Friday, 4 December 2020

விஷ்ணுபுரம்

                                                               விஷ்ணுபுரம் 

    விஷ்ணுபுரம் நாவலின் முதல் வாசிப்பு முடித்து விட்டேன். வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளுக்கு தர்க ரீதியாகவும் தரிசன ரீதியாகவும் விடை காண மேற்கொண்ட பெருமுயற்சியே இந்நாவல். தமிழின் மிகச்சிறந்தப் படைப்புகளில் இந்நாவலுக்கான தனி இடம் உண்டு.

    நாவல் மூன்று பாகங்களாக பிரித்து வாசிக்க வேண்டும். வரலாற்று பின்புலமுடன் கற்பனாவாதத்தையும் சேர்த்து வாசித்தால் இந்நாவலின் மொழி பிடி வரும். வாசிக்க தொடங்கிய ஆரம்ப பக்கங்கள் சற்று கடினமாக இருந்தாலும் அதன் மொழியும் கற்பனையும் விஷ்ணுபுரத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். சம்ஸ்க்ருத வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பகுதி கதையின் போக்கிலோ அல்லது கதை மாந்தரின் சொல்லாடிலோ அர்த்தப்பட்டுவிடும். 

    நாவல் நேர் கால வரிசையில் தொகுக்கப்படவில்லை. இருந்தாலும், வாசிப்பனுபத்தில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும். இரண்டாம் பாகத்தை முதல் பாகமா வாசித்து பிறகு முதல் பாகத்தை வாசித்தால் கூட, பொருள் முறை மாறாது என்றே நினைக்கிறேன்.

    நாவல் வாசிக்க தொடங்கியதுமே நம்மை ஆட்கொள்வது விஷ்ணுபுரத்தின் பிரம்மாண்டம். அதன் பேருருவும், வானுயர்ந்த  கோபுரங்கழும், சிற்பங்கழும் வாசிக்கும் போதே நம்மை அண்ணாந்து  பார்க்கச் செய்யும். "விஷ்ணுபுரத்தின் மைய கோபுரத்தை நகரின் உள்ளிலிருந்து பார்க்க முடியாது". இதுவே நாவல் உள்ளடங்கிய  அனைத்து தத்துவ, ஞான விவாதங்களுக்கும் தொடக்கமான இடமாக நான் காண்கிறேன்.

    விஷ்ணுபுரத்தின் ஒழுங்கையும், மக்களின் சமூக கட்டமைப்பையும் விவரிக்கும்போது  அது ஒரு கனவு நகரமாக காட்சியளிக்கிறது. அதே சமயம், அந்நகரம் கொண்டிருக்கும் அழுக்கையும், பேதங்களையும் மக்கள் எண்ணாமல் அதன் சிறப்பை மட்டுமே போற்றிக் கொண்டிருந்தனர். அந்தணர்களின் ஒருவனான பிங்கலனுக்கு மட்டும் இந்நகரம் ஏதோ உவப்பாக இல்லை. மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே, முன்னோர் கூறுவனவற்றை ஏற்காமல் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கோயில் வாசலில் ஒரு பெருநோயாளியின் காலினை திருவடி என்பவன் மிதித்ததைக் கண்ட பிங்கலன், தன் மனதில் மிகப்பெரும் ஒவ்வாமையால் ஆட்கொண்டு விடுகிறான். 

    கிட்டத்தட்ட ஒவ்வொரு கதைமாந்தரும் ஏதாவதொரு புள்ளியில் தத்துவ கேள்விகளில் ஈடுபடுகின்றனர். அனைத்து மானிட அகம் சார்ந்த கேள்விகளும் விவாத பொருளாக வருகின்றன.  வாழ்வின் பொருளை, பிரபஞ்சத்தின் உண்மையை எங்காவது ஒரு இடத்தில தொட்டு, மொண்டு பருகிவிட நினைக்கும் ஒரு பேரிலக்கியம் இது. பல்வேறு மறுவாசிப்புகள் அவசியம் நிகழ வேண்டிய நூல் இது.

    ஸ்ரீபாத பாகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும், மணிமுடியில் விளக்கம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, பிரம்மராயர் குருட்டு யானையை சரியாக பரிசோதிக்காததால் தண்டிக்கப்படுகிறார். ஆனால் அவரை பழி வாங்கவே, அவர் சோதித்த குருட்டு யானையின் கண்மணிகளில் வந்தமர்ந்து அவரை ஏமாற்றினர் விண்ணவர் என்று அதனூடாக ஒரு கதை விரிந்தோடுகிறது. இப்படியாக ஒவ்வொரு கிளையிலும் கதைகள் முளைத்துக்கொண்டே போவது, இந்நூலின் பிரம்மாண்டத்தையும் வாசகனின் கற்பனையையும் கூட்டிகொண்டே போகிறது.

