Thursday, 9 July 2020

முதலாமன் - கடிதம்

                                                           முதலாமன் - கடிதம்

அன்புள்ள ஜெ,

     'முதலாமன்' சிறுகதையில் வரும் காளியன் போன்றோரால் ஆனது தான் இந்த உலகு. கதையில் வரும் கருமலைப்பட்சி ஒரு உவமையாகவே வருகிறது. அதனுடன் நாம் எதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மனிதர்கள் தன்னை மீறிய நிகழ்வுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள்  என்பதிலேயே தீர்மானிக்கப்படுகிறார்கள். எல்லா பெரும் போராட்டங்களிலும் தன்னை முன்னிறுத்தி சென்றவர்களே வரலாற்றின் 'நடுகல்' நாயகர்களாக உள்ளார்கள்.
     சராசரி மனிதர்கள் அவருக்கு ஒரு நடுகல் (ஒரு உவமைக்காக) மட்டுமே நட முடியும். அதனால் தான் அவர்கள் சராசரி மனிதர்கள். அதில் அவர்கள் மேல் எந்தப் பிழையும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களால் அவ்வளவு தான் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். எந்த ஒரு இடர் வரும் போதும் தன்னிலை மறந்து அனிச்சையாக பொது நலத்தில் ஈடுபடுபவர்களால் கட்டமைக்கப்பட்டது தான் எந்த ஒரு சமூகமும், அதன் அறமும்.
    கதையில் மூன்று படிமங்கள் அல்லது விவாதப் பொருள்கள் உள்ளன.
   1. காடு மனிதனால் தொடர்ந்து சுரண்டப்படுவதால் 'கருமலைப்பட்சி' போன்ற தொன்மங்களினால் , அசுரண்டலைக்  குறைக்கும் பொருட்டு கூறப்படுகிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு நீதி உள்ளதை பாம்பின் 'கிழிந்த நாக்குகள்' உட்கதை கொண்டு உணரலாம். தனி உயிரின் தேவைக்கு மேல் எந்த ஒரு சுரண்டலும் அறத்தை மீறிய செயலாகும்.
   2. மனிதன் எவ்வளவு தான் தன் மூத்தோரை வெறுத்தாலும், தன் குடும்பம், தன்  ரத்தம் என்று வரும்  போது, அவன் அதை மீறி எதுவும் செய்ய முடிவதில்லை. சாகக்கிடக்கும் பாட்டன் எப்படா போவான் என்று நினைப்பவனும், அவனை ஊருக்கு பலி கொடுக்க விடுவதில்லை. இதில் மனிதன் தான் கட்டமைத்த குடும்ப முறை ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறியலாம்.
   3. தன்னையும், தன் ரத்தத்தையும் விட பொது அறத்திற்காக முதலில் நின்று மாண்டவர்களும், மீண்டவர்களும் எழுப்பும் அறக்கேள்விகள் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்த்து விடுகிறது.

   இன்று நாம் அறிந்திருக்கும் அத்தனைத்  துறை வளர்ச்சியினிலும் காளியனைப் பார்க்கலாம். அறிவியல், மருத்துவம் முதலிய அத்தனை கட்டமைப்புகளிலும் முதலில் நின்று பலிகடா ஆனவர்களால்தான் அது வளர்ந்து வந்துள்ளது. ஏன், நாம் இன்று இருக்கும் கால கட்டத்திலே கூட, 'கொரோனாவிற்கு' தடுப்பு கண்டுபிடிப்பதில் பல 'காளியன்'கள் பலியாகலாம்.
   காளியன் ஒரு காந்தியின் படிமம் என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி




Thursday, 25 June 2020

சிறகு - கடிதம்

                                                 சிறகு - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
   வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்திற்காக நம்மை அறியாமலியே நாம் காத்திருப்போம். அந்த தருணம் வரும் போது, அதன் 'சிறகு'கள் கொண்டு நாம் பறந்து செல்ல முயல்வோம். ஆனந்தவல்லியின் அப்படிப்பட்ட தருணம் அவள் 'சைக்கிள்' கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்டது. அவள் அதை ஒரு சிறகாகப் பயன்படுத்தி தன்னை, வாழ்க்கையின் அடித்தள பகுதியிலிருந்து மீட்டெடுத்து பறந்து செல்கிறாள்.
   சங்கு போன்ற பண்ணையார்களின் அடக்கும் அதிகாரமும், ஆனந்தவல்லி போன்ற எளிய மக்களின் அடங்கும் குணமும், இதில் யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறர்கள் என்பதே மிகவும் முக்கியம். பெரும்பாலான சமயங்களில் சங்கு போன்றவர்களே வெல்கிறார்கள். மிகவும் சொற்ப சமயங்களிலே ஆனந்தவல்லி போன்ற எளியோர் தங்களின் மன உறுதியாலும் தீராத கனவாலும், அனைத்து தடைகளையும் மீறி முன்னகர்ந்து செல்கிறார்கள்.
   அப்படி அவர்கள் செல்லும்போது தங்கள் பாதையில் ஒரு சில சமரசங்களை செய்து கொள்கிறார்கள். அது அவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல. தன்  மீது தொடுக்கப்பட்ட அத்துமீறல்களிலிருந்து எப்படியாவது மீள அவர்கள் செய்யும் எதிர்வினையின் ஒரு சாரமே ஆகும். அதனாலேயே  'சிறகு' கதையின் கதை சொல்லியால், பெண்கள் செய்யும் சமரசத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேலுமொரு காரணம் நாம் வாழும் 'patriarchal' சமூகம். நாம் நம் பெண்களை  தெய்வமாக அல்லது கௌரவப் பொருளாக மட்டுமே நினைப்பது. அவளை ஒரு சக மனிதராக நினைப்பதையே ஒரு முற்போக்குச் செயலாகக்  கொண்டிருந்த காலம் நம்மில் உள்ளது.
  ஆனந்தவல்லியின் 'சிறகு', சக்குவின் 'சைக்கிள்'.

அன்புடன்,
பிரவின்   

Sunday, 21 June 2020

ஆமை - கடிதம்

                                                            ஆமை - கடிதம் 

அன்புள்ள ஜெ,
    தங்களின் 'ஆமை' சிறுகதை வாசித்தேன். இரண்டு parallel கோடுகள் கதையில் உள்ளதாக  உணர்கிறேன். தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மற்றும் பனையின் வீழ்ச்சி. இரண்டுக்கும் நேரடியான தொடர்புகள் இல்லை எனினும், எப்படி பனை மக்களின் ஒரு வாழ்வாதாரமாகவும், எளியோரின் உணவு, உடை, உறைவிடமாகவும் இருந்துள்ளது என்பதை அறிகையில், நாம் இன்று பனையின் மகத்துவத்துவதை அறிய கூட முற்படுவதில்லை என்றே தோன்றுகிறது.
   ஆயிரமாயிரம் கதைகள் வந்தாலும் சிந்திய ரத்தத்தையும், பட்ட வலியையும் எழுதி தீர்த்து விட முடியாது. கதையில் அனக்கன் பாட்டியைப் பற்றியும், அந்த கால கட்டத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்ட விதத்தையும் வாசிக்கையில் புதிதாக படிப்பது போலவே உள்ளது. ஒவ்வொரு வலியும், ஒவ்வொரு ஒடுக்கப்படலும் வெவ்வேறே. அதை வெறும் பொதுச் சொல்லோடு குறிப்பிட்டு, அதன் மொத்த எடையையும் அந்த சொல்லிற்குள் புகட்டி விட முடியாது. 
    பனை அன்றைய மக்களின் இன்றியமையாத பொருளாதார பொருளாக இருந்துள்ளது. பனையின் அடி  முதல், நுனி வரை எல்லாவற்றயும் நாம் பயன்படுத்தி உள்ளோம். பனையின் 'கொரம்பை' எப்படி நம் தலைக்கு மேல் கூரையாக இருந்தது, எப்படி அது நம்மை அத்தனை விதமான மழையிலும் (முதல் முறையாக இத்தனை மழையைக் கேள்விப்படுகிறேன்) காத்தது, எப்படி அது நம்மில் ஒரு பிரிவற்ற பொருளாக ஆனது என்பதை அறிய முடிகிறது.  அனக்கன் பாட்டி கொரம்பையிலே வாழ்ந்து, மடிந்தாள். அது அவளின் கூடாகவும், ஆமையின் ஓடாகவும் இருந்தது. அவளுடைய வாழ்நாளே கொரம்பயின் கீழ். அவளின் அனைத்து மனித உணர்வுகளுக்கும் கொரம்பையே சாட்சி. அது அவள் உடலின் ஒரு அங்கம். சாவும் போதும் அதனுடன் செத்தாள். அந்த பனையால் ஆன கொரம்பை இல்லையெனில் அவள் என்றோ மடிந்திருப்பாள். அது தான் அவளை வாழ வைத்தது. 
    இப்பேற்பட்ட பனையை மீட்டெடுப்பதற்காக தன்னார்வலர்கள் இருப்பதைக் கண்டு மனம் ஒரு சிறு அமைதி அடைகிறது. கதையில் வரும் ராஜேந்திரனைப் போல பனை மீட்டெடுப்பில் உள்ளவர்களால், அனக்கன் பாட்டி போன்ற எண்ணற்ற மக்களை அவர்கள்  மீட்டெடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பனை தவிர வேறு எதுவும்  முழுவதுமாக பூர்த்தி செய்வதில்லை. அதனாலே பனையின் அடியில் தெய்வங்கள் உள்ளன போலும்.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி 
    
