காலை 4:30 மணி அளவில் அவுரங்காபாத் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். ரயில் வந்து சேர வேண்டிய நேரத்திற்கு 15 நிமிடம் முன்பாகவே வந்தது. ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து,எதிரே உள்ள ஒரு தெருவில் நுழைந்தோம். அங்கு பல்வேறு விடுதிகள் இருந்தன. காலையில் ஆள் அரவமற்று இருந்தது.
ஒவ்வொரு விடுதிகளாக ஏறி இறங்கி பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். அப்பொழுது விடுதி பிடித்துக் கொடுக்கும் ஏஜென்ட் ஒருவர் வந்து 24 மணி நேர விடுதி வேண்டுமா என்று கேட்டார். எங்களுக்கும் 24 மணி நேர விடுதி தான் வேண்டும். இணையத்தில் பதிவு செய்தால் மதியம் 12 மணி முதல் அடுத்த நாள் 12 மணி வரை தான் தங்க முடியும். காலையில் 5 மணி முதல் தங்கினாலும் மதியம் 12 மணிக்கு அறையின் ஒரு நாள் வாடகை கொடுக்க வேண்டும். அதனால் நாங்கள் 24 மணி நேர அறைகளை தேடினோம்.
ஒரு அறை பேரம் பேசி 800 ரூபாய்க்கு எடுத்தோம். 5:30 மணிக்கு சிறிது நேரம் உறங்கலாம் என்று படுத்தோம். ஆனால் உறக்கம் வரவில்லை. காலையில் எட்டு மணிக்கு நகரில் உள்ள இரு சக்கர வாகனம் வாடகைக்கு தரும் இடத்திற்குச் சென்றோம். அறையிலிருந்து முப்பது ரூபாய் ஆட்டோ வாடகை தூரத்தில் இருந்தது அது.
நிறைய வண்டிகள் வெளியே நிறுத்தி வைத்திருந்தார்கள். நாங்கள் இரும்பு ஏணியில் ஏறி அங்கிருந்த அலுவலகத்திற்கு சென்றோம். அவர்களுடைய இணையதளத்தில் என்னுடைய ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தேன். நண்பர் வண்டிகளை ஓட்டிப்பார்த்து கொண்டிருந்தார். அங்கிருந்து ஒரு வண்டியினை எடுத்துக் கொண்டு எல்லோராவை நோக்கி கிளம்பினோம். செல்லும் வழியில் ஒரு வடா பாவும், போகாவும் சாப்பிட்டோம். சாலை நன்றாக இருந்ததால் வேகமாக செல்ல முடிந்தது.
எல்லோராவின் உள்ளே நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு சென்றோம். கவுண்டரில் எல்லோராவின் ASI புத்தகத்தை வாங்கிக் கொண்டோம். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லும் போது ஆளுக்கொரு உருண்டை குல்லாயினை வாங்கிப் போட்டுக்கொண்டோம்.
சிறிதுநேரம் உள்ளே நடந்ததும், எதிரில் தெரியும் மலையில், மனித கைகள் செய்த பிரம்மாண்டம் விரிய தொடங்கியது. மலை நமக்கு இடதுபுறம் (வடக்கு) இருந்து வலது புறம் வரை விரிந்திருந்தது. மலையில் கல் பொக்கிஷங்களை குடைந்திருந்தனர். நமக்கு நேர் முன்னாள் நடுமலையில் காட்சி தருவது கைலாசநாதர் குகை கோயில். அந்த பிரம்மாண்டத்தின் காட்சியை கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணில் எங்கோவொரு துளி கண்ணீர் சொட்டியது. அங்கிருந்து பார்க்கையில் மலை முகட்டிற்கு மேலே கோபுரம் உயர்ந்து நிற்கும். வரும் தலைமுறையினர் அதை செதுக்கியோரை அண்ணாந்து பார்க்கும் குறியீடு தான் அதுவோ.
எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் தளம் ஆகும். தமிழ்நாட்டிலிருந்தும் நிறைய பேர் வந்திருந்தனர். ஒரு கல்லூரி சுற்றுலா குழுவும் இருந்தனர். கல்லூரியில் இது போன்ற இடங்களுக்கு சுற்றுலா கூட்டி செல்கிறீர்களா என்று ஆச்சரியப்பட்டேன். அந்த கல்லூரிக் குழுவின் பேராசிரியர எல்லோராவைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.
