Tuesday, 21 May 2024

அன்றில் பயணம்

சா. பாலுசாமி அவர்கள் எழுதிய "நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்" புத்தகத்தில் வரும் நெல்லையைச் சுற்றியுள்ள கோவில்களுக்கு செல்வது என்பது திட்டம். 

சனிக்கிழமை காலை நான்கு மணிக்கு தர்மபுரியில் இருந்து நெல்லை பயணம் ஆரம்பித்தோம். வழியில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவிலுக்குச் சென்று பார்த்துவிட்டு போகலாம் என்று முடிவு செய்தோம் .

கோவிலின் கோபுர சிற்பங்களை வழக்கம் போல் விதமிதமாக வண்ணம் பூசி வைத்திருந்தனர். கோவில்  வளாகத்தினுள் உள்ளே சென்றோம்.  முக மண்டபத்தில் ஆளுயர சிற்பங்கள் அணி ஒட்டிய ஸ்தம்பத்தில் வரிசையாக இருந்தன. மன்மதன் ரதியும் எதிரெதிர் ஸ்தம்பத்தில் செதுக்கப்பட்டிருந்தன. மன்மதன் கையில் இருக்கும் கரும்பின் கணுவினைக் கூட தத்ரூபமாக செதுக்கி இருந்தனர். நரசிம்மர் இரணியனை வதம் செய்வது மிகவும் உயிர் துடிப்பாக இருந்தது. இரணியனின் குடலை கையில் கொண்டு மிகுந்த ஆவேசத்துடன் நரசிம்மர்  இருந்தார். 





அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றோம். தாடிக்கொம்பு கோவிலில் பார்த்தது தான் பிரம்மாண்டம் என்று நினைத்தால்,  ஸ்ரீவில்லிபுத்தூர் முக மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் அதனை விட பிரம்மாண்டமாய், தத்ரூபமாய் இருந்தன. உள்ளே சென்றவுடன் யாளிகளின் பிரம்மாண்ட அணிவரிசை நம்மை வரவேற்கும். அங்கிருந்து உள்ளே முக மண்டபத்தில் அர்ஜுனன் - கூரிய தாடியுடன், கர்ணன் - கையில் நாக பாசனத்துடன், வீரபத்திரர் பல்வேறு நிலைகளில் காட்சியளிக்கின்றனர். இங்கும் மன்மதன் சிலையும், எதிரில் அன்னத்தில் ரதியின் அழகிய சிலையும் உள்ளது.  ஆண்டாளை தரிசித்து விட்டு உட்பிரகார சுற்றில் எழுதி வைத்துள்ள ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை பார்த்துக் கொண்டு வந்தோம். ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.




வெளியில் வந்து நுங்கும் தெளுவும் வாங்கிக் குடித்துவிட்டு (சக்கரை கலப்படம்), பால்கோவாக்களை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு சென்றோம். அங்கிருந்து கழுகுமலை செல்ல புறப்பட்டோம். செல்லும் வழியில் சங்கரன் கோவில் என்ற இடத்தில் சாப்பிடலாம் என்று உணவகம் தேடிக் கொண்டிருந்தோம்.  அங்கிருந்த அண்ணாமலையார் ஹோட்டலில் ஆளுக்கொரு சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். சாப்பாட்டிற்கு அவியல், பொரியல், கூட்டு என்று மூன்று வகையாக வைத்திருந்தனர். நான் இங்கு தான் முதல் முதலாக அவியல் சாப்பிடுகிறேன் (அல்லது இது தான் அவியல் என்று தெரிந்து சாப்பிடுகிறேன்). உணவு மிகவும் சுவையாக இருந்தது. அவியல் காரமில்லாமல் நன்றாக இருந்தது. சாப்பிட்டு விட்டு கழுகுமலைக்கு கிளம்பினோம்.

கழுகுமலை தூத்துக்குடியில் உள்ள ஊராகும். அங்கு முடிவு பெறாத ஒரு குடைவரைக் கோவிலும், ஒரு சமணப்பள்ளியும் உள்ளது. கீழே ஒரு குளம் உள்ளது. அங்கு ஒரு நீர்காகம் றெக்கைகளை விரித்து வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். நாங்கள் மேலே ஏறி சென்றோம். இடது புறம் உள்ள குடைவரை கோவிலுக்கு முதலில் சென்றோம். மேலிருந்து அதன் அமைப்பை பார்த்தோம். கோவில் விமானத்தில் வீணாதார சிவனின் சிற்பம் உள்ளது. எல்லோராவில் இருக்கும் கைலாச நாதர் கோவிலின் உருவ ஒற்றுமை கொண்டது இக்கோவில். கீழே இறங்கி கோவிலை சுற்றி பார்த்தோம். இங்குள்ள கற்களின் அமைப்பால் இக்கோவிலை பாதியில் நிறுத்தி விட்டார்களோ என்று தோன்றியது. அங்கங்கே சிலைகள் விரிசல் கொண்டிருந்தன. 





அங்கிருந்து வலது புறம் சென்று சமணப் பள்ளியினை பார்த்தோம்.  பார்சவநாதரும், பாகுபலி கோமதீஸ்வரரும் சிற்பங்களாக இருந்தனர்.


அங்கிருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டோம். காற்றாடிகள்  தோன்ற ஆரம்பித்தது. செல்லும் வழியில் அன்றில் பறவைகளை பார்த்தோம். நகரத்தை நெருங்க சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. நயினார் குளத்தில் பறவைகள் இருந்தன. ஒரு காலத்தில் நெல்லை கோவிலின் ஒரு முன் மண்டபமாக இருந்திருக்கும் ஒரு மண்டபத்தின் ஊடாக சாலை இருந்தது. கோவில் எதிரிலேயே உள்ள இருட்டுக் கடை அல்வாவிற்கு மக்கள் அலை மோதிக்கொண்டிருந்தனர். அங்கு பண ஸ்கேன் வசதி இல்லை. கையில் பணம் மட்டுமே கொடுக்க வேண்டும். 





நெல்லையப்பர் கோவிலை சுற்றி அனைத்து பெரிய கடைகளும் உள்ளதால் கோவிலுக்கு வருபவர்களை விட, ஷாப்பிங் செய்ய வருபவர்களே அதிகம் என்று நினைக்கிறேன். நெல்லையப்பரைப் பார்த்து விட்டு ஷாப்பிங் செய்து செல்பவர்களும் உண்டு. தெருக்களும் அகலமானதாக இல்லாததால், ஷாப்பிங் செய்ய வருபவர்களின் வாகனங்கள் தெருக்களை அடைத்து கொண்டு, செல்லும் வழி குறுகியதாக உள்ளது. ஆனால் காவல் துறை வாகனம் ரோந்து வந்துகொண்டே தான் இருக்கிறது.

