Sunday, 30 April 2023

மகாராஷ்டிரா பயணம் (5)



செதுக்கப்பட்ட சிலைகளும், சிலையாகிக்கொண்டிருக்கும் கற்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலையின் வளைவுகளில் நெளிந்து உள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. கீழிருந்து மேலே துள்ளி மீண்டும் கீழே அமர்ந்தேன். குலுங்களின் அசைவில் கண்கள் திறந்து பார்த்தேன். அஜந்தாவிற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காலை ஆறு மணிக்கு அஜந்தாவிற்கு அவுரங்காபாத்தில் இருந்து பஸ் ஏறினோம். 

காலையில் குளிர் இதமாக இருந்தது. பேருந்தில் ஒன்றிரண்டு இருக்கைகள் தவிர அனைத்திலும் ஆட்கள் இருந்தனர். நடுவில் உள்ள ஒரு ஊரின் பேருந்து நிலையத்தில் பஸ் நின்ற போது, இறங்கி டீ குடித்தோம். சூரியன் காலைக் கரங்களை நீட்டிக் கொண்டிருந்தான். இந்த பயணம் முழுவதும், இரண்டு இரவுகள் ஒரே இடத்தில் தங்கியதில்லை. சில நேரம், காலைப் பயணத்தில் இருக்கும் போது, திசைகளை காட்ட வேண்டியே, சூரியன் உதிப்பது போல் தோன்றும்.

எட்டு மணிக்கு அஜந்தா குகைகள் செல்லும் வாசல் முன் பேருந்தில் இருந்து இறங்கினோம். பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே கடைகளை திறந்து கொண்டிருந்தனர். யாரிடமும் ஏதாவது கேட்டால், அவர்கள் பதில் சொல்லி விட்டு, உடனே அவர்களின் கடை எண்ணைச் சொல்லி, திரும்ப வரும் வழியில், கடையினை பார்த்து விட்டு போகும்படி சொல்வர். குறிப்பாக கடை எண்ணை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளும்படி கூறினர். அங்கு ஒரு சிறு கடையில் வழக்கம் போல் வடாபாவ் சாப்பிட்டோம். ஒரு தண்ணீர் போத்தல் வாங்கிக் கொண்டு குகைகளுக்கருகில் கூட்டி செல்லும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தோம்.

ஒரு பஸ் வந்து நின்றது. அதன் முன், பயணச்சீட்டு வாங்கி உள்ளே செல்ல வரிசையாக நின்றிருந்தோம். கூட்டம் அதிகமாக இல்லை. எங்களுக்கு முன்னே மூன்று வெளிநாட்டு இளம் பெண்கள் நின்றிருந்தனர். டிக்கெட் வாங்கும் போது, தனித்தனியே தான் டிக்கெட் வாங்கினர். நாங்கள் அவர்கள் ஒன்றாக வந்திருப்பார்கள் என்று எண்ணினோம். கடைசி பெண்ணிடம் சில்லறை இல்லாததால், அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு நடத்துனர் ஐந்து ரூபாய் சில்லறை கொடுக்காமல் டிக்கெட் மட்டுமே கொடுத்தார்.





ஒரு பத்து நிமிட சிறு மலை ஏற்ற பயணத்தில் அஜந்தா குகைகள் இருக்குமிடத்திற்கு வந்தோம். எங்கள் பைகளை அங்கிருந்த லாக்கர் அறையில் வைத்து விட்டு உள்ளே செல்ல 40 ரூபாய் டிக்கெட்டுடன், அஜந்தா ASI புத்தகமும் வாங்கிக் கொண்டோம்அங்கிருந்து கொஞ்சம் படிக்கட்டுகள் மேலே ஏற வேண்டும். அங்கு சக்கர நாற்காலி செல்ல சரிவுப் பாதை அமைத்திருந்தார்கள். இப்பாதை எனக்கு எப்போதும் ஒரு குறியீடாகத் தெரியும். ஊனமுற்றோரை ஒரு சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை பொது இடங்களில் அவர்களுக்கு அளிக்கும் சேவைகளை பொறுத்தே அளவிட முடியும். நான் வேலை நிமித்தமாக லண்டனில் ஓராண்டு இருக்க வேண்டியிருந்தது. அங்கு டவுன் பஸ்களில் கூட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியோடு  செல்ல வசதி உள்ளது. அஜாந்தாவில் வெளிநாட்டினர் அதிகம் வருவதாலும் இது ஓர் உலக பண்பாட்டுச் சின்னம் என்பதாலும், இங்கு அந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், நான்கு பேர் தூக்கிக் கொண்டு செல்லும் சிறு பல்லக்குகளையும் பார்த்தோம். இதை 1983 ஆம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.


படிகள் ஏறி குகைகள் தெரியும் இடத்திற்கு வந்தோம். வெயில் ஏறத்தொடங்கியிருந்தது. ஆங்கில எழுத்து U வடிவத்தில் இருக்கும் மலைப்பாறைகளை குடைந்து குகைகள் உருவாக்கியிருக்கிறார்கள்.வகோரா ஆற்றிற்கு மேலே அமைந்துள்ளன இக்குகைகள். 

நாங்கள் ஒவ்வொரு குகைகளாக பார்த்துக் கொண்டு வந்தோம். இங்கு மொத்தம் 29 குகைகள் உள்ளன. இரு வேறு காலகட்டத்தில் இக்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன. கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 1 ஆம் நூற்றாண்டு வரை உள்ள 9, 10, 12, 13 and 15A குகைகள் சாதவாகன ஆட்சிக்காலத்திலும் மௌரியக் காலத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. பிற்கால குகைகள் கிபி நான்காம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றான்று வரை வாகடக ஆட்சியிலும் பிற மன்னர்கள் ஆட்சி காலத்திலும் செதுக்கப்பட்டதாகும்.





1819 இல், ஜான் ஸ்மித் என்ற வெள்ளைக்காரர் புலி வேட்டை போகும் போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டவையே அஜந்தா குகைகள்அதன் பிறகு இவற்றின் வரலாறுசிற்பம், ஓவியம் தொடர்பாக எண்ணற்ற அறிஞர்களால் ஆராயப்பட்டுள்ளதுஇன்றும் இதில் உள்ள அழியா ஓவியங்களும்சிற்ப நேர்த்தியும் காண்போரை பரவசமும் ஆச்சரியமும் அடையச் செய்யும்.


இரண்டு காலகட்ட குகைகளிலும் ஓவியங்கள் உள்ளன. மொத்தம் ஐந்து குகைகளில் ஓவியங்கள் உள்ளன. பௌத்த ஜாதகக் கதைகளில் வரும் காட்சிகளாகவே பெரும்பாலான ஓவியங்கள் உள்ளன. புத்தரின் முற்கால வாழ்கையினை காட்டும் ஓவியங்களும் உள்ளன. ஒருசில ஓவியங்கள் காலத்தால் சிதிலம் அடைந்தாலும், சில ஓவியங்கள் நூற்றாண்டுகளாக சிதலம் அடையாமல் இன்றும் நன்றாகவே உள்ளன. பெண்களின் ஓவியங்கள் கலை நுட்பத்துடன் அழகாக வரையப்பட்டுள்ளது. பெண்களின் பல்வேறு உணர்வு நிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓவியங்கள் தரையைத் தவிர அனைத்து இடங்களிலும் வரையப்பட்டுள்ளன. 


ஒவ்வொரு குகைக்குள்ளாக  சென்று பார்த்துக் கொண்டிருந்தோம். புத்தரின் சிலைகள் இருக்கும் குகைகளில் காலணிகளை வெளியே விட்டுச் செல்லவேண்டும். புத்தர் பல்வேறு சிலைகளில் ஞான முத்திரையில் காட்சி அளிக்கிறார். எந்த புத்தரின் சிற்பத்தை காணும்போதும், முதலில் நம்மை ஈர்ப்பது அதனுடைய அமைதியே. சலனமற்ற அந்த குமிழ் புன்னகையில் நம்மை உள்ளே இழுக்கும் பேரமைதி உள்ளது. 




ஒவ்வொரு குகைக்குள் சென்று பார்க்கும் போதும் நான் ASI அஜந்தா புத்தகத்தில் உள்ளதை வாசித்து, சிற்பங்களையும் ஓவியங்களையும் குகை அமைப்பினையும் பார்த்து கொண்டிருந்தோம். குகையின் வெளிப்புறங்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் முன் மண்டபம் உள்ளது. எல்லோராவைப் போல் இல்லாமல் இங்கு இருக்கும் அனைத்து குகைகளுமே பௌத்தக் குகைகளாகும். 


பெரும்பாலான குகைகள் விஹாரங்களாகவும் , சில குகைகள் சைத்யங்களாகவும் உள்ளனசைத்யங்களின் அமைப்பு குகைக்குக் குகை மாறுபடுகிறது. விகாரங்களின் அமைப்பும் அதன் கலை நுட்பமும், பிரம்மாண்டமும்  கூட குகைக்குக் குகை வேறுபடுகிறது. சில குகைகள் முழுமை அடையாமல் உள்ளன.


குகை 26 இல் பிரம்மாண்டமாக புத்தர் படுத்திருப்பது போல ஒரு சிலை உள்ளது. அது புத்தர் நிர்வாண நிலையினை குறிக்கும் சிலையாகும். குகைக்குள்ளே சென்று இடது புற சுவரில் இதைக் காணலாம். பார்த்த உடனேயே என்னை மிகவும் ஈர்த்த பௌத்த சிலை இது. 


அனைத்து குகைகளையும் பார்த்து விட்டு, அங்கிருந்து வரும் வழியில், புத்த சிலைகளை கூடையில் விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு சிலை 850 ரூபாயென்று சொன்னார். நான் நூறு ரூபாய்க்கு கேட்டு இறுதியில் 150 ரூபாய்க்கு பேரம் பேசி முடித்தேன். கிளம்பும் போது 4 சிலைகள் 450 ரூபாய்க்கு பேசி வாங்கிக்கொண்டு வந்தேன். வெயில் அதிகமாக அடித்தது. கால் வலி எடுக்க ஆரம்பித்தது. டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஒரு உணவகம் உள்ளது. ஆளுக்கொரு சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டோம். உணவு நன்றாகவே இருந்தது. கையில் பணம் இல்லை. ஆதலால் Google pay செய்யலாம் என்றாலும் போனில்  டவர் இல்லை. உணவக காசாளர் வெளியில் டவர் கிடைக்கும் என்று சொன்னார். வெளியில் ஸ்கேன் அட்டையோடு சென்று ஒரு ஐந்து நிமிட முயற்சிக்குப்பிறகு பணம் அனுப்பினேன்.


