Some thoughts and reviews of the books which gave me sheer enjoyment while reading and made me crave for more in their resonance of words, in their puns and epigrams and in the beauty of their meaning!
Friday, 18 June 2021
வெண்ணிற இரவுகள்
Saturday, 5 June 2021
The Social Dilemma - ஒரு தொடக்கம்
'The Social Dilemma" என்ற ஆவணப்படம் பார்த்தேன். அதன் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=uaaC57tcci0
https://www.netflix.com/in/title/81254224
பொதுவாக நாம் ஒரு செயலை செய்து கொண்டே இருப்போம், அது நமக்கு நல்லது இல்லை என்று தெரிந்தும் கூட. உதாரணமாக, காலையில் எழுந்து முதலில் மொபைல் பார்ப்பது நல்லதல்ல என்று தெரிந்தும் அதை நாம் எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். திடீரென்று ஒரு நாள் ஏதாவதொரு நிகழ்வு நடக்கும் போதோ அல்லது யாரவது நம் பின் மண்டையில் அடித்து சொல்லும் போதோ தான், அந்த தவறின் விளைவுகளை பற்றி தெரிந்து அதை கைவிட முயல்வோம்.
அப்படி ஒரு பின் மண்டையில் அடித்து சொல்லும் ஆவணப்படம் தான் 'The Social Dilemma'. நாம் இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரன்டு வகையாகவே அதன் உபயோகத்தை வைத்து பிரிப்போம். ஒன்று அது நிகழ்த்தி இருக்கும் சாதனைகளை. அடுத்து அது மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவை.ஒன்று அதை முழுமையாக ஏற்போம் அல்லது அதனை வசைபாடுவோம்.
`இந்த "cellphone" வந்ததிலிருந்து, எல்லாம் நாசமா போச்சு` போன்ற வசைகள். `இந்த செல்போன் வந்து நம் அன்றாட வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக்கியது`, போன்ற புகழ்ச்சியை. ஆனால் நாம் உண்மையிலே அதன் நன்மை/தீமைகளை பட்டியலிட்டு ஒரு விவாதப்பொருளாக்கி அதில் இருக்கும் ethical/moral சவால்களை நாம் சீண்டியதே இல்லை.
அந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறது இந்த ஆவணப்படம். ஒருவன் ஒரு சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் போது, அவன் மொபைலுக்கு பின்னால், ஒரு மிகப்பெரும் `செயற்கை நுண்ணறிவுடன்` விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பது தெரியாது. இந்த `செயற்கை நுண்ணறிவு` நாம் கற்பனை செய்ய முடியாத அளவு மிகவும் பெரியது. நம் ஒவ்வொரு ரகசியமும் அதற்குத் தெரியும். அதை வைத்து நாம் என்ன செய்வோம் என்றும் அதற்குத் தெரியும். அதன் அடிப்படையிலேயே அது நமக்கு 'Suggestions'ஐ சொல்கிறது.
இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கும். இந்த சமூக ஊடகங்கத்தின் நோக்கம் என்ன? ஒன்றே ஒன்று தான். "நம் ScreenTimeஐ அதிகரிப்பது". இது தான் இங்கு சந்தை. நம்முடைய நேரம் தான் சந்தைப்பொருள். இந்த சந்தைப்பொருளுக்குத்தான் எல்லா சமூக ஊடகங்களும் போட்டி போடுகின்றன.
“If you are not buying any product, then you are the product”
அடுத்து நமக்கு இரு முக்கியமான கேள்விகள் வருகிறது.
1. இதனால் அந்த ஊடகங்களுக்கு என்ன லாபம்?
2. இதனால் நமக்கு என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்கள் லாபம் அடைவது "Advertisement" வழியாகவே. நீங்கள் பார்க்கும் விடீயோவையோ, போடும் போஸ்டாயோ வைத்து, உங்கள் விருப்பங்களை அது ஊகிக்கும். அதன் பொருட்டு, Advertisement வரும். உதாரணமாக, நீங்கள் "How to cook gulab jamun" என்று Search செய்தால், அதற்கு தகுந்தவாறே "Jamun" கம்பெனி விளம்பரங்கள் வரும். அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போதும், அது சம்பந்தபட்ட வீடியோக்களே வரும். நீங்கள் ஒரு சந்தைப் பொருள் ஆகிறீர்கள்.
