Wednesday 12 April 2023

மகாராஷ்டிரா பயணம் (2)

காலை ஐந்து மணிக்கு விழித்தோம். பக்கத்து அறைகளில் விருந்தாளிகள் யாரும் இல்லாததால் சும்மா தான் சாத்தி வைத்திருந்தார்கள். அதனால் நான் ஒரு அறைக்குச் சென்று குளித்து வந்தேன். காலை 6 மணியளவில் விடுதியை காலி செய்து விட்டு கிளம்பினோம். முதலில் கடக்வாஸ்லா அணைக்கு செல்வதென்று முடிவு செய்து அதற்கு கூகிள் மேப் போட்டுக்கொண்டு Activaவில் கிளம்பினோம். காலை வேளையில் குளிர் நன்றாகவே இருந்தது. வழியில் இரண்டு மூன்று பேர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சாலைகள் நன்றாக இருந்ததால் ஓட்டுவதற்கு பெரிதும் சிரமமில்லாமல் இருந்தது. 

இருபது நிமிடத்தில் அணையின் அருகில் சென்றோம். ஆனால் அங்கிருந்து அணைக்குச் செல்லும் வழியில் செல்லாமல் தவறுதலாக வேறு வழியில் சென்று கொண்டிருந்தோம். காலை வேலையில் அணைக்கட்டிற்கு பின்புறம் நீர் இல்லாமல் இருக்கும் பாறைகளின் மேல் ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். சாலையின் இரு மருங்கிலும் பிளாஸ்டிக் குப்பைகளாக இருந்தது. திரும்பவும் வந்த வழியாகவே சென்று, அணையினை அடைந்தோம்.

கடக்வாஸ்லா அணை முத்தா நதி மீது கட்டப்பட்டுள்ளது. 'முத்தா' நதி புனே நகரில் பல இடங்களில் செல்கிறது. ஆனால் பெரும்பாலும் சாக்கடை கலந்த நீராகவே உள்ளது. இது 'மூலா' என்னும் நதியுடன் இணைந்து 'மூலா-முத்தா' நதியாகிறது. அணைக்கு கீழே நீரில் கால் நனைக்க இறங்கினோம். அங்கு ஏற்கனவே நான்கைந்து இளம் பெண்களும், இளைஞர்களும் நீரில் விளையாடிக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தனர். அணையின் நீர் அருகில் பார்க்க தெளிவாக இருந்தது. அடியில் இருக்கும் சிறு கற்களும் தெளிவாக தெரிந்தது. அலைகள் மெல்லியதாக இங்கும் அங்கும் கரையை நோக்கி வந்தது. காலை வேளையில் காற்றும், அலையும், கருநீரும் மனதிற்கு இதமாக இருந்தன. 


அணையிலிருந்து சின்ஹட் கோட்டையை நோக்கி கிளம்பினோம். காலை எட்டு மணியளவில், கோட்டை இருக்கும் மலை அடிவாரத்தில் வண்டியினை நிறுத்தி ஆளுக்கொரு டீ அருந்தினோம். மேலே சென்று சாப்பிட பொரி பாக்கட்டுகளும், தண்ணீர் பொத்தல்களும் வாங்கிக் கொண்டோம். கோட்டைக்கு செல்லும் வழி நன்றான தார் சாலையாகவே இருந்தது. கோடைக்காலமாதலால் இருபுறமும் மரங்கள் எலும்பு கூடுகளாக நின்றன. ஒரு சில இலைகளே மரங்களில் தங்கி இருந்தது. தன்னுடைய சதையை எல்லாம் உதிர்த்து, புது ஆடை அணிய மழைக்கு வேண்டி நிற்கும் மரங்களாக அவை காட்சி அளித்தன. 

காலை சூரியன் மலைகளின் மேல் தன் பொன்னிறக் கரங்களால், மலையில் உள்ள அத்தனை புற்களுக்கும் மஞ்சள் நிறத்தினால் ஒளியூட்டினான். ஒரு இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அங்கு ஏற்கனவே இரண்டு scootyகளில் 4 இளம் பெண்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து  இரண்டு வண்டிகளில் மூன்று இளைஞர்கள் வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தினர். அங்கிருந்து கிளம்பி ஒரு ஐந்து நிமிட தொலைவில் உள்ள கோட்டையின் வாசலுக்குச் சென்று வண்டியை நிறுத்தினோம்.



