Friday, 14 April 2023

மகாராஷ்டிரா பயணம் (3)

காலை 6:15 மணிக்கு அறையை காலி செய்து விட்டு லோனாவாலா நோக்கி புறப்பட்டோம். காலை  குளிரில் வண்டி ஓட்டுவதற்கு நன்றாக இருந்தது. காலையில் போக்குவரத்து அதிகம் இல்லாததால் சீக்கிரமாகவே நகரத்தை கடந்து சென்றோம். நெடுஞ்சாலையை அடைந்த உடன் ஒரு தள்ளு வண்டி கடையில் தேநீர் அருந்தினோம். லோனாவாலாவை நெருங்கும் போது மேக மூட்டமாக இருந்தது. 

லோனாவாலா போவதற்கு முன்பாகவே 'பாஜா குகைகள்' என்ற பௌத்த குகைகளை காண திட்டமிட்டோம். குகைக்கு 5கிமீ முன்பாக ஒரு சிற்றுண்டி கடையில், காலை உணவருந்திவிட்டு சென்றோம். 'வடா பாவ்' எங்கு சாப்பிட்டாலும் மிகச்சிறப்பாகவே இருந்தது. 'பாஜா குகை' போகும் வழியில் ஒரு ரயில் பாதை குறுக்கே கடந்து செல்ல வேண்டும். அப்பொழுது ரயில் வந்து கொண்டிருந்ததால், பாதை மூடி பத்து நிமிடம் காத்திருந்தோம். 

காலை 8:15 மணிக்கு பாஜா குகையின் அடிப்பகுதிக்கு சென்று விட்டோம். கீழிருந்து மேலே செல்ல கல் படிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரு இளைஞர் கூட்டம் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். எங்களை பார்த்தவுடன், இந்த இடத்தை விட இன்னொரு இடம் நன்றாக இருக்கும், நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள் என்றே தெரியவில்லை. நாங்கள் அவர்கள் சொல்வதை கேட்காமல் மேலே ஏறி சென்றோம்.

இது ASI பராமரிப்பில் இருக்கும் இடமாகும். நாங்கள் வந்து சிறிது நேரம் கழித்து நுழைவுச்சீட்டு கொடுக்கும் ஊழியர் வந்தார். நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். முதல் பார்வையிலேயே நான் அந்த குகையினுள் இழுக்கப்பட்டேன். நான் பார்க்கும் முதல் பௌத்த குகை அது. அதன் அமைப்பு, வடிவம், பெயர்கள் என்று எதுவுமே தெரியாது. அங்கு ஒரு நான்கைந்து பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தினமும் காலையில் குகைகளை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். 

ஒரு பெரிய கல்லினை குடைந்து குகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். மொத்தம் 22 குகைகள். நடுவில் இருக்கும் குகை ஒரு பெரிய மண்டப முகப்பு போல் அலங்காரமாக இருந்தது. அதன் உள்ளே உருளை வடிவில் ஒரு அமைப்பு இருத்தது. நண்பர் அதை 'சைத்தியம்' என்று சொன்னார்.  'சைத்தியம்' என்பது பௌத்தர்களின் பிரார்த்தனைக் கூடம். இதன் உள்ளே ஒரு தூபி (அரை கோல வடிவம் கொண்டது) அமைந்திருந்தது. சைத்யத்தின் உள்ளே மண்டபத் தூண்கள் செதுக்கப்பட்டிருந்தது. இந்த தூண்கள் ஒரு கணித விதிப்படி சீரான இடைவெளி விட்டு, ஒரே அளவில் உள்ளது. பாதி உயரத்திற்கு மேல், இந்த தூண்கள் நீள்வட்ட வடிவத்தில் மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது. 

அதைக் கண்டு கொஞ்ச நேரம் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த குகைகளில் வாழ்ந்த பௌத்த துறவிகளை எண்ணிக்கொண்டிருந்தேன். மழை திடீரென பெய்யத் தொடங்கியது. அங்கிருக்கும் ஒரு குகைக்குள் சென்று நின்று கொண்டோம். அத்துறவிகளுக்கும், நமக்கும் பாலமாக இருப்பது இந்த கற்குகை மட்டுமே. காலத்தினால் உருமாறாத கற்கள். மழையை பார்த்துக்கொண்டு துறவிகளின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். 

சிறிது நேரம் மழைக்குப் பிறகு, மற்ற குகைகளைப் பார்த்தோம். குகைகளுக்கு வெளியேயும் சில தூபிகள் இருந்தன. இக்குகைகள் பௌத்த விகாரங்கள் ஆகும். இதுவே பௌத்த பிக்குகளின் உறைவிடங்கள். சில விகாரங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தன. சிலவற்றில் உறங்குவதற்கு கற்பலகைகள் மட்டுமே இருந்தன. இந்த குகை ஹீனயான பௌத்த மரபைச் சேர்ந்ததாகும்.


பத்து மணியளவில் கீழே இறங்கினோம். இறங்கும் வழியில் இந்தியாவில் இருக்கும் பௌத்த குகைத்தளங்களின் இடங்களை பலகையில் பொறித்து வைத்திருந்தார்கள். அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கீழிறங்கி "சுனில் மெழுகு அருங்காட்சியகம்" செல்ல கிளம்பினோம். செல்லும் வழியில் மழை மெல்லிதாக தூரிக் கொண்டே இருந்தது. 

லோனாவாலா நகர் புனேவிற்கும், மும்பையிற்கும் நடுவில் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைப்பகுதியாக இருப்பதால், நல்ல குளுமையாகவே இருக்கும். புனே மற்றும் மும்பை மக்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை கழிக்கவே உருவாக்கப்பட்ட செயற்கை சுற்றுலா தளமாகும். இங்கு ஓரிரண்டு அருவிகள், கோட்டைகள் தவிர ஏதும் இல்லை. நகரின் உள்ளே நுழையும் இடங்களில், அருங்காட்சியகம் செல்ல வழி என்று போடப்பட்டிருந்தது. ஆனால் மேப்பில் வேறு வழி காட்டியது. அந்த இடத்திற்கு சென்று பார்த்தால் அது வேறு ஒரு  அருங்காட்சியகம். இரண்டு, மூன்று மெழுகு அருங்காட்சியகங்கள் இங்கு உள்ளன. ஆனால் "சுனில் அருங்காட்சியகமே" சிறந்தது.

நகரின் நடுவே ஒரு  வணிக வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள சுனில் மெழுகு அருங்காட்சியகத்திற்குள் சென்றோம்.  உள்ளே சென்றதுமே காந்தியையும், நேருவையும் பார்க்க முடிந்தது. மிகவும் தத்ரூபமாக இருந்தன அச்சிலைகள். அருங்காட்சியகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட மெழுகுச் சிலைகள் உள்ளன. அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள், சினிமா நடிகர்கள்/ நடிகைகள், விளையாட்டு வீரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விஞ்ஞானிகள் என்று வெவ்வேறு காலங்களை சேர்ந்தவர்களை சிலையாக வடித்திருக்கிறார்கள். எந்த சிலைகளையும் தொடக்கூடாது என்று உள்ளே செல்லும் போதே சொல்லி அனுப்பினார்கள். 



எனக்கு மிகவும் தத்ரூபமாக பட்டது பிரகாஷ்ராஜ் அவர்களின் ஆளுயர சிலை. ஒவ்வொரு சிலையும் அந்தந்த நிஜ மனிதரின் உயரம், எடைகளை கணக்கில் கொண்டு அதே போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. திடீரென்று சிலையைக் கண்டதும் பிரகாஷ்ராஜே நின்றிருப்பது போல் ஒரு பிரமை தோன்றியது. ஒவ்வொரு சிலையும் சிறப்பாக இருந்தது. சில இன்னும் நன்றாக செய்திருக்கலாம். சில உண்மைப் போலவே இருக்கும். 



நாங்கள் எங்களுக்கு பிடித்த மனிதர்களின் சிலைகளிடம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். "சைராட்" மராத்தி திரைப்படத்தின் இயக்குனர், நடிகர், நடிகைச் சிலைகள் மிகவும் உயிர்ப்புடன் இருந்தன. அனைத்து சிலைகளையும் பார்த்து முடித்து விட்டு நாங்கள் வெளியே வந்தோம். நண்பர் அனைத்தையும் வீடியோ எடுத்து வாட்சப்  குரூப்பில் போட மீண்டும் உள்ளே சென்றார். வெளியே அமர்ந்திருக்கையில், மெழுகுச் சிலைகளை செய்ய ஒவ்வொருவரிடமும் எப்படி அளவுகளையும் முக அமைப்புகளையும் பெற்றார்கள் என்று டிவியில் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தனர்.



நண்பர் வீடியோ எடுத்துவிட்டு வெளியில் வந்தார். அங்கிருந்து "கர்லா குகை"யை நோக்கி புறப்பட்டோம். காலை 11:30 மணி அளவிலே ஒரு கடையில் சிக்கன் சாப்பாடு சாப்பிட்டோம். செல்லும் வழி முழுவதும் "மகன்லால் சிக்கி" என்ற விளம்பரம் கொண்ட கடலைமிட்டாய் கடைகள் இருத்தன. எப்படிதான் இருக்கிறது என்று பார்க்க ஒரு பெட்டி வாங்கினோம். லோனாவாலாவிலிருந்து புனே செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு 10கிமீ தொலைவில் இடதுபுறம் திரும்பி ஒரு 3கிமீ தொலைவு செல்ல வேண்டும் கர்லா குகைக்கு.  அதே நெடுஞ்சாலையில் வலது புறம் திரும்பினால் நாங்கள் காலையில் சென்ற "பாஜா குகைக்கு" செல்லலாம்.



கீழிருந்து மூன்று கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி மேலே செல்ல வேண்டும். மேலே செல்லும் பாதை மிகவும் செங்கூத்தாக இருந்தது. ஏராளமான கூட்டம் அங்கிருந்தது. வண்டி நிறுத்த இடமில்லாமல் சற்று தள்ளி நிறுத்தி வந்தோம். பௌத்த குகையை பார்க்க இவ்வளவு கூட்டமா என்று யோசித்தோம். உள்ளே குகைக்கு செல்லும் பாதை தானா என்று கேட்டுக் கொண்டே சென்றோம். ஒரு 200 படிக்கட்டுகளாவது ஏறிய பின்னர் தான் தெரிந்தது அங்கு ஒரு கோவில் உள்ளது என்று. அந்த கோவிலுக்குச் செல்ல தான் இவ்வளவு கூட்டம். 

"ஏக்வீரா" என்ற அந்த கோவில் குகைக்கு பக்கத்திலேயே உள்ளது. முன்பு குகையாக இருந்த ஒரு பகுதி சிதிலமடைந்ததால் அதனை அப்படியே ஒரு கோவிலாக கட்டி இருக்கின்றனர். இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. எட்டாம் எண் கர்லா குகைக்கு உள்ளே பிரம்மாண்டமான ஒரு சைத்தியம் உள்ளது. அது பௌத்த குகைகளிலேயே பெரிய சைத்தியமாகும். உள்ளே சென்று கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். ஒவ்வொரு தூணிலும் யானையும், குதிரைகளும் அதற்கு மேலே ஆணும், பெண்ணும் அமர்ந்திருக்குமாறு செதுக்கப்பட்டுள்ளது.  

குகையின் வெளியில் இரு புறத்திலும் பிரம்மாண்ட யானைகள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த குகை சாதவாகன ஆட்சி, கிபி 150 காலத்தை சேர்ந்ததாகும். குகை கட்ட கொடை அளித்தோரின் பெயர்களும் இருந்தது. 

கீழிறங்கும் வழியில் ஒரு தென்னை மரம் அளவு இருக்கும் அடி மரத்தினை ஒரு 4 அடி உயரம் வெட்டி வைத்திருந்தனர். அதன் தோல்கள் சீவப்பட்டு வழவழப்பாக இருத்தது. அதை சிறிய மாங்காய் துண்டுகள் போல நறுக்கி விற்கின்றனர். அருகில் சென்று அது என்ன என்று விசாரித்தோம். அது ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்தது என்று கூறினார். சுவைத்துப் பார்க்க இரண்டு துண்டுகளை வாங்கி சாப்பிட்டோம். துவர்ப்பு கலந்த சுவையாக இருந்தது. எங்களுக்கு பிடிக்கவில்லை.

கீழே இறங்கி புனே நெடுஞ்சாலையை அடைந்தோம். பாஜா குகையருகே படம் பிடித்த மற்ற குகைகளின் பெயர்களை கூகிளில் போட்டுப் பார்த்து வேறு ஏதாவது செல்லும் வழியில் உள்ளதா என்று பார்த்தேன். "பெட்ஸே" என்னும் குகை செல்லும் வழியில் பத்து கிமீ  உள்ளே உள்ளது என்று கூகிள் காட்டியது. 

மற்ற இரண்டு குகைகளைக் காட்டிலும் இது குறைவாக அறியப்பட்ட குகையாகும். அதனால் வழிப்பலகைகளும் ஏதும் இல்லை. அதனை நோக்கி புறப்பட்டோம். குகைக்கு பக்கத்தில் செல்ல வழியை தவற விட்டு கொஞ்சம் முன்னோக்கி சென்று விட்டோம். பின்பு அங்கிருந்த ஒரு சிறிய வழி பலகையில் பாதையினைப் பார்த்துச் சென்றால் அது ஒரு தோட்டத்திற்குள் சென்று விட்டது. அங்கிருந்து செல்ல வழி ஏதும் இருக்கவில்லை. மீண்டும் திரும்பி வந்து வழிபலகையை ஒழுங்காகப் பார்த்து ஒரு ஒற்றையடி பாதை போல் இருந்த ஜல்லிசாலைக்கு வந்தோம்.



அங்கிருந்து பார்க்கையில் எதுவுமே தெரியவில்லை. மலை அடிவாரத்தில் ஒரு சிறு அறை மட்டும் இருந்தது. அங்கு பக்கத்தில் சென்ற போது தான், ASI யினால் பொறிக்கப்பட்ட "பேட்சா குகை" என்னும் பலகை கண்ணுக்குப் பட்டது. அங்கு வண்டியினை நிறுத்திவிட்டு ,மேலே ஏறினோம். மதிய வெயில் சுட்டெரித்தது. தண்ணீரும் மிகவும் கொஞ்சமாகவே இருந்தது. பயணம் முழுவதும் ஷூ அணிந்திருந்ததால் சிரமப்படாமல்  நடக்க முடிந்தது. செருப்பு அணிந்து இவ்வளவு தூரம் நடந்திருக்க முடியாது. கற்படிக்கட்டில் ஏறி மேலேச் சென்றோம்.

மேலே நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். படிக்கட்டுக்கு இடுக்குகளில் சிமெண்ட்  பூசிக்கொண்டிருந்தனர். மேலே ஒரு இளைஞன் சாப்பிட்டுகொண்டிருந்தான். குகைகைளின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது. அதனால் காலைவேளையில் குகைகளை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

சாதவாகனர் ஆட்சிக்கு முன் கிமு ஒன்றாம்  நூற்றாண்டில் இந்த குகை நிறுவப்பட்டுள்ளது. பேட்சா குடைவரை குகைகள் இரண்டு முக்கியத் தொகுதிகளாக உள்ளது. இதில் குகை எண் 7ல் சைத்தியத்துடன் கூடிய பிக்குகளின் தியான மண்டபமும், பெரிய தூபியும் உள்ளது. இங்குள்ள தூண்களும், தூபியும் கணித விகிதாச்சாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பை அங்கு பொறித்து வைத்துள்ளனர். 

குகை எண் 11ன் குடைவரை விகாரத்தின் நுழைவாயில், குதிரை லாட வடிவத்தில் உள்ளது. இந்த விகாரத்தில் பல்வேறு சிறு குகைகள் கல்பலகைகளுடன் பௌத்த பிக்குகள் ஓய்வெடுக்க செதுக்கப்பட்டுள்ளது. இந்த விகாரம் ஒரு தியான மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நண்பர் ஒரு vlog செய்ய பல முயற்சிகள் செய்து, வீடியோ எடுத்து வாட்ஸாப் குரூப்பில் போட்டார். நானும் எடுக்க முயற்சி செய்தேன், பேச்சு திணறிக்கொண்டே இருந்ததால் விட்டு விட்டேன். நான் வீடியோ எடுப்பதை பார்த்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் அந்த குகையினைப் பற்றி கூறும்படி கேட்டனர். நானும் அந்த குகையின் அமைப்பை ஆங்கிலத்தில் சொல்லி விளக்கினேன். ஒரு சுற்றுலா வழிகாட்டியாகி விட்டோமே என்று மனதிற்குள் புன்னகையுடன் நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து கீழே இறங்கி புனேவை நோக்கி புறப்பட்டோம். வழியில் திராட்சை கொஞ்சம் வாங்கிக்கொண்டு சென்றோம். புனேவிற்கு ஆறு மணி அளவில் சென்றோம். முந்தைய நாள் சாப்பிட்ட சிக்கன் மோமோஸ் கடைக்கு சென்று மோமோஸ் சாப்பிட்டோம். அங்கிருந்து வண்டியினை சுதீரிடம் கொடுத்துவிட்டு நடந்தே கொஞ்ச தூரம் சென்றோம்.