மாலை ஆறு மணியளவில் காரினை நயினார் குளம் ஓரம் உள்ள இடத்தினில் பார்க் செய்து விட்டு நடந்து வந்தோம். நெல்லையப்பர் கோவிலுக்குள் செல்லும் முன் மண்டபத்தின் மேற்கூரையில் இருபக்கமும் மரத்தாலான ஆண் - பெண் காமத்தில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. உள்ளே செல்பவர்கள் மேலே பார்த்தால் நன்றாக தெரியும். உள்ளே முக மண்டபத்தில் இடது புறம் உள்ள தூண்களில் ஆளுயர சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வீரபத்திரர் சிலைகள், கர்ணன், அர்ஜுனன், மன்மதன், ரதி ஆகிய சிலைகள் தென் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் உள்ளது. இவற்றில் சில சிலைகள் நெல்லையப்பர் கோவிலிலும் உள்ளது.



இரவு நெருங்கியதால் நாளை காலை வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பிவிட்டோம். செல்லும் வழியில் இருட்டு கடை அல்வாக்களை வீட்டுக்கு வாங்கிக் கொண்டோம். அங்கு வாழை இலையில் சுற்றி அல்வா விற்கிறார்கள். ஒரு இலை இருபத்தி ஐந்து ருபாய். வாங்கி சாப்பிட்டு விட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு பாக்கெட்களில் அல்வா வாங்கிக் கொண்டோம். பணம் கொடுத்து, கேட்ட அடுத்த நொடியில் பில் தயாராகிறது, அடுத்த நொடியில், உங்கள் கையில் நீங்கள் கேட்ட அல்வா பாக்கெட்டுகள் இருக்கும். யார் பணம் வாங்கி, எப்படி பில் அடித்து, அதற்குள் எப்படி பாக்கெட்டுகளை உங்கள் கையில் யார் கொடுத்தார்கள் என்று யோசிப்பதர்க்குள் பின்னாலிருந்து உங்களை தள்ளி அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள். மின்னல் பொழுதில் ஒரு வியாபாரத்தினை முடித்து விடுகிறார்கள். 

இந்த பயணம் முழுக்க நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளில், சாலை ஓரங்களில் உள்ள வயல்களில் அன்றில்களை அடிக்கடி கண்டோம். அன்றில் என்கிற அரிவாள் மூக்கன் பறவையினை முதன் முதலில் அங்கு தான் பார்த்தேன். அது செங்கொண்டையும், கருப்பு  உடலும் , நீண்ட அலகும் கொண்டது.காரினை நிறுத்தி , பைனாகுலரில்  அதனை பார்த்து கொண்டிருப்போம். தனது நீண்ட அரிவால் போன்ற அலகினால் இறை தேடி தின்று கொண்டிருக்கும். 



இரவு உணவு தேடி பாளையங்கோட்டை அருகே சுற்றிக் கொண்டிருந்தோம். அங்கு ஒரு சாலையில், நிறைய தள்ளு வண்டி கடைகள் இருந்தன. ஒவ்வொரு கடை சுற்றியும் மூன்று, நான்கு டேபிள்களை போட்டு சுற்றி அமர்ந்து மக்கள் கல்யாண பந்திகளில் இருப்பது போன்று சாப்பிட்டு கொண்டிருந்தனர். நாங்கள் பார்ஸல் கேட்டபோது, அங்கிருந்து சாப்பிடுபவர்களே நிறைய பேர் இருந்ததால் லேட்டாகும் என்று சொன்னார்கள். நாங்கள் அங்கிருந்து கிளம்பி ரூமிற்க்கு வந்தோம். இரவு பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தோம்.

நெல்லையப்பர் கோவிலுக்கு காலை ஏழு மணியளவில் மீண்டும் சென்றோம். உள்ளே பெரியதாக கூட்டம் இல்லை.சிற்பங்களை பார்த்துக் கொண்டு வந்தோம். குறத்தி தன் தோலின் மேல் ஒரு குழந்தைக்கு ஒரு பாத்திரத்தில் உணவு கொடுப்பதும் அக்குழந்தை அதனை எடுத்து சாப்பிடுவது போன்ற சிலை மிகவும் அற்புதமாக இருந்தது. தெற்கில் உள்ள கோவில்களில் மிகவும் முக்கியமானது அதன் பிரம்மாண்டம். சிலைகளின் அளவிலும், தூண்களின் எண்ணிக்கையிலும், அளவிலும், மண்டபத்தின் சுற்று அளவிலும் அனைத்தும் பெரிதாகவும், பிரம்மாண்டமாகவும் உள்ளது. பெரும்பாலும் மண்டபத்தில் உள்ள சிலைகள் நாயக்கர் காலத்தில் செதுக்கப்பட்டவை. நாயக்கர்களின் பங்கு கோவில்களுக்கு பிரம்மாண்டத்தை கொடுத்தது. அதுவரை நுணுக்கமாக, அளவில் சிறியதான இருந்த சிலைகள், நாயக்கர்கள் காலத்தில் பெரியனவாகவும், மேலும் நுணுக்கமாகவும் மாறின. மண்டப தூண்கள் பிரம்மாண்டமானது.

காந்திமதி அம்மையார் கோவிலுக்கு உள்சுற்று வளாகத்தில் இடதுப்புறமாக செல்ல வேண்டும். பிரகார சுற்று வழியில் நாயக்கர்களின் ஆளுயர உருவ சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இடது புறமாக சென்றால், பெரும் சிலைகள் கொண்ட மண்டபம் உள்ளது. இதில் குரங்கு தன் குட்டியை பிடித்துக்கொண்டிருப்பது போன்ற சிற்பம் உள்ளது. சிற்பங்களை பார்த்துக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது வசந்த மண்டபத்திற்கு செல்லும் வழி என்று வலது புறமாக போடப்பட்டிருந்தது. ஆனால் அதனை பூட்டி வைத்திருந்தனர். உள்ளே சென்று காந்திமதி அம்மையாரை தரிசனம் செய்து முடித்து விட்டு வரும் போது, அந்த மண்டப கதவு திறந்திருந்தது. 

