(2)
இன்று அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ AIயை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மனிதன் முதன் முதலில் தனது உணவு தேவைக்காக கல்லை கூராக்கி பயன்படுத்தியது முதல் இன்று உள்ள AI வரை, அனைத்தும் அவன் உருவாக்கிய பொருட்களே. இங்கே பயன்பாட்டுக்குக்காக உருவாக்கும் பொருட்களின் அடிப்படை விதிகளை நாம் மேலோட்டமாகா கடந்து சென்று விடுகிறோம். ஒரு ஸ்விட்ச் போட்டால் , ஏன் மின்விசிறி ஓடுகிறது போன்ற பல்வேறு அடிப்படைகள் நமக்கு தெரிந்திருந்தாலும் அதை பற்றி அதிகம் கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் அவை நம் அன்றாடத்தில் ஒரு அங்கமாக மாறி விடுகிறது. அப்படி மாறிய பின்னர் நம்மால் அதை பிரித்து பார்த்து சிந்தனை செய்ய முடிவதில்லை. இன்று நம் அன்றாடத்தில் ஒரு அங்கமாக மாறி கொண்டிருக்கும் AI க்கும் இதே நிலை தான்.
கல் ஈட்டி முதல் AIக்கு முன்னர் வரை மனிதன் உருவாக்கிய அனைத்து பொருட்களும், இயந்திரங்களும் deterministic கொள்கையின் வரையறைப்படியே செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு ஸ்விட்ச் போட்டால் , மின்விசிறி சுழலும் என்பது ஒரு இயற்பியலின் கொள்கைபடி நடந்து கொண்டிருக்கிறது. அதன் செயற்பாட்டை துல்லியமாக முன்கூட்டிய நம்மால் கணிக்க முடியும். ஒரு பொருள் என்ன வேலை செய்தாலும், அந்த வேலை ஏன் செய்கிறது என்ற கொள்கையை நம்மால் சொல்ல முடியும். நடைமுறையில் அப்படி கொள்கைகள் உருவான பின்னர் தான் பொருட்களை தயார் செய்கிறோம்.
AI என்பது இதற்கு சற்று மாற்றானது. முதலில் AI என்பதன் தமிழாக்கம் "செயற்கை நுண்ணறிவு" என்று வகுத்தால், AI மூலம் இயங்கும் ஒரு பொருளோ/இயந்திரமோ தானாக முடிவுகளை எடுத்து செயல்படும் என்று வரையறை செய்யலாம். AI க்கு முன்னர் வரை ஒரு பொருள் எந்த வேலை செய்கிறதோ அது மட்டும் தான் அதன் பயன்பாடு. அது தானாக முடிவுகளை எடுத்து செயல்படாது. அதனால் தான் அவற்றை deterministic கொள்கையின் மூலம் உருவானவை என்று சொல்கிறோம்.
அனைத்து பொருட்களும் இந்த "முடிவெடுப்பது" என்ற வேலையை தான் செய்கின்றன. ஆனால் அதற்கான programmes அந்த பொருட்களின் மென்பொருளில் ஏற்கனேவே இருக்கும். அதன் மூலம் தான் அந்த பொருளே செயல்படும். இங்கு சுயமாக "முடிவெடுத்தல்" என்பது இல்லை. அது பங்கு சந்தை செயலிகளாக இருந்தாலும், விமான டிக்கெட் செயலிகளாக இருந்தாலும். உலகத்தில் உள்ள அனைத்து செயலிகளும் அதில் பொருத்தி உள்ள மென் பொருளின் மூலமே deterministic ஆக செயல்படுகிறது. ஒரு கல் ஈட்டியும் இந்த அதி நுட்ப செயலிகளும் ஒரே கொள்கையின் படி செயல்படுகிறது. அது deterministic கொள்கை.
இங்கிருந்து தான் நாம் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்று கொண்டிருக்கிறோம். probabilistic கொள்கை அல்லது நிகழ்தகவின் கொள்கை. இந்த நிகழ்த்தவு என்பதை நான் "கடவுளின் கை" என்று வரையறை செய்வேன். ஒட்டு மொத்த பிரபஞ்சமே ஒரு நிகழ்தகவின் வெளிப்பாடே. இந்த நொடியில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோடான கோடி நிகழ்தகவின் ஒரு புள்ளி மட்டுமே. இல்லாத இருப்புகளினாலேயே இருப்பது பொருள்படுகின்றது. இதை நான் power of probability என்று சொல்வேன். ஒரு வேளை இந்த நிகழ்தகவு தான் உயிர் என்னும் கருதுகோளை உருவாக்கியதோ?