இரவு 9:30 க்கு புனேவிலிருந்து அவுரங்காபாத்திற்கு ரயில் டிக்கெட் போட்டிருந்தோம். ஒரு தள்ளு வண்டி கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டிட்டோம். அங்கு நிறைய குட்டி ஸ்டூல்கள் போட்டு வைத்திருந்தனர். சாப்பிட வருபவர்கள் அதிலே அமர்ந்து சாப்பிடலாம். வழக்கம் போல், கல்லூரி நண்பர்களும் , காதல் ஜோடிகளும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நாங்கள் சாப்பிட்டுவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் சென்றோம். ரயில் ஏறி, புறப்பட ஆரம்பமானதும், நானும்,நண்பரும்  அவரவர்  படுக்கையில் படுத்தோம்.நண்பர் படுத்த உடனேயே உறங்கி விட்டார். நானும் சிறிது நேரத்தில் உறங்கி விட்டிருந்தேன். 

அடுத்த நாள் அவுரங்காபாத்தில் விடியல்.

Wednesday, 12 April 2023

மகாராஷ்டிரா பயணம் (2)

காலை ஐந்து மணிக்கு விழித்தோம். பக்கத்து அறைகளில் விருந்தாளிகள் யாரும் இல்லாததால் சும்மா தான் சாத்தி வைத்திருந்தார்கள். அதனால் நான் ஒரு அறைக்குச் சென்று குளித்து வந்தேன். காலை 6 மணியளவில் விடுதியை காலி செய்து விட்டு கிளம்பினோம். முதலில் கடக்வாஸ்லா அணைக்கு செல்வதென்று முடிவு செய்து அதற்கு கூகிள் மேப் போட்டுக்கொண்டு Activaவில் கிளம்பினோம். காலை வேளையில் குளிர் நன்றாகவே இருந்தது. வழியில் இரண்டு மூன்று பேர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சாலைகள் நன்றாக இருந்ததால் ஓட்டுவதற்கு பெரிதும் சிரமமில்லாமல் இருந்தது. 

இருபது நிமிடத்தில் அணையின் அருகில் சென்றோம். ஆனால் அங்கிருந்து அணைக்குச் செல்லும் வழியில் செல்லாமல் தவறுதலாக வேறு வழியில் சென்று கொண்டிருந்தோம். காலை வேலையில் அணைக்கட்டிற்கு பின்புறம் நீர் இல்லாமல் இருக்கும் பாறைகளின் மேல் ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். சாலையின் இரு மருங்கிலும் பிளாஸ்டிக் குப்பைகளாக இருந்தது. திரும்பவும் வந்த வழியாகவே சென்று, அணையினை அடைந்தோம்.

கடக்வாஸ்லா அணை முத்தா நதி மீது கட்டப்பட்டுள்ளது. 'முத்தா' நதி புனே நகரில் பல இடங்களில் செல்கிறது. ஆனால் பெரும்பாலும் சாக்கடை கலந்த நீராகவே உள்ளது. இது 'மூலா' என்னும் நதியுடன் இணைந்து 'மூலா-முத்தா' நதியாகிறது. அணைக்கு கீழே நீரில் கால் நனைக்க இறங்கினோம். அங்கு ஏற்கனவே நான்கைந்து இளம் பெண்களும், இளைஞர்களும் நீரில் விளையாடிக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தனர். அணையின் நீர் அருகில் பார்க்க தெளிவாக இருந்தது. அடியில் இருக்கும் சிறு கற்களும் தெளிவாக தெரிந்தது. அலைகள் மெல்லியதாக இங்கும் அங்கும் கரையை நோக்கி வந்தது. காலை வேளையில் காற்றும், அலையும், கருநீரும் மனதிற்கு இதமாக இருந்தன. 


அணையிலிருந்து சின்ஹட் கோட்டையை நோக்கி கிளம்பினோம். காலை எட்டு மணியளவில், கோட்டை இருக்கும் மலை அடிவாரத்தில் வண்டியினை நிறுத்தி ஆளுக்கொரு டீ அருந்தினோம். மேலே சென்று சாப்பிட பொரி பாக்கட்டுகளும், தண்ணீர் பொத்தல்களும் வாங்கிக் கொண்டோம். கோட்டைக்கு செல்லும் வழி நன்றான தார் சாலையாகவே இருந்தது. கோடைக்காலமாதலால் இருபுறமும் மரங்கள் எலும்பு கூடுகளாக நின்றன. ஒரு சில இலைகளே மரங்களில் தங்கி இருந்தது. தன்னுடைய சதையை எல்லாம் உதிர்த்து, புது ஆடை அணிய மழைக்கு வேண்டி நிற்கும் மரங்களாக அவை காட்சி அளித்தன. 

காலை சூரியன் மலைகளின் மேல் தன் பொன்னிறக் கரங்களால், மலையில் உள்ள அத்தனை புற்களுக்கும் மஞ்சள் நிறத்தினால் ஒளியூட்டினான். ஒரு இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அங்கு ஏற்கனவே இரண்டு scootyகளில் 4 இளம் பெண்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து  இரண்டு வண்டிகளில் மூன்று இளைஞர்கள் வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தினர். அங்கிருந்து கிளம்பி ஒரு ஐந்து நிமிட தொலைவில் உள்ள கோட்டையின் வாசலுக்குச் சென்று வண்டியை நிறுத்தினோம்.



ஏற்கனவே கார்களிலும், வண்டிகளிலும் அங்கு மக்கள் இருந்தனர். வெயில் ஏறத் தொடங்கியது. ஆனால் மிதமானதாகவே இருந்தது. கோட்டைக்கு இரு வாசல்கள் இருந்தது. ஒன்று புனே தர்வாஜா, மற்றொன்று கல்யாண் தர்வாஜா. புனே  தர்வாஜா வழி மட்டுமே இப்பொழுது புழக்கத்தில் உள்ளது. முதல் மலைக் கோட்டையினை நான் பார்க்கிறேன். இவ்வளவு உயரத்தில், கோட்டைக் கட்டி தங்களை பாதுகாத்து ஆட்சி செலுத்திய அரசர்களை எண்ணிக் கொண்டேன். கோட்டைவாசல் கதவிலிருந்து கல் படிக்கட்டுகள் வழியாக மேலேறி உள்ளே சென்றோம்.

கோட்டைக்குள்ளே பெரும்பாலும் எந்த ஒரு பெரிய கட்டிடமும் இல்லை. சிறு அறைகள், காவல் மாடங்கள் போன்ற பகுதிகள் உள்ளது. கோட்டையைச் சுற்றி மூன்று பக்கமும் மலைகளே. அதனால் இந்த கோட்டையினை பிடிப்பது அக்கால அரசியலில் முக்கியமான விஷயமாகும். கோட்டையின் சிறு  வரலாறு ASIயால் உள்ளே அங்கங்கே பொறிக்கப்பட்டுள்ளது.  

இந்த கோட்டை சத்ரபதி சிவாஜியின் ஒரு தளபதியான 'தானாஜி மாலுசரே' என்பவரின் வீரத்தால் புகழ் பெற்றது. தானாஜி அவர்களுக்கு நினைவு மணடபம் கோட்டையில் உள்ளது. மராத்தா ராஜ்யத்திற்காக தானாஜி சிறு படையினை வைத்துக் கொண்டு, எப்படி இக்கோட்டையினை கைப்பற்றினார் என்று ஓவியமாக மண்டபத்தில் தீட்டப்பபட்டுள்ளது.  தானாஜி வில்லோடும், வாளோடும், துப்பாக்கியோடும் என்று பல்வேறு வகையில் அழகாக இங்கு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளார். 



தானாஜியின் நினைவு மண்டபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், மூன்று இளைஞர்கள், உள்ளிருந்து வெளியே வந்தனர். அவர்கள் நவ நாகரீமாக உடை அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் இந்த நினைவு மண்டபம் பற்றி ஆங்கிலத்தில்  விசாரித்தேன். அப்பொழுது தான் தெரிந்தது அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று. ஒரு சராசரி அடிப்படை ஆங்கிலம் கூட தெரியாமல் அவர்கள் கல்லாரியில் படிக்கின்றனர். ஒரு சிறு வாக்கியத்தினைக் கூட பேச அவர்களால் முடியவில்லை. இது அங்கு மட்டும் இல்லை. ஒட்டு மொத்தமாகவே நாங்கள் சுற்றிய எட்டு  நாட்களில் ஏறத்தாழ இதே மாதிரி பல்வேறு இளைஞர்களை சந்தித்தோம். ஹிந்தியும், மராத்தியும் மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். ஆங்கிலம் என்று ஒரு மொழி உலகத்தில் உள்ளது என்று அவர்களுக்கு தெரியுமா என்றுகூட சந்தேகப்பட வேண்டி உள்ளது.



அங்கிருந்து கிளம்பி கோட்டையை ஒரு சுற்று சுற்றி வந்தோம். கல்யாண் தர்வாஜா வரைக்கும் சென்று திரும்பி வந்தோம். காலை இளவெயிலில் மலை உச்சியில் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. வரும் வழியில் பெரிய கொய்யாக்காய் ஒன்றை வாங்கி கொறித்துக் கொண்டே இறங்கினோம். 

11 மணியளவில் கீழே இறங்கினோம். ஒரு கடையில் வடா பாவும், இன்னொரு வகை உணவும் சாப்பிட்டோம். அங்கிருந்து ராஜ்காட் கோட்டைக்கு செல்ல முடிவு செய்து கிளம்பினோம். கூகுல்  மேப்பில் ஒரு மணி நேரம் காட்டியது. வழி ஒரு 5கிமீ சென்றதுமே மிகவும் மோசமாக இருந்தது. திரும்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டே சென்றோம். Activa பழுது ஆகி விடுமோ என்ற அச்சம் வேறு. வழி முழுவதும் ஜல்லி தட்டி வைத்திருந்தனர். ஒரு வழியாக ஒரு 15 நிமிடத்தில் நல்ல சாலையை சென்றடைந்தோம்.



அங்கிருந்து மலை மேல் ஏறிக் கொண்டே இருந்தோம். மேடு பள்ளமாக  மலை எழுந்தும் இறங்கியும் அதன் வளைவு சுளிவுகளில் நாங்களும் ஊர்ந்து சென்று கொண்டே இருந்தோம். வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. வெயிலில் காய்ந்து மஞ்சள் நிறமாக நின்றது மலை. சில இடங்களில் நெருப்பால் எரிந்து கருநிறமாக இருந்தது. "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடலில் ஜீவாவும், அஞ்சலியும் சைக்கிளில் செல்லும் போது தெரியும் காட்சியாக மலைகள் காய்ந்து பறந்து விரிந்து இருந்தது.


மதிய வெயில் ஆனாலும், வெப்பம் அவ்வளவாக தெரியவில்லை. ஒரு ஆற்றின் ஓரமாக வழி சென்ற போது, அங்கு ஒரு 20 இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். கல்லூரி சுற்றுலாவிற்கு வந்தவர்கள் போல் இருந்தனர். நீர் கருநிறமும், செந்நிறமுமாக கலந்து சென்றது. நாங்களும் குளிக்க முடிவு செய்தோம். எனக்கு சுமாரான நீச்சல் மட்டுமே தெரியும் என்பதால், முதலில் ஒரு தயக்கம் இருந்தது. கரையோரம் ஆழம் அதிகம் இல்லை என்று அறிந்ததும், நானும் குளிக்க தயாரானேன்.  வெயிலுக்கு நீரின் குளுமை நன்றாக இருந்தது. கரையோரம் நிறையபேர் குளித்ததால், நீர் கலங்கி செம்மண் போன்று இருந்தது. கொஞ்சம் உட்புறம் தெளிவாக இருந்தது. ஜெயமோகன் அவர்களின் 'முகங்களின் தேசம்' வாசித்த போது ,ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் ஒரு ஆற்றினைக் கடந்து செல்கையில் அவர்கள் இறங்கி நீந்தி, குளித்து விட்டு சென்றனர் என்று எழுதி இருப்பார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட பொறாமையை இந்த ஆற்றில் குளித்து கரைத்தேன்.



அங்கிருந்து ராஜ்கட் கோட்டைக்கு தொடர்ந்தோம். ஒரு இடத்தில பெட்ரோல் குறைவாக இருப்பதைக் கண்டு, ஒருவரிடம் விசாரித்து பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்திற்கு ஒரு U டர்ன் செய்து சென்றோம். அங்கிருந்து துங் கோட்டை பக்கத்தில் இருப்பதாக கூகுள் சொல்லியது. ஒரு 5 நிமிடத்தில் துங் கோட்டையின் அடிவாரத்திற்குச் சென்றோம். ஆனால் அந்த வழி பராமரிப்பிற்காக மூடி விட்டதாக சொன்னார்கள். எனக்கு தெரிந்த அரை ஹிந்தியை வைத்துக் கொண்டு பாதி புரிந்தும், புரியாமலும் பயணம் முழுவதும் அங்குள்ள மக்களிடம் பேசினேன். கோட்டைக்கு வேறு வழி திறந்திருப்பதாகவும், அதற்கு மலையைச் சுற்றி செல்ல வேண்டும் என்றும் சொன்னார்கள். நாங்கள் சரி என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினோம். ஆனால் ராஜ்கட் கோட்டைக்கு மேப் போட்டுக்கொண்டு சென்றோம்.

போகும் வழியில் ஒரு தட்டு போண்டாவும், ஒரு இடத்தில் கரும்பு சாரும் உண்டு சென்றோம். ராஜ்கட் கோட்டைக்கு செல்லும் வழி புதிர் நிரம்பியதாக இருந்தது. கடைசி 5 கிமீக்கு கிட்டத்தட்ட ஒரு ஒற்றைவழி பாதையிலும், கரடு முரடான பாதையிலும் சென்றோம். வண்டியை நினைத்தே பயந்து கொண்டிருந்தோம். ஒரு வழியாக கோட்டையின் அடிவாரத்தை அடைந்ததும், அங்கு ஒரு சிறிய கடை இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு, அங்கிருந்து கோட்டைக்கு நடந்து மட்டும் தான் செல்ல முடியும் என்று சொன்னார். அதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும் என்றார். நாங்கள் மலைப்படைந்தோம். மணி இரண்டாகியது. நாங்கள் யோசித்து கோட்டைக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம்.

பெரும்பாலும் அங்கிருக்கும் கோட்டைகளை நடந்து (trek) மட்டுமே அணுக முடியும் என்று அப்போது தான் புரிந்து கொண்டோம். எல்லா கோட்டைகளுக்கும் சிங்கட் கோட்டை போன்று பாதை இருக்கவில்லை. அந்த சிறு கடையிலே  மதிய உணவினை (போஹாவும், ரொட்டியும்)  முடித்துக்கொண்டு கிளம்பினோம். கிளம்பும் போது மூன்று இளைஞர்கள் இறங்கி வந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அதிகாலையிலே, மேலேறி சென்றனர் என்று சொன்னார்கள். கோட்டைக்குச் செல்ல காலைப் பொழுது மட்டுமே சிறந்தது.

அங்கிருந்து புனேவைக் நோக்கி கிளம்பினோம். 20கிமீ தொலைவு கிராமங்களில் சுற்றி ஒரு NH பாதையை பிடித்தோம். வழியில் ஒரு பெரிய சுரங்கப்பாதை வழியே சென்றோம். அது எப்படியும் ஒரு கிமீ  ஆவது இருந்திருக்கும். அங்கிருந்து கட்ராஜ் ஜெயின் கோவிலுக்குச் சென்றோம். கோவில் உள்ளே சென்று ஒரு இடத்தில பைகளை வைத்து விட்டு, முகம்,கை, கால் கழுவிக் கொண்டு உள்ளே சென்றோம். நான் பார்க்கும் முதல் சமணக்  கோவில் இதுவே. கோவிலில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளது. மகாவீரரின் பெரிய சிலையையும் கண்டோம். 