வசந்த மண்டபத்திற்கு செல்லும் வழியில் தென்னை மரங்களும் பிற மரங்களும் இருந்தன. ஒரு சிறு மண்டபத்தின் மேலே ஒரு அய்யர் தனது துவைத்த துணிகளை பிழிந்து போட்டுக்கொண்டிருந்தார். அங்கே நீச்சல் குளம் போல் ஒரு புதிய அமைப்பு இருந்தது. ஆனால் அது என்ன என்று தெரியவில்லை. அங்கு ஒருபெயர் தெரியாத பறவையினை கண்டோம். வசந்த மண்டபம் சற்று பழுதடைந்து காணப்பட்டது. அதனால் தான் அங்கு யாரையும் விடுவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அக்காலத்தில் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கும் இசைக் கச்சேரிகளையும், நடன நிகழ்வுகளையும் கற்பனை செய்து பார்த்தேன். பிரகார மண்டபத்தில்  சிலையாக நிற்கும் நாயக்கர்களின் முன்னிலையில், சிற்பமாக நிற்கும் பெண்களின் நடனங்கள் அரங்கேறி இருக்கலாம். 

நெல்லையப்பர் கோவிலை முடித்துக் கொண்டு கிருஷ்ணாபுரத்தில் உள்ள வேங்கடசாமி கோவிலுக்கு சென்றோம். அரச மரத்தடியில் காரினை நிறுத்திவிட்டு கோவிலுக்கு உள்ளே சென்றோம். இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. முக மண்டபத்தில் வலது புறத்தில் உள்ள சிலைகள் உள்ள தூண்களில் ஒவ்வொன்றிலும் ஒரு காட்சி முழுமையாக செதுக்கப்பட்டிருக்கும். குறவன் இளவரசியை கடத்திக்கொண்டு போவதும், இளவரிசியை மீட்க பின்னால் குதிரையில் அரசன் வருவதும் என்று ஒரு தூணை சுற்றிலும் சிலைகள் உள்ளது. இது போன்று ஒரு குறத்தி இளவரசனை கடத்துவது போன்ற சிற்பமும் உள்ளது. உள் மண்டபத்தில் பீமன் இன்னொருவரோடு கதை யுத்தம் செய்யும் காட்சியும், தர்மனின் சிலையும் உள்ளது. 



அங்கிருந்து திருவாலீஸ்வரசும் மற்றும் திருப்புடைமருதூர் கோவிலுக்கு செல்லலாம் என்று கிளம்பினோம். இரண்டு கோவில்களும் மாலை 4 30 மணிக்கு தான் திறக்கும் என்று சொல்லி விட்டார்கள். திருப்புடைமருதூர் நெருங்கிய உடனே, பெரிய மரங்களில் நிறைய பறவைகளின் சத்தம் எங்களை வரவேற்றது. கோவிலுக்கு எதிரிலேயே காரினை நிறுத்தி விட்டு, பறவைகளை பைனாகுலரில் பார்த்தோம். கூழைக்கடா மற்றும் மஞ்சள் மூக்கு நாரைகள் தான் அதிகமாக இருந்தன. அவைகள் மரத்தினால் கூடு கட்டி குஞ்சி பொரித்து, அந்த குஞ்சிகளையும் கண்டோம். அவை வெள்ளை நிறமாக இருந்தன. 





கோவிலுக்கு அருகிலேயே இரண்டு படித்துறைகள் இருந்தன. இரண்டிலும் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் நாங்கள் ஒரு குளியலை போட்டோம். இடுப்பளவு கூட தண்ணீர் இல்லை. ஆனால் ஓடும் தண்ணீர் என்றதால் குளிப்பதற்கு நன்றாக இருந்தது. நடு ஆற்றில் மீன் கிள்ளல்களினால் அவ்வப்பொழுது துள்ளி குதித்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்தோம். 

மதியம் பிரம்மதேசத்தில் சாப்பிட்டுவிட்டு அகஸ்தியர் அருவிக்கு சென்றோம். நாங்கள் செல்லும் போது, கூட்டம் குறைய தொடங்கியது. ஆனாலும் மேலே அருவியில் குளிப்பதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் முண்டியடித்துக் கொண்டு குளித்து கொண்டிருந்தனர். பெண்களுக்கு தனியாக குளிப்பதற்கு  நடுவில் ஒரு சுவர் எழுப்பி இருந்தனர்.  மக்கள் கத்திக்கொண்டும், ஆடிக்கொண்டும் குளித்து கொண்டிருந்தனர். சிறுவரும் பெரியவர்களும் தள்ளிக்கொண்டு குளித்துக் கொண்டிருந்தனர்.

நாங்கள் குளிக்க உள்ளே சென்றோம். உள்ளே செல்வதற்கு இரண்டு ஆள் சாப்பாடு சாப்பிடணும். கொஞ்சம் கவனமாக இல்லாமல் இருந்தால் கூட, காலினை மீதிப்பதோ அல்லது தள்ளி விட்டோ  மற்றவர்கள் உள்ளே புகுந்து விடுவார்கள். அதனால் மிகவும் கவனமாக உள்ளே சென்று , திரும்பவும் வெளியே வந்து என்று மாறி மாறி ஒரு மணி நேரத்துக்கு மேலாக குளித்தோம். நீரின் சுவை தித்திப்பாக இருந்தது.

இது ஒரு கோவில் பயணம் என்பதை விட, பறவைகள் பயணம் என்றே சொல்லலாம். நெல்லையை சுற்றியுள்ள குளம், ஏரிகளில் இதுவரை நாங்கள் பார்த்திராத  நிறைய பறவைகளை கண்டோம். அன்றில் என்கிற அரிவாள் மூக்கன், தாழைக்கோழி, கூழைக்கடா, பாம்புத்தாரா, மஞ்சள் மூக்கு நாரை போன்ற பறவைகளை கண்டோம். எங்கெங்கு நீர் நிலைகள் இருக்கிறதோ அங்கே காரினை நிறுத்தி, பறவைகளை பார்ப்போம்.







Tuesday, 2 January 2024

கிளிக்கோயில்

                                                             

கோபுரத்தை பார்த்தவுடன் கண்ணில் பட்டது கிளிகள் தான். என்னடா இந்த கோபுரத்தில் இவ்வளவு கிளிகள் உள்ளது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஐந்து அடுக்கு மாடம் கொண்ட கோபுரமாக இருந்தது. உள்ளே நுழையும் போதே கோவிலின் உள்ளே மரத்தில் கிளிகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு கிளிக் கூட்டமே அந்த கோபுரத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. சிற்பக் கிளிகளையும், பறக்கும் கிளைகளையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தேன்.



கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ளது சோமேஸ்வரர் கோவில். அதனுடைய கூகுள் இணைப்பு https://maps.app.goo.gl/jfkYA1qqB2wAbSCy6. சோழர்களால் முதலில் கட்டப்பெற்ற இக்கோவில் பின்பு விஜயநகர அரசர்களால் விரிவாக்கம் செய்யப்பெற்றது. கிழக்கு நோக்கி உள்ளது இக்கோவில். சிற்பக்கலையில் விஜயநகர அரசர்களின் பெரும் பங்கு என்று கூறப்படுவது, அவர்கள் காலத்தில் தான் கோவிலினுள் அம்மனுக்கென்று தனி சந்நிதியும் (பிரதான கடவுளின் துணைத் தெய்வமாகவே எழுப்பப்படும். கருவறைக்கு வலது புறத்தில் இருக்கும் ), கல்யாண மண்டபமும் (கோவிலின் தென் மேற்கில்) வடிக்கப்பட்டது.  

கோவில் கோபுரங்களில் கிளிகளின் சிற்பங்களை காணலாம். கோவிலின் முக மண்டபத்தின் எதிரில் நந்தி உள்ளது. முக மண்டபத்தின் தூண்களில் உள்ள சிற்பங்கள் வெயிலில் பட்டு பொன்னால் செய்யப்பட்டவை போல காட்சியளித்தன. பொன் நகரத்தில் ஒரு பொற் கோவில். 



முக மண்டபத்தின் நுழைவாயிலிலும், உள்ளே செல்லும் வழியிலும்,  முக மண்டபத்தின் சுற்று தூண்களிலும்  அணி ஒட்டிய ஸ்தம்பம் முறையில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் புராணக் காட்சிகளும், மிதுன சிற்பங்களும், கடவுளர்களும், போர் காட்சிகளும், முனிவர்களும், பாம்பாட்டி சிற்பம் போன்ற வட்டார நாட்டார் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.  பொதுவாக நாங்கள் கோவில்களுக்கு சிற்பங்களை காண செல்லும் போது, இந்த கோவிலில் ஏதேனும் புதுமையான சிற்பம் உள்ளதா என்று பார்ப்போம். அது நாங்கள் இது வரை வேறு எந்த கோவிலிலும் பார்க்காத சிற்பமாக இருக்கலாம். அப்படி என் கண்ணில் புதுமையாக பட்டவை.

    1. சிங்கம் ஒரு போர் வீரனை முழுவதுமாக தலையை கடிப்பது.

    2. வேட்டுவன் ஒரு விலங்கினை தோல் மேல் வைத்திருக்கும் சிற்பம்.  

    3. இரண்டு குரங்குகள் ஒன்றை ஒன்று தலை கீழாக பிடித்து நடனம் ஆடுவது போன்ற சிற்பம்



முக மண்டபத்தின் உள்ளே அர்த்த மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் கார்த்திகேயரின் சிற்பம் மிகவும் அற்புதமாக உள்ளது.



பிரதான கோவிலின் வெளியே கருவறைக்கு வடக்கே, பார்வதி மண்டபம் உள்ளது. இங்கிருக்கும் அர்த்த மண்டப நுழைவாயிலிலும், உள்ளேயும் தூண்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. 

இக்கோவிலின் தனி சிறப்பே தென் மேற்கு பகுதியில் உள்ள கல்யாண மண்டபமாகும். அதனை சுற்றி உள்ளே போக கூடாதென்று கயிறு கட்டி வைத்திருந்தனர். வெளியில் நின்று மட்டுமே பார்க்க முடிந்தது. மண்டபத்தின் சுற்றுப்புற தூண்களில் சிற்பங்கள் உள்ளது. ஆனால் நம்மை ஆட்கொள்ள வைப்பது உள்ளே க்ரானைட் கரற்களால் செதுக்கப்பட்ட உள் மண்டபமாகும். ஒரு இடத்தில கூட சிற்பியின் உளி படாத இடமே இருக்காது. அனைத்தும் சிற்பமே. மிகவும் நுண்ணிய அளவு சிற்பங்கள் முழுமையாகவே உள்ளன. மூன்று  cmக்கும் குறைவாக கொண்ட முழு யானை சிற்பத்தை பார்க்க முடியும். திடீரென்று பார்த்தால் ஒரு நகை கடையில் உள்ளோமோ என்றே தோன்ற வைக்கும் அளவுக்கு அவ்வளவு நுண் வேலைப்பாடுகளுடன் சிற்பங்கள் உள்ளன. உள் மண்டபத்தின் மேல் வரிகளில் ஒன்றில்  நான்கு பக்கமும் வரிசையாக கிளிகள் உள்ளன. நான்கு பக்கமும் அணி ஒட்டிய தூண்களுடன், அலங்கார போத்திகை உள்ளது. தூண்களில் சிற்பங்களில் கூட கூர்ந்து பார்த்தால் நிறைய இடத்தில கிளிகள் செதுக்கப்பட்டுள்ளது தெரியும். 





பிரதான கருவறையின் விமானத்தில் தெற்குப்புறமும், மேற்குப்புறமும் பிச்சாடனர், விஷ்ணு, சூரியன் ஆகிய சிற்பங்கள் உள்ளது. வெயிலில் பட்டு இவை போன் நிறத்தில் காட்சியளித்தன. வடக்கில் மூன்று இடங்களிலும் பிரம்மா செதுக்கப்பட்டுள்ளது.

உள்ளே முக மண்டபத்தின் உயரிய மேடைகளில் சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தோம். சிற்பங்களை அமர்ந்து பொறுமையாக பார்ப்பதுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே இரண்டு குரங்குகள் தலை கீழாக பிடித்து விளையாடிகே கொண்டிருந்தன. 

கோவிலினை சுற்றி இருக்கும் ஆதிஷ்டானத்தின் குமுதப் பகுதியில், யானைகளின் வரிசையும், பூத கணங்கழும், சிங்கமும் செதுக்கப்பட்டுள்ளது.

 



Tuesday, 14 November 2023

மல்லச்சந்திரம் கற்திட்டைகள்


கிருஷ்ணகிரி அருகில் உள்ள Dolmens என்கிற கற்திட்டைகள் பற்றிய யூடியூப் காணொளி இணைப்பை  நண்பர்  ஜெயவேல் அனுப்பினார். தீபாவளியன்று அங்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.  தீபாவளி அன்று செல்ல முடியாததால் அடுத்த நாள் செல்வதாக திட்டம். காலை பதினோரு மணியளவில் நண்பர்கள் அரூரிலிருந்து காரில் வந்தனர். நான் தர்மபுரியில் ஏறிக்கொண்டேன். 