நாங்களும், வாங்கிய ASI புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தோம். நான் ஒவ்வொன்றாக படித்து நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். எல்லோரவின் குகைகள் மூன்று வகைகளாக உள்ளன . மொத்தம் 34 குகைகள். இக்குகைகள் கிபி 5 முதல் 10 ஆம் நூற்றாண்டுகளுக்குள் அமைக்கபட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளது. வலது புற எல்லையிலிருந்து தொடங்குபவை பௌத்த குகைகள். நடுவில் இந்து குகைகள். இடது புறத்தில் இருப்பவை சமண குகைகள்.
கைலாச நாதர் குகை கோயிலின் உள்ளே நுழைந்தோம். உள்ளே சென்றதும் இடது புறம் பிரம்மாண்டமான கல் யானையைக் கண்டோம். முன் நந்திமண்டபமும், அடுத்து பெரிய கோபுரமும் உள்ளது. அனைத்தும் கல்லால் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது. முதலில் கோவிலின் உள்ளே ஒரு சுற்று சுற்றி வந்தோம். இடது மற்றும் வலது புற சுவர்களில் மகாபாரத மற்றும் இராமாணயத்தில் வரும் காட்சிகள் ஓவியங்களாக தீட்டி வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கோபுரத்திற்கு உள்ளே செல்ல ஒரு அடுக்கு மேலே ஏறி செல்ல வேண்டும். மலை நோக்கி செல்ல உயரம் கூடிக்கொண்டே இருக்கும். அதனால் முகப்பிலிருந்து பார்க்கும் போது வாசல் கீழ் தளத்திலும், கோபுரம் பல்வேறு அடுக்குகள் மேலேயும் இருக்கும். உள்ளே இருள் நிறைந்திருந்தது. வெளியில் வந்து மீண்டும் கீழே இறங்கி சுற்றுச் சுவர்களை சுற்றிப் பார்த்தோம். சுவர்களில் இருந்த பறக்கும் தேவதை சிற்பங்கள் என்னை மிகவும் ஈர்த்தது.
கைலாசநாதர் கோவிலை பார்த்துவிட்டு வெளியில் வந்தோம். நண்பர் மொபைலில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீபிடம் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் அப்படியே கோவிலின் வெளிப்புறத்தில் இருக்கும் அடுத்த குகையின் மேலே ஏறினோம். மேலிருந்து கீழ்நோக்கி கண்டிப்பாக கைலாசநாதர் கோவிலைப் பார்க்க வேண்டும்.
புத்தகத்தில் கொடுத்திருக்கும் செய்திகளை கொண்டு குகையில் உள்ள சிற்பங்களையும், அமைப்பையும் புரிந்து கொள்ள முயன்றோம். குறைந்தது நான்கைந்து முறை ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்து பொறுமையாக பார்த்தால் தான் அனைத்து குகைகளையும் ஓரளவிற்கு பார்க்க முடியும். வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது. தொப்பி வாங்கியது நல்லதாகவே போனது.
அங்கிருந்து நேராக வலது புற எல்லையில் அமைந்துள்ள புத்த குகைகளுக்கு சென்றோம். முந்தைய நாள் பார்த்த மூன்று பௌத்த குகைகளின் அனுபவங்களைக் கொண்டு குகைகளின் அமைப்பை புரிந்து கொண்டேன். சைத்தியங்களையும், விஹாரங்களையும் பார்த்துக் கொண்டு சென்றோம். புத்தர் ஞான முத்திரையில் சிலையாக வடிக்கப்பட்டிருந்தார். இரண்டடுக்கு, மூன்றடுக்கு குகைகளும் இருந்தன. சில குகைகளில் வேலைப்பாடுகள் அதிகம் இருந்தன.
நாங்கள் அனைத்து குகைகளையும் பார்க்காமல், அங்கிருந்து இடது புற எல்லை இருக்கும் சமண குகைகளை காண நடந்து சென்றோம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அங்கு பேட்டரியால் இயக்கப்படும் வண்டிகள் சென்று கொண்டிருந்தன. அதற்கு தனியாக டிக்கெட் வாங்க வேண்டும் என்றெண்ணி நாங்கள் நடந்தே சென்றோம். 20 நிமிடம் வெயிலில் நடந்த பின்பு எங்களை கடந்து சென்ற ஒருவண்டி நிறுத்தி எங்களை ஏற்றிக் கொண்டனர். அந்த வண்டியில் செல்ல இலவசம் தான்.