நாம் ஒரு போஸ்ட்ஐ, ஒரு போட்டோவை போடுகிறோம் என்றால், நாம் அதற்கு "likes" எதிர்பார்ப்போம். நம் எதிர்பார்ப்பு தான் இங்கே சந்தைப்பொருள். நம்மை மேலும் மேலும் இந்த எதிர்பார்ப்பை தூண்டிக்கிட்டே இருக்க செய்வது தான் அந்த செயற்கை நுண்ணறிவு programsஇன் வேலை. நம்மை அதற்கு அடிமை ஆக்குவது. இது தான் இங்கு நிகழ்வது. நாம் இதனை மறக்கச் செய்தால் கூட "Notifications" மூலம் நம் ஆசையினை கிளறச்செய்வது.
நாம் இதற்கு அடிமை ஆகிறோம் என்பது நம்மை அறியாமலேயே நடக்கும். மிகவும் கொஞ்சம் கொஞ்சமாக இது நடக்கும். நம் அரசியல் நிலைப்பாட்டை, காதலை, அன்றாட விருப்பங்களை, என்று அனைத்தும் அதற்குத் தெரியும். இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இந்த சமூக ஊடகங்கள் நம் "Data"வை விற்கலாம். ஆனால் அதனை விற்காமலே நம் அனைத்து விருப்ப/வெறுப்புகளை பயன்படுத்தி, நம் எந்த ஒரு நிலைப்பாட்டினையும் மாற்றலாம். உதாரணமாக, நம் அரசியல் நிலைப்பாட்டினை. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த சமூக ஊடகங்கள் நேர்முகமாக, இதில் ஈடுபடுவதில்லை. அது ஒரு "platform"ஐ நமக்குத் தருகிறது. அதில் நம் அத்தனை வெறுப்புகளையும் , காள்புகளையும் நாம் ஏற்றுகிறோம். இதனால் ஒரு மெய்நிகர் தளத்தில் நடக்கும் வெறுப்புகளை, நம் அன்றாட பொதுவெளிக்கு மாற்றி சண்டையிடுகிறோம்.
சமூக ஊடகத்தினால் ஏற்படும் சமூகம்,அறம், உளவியல் சார்ந்த சிக்கல்களின் ஆய்வுகள் நடக்கத் தொடங்கிவிட்டன. இது இங்கே வந்து 10 வருடங்கள் தான் ஆகின்றன என்றாலும், அதன் தாக்கம் எந்த ஒரு தொழில்நுட்பமும் செய்யாத அளவு மிகவும் பெரியது. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக நம்மை அதற்கு அடிமை அடையச்செய்கிறது. நம் குழந்தைகளின் நேரத்தை நம்மிடமிருந்து பிரிக்கிறது. நாம் என்ன பார்க்க வேண்டும் எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. நாம் நம் கையில் வைத்திருப்பது (Mobiles) நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம், அதன் சாத்தியங்கள் எல்லையற்றது. அதனாலே அது மிகவும் பயங்கரமானது.
எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதனுக்கு உதவவே உருவாக்கப்படுகிறது. அதை யாரும் இங்கே மறுக்க முடியாது. இந்த தகவல் தொழில்நுட்பமும் அவ்வாறே. ஆனால் இது வளர்ந்து வளர்ந்து மனிதனை ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. நம் ஒவ்வொரு clickஉம் சேமிக்கக்ப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகிறது. நாம் அதனை கையாள்வதாக நினைத்துக் கொண்டாலும், உண்மையில் அதுவே நம்மை கையாளுகிறது.
இந்த ஆவணப்படத்தில், இதை ஒரு விவாதமாகவே கொண்டு செல்கிறார்கள். இது ஒரு தொடக்கமே. நாம் உருவாக்கிய பொருள் நம் கையையே கடிக்கும் போது, அதன் தேவையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாம் என்ன தான் முற்றிலும் இதனை தவிர்க்க முடியாமல் போனாலும், நமக்கு உகந்தவாரு நாம் அதனை பயன்படுத்த தொடங்க வேண்டும். நம் குடும்பத்துடன் உரையாடி, நமக்கு நாமே ஒரு கொள்கையினை வைத்துக் கொண்டு தான் இதனை இப்போது சமாளிக்க தொடங்க வேண்டும்.