அங்கிருந்து கீழே இறங்க பஸ் டிக்கெட்டிற்கு மட்டும் தான் கையில்  40 ரூபாய் இருந்தது.டிக்கெட்  எடுத்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம். பஸ்ஸில் ஒரு இளஞனிடம் Google pay செய்து 400 ரூபாய் பணமாக வாங்கினேன். அஜந்தா குகை பேருந்து நிறுத்த வாசலில் இருந்து ஆட்டோவில் அடுத்த பஸ் நிறுத்தத்திற்கு சென்றோம். அங்கிருந்து 'ஜல்கான்' சென்று, அங்கிருந்து 'நாசிக்' செல்ல திட்டம். 


பஸ் ஏறி ஒரு மணி நேர பயணத்தில் 3:30 மணிக்கு ஜல்கான் வந்தோம்ஜல்கான் ரயில் நிலையத்திலிருந்து நாசிக் செல்லும்  ரயில்கள் அந்த சமயத்தில் இருந்தன. நாங்கள் அவசர அவசரமாக பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் சென்றோம். அனைத்து முக்கியமான ரயில் நிலையங்கள் போலவே, இதுவும் மிகவும் கூட்டமாக இருந்தது. கையில் பணம் இல்லாததால் ATM சென்று பணம் எடுத்து வர சென்றேன். 


பணப்பையில் ATMஐ தேடிப் பார்த்தேன். அப்பொழுது தான் நினைவு வந்தது கிரெடிட் கார்டு மட்டும் தான் எடுத்து வைத்தேன், டெபிட் கார்டை எடுத்து வைக்கவில்லை என்று. நண்பரிடம்  டெபிட் கார்டு வாங்கி அவர் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அவரிடம் சென்று இதைச்  சொன்னேன். அவர் அதிர்ச்சியடைந்து நானும் ATM கார்டு எடுத்து வரவில்லை என்று சொன்னார்


கையில் கார்டு இல்லை, பணமும் இல்லை. போனிலும் சார்ஜ் குறைவாகவே இருந்தது. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தேன்நண்பர் பதற்றமாக இருந்தார். ஒரு யோசனையில் வெளியில் கடைக்கு சென்று Google payவில் பணம் அனுப்பி கையில் பணம் பெற்று கொள்ளலாம் என்று சொன்னேன். அவரும் சரி என்றார். இரண்டு மூன்று கடைகள் கேட்டுப்பார்தோம். அப்படி தர முடியாது என்று கூறினர். ஒரு கடையில் 1000 ரூபாய்க்கு 1100  அனுப்பினால் தருகிறேன் என்றார். வேறுவழி இல்லாமல், அவரிடம் இருந்து 1000 ரூபாய் பெற்றுதிரும்ப ரயில் நிலையம் வந்தோம். 


அப்பொழுது இருந்த ஒரு ரயில் கிளம்பி விட்டது. திரும்பவும் பஸ் நிலையம் சென்று பஸ்ஸில் நாசிக் போகலாம் என்று சொன்னார் நண்பர். அப்பொழுது ரயில் வருகையை அறிவிக்கும் எலக்ட்ரானிக் போர்டில் ஹௌரா இரயில் தாமதமாக இன்னும் 10 நிமிடத்தில் இரயில் நிலையம் வந்தடையும் என்றிருந்தது. நான் நொடிப் பொழுதில் யோசித்து நாம் அந்த ரயிலிற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று சொன்னேன்நண்பரும் சரி என்றார். டிக்கெட் எடுத்து நடைமேடை சென்றோம். இரயில் வந்து நின்றது . பெட்டியின் உள்ளே நிற்க கூட இடமில்லாமல் மக்கள் கூட்டம் இருந்தது. நான் எப்படியாவது உள்ளே நுழைந்து சென்று விடலாம் என்று யோசித்தேன். அவர்  ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். இந்த ரயிலில் செல்ல வாய்பில்லை என்றாயிற்றுஅவர் வட இந்தியாவில் முன்பதிவில்லா டிக்கெட்டில் செல்ல வாய்ப்பே இல்லை என்று கூறினார். இதை முன்பே சொல்லி இருந்தால் நாம் அப்போவே பஸ்ஸில் போயிருக்கலாம் என்றேன். நான் இதை  முன்னாடியே சொல்லி இருந்தால் அதை நான் ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன் என்றும், அனுபவத்தால் மட்டுமே இதை ஏற்க முடியும் என்றார். 


அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு திரும்பவும் ஆட்டோவில் சென்றோம். அவசர அவசரமாக முடிவெடுக்காதீர்கள் என்று திட்டினார். பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தோம். ஒரு மணி நேர காதிருப்புக்குப் பின் ஒரு பேருந்து வந்தது. அது வரையில் எந்த பேருந்து வந்தாலும்,அது நாசிக் செல்லுமா என்று கேட்டு கொண்டே இருந்தேன். பஸ்ஸில் ஏற கூட்டம் அதிகமாக இருந்தது.


ஒரு பஸ் வந்து நின்றது. நான் என் கைகுட்டையை எடுத்து ஒரு சீட்டில் போட்டேன்நண்பர் கடைசி இருக்கையில் தன் துண்டைப் போட்டார். ஒரு 5 நிமிட நெருக்கடிக்குப் பின், பஸ் உள்ளே சென்றேன். நான் போட்ட இடத்தில் கைக்குட்டை அங்கேயே இருந்தது. நான் அதையெடுத்து அமர்ந்தேன். பஸ் இருக்கைகள் நிரம்பியது. நண்பர் அப்பொழுதான் ஏறினார். உள்ளே சென்று கடைசி இருக்கையில் தான் போட்ட துண்டினை எடுத்து அவரும் அமர்ந்து கொண்டார். நான் ஆச்சரியப்பட்டேன். இதே, தமிழ் நாட்டில் இவ்வளவு கூட்டத்தில் துண்டு போட்டிருந்தால், பஸ் உள்ளே ஏறி சென்று பார்த்தால் துண்டும் இருக்காது சீட்டும் இருக்காது. 


மாலை 5:30 மணிக்கு பஸ் கிளம்ப தயாராகியது. திடீரென்று ஒரு பரபரப்பு நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னே இருந்தவர்களிடம் இருந்து வந்தது. யாரோ ஒரு பயணியின் மொபைல் திருடுபோய்விட்டதாம் . அவருடைய எண்ணிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் கால் செய்து பார்த்தனர்.மொபைல் கிடைக்கவில்லை. பத்து நிமிடம் கழித்து பஸ் புறப்பட்டது.

நடத்துனரிடம் பஸ் டிக்கெட் எடுத்தேன். பஸ் கட்டணம் தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. கையில் இருந்த பணம் முழுவதும் காலியாகியது. திரும்பவும் யாரிடமாவது ஆன்லைனில் பணம் அனுப்பி பெற வேண்டும். அல்லது இன்னொரு யோசனையும் என்னிடம் இருந்தது. எதுவாக இருந்தாலும் நாசிக் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன். 


நான் ஜன்னலோரம் அமர்ந்திருந்தேன். வழியில் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். வழியில் சோளப்பயிர்கள் தான் பெரும்பாலும் பயிருட்டிருந்தார்கள். பேருந்து ஒரு பெரிய ஆற்றுப் பாலத்தைக் கடந்து சென்றது. பக்கத்தில் இருந்தவர் அந்த ஆற்றின் பெயரைக் கூறினார். சாலை சில இடங்களில் மோசமாக இருந்தது. சூரிய காந்தி பயிர் வகைகள் பல இடங்களில் விளைவித்திருந்தனர். அதைப் பார்க்கும் போது ஒரு பெரும் இராணுவ அமைப்பு போல தோன்றும். அதன் தலைகளும் ஒரு தலைவனை எதிர்நோக்கி எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும். ஓரிடத்தில் மொத்த தோட்டமும் வெயிலில் கருகி தலை குனிந்து இருந்தது. ஆயிரம் மனித கல்லறைகளை ஓரிடத்தில் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. அதைக் காணும் போது மனதிற்குள் ஏதோ இனம்புரியாத  வேதனை உண்டாயிற்று. 


ஒரு நிறுத்தத்தில் நிறைய பேர் இறங்கினர். அப்பொழுது பின்னாடி இடம் இருந்ததால் ஒரு இருக்கையில் நானும் நண்பரும் அமர்ந்து கொண்டோம். சூரியன் மறையத் தொடங்கியது. லேசான காற்று வீசியதால் நான் தூங்கிவிட்டேன். பேருந்து மலேகான் பஸ் நிலையத்தில் நின்றது. கீழிறங்கி உலாவிக் கொண்டிருந்தோம். அன்று முழுவதும் வெயிலில் நடந்ததால், திரும்பவும் தூங்கிவிட்டேன். இரவு 11:30 மணி அளவில் நாசிக் வந்தடைந்தோம். பஸ் ஸ்டான்ட் பக்கத்திலேயே ஒரு விடுதி இருந்தது. அங்கேயே அறை எடுத்து உறங்கினோம். பணம் Google pay மூலமே செலுத்தினோம். இப்பவும் கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. ATM அட்டையும் இல்லை. நாளை அதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து வைத்திருந்தேன். 


Wednesday, 19 April 2023

மகாராஷ்டிரா பயணம் (4)

காலை 4:30 மணி அளவில் அவுரங்காபாத் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். ரயில் வந்து சேர வேண்டிய நேரத்திற்கு 15 நிமிடம் முன்பாகவே வந்தது. ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து,எதிரே உள்ள ஒரு தெருவில் நுழைந்தோம். அங்கு பல்வேறு விடுதிகள் இருந்தன. காலையில் ஆள் அரவமற்று இருந்தது.

ஒவ்வொரு விடுதிகளாக ஏறி இறங்கி பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். அப்பொழுது விடுதி பிடித்துக் கொடுக்கும் ஏஜென்ட் ஒருவர் வந்து 24 மணி நேர விடுதி வேண்டுமா என்று கேட்டார். எங்களுக்கும் 24 மணி நேர விடுதி தான் வேண்டும். இணையத்தில் பதிவு செய்தால் மதியம் 12 மணி முதல் அடுத்த நாள் 12 மணி வரை தான் தங்க முடியும். காலையில் 5 மணி முதல் தங்கினாலும் மதியம் 12 மணிக்கு அறையின் ஒரு நாள் வாடகை கொடுக்க வேண்டும். அதனால் நாங்கள் 24 மணி நேர அறைகளை தேடினோம்.

ஒரு அறை பேரம் பேசி 800 ரூபாய்க்கு எடுத்தோம். 5:30 மணிக்கு சிறிது நேரம் உறங்கலாம் என்று படுத்தோம். ஆனால் உறக்கம் வரவில்லை. காலையில் எட்டு மணிக்கு நகரில் உள்ள இரு சக்கர வாகனம் வாடகைக்கு தரும் இடத்திற்குச் சென்றோம். அறையிலிருந்து முப்பது ரூபாய் ஆட்டோ வாடகை தூரத்தில் இருந்தது அது. 