30 முதல் 34 வரை உள்ளவை சமண குகைகள். இந்து மற்றும் பௌத்த குகைகளுக்கு பிறகு செதுக்கப்பட்டவை இவை. சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளே செதுக்கப்பட்டுள்ளது. இந்து கோயில்களின் சாயல் சற்று சமணக் குகைகளில் உள்ளது. இந்திர சபா, சோட்டா கைலாஷ், ஜெகந்நாத சபா என்று சமண குகைகளை அழைக்கின்றனர். யட்சன், யட்சி என்ற இரு காவல் தெய்வங்கள் அனைத்து தீர்த்தங்கரர்களின் சிலைகளின் முன்னும் உள்ளது.
சமண குகைகளை பார்த்து விட்டு இந்து குகைகளை பார்க்க வந்தோம். தெய்வங்களின் சிலைகள் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குகையாக பார்த்துக் கொண்டு வந்தோம். ஒவ்வொருமுறை காணும் போதும் கல்லில் ஒளிந்திருக்கும் சிலை உயிர்பெற்று விடுமோ என்றே எண்ண தோன்றும். கோடிக்கணக்கான பார்வைகளால் கோடி முறை உயிர்பெறும் கற்கள். அவைகள் சிலைகள் அல்ல மனிதக் கனவுகள்.
எல்லோராவிலிருந்து கிளம்பி கீழே இறங்கினோம். வரும் வழியில் ஒரு கடையில் சாப்பிட்டோம். அன்று வரை மொத்த பயணத்திலேயே, நாங்கள் சாப்பிட்ட மோசமான உணவு அது. சிக்கன் மசாலா ரைஸ் என்று வாங்கி சாப்பிட்டோம். டூரிஸ்ட் இடங்களில் இருக்கும் மட்டமான உணவு வகையை சேர்ந்தது அது. காரம் தாங்க முடியாமல் மோர் கிடைக்குமா என்று கேட்டோம். பக்கத்துக்கு கடையில் தான் மோர் கிடைக்கும், இங்கு இல்லை என்று சொன்னார்கள். வேறு வழியில்லாமல் வயிறு பிரச்சனை செய்யாமலிருக்க பக்கத்துக்கு கடைக்குப்போய் மோர் வாங்கி குடித்துவிட்டு மீண்டும் கிளம்பினோம்.
அங்கிருந்து அவுரங்கசிப் கல்லறைக்கு செல்ல கூகுள் மேப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். மீண்டும் அவுரங்காபாத் செல்லும் வழியிலேயே இறங்கி வர வேண்டும். ஒரு 15கிமீ தொலைவில் இடதுபுறம் திரும்பி 10 அடி உள்ள குருகிய சாலையில் செல்ல வேண்டும். அதிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பினால் ஒரு கோட்டை வாசல் வரும். அதன் உள்ளே செல்ல வேண்டும். ஒரு கோட்டையின் உள்ளே மக்கள் வாழ்வதை இங்கு தான் நான் நேரில் முதல்முறையாக பார்க்கிறேன். கோட்டை வாசலின் உள்ளே சென்றதும் வலது புறம் ஒரு ஆங்கில மருந்து கடை இருக்கும். அதைப் பார்த்ததுமே ஏதோ ஒரு ஒவ்வாமை மனதிற்குள் ஏற்பட்டது. அது கோட்டைக் காலத்திற்கும், தற்காலத்திற்கும் ஒரு நொடியில் மனம் பயணிக்க முடியாமல் மயங்கிய தருணம்.
ஒரு 100 அடி சென்றதுமே வலது புறத்தில் ஒரு சூஃபி துறவியின் சன்னதி இருக்கும். அதன் உள்ளே தான் அவுரங்கசிப்பின் கல்லறையும் உள்ளது. உள்ளே சென்று காலணிகளை கழற்றி வைத்தோம். ஒரு சிறு அறை போல் இருந்த ஒரு வாசலில் உள்ளே நுழைந்தோம். அதன் வலது புறம் ஐந்து படிக்கட்டுகளுக்கு மேலே சென்றால் ஒரு சிறு 20 * 20 அளவு கொண்ட இடத்தில், அவுரங்கசிபின் கல்லறை உள்ளது. நாங்கள் அங்கிருந்த போது அங்கு வந்து சிலர் பிரார்த்தனை செய்தனர். இந்திய துணைகண்டத்தின் மாபெரும் சக்கரவர்த்தியின் கல்லறை ஒரு சாதாரண இடத்தில் இருந்தது. அவர் அமைதியான ஆடம்பரம் அற்ற ஒரு இடத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டாராம்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றவர் என்று அறியப்பட்டவர் இறுதியில் ஒரு சூஃபியின் சன்னதியின் பக்கத்தில் தன்னை அடக்கம் செய்ய கோரியது ஒரு பெரிய ஆச்சரியமாக தோன்றவில்லை. மனித இருப்பில் இரு முனை துருவங்கள் எங்காவது ஒரு புள்ளியில் சந்தித்தே ஆக வேண்டும். மனித இருப்பு என்று நான் சொல்வது உயிர் கொண்ட உடல் மட்டும் அன்று.