Wednesday, 12 May 2021
பித்தப்பூ
பித்தப்பூ
க.நா.சுப்ரமண்யம் அவர்களின் 'பித்தப்பூ' குறுநாவல் வாசித்தேன். இதுவே நான் வாசிக்கும் க.நா.சு வின் முதல் நாவல். மனநலம் பற்றிய நாவல் இது. 'பைத்தியம்' என்பதன் அர்த்தத்தை அறிய முயலும் முயற்சியே இந்நாவல்.
கதை தியாகராஜன் (எ) தியாகுவைப் பற்றியது. கதை கூறுபவர் (க.நா.சு) தியாகுவின் குடும்ப நண்பர். தியாகுவிற்கும், கதை கூறுபவருக்கும் (க.நா.சு) நடக்கும் உரையாடல்கள் ஒரு பகுதி விட்டு விட்டு வருகிறது. முதல் பகுதியில் உரையாடல் என்றல் இரண்டாம் பகுதியில் காட்சிகளும், சம்பவங்களும் , பிறகு மீண்டும் மூன்றாம் பகுதியில் உரையாடல்கள். இந்த உரையாடல்கள் பெரும்பாலும் தியாகு தன் மனவோட்டங்களையும், தன் மீது பிறர் வைத்திருக்கும் அபிப்பிராயத்தையும் உடையது.
கதையில் சில "பைத்தியம்" அடைந்தவர்களின் சூழ்நிலைகள் கூறப்பட்டுள்ளது. தன் மனைவியின் செயலால் திடீரென்று "பைத்தியம்" ஆகுபவர், தந்தி கொடுக்கும் தபால்காரன் பைத்தியம் ஆவது, போன்ற சிறு கிளை கதைகள் வருகின்றன. உண்மையில் பைத்தியம் என்பது என்ன? தியாகுவின் அப்பாவையும் அண்ணனையும் கூட சிலர் பைத்தியம் என்கிறார்கள். பொதுவான மனித செயல்களை செய்யாமல் தனியே செய்பவரை உலகம் காலம் தோறும் பைத்தியம் என்று தான் சொல்லிக்கொண்டு வருகிறது. மக்கள் தன்னால் செய்ய இயலாததை, பிறர் செய்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அதை செய்வோரை பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுகிறது. இது ஒரு வகையான "பைத்தியத்தின்" வரையறை.
அவனின் தந்தை பெரிய பணக்காரராக இருந்து தான தர்மத்தால் தன் சொத்தினை முக்கால்வாசிக்கும் மேல் இழந்தவர். அவரின் இரண்டாம் மனைவியின் கடைசி மகன் தான் தியாகு (பத்தாவது பிள்ளை). தன சிறு வயது முதலே படிப்பிலும், ஓவியத்திலும் படு சுட்டி. காலேஜ் படிக்கும் போது அவன் கலை இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டான். அதிலேயே அவன் எப்போதும் திளைத்திருந்தான்.
கதை கூறுபவரும்(க.நா.சு) ஒரு பைத்தியம் என்றே மக்கள் நினைப்பர். தன் வாழ்நாள் முழுதும் "எழுத்து" மட்டுமே நம்பி வாழ்பவரை உலகம் எப்படி சொல்லும். தியாகு தான் ஒரு பைத்தியமோ என்று எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு விபத்தில் சிக்கி அவன் காதலியயை இழந்த பின்னர் அவன் இன்னும் அந்த எண்ணத்தில் மூழ்கிவிட்டான். அவன் தொடர்ச்சியாக "தான் ஒரு பைத்தியமா இல்லையா" என்பதைப் பற்றியே தன் வாழ்நாள் முழுதும் போராடிக்கொண்டிருந்தான்.
தியாகு இறுதியில் "electric shock" மருத்துவத்தின் கொடுமையால் உயிரிழக்கிறான். தன் மனைவியும் மகளும் வெளியூரில் இருக்க, தான் மட்டும் தனியே வாழ்ந்து மனச்சோர்வுடனே இறந்தும் போனான்.