நிறைய வண்டிகள் வெளியே நிறுத்தி வைத்திருந்தார்கள். நாங்கள் இரும்பு ஏணியில் ஏறி அங்கிருந்த அலுவலகத்திற்கு சென்றோம். அவர்களுடைய இணையதளத்தில் என்னுடைய ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தேன். நண்பர் வண்டிகளை ஓட்டிப்பார்த்து கொண்டிருந்தார். அங்கிருந்து ஒரு வண்டியினை எடுத்துக் கொண்டு எல்லோராவை நோக்கி கிளம்பினோம். செல்லும் வழியில் ஒரு வடா பாவும், போகாவும் சாப்பிட்டோம். சாலை நன்றாக இருந்ததால் வேகமாக செல்ல முடிந்தது. 

எல்லோராவின் உள்ளே நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு சென்றோம். கவுண்டரில் எல்லோராவின் ASI புத்தகத்தை வாங்கிக் கொண்டோம். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லும் போது ஆளுக்கொரு உருண்டை குல்லாயினை வாங்கிப் போட்டுக்கொண்டோம். 

சிறிதுநேரம் உள்ளே நடந்ததும், எதிரில் தெரியும் மலையில், மனித கைகள் செய்த பிரம்மாண்டம் விரிய தொடங்கியது. மலை நமக்கு இடதுபுறம் (வடக்கு) இருந்து வலது புறம் வரை விரிந்திருந்தது. மலையில்  கல் பொக்கிஷங்களை குடைந்திருந்தனர். நமக்கு நேர் முன்னாள் நடுமலையில் காட்சி தருவது கைலாசநாதர் குகை கோயில். அந்த பிரம்மாண்டத்தின் காட்சியை கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணில் எங்கோவொரு துளி கண்ணீர் சொட்டியது. அங்கிருந்து பார்க்கையில் மலை முகட்டிற்கு மேலே கோபுரம் உயர்ந்து நிற்கும். வரும் தலைமுறையினர் அதை செதுக்கியோரை அண்ணாந்து பார்க்கும் குறியீடு தான் அதுவோ.



எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் தளம் ஆகும். தமிழ்நாட்டிலிருந்தும் நிறைய பேர் வந்திருந்தனர். ஒரு கல்லூரி சுற்றுலா குழுவும் இருந்தனர். கல்லூரியில் இது போன்ற இடங்களுக்கு சுற்றுலா கூட்டி செல்கிறீர்களா என்று ஆச்சரியப்பட்டேன். அந்த கல்லூரிக் குழுவின் பேராசிரியர எல்லோராவைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். 

நாங்களும், வாங்கிய ASI  புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தோம். நான் ஒவ்வொன்றாக படித்து நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். எல்லோரவின் குகைகள் மூன்று வகைகளாக உள்ளன . மொத்தம் 34 குகைகள். இக்குகைகள் கிபி 5 முதல் 10 ஆம் நூற்றாண்டுகளுக்குள் அமைக்கபட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளது. வலது புற எல்லையிலிருந்து தொடங்குபவை பௌத்த குகைகள். நடுவில் இந்து குகைகள். இடது புறத்தில் இருப்பவை சமண குகைகள். 



கைலாச நாதர் குகை கோயிலின் உள்ளே நுழைந்தோம். உள்ளே சென்றதும் இடது புறம் பிரம்மாண்டமான கல் யானையைக் கண்டோம். முன் நந்திமண்டபமும், அடுத்து பெரிய கோபுரமும் உள்ளது. அனைத்தும் கல்லால் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது. முதலில் கோவிலின் உள்ளே ஒரு சுற்று சுற்றி வந்தோம். இடது மற்றும் வலது புற சுவர்களில் மகாபாரத மற்றும் இராமாணயத்தில் வரும் காட்சிகள் ஓவியங்களாக தீட்டி வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கோபுரத்திற்கு உள்ளே செல்ல ஒரு அடுக்கு மேலே ஏறி செல்ல வேண்டும். மலை நோக்கி செல்ல உயரம் கூடிக்கொண்டே இருக்கும். அதனால் முகப்பிலிருந்து பார்க்கும் போது வாசல் கீழ் தளத்திலும், கோபுரம் பல்வேறு அடுக்குகள் மேலேயும் இருக்கும். உள்ளே இருள் நிறைந்திருந்தது. வெளியில் வந்து மீண்டும் கீழே இறங்கி சுற்றுச் சுவர்களை சுற்றிப் பார்த்தோம். சுவர்களில் இருந்த பறக்கும் தேவதை சிற்பங்கள் என்னை மிகவும் ஈர்த்தது. 



கைலாசநாதர் கோவிலை பார்த்துவிட்டு வெளியில் வந்தோம். நண்பர் மொபைலில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீபிடம் பேசிக்கொண்டிருந்தார்.  நாங்கள் அப்படியே கோவிலின் வெளிப்புறத்தில் இருக்கும் அடுத்த குகையின் மேலே ஏறினோம். மேலிருந்து கீழ்நோக்கி கண்டிப்பாக கைலாசநாதர் கோவிலைப் பார்க்க வேண்டும். 

புத்தகத்தில் கொடுத்திருக்கும் செய்திகளை கொண்டு குகையில் உள்ள சிற்பங்களையும், அமைப்பையும் புரிந்து கொள்ள முயன்றோம். குறைந்தது நான்கைந்து முறை ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்து பொறுமையாக பார்த்தால் தான் அனைத்து குகைகளையும் ஓரளவிற்கு பார்க்க முடியும். வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது. தொப்பி வாங்கியது நல்லதாகவே போனது. 

அங்கிருந்து நேராக வலது புற எல்லையில் அமைந்துள்ள புத்த குகைகளுக்கு சென்றோம். முந்தைய நாள் பார்த்த மூன்று பௌத்த குகைகளின் அனுபவங்களைக் கொண்டு குகைகளின் அமைப்பை புரிந்து கொண்டேன். சைத்தியங்களையும், விஹாரங்களையும் பார்த்துக் கொண்டு சென்றோம். புத்தர் ஞான முத்திரையில் சிலையாக வடிக்கப்பட்டிருந்தார். இரண்டடுக்கு, மூன்றடுக்கு குகைகளும் இருந்தன. சில குகைகளில் வேலைப்பாடுகள் அதிகம் இருந்தன. 

நாங்கள் அனைத்து குகைகளையும் பார்க்காமல், அங்கிருந்து இடது புற எல்லை இருக்கும் சமண குகைகளை காண நடந்து சென்றோம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அங்கு பேட்டரியால்  இயக்கப்படும் வண்டிகள் சென்று கொண்டிருந்தன. அதற்கு தனியாக டிக்கெட் வாங்க வேண்டும் என்றெண்ணி நாங்கள் நடந்தே  சென்றோம். 20 நிமிடம் வெயிலில் நடந்த பின்பு எங்களை கடந்து சென்ற ஒருவண்டி நிறுத்தி எங்களை ஏற்றிக் கொண்டனர். அந்த வண்டியில் செல்ல இலவசம் தான்.

30 முதல் 34 வரை உள்ளவை சமண குகைகள். இந்து மற்றும் பௌத்த குகைகளுக்கு பிறகு செதுக்கப்பட்டவை இவை. சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளே செதுக்கப்பட்டுள்ளது. இந்து கோயில்களின் சாயல் சற்று சமணக் குகைகளில் உள்ளது. இந்திர சபா, சோட்டா கைலாஷ், ஜெகந்நாத சபா என்று சமண குகைகளை அழைக்கின்றனர். யட்சன், யட்சி  என்ற இரு காவல் தெய்வங்கள் அனைத்து தீர்த்தங்கரர்களின் சிலைகளின் முன்னும் உள்ளது. 

சமண குகைகளை பார்த்து விட்டு இந்து குகைகளை பார்க்க வந்தோம். தெய்வங்களின் சிலைகள் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குகையாக பார்த்துக் கொண்டு வந்தோம். ஒவ்வொருமுறை காணும் போதும் கல்லில் ஒளிந்திருக்கும் சிலை உயிர்பெற்று விடுமோ என்றே எண்ண தோன்றும். கோடிக்கணக்கான பார்வைகளால் கோடி முறை உயிர்பெறும் கற்கள். அவைகள் சிலைகள் அல்ல மனிதக் கனவுகள். 

எல்லோராவிலிருந்து கிளம்பி கீழே இறங்கினோம். வரும் வழியில் ஒரு கடையில் சாப்பிட்டோம். அன்று வரை மொத்த பயணத்திலேயே, நாங்கள் சாப்பிட்ட மோசமான உணவு அது. சிக்கன் மசாலா ரைஸ் என்று வாங்கி சாப்பிட்டோம். டூரிஸ்ட் இடங்களில் இருக்கும் மட்டமான உணவு வகையை சேர்ந்தது அது. காரம் தாங்க முடியாமல் மோர் கிடைக்குமா என்று கேட்டோம். பக்கத்துக்கு கடையில் தான் மோர் கிடைக்கும், இங்கு இல்லை என்று சொன்னார்கள். வேறு வழியில்லாமல் வயிறு பிரச்சனை செய்யாமலிருக்க பக்கத்துக்கு கடைக்குப்போய் மோர் வாங்கி குடித்துவிட்டு மீண்டும் கிளம்பினோம்.

அங்கிருந்து அவுரங்கசிப் கல்லறைக்கு செல்ல கூகுள் மேப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். மீண்டும்  அவுரங்காபாத் செல்லும் வழியிலேயே இறங்கி வர வேண்டும். ஒரு 15கிமீ தொலைவில் இடதுபுறம் திரும்பி 10 அடி உள்ள குருகிய சாலையில் செல்ல வேண்டும். அதிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பினால் ஒரு கோட்டை வாசல் வரும். அதன் உள்ளே செல்ல வேண்டும். ஒரு கோட்டையின் உள்ளே மக்கள் வாழ்வதை இங்கு தான் நான் நேரில் முதல்முறையாக பார்க்கிறேன். கோட்டை வாசலின் உள்ளே சென்றதும் வலது புறம் ஒரு ஆங்கில மருந்து கடை இருக்கும். அதைப் பார்த்ததுமே ஏதோ ஒரு ஒவ்வாமை மனதிற்குள் ஏற்பட்டது. அது கோட்டைக் காலத்திற்கும், தற்காலத்திற்கும் ஒரு நொடியில் மனம் பயணிக்க முடியாமல் மயங்கிய தருணம். 

