Wednesday, 20 May 2020

முதுநாவல் - கடிதம்

                                                  முதுநாவல் - கடிதம்

   'முதுநாவல்' சிறுகதையில் வரும் இடும்பன் நாராயணனும், தலைக்கெட்டு காதரும் ஓர் மனம் கொண்ட இரண்டு உடல்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.. இருவருக்கும் வித்தியாசமே இல்லை. உலகுக்கு ஒருவன் ரவுடி, இன்னொருவன் போலீஸ். ஆனால், அவர்கள் ஒரே ஒருவர் தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போர் புரிந்திருந்த போது தான் அதை தாங்களே உணர்திருப்பர்.

   இடும்பன், காதர், இருவரின் வாழ்க்கை சித்தரிப்புகள் நேர்த்தியாக இருந்தன. அவற்றின் ஊடாக அவர்கள் புரிந்த சண்டையை பார்க்க முடிகிறது. 'தான்' என்ற மனநிலை கொண்ட இருவரும், அயராது சண்டை செய்யும் போது, அது அவ்விருவரிடமிருந்தும் விலகுகிறது. பாறசாலை சந்தையில் நடந்த அந்த கடும் போரில், அவர்கள் மாறி மாறி அடித்துக் கொண்டு அதனை கண்டடைந்தனர். இரு பெரும் மலைகளின் போர் போல் இருந்தது அவர்களின் யுத்தம்.

   போரின் உக்கிரதைப் பாடும் 'தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்' சந்தைப்பாடல்  உண்மையில் புலிக்கும், கழுதைப்புலிக்கும் நடக்கும் யுத்தம் போன்றே உள்ளன. இங்கே அவர்கள் 'அடியடி' என அடித்துக் கொண்டும், சமயங்களில் இருவரும் சேர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டும், ஆயுதங்களை இருவரும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தாமல் இருந்ததும் வியப்பாகவே இருந்தது. அவர்கள் போரிட்டது தங்களுக்காக, வேறு யாருக்காகவும் இல்லை. இதில் வெல்வதும், வீழ்வதும் அவர்களுக்கு சமமே.

   இருவரும் ஓயாமல் அடித்துக் கொண்டு அந்த முதுநாவல் மரத்தடியில் வந்தமர்ந்த போது, முதியவன் ஒருவனிடம் நீர் வாங்கி இடும்பன் குடித்து பிறகு காதருக்கு கொடுத்ததும், காதரை இடும்பன் கட்டி இழுத்து வர ஊர்மக்கள் அவன் மேல் எச்சில் துப்பியதைக் கண்டு இடும்பன் கோபம் கொண்டதும், இருவரும் மற்றோரின் மேல் தாங்கள் வைத்திருந்த மரியாதையைக் காட்டுவதாக உள்ளது. இது, உண்மையில் இவர்கள் இருவரும் தான் மூடர்களா அல்லது சுற்றிக் கூடி இச்சண்டையை வேடிக்கைப் பார்த்த மக்கள் தான் மூடர்களா என்ற சந்தேகமும் எழுகிறது.

   சண்டை முடிந்து, காதர் ஜெயிலிலும், இடும்பன் மலையிலும் வாழ்ந்த போதும், அவர்கள் இருவரும் அந்தச் சண்டைக்குப் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் பேச நினைத்த அத்தனை வார்த்தைகளும், அவர்களின் 'அடியடி'களே பேசி ஓய்ந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு பேச ஒன்றுமே இல்லை. அவர்களின் மனம் அந்த போரினால் ஆழ்ந்த அமைதி அடைந்தது. இடும்பன் ஊமைச்சாமி ஆனதும், காதர் அந்த முதுநாவல் மரத்தடியில் சூஃபி ஆனதும் மனித மனங்களின்  இரு எதிர் எல்லைகளின் வெளிப்பாடாக உள்ளது. ஒரு  எல்லையிலிருந்து மற்றோரு எல்லைக்கு செல்ல, ஒரு வினாடியும் ஆகலாம், அல்லது ஒரு வாழ்க்கை முழுதாக வாழ்ந்தாலும் முடியாமலும் போகலாம்.

   இம்மாதிரியான மனித மனங்களின் போர்களை அந்த முதுநாவல் மரம் காலந்தொட்டு பார்த்துக்கொண்டே இருக்கிறது. போர்களின் முறையில் மாற்றம் வந்தாலும், போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த முதுநாவல் மரத்தடியில் இருவருக்கும் நீர் தந்த அந்த வயதானவருக்கும் அந்த முதுநாவல் மரத்திற்கும் வேறுபாடே இல்லை. அது  நிழல் தந்தது, அவர் நீர் தந்தார், போருக்கு. அல்லது போர் முடிவிற்கு!

No comments:

Post a Comment