கற்திட்டைகளை நான் முன்பு எப்போதும் பார்த்தது இல்லை. அல்லது பார்த்திருந்தாலும் அது தான் கல்திட்டை என்று தெரிந்திருக்காது. கூகுளில் அதைப்பற்றி சிறிது படித்தேன். 

கல்திட்டை என்பது மூன்று அல்லது நான்கு செங்குத்தான கற்களை வைத்து அதன் மேல் ஒரு பெரிய கற்பலகை கொண்ட அமைப்பாகும. இது எதற்காக அமைக்கப்பட்டது என்று இன்றுவரை அறுதியிட்டு கூறமுடியவில்லை. பொதுவாக ஏற்கப்பட்ட ஒரு காரணம், இது இறந்தவர்களின் நினைவு சின்னங்கள் என்பது தான். இந்த அமைப்பு வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்தது. கிருஷ்ணகிரியில் காணப்பட்ட அதே போன்ற அமைப்பு ருசியாவிலும் உள்ளது. உலகம் முழுக்கவே இந்த கற்திட்டைகள் ஐரோப்பா முதல் கொரியா வரை பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் ஒரே அமைப்பு கொண்டே அனைத்து  இடங்களிலும் உள்ளது. கொரியாவில் தான் உலகத்தில் இருக்கும் கற்திட்டைகளில் 50 சதவீதம் உள்ளது.

தர்மபுரியிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் கிருஷ்ணகிரி - ஓசூர் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மல்லச்சந்திரம் என்ற ஊரில் இவை உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து செல்லும் போது 15km தொலைவில் நெடுஞ்சாலையிலிருந்து வலதுபுரம் திரும்பி ஒரு 2 km செல்ல வேண்டும். கூகுள் மேப்பில் "Mallachandram Dolmens" என்று பதிவிட்டால் அது நேராக இந்த இடத்திற்கு கொண்டு செல்லும். (https://maps.app.goo.gl/Qk9V54Qv1FXyau4R6) 

இந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் ஒரு ஆட்டு கொட்டகையினில் இருந்த ஒரு பாட்டியிடம் "இங்க கல்திட்டைங்க பாக்குறதுக்கு  எப்படி போனும்" என்று வழி கேட்டோம். எனக்கு அந்த பாட்டிக்கு அது பற்றி தெரிந்திருக்காது என்று நினைத்தேன். ஏனென்றால் பெரும்பாலும் இந்தியாவில் பக்கத்தில் இருக்கும் வரலாறு/பண்பாடு சார்ந்த இடத்தைப் பற்றி அருகில் வசிப்பவர்களுக்கு தெரிந்திருக்காது. ஒரு கர்நாடக பதிவு எண் கொண்ட காரும் அங்கு நின்றிருந்தது. அந்த பாட்டி "மேல மாடு கட்டி வெச்சிருக்க வழியா நேரா நடந்து போங்க. இப்பதான் ரெண்டு பேர் ஒரு ஆம்பளையும், பொம்பளையும் போனாங்க, வழி நல்லா போது போங்க" என்று சொன்னார்.

நாங்கள் பாட்டி சொன்ன வழியிலேயே ஒற்றையடி பாதையில் நடக்க ஆரம்பித்தோம். ஒற்றையடி பாதை பெரும்பாலும் சமதளமாகவே இருந்தது. ஒரு பெரிய புற்று இடது புறத்தில் இருந்தது. உனிமுள் செடிகள் பாதையில் ஆங்காங்கே நீண்டு கொண்டு இருந்தது. கீழே இருந்து ஒரு கம்பை எடுத்து கொண்டேன். செடிகளை கம்பால் விலகி நடந்து சென்றோம்.

10 நிமிடத்தில் ஒரு இடத்தில் பாதை வலது புறத்தில் பிரிந்தது. ஆனால் அந்த பாதை நேராக செல்லும் பாதையை விட அதிகம் பயன்படுத்தபட்டது போலில்லாமல் இருந்ததால் நாங்கள் நேராக சென்றோம். இன்னொரு 10 நிமிட நடைக்கு பின்னர் ஒரு வெட்ட வெளி வந்தது. அதிலிருந்து செல்லும் பாதை ஆடு மட்டுமே செல்லும் அளவுக்கு குறுகி இருந்ததால், மீண்டும் வந்த வழியாகவே வந்து அந்த வலதுபுற பிரிவில் நின்றோம். அங்கு பாதை பிரியும் இடத்தில் ஒரு புங்க மரத்தில் அந்த இடத்தின் "அச்சுத்தூரங்கள்" (அட்சரேகை, தீர்க்கரேகை அளவுகள்) சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. யாரோ ஒரு நல்லுள்ளம் கற்திட்டைகள் செல்லும் வழி காட்ட அதை எழுதி இருக்கிறார். அப்பொழுது ஒரு ஆணும், பெண்ணும் பேசும் குரல் கேட்டது. 

கீழே நின்றிருந்த காரில் வந்தவர்கள் கற்திட்டைகளை பார்த்துவிட்டு கீழிறங்கி வந்து கொண்டிருந்தனர். 45 வயது மதிக்கத்தக்க ஆணும், அவரின் மனைவியும்,  13-14 வயதான பெண்ணும், பையனும் இறங்கி வந்து கொண்டிருந்தனர். வட நாட்டு குடும்பம் போல இருந்தது. கொஞ்சம் ஆச்சரியமாகவும்  இருந்தது. அந்த பெண் 'மேலே சென்றால் இரண்டு இடங்களில் கற்திட்டைகள் உள்ளது என்றும். ஒன்று வலது புறம், மற்றொன்று இடது புறம்'  என்றும் கூறினார். நாங்கள் நன்றி சொல்லிவிட்டு மேலே ஏறினோம். ஒரு 50 அடிக்குள்ளாகவே ஒரு பெரும் பாறை மேலிருந்து சரிந்திறங்கியது. அடி பாறையிலிருந்து மேலேறினோம். 

கொஞ்ச தொலைவிலேயே காலுக்கு கீழே பாறையில் அதே சிவப்பு மையில் வழிகாட்டப்பட்டிருந்தது. நாங்கள் அதை பின்பற்றி இடப்பக்க கற் திட்டைகளை நோக்கி சென்றோம். முதலில் பார்ப்பதற்கு ஒரு நான்கு கற்களை மட்டும் அடுக்கி மேலே ஒரு பெரிய கல்லை வைத்து மூடியது போல் இருந்தது. ஒவ்வொரு கற்திட்டைகளாக பார்த்து கொண்டே சென்றோம்.