ஒரு 100 அடி சென்றதுமே வலது புறத்தில் ஒரு சூஃபி துறவியின் சன்னதி இருக்கும். அதன் உள்ளே தான் அவுரங்கசிப்பின் கல்லறையும்  உள்ளது. உள்ளே சென்று காலணிகளை கழற்றி வைத்தோம். ஒரு சிறு அறை போல் இருந்த ஒரு வாசலில் உள்ளே நுழைந்தோம். அதன் வலது புறம் ஐந்து படிக்கட்டுகளுக்கு மேலே சென்றால் ஒரு சிறு 20 * 20 அளவு கொண்ட இடத்தில், அவுரங்கசிபின் கல்லறை உள்ளது. நாங்கள் அங்கிருந்த போது அங்கு வந்து சிலர் பிரார்த்தனை செய்தனர். இந்திய துணைகண்டத்தின் மாபெரும் சக்கரவர்த்தியின் கல்லறை ஒரு சாதாரண இடத்தில் இருந்தது. அவர் அமைதியான ஆடம்பரம் அற்ற ஒரு இடத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டாராம்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றவர் என்று அறியப்பட்டவர் இறுதியில் ஒரு சூஃபியின் சன்னதியின் பக்கத்தில் தன்னை அடக்கம் செய்ய கோரியது ஒரு பெரிய ஆச்சரியமாக தோன்றவில்லை. மனித இருப்பில் இரு முனை துருவங்கள் எங்காவது ஒரு புள்ளியில் சந்தித்தே ஆக வேண்டும். மனித இருப்பு என்று நான் சொல்வது உயிர் கொண்ட உடல் மட்டும் அன்று.

அவரது கல்லறைக்குப் பக்கத்திலேயே அவரது மகன் மற்றும் மருமகளின் கல்லறையும் உள்ளது. உள்ளே ஒரு இடத்தில் முகமது நபி அவர்கள் அணிந்த உடை ஒன்று இருப்பதாக கூறினர். அந்த இடத்திற்குள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியில் க்ரானைட் கல்லில் பல்வேறு சூஃபிக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்து கிளம்பி தௌலதாபாத் கோட்டை அல்லது தேவகிரி கோட்டைக்குச் சென்றோம். அவுரங்காபாத் செல்லும் வழியிலேயே இக்கோட்டை உள்ளது. இது ASI பராமரிப்பில் உள்ள கோட்டையாகும். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே செல்லும்போது தண்ணீர் போத்தல்கள் இருந்தால் அதற்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருபது ருபாய் வாங்கிக்கொள்கிறார்கள். திரும்பவும் வரும் போது காலி போத்தலாக இருந்தால் இருபது ரூபாயை திரும்பி தந்து விடுவார்கள். உள்ளே பிளாஸ்டிக் குப்பையினை தடுக்க இவ்வாறு செய்கிறார்கள்.

கோட்டை யாதவ மன்னர்களால் கட்டப்பட்டு பின்பு பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்துள்ளது. கிபி  1327ல், முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து , இக்கோட்டைக்கு மாற்றினார். அப்பொழுது தில்லியின் மக்கள் பெருமளவில் தௌலதாபாத்திற்கு குடியேறவும் உத்தரவிட்டார்.  1334ல் திரும்பவும் தில்லிக்கே தலைநகரை மாற்றினார். இப்பெரும் குடிபெயர்வில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டனர்.



கோட்டையின் கிழக்கு வாசல் தான் பிரதான வாசல். உள்ளே நுழைந்து ராஜ வீதியில் சென்று கொண்டிருந்தோம். ஒரு 100 அடி சென்ற பின் வலது புறம், சந்த் மினார் உள்ளது. பாமினி சுல்தானால் குதுப் மினாரின் வடிவிலே ஈரானிய கட்டிட நிபுணர்களைக் கொண்டு  கட்டப்பெற்றது. இதன் உள்ளே செல்ல இப்போது அனுமதிக்கப்படுவதில்லை. மினாரின் உயரம் பிரமிக்க வைக்கும். அங்கிருந்து நேராக கோட்டையினை ஏறி உள்ளே செல்ல வேண்டும். குரங்குகள் அதிகம் இருப்பதால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உள்ளே அகழிக்கு மேலே கட்டிய  பாலத்தில் நடந்து செல்ல வேண்டும்.  ஒரு இடத்தில் ஏறி இருளில் உள்ளே சென்று, மேலே வெட்டவெளியினை அடைந்து, அங்கிருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி வந்தால் மீண்டும் வந்த இடத்திற்கே வருவோம். எப்படி சென்று எதன் வழியே இறங்கினோம் என்பதே தெரியாது. இப்படி  கோட்டையின் உள்ளே இருக்கும் வாயில்கள், சிறு அறைகள், படிக்கட்டுகள் என அனைத்தும் உள்ளே வரும் எதிரிகளை குழப்பம் அடைய செய்வது போன்று இருக்கும்.

சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். வெயில் சுளீரென்று உரைத்தது. நாங்கள் மேலே ஏறி கொண்டிருந்தோம். கல் படிக்கட்டுகள் இருந்ததால் அங்கங்கே அமர்ந்து இளைப்பாறிவிட்டு மேலேறினோம். மேலே ஒரு சிறு விநாகயர் கோவில் உள்ளது. அதற்கு பூஜை செய்ய அந்த கோவிலினை நிர்வகிக்கும் சந்ததியைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். நாங்கள் உள்ளே செல்லவில்லை. மேலே ஏறிப் பார்த்தால், கோட்டையின் மதில்களும், அகழியும் நீண்ட தூரம் இருப்பது தெரியும். 

எளிதில் கைப்பற்ற முடியாத கோட்டையாகவே இது இருந்திருக்கும். கோட்டையின் உச்சிக்கு சென்றோம். அங்கே அரசவை போன்ற திறந்தவெளி  இடம் இருந்தது. அங்கு சிறிது நேரம் அமர்ந்தோம். அங்கே ஒருவர் கிட்டார் எடுத்து வந்திருந்தார். அதனை கடன் வாங்கி, அனைவரும் வாசிப்பது போல புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இளைஞர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. தொடக்கப்பள்ளி  மாணவர்கள் ஒரு 30 பேர் இருந்தனர். அவர்களிடம் கோட்டையினைப் பற்றி அவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.

நாங்கள் 30 நிமிடம் கழித்து கீழிறங்கினோம். மீண்டும் ராஜ வீதியில் திரும்பி போகும் வழியில் வலது புறம் பல்வேறு பீரங்கிகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். அதன் பக்கத்திலேயே பாரத மாதா சிலை ஒன்று இருந்தது. கோட்டையின் வெளியில் வந்து காலி தண்ணீர் போத்தலை காண்பித்து இருபது ரூபாயை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

காலையிலிருந்து வெயிலில் நடந்து கொண்டே இருந்ததால், மிகவும் களைப்பாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் முந்தைய நாட்கள் காலைப் பனியில் சுற்றியதால் என் உதடுகள் வெடித்து வலித்துக் கொண்டே இருந்தது. இந்த பயணத்தின் மூலம், எந்த ஒரு பயணம் செல்லவும், இன்றியமையாத சில பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டேன். மாஸ்க், தொப்பி, பனிவெடிப்பு கிரீம், மாய்ஸ்ச்சரைஸர், குடை , ஷூ என்று பட்டியல் போனது. இவை அனைத்தும் பயணத்தில் அதிகமாக உடல் அலைச்சலாகாமல் இருக்க உதவும். அடுத்து 'பீபீ கா மக்பாரா' நோக்கி சென்றோம். அது அவுரங்காபாத் நகரிலேயே உள்ளது. போகும் வழியில் கரும்பு சாறு குடித்து விட்டு சென்றோம். கரும்பு சாறு குடிப்பதற்கு கூட மரத்தடியில் இருக்கைகளும், மேசைகளும் போட்டிருந்தனர்.



மாலை ஆறு மணியளவில் 'பீபீ கா மக்பாரா'விற்குள் நுழைந்தோம். இது அவுரங்கசிப்பின் மகன் ஆசிம் ஷா தன் அன்னையின் நினைவாக கட்டியது. உள்ளே அவரின் அன்னையின் கல்லறை உள்ளது. தாஜ்மஹால் போலவே கட்டிட அமைப்பு கொண்டது.  நான்கு புறமும் தூண்கள், நடுவில் தாஜ்மஹால் போன்ற அமைப்பு கொண்ட சின்ன அதிசயம்.  இருள் சூழ தொடங்கியது. மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. இருளில் தூண்கள் சரியாக தெரியவில்லை. திடீரென்று ஒருசலசலப்பு அங்குள்ளோரிடம் ஏற்பட்டது. ஒரு நிமிடம் கழித்து சட்டென்று ஒளிமயமாக மொத்த இடமும் காட்சி அளித்தது. விளக்கொளியில் 'பீபீ  கா மக்பாரா' கண்கவரும் காட்சியாக இருந்தது. தூண்களின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு நிறமாக ஒளிர்ந்தது. ஒட்டுமொத்தமாக தூர இருந்து இதைக் காண கீழே இறங்கி வந்தோம். 

கொஞ்ச தூரம் நடந்த பின்னர் திரும்பிப் பார்க்கையில் தாஜ் மகாலை பார்த்த பரவசம் மனதில் எழுந்தது. வண்ணங்களில் திளைத்திருந்தது அந்த கல்லறை. அங்கிருந்து கிளம்பி வண்டியினை ஒப்படைத்துவிட்டு அறைக்கு வந்தோம். 

மிகவும் களைப்பாக இருந்ததால் எதுவும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தோம். ஆனால் கொண்டு சென்ற இரண்டு செட் துணிகளும் அழுக்காக இருந்ததால், இன்று துவைத்தே ஆக வேண்டும். நான் துணிகளை துவைத்துப் போட்டு விட்டு படுத்தேன். நண்பர் அடுத்து துணிகளை துவைக்க ஆரம்பித்தார். நான் படுத்து உறங்க தயாரானேன். அடுத்த நாள் அதிகாலையிலேயே அஜந்தா செல்ல வேண்டும்.  

Friday, 14 April 2023

மகாராஷ்டிரா பயணம் (3)

காலை 6:15 மணிக்கு அறையை காலி செய்து விட்டு லோனாவாலா நோக்கி புறப்பட்டோம். காலை  குளிரில் வண்டி ஓட்டுவதற்கு நன்றாக இருந்தது. காலையில் போக்குவரத்து அதிகம் இல்லாததால் சீக்கிரமாகவே நகரத்தை கடந்து சென்றோம். நெடுஞ்சாலையை அடைந்த உடன் ஒரு தள்ளு வண்டி கடையில் தேநீர் அருந்தினோம். லோனாவாலாவை நெருங்கும் போது மேக மூட்டமாக இருந்தது. 