    

சுக்ரர் - கடிதம்

                                             சுக்ரர் - கடிதம்

அன்புள்ள ஜெ,

      'சுக்ரர்' சிறுகதையில் வரும் 'அரிகிருஷ்ணன்' போலவே தான் நீங்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. கற்பனையின் ஊற்றாக உங்களின் கதைகளில் எத்தனை எத்தனை மனிதர்கள். இவ்வளவு மனிதர்களையும் நிகழ்வுகளையும் நினைவு கூர்வதும், அதே சமயம் அதில், புனைவு மனிதர்கள் யார், நிஜ மனிதர்கள் யார், புனைவு சம்பவங்கள் என்ன, உண்மை சம்பவங்கள் என்ன என்பதைப் பிரித்து மனதில் வைத்துக் கொள்வது என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
    அரிகிருஷ்ணன் சொல்வது போல "அவங்க நூறுவிஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கிறதை நான் ஒரே விஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கேன், அவ்ளவுதான்." , நீங்களும் அப்படித்தான் போல என்றே நினைக்கிறேன். அது உங்களுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு இலக்கியத்திற்கும், கருத்து செயல்பாட்டிற்கும் நல்லது என நினைக்கிறேன். உங்களின் மனக் குவியலின் கூர்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த அளவு குவியல் வேண்டுமெனில், ஒரு தீராத கட்டுக்கடங்காத ஒரு மனச் சிதறல் எப்பொழுதும் உங்களிடம் இருக்குமென நினைக்கிறேன். இது ஒரு வகையான உணர்வு மட்டுமே. அறிவது கடினம்.
    உங்களின் ஒரு வீடியோவில் (ஜெயகாந்தன் நினைவேந்தல் என்று நினைக்கிறேன்), நீங்கள் ஜெயகாந்தன் முன் அமர்ந்து பேசியதை பற்றி சொன்னீர்கள். அதில், "நான் ஒரு வார்த்தையை கூட மறக்க மாட்டேன்" என்று நீங்கள் கூறியதை நான் அப்போது மிகவும் ஆச்சரியமாக பார்த்தேன். பிறகு உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பொழுது அது உங்களுக்கு இயல்பானது என்றே தோன்றியது.
    கதையின் இறுதியில் அரிகிருஷ்ணன் "தம்பி, இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?" என்று கிரிமினல்களின் வாழ்க்கை அறிதல் என்ற ஒன்றை மட்டுமே தன் வாழ்நாளில் செய்து கொண்டிருந்த அவருக்கும், இலக்கியம் மட்டுமே வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. நீங்கள் தான் அவர்.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி 

Friday, 12 June 2020

லட்சுமியும் பார்வதியும் - கடிதம்

                                                       

            லட்சுமியும் பார்வதியும் - கடிதம் 



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

         'லட்சுமியும் பார்வதியும்' சிறுகதை வாசித்தேன். பெருவியப்பாக இருந்தது. எந்த பேரரசரும் (எனக்கு தெரிந்த வரையில்) சிந்திக்காததை அல்லது நிறைவேற்றாததை, ஒரு 13 வயது பெண் (பார்வதி பாய், அரச படியில் உள்ளவர்) இவ்வளவு நுட்பமாக  ஒரு அரசை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று விளக்கியது வியப்பாக இருந்தது. இங்கே நாம் மார்தட்டிக் கொள்ளும் அரசர்கள் புகழின் இடையில் ஒரு மாபெரும் வெளிச்சமாக தோன்றுகிறார் ராணி பார்வதி பாய்.

        மன்னனை அமைச்சன் மிரட்டியது எனக்கு புதிதாக இருந்தது. மன்னன் என்றால் ஒரு பிம்பத்தை நாம் எப்போதுமே மனதில் நிலை நிறுத்திக் கொள்கிறோம். வீரன், சூரன், அனைத்தையும் வென்றவன், அழகன், கம்பீரமானவன்  போன்றவற்றால் அவனை ஒரு more than life மனிதனாகவே நாம் அறிகிறோம். ஆனால் ராஜராஜ வர்மா தன் அமைச்சனால் மிரட்டப்படுவதும் அப்படி அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாடுகளை கைப்பற்றிய பிரிட்டிசாரின் பேரில் அவர்கள் செய்த கொடுமைகளுக்கு இதுவும் ஒரு சாட்சி. 