சிறியதாகவும், பெரியதாகவும் நிறைய இருந்தன. அனைத்திலும், வடக்கு பக்கம் உள்ள செங்குத்தான கல்லின் நடுவில் ஒரு பெரிய வட்ட வடிவ ஓட்டை இருந்தது. அங்கிருந்த அனைத்து கல் திட்டையிலும் அதே போன்று வட்ட வடிவில் ஒரு துளை இருந்தது. ஒரு மனித தலை மட்டும் உள்ளே போகும் அளவிற்கு இருந்தது அந்த துளை. அது எதற்காக என்று சொல்ல முடியவில்லை. உள்ளே இறந்தவர்களை இருத்திவிட்டு நான்கு பக்கமும் செங்குத்தான கற்களை நட்டு வைத்து, மேலே ஒரு பெரிய கல்லை மூடிவிட்டு, ஏன் ஒரு பக்க கல்லில் மட்டும் ஓட்டை போட வேண்டும். அதுவும் வடக்கு நோக்கி இருக்கும் கல்லில் மட்டும். சிறு குழந்தை எட்டி பார்க்கும் அளவு உயரத்தில் அந்த துளை உள்ளது. விலங்குகள் உள்ளே செல்லாமல் இருப்பதர்காகவா? 

ஒரு சில கற்திட்டைகள் காலத்தால் அப்படியே இறங்கி, கீழிருந்த கற்கள் உடைந்து, மேலே உள்ள கல் அப்படியே இறங்கி இருந்தது. இந்த கற்திட்டை குவியல்களின் நடுவே, ஒரு பெரிய கற்திட்டை இருந்தது. அதுவே அந்த கற்திட்டை குழுவில் அளவில் பெரியது. அதனை சுற்றி வட்ட வடிவில், அளவில் இரண்டு அல்லது மூன்று மடங்கு உயரமுள்ள பெரும் கற்களை செங்குத்தாக நிறுத்தி இருந்தது. அந்த உயரமான கல் வளையங்களை சுற்றி இன்னொரு சுற்று சிறிய அளவிலான  செங்குத்தான கற்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் நின்று சுற்றி பார்த்தால், பெரும்பாலும் அனைத்து கற்திட்டைகளிலும் இந்த மூன்று சுற்று அடுக்கு உள்ளது. பல அதில் சிதைத்திருந்தது.

இந்த மூன்று சுற்று அமைப்பை பார்ப்பதற்கு ஒரு காம்பௌண்ட் கட்டிய மாளிகையின் டெம்ப்லேட் போல நினைத்து கொண்டேன். இன்றைய நவீன கட்டிடக் கலையின் முன்னோடி என்று ஒரு வகையில் சொல்லலாம். இந்த கற்திட்டைகள் யாரால், எதற்காக எப்போது அமைக்கப்பட்டது என்று சொல்லிவிட முடையது. சிலர் இதை 5000 வருடத்திற்கும் முன்பிருந்தே இருக்கலாம் என்றும், சிலர் 3000 வருடம் முன்பிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். 

அந்த ஆதி மனிதனின் எண்ணங்களை நம் கற்பனை கொண்டு மட்டுமே நிரப்ப முடியும். அப்படி நிரப்புவதும் நம் அறிவை நிறைத்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். வட்ட வடிவ துளைகளை தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு முழுநிலவைப் போலவே இருக்கும். ஏன் வட்டத்தினை அமைத்தார்கள். ஒரு செவ்வகமோ, சதுரமோ கூட அமைத்திருக்கலாம். வட்டம் தான் பார்ப்பதற்கு அழகாக இருந்தனவோ? அப்படியென்றால் மனிதனின் அழகியல் உணர்வு அங்கிருந்தே தொடங்கி விட்டதோ? ஒரு செவ்வக கல்லில் நடுவில் வட்டம்! அல்லது இது வேறு ஏதாவது குறியீடாகவும் இருக்கலாம்.

இந்த வட்ட துளை உள்ள கல் தான் வாசல் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு கற்திட்டையில் வாசலுக்கு முன் இரு கற்கள் 'போர்டிகோ' தூண்கள் போன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்றுள்ளவற்றை வைத்து மட்டும்தானே நாம் பழையவற்றை அறிய முடியும்.  இந்த வாசல் வடக்கு நோக்கி மட்டும் தான் எல்லா கற்திட்டைகளிலும் இருந்தது. இதிலிருந்து தான் "வடக்கிருத்தல்"  (வட திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பது) என்பது கூட வந்திருக்கலாம்.  பண்பாட்டு வேர்களை நாம் அவ்வளவு அறுதியிட்டு கைகளில் பற்றி  விட முடியாது. 

என் மனைவியிடம் பிற்பாடு இதை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது "அது ஒரு வேளை வயதானவர்கள், நோய் கொண்டவர்களை உள்ளே விட்டு உணவு அளிக்கும் துளையாக கூட இருக்கலாம்" என்று சொன்னார். 

அங்கிருந்து எதிரில் உள்ள இன்னொரு கற்திட்டை குவியலைக் கண்டோம். இங்கிருந்து அங்கு பார்ப்பதற்கு அது வெறும் கற்குவியலாகவே இருந்தது. அருகில் சென்று பார்த்தோம். முதலில் பார்த்தவற்றிற்கு தென் திசையில் இது உள்ளது. இங்கு பல கற்திட்டைகள் நொறுங்கி இருந்தன. எஞ்சியவை மிகக்குறைவாகவே இருந்தன. இங்கும் நடுவில் ஒரு பெரிய கற்திட்டை. அதனை சுற்றி உயரமான செங்குத்தான வட்டச்சுற்று. அதற்கு வெளிப்புறம் உயரத்தில் சிறியதான ஒரு கற்சுற்று. ஒவ்வொரு குழுவிலும் இது போன்ற நடுவில் இருக்கும் பெரிய கற்திட்டை அந்த குழு தலைவனுடையதாக இருக்கலாம். 

தெற்கு மூலையில் ஒரு சிறிய கற்திட்டையினிலுள்ளே இரண்டு ஓவியங்கள் இருந்தன. ஒன்று புலி போன்ற ஒரு உருவம், அதன் மேலே குச்சி போன்ற மனித உருவம் நின்றிருப்பது போல இருந்தது. இன்னொரு ஓவியம் என்னவென்று தெரியவில்லை. ஒரு மரவட்டை போல ஒரு உருவத்தின் மேல் குச்சி போன்ற ஒரு மனிதன் சவாரி செய்வது போல் இருந்தது. அது என்ன விலங்கு என்றே தெரியவில்லை. எதற்காக இதனை வரைந்தான் என்றும் தெரியவில்லை. இரண்டு உருவங்களும் நேர் நேர் நின்று இருப்பது போல இருந்தது. ஓவியத்தில் பிரதானமாக தெரிந்தவை கோடுகள். சிறு சிறு கோடுகள் நன்றாகவே தெரிந்தன. புலியின் நகத்தில். மரவட்டையின் கால்களில். 