லோனாவாலா போவதற்கு முன்பாகவே 'பாஜா குகைகள்' என்ற பௌத்த குகைகளை காண திட்டமிட்டோம். குகைக்கு 5கிமீ முன்பாக ஒரு சிற்றுண்டி கடையில், காலை உணவருந்திவிட்டு சென்றோம். 'வடா பாவ்' எங்கு சாப்பிட்டாலும் மிகச்சிறப்பாகவே இருந்தது. 'பாஜா குகை' போகும் வழியில் ஒரு ரயில் பாதை குறுக்கே கடந்து செல்ல வேண்டும். அப்பொழுது ரயில் வந்து கொண்டிருந்ததால், பாதை மூடி பத்து நிமிடம் காத்திருந்தோம். 

காலை 8:15 மணிக்கு பாஜா குகையின் அடிப்பகுதிக்கு சென்று விட்டோம். கீழிருந்து மேலே செல்ல கல் படிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரு இளைஞர் கூட்டம் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். எங்களை பார்த்தவுடன், இந்த இடத்தை விட இன்னொரு இடம் நன்றாக இருக்கும், நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள் என்றே தெரியவில்லை. நாங்கள் அவர்கள் சொல்வதை கேட்காமல் மேலே ஏறி சென்றோம்.

இது ASI பராமரிப்பில் இருக்கும் இடமாகும். நாங்கள் வந்து சிறிது நேரம் கழித்து நுழைவுச்சீட்டு கொடுக்கும் ஊழியர் வந்தார். நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். முதல் பார்வையிலேயே நான் அந்த குகையினுள் இழுக்கப்பட்டேன். நான் பார்க்கும் முதல் பௌத்த குகை அது. அதன் அமைப்பு, வடிவம், பெயர்கள் என்று எதுவுமே தெரியாது. அங்கு ஒரு நான்கைந்து பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தினமும் காலையில் குகைகளை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். 

ஒரு பெரிய கல்லினை குடைந்து குகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். மொத்தம் 22 குகைகள். நடுவில் இருக்கும் குகை ஒரு பெரிய மண்டப முகப்பு போல் அலங்காரமாக இருந்தது. அதன் உள்ளே உருளை வடிவில் ஒரு அமைப்பு இருத்தது. நண்பர் அதை 'சைத்தியம்' என்று சொன்னார்.  'சைத்தியம்' என்பது பௌத்தர்களின் பிரார்த்தனைக் கூடம். இதன் உள்ளே ஒரு தூபி (அரை கோல வடிவம் கொண்டது) அமைந்திருந்தது. சைத்யத்தின் உள்ளே மண்டபத் தூண்கள் செதுக்கப்பட்டிருந்தது. இந்த தூண்கள் ஒரு கணித விதிப்படி சீரான இடைவெளி விட்டு, ஒரே அளவில் உள்ளது. பாதி உயரத்திற்கு மேல், இந்த தூண்கள் நீள்வட்ட வடிவத்தில் மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது. 

அதைக் கண்டு கொஞ்ச நேரம் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த குகைகளில் வாழ்ந்த பௌத்த துறவிகளை எண்ணிக்கொண்டிருந்தேன். மழை திடீரென பெய்யத் தொடங்கியது. அங்கிருக்கும் ஒரு குகைக்குள் சென்று நின்று கொண்டோம். அத்துறவிகளுக்கும், நமக்கும் பாலமாக இருப்பது இந்த கற்குகை மட்டுமே. காலத்தினால் உருமாறாத கற்கள். மழையை பார்த்துக்கொண்டு துறவிகளின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். 

சிறிது நேரம் மழைக்குப் பிறகு, மற்ற குகைகளைப் பார்த்தோம். குகைகளுக்கு வெளியேயும் சில தூபிகள் இருந்தன. இக்குகைகள் பௌத்த விகாரங்கள் ஆகும். இதுவே பௌத்த பிக்குகளின் உறைவிடங்கள். சில விகாரங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தன. சிலவற்றில் உறங்குவதற்கு கற்பலகைகள் மட்டுமே இருந்தன. இந்த குகை ஹீனயான பௌத்த மரபைச் சேர்ந்ததாகும்.


பத்து மணியளவில் கீழே இறங்கினோம். இறங்கும் வழியில் இந்தியாவில் இருக்கும் பௌத்த குகைத்தளங்களின் இடங்களை பலகையில் பொறித்து வைத்திருந்தார்கள். அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கீழிறங்கி "சுனில் மெழுகு அருங்காட்சியகம்" செல்ல கிளம்பினோம். செல்லும் வழியில் மழை மெல்லிதாக தூரிக் கொண்டே இருந்தது. 

லோனாவாலா நகர் புனேவிற்கும், மும்பையிற்கும் நடுவில் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைப்பகுதியாக இருப்பதால், நல்ல குளுமையாகவே இருக்கும். புனே மற்றும் மும்பை மக்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை கழிக்கவே உருவாக்கப்பட்ட செயற்கை சுற்றுலா தளமாகும். இங்கு ஓரிரண்டு அருவிகள், கோட்டைகள் தவிர ஏதும் இல்லை. நகரின் உள்ளே நுழையும் இடங்களில், அருங்காட்சியகம் செல்ல வழி என்று போடப்பட்டிருந்தது. ஆனால் மேப்பில் வேறு வழி காட்டியது. அந்த இடத்திற்கு சென்று பார்த்தால் அது வேறு ஒரு  அருங்காட்சியகம். இரண்டு, மூன்று மெழுகு அருங்காட்சியகங்கள் இங்கு உள்ளன. ஆனால் "சுனில் அருங்காட்சியகமே" சிறந்தது.

நகரின் நடுவே ஒரு  வணிக வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள சுனில் மெழுகு அருங்காட்சியகத்திற்குள் சென்றோம்.  உள்ளே சென்றதுமே காந்தியையும், நேருவையும் பார்க்க முடிந்தது. மிகவும் தத்ரூபமாக இருந்தன அச்சிலைகள். அருங்காட்சியகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட மெழுகுச் சிலைகள் உள்ளன. அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள், சினிமா நடிகர்கள்/ நடிகைகள், விளையாட்டு வீரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விஞ்ஞானிகள் என்று வெவ்வேறு காலங்களை சேர்ந்தவர்களை சிலையாக வடித்திருக்கிறார்கள். எந்த சிலைகளையும் தொடக்கூடாது என்று உள்ளே செல்லும் போதே சொல்லி அனுப்பினார்கள். 



எனக்கு மிகவும் தத்ரூபமாக பட்டது பிரகாஷ்ராஜ் அவர்களின் ஆளுயர சிலை. ஒவ்வொரு சிலையும் அந்தந்த நிஜ மனிதரின் உயரம், எடைகளை கணக்கில் கொண்டு அதே போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. திடீரென்று சிலையைக் கண்டதும் பிரகாஷ்ராஜே நின்றிருப்பது போல் ஒரு பிரமை தோன்றியது. ஒவ்வொரு சிலையும் சிறப்பாக இருந்தது. சில இன்னும் நன்றாக செய்திருக்கலாம். சில உண்மைப் போலவே இருக்கும். 



நாங்கள் எங்களுக்கு பிடித்த மனிதர்களின் சிலைகளிடம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். "சைராட்" மராத்தி திரைப்படத்தின் இயக்குனர், நடிகர், நடிகைச் சிலைகள் மிகவும் உயிர்ப்புடன் இருந்தன. அனைத்து சிலைகளையும் பார்த்து முடித்து விட்டு நாங்கள் வெளியே வந்தோம். நண்பர் அனைத்தையும் வீடியோ எடுத்து வாட்சப்  குரூப்பில் போட மீண்டும் உள்ளே சென்றார். வெளியே அமர்ந்திருக்கையில், மெழுகுச் சிலைகளை செய்ய ஒவ்வொருவரிடமும் எப்படி அளவுகளையும் முக அமைப்புகளையும் பெற்றார்கள் என்று டிவியில் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தனர்.



நண்பர் வீடியோ எடுத்துவிட்டு வெளியில் வந்தார். அங்கிருந்து "கர்லா குகை"யை நோக்கி புறப்பட்டோம். காலை 11:30 மணி அளவிலே ஒரு கடையில் சிக்கன் சாப்பாடு சாப்பிட்டோம். செல்லும் வழி முழுவதும் "மகன்லால் சிக்கி" என்ற விளம்பரம் கொண்ட கடலைமிட்டாய் கடைகள் இருத்தன. எப்படிதான் இருக்கிறது என்று பார்க்க ஒரு பெட்டி வாங்கினோம். லோனாவாலாவிலிருந்து புனே செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு 10கிமீ தொலைவில் இடதுபுறம் திரும்பி ஒரு 3கிமீ தொலைவு செல்ல வேண்டும் கர்லா குகைக்கு.  அதே நெடுஞ்சாலையில் வலது புறம் திரும்பினால் நாங்கள் காலையில் சென்ற "பாஜா குகைக்கு" செல்லலாம்.



கீழிருந்து மூன்று கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி மேலே செல்ல வேண்டும். மேலே செல்லும் பாதை மிகவும் செங்கூத்தாக இருந்தது. ஏராளமான கூட்டம் அங்கிருந்தது. வண்டி நிறுத்த இடமில்லாமல் சற்று தள்ளி நிறுத்தி வந்தோம். பௌத்த குகையை பார்க்க இவ்வளவு கூட்டமா என்று யோசித்தோம். உள்ளே குகைக்கு செல்லும் பாதை தானா என்று கேட்டுக் கொண்டே சென்றோம். ஒரு 200 படிக்கட்டுகளாவது ஏறிய பின்னர் தான் தெரிந்தது அங்கு ஒரு கோவில் உள்ளது என்று. அந்த கோவிலுக்குச் செல்ல தான் இவ்வளவு கூட்டம். 

"ஏக்வீரா" என்ற அந்த கோவில் குகைக்கு பக்கத்திலேயே உள்ளது. முன்பு குகையாக இருந்த ஒரு பகுதி சிதிலமடைந்ததால் அதனை அப்படியே ஒரு கோவிலாக கட்டி இருக்கின்றனர். இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. எட்டாம் எண் கர்லா குகைக்கு உள்ளே பிரம்மாண்டமான ஒரு சைத்தியம் உள்ளது. அது பௌத்த குகைகளிலேயே பெரிய சைத்தியமாகும். உள்ளே சென்று கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். ஒவ்வொரு தூணிலும் யானையும், குதிரைகளும் அதற்கு மேலே ஆணும், பெண்ணும் அமர்ந்திருக்குமாறு செதுக்கப்பட்டுள்ளது.  

குகையின் வெளியில் இரு புறத்திலும் பிரம்மாண்ட யானைகள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த குகை சாதவாகன ஆட்சி, கிபி 150 காலத்தை சேர்ந்ததாகும். குகை கட்ட கொடை அளித்தோரின் பெயர்களும் இருந்தது. 

