கண்மணி குணசேகரன் அவர்களின் கோரை நாவல் வாசித்தேன். வாசிப்பின் இடைவெளியில் எங்கள் வயலுக்கு சென்று அங்கு இருக்கும் கோரைகளை நிண்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் கோரைக் கிழங்கினை வைத்துக் கொண்டு உத்தண்டியின் வாழ்க்கையை யோசித்துக் கொண்டிருந்தேன். சாதாரணமாகத் தெரியும் ஒரு சிறு புல்வகை உத்தண்டி மற்றும் அவன் மனைவி மேல் செலுத்தும் தாக்கத்தையும் அதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு சிக்கல்களையும் சொல்வதாக அமைந்துள்ளது இந்நாவல்.
இங்கு கோரை என்பது ஒரு குறீயீடு தான் என்று நினைக்கிறேன். மனிதன் காடு திருத்தி வயலாக்கி, தன் நாடோடி குடித்தனத்தை ஒரு இடத்தில் அமைத்த பிறகு, உணவிற்கு மண்ணோடு போராடும்போது தான் அவன் மண்ணின் முழுமையான மகத்துவத்தை உணர்ந்திருப்பான் என்று நினைக்கிறேன். இதில் வரும் கோரை இயற்கையின், மண்ணின் குறீயீடே. மனிதனுக்கும் மண்ணிற்கும் நடக்கும் இடைவிடாத போராட்டத்தின் வெளிப்பாடு.
தான் புதிதாக வாங்கிய நிலத்தில் பன்றி எருவு வாங்கி கொட்டியதால், உத்தண்டியின் நிலம் பூராவும் கோரைகளாக முளைத்து விடுகிறது. மல்லாட்டை கொல்லையில் கோரை இருப்பதற்கு பதிலாக, கோரை கொல்லையில் மல்லாட்டை இருப்பதாக ஆகி விடுகிறது. கோரை முளைத்ததற்கு காரணம் புரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கும் போது, ஒரு கிழவர் அது பன்றி விட்டையிலிருந்து தான் வந்தது என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
உத்தண்டி, அவன் மனைவி பூரணி, பக்கத்துக்கு கொல்லைகாரன் சின்னச்சாமி, செட்டி, சக்கர என்று மிகவும் குறைந்த கதை மாந்தர்களோடு கட்டமைக்கபட்ட நாவல் இது. இவர்களுக்குள் பாலமாக இருப்பது உத்தண்டி வாங்கிய காலரைக் காணி நிலமும் அதில் முளைத்த கோரைகளும் தான்.
நாவலில் நிறைய வட தமிழ்நாட்டிற்குரிய வட்டார வழக்காடுகள் வருகிறது. கிராமத்தில் ஒருவன் நிலம் வாங்கி விட்டால் மற்றவர்கள் அவன்மீது கொள்ளும் பொறாமையும், புறம் பேசுதலும் உத்தண்டிக்கு அவன் காலரைக்காணி நிலம் வாங்கியபோது புரிந்தது.
உத்தண்டியின் பக்கத்து நிலத்துக்காரரான சின்னசாமி அவனின் நிலத்திற்கு தண்ணீர் விட்டு
கொண்டிருந்தார். அதற்கு பலனாக உத்தண்டியிடம் பல வேலைகளை வாங்கிக் கொள்வார். பக்கத்து
நிலத்துக்காரனின் நிலம் நாசமாக போவதை பார்க்கும் சந்தோஷத்தை சின்னசாமியிடம் காணலாம்.
இது மனிதர்களுக்கே உரிய எளிய பண்பானாலும், கிராமத்தில் இதை மிக தெள்ளத் தெளிவாக பார்க்கலாம்.
உத்தண்டி கோரையினை அழிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிவடையும். மனிதன் இயற்கைக்கு எதிராக செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றி அடைய இயற்கை மனது வைத்தால் தான் முடியும். ஒரு சிறு கோரையில் அவனின் மொத்த நேரமும் , உழைப்பும் செலவாகிறது. இவ்வளவு நேர்த்தியாக புறவயமாக கோரைக்கும், உத்தண்டிக்கும் நடக்கும் போரினை, இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் உறவின் குறியீடாக எழுதி இருக்கிறார் கண்மணி அவர்கள்.
பக்கத்து வீட்டுக்காரன் புது நிலம் வாங்கி விட்டால், சாலை பிரித்து புது ஓட்டு வீடு கட்டி விட்டால், கிணற்றில் தண்ணீர் மேல் மட்டத்திற்கு வந்து விட்டால் , வெள்ளாமை நன்றாக விளைந்து விட்டால், வரப்பு அறை அடி உயர்ந்து விட்டால், பக்கத்தில் இருக்கும் புறம்போக்கினை கந்தாயம் கட்டி ஓட்டி விளைந்தால், பொதுவாக கிராமத்தில், இன்னொருவர் மீது இந்த பொறாமையும் புறம் பேசுதலும் இருக்கும்.
பூரணியை திருமணம் செய்த பிறகுதான் உத்தண்டிக்கு அந்த நிலம் வாங்கும் யோகம் அமைந்தது.
அதனால் அவளும் இந்த நிலத்தை பற்றிய யோசனையாகவே இருப்பாள். முதலில் மிளகாய் நடுவதற்கு
பதிலாக அவள் மல்லாட்டை போட சொன்னாள். ஆனால் பணம் இல்லாததால் மிளகாய் நட்டார்கள்.
அதற்கு உரம் போடுவதற்காகத்தான் பன்றி எருவை வாங்கி வந்து வைத்தான். அந்த எருவிலிருந்து
கிளம்பிய கோரைதான் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் அல்லும் பகலும் நிரப்பிக் கொண்டது.