"நான் பைத்தியமா?" என்ற கேள்வி பெரும்பாலும் தன் வாழ்க்கையில் எல்லோரும் ஒருமுறையாவது சிந்தித்திருப்போம். மனச் சோர்வு உடையவர்கள், அதில் உள்ளே சென்று தங்களை இழக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக அவரவர் சுற்றமும் நட்பும் எப்போதும் இருக்க வேண்டும். இன்று "மனநோய்" பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மேலை நாடுகளில் இருந்தாலும், இன்றளவும் நம்மிடையே அதை ஒரு stereotype செய்து ஒதுக்கியே வைத்துள்ளோம். மனம் குன்றினாலும், மனம் இல்லாவிட்டாலும் அனைவரும் ஓர் உயிரினமே. அடிப்படை அன்பும், பரிவுமே நாம் கொடுக்கும் மருந்து.
Friday, 30 April 2021
குற்றமும் தண்டனையும்
குற்றமும் தண்டனையும்
'தஸ்தயேவ்ஸ்கி' அவர்களின் 'குற்றமும் தண்டனையும்' நாவலின் முதல் வாசிப்பை முடித்து விட்டேன். Wordsworth classics பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பிலேயே வாசித்தேன். தமிழ் மொழிபெயர்ப்பில் இன்னொரு முறை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.
19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் மிக முக்கியமான நூற்றாண்டு. அறிவியலில் மட்டுமில்லாமல் கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிகுந்த பங்களிப்புகள் நிறைந்த நூற்றாண்டு. சமூகவியல் மாற்றங்கள், மக்களின் விடுதலை சிந்தனைகள், மனிதன் என்னும் சுய நோக்கு ஆகிய அனைத்தும் மேலோங்கி இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் ருஷ்ய சமுக, இலக்கியத்திலும் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செகோவ் அவர்களின் நூற்றாண்டு.
தஸ்தயேவ்ஸ்கியின் சுய வாழ்க்கைச் சித்திரத்தை பின்னணியாய்க் கொண்டு, 'குற்றமும் தண்டனையும்' வாசித்தால், அவர் வாழ்ந்த கால கட்டத்தின் எழுச்சிகள், அவரின் சிறை அனுபவங்கள், மற்ற சிந்தனையாளர்களினால் தான் அடைந்த எண்ணங்கள், தன் சொந்த வாழ்க்கையின் அத்தனை இன்னல்கள், இந்நாவல் மேலும் ஒரு திறப்பாக இருக்கும்.
நாவலின் நாயகன் 'Raskolnikov'. சட்டம் படிக்கும் ஒரு மாணவன். தன் சொந்த ஊரை விட்டுவிட்டு, st. petersberg நகரில் சட்டம் படித்து வருகிறான். படிப்பும் பாதியில் நின்று விடுகிறது, தான் மேற்கொண்ட வேலையும் இப்போது இல்லாததால், மிகுந்த வறுமையில் உள்ளான். தான் குடியிருக்கும் சிறு அறைக்கு வாடகை கூட பல மாதங்களாக கொடுக்க இயலாமல் இருக்கும் நிலை.
தன்னுள் ஏன் அந்த எண்ணம் தோன்றியது என்றே அவனுக்கு தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணத்தோடு தான் அவன் கடந்த சில மாதங்களாகவே அலைந்து கொண்டிருந்தான். இந்த எண்ணத்தின் அர்த்தம் என்ன? ஏன் அந்த எண்ணம் தன்னுள் முளைத்தது என்று அவனுக்கு தெரியவில்லை. அந்த எண்ணம் அவனுக்கு ஒரு கனவு போல் எப்போதும் தோன்றியது அதை அவன் பூர்த்தி செய்வான் என்று அவனே நம்பவில்லை. ஆனால் அந்தக் கனவின் பின்னாலேயே அவன் அதற்கு தேவையான அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருக்கிறான். அவனை அறியாமல் அந்த கனவை நோக்கி சென்றுகொண்டிருந்தான்.