       ராணி லட்சுமியும், ராணி பார்வதியும் பாடும் பாட்டை நான் இறுதியில் வாய்விட்டு பாடிக்கொண்டே போனேன். அதன் அர்த்தம் முழுமையாக புரியா விட்டாலும், அதன் ராகம் எனக்கு கிட்டியது. அது ஒரு ஆனந்தப் பயணம். காயலில் தனிமையில் இரவில் இரு உள்ளங்களுடம் ஓராயிரம் நட்சத்திரங்களும் அவர்களோடு சேர்ந்து பாடியிருக்கும்.

அன்புடன்,
பிரவின் 
தர்மபுரி  

Sunday, 24 May 2020

தேனீ - கடிதம்

                                                            தேனீ - கடிதம்

    நினைவு தெரிந்த நாள் முதல் உழைப்பு மட்டுமே செய்து முதுமை அடைந்து இறக்கும் பல்வேறு மனிதர்கள் நம்முடைய முந்தைய சமுதாயத்தில் நிறையே பேர் இருந்திருப்பார்கள். இதற்கு முக்கிய காரணமாக அந்த கால கட்டத்தில், வருமானம் பெற பலவகையான தொழில்கள் இல்லை. பெரும்பாலும் குடும்ப தொழிலை நம்பியே பிள்ளைகள் பிறக்கிறார்கள். இன்னொன்று, நுகர்வு கலாச்சாரம் என்பது மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை. இன்றுள்ளவர்களில், அந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்வது சற்றே கடினமானது என்றே நினைக்கிறேன். "எனக்கு என்ன கிடைச்சுதுன்னு ஒருத்தன் கணக்கு பாக்க ஆரம்பிச்சா அதோட அவன் கை குறுகிரும். மனசு மூடிரும்."  என்ற வரிகளின் ஆழம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
   
   தேனீ போல கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறார் சம்முகத்தின் அப்பா. வெறும் மூன்று மணி நேரம் தூக்கம். மூன்று வயது முதல் முதுமை காலத்தில் பக்கவாதம் வரும் வரை இதே பிழைப்பு தான். தனக்குப் பிடித்த 'திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை' அவர்களின் ஒரு கச்சேரியை கூட அவர் நேரில் சென்று பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் மற்றவர்கள் கேட்டு வந்து அதை பத்தி பேசும் போதே, அந்த வாசிப்பின் ராகங்களையும் இசையையும் அவரால் உணர முடிந்தது. இசை என்பது மனதின் உள்ளிருப்பது, அது வெளியில் இல்லை என்றே தோன்றுகிறது. இது அனைத்து கலைக்கும் பொருந்தும். கலையின் ஆக்கத்திற்கு மட்டுமில்லாமல், அதன் உள்வாங்களுக்கும் கூட இது பொருந்துவது போல் உள்ளது.

   பிள்ளை அவர்களின் இசையை கேட்க (அவர் இறந்த பல வருடங்கள் கழித்து) சம்முகம் பிள்ளை தன் அப்பாவுடன  சுசீந்திரம் சென்று அங்கே உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் சென்றமர்ந்தனர். அங்குள்ள தூண்களிலும், சிற்பங்களிலும் அவர் இசையைக் கேட்க ஆரம்பித்து, ஒரு முழு கச்சேரியை கேட்டு முடித்தது, பெரும் வியப்பாக உள்ளது. இசை அவரின் மூச்சில் ஒன்றாக கலந்தது, அதன் மேல் அவருக்கு அலாதி பிரியமும், அதை அனுபவிக்க அவர் காலம் முழுதாகவும் தவம் செய்து கொண்டே இருந்தார். அந்த தவத்தில், இசை தன்னை மீறி தன்னிடமிருந்து தோன்றி தனக்கு மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. அவர் இசையாகிய தருணம் அது.

   மிகப்பெரும் தவங்கள் கிட்டிய  பொழுது அதற்கு அப்பால் வாழ்வில் பொருள் ஏதும் இல்லாமல் மனம் தன்னைத்தானே சிதைத்து கொள்கிறதோ என்று தோன்றுகிறது. அந்த சிதைவின்  தொடக்கமே மரணமாக முடிகிறது.