கோரைக்கு நிலத்தினை விட்டுவிட்டு மீண்டும் வயிற்று பிழைப்பிற்காக காடு வெட்டுவதும், முந்திரி
காட்டில் பழம் பெருக்குவதுமாக உத்தண்டியும் பூரணியும் இருந்தனர். அவன் காடு வெட்ட செல்லும்
போதெல்லாம், ஊரார் அவனுக்கு அது தான் உகந்த தொழில் என்றும், அவனுக்கு நிலம் எல்லாம்
லாயக்கு படாது என்றும் சொல்லி அவர்களின் பொறாமையையும் , வயிற்றெரிச்சலையும் கொட்டினர்.
அந்த கோரையினை பார்க்காமல் அவன் பல தடவை தவிர்த்து வந்தாலும், திரும்பவும் அவன் சென்று அந்த நிலத்தை பார்க்கும் போது, நான் இங்கு தான் உள்ளேன் என்ற மாதிரி அது நன்றாக வளர்ந்து இருக்கும்.
நிலம் உள்ளவன் மேல் நிலம் இல்லாதவனுக்கு இருக்கும் பொறாமை தான் உண்மையான அடிமனதில் இருந்து எழும் பொறாமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மனிதனுக்கு நிலத்தின் மேல் இருக்கும் பற்று இயற்கையாக ஒன்றாகும். ஏனென்றால் நிலம் தான் மனிதனுக்கு ஆதாரம். தன் காலடிக்கு கீழே உள்ள ஒரு அடியை தனக்கு சொந்தமென்று நினைப்பது நாகரிகத்தின் முதல் படியாக இருந்திருக்கும். மக்கள் குழுவாக, ஊராக இணைந்து வாழ அதுவே ஆதாரம். அந்த நிலம் உள்ளவன் மேல் இல்லாதவர் பொறாமை படுவது ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
கோரையைப் பற்றியே எப்போதும் யோசித்து கொண்டிருக்கும் உத்தண்டி, பூரணியின் மேல் எதற்கெடுத்தாலும் எரிந்து விழ ஆரம்பிக்கிறான். அவன் தூக்கத்திலும், விழிப்பிலும் கோரையே இருப்பதால், அதனை அவனால் அழிக்க முடியாததால், தன்னுடைய இயலாமையை அவள் மேல் கோபமாக காட்டுகிறான். அவளும் அவனிடம் பெரிதாக நெருங்குவதில்லை. இருவருக்கும் இருக்கும் பிளவு, அடிக்கடி சண்டைகளாக மாறுகிறது.
கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் பூரணி கர்ப்பமாகாததால் அவளின் அம்மாவும், அவனின் அக்காவும் இருவரையும் சென்று மருத்துவரை பார்க்கச் சொல்கிறார்கள். அவன் நிலத்திலோ கோரைகள் அழிக்க அழிக்க மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறது, அவனது வீட்டிலோ நேர்மாறாக இருப்பது ஒரு நகைமுரன்.
கருவுற்ற சமயத்தில் துவரைக் குச்சிகளை வேரோடு பிடிங்கி போட்டதால், வேலை பழு காரணமாக அவளின் கரு களைந்து விடுகிறது. இரத்த வெள்ளத்தில் அவள் முடியாமல் விழுந்த போதிலும், அவள் அவனை தன்னை தூக்கக்கூட விடவில்லை. ஆனால் அவன் அதனை பொருட்படுத்தாமல் அவளை தூக்கி ஒரு சாக்கின் மேல் உட்கார வைக்கிறான். இது வேளாண் வேலை செய்யும் பெண்களின் தைரியமாகவும், அவர்கள் கடைபிடிக்கும் விடாப்பிடியான வறட்டு சடங்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.
செட்டி, பூரணியின் அப்பா- அம்மா, அவனின் அக்கா என எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உத்தண்டிக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறார்கள். கோரையை அழிக்க உத்தண்டி பல்வேறு முயற்சிகள் செய்தும் அது திரும்ப திரும்ப வந்து கொண்டே தான் இருக்கிறது. இறுதியில் பன்றி போட்ட விட்டையினால் விளைந்த கோரையினை பன்றிகளை வைத்தே நிண்ட வைத்து அழிக்க முயற்சி செய்து அதிலும் தோல்வி அடைகிறான் உத்தண்டி.
மண் நம் மீது செலுத்தும் எதிர்வினையே நாம் உணர்வாக மாற்றுகிறோம். மண் செழிப்பாக இருந்தால் நாம் மகிழ்வாக இருக்கிறோம். அதிலிருந்து பெருவதையே நாம் பெரும்பாலும் பிரதிபலிக்கிறோம். அதுவே நாமாக ஆகிறோம். அது நினைத்தால் ஒழிய நாம் அதன் மேல் எந்த ஒரு அதிகாரத்தையும் செலுத்த முடியாது.
சிறு புல்லான கோரையை வைத்து, அதனால் உத்தண்டி மற்றும் அவன் மனைவியின் வாழ்கையில்
நடக்கும் போராட்டத்தை புறவயமாக அவர்களின் வாழ்க்கை வழியாகவே ஒரு மிகப்பெரும் சித்திரத்தை அளித்திருக்கிறார் கண்மணி குணசேகரன் அவர்கள். மண்ணில் பிறந்து , மண்ணால் வளர்ந்து,
மண்ணையே வாழ்வாக நினைத்து வாழும் வாழ்கையை நுட்பமாக எழுதி இருக்கிறார்.
மிக நுட்பமான அவதானிப்பு கள் நிறைந்த ரசனைக்கட்டுரை. நல்ல ஒரு வாசிப்பு
ReplyDeleteThank you
Deleteசிறந்த நூல் அறிமுகம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteThank you
Delete