சமணக் கோவிலைப் பார்த்துவிட்டு, 'ஓஷோ சர்வதேச ஆசிரமம்' நோக்கி புறப்பட்டோம். அந்த இடமும் நாங்கள் வண்டி எடுத்த இடமும் பக்கத்தில் தான். ஆசிரமம் அமைந்திருக்கும் பகுதி மேல் வர்க்க இடம் போல் இருந்தது. நன்றாக போடப்பட்ட சாலைகள். இரு மருங்கிலும் பன்னாட்டு கடைகள். ஒரு சில வெளி நாட்டினவர் கூட தென்பட்டார்கள். ஆசிரமம் உள்ளே செல்ல முயல்கையில் அங்கிருக்கும் காவலாளி, முன் பதிவு செய்ய வேண்டும் என்றும், நாளைக்கு தான் ஆசிரமம் பார்க்க முடியும் என்றும் சொன்னார். சாலை முடிவில் ரோட்டில் விற்கும் இளனிக்கடையில் நாங்கள் இருவரும் ஆளுக்கொரு இளநீர் குடித்தோம். அந்த கடைக்காரர் தான், பக்கத்தில் ஓஷோ பூங்கா உள்ளது  என்றும், அது பொதுப் பூங்கா தான் என்றும், ஆறு மணி வரை திறந்திருக்கும் என்றும் சொன்னார்.



பக்கத்து சாலையில் உள்ள அந்த பூங்காவிற்கு சென்றோம். வெளியில் பல்வேறு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தது. நாங்களும் Activa வை அங்கு நிறுத்தி விட்டு, உள்ளே சென்றோம். அங்கு ஒரு ஓஷோ சிலை இருந்தது. அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். ஒரு சாலையின் இரு மருங்கிலும் பூங்கா உள்ளது. நகரின் நடுவே சூரிய ஒளி படாத அளவிற்கு அடர்ந்து  வளர்ந்திருக்கும் மரங்கள். பூங்காவின் நடுவிலே, சாக்கடை நீர் போல ஒரு ஓடை ஓடுகிறது. மற்ற பூங்காக்களில் இருப்பது போன்று இங்கும் ஒரே காதலர் கூட்டம் தான். அதனைப் பார்த்து, வாழ்க்கையில் இந்த மாதிரி அனுபவித்திராத இளமை பருவத்தினை பேசிக் கொண்டே வந்தோம். 

ஒரு 6:10 மணி வாக்கில் உள்ளே பூங்காகாவலாளி வந்து, வெளியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்களை, காவல் துறையினர் வண்டியில் ஏற்றிச் சென்று விட்டதாக கூறிக் கொண்டு சென்றார். நான் ஓடிப்போய் பார்ப்பதற்குள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வண்டியும் இல்லை. ஓஷோ பூங்கா வருவதற்கு வழி கேட்கும்போது, ஒரு சிறுவன் அந்த தெருவில் பார்க்கிங் இல்லை என்று சொன்னான். நான் தான் மற்ற வண்டிகள் எல்லாம் நிறுத்தி இருக்கிறதே என்று, எங்கள் வண்டியையும் நிறுத்தினோம். அருகில் இருந்தவர்கள் காவல் வண்டி பக்கத்து தெருவிற்கு சென்று விட்டதாக கூறினார்கள். நாங்கள் ஓடிச் சென்றோம். சாலை முடியும்  இடத்தில், ஓரமாக வண்டியினை நிறுத்தி இருந்தனர். அனைத்து வாகனங்களும், காவல் வண்டியின் மேல் இருந்தன. 

வழக்கம் போல், பேரங்கள் ஆரம்பமாயின. அவரவர் தங்கள் வாகனத்தைத் தரும் படி கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சற்று பதட்டமாக இருந்தேன். எங்கு போக்குவரத்து காவலாளியைக் கண்டாலும் எனக்கு ஒரு சிறு நடுக்கம் ஏற்பட்டு விடுகிறது. எல்லா ஆவணங்களும் இருந்தாலும் அந்த நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது சட்டத்தின் மேல் இருக்கும் பயம் இல்லை. சட்டத்தை அமல்படுத்தும் மனிதன் மேல் இருக்கும் பயம்.  சட்டம் என்பதே அதை அமல்படுத்தும் போதுதான் உயிர் பெறுகிறது. அதுவரை அது ஒரு வாக்கியம் மட்டுமே. அதை அமல்படுத்துபவருக்கு இருக்கும் அனிச்சையாக முடிவெடுக்கும் ஆற்றலைக் கண்டு தான் இங்கு எல்லோரும் பயப்படுகிறார்கள். ஒரே குற்றத்துக்காக, ஒவ்வொருவருக்கும், வெவ்வேறு வகையான சட்டத்தினை அவர்கள் நினைத்தால்  உபயோகிக்கலாம்.  

எங்கள் வண்டியின் எண்ணை கருவியில் போட்டுப் பார்த்து, அதற்கு ருபாய் 5000க்கு மேல் அபராதம் உள்ளதாக அந்த காவலாளி சொன்னார். நாங்கள் சுற்றுலாப் பயணி என்றும், எங்கள் நண்பரின் வாகனம் அது என்றும் சொன்னோம். 

எத்தனை முறை நாம் அடிபட்டாலும் , திரும்ப திரும்ப அதே தவறை ஏன் செய்கிறோம் என்றே தெரியவில்லை. அதிகாரத்திடம் கருணையை எதிர்பார்ப்பது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. ஆனால் அதைத்தான் எப்போதும் நாம் செய்கிறோம். நாம் கெஞ்ச ஆரம்பிக்கும் போது தான், அவர்களின் அதிகார பம்பரம் வேகமாக சுற்றும். ஆனால் அதை விட்டாலும் வேறு வழி இல்லை. ஒன்று பேரம் பேசி பணம் கொடுத்து தப்பிப்பது. இல்லையேல் கெஞ்சி கூத்தாடி கூடுதல் பணம் கொடுத்து தப்பிப்பது. இரண்டாவது மட்டுமே நாம் செய்கிறோம். முதல் வகையினை நாம் செய்ய காவல்துறை மீதுள்ள பயமும், நடுக்கமும் நம்மைத் தடுக்கிறது. 

அந்த இடத்தில ஒரு காதல் ஜோடிகளின் வாகனமும் இருந்தது. அவர்கள் பேரம் பேசி ஒரு தொகைக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் கையில் பணம் இல்லை. எங்களிடம் அவர்கள் GPay செய்வதாக ஒரு 500 ரூபாயை கேட்டனர். அப்பொழுது எங்களிடம் கையில் காசு இருந்தது. ஆனால் எந்த காரணத்தாலாயோ அவர்களிடம் அதை கொடுக்கவில்லை. அது அவர்கள் மேல் உள்ள பொறாமையாக இருக்கலாம். நம் வண்டி மாட்டிக்கொண்டு இருக்கும்போது அவர்கள் மட்டும் எப்படி தப்பித்துச் செல்லலாம். அல்லது அந்த சூழ்நிலையின் நடுக்கமாக இருக்கலாம். முடிவெடுக்கும் நொடியினை கடந்து விட்டால், அது எப்போதும் ஒரு குற்ற உணர்ச்சியாக தங்கி விடுகிறது.

நான் கொஞ்ச நேரம் பார்த்து, இது வேலைக்காகாது என்று, வாகன உரிமையாளரான சுதிரை அழைத்தேன். அவரும், இன்னொருவரும் பத்து நிமிடத்தில் அந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் மராத்தியில் பேரம் பேசி, 200 ரூபாய்க்கு முடித்து, வண்டியை தந்து விடுமாறு சொல்லிவிட்டு சென்றனர். நாங்கள் அரைமணி  நேரத்தில் வந்து வண்டியினை விடுவதாக அவரிடம் சொன்னோம். 

வண்டியினை பெற்றுக் கொண்டு அந்த பகுதியில் இருக்கும் தெருக்களில் சுற்றி வந்தோம். அந்த பகுதியில் பல்வேறு கடைகளும், இளைஞர் கூட்டமும் அதிகம் இருந்தது. நாங்கள் ஒரு momos கடையில் வண்டியை நிறுத்திவிட்டு ஆளுக்கொரு சிக்கன் மோமோஸ் சாப்பிட்டோம். அப்பொழுது அங்கு ஒரு ஜோடி தமிழில் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் அங்குள்ளவர்களுக்கு தெரியாது என்றெண்ணி பேசிகொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை. நான் அவர்களை கவனித்துக் கொண்டே நண்பரிடம் தமிழில் ஏதோ பேசினேன். அந்த இளைஞன் திடீரென்று அதிர்ச்சியுடன் முகம் மாறிப்போய் எங்களைப் பார்த்தான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்கள். இளைஞர் கூட்டத்தினைப் பார்க்கும்போது சற்றே பொறாமையாக இருக்கிறது. 

momos சாப்பிட்டு முடித்து விட்டு எங்கு இரவு ரூம் போட்டு தங்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் லோனாவாலா போகத் திட்டம் இருந்தது. ஆனால் இந்த Activaவில் அவ்வளவு தூரம் செல்ல முடியாது. அதனால் சுதிரிடம் சென்று வேறு வண்டி வாங்கினோம். Honda Shine வாங்கினோம். ஒரு நாள் வாடகை 800 சொன்னார். நாங்கள் பேரம் பேசி 650க்கு கொண்டு வந்தோம். அங்கிருந்து வண்டி எடுத்துக் கொண்டு பக்கத்து சாலைகளில் ஏதாவது ரூம் இருக்கிறதா என்று பார்க்கப் போனோம். 45 நிமிடம் தேடியும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாததால்,நண்பர் அவரின் மனைவிக்கு போன் செய்து onlineல் ரூம் பார்க்க சொன்னார். பக்கத்திலேயே ஒரு நல்ல ரூம் பதிவு செய்து கொடுத்தார்கள். வண்டி திடீரென்று ஸ்டார்ட் ஆகவில்லை. அங்கேயே சுதிருக்கு போன் செய்து வேறு வண்டி (Hornet) பெற்று கிளம்பினோம்.

zomatoவில் ஒரு கிரில் சிக்கன்  ஆர்டர் செய்து சாப்பிட்டோம். நான் சென்று எனது துணிகளை துவைத்துப் போட்டேன். பின்னர் பக்கத்தில் இருக்கும் ஒரு தள்ளு வண்டி கடைக்கு சென்று உணவு உண்டோம். ஒரு இனிப்பு பீடாவும் ஆளுக்கொன்று வாங்கிப் போட்டோம். 

அடுத்த நாள் காலை 6 மணிக்குள் லோனாவாலாவுக்கு கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்து உறங்கினோம். 

Thursday, 30 March 2023

மகாராஷ்டிரா பயணம் (1)

வாழ்க்கையின் முதல் பெரிய பயணம் என்பதால், பயணத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஒரு பதட்டம் கலந்த இனிமை இருந்தது. இதற்கு முன்னாலும் பல்வேறு பயணங்கள் போயிருந்தாலும், அதெல்லாம் வேலை நிமித்தமாகவோ அல்லது வழக்கமான சிறு பயணங்களாவோ தான் இருந்துள்ளது. இந்த பயணம் என்னளவில் முக்கியமானது. ஏனென்றால், இது நான் என்னை எடை போடவும், என் உடலை சோதித்துப் பார்க்கவும் தேவையான ஒரு பயணம். மற்றபடி இந்தப் பயணத்தில் எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் அற்றே கிளம்ப தயாரானேன்.

மார்ச் பதினெட்டாம் தேதி, மதியம் 12:45க்கு தர்மபுரியிலிருந்து புனாவுக்கு ரயிலில் பயணம் உறுதியானது. வீட்டில் அனைவருக்கும் சொல்லிவிட்டு தம்பியுடன் சென்று ரயில் நிலையத்தில் இறங்கினேன். ஒரு ஷார்ட்ஸும் , டி ஷர்ட்டும் ஒரு பையுமே எனது உடமைகள். 

ரயில் நிலையத்தில் அரை மணி நேரம் காத்திருந்த பின்பு, 1:15 மணி அளவில் ரயில் வந்தது. ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்ததும் பயணம் தொடங்கியது. மனம் அமைதியாகவும், வெறுமையாகவும் எந்த ஒரு எண்ணங்களும் இன்றி சிறிது நேரம் இருந்தது. ஒரு மணி பயணத்தில் ராயக்கோட்டை வந்த பிறகு, ரயில் ஒரு மணி நேரம் மேலாகவே நின்றது. 

நண்பர் ஜெயவேல் ஓசூரிலிருந்து ரயிலில் இணைந்து கொள்ள இருந்தார். அவரிடம் மொபைலில் பேசினேன். அவர் ஓசூர் ரயில் நிலத்திற்கு வந்து காத்திருப்பதாக சொன்னார். ரயில் ரொம்ப நேரம் நின்றிருந்ததால் அவரை மதிய உணவு சாப்பிடச்சொல்லி நானும் வாழை இலையில் கட்டி எடுத்து வந்திருந்த காய் சாதத்தினையும், அவித்த முட்டையையும் சாப்பிட்டேன். 

அடுத்த ஏழு நாட்களுக்கு சென்று பார்க்கும் இடங்களை மொபைலில் தேடிக் கொண்டிருந்தேன். வெளியே இருக்கும் வெயில் தெரியாமல் A/C பெட்டியில் குளிர் இதமாக இருந்தது. பக்கத்து சீட்டில் ஒரு இளம் ஜோடி 2010 வரை வந்த ஹாரிஸ் ஜெயராஜ் காதல் பாடல்களைக் கேட்டுக் கொண்டும், காதல் பாடல்  வரிகளின் அர்த்தங்களை பேசி சிரித்துக் கொண்டும் வந்தனர். ஓசூருக்கு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக 3:30 மணிக்கு வந்தடையந்தது. 

நண்பர் ஓசூரில் ரயிலில் ஏறிக் கொண்டார். மிகவும் உற்சாகமாக இருந்தார். கே.ஏ. மீரா அவர்களின் கபர் புத்தகமும், மிர்தாத்தின் புத்தகமும் கொண்டு வந்திருந்தார். சப்பாத்தி/குருமா கட்டி எடுத்து வந்திருந்தார். 

சுமார் ஐந்து மணியளவில் ரயில் பெங்களூரு  ரயில் நிலையத்திற்கு சென்றது. நிறையபேர் இங்கு ரயிலில் ஏறினர். எங்கள் பெர்த்திற்கு எதிரில் ஒரு குடும்பம் வந்தமர்ந்தது. நடுத்தர வயது கணவன், மனைவி மற்றும் ஒரு மூன்று வயது குழந்தை. 

நானும் நண்பரும் இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் வாசித்தோம். எதிரே இருந்த மூன்று வயது குழந்தை மிகவும் அட்டகாசம் செய்தது. அதற்கு ஒன்று வீடியோ போட்டுத் தரவேண்டும், அப்படி இல்லை என்றால் அதனுடன் விளையாட வேண்டும். ரயிலின் ஒவ்வொரு A/C பெட்டிகளுக்காக ஒரு தனி பணியாள் எப்போதும் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். அவர் தரையினை சுத்தம் செய்வது , பயணர்களுக்கு போர்வை, தலையணை கொடுப்பது ஆகிய வேலைகளை செய்கிறார். 

இரவு 9:30 அளவில் நான் நடு பெர்த்தில் தூங்கச் சென்றேன். ஒரு முப்பது நிமிடத்திற்கெல்லாம் நான் தூங்கி விட்டேன். 

நாள் 2:

காலை 4 30 மணிக்கு விழித்துக் கொண்டேன். காலையிலேயே கழிவறை உபயோகித்து, பல் துலக்கிவிட்டு அமர்ந்து கொண்டிருந்தேன். ஆறு மணியளவில் வெளியே விடிய ஆரம்பித்தது. இப்பொழுது தான் ஒரு விடுதலை உணர்வு மனதிற்குள் மெல்ல உருவானது.

ரயில் மகாராஷ்டிரா எல்லைக்குள் போய்க் கொண்டிருந்தது. வெளியில் பெரும்பாலும் பொட்டல் காடுகளாகவே இருந்தது. சோளப்பயிர்கள் தான் பெரும்பான்மையான பயிர் வகைகள். மண் கருப்பு நிற வண்டல். புதிய நிலக் காட்சிகளை கண்டவாறு சென்று கொண்டிருந்தோம். ஒரு பிரம்மாண்டமான இரண்டடுக்கு ஓட்டு வீட்டினை கண்டேன். அந்த அளவில் நான் எங்கும் ஒரு ஒட்டு வீட்டினை கண்டதில்லை.

