். இச்சிறுகதை  இரு அம்சங்களை மேலே தொட்டு அதன் ஊடே ஒரு பெரிய கலந்துரையாடலை தன்னுள் நிகழ்த்த இட்டுச் செல்கிறது.

உமையாளுக்கும் அழகப்பனுக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி அலுவலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் அதை தாங்களே பேசிக்கொள்ளவில்லை என்றாலும், அவர்களுக்கும் அது மனதிலே இருந்தது. கிட்டத்தட்ட இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது நிச்சயம். இந்த மாத சீட்டுப் பணத்தை உமையாள் எடுக்க வேண்டும் என்று நினைத்தாள். அழகப்பனோ நாராயணன் அதை எடுக்க போவதாக சொன்னான். ஒருவேளை சீட்டு ஏலத்தில், அவர் ரொம்ப கீழே இறங்கி கேட்டால் உமையாளுக்கு நஷ்டம்.

அழகப்பன் தன்னுடைய உயரதிகாரியை சந்தித்துவிட்டு வரும் வழியில் உமையாளும், நாராயணனும் சிறிது பேசிக் கொண்டு இருப்பதைப்  பார்த்து ஒரு விதமான மனச்சோர்வும், ஒவ்வாமையும் அடைகிறான். அது அவனை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு உலுக்கு உலுக்கியது. அவன் மனம் அந்த காட்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. உமையாள் அவனைத்தேடி அவன் வீட்டு வந்ததும், அவளுடன் அவன் உடல் ரீதியாக மிகவும் நெருக்கம் அடைந்த பின்னரே அவனால் சற்று நிம்மதி அடைய முடிந்தது.

சீட்டு பணம் தன் அண்ணண் மனைவியின் அப்பாவின் மருத்துவ செலவிற்கு தேவைப்பட்டதால் தான் இந்த மாதமே எடுக்க நினைத்தாள். ஆனால் அவள் அம்மா, தன மருமகளின் சகோதரர்கள் தான்  அவர்கள் அப்பாவுக்கு செலவு செய்ய வேண்டும், நாம் எதற்கு செல்வு செய்யணும் என்று சொன்னனதால், அந்த சீட்டு பணத்தை ராமச்சந்திரன் எடுப்பதாக முடிவாகியது.  அழகப்பனின் குடும்பத்திற்கு வேண்டியப்பட்டவர் ஒருவருக்கு  அவசரமாக பணம் தேவைபட்டதால் அவனின் அம்மா அதை உமையாளிடம் கேட்கச் சொல்லி அவனிடம் சொன்னாள். அவன் அதை உமையாளிடம் கேட்கும் போது, அவள் ராமச்சந்திரனிடம் சொல்லி விட்டதாக சொன்னதரற்கு, அவன் அவளை அவனிடம் 'நைசாக' பேசி சீட்டை தனக்கு விட்டுத்தரும்படி சொல்லச் சொன்னான்.

இங்கே இரு நுட்பமான ஆழமான மனித உறவுகளின் சமரசங்களை காண முடிகிறது. அவள் இன்னொருவரிடம் குழைந்து பேசுவதனால் மிகவும் ஒவ்வாமை கொண்ட அவன், இறுதியில் அவனே அவளிடம் அதை செய்யச் சொல்வதற்கான காரணத்தை ஆராய்ந்தால் மனித மனம் எல்லா  தருணங்களிலும் வெவ்வேறு வகையாக செயல்படுவதை காணலாம். அவன் முதலில் மனம் சோர்ந்தது, அவன் அவள் மேல் கொண்ட ஒரு வகை obsession என்றே எனக்கு தோன்றுகிறது. எங்கு அவள் தனக்கு கிடைக்காமலே போய் விடுவாளோ என்ற பயமும், தன்னால் அவளை கவரவே முடியாதோ என்ற அவநம்பிக்கையினாலே அவனால் நிம்மதி கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் உடலால் மிகவும் நெருங்கியபின் அவனுக்கு அது ஒரு மிக பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது. அவன் அவளை அவன் ஆட்கொள்ளும் ஒரு பொருளாகவே அவனால் உணர முடிந்தது.

எல்லா உறவுகளுக்கும் ஒரு சாமரம் இங்கே தேவை படுகிறது. முக்கியமாக ஆண் - பெண் உறவிற்கு. அவள் தனக்கு வேண்டிய காரியத்தை நைசாக சாதித்து கொள்ள நினைப்பதில் எந்த ஒரு குற்றமும் இல்லை என அவளை நினைக்க வைத்தது ஒரு சமூகத்தின் செயலே. அது மட்டும் தான் வழி என்று அவள் நினைப்பதும் ஒரு சமூக அவலச் சித்திரமே. அந்த சமரசத்தோடே நாம் வாழ கற்றுக் கொண்டு விடுகிறோம். நாட்கள் செல்ல செல்ல அது ஒரு சமரசம் இல்லை, அது தான் வாழ்க்கை முறை என்றும் நமக்கு பழகி விடுகிறது.

தன் அப்பாவிற்கு மகன் தான் செலவு செய்யணும், மகள் வீட்டார் செலவு செய்ய கூடாது என்று சொல்லும் ஒரு அம்மா.  தன்  குடும்ப கஷடத்துக்காக மருமகளிடம் பணம் கேட்டு பாரு என்று இன்னொரு அம்மா. இவர்கள் இருவருக்கும் இடையில் தான் இந்த சமூகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதை வெறும் குடும்பச் சிக்கலாக இல்லாமல் ஒரு சமூக சிக்கலாகவே எனக்குப் படுகிறது.

சற்றே யோசித்தால், இந்தக் குடும்ப அமைப்பில் தான் நாம் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒரு வேலை இந்த அமைப்பு தான் மனிதன் தானே அமைத்துக் கொண்ட ஒரு உச்ச நிலையான அமைப்பு. இதில் பல்வேறு சிக்கல்கள், இன்னல்கள் இருந்தாலும்  இந்த குடும்ப சமரசத்தில் தான் மனிதன் ஒரு வகையாக நிம்மதியாக வாழ முடிகிறதோ!

அன்புடன்,
பிரவின்