அவரது கல்லறைக்குப் பக்கத்திலேயே அவரது மகன் மற்றும் மருமகளின் கல்லறையும் உள்ளது. உள்ளே ஒரு இடத்தில் முகமது நபி அவர்கள் அணிந்த உடை ஒன்று இருப்பதாக கூறினர். அந்த இடத்திற்குள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியில் க்ரானைட் கல்லில் பல்வேறு சூஃபிக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து கிளம்பி தௌலதாபாத் கோட்டை அல்லது தேவகிரி கோட்டைக்குச் சென்றோம். அவுரங்காபாத் செல்லும் வழியிலேயே இக்கோட்டை உள்ளது. இது ASI பராமரிப்பில் உள்ள கோட்டையாகும். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே செல்லும்போது தண்ணீர் போத்தல்கள் இருந்தால் அதற்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருபது ருபாய் வாங்கிக்கொள்கிறார்கள். திரும்பவும் வரும் போது காலி போத்தலாக இருந்தால் இருபது ரூபாயை திரும்பி தந்து விடுவார்கள். உள்ளே பிளாஸ்டிக் குப்பையினை தடுக்க இவ்வாறு செய்கிறார்கள்.
கோட்டை யாதவ மன்னர்களால் கட்டப்பட்டு பின்பு பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்துள்ளது. கிபி 1327ல், முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து , இக்கோட்டைக்கு மாற்றினார். அப்பொழுது தில்லியின் மக்கள் பெருமளவில் தௌலதாபாத்திற்கு குடியேறவும் உத்தரவிட்டார். 1334ல் திரும்பவும் தில்லிக்கே தலைநகரை மாற்றினார். இப்பெரும் குடிபெயர்வில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டனர்.
கோட்டையின் கிழக்கு வாசல் தான் பிரதான வாசல். உள்ளே நுழைந்து ராஜ வீதியில் சென்று கொண்டிருந்தோம். ஒரு 100 அடி சென்ற பின் வலது புறம், சந்த் மினார் உள்ளது. பாமினி சுல்தானால் குதுப் மினாரின் வடிவிலே ஈரானிய கட்டிட நிபுணர்களைக் கொண்டு கட்டப்பெற்றது. இதன் உள்ளே செல்ல இப்போது அனுமதிக்கப்படுவதில்லை. மினாரின் உயரம் பிரமிக்க வைக்கும். அங்கிருந்து நேராக கோட்டையினை ஏறி உள்ளே செல்ல வேண்டும். குரங்குகள் அதிகம் இருப்பதால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உள்ளே அகழிக்கு மேலே கட்டிய பாலத்தில் நடந்து செல்ல வேண்டும். ஒரு இடத்தில் ஏறி இருளில் உள்ளே சென்று, மேலே வெட்டவெளியினை அடைந்து, அங்கிருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி வந்தால் மீண்டும் வந்த இடத்திற்கே வருவோம். எப்படி சென்று எதன் வழியே இறங்கினோம் என்பதே தெரியாது. இப்படி கோட்டையின் உள்ளே இருக்கும் வாயில்கள், சிறு அறைகள், படிக்கட்டுகள் என அனைத்தும் உள்ளே வரும் எதிரிகளை குழப்பம் அடைய செய்வது போன்று இருக்கும்.
சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். வெயில் சுளீரென்று உரைத்தது. நாங்கள் மேலே ஏறி கொண்டிருந்தோம். கல் படிக்கட்டுகள் இருந்ததால் அங்கங்கே அமர்ந்து இளைப்பாறிவிட்டு மேலேறினோம். மேலே ஒரு சிறு விநாகயர் கோவில் உள்ளது. அதற்கு பூஜை செய்ய அந்த கோவிலினை நிர்வகிக்கும் சந்ததியைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். நாங்கள் உள்ளே செல்லவில்லை. மேலே ஏறிப் பார்த்தால், கோட்டையின் மதில்களும், அகழியும் நீண்ட தூரம் இருப்பது தெரியும்.