காலையில் எட்டு மணியளவில் எதிர் பெர்த்தில் குழந்தை விழித்துக் கொண்டது. அந்த குழந்தை இரவெல்லாம் ஒரே அட்டகாசம் செய்தது என்று காலையில் நண்பர் சொன்னார். நான் நன்றாக தூங்கியதால் , எனக்கு ஏதும் தெரியவில்லை. நாங்கள் கொண்டு போன ஆரஞ்சு பழத்தை குழந்தைப் பார்த்துக்கொண்டிருந்ததால், ஒரு பழத்தை அவளுக்குக் கொடுத்தோம். அவள் வாங்கி தன் அம்மாவிடம் உடனே உரித்துக் கொடுக்கச் சொல்லி சாப்பிட்டாள். சாப்பிடுவதில் எந்த வஞ்சனையும் இல்லாமல் குழந்தைகளுக்கே உரிய வகையில் அலைந்து தின்றது. ஜெயமோகனின் புழு உவமை தான் ஞாபகம் வந்தது. தன்னிடம் கிடைக்கும் அனைத்தையும் தின்று வளரும் ஒரு உயிர். 

புனே:

காலை 11 மணியளவில் புனே ரயில் நிலையத்தில் இறங்கினோம். ரயில் நிலையத்தில் சுற்றுலா மைய்யத்தினை தேடிக் கொண்டிருந்தோம். எனக்கு அது இருக்கும் என்று சந்தேகம் தான். ஆனால் நண்பர் தான் கண்டிப்பாக இருக்கும் என்று சொன்னார். பின்னர் விசாரித்தபோது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று சொன்னார்கள். புனே ரயில் நிலையம் ரொம்ப பெரியதும் இல்லாமல், சிறியதும் இல்லாமல் ஒரு நடுத்தர அளவிலான ரயில் நிலையம். 

வெளியே வழக்கம் போல ஆட்டோக்காரர்களின் 'உபச்சாரம்'.  ஒரு ஆட்டோக்காரர் தமிழில் கூட சவாரி கேட்டார். நாங்கள் ரயில் நிலையத்திற்கு எதிரில் ஒரு தேநீர் கடையில் டீ அருந்தினோம். டீ நன்றாகவே  இருந்தது. 

எங்கள் பயணம் முழுவதும் ஒரு ஊரில் இறங்கி அந்த ஊரைச் சுற்றி பார்க்க rental bike எடுத்துக் கொண்டு சுற்றலாம் என்று ஒரு யோசனை. அப்படி போவது இதுவே முதல் முறை. நான் கூகுளில் தேடி ஒரு rental bike அலுவலகத்திற்கு வழி போட்டேன். அங்கிருந்து 3.8 கிமீ காட்டியது. ஒரு ஆட்டோக்காரரிடம் மேப்பை காட்டி 80 ரூபாய்க்கு பேரம் பேசி ஏறினோம். அது one-way என்பதால் மேப் திசைமாறி 5கிமீ காட்டியது. ஆட்டோக்காரர் 120 ருபாய் கேட்டார். நாங்கள் இறங்கி விட்டோம். வேறு வழியில் நடந்து சென்றோம். அங்கு பேருந்து நிலையம் அருகில் ஒரு ஆட்டோவைப் பிடித்து 80 ரூபாய்க்கு எறிக் கொண்டோம். 

ஒரு 10 நிமிடத்தில் rental bike அலுவலகத்திற்கு வந்து விட்டோம். இது காரேகான் ரோட்டில் அமைந்துள்ளது. அலுவலகம் என்று சொல்ல முடியாது. ஐந்தாறு வண்டிகள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு அபார்ட்மெண்ட் பின்புறம் பார்க்கிங் இடத்திலே, ஒரு நாற்காலியும், மேசையும் போட்டுக்கொண்டு உரிமையாளர் சுதிர் இருந்தார். அடிப்படை ஆங்கிலம் பேசினார். நாங்கள் ஒரு Activa வண்டியினை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். 

Activaவில்  பெட்ரோல் போட்டுக்கொண்டு புனேவைச் சுற்ற ஆரம்பித்தோம். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக பின்னாடி ஆனது. நாம் இங்கு ஒரு சுற்றுலாப் பயணி இல்லை. இந்த மக்களோடு மக்களாக இருப்பவர்கள் என்ற எண்ணம். ஒரு அருமையான 'வடா பாவும்', பாணி பூரியும் சாப்பிட்டுவிட்டு முதலில் 'ஷநிவர் வாடா'விற்குச் சென்றோம். 

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. முகப்பு கோட்டையின் கதவு, கோட்டைகளுக்கே உரிய பிரம்மாண்டமாக இருந்தது. டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். மதிய வெயில் அவ்வளவு கடுமையாக இல்லை. கோட்டைக்குள் நுழைந்ததுமே அதன் வரலாற்றை பறைசாற்றும் எழுத்துப் பலகை ஒன்று ASI யால் பொறிக்கப்பட்டிருந்தது. அதை வாசித்துக் கொண்டு கோட்டையில் நடந்தோம்.



மராட்டிய அரசின் பேஷ்வாக்கள் வாழ்ந்த அரண்மனை ஷநிவர் வாடா. இது ஏழு அடுக்கு கோட்டையாக  இருந்துள்ளது. ஆனால் இப்பொழுது முற்றிலும் சிதிலம் அடைந்து வெறும் சுற்று சுவர்களும், கோட்டைக்குள் சிறு எச்சங்களுமே பாக்கி உள்ளது.  நம் கற்பனையில் அதன் அடுக்குகளை கட்டிக்கொள்ளலாம். கோட்டை உட்புற பகுதிகளிலே அது முன்பு என்னவாக இருந்தது என்று எழுதிவைத்திருக்கிறார்கள். ஒரு இடத்தில பேஷ்வா நாராயணராவ் அடைத்து வைத்திருந்த இடம் என்று எழுதி இருந்தது. அங்கு அவரின் குரல் கேட்கும் என்றும் உள்ளது. 




கோட்டையினை மூன்று சுற்றுகளாக பிரிக்கலாம். நடுச் சுற்று ஏறத்தாழ சதுரமானதாகும். அது கிட்டத்தட்ட ஒரு அடுக்கு உயரம் கொண்டது. அதைச் சுற்றிலும் உள்ள இடங்கள் தரை மட்டத்திற்கு தாழ்வானது. அங்கே பல்வேறு தொட்டிகள், அறைகள் இருந்திருக்கின்றன. ஒரு கலை அரங்கும் இருந்துள்ளது. மூன்றாம் சுற்று, மதில் சுவர் கொண்டது. அனைத்தும் கருங்கற்களால் கட்டபட்டது. மதில் சுவரின் நான்கு மூலையிலும் கண்கணிப்பு காவலர் மாடங்கள் உள்ளது. மொத்தம் கோட்டைக்கு ஐந்து கதவுகள் உள்ளன. ஒவ்வொரு கதவிர்க்கும் ஒரு 'தர்வாஜா' (பெயர்) உள்ளது. 



ஷநிவர் வாடா முடித்துவிட்டு "ராஜா திங்கர் கேல்கர் மியூசியம்" சென்றோம். ஒரு உட்புற தெருவில் ஒரு வண்டி மெக்கானிக் கடைக்கு எதிரில் இருக்கிறது. இங்கு பண்டைய கலைப்பொருட்கள், சிலைகள், அன்றாடம் பயன்படுத்தப்படும்  பழங்கால பொருட்கள், ஓவியங்கள், இசைக் கருவிகள், துணிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தந்ததால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், மர வேலைப்பாடு கொண்டவை என வெவ்வேறு வகையான பொருட்கள் இருந்தன. பெரும்பாலும் இவை கடந்த 200 முதல் 300 ஆண்டுகள் பழமையானவை ஆகும். 

பாதி பார்த்துக் கொண்டிருக்கும் போதே பசி எடுத்ததால், மியூசியம் மேலாளரிடம் கேட்டுக்கொண்டு, அவர் சொன்னபடி, பக்கத்தில் இருக்கும் ஒரு நல்ல உணவகத்துக்கு சென்றோம். உணவகத்தின் பெயர் "ககன்ராஜ்" உணவகம். சைவ உணவகம். காத்திருப்பு நேரம் 10 நிமிடம் என்றார்கள்.  நாங்கள் வெளியில் காத்திருந்தோம். இப்படி ஒரு உணவகத்தில் காத்திருந்து சாப்பிட்டு பல வருடங்கள் ஆனது.  காத்திருப்புக்கு ஏற்ற மாதிரி உணவு மிகவும் சுவையானதாக இருந்தது. "இரண்டு சாப்பாடுகள்" வாங்கி சாப்பிட்டோம். ஒரு "குளோப் ஜாமூனும், பழ சாலடும்" சாப்பாட்டுடன் வந்தது. 

நன்றாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் மியூசியம் போனோம். மீதி உள்ளவை அனைத்தையும் பார்த்துவிட்டு, அங்கிருந்து 'பாடலேஸ்வர் குகைக் கோயிலுக்கு' சென்றோம். வழியில் ஒரு பூங்கா, அதைத் தாண்டிச் சென்றதும்  இக்குகை கோவில் அமைந்துள்ளது. ஒற்றை பாறையின் அடியில் குடைந்து உருவாக்கப்பட்டது. எதிரே உள்ள நந்தி மண்டபமும் ஒற்றை கல்லால் செதுக்கியது. இந்த குகைக் கோயில் நகரத்தின் மையத்தில் இருப்பதால், குகையின் அருகே இருக்கும்போது வேறு நூற்றாண்டில் இருப்பது போல ஒரு பிரமிப்பு ஏற்படும். ஆனால் ஒரு 100 அடிக்கு முன்னாள் ஒரு பெரு நகரம் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த கற்குகைக்கு  மட்டும் காலம் நின்றுவிட்டது போல. 

அங்கிருந்து "சதுரஷிங்கி கோவிலுக்கு" சென்றோம்.ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது கோவில். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினால் நிர்வகிக்கப்படும் கோவில் இது. முக்கிய தெய்வம் காளி. இங்குள்ள தெய்வங்களுக்கு காவியால் வண்ணம் பூசுகிறார்கள். முதன்முறையாக இம்மாதிரி நான் பார்க்கிறேன். 

சாயங்காலம் 5 மணியளவில் ரோட்டோரத்தில் இருக்கும் ஒரு கடையில் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டே அடுத்து எங்க போலாம், எங்கு அறை எடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் கோட்டைகளுக்குச்  செல்வதனால், அங்கு போகும் வழியில் ஏதாவது ஒரு அறை எடுக்கலாம் என்று சொன்னேன். நண்பர் தன்  மனைவியிடம் சொல்லி இணையத்தில் தேடி ஒரு அறை உறுதி செய்தார். 

புனேவின் சாலைகள் நன்றாக அகலமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அவ்வளவாக இல்லை. மற்ற ஊர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் சாலைகள் நன்றாகவே  இருந்தன. வெப்பநிலையும் மிதமாகவே இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பிரதேசமாக அமைந்துள்ளதால் சாலைகளும், இடங்களும் பெரும்பாலும் ஏற்ற இறக்கமாகவே உள்ளது.  

இரவு 8 மணியளவில் அறைக்குச் சென்றோம். குளிக்க ஷாம்பு இல்லாததால் அதை வாங்க பல கடைகள் அலைந்து, இறுதியில் வாங்கி அறைக்கு வந்து குளித்துவிட்டு உறங்கினோம். அடுத்தநாள் கோட்டையில் ஏற காலையில் சீக்கிரம் எழவேண்டும் என்று மொபைலில் விழிப்பொலி வைத்து உறங்கினோம்.

Friday, 10 March 2023

பறந்துபோய்விட்டான்


 

எட்கர் கீரத் அவர்களின் 'Fly Already' சிறுகதைத் தொகுப்பை , தமிழில் செங்கதிர் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார். நூல் வனம் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

'பறந்துபோய்விட்டான்' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாசிப்பைக் கோரும் கதைகள். சில கதைகள் நேரடியாகவும் , சில கதைகள் பல்வேறு தளங்கள் கொண்ட கதைகளாகவும் உள்ளன. 

உள்ளடுக்குகள் கொண்டும், பல்வேறு யுக்திகள் கொண்டும் பெரும்பாலான கதைகள் உள்ளது. தற்கால இஸ்ரேல் மனதின் ஒருவகைச்  சாட்சிகளாகவே இக்கதைகள் உள்ளன. விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருசேர பயன்படுத்தி சில கதைகள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அடியில் மனிதனின் அடிப்படை உணர்வுகளே பேசப்பட்டுள்ளதால் இது பெரும்பாலும் அனைத்து இடத்துக்கும் பொதுவாகவே உள்ளது.

மனித குரூரங்களையும், பழி உணர்ச்சியையும் சொல்லும் 'தபுலா ரஸா' ('எழுதாப் பலகை'  லத்தீன்)முதல் சிறுகதை. ஹிட்லர் போன்றே cloneஐ உருவாக்கி பழி தீர்க்கும் ஒருவன், clone பொண்டாட்டியை கொன்று நிஜப் பொண்டாட்டியோடு இன்பமாக வாழ நினைக்கும் கணவன். ஆனால் அந்த cloneஇற்கு தங்கள் எதிராளியின் குணாதியசங்களை வரவழைத்த பின்பே அவர்களை பழி தீர்க்கின்றனர். பழி தீர்த்தப் பின்னும் பழி எஞ்சியே உள்ளது. எந்தப் பழியையும் முழுமையாக தீர்க்க முடியுமா என்ன? அதனால் தான் மனிதன் இந்த 'எழுதாப் பலகை'யில் எழுதி எழுதி வரலாறு முழுவதும் அழித்துக் கொண்டே இருக்கிறான் போலும்.

குழந்தையின் பார்வையில் பறக்கும் சூப்பர்மேனாக தெரிகிறான் தற்கொலை செய்து கொள்ளும் ஒருவன். தங்கள் கொடை உள்ளத்தை வெளிக்காட்ட 'செயலி' செய்து ஆதரவற்றோரைக் காக்க நினைக்கும் மேல் வர்க்கத்தினர். ஆதரவற்றோர் இல்லாமல் போனால், தாங்களே ஆதரவற்றோராக நிற்கும் அவர்களின் முரண். உறவு முறிந்தவனின் தனிமை சொல்லும் கதை என்று ஒவ்வொரு கதையும்  வடிவிலும் தொட்டுச் செல்லும் உணர்விலும் வெவ்வேறு கோணங்களைக் கொண்டுள்ளது.

வாழ்க்கையில் 365 நாட்களும் பிறந்தநாள் கொண்டாடி இன்பமாய் இருக்க, மற்றவர்களின்  பிறந்தநாட்களை விலை கொடுத்து வாங்குகிறான் ஒரு செல்வந்தன். ஒரு மனிதனின் ஒரு நொடி அவனின் மொத்த வரலாறும் அந்த இடத்தில கூடும் ஒரு புள்ளியாகவே இருக்கும். அதில் இன்பமும், வன்மமும், குரூரமும் அனைத்துமே கலந்து தான் இருக்கும். அவ்வாறு 'தோற்றுப்போன புரட்சியாளனின் பிறந்தநாள்'ஐ வாங்கும் செல்வந்தன் என்னவாகிறான் என்கிறது ஒரு கதை. 

தங்கள் நாயின் ஒவ்வாமைகள் வழியாக, மனிதன் கட்டமைக்கப்பட்ட சமூக விழுமியங்களை எல்லாம் ஒவ்வொன்றாக துறந்து கற்காலத்துக்கே செல்லும் தம்பதிகள். இக்கதை குறைந்தபட்சம் இரண்டு வாசிப்புகள் தேவை. 

'சாளரங்கள்' சிறுகதை என்னை மிகவும் பாதித்த சிறுகதை. மிகவும் நுட்பமாகவும், ஒரு சொல் பிழையாக புரிந்து கொண்டால் கூட கதை முற்றிலும் வேறு ஒன்றாக மாறும் கதையாகவும் இருக்கிறது. இக்கதை நேரடியாகவே இரண்டு விதமான வாசிப்புப் புரிதல்களைக் கொள்ளலாம். 