சிறிது நேரம் மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இதற்கு தென்புறமும் இன்னொரு கற்திட்டை குவியல் உள்ளது. அதன் நடுவில் அமைந்த கற்திட்டை தான் இருப்பதிலேயே சுற்று அளவில் பெரியது. ஆனால் அதன் சுற்று கற்கள் எல்லாம் விழுந்து விட்டன. அந்த அமைப்பும் நடுவில் உள்ள கற்திட்டையும் அப்படியே உள்ளது.

அங்கிருந்து கீழிறங்கும் வழியில் ஒரு பாம்பின் படிம அச்சு ஒரு பாறையின் மேல்  இருந்தது. ஒரு முள்ளம்பன்றி முள்ளை எடுத்து நண்பர் காட்டினார். கவுதாரி றெக்கையினை எடுத்து காண்பித்தார். அப்படியே கீழிறங்கி வந்தோம். மேலே செல்ல வழி சொன்ன பாட்டி உச்சி வெயிலில் ஆடுகளை ஓட்டிக்  கொண்டு மேய விட்டிருந்தார். 




சில ருஷ்ய கற்திட்டை யூடிடூப் காணொளிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். கிருஷ்ணகிரியில் இருப்பது போன்றே அதே மாதிரியான கற்திட்டைகள் அங்கேயும் உள்ளது. நடுவில் உள்ள அந்த துளையும் அப்படியே! இதைப் பற்றி வாசிக்க வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள மற்ற இது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். 



Tuesday, 5 September 2023

கோரை

கண்மணி குணசேகரன் அவர்களின் கோரை நாவல் வாசித்தேன். வாசிப்பின் இடைவெளியில் எங்கள் வயலுக்கு சென்று அங்கு இருக்கும் கோரைகளை நிண்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் கோரைக் கிழங்கினை வைத்துக் கொண்டு உத்தண்டியின் வாழ்க்கையை யோசித்துக் கொண்டிருந்தேன்.  சாதாரணமாகத்  தெரியும் ஒரு சிறு புல்வகை உத்தண்டி மற்றும் அவன் மனைவி மேல் செலுத்தும் தாக்கத்தையும் அதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு சிக்கல்களையும் சொல்வதாக அமைந்துள்ளது இந்நாவல்.

இங்கு கோரை என்பது ஒரு குறீயீடு தான் என்று நினைக்கிறேன். மனிதன் காடு திருத்தி வயலாக்கி, தன் நாடோடி குடித்தனத்தை ஒரு இடத்தில் அமைத்த பிறகு, உணவிற்கு மண்ணோடு போராடும்போது தான் அவன் மண்ணின் முழுமையான மகத்துவத்தை உணர்ந்திருப்பான் என்று நினைக்கிறேன். இதில் வரும் கோரை இயற்கையின், மண்ணின் குறீயீடே. மனிதனுக்கும் மண்ணிற்கும் நடக்கும் இடைவிடாத போராட்டத்தின் வெளிப்பாடு.

தான் புதிதாக வாங்கிய நிலத்தில் பன்றி எருவு வாங்கி கொட்டியதால், உத்தண்டியின் நிலம் பூராவும் கோரைகளாக முளைத்து விடுகிறது. மல்லாட்டை கொல்லையில் கோரை இருப்பதற்கு பதிலாக, கோரை கொல்லையில் மல்லாட்டை இருப்பதாக ஆகி விடுகிறது. கோரை முளைத்ததற்கு காரணம் புரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கும் போது, ஒரு கிழவர் அது பன்றி விட்டையிலிருந்து தான் வந்தது என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

உத்தண்டி, அவன் மனைவி பூரணி, பக்கத்துக்கு கொல்லைகாரன் சின்னச்சாமி, செட்டி, சக்கர என்று மிகவும் குறைந்த கதை மாந்தர்களோடு கட்டமைக்கபட்ட நாவல் இது. இவர்களுக்குள் பாலமாக இருப்பது உத்தண்டி வாங்கிய காலரைக் காணி நிலமும் அதில் முளைத்த கோரைகளும் தான்.

நாவலில் நிறைய வட தமிழ்நாட்டிற்குரிய வட்டார வழக்காடுகள் வருகிறது. கிராமத்தில் ஒருவன்  நிலம் வாங்கி விட்டால் மற்றவர்கள் அவன்மீது  கொள்ளும் பொறாமையும், புறம் பேசுதலும் உத்தண்டிக்கு அவன் காலரைக்காணி நிலம் வாங்கியபோது புரிந்தது.

உத்தண்டியின் பக்கத்து நிலத்துக்காரரான சின்னசாமி அவனின் நிலத்திற்கு தண்ணீர் விட்டு 

கொண்டிருந்தார். அதற்கு பலனாக உத்தண்டியிடம் பல வேலைகளை வாங்கிக் கொள்வார். பக்கத்து 

நிலத்துக்காரனின் நிலம் நாசமாக போவதை பார்க்கும் சந்தோஷத்தை சின்னசாமியிடம்  காணலாம். 

இது மனிதர்களுக்கே உரிய எளிய பண்பானாலும், கிராமத்தில் இதை மிக தெள்ளத் தெளிவாக பார்க்கலாம்.


 உத்தண்டி கோரையினை அழிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிவடையும். மனிதன் இயற்கைக்கு எதிராக செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றி அடைய இயற்கை மனது வைத்தால் தான் முடியும். ஒரு சிறு கோரையில் அவனின் மொத்த நேரமும் , உழைப்பும்  செலவாகிறது. இவ்வளவு நேர்த்தியாக புறவயமாக கோரைக்கும், உத்தண்டிக்கும் நடக்கும் போரினை, இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் உறவின் குறியீடாக எழுதி இருக்கிறார் கண்மணி அவர்கள்.


பக்கத்து வீட்டுக்காரன் புது நிலம் வாங்கி விட்டால், சாலை பிரித்து புது ஓட்டு வீடு கட்டி விட்டால், கிணற்றில் தண்ணீர் மேல் மட்டத்திற்கு வந்து விட்டால் , வெள்ளாமை நன்றாக விளைந்து விட்டால், வரப்பு அறை அடி உயர்ந்து விட்டால், பக்கத்தில் இருக்கும் புறம்போக்கினை கந்தாயம் கட்டி ஓட்டி விளைந்தால், பொதுவாக கிராமத்தில், இன்னொருவர் மீது இந்த பொறாமையும் புறம் பேசுதலும் இருக்கும். 