    சோனா நதியில் இருந்து கிளம்பும் காற்று இனிய இசையாக விஷ்ணுபுர மண்டபத்தில் எதிரொலிப்பது, இயற்கையின் இசை மனிதன் அறிந்த அனைத்து தாளங்களை விடவும் இனிமையானதாக தோன்றுகிறது. யானைகளை மனிதன் எல்லா நிலைகளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறான்.யானைகளின்றி அன்று எதுவுமே சாத்தியப்பட்டு இருக்காது. 

    தான் கண்ட பெண் மேல் முடிவிலா ஆசை கொண்டு பித்துப் பிடித்துப் பிறகு ஒரு துறவியாக மாறும் திருவடி. பிங்கலன், சங்கர்ஷணன், திருவடி அனைவரும் பெண்ணின் மீது கொண்ட காமத்துடன் சேர்ந்து தன் ஞான கேள்விகளுக்கு விடை தேடவும் முயற்சிக்கின்றனர்.

    அக்கால சிற்பக்கலையின் சிறப்பும், நேர்த்தியும் அதன் கணித ஒழுங்கும் விஷ்ணுபுரமெங்கும் வருகிறது. விண்ணைத்தொடும் கோபுரங்கள் விண்ணவர் மண்ணில் இறங்கும் ஊர்திகள். மேகத்திற்கு மேலே வானில் உள்ளன கோபுர உச்சிகள். அதன் பிரம்மாண்டமே விஷ்ணுபுர வாசிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதுவே மக்களிடம் ஒரு அமைப்பையும், ஒழுங்கையும் நிர்மாணிக்கும். 

    விஷ்ணுபுரம் 'அக்னிதத்தனால்' உருவாக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகிறது. அவரது சந்ததிகளே அதன் ஞானாதிபதியான 'சர்வக்ஞர்' என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணுபுரம் பல்வேறு முறை முழுவதுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் உருவாகும் போது அங்கே விஷ்ணு 'நிர்மால்ய'மாக படுத்திருப்பார். அங்கிருந்தே விஷ்ணுபுரம் மீண்டும் தன்னை வளர்த்துக்கொள்ளும்.

    மனதினை கட்டுப்படுத்துவது என்றால்  என்ன? மனம் மனமற்ற பொழுதில் என்னவாக இருக்கும். அதுவே ஞானத்தின் கடைசிப் படியா? அனுபவத்தை அறிய முடியுமா? அறியும் பொருட்டு அது முழுமையான அனுபவமா இருக்குமா? போகத்தின் உச்சம் தான் என்ன? காமமா? காமவிடுதலை ஞானத்தின் திறப்பா? அல்லது காமத்தினை அப்படியே ஏற்றல் ஞானத்தை பெருக்குமா? பிரம்மம் என்பது எது? அதை அறிய முடியுமா? பிரபஞ்ச உண்மை என்று ஒன்று உள்ளதா? அல்லது அனைத்தும் தற்செயலின் பேரமைப்பா? பிரபஞ்ச அமைப்பின் விதிகளை யார் உருவாக்கியது? அல்லது அவ்விதிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட வெறும் பிரமையா? மனமற்ற நிலையிலேயே பிரபஞ்ச உண்மையை அறிய முடியுமா? அனைத்திற்குமான ஆதி எது? அல்லது ஆதியற்ற அனாதையா இப்பிரபஞ்சம்? 

    மேலே உள்ள கேள்விகள் இந்நூல் முழுவதும் வரும் விவாதங்களின் ஒரு சிறு தொகுப்பே. இவை குரு-சிஷ்ய போதனைகள், பொதுவான பேச்சுக்கள், அனைத்துலக ஞானிகள் மத்தியில் நிகழும் விவாதங்கள் என்று எந்த ஒரு பேதமும் அன்றி அனைத்து இடத்திலும் நூல் பூராவும் வந்துகொண்டே உள்ளது.  

    தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றும் பொருட்டு குடும்பத்துடன் விஷ்ணுபுரம் வந்து, தன் மகனை இழந்து, குடும்பத்தைப் பிரிந்து தாசித் தெருக்களில் தஞ்சம் அடைகிறான், சங்கர்ஷணன். தன்  மனைவியால் வெறுக்கப்படுகிறான். பித்துப் பிடித்து அலைந்து இறுதியில் மகாபுராணமான 'பத்மபுராணத்தை' பாண்டிய மன்னன் முன்னிலையில் அரங்கேற்றுகிறான்.  விஷ்ணுபுரத்தின் அத்தனை வரலாற்றையும் கூறுவது பத்மபுராணம். அதன் இறுதி பிரளயம் பாகத்தை முடிக்காமலேயே அதனை அரங்கேற்றினான் சங்கர்ஷணன். அதுவே காலம் காலமாய் விஷ்ணுபுர வரலாற்றை திரும்ப திரும்ப சொல்லும் பெரும் காவியமாகும்.

   கவிஞர்களை பகடி செய்யும் வகையில் நிறைய இடத்தில வருகிறது. "விஷ்ணுபுரத்தில் கவிஞர்களுக்கா பஞ்சம், இங்கு அனைவரும் கவிஞரே" என்று ஒருவர் சங்கர்ஷணனிடம் கூறுவது உச்சம். சங்கர்ஷணன் "ஆழ்வாருக்கு" மருத்துவனாக வேடமிட்டதனாலே, அரசவைக்குள் புகுந்து காவியத்தை அரங்கேற்றினான். அரசவைக் கவிஞரின் "கவிப்பெருமை" பகடிகளுள் ஒன்று. 

    பாண்டியனின் போக வாழ்க்கையம் அவனை சுற்றி நடக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டும், வல்லாளன் விஷ்ணுபுரத்தை கைப்பற்றும் சூழ்ச்சியும் விவரிக்கப்பட்டுள்ளது. 

    "மக்கள் மரபுகளை வழிபடுகிறவர்கள். எதிர்காலம் பற்றிய அச்சத்திற்கு மாற்றாக  வாழ்க்கையைச் சடங்காக மாற்றி வைத்திருக்கிறார்கள். புதிதாக ஏதும் நிகழ விடக்கூடாது".   மனிதன்  அச்சப்பட்டுக் கொண்டே இருக்கிறான். வாழ்க்கையை ஒரு சடங்காக மாற்றும் போது  அது ஒரு பேரமைதியையும் அதற்கு மேல் ஏதும் சிந்திக்க இல்லை  என்னும் உணர்வையும் தரும் போது , அவன் வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்கிறான். மனிதன் எப்போதுமே சிந்திக்க பயந்தவன். அல்லது சிந்தனைகளை குறுக்கிக் கொண்டவன். எல்லாம் எழுத்தப்பட்டவை என்பதனாலே மக்கள் அமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் எதிர்வினையாகவே தத்துவம் பிறக்கிறது. அச்சத்தை மிதித்து வேறு திசையில் எழ அது உதவுகிறது. அந்த தத்துவத்தின் பல்வேறு கண்டடைதலே மதங்களாகவும், மார்க்கமாகவும் உருப்பெறுகிறது. மீண்டும் இதனை அவன் சடங்காக்கி அதன் மேல் நின்று சிந்தித்து புதியவற்றை அடைகிறான்  இதற்கு என்றுமே எல்லை இல்லை.

    விஷ்ணுபுரத்தை அழிக்க ஒரு சாரார் எப்போதும் முயற்சி எடுத்துக்கொண்டே உள்ளனர். மகாகாசியபரின் ஆணைப்படி சிற்பியினை தன் வசப்படுத்தி இந்த மிகப்பெரும் விஷ்ணுபுரத்தையே ஸ்ரீபாத விழாவின் இறுதி நாளன்று அழிக்க நினைக்கிறார்கள். அந்த சிற்பி பெரும் சேதம் விளைவிக்கும்  பொருட்டு  மைய கோபுரத்தின் மீது ஏறினான். அங்கு மிகவும் மனம் சஞ்சலப்பட்டு உச்சியிலிருந்து கீழே விழுந்து மாண்டு விடுகிறான். அவன் மனம் ஆட்கொள்ளப்பட்டது.

       சுடுகாட்டுச் சித்தன் ஒருவன் பட்டாச்சாரியாரை அவரின் சீடர்கள் முன் விவாதத்தில் தோற்கடித்த ஒரு சிறுவனை தன் சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு அனைத்து போதனைகளையும் கற்பிக்கிறான். அவனை காஸ்யபன் என்று பெயர் வைக்கிறான். அவர்கள் இருவரும் புரியும் ஆனந்தத் தாண்டவத்தை வாசிக்கும்போது நாமும் எல்லாமும் விட்டு ஆட தோன்றுகிறது. அவனும் அவன் சீடனும் மகாஞான சபையில் பங்குகொள்கிறார்கள்.

      அஜிதன் என்னும் பௌத்த மார்க்கம் கொண்டவன் விஷ்ணுபுரத்தின் மகாஞான சபையை கூட்ட சவால் விடுகிறான். பாண்டியனின் ஆணைக்கு இணங்க சபை கூட்டப்படுகிறது. 

    இந்திய ஞான மரபில் இத்தனை மார்க்கங்களும், மரபுகளும் உள்ளது என்பதை ஞான சபையில் நடக்கும் பெரும் தர்க்கங்களையும், தத்துவ விவாதங்களையும் வைத்து தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. அந்த மார்க்கங்களின் உள்ளே செல்ல, இது ஒரு நுழைவாயிலாக இருக்கும். கற்பனை செய்யமுடியாத அளவு எண்ணிக்கையில் மிகுந்தவை. 

    ஒவ்வொரு தர்க்கமும் இன்னொன்றை விட சிறந்ததாகவும், ஏற்றுக்கொள்ளும் படியும் இருக்கும். அதனை எதிர்த்து சமன் செய்யும் தர்க்கமும் அவ்வாறே இருக்கும். ஒவ்வொரு மார்க்கமும் தங்கள் வாதத்தைத் வைத்து கொண்டிருக்கையில் விஷ்ணுபுர மகாசபையின் சர்வைக்ஞர்(பவதத்தர்) சரியான சந்தர்ப்பத்தில் வாதியின் தர்க்கத்தை உடைக்கும் பொருட்டு அல்லது வாதத்தினை விஷ்ணுபுரத்தின் கோட்பாட்டிற்கிணங்க பதில் கூற முடியாதளவுக்கு சமன் செய்து விடுவார்.

    பிரம்மம் என்பதே சத் மற்ற அனைத்தும் அசத். ஏழு வகை உடலை உதறி ஆத்ம, தூய நிலையானா பிரம்மத்தை நோக்கி பயணிப்பதே முக்தி என்று பவதத்தர் பல்வேறு வாதங்களில் நிறுவுகிறார்.  

    வேதங்களில் இருந்து பல்வேறு மேற்கோள்களும், விவாதங்களும் வந்த வண்ணமே உள்ளன. வேதத்தினை ஏற்றும் மறுத்தும் செய்யும் விவாதங்கள் நிரம்பி உள்ளன. 

        விஷ்ணுபுரத்தின் ஞானசபையில் நடந்த விவாதங்களில் பல்வேறு மார்க்கம் கொண்டவர்களும் பங்கு கொண்டு தங்கள் தரப்பின் தர்கத்தினை முன்வைத்தனர். இந்திய பெருநிலப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பும் பங்கு கொண்டு விவாதித்தனர். அவ்விவாதங்கள் மட்டுமே தனியாக ஒரு நூலாக கொண்டு வரலாம். இதை மட்டுமே நிறைய முறை வாசிக்க வேண்டும். நமது சிந்தனை ஆழத்தினை சோதிக்கும் பல நூறு கேள்விகளும் தர்க்கங்களும் இதில் அடங்கி உள்ளது. நம்மை மேலும் சிந்திக்க வைக்க இது உதவும். அஜிதரின் தர்க்கங்களை அனைத்து பிரிவினரும் சோதனை செய்து தோல்வியுற்றனர். அணைத்து மார்க்கத்திலும் தர்க்கங்கள் தரிசனங்கலாக தாவும்  நேரம் வரும்போது , பவதத்தர் அதனை உடைக்கும் வகையில் கேள்விகளை தொடுத்து விஷ்ணுபுர கோட்பாட்டினை நிலை நாட்டுவார். அதே முறையை அஜிதர் பவததத்தருக்குக் கையாண்டு ஞானசபையில் வெற்றி கொள்ளகிறார்.

    அஜிதர், அனைத்தையும் அனுமானமாகவும், அறிய முடியாமையாகவும் கொண்டு தன் தர்க்கத்தை நிலைநாட்டுகிறார். பிரபஞ்சத்தின் ஆதி காரணத்தை நம்மால் அறிய முடியாது என்கிறார். "அறியமுடியாதென்பதை அறிவதே ஆகப் பெரிய மானுட ஞானம்." நாம் அறிந்தது "காலம்" ஒன்றை மட்டுமே. காலத்தினை சக்கரமாக உருவகம் செய்து அதன் மைய புள்ளியே மகாதர்மம் என்று நிலைநாட்டுகிறார். மகாதர்மம் எங்கும் என்றும் நிரம்பி உள்ளது. அது எதுவாகவும் மாறுவது இல்லை. இந்திய ஞானமரபில் பௌத்தம் தான் கொண்ட பெரும் பங்கினை இதில் காணலாம்.

    அஜிதர் ஞானசபையை வென்ற பிறகு, மிகவும் சோர்வடைகிறார். அவருக்கு அந்த வெற்றியில் உள்ளூர மகிழ்ச்சி இல்லை. இவை அனைத்தும் மனிதன் தன் அகங்காரத்தை பூர்த்தி செய்யும் செயல்களன்றி வேறில்லை என்று மனம் சஞ்சலப்படுகிறார். விஷ்ணுபுரத்தில் "அஜிதரை" சுற்றி நிறுவனங்கள் எழுப்பப்பட்டு, சமூகம் உருவாக்கப்படுகிறது. 

    நூலின் இறுதி பாகமான "மணிமுடி"யில் விஷ்ணுபுரத்தின் "பிரளயம்" வருகிறது.   பல நூறாண்டுகள் கழித்து வருவதாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் வந்த திருவடி, பிங்கலர், ஸ்ரீதரர், சங்கர்ஷணன்   ஆகியோருக்கு தனியாக மார்க்கமும், அவரை பின்பற்றுவோரும் வருகின்றனர். 

    பிரம்மாண்டங்களுக்கு பேர்போன விஷ்ணுபுரம் சிதைந்து அழிவின் விளிம்பில் தத்தளிக்கிறது.  போர்களால் கோபுரங்கழும் சிற்பங்களும் சிதைக்கப்பட்டு பெரும் காடாக விஷ்ணுபுறம் காட்சி அளிக்கிறது. ஊரில் நூற்றுக்கும் குறைவான மக்களே வாழ்ந்தனர். அனைவரும் மதுரை போன்று ஊர்களுக்கு பெயர்ந்து  கொண்டே இருந்தனர்.  

    இமயமலை முகடுகளில் மகா அஜிதரையும் விஷ்ணுபுரம் என்ற ஊரையும் கேள்விப்பட்டு "யோகவிரதன்" என்னும் பௌத்தன் விஷ்ணுபிரத்திற்கு  வந்து "ஸ்ரீசக்கரம்" பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.  அவனுடன் சங்கர்ஷணன் மார்க்கம் கொண்டவனான "பாவகன்" பல்வேறு தர்க்கங்களில் ஈடுபடுகிறான். 

    செம்பர்களைப் பற்றியும், அவர்களின் மூப்பனானஆதிமூப்பனே விஷ்ணு என்றும் ஒரு மாற்று வரலாறு சொல்லப்படுகிறது. விஷ்ணுபுரம் காடாகி கோலம் கொண்டுள்ளதால், காட்டின் வர்ணனைகள் நிறைய இடம்பெற்றுள்ளது. வேதத்ததன் (கடைசி சர்வஞர்) சோலைபைத்தியமாக காடுகளில் மலைகளில் நதிகளில் சுற்றி அலைகிறார். மனம் மட்டுமே உடைய ஒரு தூய ஆத்மாவாக, எந்த ஒரு தர்க்க ஞானமும் , மனிதன் கட்டி அமைத்த பல்வேறு நெறிமுறைகளும் அன்றி வருவது, மனிதனின் ஏக்கத்தையும், சுதந்திரத்தின் தூய்மையையும் மனம் அற்ற நிலையின் மனிதத் தன்மையும் இருப்பதாக அமைகிறது.

    ஹரிததுங்காவின் இருப்பே இதில் எப்போதும் உள்ள இருப்பாகும். அதுவே விஷ்ணுபுரத்தின் அசையாத சாட்சி. அதன் தோற்றமும், வாழ்க்கையும், அழிவும் அச்சிகரம் மட்டுமே அறியும்.

    நூலினை வாசிக்க வாசிக்க பல்வேறு இடங்களில் நம்மை அறியாமலேயே மயிர்கூச்சு அடைகிறோம். சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, அதில் சில தர்க்கத்தின் முடிச்சினை நாம் அறிந்த உவகையினாலும் , சில தரிசினத்தின் தொடக்க புள்ளியைக் கண்ட பொழுதுமாக உள்ளது. தர்க்கத்திருக்கும் தரிசினத்திற்கும் நடக்கும் இடைவிடாத கண்ணாமூச்சி ஆட்டமாக இந்நூல் உள்ளதோ என்ற சிந்தனையும் எழுகிறது. அல்லது மனித மனதிற்கு அப்பாற்பட்ட வேறொன்றை தொட முயலும் ஒரு பெரும் முயற்சியாக நான் இதைப் பார்க்கிறேன். 


Wednesday, 2 December 2020

காந்தி - கடிதம்

 

அன்புள்ள ஜெ,

            தங்களின் 'தகடூர் புத்தகப் பேரவையின்' காந்தியிடம் செல்ல வழிகாட்டியவர்கள் சிறப்புரையை  நேரலையில் கண்டேன். மேலும் தங்களின் காந்தி பற்றிய கடிதங்களும் (உங்களின் வலைதளத்தில்), தங்களின் 'உரையாடும் காந்தி'  புத்தகமும் வாசிக்கும் பொழுது, நம் பாடப்  புத்தகத்திற்கு அப்பால் உள்ள ஒரு காந்தியினை புரிந்து கொள்ள உதவி புரிகிறது. 

            காந்தியத்தின் தேவை முன் எப்பொழுதையும் விட இன்று மிகவும் தேவைப்படுகிறது. காந்தியை சொல்லால் முழுவதுமாக விவரிக்க முடியாது என்றே தோன்றுகிறது. எவ்வளவு விவரித்தாலும் காந்தியத்தை  செயலால் மட்டுமே முழுமைப் பெற வைக்க முடியும். தன் வாழ்நாள் முழுவதும்,  'இலட்சிய செயலாற்றிக்கொண்டே' இருந்தவர்கள் வரலாற்றில் மிகவும் குறைவு. செயலே சொல்லாகவும், சொல்லே செயலாகவும் தன் வாழ்க்கையை  அர்ப்பணித்தார் காந்தி.

            உண்மையில் காந்தியை எதிர்த்தலும் ஒரு வகையான காந்தியமே. அவரின் ஏதோ ஒரு கூற்று நம்மை நிலைகொள்ள செய்யாமல் ஆழ் மனதில் உறுத்திக்  கொண்டே இருக்கிறது என்றால் , அதனை சரி செய்ய நாம் அந்த கூற்றுக்கு ஒரு எதிர்வினையை செய்து பார்ப்போம். அது அவர் கூறியதற்கு மாற்று கருத்தாக இருந்தாலும் அச்செயலும் காந்தியத்தினால் முளைத்த விதையே. அவற்றில் நாம் வெற்றி கண்டாலும் தோல்வி கண்டாலும் அதன் வேர் காந்தியத்தில் உள்ளது. செயலாற்றிக்கொண்டே இருப்பதன் முக்கியதுவத்தை அது உணர்த்துகிறது.

            தாங்கள் ஒரு வாசகர் கேள்விக்கு (இவ்வளவு அரசியல் திரிப்புகள் உங்கள் சொல்லின் மேல் சொல்லப்பபட்டாலும் , நீங்கள் ஏன் சலிக்காமல் திரும்ப திரும்ப உரையாடிக்கொண்டே இருக்குறீர்கள்? என்ற வகையான கேள்விக்கு), 'உரையாடிக்கொண்டே இருப்பது என் கடமை, அதை ஏற்பதும் ஏற்காததும் வாசகர் மனதில் உள்ளது. வாசகனுக்காக நான் உரையாடவில்லை, எனக்காக உரையாடுகிறேன்'   என்ற வகையில் பதில் கூறினீர்கள். அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காந்தியின் கூற்றே.

அன்புடன் ,

பிரவின்,

தர்மபுரி 



Sunday, 19 July 2020

காகிதம் - 2

                                                        காகிதம் - 2

   இன்று 'ராஜ் கௌதமன்' அவர்களின் 'தலித் பார்வையில் தமிழ்ப்  பண்பாடு' என்னும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகம் அக்கால தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை சங்கப் பாடல்களின் வழியே நிறுவ முயல்கிறது. 50 பக்கங்கள் வரை படித்து முடித்துள்ளேன்.
   தினமும் காலையில் 5 மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். கண்டிப்பாக ஒரு ஒழுங்கு முறையோட கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் பின்பற்றுவதில் மிகவும் சிரமமாக உள்ளது. எப்படியாவது காலையில் சீக்கிரம் எழுந்து யோகா பயிற்சி செய்து ஒரு 2 மணி நேரம் தவறாமல் வாசிக்க வேண்டும். 
   

Thursday, 9 July 2020

லாசர் - கடிதம்

                                                 லாசர் - கடிதம் 

அன்புள்ள ஜெ,

     'லாசர்' சிறுகதை வாசித்தேன். காலம் நெடுகிலும் அச்சிறுவன் லாசர் போன்றோரை பார்க்க முடியும். அன்று அந்த கை-கடிகாரத்தை பார்த்து வியப்புற்றோம், இன்று தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டு வியப்புறுகிறோம். 
    லாசர் கதையை படித்த பின்பு ஒரு 'சொன்னதை சொல்லும் கிளியுடன்' உரையாடியது போன்று  இருந்தது. மற்றவர்கள் சொல்லும் அத்தனையும் திரும்பச் சொல்லி, தொடர்ந்து வரும் இரு வாக்கியங்களில் நேர்மாறான கருத்து அர்த்தம் உள்ளது என்று கூட புரியாமல் இருக்கும் சிறுவன். 
    கை-கடிகாரத்தை வண்டாக நினைத்து அதனுள் பாதிரி உயிர் திரும்ப வர வைத்தபோது, தன் 'குட்டி'யே அந்த வண்டின் உருவத்தில் உயிர்த்தெழுந்து வந்ததாக கண்ணீர் வழிந்தான். உண்மையில் லாசரே உயிர்பெற்றான். அந்த 'உயிர்பெறுதல்' புற வயமாக உண்மை இல்லை என்றாலும்,  அதை நம்புவோர் அகத்திற்கு அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். அந்த நம்பிக்கை தான் பல உயிர்களை நடத்தி செல்கிறது. ஆனால் உலகத்தில் எல்ல செயலுக்கும் ஒரு விலை உள்ளது போல, அந்த புற வயமான பொய்களால் பல்வேறு சமுதாய சிக்கல்கள் வராமலும் இல்லை. 

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி.


நிழல்காகம் - கடிதம்

                                                       நிழல்காகம் - கடிதம்
அன்புள்ள ஜெ,

   மூலம் - போலி, உண்மை - நாடகம், shake - drape, பொருள் - நிழல்.
   அசிதரின் சந்ததி நெடுக காகம் அவர்களை கொத்துகின்றது. இது உண்மை. இது ஏன், எதற்கு நடைபெறுகிறது என்பதைக் கடந்து, இது நடக்கிறது, இதனை எப்படி எதிர்கொள்வோம் என நினைத்து, அசிதர் தன்னை அந்த செயலுக்குள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்படி அந்த கொத்தல் நிகழ்வு,கொத்தல் விளையாட்டாக மாறியது. 'அது' 'தானா'கும் போது, அதிலிருந்து நாம் அதை கடந்து செல்கிறோம்.
    இங்கே காலத்திற்கு காகத்தை உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. நம் பூர்வ கால செயல்களின் வினை, காகம் கொத்துவது போல தொடர்ந்து வந்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு அதனுடன் விளையாட பழகவில்லை என்றால் வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்ற பொருளும் உள்ளது. 'பொருள் அற்ற ஏற்றல்' - என்ற தத்துவத்தை கூறுவதாகவும் ஒரு விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
   அசிதர் எங்கு சென்றாலும், காகங்கள் அவரை கொத்துவது வியப்பாகவும் விந்தையாகவும் உள்ளது. ஆனால் உலகமே இவ்வாறு விந்தையான நிகழ்வுகள் கொண்டதே என்றே நான் நினைக்கிறேன். சில விந்தைகளை நாம் பகுத்தறிந்து பொருள் கொண்டோம். சிலவற்றை நம்மால் பொருள் கொள்ள முடியவில்லை அல்லது அதற்கு பொருள் ஏதும் இல்லை என விட்டு விட்டோம். ஒருவேளை நடப்பவை அனைத்திற்கும் பொருள்  ஏதும் இல்லை என்றே சில சமயம் தோன்றுகிறது. நாம் பொருள் கண்டவற்றிற்குக் கூட, நம் மனத்திருப்திக்காக பொருளை ஏற்று  கொண்டோம் என்றே நினைக்கிறேன். அல்லது நேர் மாறாக அனைத்திற்கும் பொருள் உள்ளதோ?
    உலகில் உள்ள அனைத்து காகங்களும் அவரை அடையாளம் கண்டு கொத்துவது, அவை அனைத்தும் ஒரே மனதால் கோர்க்கப்படுவது போல உள்ளது. பல உயிர்கள் ஒரே மனம். அவைகள் ஏன் அவரை கொத்துது என அவைகளுக்கே தெரியாது. அல்லது அவைகளுக்கு தெரியும் என நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தெரியாத, புரியாத ஒரு செயலை செய்வதில் ஏன் அதற்கு அப்படி ஒரு ஆவல். அச்செயல் அதன் கடமை. தன் கடமையை யாரோ ஆணையிட அது செய்து கொண்டே போகிறது. அப்படி அது செய்து கொண்டே போகும் வேளையில், அச்செயலை அவர் ஏற்றுக்கொண்ட போது, அவரைக்  கொத்தும் உக்கிரமும் குறைந்து அது ஒரு தொடும் விளையாட்டாக மாறிப்போகிறது. அது காகத்தின் கருணையாகவும் கொள்ளலாம். 'ஏற்றுக்கொண்ட தண்டனைகள் அதன் பொருளை இழக்கிறது'. இங்கே அசிதர், காகங்கள் தன்னை தண்டிப்பதை ஏற்றுக்கொண்டதால்  அந்த செயலே காகத்திற்கு பொருள் அற்று போனது.
   உலகில் அனைத்தும் காம வடிவமே. அனைத்து புலன்களும் காமத்தின் செயல்பாடுகள். இதில் 'இன்பமும், துன்பமும்', 'ஆசையும், கோபமும்' அனைத்தும் காமம். ஆனால் கலையின் காணும் காமம், நம்மை அந்த கலையின் ஊடே இட்டுச்சென்று புதிய  மலர்தலை அளிக்கிறது. அந்த மலர்தலில் நாம் அதனில் ஒன்றாக உள்ளோம், மனமே கலையாக, கலையே மனமாக. மாறாக அதை முழுமையாக அறியாத மனம், கலையை தன்னுடன் பிரித்துப் பார்த்து அதனை அடைய முயன்று தோற்கிறது. 'காமம்-பிரம்மம்', இவை இரண்டிற்கும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு சிந்தனை வழிகள். பரதநாட்டியம் ஒரு காம நடிப்பு. அப்படி நாம் அதை நடிப்பதால் தான் அதிலிருந்து நாம் விடுபடுகிறோம். அந்த விடுதலை அளிப்பதாலேயே அது மிகப்பெரும் கலை ஆகிறது.  'மனதை விடுதலை செய்ய முடியாத எதுவும் கலை அல்ல' என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அசிதரும்-காகமும் அந்த கொத்தல் விளையாட்டை விளையாடுவதும் ஒரு நடிப்பே.
       மூலத்தை அறியவும் கடக்கவும் போலி உதவும் என்பதை யோசிக்க யோசிக்க மலைப்பாக இருக்கிறது. ஆனால் அறிந்து கடக்கிறோமா இல்லை அறியாமல் போகிறோமா என்பதே இங்கே முக்கியமானது. 'அறிதல்' நடக்குமிடத்திலே நாம் அதை கடக்கிறோம் என்றே எனக்கு தோன்றுகிறது. 