'செங்கதிர்' அவர்களின் மொழிபெயர்ப்பினைப் பற்றி கூறியாக வேண்டும். அனைத்து சிறுகதைகளும் மிகவும் நுட்பமாகவும் அதே சமயம் உணர்வுகளை மிகச்சிறந்த வகையில் கடத்துவதாகவும் மொழி பெயர்த்துள்ளார்.  'சாளரங்கள்' சிறுகதை நான் தமிழிலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வாசித்தேன்.  இக்கதையில் 'neighour' என்னும் சொல் வருகிறது. அதை 'அண்டைவீட்டான்' என்று சுலபமாக கதை போகிற போக்கில் மொழிபெயர்த்துவிடலாம். ஆனால் அவ்வாறு செய்தால் கதையினை எவ்வளவு முறை வாசித்தாலும் புரிந்துக் கொள்ள முடியாது. அதை  'அண்டைவீட்டார்' என்று மொழிபெயர்த்தால் மட்டுமே அந்தக் கதையை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஒவ்வொரு சொல்லிற்குள்ளும் அர்த்தங்களை புதைத்துக் கட்டி கதையின் அழகியலும், கூறுமுறையும், நுட்பமும் மாறாமல் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்  செங்கதிர்.

படித்து முடித்துப் பிறகு இக்கதைகள் வெறும் தொழில் நுட்ப கட்டுமானங்கள் மட்டும் தானோ என்று யோசித்துப் பார்க்கையில்,  கதையின் வடிவத்திலும், யுக்தியிலும்  மனிதனின் உணர்வுகளை படிப்படியாக வடித்துள்ளார் எட்கர் கீரத்.  ஒவ்வொரு தீவிர இலக்கிய வாசகனும் கண்டிப்பாக பல முறை வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு இது.  

நான்கு , ஐந்து முறை வாசித்தாலும் பிடி கிடைக்காத சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளது. 

              

Thursday, 23 February 2023

அஞ்சலை



நான் என் சிறு வயதில் கிராமத்தில் வாழும்போது எப்போதுமே ஏதாவதொரு ஒரு நிகழ்விற்காக பங்காளிகளுக்குள் சண்டைகளும் வாய்த்தகராறுகளும் வந்து கொண்டே இருக்கும். அதை அப்பொழுது ஒரு வினோத நிகழ்வாக எண்ணத் தோன்றவில்லை. இன்று எண்ணிப் பார்க்கையில் அதில் உள்ள குரூரங்களும், வஞ்சங்களும், பழிகளும் தெரிகின்றன. ஆனால் அதில் உள்ளே இருக்கும் பொழுது அதனுள் நாமும் ஒரு அங்கமாகவே ஆகிறோம்.


கண்மணி குணசேகரன் அவர்கள் எழுதிய "அஞ்சலை" நாவலில் வரும் கதாபாத்திரங்களும்  1980களின் தமிழ்நாட்டு கிராமிய வாழ்க்கைச்சூழலை ஒட்டியே இருக்கிறது. நாவல் ஒரு குறிப்பிட்ட சமுதாய வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், கிராமத்தில் வாழும் மற்ற அனைத்து சமூகங்களுக்கும் பொருந்துவதாகவே அமைந்துள்ளது. மனிதர்களின் காமம், கோபம், விரக்தி, பயம்,பேராசை, வஞ்சம், பாசம், பொறாமை ஆகிய அனைத்தும் கலந்ததே இந்நாவல்.


எப்படி ஒரு துடுக்கான, அழகான இளமை ததும்பும் பெண்ணான அஞ்சலை, ஒரு சபிக்கப்பட்ட, கைவிடப்பட்ட எப்பொழுதும் வசைபாடப்படும் பெண்ணாக மாற்றப்படுகிறாள் என்பதே கதை. அந்த மாற்றத்திற்கு இங்குள்ள சமூக அமைப்புகளும், மக்களின் இயற்கையாகவே உள்ள வஞ்சங்களுமே முதன்மைக் காரணங்களாகும்.


தன் முதல் அக்கா புருஷனுக்கு இரண்டாம் தாரமாக  போக விரும்பாததால், அவனால் ஏமாற்றப்பட்டு ஒரு சோப்ளாங்கி மாப்பிளைக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். மணமகனை பெண் பார்க்கும்போது ஆள் மாறாட்டம் செய்து (மாப்பிள்ளையின் அண்ணனை மாப்பிள்ளை என்று ஏமாற்றி) அவளையும், அவள் அம்மாவையும் ஏமாற்றி திருமணம் செய்து விடுகிறார்கள். கார்கூடலில்  இருந்து, மணல்கொல்லைக்கு திருமணமாகிப் போகிறாள்.


அங்கு சென்று அவனுடன் வாழ பிடிக்காமல் வீட்டில் தனியாகவே வாழ்கிறாள். அவன் வேலைக்கு போவான். இவள் வீட்டில் சமையல் மட்டும் செய்து போடுவாள். அவள் பக்கத்தில் இருக்கும் தனது மூத்தாரைப் பார்க்கும் போதெல்லாம் அவன்மேல் ஏக்கம் கொள்கிறாள். அவளுக்கு அங்கு நாத்தனார் முறை கொண்ட  வள்ளி என்பவளே துணையாக இருக்கிறாள். அங்கு அவள் முந்திரிக் காட்டில் அவளோடு வேளைக்கு போவதும் வருவதும் தன் பொழுதைக் கழித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறாள். 


தன் கணவனோடு சண்டைப்பிடித்துக் கொண்டு  அம்மா வீட்டுக்கு போகும் வழியில், தன் பெரிய அக்காவால் அவளின் கொழுந்தனாருக்கு அன்றே மறுமணம் செய்து வைக்கப்படுகிறாள். இரண்டாவதாக தன் கழுத்தில் ஏறிய தாலியல் தமக்கு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்று சந்தோஷமாக இருக்கிறாள்.  அவளுடைய புது வாழ்க்கையில் முதல் இரண்டு வாரங்கள் நன்றாக போகிறது. 


மனிதர்கள் எப்போதும் ஒரு செயலை சுயநலமில்லாமல் செய்ய முடியுமா என்ற சந்தேகம் தான் வருகிறது. எவ்வளவு தான் சிந்தனையால் சுயநலமில்லாமல் இருந்தாலும் ஆழ்மனதில் எங்கோ ஓரிடத்தில் அது தனக்கு ஒரு லாபத்தைத் தரும் என்றே அவன் அதை செய்கிறான். அது தான் ஒருவேலை தன் இருப்பை நிலை நாட்டிக்கொள்ள உதவும் கருவியாகவும் இருக்கலாம். தன் மூத்த அக்காவுக்கும் அவள் கொழுந்தனுக்கும் இருக்கும் உறவை மறைக்கவே அவள் தன் தங்கையினை அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறாள். இது தெரியும் நேரத்தில் அஞ்சலை கர்ப்பமாக இருக்கிறாள். வயிற்றில் பிள்ளையை சுமந்துக் கொண்டு, அவள் கணவனிடமும், அக்காவிடமும் கொடுமைப்படுகிறாள். 


கட்டினவன் சரியில்லை என்று , தன் அக்காவை நம்பி இன்னொரு தாலியையும் கட்டிக்கொண்டு, அதனால் வயிற்றில் பிள்ளையையும் சுமந்துக் கொண்டு இப்போது கார்கூடலுக்கும் போக முடியாமல் ,மணல்கொல்லைக்கும்  போக முடியாமல் இருக்கிறாள். 


கிராமங்களில் நடக்கும் புறம் பேசுதல், வழிய வந்து சண்டைக்கு போதல், பிறரை குத்திக் காட்டி பேசுதல் அனைத்தும் இயல்பாக நுண் விவரங்களோடு சொல்வதாக  நாவல் அமைந்துள்ளது. கிராம மக்களின் அன்றாட வேலை, அவர்களின் உழைப்பு, பெண்களின் கிண்டல் பேச்சு, ஆண்களின் குடி, ஆண்பிள்ளைக்கு கொடுக்கும் மரியாதை, பெண்கள் ஆண்களை அண்டிப்பிழைக்கும் பிறவியாக பார்க்கும் மனநிலை  ஆகிய அனைத்தும்  நேரடியாகவும் மறைமுகமாகவும் நாவல் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது.


திருமணமாகியும் கணவனிடமிருந்து தனித்து வாழும்பெண்கள் தான் இந்த சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களிடம்  பெண்களும் அஞ்சுகிறார்கள். அவளால் தன் குடும்பத்தில் பிரச்னை வந்துவிடும் என்று அவளிடம் எப்போதும் ஒரு ஒவ்வாமையுடனேயே வாழ்கிறார்கள். ஆண்களும் அப்பெண் கொஞ்சம் அழகாக இருந்தால் அவளை அடைய துடிக்கிறார்கள். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலையும் அந்த சமூகம் இம்மாதிரி பிரிந்து வாழும் அல்லது கைவிடப்பட்ட பெண்களின்பால் கொண்டுள்ள உறவை வைத்தே சித்தரித்துவிட முடியும்.


திரும்பவும் கார்கூடலுக்கு கைப்பிள்ளையான வெண்ணிலாவைத்  தூக்கிக்கொண்டு வந்து வாழ்கிறாள் அஞ்சலை. ஆனால் அவளை இச்சமூகம்  மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வன்மம் கொண்டு அவளை குதறி எடுக்கிறது. எந்த ஒரு சிறு சண்டையோ, ஏதோ ஒரு ஆணிடம் பேசினாலோ அவளின் ஒட்டு மொத்த இருப்பையுமே சிதைத்து பேச ஆரம்பிக்கிறது. எங்கு சென்றாலும் அவள் ஓடிப்போனவள் என்றும், தகாத முறையில் பிள்ளை பெற்றவள் என்றே வந்து முடிகிறது. 


மனிதனின் ஆசைகள் வினோதமானது. மண்ணாங்கட்டி கணேசனுக்கு அவள் பொண்டாட்டியான அஞ்சலை ஓடிவிட்டாள் என்பதர்காக , மறுமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அவன் அந்த பெண்ணிடம் வாழாமல், அஞ்சலையின் நினைப்பாகவே இருக்கிறான். அவன் ஏன் அவ்வாறு இருக்கிறான்? அவனே ஒரு சோப்ளாங்கி. கிடைத்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் அவன் அஞ்சலையின் ஞாபகமாகவே இருக்கிறன். அவள் இவனை ஒரு இமி அளவுக்குக்கூட மதிக்கவில்லை என்றாலும், அவனால் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. அஞ்சலை கார்கூடலில் இருக்க முடியாமல் திரும்ப வந்தாலும் கூட, அவன் அவளிடம் ஒரு இடைவெளி விட்டே வாழ்கிறான். ஏற்கவும் முடியபவில்லை. விடவும் முடியவில்லை. அவர்கள் இருவருக்கும் 'அஞ்சாயா' பிறந்தபோது  தான் , அவனுக்கு ஒரு பிடிப்பு வருகிறது.


மணல்கொல்லை வந்து பிறகு அஞ்சலை இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள். அவளும் கூலி வேலை செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறாள். ஆனால் அப்படியும் அவள் வாழ்க்கை எப்போதும் நிம்மதியாக இருந்ததே இல்லை. எந்த ஒரு சண்டை வந்தாலும் இறுதியில் அவள் ஓடிப்போனவள் என்று வந்து நின்று விடுகிறது. அவளின் மூத்தார் மனைவிக்கும் இவளுக்கும் எப்போதும் சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது. கிராமங்களில் ஏன் மக்கள் 'ஒரு மயிர்' விஷயத்திற்காகக்கூட சண்டை வளர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களின் ஆற்றாமையும், வரலாற்றின் நெடுவாக வந்த அடிமைத்தனமும், பஞ்சமும், பட்டினியும் அவர்களை ஒரு இறுகிய மனிதர்களாக ஆக்கிவிட்டது என்றே நினைக்கிறேன். 


அஞ்சலை ஒவ்வொரு முறையும் பொறுத்து போனாலும் ஏதோ ஒரு புள்ளியில் அவளும் அதில் விழுந்து விடுகிறாள். அப்படி இருந்தால் மட்டும் தான் அங்கு வாழவும் முடியும் என்றே நினைக்கிறேன். இல்லையென்றால் மற்றவர் நம்மை தின்று விடுவர். குழாய் சண்டையில் படாச்சியின் குடத்தினை வீசி எரிந்தது , சொத்துத் தகராறில் போலீஸ் ஸ்டேஷன் போக தைரியமாக எல்லாத்தையும் எதிர்த்து நின்றது. அந்த முரட்டு குணம் தான் அவளை ஒவ்வொரு நாளும் வாழ வைத்துக் கொண்டிருந்தது.


அஞ்சலை ஆசைப்பட்டது எல்லாம் அவளுக்கு கிடைத்தாலும், அது உடனே அவளிடம் இருந்து பறிக்கப்படுகிறது . சாணி மெழுக ஒரு பசு மாடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த கொஞ்ச நாட்களில், அவள் அம்மா வீட்டில் இருந்த பசுங்கன்றுக்குட்டி ஒன்றை ஓட்டி வந்து வளர்க்கிறாள். ஏதோ ஒரு படாச்சி வீட்டு கன்றுக்குட்டி காணாமல் போக, அவள் வீட்டில் வளர்ப்பது தன் கன்றுக்குட்டி தான் என்று அவர்கள் சொன்னதும், பஞ்சாயத்து செய்கிறார்கள். இறுதியில் அவள் அம்மா வீட்டில் இருக்கும் பசுமாட்டையும்,படாச்சி பசுமாட்டையும் கட்டிவிட்டு கன்றினை அவிழ்த்து விட்டால் அது எந்த மாட்டிடமும் போகாமல் அங்கேயே நின்றது. இறுதியில் அவள் அம்மா பசுவினையும், கன்றையும் பிடித்துக் கொண்டு போகிறாள் அவளை வசைபாடிவிட்டு. 


வெண்ணிலா தன் அப்பாவைப் பார்க்க தொளாருக்கு  யாருக்கும் தெரியாமல் போனபோது , இவள் அங்கு சென்று அவளை நையப்புடைத்து வீட்டிற்கு கூப்பிடும் போது, அவளின் பெரியம்மாவிற்கும் ,பெற்ற தாய்க்கும்  நடுவே இருந்து கன்றுகுட்டி போல விழிக்கிறாள். இறுதியில் அம்மா கூடவே வந்து, கார்கூடலில் தன் பாட்டி வீட்டிற்கு சென்று விடுகிறாள். இதனால் கூட அஞ்சலையின் தம்பி வெண்ணிலாவை திருமண செய்யாமல்  வெறுத்திருக்கலாம். 


வெளிப்படையாக இருந்தாலும், பூடகமாக இருந்தாலும் சுயநலமே எந்த ஒரு உயிருடைய  இருப்பின் அசைக்க முடியாத பண்பாக உள்ளது. வெண்ணிலா கார்கூடலிலே வளர்கிறாள். அவள் பெரியமனுஷி ஆன பிறகு தன் தம்பிக்கு திருமணம் செய்துவிட்டால் மட்டும் தான் நாம் தப்பிக்க முடியும் என்று நினைக்கிறாள். அஞ்சலை தன் தம்பி வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்வான் என்று நம்பி இருந்தபோத, அவனை தன் பெரிய அக்கா மகளுக்கு நிச்சயம் செய்த பிறகு  அவளால் தாங்கி கொள்ள முடியவே இல்லை. அவன் அவர்கள் கொடுக்கும் சீர்வரிசைக்காக வெண்ணிலாவை மறுத்துவிட்டான். ஊரார் சொல்வது போல அஞ்சலைப்போலவே அவள் பெண்ணும் மாறிவிடுவாள் என்று கூட நினைத்திருக்கலாம்.


மணக்கொல்லையில் அவள் இருக்கும் போது, ஒரு நாள் வெண்ணிலா அங்கு வந்து சேர்கிறாள். பிறந்த வீட்டில் இல்லாமல், தாய் தந்தையிடம் வளராமல், வயதுக்கு வந்த பின்பு தன் பாட்டி வீட்டில் இருந்து தன் தாயினைத் தேடி வருகிறாள். அஞ்சலையால் சொத்து கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த அவள் மூத்தாரின்  பொண்டாட்டி , அவளை வம்புக்கிழுத்து, தன் மகன்களை வைத்து அவளை  அடித்து மிதிக்கிறாள். இதனால் மனம் நொந்து , இந்த மக்களின் பழிச்சொல்லுக்கு தினம் தினம் சாவதைவிட ஒரேயடியாக சாக, முந்திரி மரத்தில் தூக்குப் போட்டுக்க போகிறாள்.