 
   

Wednesday, 20 May 2020

முதுநாவல் - கடிதம்

                                                  முதுநாவல் - கடிதம்

   'முதுநாவல்' சிறுகதையில் வரும் இடும்பன் நாராயணனும், தலைக்கெட்டு காதரும் ஓர் மனம் கொண்ட இரண்டு உடல்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.. இருவருக்கும் வித்தியாசமே இல்லை. உலகுக்கு ஒருவன் ரவுடி, இன்னொருவன் போலீஸ். ஆனால், அவர்கள் ஒரே ஒருவர் தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போர் புரிந்திருந்த போது தான் அதை தாங்களே உணர்திருப்பர்.

   இடும்பன், காதர், இருவரின் வாழ்க்கை சித்தரிப்புகள் நேர்த்தியாக இருந்தன. அவற்றின் ஊடாக அவர்கள் புரிந்த சண்டையை பார்க்க முடிகிறது. 'தான்' என்ற மனநிலை கொண்ட இருவரும், அயராது சண்டை செய்யும் போது, அது அவ்விருவரிடமிருந்தும் விலகுகிறது. பாறசாலை சந்தையில் நடந்த அந்த கடும் போரில், அவர்கள் மாறி மாறி அடித்துக் கொண்டு அதனை கண்டடைந்தனர். இரு பெரும் மலைகளின் போர் போல் இருந்தது அவர்களின் யுத்தம்.

   போரின் உக்கிரதைப் பாடும் 'தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்' சந்தைப்பாடல்  உண்மையில் புலிக்கும், கழுதைப்புலிக்கும் நடக்கும் யுத்தம் போன்றே உள்ளன. இங்கே அவர்கள் 'அடியடி' என அடித்துக் கொண்டும், சமயங்களில் இருவரும் சேர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டும், ஆயுதங்களை இருவரும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தாமல் இருந்ததும் வியப்பாகவே இருந்தது. அவர்கள் போரிட்டது தங்களுக்காக, வேறு யாருக்காகவும் இல்லை. இதில் வெல்வதும், வீழ்வதும் அவர்களுக்கு சமமே.

   இருவரும் ஓயாமல் அடித்துக் கொண்டு அந்த முதுநாவல் மரத்தடியில் வந்தமர்ந்த போது, முதியவன் ஒருவனிடம் நீர் வாங்கி இடும்பன் குடித்து பிறகு காதருக்கு கொடுத்ததும், காதரை இடும்பன் கட்டி இழுத்து வர ஊர்மக்கள் அவன் மேல் எச்சில் துப்பியதைக் கண்டு இடும்பன் கோபம் கொண்டதும், இருவரும் மற்றோரின் மேல் தாங்கள் வைத்திருந்த மரியாதையைக் காட்டுவதாக உள்ளது. இது, உண்மையில் இவர்கள் இருவரும் தான் மூடர்களா அல்லது சுற்றிக் கூடி இச்சண்டையை வேடிக்கைப் பார்த்த மக்கள் தான் மூடர்களா என்ற சந்தேகமும் எழுகிறது.

   சண்டை முடிந்து, காதர் ஜெயிலிலும், இடும்பன் மலையிலும் வாழ்ந்த போதும், அவர்கள் இருவரும் அந்தச் சண்டைக்குப் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் பேச நினைத்த அத்தனை வார்த்தைகளும், அவர்களின் 'அடியடி'களே பேசி ஓய்ந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு பேச ஒன்றுமே இல்லை. அவர்களின் மனம் அந்த போரினால் ஆழ்ந்த அமைதி அடைந்தது. இடும்பன் ஊமைச்சாமி ஆனதும், காதர் அந்த முதுநாவல் மரத்தடியில் சூஃபி ஆனதும் மனித மனங்களின்  இரு எதிர் எல்லைகளின் வெளிப்பாடாக உள்ளது. ஒரு  எல்லையிலிருந்து மற்றோரு எல்லைக்கு செல்ல, ஒரு வினாடியும் ஆகலாம், அல்லது ஒரு வாழ்க்கை முழுதாக வாழ்ந்தாலும் முடியாமலும் போகலாம்.

   இம்மாதிரியான மனித மனங்களின் போர்களை அந்த முதுநாவல் மரம் காலந்தொட்டு பார்த்துக்கொண்டே இருக்கிறது. போர்களின் முறையில் மாற்றம் வந்தாலும், போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த முதுநாவல் மரத்தடியில் இருவருக்கும் நீர் தந்த அந்த வயதானவருக்கும் அந்த முதுநாவல் மரத்திற்கும் வேறுபாடே இல்லை. அது  நிழல் தந்தது, அவர் நீர் தந்தார், போருக்கு. அல்லது போர் முடிவிற்கு!