ஏற்கனவே கார்களிலும், வண்டிகளிலும் அங்கு மக்கள் இருந்தனர். வெயில் ஏறத் தொடங்கியது. ஆனால் மிதமானதாகவே இருந்தது. கோட்டைக்கு இரு வாசல்கள் இருந்தது. ஒன்று புனே தர்வாஜா, மற்றொன்று கல்யாண் தர்வாஜா. புனே  தர்வாஜா வழி மட்டுமே இப்பொழுது புழக்கத்தில் உள்ளது. முதல் மலைக் கோட்டையினை நான் பார்க்கிறேன். இவ்வளவு உயரத்தில், கோட்டைக் கட்டி தங்களை பாதுகாத்து ஆட்சி செலுத்திய அரசர்களை எண்ணிக் கொண்டேன். கோட்டைவாசல் கதவிலிருந்து கல் படிக்கட்டுகள் வழியாக மேலேறி உள்ளே சென்றோம்.

கோட்டைக்குள்ளே பெரும்பாலும் எந்த ஒரு பெரிய கட்டிடமும் இல்லை. சிறு அறைகள், காவல் மாடங்கள் போன்ற பகுதிகள் உள்ளது. கோட்டையைச் சுற்றி மூன்று பக்கமும் மலைகளே. அதனால் இந்த கோட்டையினை பிடிப்பது அக்கால அரசியலில் முக்கியமான விஷயமாகும். கோட்டையின் சிறு  வரலாறு ASIயால் உள்ளே அங்கங்கே பொறிக்கப்பட்டுள்ளது.  

இந்த கோட்டை சத்ரபதி சிவாஜியின் ஒரு தளபதியான 'தானாஜி மாலுசரே' என்பவரின் வீரத்தால் புகழ் பெற்றது. தானாஜி அவர்களுக்கு நினைவு மணடபம் கோட்டையில் உள்ளது. மராத்தா ராஜ்யத்திற்காக தானாஜி சிறு படையினை வைத்துக் கொண்டு, எப்படி இக்கோட்டையினை கைப்பற்றினார் என்று ஓவியமாக மண்டபத்தில் தீட்டப்பபட்டுள்ளது.  தானாஜி வில்லோடும், வாளோடும், துப்பாக்கியோடும் என்று பல்வேறு வகையில் அழகாக இங்கு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளார். 



தானாஜியின் நினைவு மண்டபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், மூன்று இளைஞர்கள், உள்ளிருந்து வெளியே வந்தனர். அவர்கள் நவ நாகரீமாக உடை அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் இந்த நினைவு மண்டபம் பற்றி ஆங்கிலத்தில்  விசாரித்தேன். அப்பொழுது தான் தெரிந்தது அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று. ஒரு சராசரி அடிப்படை ஆங்கிலம் கூட தெரியாமல் அவர்கள் கல்லாரியில் படிக்கின்றனர். ஒரு சிறு வாக்கியத்தினைக் கூட பேச அவர்களால் முடியவில்லை. இது அங்கு மட்டும் இல்லை. ஒட்டு மொத்தமாகவே நாங்கள் சுற்றிய எட்டு  நாட்களில் ஏறத்தாழ இதே மாதிரி பல்வேறு இளைஞர்களை சந்தித்தோம். ஹிந்தியும், மராத்தியும் மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். ஆங்கிலம் என்று ஒரு மொழி உலகத்தில் உள்ளது என்று அவர்களுக்கு தெரியுமா என்றுகூட சந்தேகப்பட வேண்டி உள்ளது.



அங்கிருந்து கிளம்பி கோட்டையை ஒரு சுற்று சுற்றி வந்தோம். கல்யாண் தர்வாஜா வரைக்கும் சென்று திரும்பி வந்தோம். காலை இளவெயிலில் மலை உச்சியில் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. வரும் வழியில் பெரிய கொய்யாக்காய் ஒன்றை வாங்கி கொறித்துக் கொண்டே இறங்கினோம். 