அப்பொழுது வெண்ணிலா வீட்டிற்குள் ஒரு ஜடம் போல் அமர்ந்திருக்கிறாள். "அக்கா, அம்மா எங்களுக்கு தேவைப்படுறத விட, உனக்கு தான் ரொம்ப முக்கியம் ,போய்  அவளை காப்பது" என்று அஞ்சாயா சொன்னபொழுது, கனவில் இருந்து மீண்டவள் போல் அவள் அம்மாவை ஓடிப்போய் காப்பாற்றுகிறாள். "இந்த ஜனம் செத்தாலும் ஓடிப்போனவள் என்று தான் சொல்லும், வாழ்ந்தாலும் அதைதான் சொல்லும். பழிச்சொல் ஒரு நாளும் சாவாது. அதுக்கு நாம் ஏன் சாவணும். வாழலாம் வா" என்று தன் அம்மாவை இழுத்து வருகிறாள் வெண்ணிலா. தன் இருப்புக்கு ஒரு உயிராவது வேண்டும் என்று அம்மாவை காப்பாற்றுகிறாள் வெண்ணிலா. வெண்ணிலாவிடம் தன்  கைவிடப்பட்ட நிலையைச்  சொன்னால் தான் அவள் போய் அம்மாவைக் காப்பாற்றுவாள் என்று அந்த சமயத்தில் எப்படி தெரிந்தது அஞ்சாயாவிற்கு?


 ஏதோ ஒரு ஆற்றாமையால் , மனம் சற்று பிறழ்ந்து இருக்கும் தருவாயில் அஞ்சலை வீட்டை விட்டு ஓடுகிறாள். அவள் சென்று சேரும் ஒவ்வொரு இடமும் அவளை அதே நிலைமைக்கு மீண்டும் மீண்டும் தள்ளுகிறது. கார்கூடலிலிருந்து மணல்கொல்லைக்கு, அங்கிருந்து தொளாருக்கு, அங்கிருந்து கார்கூடலுக்கு, அங்கிருந்து மீண்டும் மணல்கொல்லைக்கு என்று அவள் பயணம் முழுவதும் ஒரு நிராசையினாலும், தூற்றலாலும் செல்கிறது.


நாவலில் கிராம மக்களின் வாழ்க்கை, விவசாயம், நெல், கரும்பு, முந்திரிக் காடுகள், இவற்றில் உழைக்கும் மக்கள். நெல் விதைத்தல் முதல், நடவு, களை, அறுவடை, அடித்தல் முதலான அனைத்து வேலைகளும் நுட்பமாக விவரிக்கப்படுகிறது. முந்திரிக் காட்டில் வாழ்க்கை முறை அங்கு நடக்கும் திருவிழாக்கள், கரும்பு பண்ணயம் என்று இயல்பாக  கிராம சித்தரிப்புகள் வருகிறது.


நாவலில் வரும் ஒவ்வொருவரும் அஞ்சலை என்றே  நினைக்கிறேன். அஞ்சலை என்ற பெண்ணிற்கு நடந்த கதை என்பதை விட, அஞ்சலை நிலைமையில் வேறு யாரவது இருந்து , வேறு ஒரு நிலையில் அஞ்சலை இருந்திருந்தாலும் அவளும் இதையே தான் செய்திருப்பாள் என்றே நினைக்கிறேன். அது கிராமங்களின் கூட்டு மனமே தவிர, அதில் தனி மனித உணர்வுக்கு ஒரு மதிப்பும் இல்லை. அப்படி ஒன்று இருக்கும் என்றே அவர்கள் அறிவதற்கு வாய்ப்பில்லை. தன் ரத்தம், தன் பிள்ளை என்று சந்ததியினைப் பெருக்கும் ஒரு இனக்குழுவின் கதை தான் அஞ்சலை. ஆனால் எல்லா நிலையிலும் அது மட்டும் தான் ஒரு சாதாரண மனிதன் செய்வது என்றே நினைக்கிறேன். இன்றும் நாம் அந்த குழு மனப்பான்மையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோன் என்றே நினைக்கிறேன். 




Friday, 30 December 2022

சோர்பா எனும் கிரேக்கன்


வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் வாழும் ஒருவருக்கும், எந்தவொரு பெரும் நிகழ்வுகளுக்கும் தன்னை முழுவதும் கொடுக்காமல் வெறும் தர்க்கங்களினால் அனைத்தையும் அறிந்து விட முயலும் ஒருவருக்கும் ஏற்படும் நட்பும், வாழ்க்கையும்  சொல்வதாக இருப்பது "சோர்பா எனும் கிரேக்கன்" நூல். ஐரோப்பாவின் தொழிற்புரட்சிக்குப்  பிந்தைய காலகட்டத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டது. கதை முழுவதும் 'கிரீட்' என்னும் கிரேக்கத் தீவில் அமைந்துள்ளது. 

ஒரு கடற்கரை தேநீர் விடுதியில் கதை ஆரம்பமாகிறது. தன் நண்பன் தன் தாய் நாட்டு மக்களை காக்கும் பொருட்டு தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தருணங்களையும், அப்போது  அவனுக்கும் தனக்கும் ஏற்பட்ட விவாதங்களையும் நினைத்தவாறே அமர்திருக்கிறார் கதைசொல்லி. அப்போது திடீரென்று அவரிடம் ஒரு முதியவர் வந்து பேசுகிறார். தன்னையும் அவர் செல்லும் கிரீட் தீவுக்கு அழைத்து செல்லுமாறும், அங்கு நிலக்கரி  சுரங்கத்தில் அவரே தலைமைப் பொறுப்பு ஏற்பதாகவும் சொல்கிறார். அது மட்டுமல்லாமல் தனக்கு நன்றாக சமைக்கவும், காய்கறி சூப் வைக்கவும் தெரியும் என்று சொல்கிறார். அவரும் சோர்பா என்ற அந்த அறுபது வயதிருக்கும் முதியவரை தன்னுடன் அழைத்து செல்கிறார்.

கப்பல் பயணத்தின் போதும், 'கிரீட்' தீவினை நெருங்கும் போதும், சோர்பா அவருடன் பேசிக்கொண்டே வருகிறார். தான் சந்தூரி இசைப்பேன் என்றும், ஆனால் அது எப்போதும் தன்னிச்சையாகவே நிகழும் என்றும் சொல்கிறார். அவர்கள் கடற்கரையில் இறங்கி கிராமத்திற்குள் நடந்து சென்று அங்கிருக்கும் ஒரு "காஃபியக - இறைச்சிக் கடை"க்குள் நுழைகிறார்கள். அங்கு அவ்வூர் மக்களிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு , நிலக்கரி சுரங்கம் அமைத்து ஊர் மக்களுக்கு வேலை அமைத்து கொடுப்பதாகவும் சொல்கிறார் கதைசொல்லி.

அவர்கள் "ஹார்டென்ஸ்" என்ற முதிய கைம்பெண்ணின் வீட்டில் கடற்கரையோரம் தங்குகிறார்கள். சோர்பாவிற்கும் கதைசொல்லிக்கும் கதை முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒருமுறை தன் தாத்தாவிடம் நடந்த உரையாடலை கதைசொல்லியிடம் சொல்கிறார் சோர்பா. ஒரு பாதாம் மரச் செடியை நடும் போது , சோர்பா "எதற்காக இதை நடுங்குறீர்கள்" என்று கேட்கிறார். அதற்கு அவர் தாத்தா "நான் சாகாமல் இருப்பதற்காக இதை நடுகிறேன், இதன் மூலம் நான் உயிர் வாழ்ந்து கொண்டே இருப்பேன்" என்று சொல்கிறார். அப்போது சோர்பா "நீங்கள் ஒரு நாளும் சாகக் கூடாது என்று வாழ்கிறீர்கள், ஆனால் நான் ஒவ்வொரு நொடியும் இறந்து விடுவேன் என்றே வாழ்கிறேன்" என்று சொல்கிறார். 

உணவின் மகத்துவம்:

மனித இருத்தலில் மிகவும் மேன்மையானதும் , அடிப்படையானதும்  உணவு. உணவினை எப்போதும்  சுவைத்து, அதில் தன்னை இழந்து உண்கிறார்  சோர்பா. அவருக்கு இந்த நொடி தன்  முன் இருக்கும்  வறுத்த பன்றியின் சுவைக்கு தன்னை முழுவதும் ஒப்படைப்பார். உணவும், ஒயினும் வாழ்வின் இன்பங்கள். 

அதே சமயத்தில் நாம் உண்ணும் உணவை நாம் எவ்வாறு மாற்றிக் கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. ஒரு முறை அவர் "சிலர் உணவினை கொழுப்பாக, சிலர் நகைச்சுவையாக , சிலர் கடவுளாக மாற்றிக் கொள்கிறார்கள்" என்று சொல்கிறார். உணவினை ஆன்மாவாக்குதல். பொருண்மையிலிருந்து ஆன்மாவாக மாற்றுதல். நாம் உணவினை தினமும் எவ்வாறாக மாற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே அவனுடைய வாழ்க்கையும் அக விடுதலையும் முடிவாகிறது என்றே எண்ணுகிறேன். கதைசொல்லி கடவுளாக மாற்ற நினைக்கிறார்.  சோர்பாவோ நகைச்சுவையாக மாற்ற முற்படுகிறார்.

சோர்பா எப்போதும் அந்நொடியில் வாழ்வதால் வாழ்வின் நடைமுறை சாத்தியங்களோடுதான் அனைத்தையும் அணுகுவார். கதைசொல்லி தன்  பணியாளர்களிடம் அன்பு பாராட்டும் போது, அதை சோர்பா கடுமையாக எதிர்த்தார். "நீங்கள் அன்பு காட்டினால்  அவர்கள் தங்கள் வேலையை உங்கள் மீது கட்டிவிடுவார்கள். இவர்களிடம் ஒரு எல்லையோடு தான் பழக வேண்டும்" என்று கூறுகிறார். இது எப்போதும் ஒரு முரணாகவே மணித வரலாற்றில் அமைந்துள்ளது. நடைமுறையில் வாழ்பவர் புதிய கொள்கைகளில் எப்போதும் ஒரு சந்தேகப் பார்வையுடன் தான் பார்ப்பர். ஆனால் உண்மையில் கொள்கையில் வாழ்பவனே, வரலாற்றில் மக்களுக்கு விடுதலைப் படிகளை அளித்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன். அது அவ்வரலாறு நடக்கும் போது தெரிவதில்லை. 

சோர்பா கதையின் பல்வேறு பகுதிகளில் பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பது, பெண்களை ஒரு காம பொருளாகவே பார்க்கிறார். அது அவர்களின் மேல் உள்ள கருணையால் அவ்வாறு நடந்து கொள்வதாகச் சொல்கிறார். அவருக்கு பெண்கள் சுய விடுதலையை விரும்பாதவர்கள். அவர்கள் ஆண் என்னும் ஊன்றுகோல் கொண்டே அவர்கள் இங்கு வாழ்கிறார்கள். அவர்களின் ஆசைகளையும் இச்சைகளையும் தீர்த்து வைப்பதே ஆணின் கடமை. 

விடுதலை என்றால் என்ன? 

மனித விடுதலை குறித்து வரும் விவாதங்கள் ஒவ்வொன்றும் ஒரு திறப்பை அளிக்கின்றன. 

ஒரு சிலையில் கடவுளின் கையில் நடனமாடும் இரு காதலர்களைப் பற்றி பேசுகையில்,ஒரு பெண் "அவ்விரு காதலர்களும் அக்கையிலிருந்து தப்பிச் சென்றாலே உன்னதமான விடுதலை" என்று சொன்னாள். அதற்கு கதைசொல்லி "ஒருவேளை அந்த கடவுளின் கைக்கு கீழ்ப்படிதலே விடுதலை என்று சிலருக்கு இருக்கலாம்" என்றார்.  ஏதோ ஒரு விடுதலையின் தீரா வட்டத்திற்குள் சிக்கித் தவிக்கிறது மனம். ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை அடைந்து சென்று கொண்டே இருக்கும் மனம், உண்மையில் விடுதலை தான் அடைகிறதா, இல்லை ஒரு சொல்லில் இருந்து இன்னொரு சொல்லுக்கு தாவிக் கொண்டே செல்கிறதா? அனைத்தையும் தாவித்தாவி இறுதியில் எஞ்சுவது தான் என்ன?

ஒரு முறை சோர்பா "கிரீட்" கிளர்ச்சியில் பங்கி கொண்டு பல உயிர்களை கொள்கிறார். அப்போது அங்கு வந்த அரசர், "கிரீட்" மக்களுக்கு விடுதலை கொடுக்கிறார். அப்போது அங்கு இருந்த ஒருவன் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் கிழித்து "விடுதலை, விடுதலை" என்று கத்துகிறான். அவருக்கு இதுவே விடுதலை. ஆனால் 'கொலைகள்' விடுதலை அழித்ததால் அதற்கு உண்மையான பொருள் தான் என்ன?

சோர்பா தன முதலாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு கம்பி, வடம் போன்ற பொருட்களை வாங்க 'காண்டியாகா' செல்கிறார். அங்கு ஒரு பெண் இவரை தாத்தா என்று சொல்லி விடுகிறாள். அதனைக் கேட்டு மனம் வெம்பி விடுகிறார். அவளைக் கவர இவர் பணம் நிறைய செலவு செய்கிறார். அவளும் இவரின் பின்னால் வந்து விடுகிறாள். ஆனால் உண்மையில் அவள் இவருடன் இருக்கும் போதும், அவருக்கு அவள் "தாத்தா" என்று அழைத்ததையும், அவர்கள் இருவரும் தெருக்களில் நடந்து செல்லும் போதும், ஒருவர் இவரை பெரியவர் என்று சொன்னதற்கும் சோர்பாவிற்குத்  தாங்க முடியாத கோபம் வந்தது. உண்மையில் இவர் தன் முதுமையைக் கண்டு அஞ்சுகிறார். முதுமை, மனிதன் வென்றெடுக்க முடியாத ஒரே பொருள். 

கதைசொல்லி, அனோனஸ்தி  மாமாவிடம் (வாழ்வில் நிம்மதியாக பெயரப் பிள்ளைகள் எடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்) பேசிக்கொண்டிருக்கும் போது, "ஒவ்வொரு மனிதனும் தளைகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் மனதிடம் அதைக் கேட்டால் சொல்லும் என்கிறார்".   

இசை, நடனம்:  

சோர்பா சந்தூரி என்னும் இசைக்கருவியை வாசிக்கத் தெரிந்தவர். அவர் அதை ஒரு வனவிலங்கு என்று தான் எப்போதும் சொல்வார். அது நாம் நினைக்கும் போதெல்லாம் இசையை தராது, அது நினைத்தாள் மட்டும் தான் அதிலிருந்து இசை உருவாகும். ஒரு வகையில், அந்த சந்தூரியே சோர்பாவின் ஒரு உருவகம் என்றே நினைக்கிறேன். அதைப்  போலவே அவரும் ஒரு வனத்தில் வாழும் ஆதி மனிதன் போலத்தான் எல்லா இடத்திலும் நடந்து கொள்கிறார். ஆதி மனிதனின் கண் கொண்டே அனைத்தையும் பார்க்கிறார். 

சோர்பா நடனத்தால் தான் சொல்ல வந்ததை சொல்லும் திறன் கொண்டவர். ஒரு போரின் போது , தன் சக வீரனும் (அவனின் மொழி இவருக்குத் தெரியாது) , சோர்பாவும் பேசிக்கொண்டிருக்கையில், அவன் பேசுவது இவருக்குப் புரியாமல் போகவே, புரியாதவற்றை அவனிடம் நடனம் ஆடி காட்டச் சொல்கிறார். அவனும் அவர்கள் செய்த போர் சாகசங்களை (மக்களை தீயிட்டு கொளுத்துதல், பெண்களை வன்புணர்வு கொள்ளல், போன்றவற்றை ) நடனமிட்டு காட்டுகிறான். அவர் நடனம் மூலமாக உலகின் அத்தனை உணர்வுகளையும் சொல்ல முடியும் என்று நம்புகிறார்.