கீழிறங்கும் வழியில் ஒரு தென்னை மரம் அளவு இருக்கும் அடி மரத்தினை ஒரு 4 அடி உயரம் வெட்டி வைத்திருந்தனர். அதன் தோல்கள் சீவப்பட்டு வழவழப்பாக இருத்தது. அதை சிறிய மாங்காய் துண்டுகள் போல நறுக்கி விற்கின்றனர். அருகில் சென்று அது என்ன என்று விசாரித்தோம். அது ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்தது என்று கூறினார். சுவைத்துப் பார்க்க இரண்டு துண்டுகளை வாங்கி சாப்பிட்டோம். துவர்ப்பு கலந்த சுவையாக இருந்தது. எங்களுக்கு பிடிக்கவில்லை.

கீழே இறங்கி புனே நெடுஞ்சாலையை அடைந்தோம். பாஜா குகையருகே படம் பிடித்த மற்ற குகைகளின் பெயர்களை கூகிளில் போட்டுப் பார்த்து வேறு ஏதாவது செல்லும் வழியில் உள்ளதா என்று பார்த்தேன். "பெட்ஸே" என்னும் குகை செல்லும் வழியில் பத்து கிமீ  உள்ளே உள்ளது என்று கூகிள் காட்டியது. 

மற்ற இரண்டு குகைகளைக் காட்டிலும் இது குறைவாக அறியப்பட்ட குகையாகும். அதனால் வழிப்பலகைகளும் ஏதும் இல்லை. அதனை நோக்கி புறப்பட்டோம். குகைக்கு பக்கத்தில் செல்ல வழியை தவற விட்டு கொஞ்சம் முன்னோக்கி சென்று விட்டோம். பின்பு அங்கிருந்த ஒரு சிறிய வழி பலகையில் பாதையினைப் பார்த்துச் சென்றால் அது ஒரு தோட்டத்திற்குள் சென்று விட்டது. அங்கிருந்து செல்ல வழி ஏதும் இருக்கவில்லை. மீண்டும் திரும்பி வந்து வழிபலகையை ஒழுங்காகப் பார்த்து ஒரு ஒற்றையடி பாதை போல் இருந்த ஜல்லிசாலைக்கு வந்தோம்.



அங்கிருந்து பார்க்கையில் எதுவுமே தெரியவில்லை. மலை அடிவாரத்தில் ஒரு சிறு அறை மட்டும் இருந்தது. அங்கு பக்கத்தில் சென்ற போது தான், ASI யினால் பொறிக்கப்பட்ட "பேட்சா குகை" என்னும் பலகை கண்ணுக்குப் பட்டது. அங்கு வண்டியினை நிறுத்திவிட்டு ,மேலே ஏறினோம். மதிய வெயில் சுட்டெரித்தது. தண்ணீரும் மிகவும் கொஞ்சமாகவே இருந்தது. பயணம் முழுவதும் ஷூ அணிந்திருந்ததால் சிரமப்படாமல்  நடக்க முடிந்தது. செருப்பு அணிந்து இவ்வளவு தூரம் நடந்திருக்க முடியாது. கற்படிக்கட்டில் ஏறி மேலேச் சென்றோம்.

மேலே நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். படிக்கட்டுக்கு இடுக்குகளில் சிமெண்ட்  பூசிக்கொண்டிருந்தனர். மேலே ஒரு இளைஞன் சாப்பிட்டுகொண்டிருந்தான். குகைகைளின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது. அதனால் காலைவேளையில் குகைகளை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

சாதவாகனர் ஆட்சிக்கு முன் கிமு ஒன்றாம்  நூற்றாண்டில் இந்த குகை நிறுவப்பட்டுள்ளது. பேட்சா குடைவரை குகைகள் இரண்டு முக்கியத் தொகுதிகளாக உள்ளது. இதில் குகை எண் 7ல் சைத்தியத்துடன் கூடிய பிக்குகளின் தியான மண்டபமும், பெரிய தூபியும் உள்ளது. இங்குள்ள தூண்களும், தூபியும் கணித விகிதாச்சாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பை அங்கு பொறித்து வைத்துள்ளனர். 

குகை எண் 11ன் குடைவரை விகாரத்தின் நுழைவாயில், குதிரை லாட வடிவத்தில் உள்ளது. இந்த விகாரத்தில் பல்வேறு சிறு குகைகள் கல்பலகைகளுடன் பௌத்த பிக்குகள் ஓய்வெடுக்க செதுக்கப்பட்டுள்ளது. இந்த விகாரம் ஒரு தியான மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நண்பர் ஒரு vlog செய்ய பல முயற்சிகள் செய்து, வீடியோ எடுத்து வாட்ஸாப் குரூப்பில் போட்டார். நானும் எடுக்க முயற்சி செய்தேன், பேச்சு திணறிக்கொண்டே இருந்ததால் விட்டு விட்டேன். நான் வீடியோ எடுப்பதை பார்த்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் அந்த குகையினைப் பற்றி கூறும்படி கேட்டனர். நானும் அந்த குகையின் அமைப்பை ஆங்கிலத்தில் சொல்லி விளக்கினேன். ஒரு சுற்றுலா வழிகாட்டியாகி விட்டோமே என்று மனதிற்குள் புன்னகையுடன் நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து கீழே இறங்கி புனேவை நோக்கி புறப்பட்டோம். வழியில் திராட்சை கொஞ்சம் வாங்கிக்கொண்டு சென்றோம். புனேவிற்கு ஆறு மணி அளவில் சென்றோம். முந்தைய நாள் சாப்பிட்ட சிக்கன் மோமோஸ் கடைக்கு சென்று மோமோஸ் சாப்பிட்டோம். அங்கிருந்து வண்டியினை சுதீரிடம் கொடுத்துவிட்டு நடந்தே கொஞ்ச தூரம் சென்றோம்.

இரவு 9:30 க்கு புனேவிலிருந்து அவுரங்காபாத்திற்கு ரயில் டிக்கெட் போட்டிருந்தோம். ஒரு தள்ளு வண்டி கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டிட்டோம். அங்கு நிறைய குட்டி ஸ்டூல்கள் போட்டு வைத்திருந்தனர். சாப்பிட வருபவர்கள் அதிலே அமர்ந்து சாப்பிடலாம். வழக்கம் போல், கல்லூரி நண்பர்களும் , காதல் ஜோடிகளும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நாங்கள் சாப்பிட்டுவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் சென்றோம். ரயில் ஏறி, புறப்பட ஆரம்பமானதும், நானும்,நண்பரும்  அவரவர்  படுக்கையில் படுத்தோம்.நண்பர் படுத்த உடனேயே உறங்கி விட்டார். நானும் சிறிது நேரத்தில் உறங்கி விட்டிருந்தேன். 

அடுத்த நாள் அவுரங்காபாத்தில் விடியல்.

Wednesday, 12 April 2023

மகாராஷ்டிரா பயணம் (2)

காலை ஐந்து மணிக்கு விழித்தோம். பக்கத்து அறைகளில் விருந்தாளிகள் யாரும் இல்லாததால் சும்மா தான் சாத்தி வைத்திருந்தார்கள். அதனால் நான் ஒரு அறைக்குச் சென்று குளித்து வந்தேன். காலை 6 மணியளவில் விடுதியை காலி செய்து விட்டு கிளம்பினோம். முதலில் கடக்வாஸ்லா அணைக்கு செல்வதென்று முடிவு செய்து அதற்கு கூகிள் மேப் போட்டுக்கொண்டு Activaவில் கிளம்பினோம். காலை வேளையில் குளிர் நன்றாகவே இருந்தது. வழியில் இரண்டு மூன்று பேர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சாலைகள் நன்றாக இருந்ததால் ஓட்டுவதற்கு பெரிதும் சிரமமில்லாமல் இருந்தது. 

இருபது நிமிடத்தில் அணையின் அருகில் சென்றோம். ஆனால் அங்கிருந்து அணைக்குச் செல்லும் வழியில் செல்லாமல் தவறுதலாக வேறு வழியில் சென்று கொண்டிருந்தோம். காலை வேலையில் அணைக்கட்டிற்கு பின்புறம் நீர் இல்லாமல் இருக்கும் பாறைகளின் மேல் ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். சாலையின் இரு மருங்கிலும் பிளாஸ்டிக் குப்பைகளாக இருந்தது. திரும்பவும் வந்த வழியாகவே சென்று, அணையினை அடைந்தோம்.

கடக்வாஸ்லா அணை முத்தா நதி மீது கட்டப்பட்டுள்ளது. 'முத்தா' நதி புனே நகரில் பல இடங்களில் செல்கிறது. ஆனால் பெரும்பாலும் சாக்கடை கலந்த நீராகவே உள்ளது. இது 'மூலா' என்னும் நதியுடன் இணைந்து 'மூலா-முத்தா' நதியாகிறது. அணைக்கு கீழே நீரில் கால் நனைக்க இறங்கினோம். அங்கு ஏற்கனவே நான்கைந்து இளம் பெண்களும், இளைஞர்களும் நீரில் விளையாடிக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தனர். அணையின் நீர் அருகில் பார்க்க தெளிவாக இருந்தது. அடியில் இருக்கும் சிறு கற்களும் தெளிவாக தெரிந்தது. அலைகள் மெல்லியதாக இங்கும் அங்கும் கரையை நோக்கி வந்தது. காலை வேளையில் காற்றும், அலையும், கருநீரும் மனதிற்கு இதமாக இருந்தன. 


அணையிலிருந்து சின்ஹட் கோட்டையை நோக்கி கிளம்பினோம். காலை எட்டு மணியளவில், கோட்டை இருக்கும் மலை அடிவாரத்தில் வண்டியினை நிறுத்தி ஆளுக்கொரு டீ அருந்தினோம். மேலே சென்று சாப்பிட பொரி பாக்கட்டுகளும், தண்ணீர் பொத்தல்களும் வாங்கிக் கொண்டோம். கோட்டைக்கு செல்லும் வழி நன்றான தார் சாலையாகவே இருந்தது. கோடைக்காலமாதலால் இருபுறமும் மரங்கள் எலும்பு கூடுகளாக நின்றன. ஒரு சில இலைகளே மரங்களில் தங்கி இருந்தது. தன்னுடைய சதையை எல்லாம் உதிர்த்து, புது ஆடை அணிய மழைக்கு வேண்டி நிற்கும் மரங்களாக அவை காட்சி அளித்தன. 

காலை சூரியன் மலைகளின் மேல் தன் பொன்னிறக் கரங்களால், மலையில் உள்ள அத்தனை புற்களுக்கும் மஞ்சள் நிறத்தினால் ஒளியூட்டினான். ஒரு இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அங்கு ஏற்கனவே இரண்டு scootyகளில் 4 இளம் பெண்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து  இரண்டு வண்டிகளில் மூன்று இளைஞர்கள் வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தினர். அங்கிருந்து கிளம்பி ஒரு ஐந்து நிமிட தொலைவில் உள்ள கோட்டையின் வாசலுக்குச் சென்று வண்டியை நிறுத்தினோம்.