11 மணியளவில் கீழே இறங்கினோம். ஒரு கடையில் வடா பாவும், இன்னொரு வகை உணவும் சாப்பிட்டோம். அங்கிருந்து ராஜ்காட் கோட்டைக்கு செல்ல முடிவு செய்து கிளம்பினோம். கூகுல்  மேப்பில் ஒரு மணி நேரம் காட்டியது. வழி ஒரு 5கிமீ சென்றதுமே மிகவும் மோசமாக இருந்தது. திரும்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டே சென்றோம். Activa பழுது ஆகி விடுமோ என்ற அச்சம் வேறு. வழி முழுவதும் ஜல்லி தட்டி வைத்திருந்தனர். ஒரு வழியாக ஒரு 15 நிமிடத்தில் நல்ல சாலையை சென்றடைந்தோம்.



அங்கிருந்து மலை மேல் ஏறிக் கொண்டே இருந்தோம். மேடு பள்ளமாக  மலை எழுந்தும் இறங்கியும் அதன் வளைவு சுளிவுகளில் நாங்களும் ஊர்ந்து சென்று கொண்டே இருந்தோம். வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. வெயிலில் காய்ந்து மஞ்சள் நிறமாக நின்றது மலை. சில இடங்களில் நெருப்பால் எரிந்து கருநிறமாக இருந்தது. "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடலில் ஜீவாவும், அஞ்சலியும் சைக்கிளில் செல்லும் போது தெரியும் காட்சியாக மலைகள் காய்ந்து பறந்து விரிந்து இருந்தது.


மதிய வெயில் ஆனாலும், வெப்பம் அவ்வளவாக தெரியவில்லை. ஒரு ஆற்றின் ஓரமாக வழி சென்ற போது, அங்கு ஒரு 20 இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். கல்லூரி சுற்றுலாவிற்கு வந்தவர்கள் போல் இருந்தனர். நீர் கருநிறமும், செந்நிறமுமாக கலந்து சென்றது. நாங்களும் குளிக்க முடிவு செய்தோம். எனக்கு சுமாரான நீச்சல் மட்டுமே தெரியும் என்பதால், முதலில் ஒரு தயக்கம் இருந்தது. கரையோரம் ஆழம் அதிகம் இல்லை என்று அறிந்ததும், நானும் குளிக்க தயாரானேன்.  வெயிலுக்கு நீரின் குளுமை நன்றாக இருந்தது. கரையோரம் நிறையபேர் குளித்ததால், நீர் கலங்கி செம்மண் போன்று இருந்தது. கொஞ்சம் உட்புறம் தெளிவாக இருந்தது. ஜெயமோகன் அவர்களின் 'முகங்களின் தேசம்' வாசித்த போது ,ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் ஒரு ஆற்றினைக் கடந்து செல்கையில் அவர்கள் இறங்கி நீந்தி, குளித்து விட்டு சென்றனர் என்று எழுதி இருப்பார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட பொறாமையை இந்த ஆற்றில் குளித்து கரைத்தேன்.



அங்கிருந்து ராஜ்கட் கோட்டைக்கு தொடர்ந்தோம். ஒரு இடத்தில பெட்ரோல் குறைவாக இருப்பதைக் கண்டு, ஒருவரிடம் விசாரித்து பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்திற்கு ஒரு U டர்ன் செய்து சென்றோம். அங்கிருந்து துங் கோட்டை பக்கத்தில் இருப்பதாக கூகுள் சொல்லியது. ஒரு 5 நிமிடத்தில் துங் கோட்டையின் அடிவாரத்திற்குச் சென்றோம். ஆனால் அந்த வழி பராமரிப்பிற்காக மூடி விட்டதாக சொன்னார்கள். எனக்கு தெரிந்த அரை ஹிந்தியை வைத்துக் கொண்டு பாதி புரிந்தும், புரியாமலும் பயணம் முழுவதும் அங்குள்ள மக்களிடம் பேசினேன். கோட்டைக்கு வேறு வழி திறந்திருப்பதாகவும், அதற்கு மலையைச் சுற்றி செல்ல வேண்டும் என்றும் சொன்னார்கள். நாங்கள் சரி என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினோம். ஆனால் ராஜ்கட் கோட்டைக்கு மேப் போட்டுக்கொண்டு சென்றோம்.