அவர் கதைசொல்லியோடு இருக்கும்போது ஒருமுறை தன்னிலை மறந்து உச்ச நடனம் ஆடுகிறார். அவர் சன்னதம் வந்தவர் போல ஆடுவதைக் கண்டு அவர் அஞ்சுகிறார். ஆனால் சோர்பாவோ தன்னை மறந்து எம்பி குதித்து பரவச நடனம் ஆடுகிறார். அந்த எம்புதலில் அவர் இவ்வுலகைகே கடந்து, காற்று வெளியினைத் தாண்டி எங்கோ செல்ல விருப்பப்படுபவர் போன்று நடனத்தில் மிதக்கிறார். அப்போது கதைசொல்லி தான் ஒருபோதும் இவ்வாறு தன்னை மறந்து ஒரு நடனம் ஆட முடியாது என்று எண்ணுகிறார்.

சோர்பாவின் நடனம் எனக்கு பல்வேறு எண்ணங்களை உருவாக்கியது. உண்மையில் கலை தர்க்கதினை உடைக்கும்போது  தான் அது கலையாகிறது. அது நடக்கும் தருணத்தில் தர்க்கம் இல்லை. உண்மையில் கலை தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்கிறது.அதற்கு மனிதன் ஒரு கருவி மட்டுமே. அது கலையாக உணர்ந்தாலும், உணராவிட்டாலும் அது நிகழ்ந்த கணம் மீளப்போவதில்லை. நாம் பிற்பாடு பார்ப்பதெல்லாம் அதன் பிம்பத்தை மட்டும் தானோ? 

 நம்பிக்கை என்னும் கலங்கரை விளக்கம்:

சோர்பா காண்டியாகாவிற்கு சென்ற பொழுது, 'ஹார்டென்ஸ்' அம்மையார் கதைசொல்லியிடம் அவரைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர், "சோர்பா உங்களைப்பற்றி நலம் விசாரித்ததாகவும் , அவர் என்றும் உங்கள் நினைவாகவே இருப்பதாகவும், கடிதத்தில் காதல் வார்த்தைகள் எழுதி இருப்பதாகவும்"  அவளிடம்  சொல்கிறார். அதற்கு 'ஹார்டென்ஸ்' அம்மையார் "வேறெதுவும் இல்லையா" என்று கேட்கிறார். தன் இளமைப் பருவத்தில் பல நாட்டு சேனாதிபதிகளின் ஆசை ராணியாக இருந்த அவளுக்கு "ஆசை வார்த்தைக்கும், நடைமுறைக்கும்" உள்ள வேறுபாடு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால், கதைசொல்லி, "சோர்பா உங்களை மனம் செய்து கொள்ள மாலைகள் வாங்கிவருவதாக எழுதியுள்ளார்" என்று சொல்கிறார். ராஜ்யங்களைக் கட்டி போட்ட பேரழகியானாலும் வயது முதிரும்போது, ஒரு தோல் சாய துணை தேவைப்படுகிறது. 

ஒரு முறை சோர்பா தன் முதலாளியிடம், "இத்தீவிற்கு நீங்கள் வந்த உண்மையான காரணம் நிலக்கரி தொழில் இல்லை" என்று சொல்கிறார். கதைசொல்லியும் அதை ஒற்றுக்கொள்கிறார். நண்பனின் பிரிவால், தான் இவ்வுலகை ரத்தமும் சதையுமுமாக  வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற முடிவோடு தான் வந்ததாக சொல்கிறார். அவர் ஆழ்மனம் நம்பியது போல, சோர்பா அவருக்கு நெருங்கிய நண்பராகவும் அவரின் வாழ்வில், நம்பிக்கையில் மாற்றம் ஏற்படுத்தும் ஒருவராகவும் இருக்கிறார்.

தத்துவ விவாதங்கள்:

ஒவ்வொரு முறையும் சோர்பா செயலால் ஏதாவதொரு உச்சத்தை நிகழ்த்தும் போதும், கதைசொல்லி அவரை வியந்து பார்க்கிறார். அவரைப் பொறுத்தவரை, சோர்பாவினுள் இன்னும் அந்த ஆதி மனிதனின் எச்சம் , இயற்கையோடு உறவாடும் மனம் உள்ளது. 

ஒரு முறை சுரங்கத்தினுள் ஏற்படும் ஒரு பேராபத்தில் இருந்து முன்னமே அதை உணர்ந்து எல்லோரையும் காப்பாற்றுகிறார் சோர்பா. யாராலும் அறிய முடியாத சிறு மண் அசைவுகளையும் கூர்ந்து நோக்கும் திறன் கொண்டவர் அவர். அவர் மண் மீது மண்ணாக வாழ்வதால் தான் அவறால் அதை செய்ய முடிந்தது என்றே நினைக்கிறேன். அனைவரும் அடிப்படையில் மண் தானே. மண்ணின்  வெவ்வேறு உருவங்கள் தான் நாம் அனைவரும். சோர்பாவிடம் இன்னும் அந்த ஆதித்துகள் உயிருடன் உள்ளது. 

கதைசொல்லி அறிவைக் கொண்டு உலகத்தைப் பார்ப்பதால் தான், அவர் சோர்பாவைப் போல் இருக்க முடியவில்லை. சோர்பா தன் ஆன்மாவை கொண்டும், அனுபவத்தைக் கொண்டும் உலகத்தைப்  பார்க்கிறார். அவருக்கு ஒவ்வொரு செயலும் பெருவியப்பே. ஒவ்வொரு காட்சியும் பேரின்பம். ஒரு முறை நடந்து செல்கையில் ஒரு கல் உருண்டோடுகிறது. அதைக் கண்ட சோர்பா, "பள்ளத்தில் போகும்போது  மட்டும் கல்லிற்கு உயிர் வந்து விடுகிறது" என்கிறார். இதுபோல பல்வேறு தருணங்களில் இயல்பாக நடக்கும் ஒரு சின்ன அசைவையும் பெரு வியப்பாக காண்கிறார்.

கதையின் பல்வேறு இடங்களில் "மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்? மனித வாழ்வின் பொருள் என்ன?" போன்ற கேள்விகள் வந்து கொண்டே உள்ளன. சோர்பாவின் கேள்விகளுக்கு கதைசொல்லியால் பலமுறை பதில் கூற முடியவில்லை. அதற்கு சோர்பா "நீங்கள் இது வரை ஒரு டன் எடை உள்ள தாள்களை விழுங்கி இருப்பீர்கள், ஆனால் எந்தக்  கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை தெரியவில்லை என்றால் இந்த நூல்களினால் என்ன தான் பயன் ?" என்று கேட்கிறார் . அதற்கு கதைசொல்லி "இந்நூல்கள் விடை அறியா கேள்விகளுக்கு, விடை காண முயலும் மானுட சிடுக்குகளை கூறுகிறது"  என்று பதில் சொல்கிறார். உண்மையில் நூல்களினால் எந்த ஒரு விடையும் நேரடியா அறிய முடியாது என்றே நானும் நினைக்கிறேன். அவை சொல்லும் தர்க்கங்களை, உணர்வுகளால் அனுபவங்களாக மாற்றிக் கொள்ளாத வரை அவை வெறும் சொற்களாகவே எஞ்சும் என்றே நினைக்கிறேன். அந்த அனுபவங்கள் வழியாகத்தான் ஒருவருக்கு விடை கிடைக்கும்.

கதைசொல்லி புத்தரைப் பற்றி புத்தகம் எழுதுவதும், அவரின் சொற்களால் தன்னை ஆராய்ந்து பார்பதுவமாகவே கதை முழுவதும் இருக்கிறார். மானுட உச்சத்தைத்தொட்ட  "கடைசி மனிதன்" புத்தர் தான் என்றும் நினைக்கிறார். அவர் கடைசியாக வாழ்ந்து விட்டார். ஆனால் இவரோ இன்னும் ஆரம்பத்திலேயே இருக்கிறார். புத்தர் அனைத்தையும் விளக்கியது போல, கதைசொல்லிக்கு புத்தரை தன் மனதிலிருந்து விலக்கினாள் மட்டுமே அவர் அகம் விடுதலை அடையும் என்று நினைக்கிறார். அது அவர் புத்தரைப் பற்றி எழுதிய புத்தகத்தை முடித்தவுடன் மட்டுமே, அவருக்கு கிடைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். 

தனக்கும் சோர்பாவுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடாக கதைசொல்லி பார்ப்பது, "சுய உரையாடல்". சோர்பா எப்போதும் உரையாடிக்கொண்டோ கேள்விகளைக் கேட்டு கொண்டோ இருக்கிறார். ஆனால் இவர் எப்போதும் தன் அறிவினால் மட்டுமே அனைத்திற்கும் விடை காண விரும்புகிறார்.  சோர்பாவிற்கு அக்கேள்வியின் விடைகள்கூட அவ்வளவு முக்கியமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு போதும் அறிவினால் உலகத்தைப் பார்க்கவில்லை.

நித்திய லயம்:

இயற்கையின் நித்திய லயத்தில் எப்போதும் ஒத்திசைவோடு இருப்பவர் சோர்பா. வாழ்க்கையின் இன்பங்களில் ஆனந்தம் கொண்டு , துன்பத்தில் கண்ணீர் சிந்தி , அதை கடந்து செல்பவர் சோர்பா. ஆனால் கதைசொல்லி எந்த ஒரு செயலின் பின்னாலும் தர்க்கங்களை அடுக்கி , அந்த தர்க்கத்தின் மேல் படுத்து வாழ்பவர்.  தான் காதல் கொண்ட கைம்பெண் கொடூரமான முறையில் தன் கண்ணெதிரே கொலை செய்யப்படுகிறாள். அந்த சம்பவத்தினை தர்க்கப் பூர்வமாக ஏற்று, அதற்கு தனக்கு ஏற்றவாறு விளக்கம் கொடுத்து தன்னால் கடந்து சென்று போக முடியும் என்றே கதைசொல்லி தன்னைப்பற்றி நினைக்கிறார்.  

ஒரு முறை கூண்டைவிட்டு வெளியே வந்து தன் சிறு சிறகுகளை அடிக்கத்துடிக்கும் பட்டாம்பூச்சியை பார்க்கிறார் கதைசொல்லி. அது தன் கூட்டை விட்டு கஷ்டப்பட்டு வெளிவருவதை பார்த்ததால், அதற்கு உதவி செய்யும் பொருட்டு அந்த கூட்டினை கொஞ்சம் கையால் இழுத்து விடுகிறார். இதனால் அந்தப் புழு சட்டென்று வெளியே வந்ததால் அதன் சிறகுகளில் போதிய வெப்பம் சக்தியும் இல்லாததால், அது பறக்கத் துடித்து பரிதாபமாக இறந்துவிடுகிறது. அவர் எப்போதும் தன் அறிவால் உலகத்தைப் பார்ப்பதால் அவரால் இயற்கையின் நடைமுறைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.

கதைசொல்லி தனிமையில் காட்டில் ஒரு இடையனை காண்கிறார். இடையன் கேட்ட ஒரு சிகரெட் இல்லாததால் ,அவனுக்கு பணம் தருகிறார். அதற்கு அவன் அதனை மறுத்து விடுகிறான். அவர் ஆன்மாவினைபி பற்றி சிந்தித்தவாறே வஞ்சினக் கன்னி மரியாள் கோவிலுக்கு செல்கிறார். தன் கால்கள் தன் ஆழ்மனம் தேவை செய்ய அனிச்சையாக கோவிலை நோக்கி செல்கிறது. 

அற்புதங்களில் மனம்:

வனத்தில் கம்பி வழித்தடம் அமைத்து மரத்தொழில் செய்வதற்காக மதகுருவிடம் கையொப்பம் வாங்குவதற்காக மடாலயம் செல்கிறார்கள் சோர்பாவும், கதைசொல்லியும். அப்பொழுது அங்கு ஸஹாரியா  என்றொரு பாதிரி வழித்துணையாக வருகிறார். அங்கு அவர்கள் பாதிரிமார்களின் ஊழலையும், அயோக்கியத்தனத்தையும் காண்கிறார்கள். அவர்கள் அங்கிருக்கும் போது, ஒரு கொலை நடக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு சோர்பா அந்த வனத்தினை பாதி விலைக்கு வாங்குகிறார். தன் முதலாளியின் பணத்தை காண்டியாகவில் செலவு செய்வதை ஈடுகட்ட இதை அவர் செய்ததாக கூறுகிறார். வஞ்சினக் கன்னி மரியாள் பெயரை வைத்து இதை அவர் செய்து முடிக்கிறார். 

ஸஹாரியா மடாலயத்தை தீயிட்டு கொழுத்திவிட்டு கீழிறங்கி கடற்கரையோரம் வருகிறார். அவரைக் கண்டவுடன்  சோர்பா அங்கே என்ன நடந்தது என்று புரிந்து கொள்கிறார். அவரை அழைத்து ஊன் உணவையும், ஒயினையும் கொடுக்கிறார், ஆனால் அவர் வேண்டாம் என்கிறார். அதற்கு சோர்பா "உனக்கு இல்லை என்றாலும், உன்னுள் இருக்கும் சாத்தனான ஜோசேப்புக்கு சாப்பிடு" என்று சொல்கிறார். ஆனால் அதற்கு அவர் "மடாலயத்தை எரிக்கும் போதே , ஜோசேப்பும் சேர்ந்து எரிந்து விட்டான்" என்று பதில் கூறுகிறார். 

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு புள்ளியில் இவை அனைத்தும் அர்த்தமற்றவை என்று உணர்கிறான் என்றே நினைக்கிறன். ஆனாலும் அதற்கு மேல் செல்ல பெரும்பான்மை மக்களால் முடிவதில்லை. ஆதலால் அவன்  என்றுமே அற்புதங்களை எதிர்பார்க்கிறான். தன் நம்பிக்கையை உடைக்கும் அற்புதத்தை. அதுவே அவனின் மீட்சி. இவ்வுலகில் அவன் ஊன்றி  நிற்பதற்கு அது தேவைப்படுகிறது. கடலருகே இறந்த ஸஹாரியாவை சோர்பா மடாலயத்திற்கு தூக்கிச் சென்று "வஞ்சினங் கன்னி மரியாளின் ஈட்டிக்கு" கீழே இட்டுச் செல்கிறார். துறவிகள் இதைக் கண்டதும் அற்புதமாக நினைத்து மரியாளை மன்றாடுகின்றனர்.

நான் வாசித்ததிலேயே (அணைத்து புத்தகத்தையும் சேர்த்து) கண்ணில் நீர் வர, வயிறு வழிக்கச் சிரித்த பாகம் "கம்பிவடத்  தடம்" திறந்து, மரங்களை அதன் வழியே மலை மீதிருந்து இறக்குதல். பாதிரிகளும், ஊர் மக்களும், தொழிலாளர்களும் பார்க்க அது  அரங்கேறுகிறது. அன்னை மரியாளின் அற்புதன் தான் இந்தக் கம்பித்தடம் என்று ஆரம்பித்து சோதனை ஓட்டங்களை செய்கிறார்கள். பாதிரிமார்கள் அருள, சோர்பா கையசைக்க  ஒவ்வொரு முறையும் மரம் கம்பிதத்தில் வர மறுக்கிறது. சோர்பா , தன் முதலாளிக்கு ஒட்டு மொத்தமாக அனைத்தையும் ஒரு காலைப்பொழுதிலே நட்டம் செய்துவிடுகிறார். பின்னர் இவர்கள் மட்டும் அதனை நினைத்து நினைத்து தனிமையில் வெடித்துச் சிரிக்கின்றனர். 

விடுதலை என்பது இன்றிமையாதவற்றின் தோல்வியிலிருந்து உருவாகிறது என்று உணர்கிறார் கதைசொல்லி. அனைத்தும் கிடைக்கப்பெற்றாலும் நாம் சுதந்திரமானவர்களா என்ற கேள்வி எப்போதும் உள்ளது. ஒரு தோல்வியில் நாம் நம் காலடி நிலத்தை விட்டு மேல செல்கிறோம். ஏனென்றால் அந்த தோல்வியை நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம் கைக்கு அப்பாற்பட்டது. அங்கு நம் கால்களை தூக்கி விடுதலையானவர்களாக உணர்கிறோம் என்றே நினைக்கிறன்.

தன் நண்பனை விட்டு கதைசொல்லி  பிரியும் பொது "ஒருவருக்கு ஆபத்து வருமாயின் இன்னொருவர் அதனை குறிப்பால் உணர்த்தும் பொருட்டு சிந்திக்க வேண்டும்" என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் இருவருக்குமே அதில் துளியும் நம்பிக்கை இல்லை. ஒரு நாள் ஸுரிச்சில் கதைசொல்லி இருக்கும்போது , ஒரு தீக்கனா காண்கிறார். அதன் பிறகு சிலநாட்கள் கழித்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அதைப் பிரித்து பார்க்காமலே அதில் உள்ளது என்ன என்று அவருக்குத் தெரிகிறது.