பூரணியை திருமணம் செய்த பிறகுதான் உத்தண்டிக்கு அந்த நிலம் வாங்கும் யோகம் அமைந்தது. 

அதனால் அவளும் இந்த நிலத்தை பற்றிய யோசனையாகவே இருப்பாள். முதலில் மிளகாய் நடுவதற்கு 

பதிலாக அவள் மல்லாட்டை போட சொன்னாள். ஆனால் பணம் இல்லாததால் மிளகாய் நட்டார்கள். 

அதற்கு உரம் போடுவதற்காகத்தான் பன்றி எருவை வாங்கி வந்து வைத்தான். அந்த எருவிலிருந்து 

கிளம்பிய கோரைதான் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் அல்லும் பகலும் நிரப்பிக் கொண்டது.


கோரைக்கு நிலத்தினை விட்டுவிட்டு மீண்டும் வயிற்று பிழைப்பிற்காக காடு வெட்டுவதும், முந்திரி 

காட்டில் பழம் பெருக்குவதுமாக உத்தண்டியும் பூரணியும் இருந்தனர். அவன் காடு வெட்ட செல்லும் 

போதெல்லாம், ஊரார் அவனுக்கு அது தான் உகந்த தொழில் என்றும், அவனுக்கு நிலம் எல்லாம் 

லாயக்கு படாது என்றும் சொல்லி அவர்களின் பொறாமையையும் , வயிற்றெரிச்சலையும் கொட்டினர். 

அந்த கோரையினை பார்க்காமல் அவன் பல தடவை தவிர்த்து வந்தாலும், திரும்பவும் அவன் சென்று அந்த நிலத்தை பார்க்கும் போது, நான் இங்கு தான் உள்ளேன் என்ற மாதிரி அது நன்றாக வளர்ந்து இருக்கும். 


நிலம் உள்ளவன் மேல் நிலம் இல்லாதவனுக்கு இருக்கும் பொறாமை தான் உண்மையான அடிமனதில் இருந்து எழும் பொறாமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மனிதனுக்கு நிலத்தின் மேல் இருக்கும் பற்று  இயற்கையாக ஒன்றாகும். ஏனென்றால் நிலம் தான் மனிதனுக்கு ஆதாரம். தன் காலடிக்கு கீழே உள்ள ஒரு அடியை தனக்கு சொந்தமென்று நினைப்பது நாகரிகத்தின் முதல் படியாக இருந்திருக்கும். மக்கள் குழுவாக, ஊராக இணைந்து வாழ அதுவே ஆதாரம். அந்த நிலம் உள்ளவன் மேல் இல்லாதவர் பொறாமை படுவது ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


கோரையைப் பற்றியே  எப்போதும் யோசித்து கொண்டிருக்கும் உத்தண்டி, பூரணியின் மேல் எதற்கெடுத்தாலும் எரிந்து விழ ஆரம்பிக்கிறான். அவன் தூக்கத்திலும், விழிப்பிலும் கோரையே இருப்பதால், அதனை அவனால் அழிக்க முடியாததால், தன்னுடைய இயலாமையை அவள் மேல் கோபமாக காட்டுகிறான். அவளும் அவனிடம் பெரிதாக நெருங்குவதில்லை. இருவருக்கும் இருக்கும் பிளவு, அடிக்கடி சண்டைகளாக மாறுகிறது. 


கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் பூரணி கர்ப்பமாகாததால் அவளின் அம்மாவும், அவனின் அக்காவும் இருவரையும் சென்று மருத்துவரை பார்க்கச் சொல்கிறார்கள். அவன் நிலத்திலோ கோரைகள் அழிக்க அழிக்க மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறது, அவனது வீட்டிலோ நேர்மாறாக இருப்பது ஒரு நகைமுரன்.  


கருவுற்ற சமயத்தில் துவரைக் குச்சிகளை வேரோடு பிடிங்கி போட்டதால், வேலை பழு காரணமாக அவளின் கரு களைந்து விடுகிறது. இரத்த வெள்ளத்தில் அவள் முடியாமல் விழுந்த போதிலும், அவள் அவனை தன்னை தூக்கக்கூட விடவில்லை. ஆனால் அவன் அதனை பொருட்படுத்தாமல் அவளை தூக்கி ஒரு சாக்கின் மேல் உட்கார வைக்கிறான். இது வேளாண் வேலை செய்யும் பெண்களின் தைரியமாகவும், அவர்கள் கடைபிடிக்கும் விடாப்பிடியான வறட்டு சடங்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.


செட்டி, பூரணியின் அப்பா- அம்மா,  அவனின் அக்கா என எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உத்தண்டிக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறார்கள். கோரையை அழிக்க உத்தண்டி பல்வேறு முயற்சிகள் செய்தும் அது திரும்ப திரும்ப வந்து கொண்டே தான் இருக்கிறது. இறுதியில் பன்றி  போட்ட விட்டையினால் விளைந்த கோரையினை பன்றிகளை வைத்தே நிண்ட வைத்து அழிக்க முயற்சி செய்து அதிலும் தோல்வி அடைகிறான் உத்தண்டி.


மண் நம் மீது செலுத்தும் எதிர்வினையே நாம் உணர்வாக மாற்றுகிறோம். மண் செழிப்பாக இருந்தால் நாம் மகிழ்வாக இருக்கிறோம். அதிலிருந்து பெருவதையே நாம் பெரும்பாலும் பிரதிபலிக்கிறோம். அதுவே நாமாக ஆகிறோம். அது நினைத்தால் ஒழிய நாம் அதன் மேல் எந்த ஒரு அதிகாரத்தையும் செலுத்த முடியாது. 


சிறு புல்லான கோரையை வைத்து, அதனால்  உத்தண்டி மற்றும் அவன் மனைவியின்  வாழ்கையில் 

நடக்கும் போராட்டத்தை புறவயமாக அவர்களின் வாழ்க்கை வழியாகவே ஒரு மிகப்பெரும் சித்திரத்தை அளித்திருக்கிறார் கண்மணி குணசேகரன் அவர்கள். மண்ணில் பிறந்து , மண்ணால் வளர்ந்து, 

மண்ணையே வாழ்வாக நினைத்து வாழும் வாழ்கையை நுட்பமாக எழுதி இருக்கிறார்.