எளிதில் கைப்பற்ற முடியாத கோட்டையாகவே இது இருந்திருக்கும். கோட்டையின் உச்சிக்கு சென்றோம். அங்கே அரசவை போன்ற திறந்தவெளி இடம் இருந்தது. அங்கு சிறிது நேரம் அமர்ந்தோம். அங்கே ஒருவர் கிட்டார் எடுத்து வந்திருந்தார். அதனை கடன் வாங்கி, அனைவரும் வாசிப்பது போல புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இளைஞர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஒரு 30 பேர் இருந்தனர். அவர்களிடம் கோட்டையினைப் பற்றி அவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.
நாங்கள் 30 நிமிடம் கழித்து கீழிறங்கினோம். மீண்டும் ராஜ வீதியில் திரும்பி போகும் வழியில் வலது புறம் பல்வேறு பீரங்கிகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். அதன் பக்கத்திலேயே பாரத மாதா சிலை ஒன்று இருந்தது. கோட்டையின் வெளியில் வந்து காலி தண்ணீர் போத்தலை காண்பித்து இருபது ரூபாயை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
காலையிலிருந்து வெயிலில் நடந்து கொண்டே இருந்ததால், மிகவும் களைப்பாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் முந்தைய நாட்கள் காலைப் பனியில் சுற்றியதால் என் உதடுகள் வெடித்து வலித்துக் கொண்டே இருந்தது. இந்த பயணத்தின் மூலம், எந்த ஒரு பயணம் செல்லவும், இன்றியமையாத சில பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டேன். மாஸ்க், தொப்பி, பனிவெடிப்பு கிரீம், மாய்ஸ்ச்சரைஸர், குடை , ஷூ என்று பட்டியல் போனது. இவை அனைத்தும் பயணத்தில் அதிகமாக உடல் அலைச்சலாகாமல் இருக்க உதவும். அடுத்து 'பீபீ கா மக்பாரா' நோக்கி சென்றோம். அது அவுரங்காபாத் நகரிலேயே உள்ளது. போகும் வழியில் கரும்பு சாறு குடித்து விட்டு சென்றோம். கரும்பு சாறு குடிப்பதற்கு கூட மரத்தடியில் இருக்கைகளும், மேசைகளும் போட்டிருந்தனர்.
மாலை ஆறு மணியளவில் 'பீபீ கா மக்பாரா'விற்குள் நுழைந்தோம். இது அவுரங்கசிப்பின் மகன் ஆசிம் ஷா தன் அன்னையின் நினைவாக கட்டியது. உள்ளே அவரின் அன்னையின் கல்லறை உள்ளது. தாஜ்மஹால் போலவே கட்டிட அமைப்பு கொண்டது. நான்கு புறமும் தூண்கள், நடுவில் தாஜ்மஹால் போன்ற அமைப்பு கொண்ட சின்ன அதிசயம். இருள் சூழ தொடங்கியது. மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. இருளில் தூண்கள் சரியாக தெரியவில்லை. திடீரென்று ஒருசலசலப்பு அங்குள்ளோரிடம் ஏற்பட்டது. ஒரு நிமிடம் கழித்து சட்டென்று ஒளிமயமாக மொத்த இடமும் காட்சி அளித்தது. விளக்கொளியில் 'பீபீ கா மக்பாரா' கண்கவரும் காட்சியாக இருந்தது. தூண்களின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு நிறமாக ஒளிர்ந்தது. ஒட்டுமொத்தமாக தூர இருந்து இதைக் காண கீழே இறங்கி வந்தோம்.
கொஞ்ச தூரம் நடந்த பின்னர் திரும்பிப் பார்க்கையில் தாஜ் மகாலை பார்த்த பரவசம் மனதில் எழுந்தது. வண்ணங்களில் திளைத்திருந்தது அந்த கல்லறை. அங்கிருந்து கிளம்பி வண்டியினை ஒப்படைத்துவிட்டு அறைக்கு வந்தோம்.
மிகவும் களைப்பாக இருந்ததால் எதுவும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தோம். ஆனால் கொண்டு சென்ற இரண்டு செட் துணிகளும் அழுக்காக இருந்ததால், இன்று துவைத்தே ஆக வேண்டும். நான் துணிகளை துவைத்துப் போட்டு விட்டு படுத்தேன். நண்பர் அடுத்து துணிகளை துவைக்க ஆரம்பித்தார். நான் படுத்து உறங்க தயாரானேன். அடுத்த நாள் அதிகாலையிலேயே அஜந்தா செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment