Monday 18 May 2020

பிறசண்டு - கடிதம்

                                                 பிறசண்டு - கடிதம்

அன்புள்ள ஜெ,

   இரண்டு எதிரெதிர் துருவங்களாக 'பாட்டா'வும், 'கள்ள'னும் உள்ளார்கள். வாழ்வில் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று 'இறகு' போல மனம் கொண்டவன் கள்ளன். இப்படித்தான் நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து வாழ்பவர் 'பாட்டா'. அப்படி  அவர் இருந்ததனாலேயே அவர் 4 ஆண்டு காலம் சிறையில் இருக்க வேண்டியது ஆனது.
   கள்ளனோ திருட வந்த இடத்தில அமைதியாக குத்திட்டு ஒக்காந்து யோசித்ததை,  பாட்டாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை பொறுத்த வரையில் திருடன் என்பவன் அவசரத்திலும், பொறுமையின்மையிலும் செயல்படுபவன். அதனாலே அவன் திருடத்தான் வந்திருக்கான் என்று அவருக்கு தெரியவில்லை. மாறாக, கள்ளனோ அமைதியாக வந்து, அமைதியாக திருடி, அமைதியாக சென்றான்.
   சிரோமணி பாட்டா, தன்னைப்பற்றி மட்டுமே யோசித்து வாழ்வில் நன்றாக படித்து, அரசாங்க வேலைக்குப்போய்  கௌரவமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் லட்சியமாக வாழ்ந்ததால், அவர் ஒரு கடிவாளம் போட்ட குதிரை போல ஆனார். உலகின் நல்லது/கெட்டதுகளின் பிரித்தறியும் பக்குவம் அவருக்கு கிட்டவில்லை. சற்றே யோசித்துப் பார்த்தால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் முந்தைய தலைமுறையிலேயே பலபேர் இப்படித்தான் இருப்பார்கள். குறிப்பாக, குடும்பத்தில் முதல் பட்டதாரிகள். இவர்கள் தங்கள் ஊரையும் உடமைகளையும்  விட்டு வேறு எங்கோ சென்று படிப்பது, மிகப்பெரும் சவால். அவர்களால் தங்களின் இயல்பை விட்டு சமரசம் செய்து கொண்டு புதிய ஊர்களில் வாழசிரமப்படுவார்கள். அதனாலேயே அவர்கள் மிகவும் தனிமையாகிறார்கள். தனிமை ஆன பின்பு அவர்களுக்கு தெரிந்தது படித்து முன்னேறுவது மட்டுமே. இப்படிப்பட்ட ஒருவரகத் தான் சிரோமணி பாட்டாவை என்னால் பார்க்க முடிகிறது. 
   வீட்டில் உள்ளவர்களால் இவர்களை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அவர்களின் உலகம் வேறு. உலகத்தின் நிகழ்வுகள் வேறு. கள்ளன், தன்னைக் காட்டிக் கொடுக்க கூடாது என்று தன்னுடன் சொல்லும் போது கூட, அவர் அவனிடம் அமைதியாக உரையாடிக் கொண்டிருந்தார்.  
வீட்டில்  கிடைக்காத உறவின் உரையாடல்கள் அவருக்கு அந்த கள்ளனிடம் கிடைத்தது. அதனாலோ என்னவோ அவன் விடைபெறும் முன், 'அடிக்கடி வீட்டிற்கு வாடே' என்று சொல்லி அனுப்பினார். 

அன்புடன்,
பிரவின்
தர்மபுரி 

No comments:

Post a Comment