மனிதனின் சிந்தனையை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கூறுவது போல மூன்று வகையாக பிரிக்கலாம். தர்க்கம் (Logic), கற்பனை (Imagination), உள்ளுணர்வு (intuition). நம் அனைத்து சிந்தனைகளும் இவற்றின் ஊடும் பாவுமே. தர்க்கத்திலிருந்து மேலெழுந்து கற்பனைக்கும், அங்கிருந்து உள்ளுணர்விற்கும், இப்படி ஒன்றிலின்று மற்றொன்றிற்கு நம் சிந்தனை சென்று கொண்டே இருக்கிறது. இப்படி நாம் சிந்திப்பதும் ஏதோ ஒரு நிகழ்தகவின் ஒரு புள்ளி மட்டுமே. தர்க்கரீதியாக நாம் சிந்தனை செய்தால் அதில் ஒரு நேர்கோடு இருக்கும். ஆனால் ஒவ்வொரு தர்க்கமும் அது முதன் முதலில் உருவாவதற்கு கற்பனையாலோ, உள்ளுணர்வாலோ தான் சாத்திய பட்டிருக்கும். எந்த ஒரு அறிவியல் தர்க்கமும் இதில் அடங்கும். ஒரு அறிவியலாளர் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கொள்கையினை கண்டு பிடிக்கிறார். அது Faraday வின் ElectroMagnetic Theory ஆனாலும் சரி. ஒரு சிந்தனையை நாம் வரையறுத்து அதற்கு விதிகளை அளித்து அதனை "தர்க்கபடுத்திகிறோம்". மனிதன் கற்காலம் முதல் இன்று வரை செய்து வருவது இந்த "தர்க்கபடுத்துவதை" தான்.
தர்க்கப்படுத்துவதற்கு முதன்மையான கருவி என்பது கணிதம். நம்முடைய அனைத்து அறிவியல் கோட்பாடுகளும் கணிதத்தின் மேல் அல்லது கணித விதிகளின் மூலமே செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இயற்கையை நாம் வரையறை செய்யும் பொருட்டு உருவாக்கிய ஒரு கருவி. நான் கணிதத்தையும் ஒரு மொழி என்றே குறிப்பிடுவேன். மொழியின் சுவையும் எண்களில் புதைந்து உள்ள ஆழத்தையும் உணர்பவர்களுக்கு நான் ஏன் கணிதத்தை மொழி என்கிறேன் என்பது புரியும். பிரபஞ்சம் உருவாக்கிய முதல் மொழி அது. அது தன்னை தான் உணரும் பொருட்டு அடைந்த மொழி.
இன்னொரு தளத்தில் மனிதன் சிந்திப்பதற்கும், அவனையுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் "மொழி" உருவானது. நம் ஆழ்மனதில் ஒவ்வொரு சொல்லுக்குமான உணர்வினை நாம் சேர்த்து வைத்திருக்கிறோம். அந்த சொல்லின் வெளிப்பாடாக உணர்வும், அந்த உணர்வின் வெளிப்பாடாக சொல்லும் செயல்படுகிறது. நாம் இயற்கையிலிருந்து மொழியை கற்பனை மூலம் உருவாக்கினோம். நம்முடைய சிந்தனைக்கு பயன்படுவது நம்முடைய புலன்கள். புலன்கள் மூலம் நாம் அறிந்தவற்றை நம் கற்பனை மீதேற்றி மொழியை உருவாக்குகிறோம்.
நம் சிந்தனையின் அடிப்படை புலன்கள். புலன்கள் இயற்கையில் உள்ளவற்றை உயிரியல் தேவைக்காக அறியும் பொருட்டு உருவானவை. தீயை தொட்டால் சுடும் என்று மொழி உருவாவதற்கு முன்பே நம் புலன்கள் அறியும். பின்பு சுடுதல் என்ற சொல்லின் மேல் அந்த உணர்வினை ஏற்றினோம். இப்படி நம் சிந்தனையை புலன்கள் கட்டுப்படுத்தினால், அதற்கு அப்பாற்பட்ட சிந்தனையும் உண்டு. அதை 'உள்ளுணர்வு' என்கிறோம். கற்பனை இவ்விரண்டிற்கும் இடையில் உள்ளது.
இந்த கற்பனையும், உள்ளுணர்வும் ஏன் நமக்கு ஏற்படுகிறது என்று நம்மால் அறுதியிட்டு கூறிவிட முடியாது. இந்த பிரபஞ்ச நிகழ்தகவின் ஏதோ ஒரு புள்ளியில் அது நடைபெறுகிறது. அப்படி என்றால் அது எந்த ஒரு தர்க்கத்திற்கும் அடங்காது. அதனை ஒரு சமன்பாட்டையோ சூத்திரத்தையோ கொண்டு அடுத்த உள்ளுணர்வு இந்த நேரத்தில் இவருக்கு இது ஏற்படும் என்று கூறி விட முடியாது. மாறாக நாம் புலன்களின் மூலம் அறிப்படுவது ஒரு எல்லைக்குள் உள்ளது. அதிலும் அப்பொழுது ஒருவர் இருக்கும் சூழ்நிலையும், அவருக்குள் ஓடும் மற்ற எண்ணங்களையும் வைத்தே அவர் ஒரு புலன் உணர்வுக்கு என்ன எதிர்வினை செய்கிறார் என்று அறிய முடியும். ஒருவர் புல்வெளிகளை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடையலாம். ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான பசி இருந்தால் அதனை அவரால் ரசிக்க முடியாது.
இப்படி எந்த ஒரு உணர்வை அடைதலும் ஒரு நிகழ்தகவின் வாய்ப்பே. ஆனால் இந்த நிகழ்த்தகவு புலங்களினால் ஏற்படும் எண்ணங்களுக்கு கொஞ்சம் அதிகமாக நாம் வரையறை செய்யலாம். இவற்றையே நாம் தர்க்கமாக கொள்கிறோம். வெயில் சுடும். மழை குளிரும் போன்ற பொதுவான எண்ணங்களுக்கு இதுவே காரணம்.
No comments:
Post a Comment