மனிதனின் உச்ச செயலாக இருப்பது "களங்கமற்ற வியப்பு". அது இருப்பதனால் தான் சோர்பா எப்போதும் மகிழ்வாக உள்ளார். அவர் எதைப் பார்த்தாலும் அதில் உள்ள வியப்பினை ஒரு போதும் விடுவதில்லை. 

சோர்பா தன் முதலாளியால் ஒரு போதும் விடுதலை அடைய முடியாது என்றே சொல்வார். விடுதலைக்கு தேவை மடமை. அது அவரிடம் கொஞ்சம் கூட இல்லை என்று சொல்வார். ஆனால் அது சோர்பாவிற்கு செர்ரி போல, கதைசொல்லிக்கு மசியும், தாள்களும் எழுத்தும். அவர் கண்டடைந்தது அதுவே. "ஒரு வாசிக்கப்படாத இறை இசைக்கருவி எப்படி பக்தியை உருவாக்காமல் வெறும் கலையை உருவாக்குமோ அதைப்போல என்  இறை உணர்வுகள் அனைத்தும் கலையாக எழுத்தாக உருவாகியுள்ளது". இதுவே அவர் அவரையே கண்டடைந்த நேரம் என்று நினைக்கிறேன். 

இறுதியில் சோர்பாவும், கதைசொல்லியும் பிரியும் நேரம் வருகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்த வாழ்க்கை இன்பமயமாதக இருந்தது. சோர்பா அதன் பிறகு வேறு வேறு நாட்டில் வேலை செய்கிறார். கதைசொல்லிக்கு கடிதமும் அவ்வப்போது எழுதுகிறார். 

இறுதியில் சோர்பாவும் ஒரு நாள் இவ்வுலகை விட்டு மறைகிறார். கதைசொல்லிக்கு அப்பொழுதும் ஒரு கடிதம் வருகிறது. சோர்பாவின் இளம் மனைவி அவரது சந்தூரியை எடுத்து செல்லும்படி அதில் எழுதி இருந்தது.

பல வாசிப்புகளுக்கு உரிய புத்தகம் இது. ஒரு வாசிப்பில் நாம் இதில் கொஞ்சம் தான் பருக முடியும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு கல் புரண்டோடும் போதும் சோர்பா நம் கண் முன்னாள்  மின்னல் கீற்றாக வந்து செல்வார். வாழ்வின் பல்வேறு தருணத்தில் ஆழ்மனதில் இருந்து தானாக சோர்பா வெளிப்படுவார். ஒவ்வொரு அனுபவங்களும் ஒரு தனித்துவமான மனித அடிப்படையை நோக்கி கேள்வியாகவும், சில சமயம் பதிலாகவும் ,சில சமயம் மனித மனங்களின் முரணாகவும் வெளிப்படுகிறது. மீள் வாசிப்பின் ஊடே மனதில் விரிந்து  செல்லக்கூடிய புத்தகம் இது. 

Tuesday, 2 August 2022

காடோடி



திரு. நக்கீரன் அவர்களின் "காடோடி" நாவலை வாசித்தேன். காடு சார்ந்த உணர்வும், அறிவும் ஒரு காடோடியிடமிருந்து ஒரு காடுவெட்டி உணர்கிறான். காட்டில் உள்ள கோடானு கோடி உயிர்களில் ஒருவனாக தன்னை உணரும் போதே அவன் இயற்கையை அறிய தொடங்குகிறான். கடலின் துளி தானும் ஒரு கடலே என்று உணர்வது போல. தானும் இயற்கையின் ஒரு அங்கமே என்று உணரும் நிலை.

காடோடி வாசித்து முடித்ததும் ஒரு காட்டுக்குள் சென்று வாழ்ந்து வந்த அனுபவம். காட்டின் அத்தனை உணர்வுகளையும் உணர்ந்து, அறிந்து கிடைக்கும் ஒரு உச்ச நிலை. இதில் வரும் கதை சொல்லியின் வழியாக நம்மை கினபத்தாங்கன் நதிக்கும், அதைச் சுற்றியுள்ள மழைக்காடுகளுக்கும் அழைத்துச் செல்கிறார். காட்டை அழித்து கட்டையாக்கி வணிகம் செய்யும் நிறுவனத்தின் ஊழியர் நம் கதைசொல்லி என்பது நகைமுரண்.

கதை சொல்லியின் கண்கள் வழியாக நாம் காட்டைக்  காண்கிறோம். இன்றளவில் நாம் காடு/மலை பற்றி நினைப்பதெல்லாம் ஒரு நுகர்வு சார்ந்தே. ஒரு அழகான மலையயையோ நீர் வீழிச்சியையோ கண்டால், நாம் அதை ரசிக்கிறோம். அந்த இயற்கை ரசனைக்கு அப்பாற்பட்டு, அதற்கும் ஒரு உயிர் உண்டென்றும், உணர்வுண்டென்றும் அதனுடன் நாம் உரையாட முடியும் என்றும் , அதனுடன் நாம் கை கோர்த்து சுற்றித் திரிய முடியும் என்றும் உணர்வதே நாம் அதனை உணரும் முதல் படி.

ஒரு காடுவெட்டும் தொழிலில் உள்ள அத்தனை நுண் தகவல்களையும் சொல்லும் வேலையில் அதில் ஈடுபட்ட அந்த மக்களின் பின்னணிகளையும், சூழல்களையும் விவரிக்கிறது இந்நாவல். பல்வேறு இன, மத, மொழி  கொண்டவர்கள் முகாமில் நட்போடு  உள்ளனர். 

கினபத்தாங்கன் நதியும், அதன் கிளை ஆறுகளும் நதி வெட்டிச் செல்லும் மழைக்காடுகளும் அக்காடுகளில் வசிக்கும் பல்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும் இந்நாவலில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகை விலங்கினை பற்றியோ , பறவை பற்றியோ கூறும்போது அதன் உடல் அமைப்புகளும், மற்றும் அதன் செயல்பாடுகளும் அது நடமாடும் அழகினையும், பறக்கும் விதத்தினையும் , நிற வேறுபாடுகளின் அழகினையும், காட்டில் அணுவணுவாய் வாழ்ந்த ஒருவரால் தான் இவ்வளவு துல்லியமாக விவரணைகள் கொடுக்க முடியும். உதாரணமாக, ஒரு இடத்தில் வௌவால்கள் இரவில் குகை விட்டுப் போகும் நேர்த்தியினை விவரிக்கும்போது , ஒவ்வொரு முறையும் ஐந்து அல்லது ஆறு வௌவால்களாக வானமே ஒரு மிகப்பெறும் வௌவால் அடுக்குகளாக மாறின என்று கூறுகிறார்.

காடு சென்ற முதல் நாளே காட்டில் ஓமரும், கதை சொல்லியும் தொலைந்து விடுகிறாரகள். அவர்கள் அவ்விரவில் மழையில் திசைகள் தொலைத்து எங்கோ ஒரு பாறை இடுக்கில் தங்கி விடுகின்றனர்.  ஓமருக்கும், கதை சொல்லிக்கும் அங்கிருந்தே நல்ல நட்பு உருவாகிறது. ஒரு தகப்பன் போல ஓமர் அவரைப் பார்த்துக் கொள்கிறார். காட்டில் தொலைந்து மறுநாள் தன் சக ஊழியர்களை தேடி , இறுதியில் சந்தித்த போது  அவர்களிடம் இருந்த அந்த உணர்வினை, பிள்ளை அன்னையை தொலைத்துவிட்டு, மீண்டும் கண்டுபிடிக்கும் போது உருவாகும் உணர்வு. 

அந்த காட்டில் மட்டும் தான் பத்து  வகையான பிரைமேட்கள் இருப்பதாக அறிந்தவுடன், தான் இந்த காட்டை விட்டு போவதற்குள், எப்படியாவது அத்தனையும் பார்த்து விட ஆசைப்படுகிறார். அவர் ஒவ்வொன்றாக எதிர்பாக்காத தருணங்களில் பார்க்கிறார். காடு நினைப்பதைத்தான் நாம் காண முடியும். ஓரங் ஊத்தான், துபையா, பறக்கும் லீமர் போன்ற பல்வேறு பிரைமேட்களை அங்கு காண்கிறார். ஒவ்வொரு விலங்கும் தன் உடலமைப்பில், தான் உண்ணும் உணவில் வேறுபடுகின்றன. அதனை துல்லியமாக பதிவு செய்கிறார். 

நாவலின் தொடக்கத்தில் இருந்தே நம்முடன் பயணிக்கும் ஒரு பறவை இருவாசி. காட்டின் முதல் மரம்  வெட்டுப்பட்டதும், அந்த இருவாசிப் பறவைகளின் குமுறல்கள் காதில் கேட்டுக்கொண்டே உள்ளது. அவை காட்டின் முதல் நிலை காவலர்கள் போலும். அந்த இருவாசிப் பறவைகளின் கூடு கட்டும் திறன் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. அவை தன் எச்சலைக் கொண்டு கூடு கட்டி அதில் குஞ்சுகளை வைக்கிறது. 

மனிதன்  எங்கு வாழ்ந்தாலும் தன் பண்பாட்டுப் படிமங்களினாலே வாழ்கிறான். அவன் தன்னுள் உள்ள பயம், ஆசை, பற்று, அன்பு, குரோதம் ஆகிய அனைத்தையும் தன்னுடன் எப்போதும் சுமந்துக் கொண்டு தான் இருக்கிறான். முகாமில் பலருக்கு இரவில் யாரோ ஒருவர் தன்னை எழுப்புவதாக தோன்றுகிறது. அந்த முதியவர் தோற்றத்தில் இருப்பவர் ஒரு பேய் என்று அவர்கள் அஞ்சினர். அவர்களிடம் அதை மறுத்து நான் தனியாக தூங்குவேன் என்று பங்கலானில் தனியாக தூங்கும் போது, ஒரு சிறு படகில் ஒரு முதியவர் வந்திறங்குகிரர். நாவல் முழுதும் இம்முதியவர் தான் பல்வேறு கட்டத்தில் அங்கு இருப்பவர்களுக்கு உதவி செய்கிறார். ஒரு எளிமையான காட்டு வாழ் உயிரி தான் அந்த பிலியவ்.  

நாவலில் பல்வேறு தொல்குடி மக்களைப் பற்றியும் அவர்கள் சடங்குகள், நம்பிக்கைகளையும் பேசப்படுகிறது. முருட் , தொரோஜா இனங்களை சேர்ந்தவர் தான் முறையே ஜோஸும், யோகன்னாவும். இவர்கள் இன வரலாறுகளையும், தொன்மங்களையும் பேசும் பல்வேறு கிளை கதைகள் நாவலில் உள்ளன.  

ஜோஸ் கதை சொல்லிக்கு மிகவும் நெருங்கிய நண்பனாகிறான். அவன் கம்போங்கிற்கு சென்று இரு நாட்கள் தங்குகிறார். அவருக்கு விருந்தளிக்க ஒரு நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் ஜோஸ் தன் பூர்வ குடி உடை அணிந்து அற்புதமாக நடனம் ஆடுகிறான். அங்கு ரலாவும்  இனிமையாகப்  பாடுகிறாள். அவர்களின் தூய அன்பினால் ஆட்கொள்ளப்படுகிறார். ரலாவுக்கும் அவருக்கும் காதல் மலர்கிறது. அவள் பாடும் இன்னிசையை துளி துளியாக தன்னுள் ஏற்றுகிறார். அவள் மொழி வேறு, அவர் மொழி வேறு. 

ஜோஸ் ஒரு முறை, தான் ஒரு இன்னிசையை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி கட்டையின், மேல் சாய்ந்து கொண்டிருந்தான். எந்த ஒரு கருவியும் இல்லாமல் எப்படி இசையை  கேட்க முடியும் என்று அவர் கேட்க, அவன் அதற்கு 'ஒவ்வொரு இலையும் காற்றில் மோதும் சத்தமே ஒரு பண்ணிசை, ஒவ்வொரு இலையும் வெவ்வேறு இசையினை உருவாக்குகிறது. மெலிந்த, தட்டையான, சொரசொரப்பான என்று வெவ்வேறு இலைகள் வெவ்வேறு இசையினை வாசிக்கிறது'. என்று கூறினான். இதனை கேட்டவர் , இதனை அனுபவிக்க தனக்கு ஒரு தொல்குடி மனம் இருந்தால் தான் முடியும் என்றார்.

காட்டில் நடக்கும் வேட்டையின் நியதிகளை பிலியவ் கூறுகிறார். அது அத்தியாவசிய/ஆடம்பர வேட்டைக்கும் , மற்றும் தொல்குடி/ துப்பாக்கிக்குடி வேட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறது. எந்த பருவத்தில், எந்த விலங்கை எப்படி வேட்டையாட வேண்டும் என்று விளக்குகிறார். கடமான் , பன்றிகள், தென்படாவ் என்ற காட்டுமாட்டு இனம் முதலியவை  வேட்டையாடப்படுகின்றன. அதில் தென்படாவ் வேட்டை மிகவும் சுவாரசியமாக சொல்லப்படுகிறது.

பிலியவ், தான் காட்டில் கண்ட ஒரு "மூதாய் மரம்" , தன்னுடன் பேசியதைக் கூறுகிறார். அந்த "சிலாங்கன் பத்து" மூதாய் மரத்தினை வெட்ட வேண்டாம் என்று ஓமர் முடிவெடுத்தாலும், அது வெட்டப்படுகிறது. இதனால் மனம் உடைந்து ஓமர் வேலையை விட்டுச் செல்கிறார். மனிதன் ஒரு நடமாடும் இயந்திரமாக மாறினாலும் அவனுக்குள் இருக்கும் முரண்களும், கோபங்களும் என்றோ ஒரு நாள், ஒரு புள்ளியில் வெளிப்படுகிறது. அந்த வெளிப்பாட்டின் ஒரு தூண்டுகோல் தான் வெட்டப்பட்ட அந்த மூதாய் மரம்.  அந்த காட்டிற்கே அது தான் தொல்மரம்.அங்குள்ள அனைத்து உயிர்களும் அதன் குடிகளே. அதன் கனியில் விளைந்த காட்டின் ஆணி வேர் வெட்டப்பட்டது.

பிலியவ் ஒரு சாகச மனிதராகவே எப்போதும் இருக்கிறார். அவருக்கு அந்த காட்டில் தெரியாதது ஏதும் இல்லை என்பது போன்றே தோன்றுகிறது. அவர் எப்போது வருகிறார், எங்கு தங்குகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒவ்வொரு செயலையும் அறத்தோடு செய்கிறார். அறம் என்னும் விழுமியம் இருப்பதும் அவருக்கு தெரியாது. இறுதியாக கதை சொல்லி தான் அங்கு வந்து உழைத்த அத்தனை பணத்தையும் இழந்த பிறகு, "தான் செய்த மரம் வெட்டும் தொழிலில் கிடைத்த பாவங்கள் அனைத்தும் அந்த பணத்தோடு தொலைந்து போனது" என்று சொன்னபோது, பிலியவ் "நீ இன்னும் காட்டு மனம் அடையவில்லை" என்று கூறுகிறார். 

மனிதர்களின் அத்தனை மனக்கணக்கினையும் காடு இல்லாமல் ஆக்குகிறது. ஆனால் நகரத்தில் வாழ்ந்த ஒரு மனிதனால் திரும்பவும் ஒரு காட்டின் நியதிகளையும், கணக்குகளையும் முற்றிலும் உணரவே முடியாது. அது நம்மிடமிருந்து அறுந்து பல காலம் ஆகிறது. நாம் அதனை உணர காட்டிலேயே தவம் இருந்தால்கூட முடியாது. வெட்டப்பட்ட மரம் வேர் காணுவதில்லை. நாம் வெட்டிய-மரத்தினினுள்ள ஒட்டிய வேரையே  மரம் என்றெண்ணுகிறோம். ஆனால் உண்மையான வேர் காட்டின்  ஆழத்தில் கிளை பிரிந்து , கைகள் கோர்த்து பிரமாண்டமாய் உள்ளது. அது மானிடக் கண்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை. ஆனால் நாம் அதனை ஏன் காண வேண்டும். கண்டால் மட்டும் அதனை நாம் உணர்ந்து விடுவோமா என்ன?  அவ்வேரினை உணர இக்காடோடி ஒரு தொடக்கம்.