போகும் வழியில் ஒரு தட்டு போண்டாவும், ஒரு இடத்தில் கரும்பு சாரும் உண்டு சென்றோம். ராஜ்கட் கோட்டைக்கு செல்லும் வழி புதிர் நிரம்பியதாக இருந்தது. கடைசி 5 கிமீக்கு கிட்டத்தட்ட ஒரு ஒற்றைவழி பாதையிலும், கரடு முரடான பாதையிலும் சென்றோம். வண்டியை நினைத்தே பயந்து கொண்டிருந்தோம். ஒரு வழியாக கோட்டையின் அடிவாரத்தை அடைந்ததும், அங்கு ஒரு சிறிய கடை இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு, அங்கிருந்து கோட்டைக்கு நடந்து மட்டும் தான் செல்ல முடியும் என்று சொன்னார். அதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும் என்றார். நாங்கள் மலைப்படைந்தோம். மணி இரண்டாகியது. நாங்கள் யோசித்து கோட்டைக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம்.

பெரும்பாலும் அங்கிருக்கும் கோட்டைகளை நடந்து (trek) மட்டுமே அணுக முடியும் என்று அப்போது தான் புரிந்து கொண்டோம். எல்லா கோட்டைகளுக்கும் சிங்கட் கோட்டை போன்று பாதை இருக்கவில்லை. அந்த சிறு கடையிலே  மதிய உணவினை (போஹாவும், ரொட்டியும்)  முடித்துக்கொண்டு கிளம்பினோம். கிளம்பும் போது மூன்று இளைஞர்கள் இறங்கி வந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அதிகாலையிலே, மேலேறி சென்றனர் என்று சொன்னார்கள். கோட்டைக்குச் செல்ல காலைப் பொழுது மட்டுமே சிறந்தது.

அங்கிருந்து புனேவைக் நோக்கி கிளம்பினோம். 20கிமீ தொலைவு கிராமங்களில் சுற்றி ஒரு NH பாதையை பிடித்தோம். வழியில் ஒரு பெரிய சுரங்கப்பாதை வழியே சென்றோம். அது எப்படியும் ஒரு கிமீ  ஆவது இருந்திருக்கும். அங்கிருந்து கட்ராஜ் ஜெயின் கோவிலுக்குச் சென்றோம். கோவில் உள்ளே சென்று ஒரு இடத்தில பைகளை வைத்து விட்டு, முகம்,கை, கால் கழுவிக் கொண்டு உள்ளே சென்றோம். நான் பார்க்கும் முதல் சமணக்  கோவில் இதுவே. கோவிலில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளது. மகாவீரரின் பெரிய சிலையையும் கண்டோம். 

சமணக் கோவிலைப் பார்த்துவிட்டு, 'ஓஷோ சர்வதேச ஆசிரமம்' நோக்கி புறப்பட்டோம். அந்த இடமும் நாங்கள் வண்டி எடுத்த இடமும் பக்கத்தில் தான். ஆசிரமம் அமைந்திருக்கும் பகுதி மேல் வர்க்க இடம் போல் இருந்தது. நன்றாக போடப்பட்ட சாலைகள். இரு மருங்கிலும் பன்னாட்டு கடைகள். ஒரு சில வெளி நாட்டினவர் கூட தென்பட்டார்கள். ஆசிரமம் உள்ளே செல்ல முயல்கையில் அங்கிருக்கும் காவலாளி, முன் பதிவு செய்ய வேண்டும் என்றும், நாளைக்கு தான் ஆசிரமம் பார்க்க முடியும் என்றும் சொன்னார். சாலை முடிவில் ரோட்டில் விற்கும் இளனிக்கடையில் நாங்கள் இருவரும் ஆளுக்கொரு இளநீர் குடித்தோம். அந்த கடைக்காரர் தான், பக்கத்தில் ஓஷோ பூங்கா உள்ளது  என்றும், அது பொதுப் பூங்கா தான் என்றும், ஆறு மணி வரை திறந்திருக்கும் என்றும் சொன்னார்.



பக்கத்து சாலையில் உள்ள அந்த பூங்காவிற்கு சென்றோம். வெளியில் பல்வேறு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தது. நாங்களும் Activa வை அங்கு நிறுத்தி விட்டு, உள்ளே சென்றோம். அங்கு ஒரு ஓஷோ சிலை இருந்தது. அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். ஒரு சாலையின் இரு மருங்கிலும் பூங்கா உள்ளது. நகரின் நடுவே சூரிய ஒளி படாத அளவிற்கு அடர்ந்து  வளர்ந்திருக்கும் மரங்கள். பூங்காவின் நடுவிலே, சாக்கடை நீர் போல ஒரு ஓடை ஓடுகிறது. மற்ற பூங்காக்களில் இருப்பது போன்று இங்கும் ஒரே காதலர் கூட்டம் தான். அதனைப் பார்த்து, வாழ்க்கையில் இந்த மாதிரி அனுபவித்திராத இளமை பருவத்தினை பேசிக் கொண்டே வந்தோம். 