ஏற்கனவே கார்களிலும், வண்டிகளிலும் அங்கு மக்கள் இருந்தனர். வெயில் ஏறத் தொடங்கியது. ஆனால் மிதமானதாகவே இருந்தது. கோட்டைக்கு இரு வாசல்கள் இருந்தது. ஒன்று புனே தர்வாஜா, மற்றொன்று கல்யாண் தர்வாஜா. புனே  தர்வாஜா வழி மட்டுமே இப்பொழுது புழக்கத்தில் உள்ளது. முதல் மலைக் கோட்டையினை நான் பார்க்கிறேன். இவ்வளவு உயரத்தில், கோட்டைக் கட்டி தங்களை பாதுகாத்து ஆட்சி செலுத்திய அரசர்களை எண்ணிக் கொண்டேன். கோட்டைவாசல் கதவிலிருந்து கல் படிக்கட்டுகள் வழியாக மேலேறி உள்ளே சென்றோம்.

கோட்டைக்குள்ளே பெரும்பாலும் எந்த ஒரு பெரிய கட்டிடமும் இல்லை. சிறு அறைகள், காவல் மாடங்கள் போன்ற பகுதிகள் உள்ளது. கோட்டையைச் சுற்றி மூன்று பக்கமும் மலைகளே. அதனால் இந்த கோட்டையினை பிடிப்பது அக்கால அரசியலில் முக்கியமான விஷயமாகும். கோட்டையின் சிறு  வரலாறு ASIயால் உள்ளே அங்கங்கே பொறிக்கப்பட்டுள்ளது.  

இந்த கோட்டை சத்ரபதி சிவாஜியின் ஒரு தளபதியான 'தானாஜி மாலுசரே' என்பவரின் வீரத்தால் புகழ் பெற்றது. தானாஜி அவர்களுக்கு நினைவு மணடபம் கோட்டையில் உள்ளது. மராத்தா ராஜ்யத்திற்காக தானாஜி சிறு படையினை வைத்துக் கொண்டு, எப்படி இக்கோட்டையினை கைப்பற்றினார் என்று ஓவியமாக மண்டபத்தில் தீட்டப்பபட்டுள்ளது.  தானாஜி வில்லோடும், வாளோடும், துப்பாக்கியோடும் என்று பல்வேறு வகையில் அழகாக இங்கு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளார். 



தானாஜியின் நினைவு மண்டபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், மூன்று இளைஞர்கள், உள்ளிருந்து வெளியே வந்தனர். அவர்கள் நவ நாகரீமாக உடை அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் இந்த நினைவு மண்டபம் பற்றி ஆங்கிலத்தில்  விசாரித்தேன். அப்பொழுது தான் தெரிந்தது அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று. ஒரு சராசரி அடிப்படை ஆங்கிலம் கூட தெரியாமல் அவர்கள் கல்லாரியில் படிக்கின்றனர். ஒரு சிறு வாக்கியத்தினைக் கூட பேச அவர்களால் முடியவில்லை. இது அங்கு மட்டும் இல்லை. ஒட்டு மொத்தமாகவே நாங்கள் சுற்றிய எட்டு  நாட்களில் ஏறத்தாழ இதே மாதிரி பல்வேறு இளைஞர்களை சந்தித்தோம். ஹிந்தியும், மராத்தியும் மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். ஆங்கிலம் என்று ஒரு மொழி உலகத்தில் உள்ளது என்று அவர்களுக்கு தெரியுமா என்றுகூட சந்தேகப்பட வேண்டி உள்ளது.



அங்கிருந்து கிளம்பி கோட்டையை ஒரு சுற்று சுற்றி வந்தோம். கல்யாண் தர்வாஜா வரைக்கும் சென்று திரும்பி வந்தோம். காலை இளவெயிலில் மலை உச்சியில் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. வரும் வழியில் பெரிய கொய்யாக்காய் ஒன்றை வாங்கி கொறித்துக் கொண்டே இறங்கினோம். 

11 மணியளவில் கீழே இறங்கினோம். ஒரு கடையில் வடா பாவும், இன்னொரு வகை உணவும் சாப்பிட்டோம். அங்கிருந்து ராஜ்காட் கோட்டைக்கு செல்ல முடிவு செய்து கிளம்பினோம். கூகுல்  மேப்பில் ஒரு மணி நேரம் காட்டியது. வழி ஒரு 5கிமீ சென்றதுமே மிகவும் மோசமாக இருந்தது. திரும்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டே சென்றோம். Activa பழுது ஆகி விடுமோ என்ற அச்சம் வேறு. வழி முழுவதும் ஜல்லி தட்டி வைத்திருந்தனர். ஒரு வழியாக ஒரு 15 நிமிடத்தில் நல்ல சாலையை சென்றடைந்தோம்.



அங்கிருந்து மலை மேல் ஏறிக் கொண்டே இருந்தோம். மேடு பள்ளமாக  மலை எழுந்தும் இறங்கியும் அதன் வளைவு சுளிவுகளில் நாங்களும் ஊர்ந்து சென்று கொண்டே இருந்தோம். வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. வெயிலில் காய்ந்து மஞ்சள் நிறமாக நின்றது மலை. சில இடங்களில் நெருப்பால் எரிந்து கருநிறமாக இருந்தது. "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடலில் ஜீவாவும், அஞ்சலியும் சைக்கிளில் செல்லும் போது தெரியும் காட்சியாக மலைகள் காய்ந்து பறந்து விரிந்து இருந்தது.


மதிய வெயில் ஆனாலும், வெப்பம் அவ்வளவாக தெரியவில்லை. ஒரு ஆற்றின் ஓரமாக வழி சென்ற போது, அங்கு ஒரு 20 இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். கல்லூரி சுற்றுலாவிற்கு வந்தவர்கள் போல் இருந்தனர். நீர் கருநிறமும், செந்நிறமுமாக கலந்து சென்றது. நாங்களும் குளிக்க முடிவு செய்தோம். எனக்கு சுமாரான நீச்சல் மட்டுமே தெரியும் என்பதால், முதலில் ஒரு தயக்கம் இருந்தது. கரையோரம் ஆழம் அதிகம் இல்லை என்று அறிந்ததும், நானும் குளிக்க தயாரானேன்.  வெயிலுக்கு நீரின் குளுமை நன்றாக இருந்தது. கரையோரம் நிறையபேர் குளித்ததால், நீர் கலங்கி செம்மண் போன்று இருந்தது. கொஞ்சம் உட்புறம் தெளிவாக இருந்தது. ஜெயமோகன் அவர்களின் 'முகங்களின் தேசம்' வாசித்த போது ,ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் ஒரு ஆற்றினைக் கடந்து செல்கையில் அவர்கள் இறங்கி நீந்தி, குளித்து விட்டு சென்றனர் என்று எழுதி இருப்பார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட பொறாமையை இந்த ஆற்றில் குளித்து கரைத்தேன்.



அங்கிருந்து ராஜ்கட் கோட்டைக்கு தொடர்ந்தோம். ஒரு இடத்தில பெட்ரோல் குறைவாக இருப்பதைக் கண்டு, ஒருவரிடம் விசாரித்து பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்திற்கு ஒரு U டர்ன் செய்து சென்றோம். அங்கிருந்து துங் கோட்டை பக்கத்தில் இருப்பதாக கூகுள் சொல்லியது. ஒரு 5 நிமிடத்தில் துங் கோட்டையின் அடிவாரத்திற்குச் சென்றோம். ஆனால் அந்த வழி பராமரிப்பிற்காக மூடி விட்டதாக சொன்னார்கள். எனக்கு தெரிந்த அரை ஹிந்தியை வைத்துக் கொண்டு பாதி புரிந்தும், புரியாமலும் பயணம் முழுவதும் அங்குள்ள மக்களிடம் பேசினேன். கோட்டைக்கு வேறு வழி திறந்திருப்பதாகவும், அதற்கு மலையைச் சுற்றி செல்ல வேண்டும் என்றும் சொன்னார்கள். நாங்கள் சரி என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினோம். ஆனால் ராஜ்கட் கோட்டைக்கு மேப் போட்டுக்கொண்டு சென்றோம்.

போகும் வழியில் ஒரு தட்டு போண்டாவும், ஒரு இடத்தில் கரும்பு சாரும் உண்டு சென்றோம். ராஜ்கட் கோட்டைக்கு செல்லும் வழி புதிர் நிரம்பியதாக இருந்தது. கடைசி 5 கிமீக்கு கிட்டத்தட்ட ஒரு ஒற்றைவழி பாதையிலும், கரடு முரடான பாதையிலும் சென்றோம். வண்டியை நினைத்தே பயந்து கொண்டிருந்தோம். ஒரு வழியாக கோட்டையின் அடிவாரத்தை அடைந்ததும், அங்கு ஒரு சிறிய கடை இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு, அங்கிருந்து கோட்டைக்கு நடந்து மட்டும் தான் செல்ல முடியும் என்று சொன்னார். அதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும் என்றார். நாங்கள் மலைப்படைந்தோம். மணி இரண்டாகியது. நாங்கள் யோசித்து கோட்டைக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம்.

பெரும்பாலும் அங்கிருக்கும் கோட்டைகளை நடந்து (trek) மட்டுமே அணுக முடியும் என்று அப்போது தான் புரிந்து கொண்டோம். எல்லா கோட்டைகளுக்கும் சிங்கட் கோட்டை போன்று பாதை இருக்கவில்லை. அந்த சிறு கடையிலே  மதிய உணவினை (போஹாவும், ரொட்டியும்)  முடித்துக்கொண்டு கிளம்பினோம். கிளம்பும் போது மூன்று இளைஞர்கள் இறங்கி வந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அதிகாலையிலே, மேலேறி சென்றனர் என்று சொன்னார்கள். கோட்டைக்குச் செல்ல காலைப் பொழுது மட்டுமே சிறந்தது.

அங்கிருந்து புனேவைக் நோக்கி கிளம்பினோம். 20கிமீ தொலைவு கிராமங்களில் சுற்றி ஒரு NH பாதையை பிடித்தோம். வழியில் ஒரு பெரிய சுரங்கப்பாதை வழியே சென்றோம். அது எப்படியும் ஒரு கிமீ  ஆவது இருந்திருக்கும். அங்கிருந்து கட்ராஜ் ஜெயின் கோவிலுக்குச் சென்றோம். கோவில் உள்ளே சென்று ஒரு இடத்தில பைகளை வைத்து விட்டு, முகம்,கை, கால் கழுவிக் கொண்டு உள்ளே சென்றோம். நான் பார்க்கும் முதல் சமணக்  கோவில் இதுவே. கோவிலில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளது. மகாவீரரின் பெரிய சிலையையும் கண்டோம். 