அன்புடன்,
பிரவின்
தர்மபுரி 
   

முதலாமன் - கடிதம்

                                                           முதலாமன் - கடிதம்

அன்புள்ள ஜெ,

     'முதலாமன்' சிறுகதையில் வரும் காளியன் போன்றோரால் ஆனது தான் இந்த உலகு. கதையில் வரும் கருமலைப்பட்சி ஒரு உவமையாகவே வருகிறது. அதனுடன் நாம் எதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மனிதர்கள் தன்னை மீறிய நிகழ்வுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள்  என்பதிலேயே தீர்மானிக்கப்படுகிறார்கள். எல்லா பெரும் போராட்டங்களிலும் தன்னை முன்னிறுத்தி சென்றவர்களே வரலாற்றின் 'நடுகல்' நாயகர்களாக உள்ளார்கள்.
     சராசரி மனிதர்கள் அவருக்கு ஒரு நடுகல் (ஒரு உவமைக்காக) மட்டுமே நட முடியும். அதனால் தான் அவர்கள் சராசரி மனிதர்கள். அதில் அவர்கள் மேல் எந்தப் பிழையும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களால் அவ்வளவு தான் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். எந்த ஒரு இடர் வரும் போதும் தன்னிலை மறந்து அனிச்சையாக பொது நலத்தில் ஈடுபடுபவர்களால் கட்டமைக்கப்பட்டது தான் எந்த ஒரு சமூகமும், அதன் அறமும்.
    கதையில் மூன்று படிமங்கள் அல்லது விவாதப் பொருள்கள் உள்ளன.
   1. காடு மனிதனால் தொடர்ந்து சுரண்டப்படுவதால் 'கருமலைப்பட்சி' போன்ற தொன்மங்களினால் , அசுரண்டலைக்  குறைக்கும் பொருட்டு கூறப்படுகிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு நீதி உள்ளதை பாம்பின் 'கிழிந்த நாக்குகள்' உட்கதை கொண்டு உணரலாம். தனி உயிரின் தேவைக்கு மேல் எந்த ஒரு சுரண்டலும் அறத்தை மீறிய செயலாகும்.
   2. மனிதன் எவ்வளவு தான் தன் மூத்தோரை வெறுத்தாலும், தன் குடும்பம், தன்  ரத்தம் என்று வரும்  போது, அவன் அதை மீறி எதுவும் செய்ய முடிவதில்லை. சாகக்கிடக்கும் பாட்டன் எப்படா போவான் என்று நினைப்பவனும், அவனை ஊருக்கு பலி கொடுக்க விடுவதில்லை. இதில் மனிதன் தான் கட்டமைத்த குடும்ப முறை ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறியலாம்.
   3. தன்னையும், தன் ரத்தத்தையும் விட பொது அறத்திற்காக முதலில் நின்று மாண்டவர்களும், மீண்டவர்களும் எழுப்பும் அறக்கேள்விகள் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்த்து விடுகிறது.

   இன்று நாம் அறிந்திருக்கும் அத்தனைத்  துறை வளர்ச்சியினிலும் காளியனைப் பார்க்கலாம். அறிவியல், மருத்துவம் முதலிய அத்தனை கட்டமைப்புகளிலும் முதலில் நின்று பலிகடா ஆனவர்களால்தான் அது வளர்ந்து வந்துள்ளது. ஏன், நாம் இன்று இருக்கும் கால கட்டத்திலே கூட, 'கொரோனாவிற்கு' தடுப்பு கண்டுபிடிப்பதில் பல 'காளியன்'கள் பலியாகலாம்.
   காளியன் ஒரு காந்தியின் படிமம் என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி




Thursday, 25 June 2020

சிறகு - கடிதம்

                                                 சிறகு - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
   வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்திற்காக நம்மை அறியாமலியே நாம் காத்திருப்போம். அந்த தருணம் வரும் போது, அதன் 'சிறகு'கள் கொண்டு நாம் பறந்து செல்ல முயல்வோம். ஆனந்தவல்லியின் அப்படிப்பட்ட தருணம் அவள் 'சைக்கிள்' கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்டது. அவள் அதை ஒரு சிறகாகப் பயன்படுத்தி தன்னை, வாழ்க்கையின் அடித்தள பகுதியிலிருந்து மீட்டெடுத்து பறந்து செல்கிறாள்.
   சங்கு போன்ற பண்ணையார்களின் அடக்கும் அதிகாரமும், ஆனந்தவல்லி போன்ற எளிய மக்களின் அடங்கும் குணமும், இதில் யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறர்கள் என்பதே மிகவும் முக்கியம். பெரும்பாலான சமயங்களில் சங்கு போன்றவர்களே வெல்கிறார்கள். மிகவும் சொற்ப சமயங்களிலே ஆனந்தவல்லி போன்ற எளியோர் தங்களின் மன உறுதியாலும் தீராத கனவாலும், அனைத்து தடைகளையும் மீறி முன்னகர்ந்து செல்கிறார்கள்.
   அப்படி அவர்கள் செல்லும்போது தங்கள் பாதையில் ஒரு சில சமரசங்களை செய்து கொள்கிறார்கள். அது அவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல. தன்  மீது தொடுக்கப்பட்ட அத்துமீறல்களிலிருந்து எப்படியாவது மீள அவர்கள் செய்யும் எதிர்வினையின் ஒரு சாரமே ஆகும். அதனாலேயே  'சிறகு' கதையின் கதை சொல்லியால், பெண்கள் செய்யும் சமரசத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேலுமொரு காரணம் நாம் வாழும் 'patriarchal' சமூகம். நாம் நம் பெண்களை  தெய்வமாக அல்லது கௌரவப் பொருளாக மட்டுமே நினைப்பது. அவளை ஒரு சக மனிதராக நினைப்பதையே ஒரு முற்போக்குச் செயலாகக்  கொண்டிருந்த காலம் நம்மில் உள்ளது.
  ஆனந்தவல்லியின் 'சிறகு', சக்குவின் 'சைக்கிள்'.

அன்புடன்,
பிரவின்