ஒரு 6:10 மணி வாக்கில் உள்ளே பூங்காகாவலாளி வந்து, வெளியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்களை, காவல் துறையினர் வண்டியில் ஏற்றிச் சென்று விட்டதாக கூறிக் கொண்டு சென்றார். நான் ஓடிப்போய் பார்ப்பதற்குள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வண்டியும் இல்லை. ஓஷோ பூங்கா வருவதற்கு வழி கேட்கும்போது, ஒரு சிறுவன் அந்த தெருவில் பார்க்கிங் இல்லை என்று சொன்னான். நான் தான் மற்ற வண்டிகள் எல்லாம் நிறுத்தி இருக்கிறதே என்று, எங்கள் வண்டியையும் நிறுத்தினோம். அருகில் இருந்தவர்கள் காவல் வண்டி பக்கத்து தெருவிற்கு சென்று விட்டதாக கூறினார்கள். நாங்கள் ஓடிச் சென்றோம். சாலை முடியும்  இடத்தில், ஓரமாக வண்டியினை நிறுத்தி இருந்தனர். அனைத்து வாகனங்களும், காவல் வண்டியின் மேல் இருந்தன. 

வழக்கம் போல், பேரங்கள் ஆரம்பமாயின. அவரவர் தங்கள் வாகனத்தைத் தரும் படி கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சற்று பதட்டமாக இருந்தேன். எங்கு போக்குவரத்து காவலாளியைக் கண்டாலும் எனக்கு ஒரு சிறு நடுக்கம் ஏற்பட்டு விடுகிறது. எல்லா ஆவணங்களும் இருந்தாலும் அந்த நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது சட்டத்தின் மேல் இருக்கும் பயம் இல்லை. சட்டத்தை அமல்படுத்தும் மனிதன் மேல் இருக்கும் பயம்.  சட்டம் என்பதே அதை அமல்படுத்தும் போதுதான் உயிர் பெறுகிறது. அதுவரை அது ஒரு வாக்கியம் மட்டுமே. அதை அமல்படுத்துபவருக்கு இருக்கும் அனிச்சையாக முடிவெடுக்கும் ஆற்றலைக் கண்டு தான் இங்கு எல்லோரும் பயப்படுகிறார்கள். ஒரே குற்றத்துக்காக, ஒவ்வொருவருக்கும், வெவ்வேறு வகையான சட்டத்தினை அவர்கள் நினைத்தால்  உபயோகிக்கலாம்.  

எங்கள் வண்டியின் எண்ணை கருவியில் போட்டுப் பார்த்து, அதற்கு ருபாய் 5000க்கு மேல் அபராதம் உள்ளதாக அந்த காவலாளி சொன்னார். நாங்கள் சுற்றுலாப் பயணி என்றும், எங்கள் நண்பரின் வாகனம் அது என்றும் சொன்னோம். 

எத்தனை முறை நாம் அடிபட்டாலும் , திரும்ப திரும்ப அதே தவறை ஏன் செய்கிறோம் என்றே தெரியவில்லை. அதிகாரத்திடம் கருணையை எதிர்பார்ப்பது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. ஆனால் அதைத்தான் எப்போதும் நாம் செய்கிறோம். நாம் கெஞ்ச ஆரம்பிக்கும் போது தான், அவர்களின் அதிகார பம்பரம் வேகமாக சுற்றும். ஆனால் அதை விட்டாலும் வேறு வழி இல்லை. ஒன்று பேரம் பேசி பணம் கொடுத்து தப்பிப்பது. இல்லையேல் கெஞ்சி கூத்தாடி கூடுதல் பணம் கொடுத்து தப்பிப்பது. இரண்டாவது மட்டுமே நாம் செய்கிறோம். முதல் வகையினை நாம் செய்ய காவல்துறை மீதுள்ள பயமும், நடுக்கமும் நம்மைத் தடுக்கிறது. 