சமணக் கோவிலைப் பார்த்துவிட்டு, 'ஓஷோ சர்வதேச ஆசிரமம்' நோக்கி புறப்பட்டோம். அந்த இடமும் நாங்கள் வண்டி எடுத்த இடமும் பக்கத்தில் தான். ஆசிரமம் அமைந்திருக்கும் பகுதி மேல் வர்க்க இடம் போல் இருந்தது. நன்றாக போடப்பட்ட சாலைகள். இரு மருங்கிலும் பன்னாட்டு கடைகள். ஒரு சில வெளி நாட்டினவர் கூட தென்பட்டார்கள். ஆசிரமம் உள்ளே செல்ல முயல்கையில் அங்கிருக்கும் காவலாளி, முன் பதிவு செய்ய வேண்டும் என்றும், நாளைக்கு தான் ஆசிரமம் பார்க்க முடியும் என்றும் சொன்னார். சாலை முடிவில் ரோட்டில் விற்கும் இளனிக்கடையில் நாங்கள் இருவரும் ஆளுக்கொரு இளநீர் குடித்தோம். அந்த கடைக்காரர் தான், பக்கத்தில் ஓஷோ பூங்கா உள்ளது  என்றும், அது பொதுப் பூங்கா தான் என்றும், ஆறு மணி வரை திறந்திருக்கும் என்றும் சொன்னார்.



பக்கத்து சாலையில் உள்ள அந்த பூங்காவிற்கு சென்றோம். வெளியில் பல்வேறு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தது. நாங்களும் Activa வை அங்கு நிறுத்தி விட்டு, உள்ளே சென்றோம். அங்கு ஒரு ஓஷோ சிலை இருந்தது. அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். ஒரு சாலையின் இரு மருங்கிலும் பூங்கா உள்ளது. நகரின் நடுவே சூரிய ஒளி படாத அளவிற்கு அடர்ந்து  வளர்ந்திருக்கும் மரங்கள். பூங்காவின் நடுவிலே, சாக்கடை நீர் போல ஒரு ஓடை ஓடுகிறது. மற்ற பூங்காக்களில் இருப்பது போன்று இங்கும் ஒரே காதலர் கூட்டம் தான். அதனைப் பார்த்து, வாழ்க்கையில் இந்த மாதிரி அனுபவித்திராத இளமை பருவத்தினை பேசிக் கொண்டே வந்தோம். 

ஒரு 6:10 மணி வாக்கில் உள்ளே பூங்காகாவலாளி வந்து, வெளியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்களை, காவல் துறையினர் வண்டியில் ஏற்றிச் சென்று விட்டதாக கூறிக் கொண்டு சென்றார். நான் ஓடிப்போய் பார்ப்பதற்குள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வண்டியும் இல்லை. ஓஷோ பூங்கா வருவதற்கு வழி கேட்கும்போது, ஒரு சிறுவன் அந்த தெருவில் பார்க்கிங் இல்லை என்று சொன்னான். நான் தான் மற்ற வண்டிகள் எல்லாம் நிறுத்தி இருக்கிறதே என்று, எங்கள் வண்டியையும் நிறுத்தினோம். அருகில் இருந்தவர்கள் காவல் வண்டி பக்கத்து தெருவிற்கு சென்று விட்டதாக கூறினார்கள். நாங்கள் ஓடிச் சென்றோம். சாலை முடியும்  இடத்தில், ஓரமாக வண்டியினை நிறுத்தி இருந்தனர். அனைத்து வாகனங்களும், காவல் வண்டியின் மேல் இருந்தன. 

வழக்கம் போல், பேரங்கள் ஆரம்பமாயின. அவரவர் தங்கள் வாகனத்தைத் தரும் படி கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சற்று பதட்டமாக இருந்தேன். எங்கு போக்குவரத்து காவலாளியைக் கண்டாலும் எனக்கு ஒரு சிறு நடுக்கம் ஏற்பட்டு விடுகிறது. எல்லா ஆவணங்களும் இருந்தாலும் அந்த நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது சட்டத்தின் மேல் இருக்கும் பயம் இல்லை. சட்டத்தை அமல்படுத்தும் மனிதன் மேல் இருக்கும் பயம்.  சட்டம் என்பதே அதை அமல்படுத்தும் போதுதான் உயிர் பெறுகிறது. அதுவரை அது ஒரு வாக்கியம் மட்டுமே. அதை அமல்படுத்துபவருக்கு இருக்கும் அனிச்சையாக முடிவெடுக்கும் ஆற்றலைக் கண்டு தான் இங்கு எல்லோரும் பயப்படுகிறார்கள். ஒரே குற்றத்துக்காக, ஒவ்வொருவருக்கும், வெவ்வேறு வகையான சட்டத்தினை அவர்கள் நினைத்தால்  உபயோகிக்கலாம்.  

எங்கள் வண்டியின் எண்ணை கருவியில் போட்டுப் பார்த்து, அதற்கு ருபாய் 5000க்கு மேல் அபராதம் உள்ளதாக அந்த காவலாளி சொன்னார். நாங்கள் சுற்றுலாப் பயணி என்றும், எங்கள் நண்பரின் வாகனம் அது என்றும் சொன்னோம். 

எத்தனை முறை நாம் அடிபட்டாலும் , திரும்ப திரும்ப அதே தவறை ஏன் செய்கிறோம் என்றே தெரியவில்லை. அதிகாரத்திடம் கருணையை எதிர்பார்ப்பது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. ஆனால் அதைத்தான் எப்போதும் நாம் செய்கிறோம். நாம் கெஞ்ச ஆரம்பிக்கும் போது தான், அவர்களின் அதிகார பம்பரம் வேகமாக சுற்றும். ஆனால் அதை விட்டாலும் வேறு வழி இல்லை. ஒன்று பேரம் பேசி பணம் கொடுத்து தப்பிப்பது. இல்லையேல் கெஞ்சி கூத்தாடி கூடுதல் பணம் கொடுத்து தப்பிப்பது. இரண்டாவது மட்டுமே நாம் செய்கிறோம். முதல் வகையினை நாம் செய்ய காவல்துறை மீதுள்ள பயமும், நடுக்கமும் நம்மைத் தடுக்கிறது. 

அந்த இடத்தில ஒரு காதல் ஜோடிகளின் வாகனமும் இருந்தது. அவர்கள் பேரம் பேசி ஒரு தொகைக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் கையில் பணம் இல்லை. எங்களிடம் அவர்கள் GPay செய்வதாக ஒரு 500 ரூபாயை கேட்டனர். அப்பொழுது எங்களிடம் கையில் காசு இருந்தது. ஆனால் எந்த காரணத்தாலாயோ அவர்களிடம் அதை கொடுக்கவில்லை. அது அவர்கள் மேல் உள்ள பொறாமையாக இருக்கலாம். நம் வண்டி மாட்டிக்கொண்டு இருக்கும்போது அவர்கள் மட்டும் எப்படி தப்பித்துச் செல்லலாம். அல்லது அந்த சூழ்நிலையின் நடுக்கமாக இருக்கலாம். முடிவெடுக்கும் நொடியினை கடந்து விட்டால், அது எப்போதும் ஒரு குற்ற உணர்ச்சியாக தங்கி விடுகிறது.

நான் கொஞ்ச நேரம் பார்த்து, இது வேலைக்காகாது என்று, வாகன உரிமையாளரான சுதிரை அழைத்தேன். அவரும், இன்னொருவரும் பத்து நிமிடத்தில் அந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் மராத்தியில் பேரம் பேசி, 200 ரூபாய்க்கு முடித்து, வண்டியை தந்து விடுமாறு சொல்லிவிட்டு சென்றனர். நாங்கள் அரைமணி  நேரத்தில் வந்து வண்டியினை விடுவதாக அவரிடம் சொன்னோம். 

வண்டியினை பெற்றுக் கொண்டு அந்த பகுதியில் இருக்கும் தெருக்களில் சுற்றி வந்தோம். அந்த பகுதியில் பல்வேறு கடைகளும், இளைஞர் கூட்டமும் அதிகம் இருந்தது. நாங்கள் ஒரு momos கடையில் வண்டியை நிறுத்திவிட்டு ஆளுக்கொரு சிக்கன் மோமோஸ் சாப்பிட்டோம். அப்பொழுது அங்கு ஒரு ஜோடி தமிழில் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் அங்குள்ளவர்களுக்கு தெரியாது என்றெண்ணி பேசிகொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை. நான் அவர்களை கவனித்துக் கொண்டே நண்பரிடம் தமிழில் ஏதோ பேசினேன். அந்த இளைஞன் திடீரென்று அதிர்ச்சியுடன் முகம் மாறிப்போய் எங்களைப் பார்த்தான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்கள். இளைஞர் கூட்டத்தினைப் பார்க்கும்போது சற்றே பொறாமையாக இருக்கிறது. 

momos சாப்பிட்டு முடித்து விட்டு எங்கு இரவு ரூம் போட்டு தங்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் லோனாவாலா போகத் திட்டம் இருந்தது. ஆனால் இந்த Activaவில் அவ்வளவு தூரம் செல்ல முடியாது. அதனால் சுதிரிடம் சென்று வேறு வண்டி வாங்கினோம். Honda Shine வாங்கினோம். ஒரு நாள் வாடகை 800 சொன்னார். நாங்கள் பேரம் பேசி 650க்கு கொண்டு வந்தோம். அங்கிருந்து வண்டி எடுத்துக் கொண்டு பக்கத்து சாலைகளில் ஏதாவது ரூம் இருக்கிறதா என்று பார்க்கப் போனோம். 45 நிமிடம் தேடியும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாததால்,நண்பர் அவரின் மனைவிக்கு போன் செய்து onlineல் ரூம் பார்க்க சொன்னார். பக்கத்திலேயே ஒரு நல்ல ரூம் பதிவு செய்து கொடுத்தார்கள். வண்டி திடீரென்று ஸ்டார்ட் ஆகவில்லை. அங்கேயே சுதிருக்கு போன் செய்து வேறு வண்டி (Hornet) பெற்று கிளம்பினோம்.

zomatoவில் ஒரு கிரில் சிக்கன்  ஆர்டர் செய்து சாப்பிட்டோம். நான் சென்று எனது துணிகளை துவைத்துப் போட்டேன். பின்னர் பக்கத்தில் இருக்கும் ஒரு தள்ளு வண்டி கடைக்கு சென்று உணவு உண்டோம். ஒரு இனிப்பு பீடாவும் ஆளுக்கொன்று வாங்கிப் போட்டோம். 

அடுத்த நாள் காலை 6 மணிக்குள் லோனாவாலாவுக்கு கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்து உறங்கினோம்.