அந்த இடத்தில ஒரு காதல் ஜோடிகளின் வாகனமும் இருந்தது. அவர்கள் பேரம் பேசி ஒரு தொகைக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் கையில் பணம் இல்லை. எங்களிடம் அவர்கள் GPay செய்வதாக ஒரு 500 ரூபாயை கேட்டனர். அப்பொழுது எங்களிடம் கையில் காசு இருந்தது. ஆனால் எந்த காரணத்தாலாயோ அவர்களிடம் அதை கொடுக்கவில்லை. அது அவர்கள் மேல் உள்ள பொறாமையாக இருக்கலாம். நம் வண்டி மாட்டிக்கொண்டு இருக்கும்போது அவர்கள் மட்டும் எப்படி தப்பித்துச் செல்லலாம். அல்லது அந்த சூழ்நிலையின் நடுக்கமாக இருக்கலாம். முடிவெடுக்கும் நொடியினை கடந்து விட்டால், அது எப்போதும் ஒரு குற்ற உணர்ச்சியாக தங்கி விடுகிறது.

நான் கொஞ்ச நேரம் பார்த்து, இது வேலைக்காகாது என்று, வாகன உரிமையாளரான சுதிரை அழைத்தேன். அவரும், இன்னொருவரும் பத்து நிமிடத்தில் அந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் மராத்தியில் பேரம் பேசி, 200 ரூபாய்க்கு முடித்து, வண்டியை தந்து விடுமாறு சொல்லிவிட்டு சென்றனர். நாங்கள் அரைமணி  நேரத்தில் வந்து வண்டியினை விடுவதாக அவரிடம் சொன்னோம். 

வண்டியினை பெற்றுக் கொண்டு அந்த பகுதியில் இருக்கும் தெருக்களில் சுற்றி வந்தோம். அந்த பகுதியில் பல்வேறு கடைகளும், இளைஞர் கூட்டமும் அதிகம் இருந்தது. நாங்கள் ஒரு momos கடையில் வண்டியை நிறுத்திவிட்டு ஆளுக்கொரு சிக்கன் மோமோஸ் சாப்பிட்டோம். அப்பொழுது அங்கு ஒரு ஜோடி தமிழில் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் அங்குள்ளவர்களுக்கு தெரியாது என்றெண்ணி பேசிகொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை. நான் அவர்களை கவனித்துக் கொண்டே நண்பரிடம் தமிழில் ஏதோ பேசினேன். அந்த இளைஞன் திடீரென்று அதிர்ச்சியுடன் முகம் மாறிப்போய் எங்களைப் பார்த்தான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்கள். இளைஞர் கூட்டத்தினைப் பார்க்கும்போது சற்றே பொறாமையாக இருக்கிறது. 

momos சாப்பிட்டு முடித்து விட்டு எங்கு இரவு ரூம் போட்டு தங்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் லோனாவாலா போகத் திட்டம் இருந்தது. ஆனால் இந்த Activaவில் அவ்வளவு தூரம் செல்ல முடியாது. அதனால் சுதிரிடம் சென்று வேறு வண்டி வாங்கினோம். Honda Shine வாங்கினோம். ஒரு நாள் வாடகை 800 சொன்னார். நாங்கள் பேரம் பேசி 650க்கு கொண்டு வந்தோம். அங்கிருந்து வண்டி எடுத்துக் கொண்டு பக்கத்து சாலைகளில் ஏதாவது ரூம் இருக்கிறதா என்று பார்க்கப் போனோம். 45 நிமிடம் தேடியும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாததால்,நண்பர் அவரின் மனைவிக்கு போன் செய்து onlineல் ரூம் பார்க்க சொன்னார். பக்கத்திலேயே ஒரு நல்ல ரூம் பதிவு செய்து கொடுத்தார்கள். வண்டி திடீரென்று ஸ்டார்ட் ஆகவில்லை. அங்கேயே சுதிருக்கு போன் செய்து வேறு வண்டி (Hornet) பெற்று கிளம்பினோம்.

zomatoவில் ஒரு கிரில் சிக்கன்  ஆர்டர் செய்து சாப்பிட்டோம். நான் சென்று எனது துணிகளை துவைத்துப் போட்டேன். பின்னர் பக்கத்தில் இருக்கும் ஒரு தள்ளு வண்டி கடைக்கு சென்று உணவு உண்டோம். ஒரு இனிப்பு பீடாவும் ஆளுக்கொன்று வாங்கிப் போட்டோம். 

அடுத்த நாள் காலை 6 மணிக்குள் லோனாவாலாவுக்கு கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்து உறங்கினோம். 

No comments:

Post a Comment