அந்த வயதான அடகுப் பெண்மணியை அவன் கொலை செய்ய எண்ணியதே அவனுடைய எண்ணம். அவன் எப்போதுமே எங்கு போகிறான் என்று அவனுக்கே தெரியாது, எப்போதும் சிந்தனையிலேயே இருப்பான். அவன் தற்செயலாக அந்தப் பெண்மணியின் தங்கை, மார்க்கெட்டில், வேறு யாரோ ஒரு கடைக்காரரிடம் நாளைக்கு இரவு 7 மணிக்கு வந்து பொருளை வாங்கிக் கொள்வதாக பேசிக்கொண்டிருக்கிறாள். அதை இவன் ஒற்றுக் கேட்டு விடுகிறான்.
அடுத்த நாள் இரவு 7 மணிக்கு அவன் தன்னை தயார் செய்து கொண்டு இருந்தான். ஒரு கோடாரி அவனுக்கு தேவைப்பட்டது அதை லாவகமாக இன்னொரு அறையிலிருந்து களவாடிக் கொண்டு விட்டான். அதை தன்கோட்டில் வைத்து மறைத்துக்கொண்டு அந்த வயதான அடகு பெண்மணி வீட்டிற்கு சென்றான். வீட்டிற்குச் சென்று அவள் வீட்டின் முகப்பில் இருக்கும் அழைப்பு மணியை அழுத்தினான். அந்த வயதான பெண்மணி கொஞ்ச நேரம் கழித்து கதவை மிகவும் எச்சரிக்கையுடன் திறந்தாள். அவன் சட்டென்று உள்ளே புகுந்தான். அவள் ஒரு நிமிடம் திமிரி விட்டாள். இவன் தன்னிடம் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து இதை அடகு வைக்க வந்திருப்பதாகவும் இதற்கு பணம் கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டான். அந்த பொருளை அவள் கையில் வாங்கி பார்த்துக் கொண்டிருக்கையில் கோடாரியை எடுத்து அவள் மேல் மண்டையில் ஓங்கி அடித்து அவளை கொலை செய்கிறான். பின்பு அவளின் உள்ளறையில் சென்று அங்கிருக்கும் பெரிய பீரோவில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்து க்கொண்டான்.
அப்பொழுது திடீரென்று முன் அறையில் யாரோ இருப்பது போல் உணர்ந்ததால் அங்கு வந்து பார்த்தபோது , "Lizavetta" தன் அக்காவின் பிணத்தை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளின் முகத்தின் மேல் கோடாரியை எடுத்துச் சென்ற பொது, அவள் ஒரு சிறு சத்தம் கூட போடாமல் , உணர்வுகளற்று கிடந்தாள். அந்த தருணத்தில் அவனுக்கு ஏற்பட்ட உணர்வினை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கிருந்து அவன் ஓட எண்ணினான். ஆனால் அவன் அந்த கோடாரியை அவளின் தலையில் பாய்ச்சினான்.
அவன் அந்த 'குற்ற'த்தை செய்து முடித்தான்.
குற்றம் செய்து முடித்து பல நாட்களும் அவன் ஒரு மயக்க நிலையிலேயே காணப்பட்டான். அவனின் செயல்கள் அனைத்தும் ஒரு வகையான மயக்க நிலையிலேயே செய்து கொண்டிருந்தான். ஆனால் அந்த குற்றத்தைப் பற்றி யாரவது பேசும்போது மட்டும் மிகுந்த கவனிப்புடனும், ஒரு எச்சரிக்கை உடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தான். அந்த குற்றம் அவனை தன்னில் இழுத்துக்கொண்டது. அதில் அவன் தினமும் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் களவாண்டப் பொருட்களை அவன் முழுதாகக்கூட பார்க்கவில்லை. எல்லாவற்றயும் ஒரு பெரிய கல்லின் அடியில் புதைத்து வைத்துவிட்டான்.
அவன் அந்த கொலை புரிவதற்கு முன்னால், Marmeladov என்னும் அரசு அதிதாரியை ஒரு உணவகத்தில் சந்திக்கிறான். Marmeladovவே இவனிடம் வந்து பேச ஆரம்பிக்கிறான். தன்னுடைய வாழ்க்கையும், தான் எப்படி அரசு அதிகாரியாக இருந்து குடிக்கு அடிமையாகி அதை இழந்துவிட்டிருப்பதையும் சொல்கிறான். வறுமையின் காரணமாக தன் குழந்தைகள் பசியால் வாடுகின்றன எனவும், அவனின் இரண்டாம் மனைவி எப்படி ஒரு நாள் தன் மகளின் (இவனின் மூத்த மனைவிக்கு பிறந்த பெண்) உபயோகமற்ற நிலையைக் கண்டு வசை பாடினால் என்றும், அதற்கு அவள் தன் சின்னஞ்சிறு வயதில் எப்படி ஒரு விபச்சாரியாகி தன் வீட்டை பார்த்துக் கொள்கிறாள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பெரிய மகள் Soniya தன் இளம் வயதில் தன சகோதரர்களுக்காக விபச்சாரியாகி, தன்னை தியாகம் செய்கிறாள்.
அவனின் மயக்க நிலை அவனை ஒரு இடத்தில இருக்க விடாமல் அலைந்து திரிய வைக்கிறது. St. petersbergஇன் வீதிகளில் அவன் அலைந்து திரிகிறான். அவனின் கால்கள் போகுமிடம் எல்லாம் தானும் செல்கிறான். மனம் திடீரென்று நல்ல நிலைக்கு வரும் தான் எப்படி இங்கு வந்தோம் என்பதே தெரியாமல் திரும்பவும் 'மயக்க' நிலைக்கு செல்கிறான். அப்படி ஒரு தருணத்தில் ஒரு இளம் பெண்ணை சாலையோரம் சந்திக்கிறான். அவள் மயக்க நிலைமையில் உள்ளாள். தன உணர்வுகள் அற்ற நிலையில். அவளை அங்கு இருக்கும் ஒரு காமுகன் உபயோகப்படுத்தி கொள்வான் என்ற அச்சத்தால், இவன் அவனிடம் சென்று சண்டை இடுகிறான். ஒரு காவல் அதிகாரி அங்கு வரவே, அவன் நடந்தவற்றை கூறி அந்த பெண்ணை அவள் இருப்பிடத்திற்கு அழைத்து செல்ல முற்படுகிறான்.ஆனால் அந்த காமுகன் அவளை திரும்பவும் பின்தொடர்ந்து வருகிறான். இதை கண்ட அவன் திடீரென்று தான் எதற்கு அவளை காப்பாற்ற வேண்டும் என நினைத்து அப்படியே விட்டு செல்கிறான். அவளை காப்பாற்றுவதில் அவன் என்ன பயன் என்று யோசிக்கையில், அப்படியே மனம் அதை விட்டு விடுகிறது. அவளை அவன் அப்போது காப்பாற்றி விட்டால், அடுத்த கொஞ்ச நேரத்தில் வேறு ஒருவனால் சீரழிக்கப் படுவாள். இதை எல்லாம் அந்த பெண்ணும் விரும்பக் கூடும். தன் செயலால் ஒரு பயனும் இல்லை என்றே நினைக்கிறன். செயலின் அர்த்தமின்மையில் தன்னை இழந்துவிடுகிறான்.
தன் அன்னை அவனுக்கெழுதிய கடிதத்தில், அவனின் தங்கை ஒரு பணக்கார வக்கீலை (Pyotr Petrovich) திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அது நம் அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு நற்செயல் எனவும் எழுதி இருந்தாள்.அந்த வக்கீலின் மேட்டிமை எண்ணங்களும், பெண்ணடிமை எண்ணங்களும் ஓரிரு வரிகளில் எழுதி இருந்ததைக் கண்டு கொதிப்படைந்தான். அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் பொருட்டு அவன் தங்கை வாழ்க்கையை தியாகம் செய்கிறாள் என்பதை அவனால் சீரணிக்க முடியவில்லை.
அவனுடைய நண்பன் Razumihin அவன் மயக்க நிலையில் இருந்த எல்லா தருணங்களிலும் அவனுக்கு உறுதுணையாகவே இருந்தான். அவனின் மருத்துவ நண்பன் zossimovவும் Raskolnikovஐ தங்களால் முடிந்த வரை பார்த்துக்கொண்டனர். தன தங்கையின் மாப்பிள்ளை அவனைக் காண அறைக்கு வந்தபோது அவனை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான்.
Porfiryயும், Raskolnikovவும் தங்களின் முதல் சந்திப்பில் விவாதம் செய்தது ஒரு தத்துவார்த்தமானதாகும். அவன் எழுதிய ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டி Porfiry அதன் விளக்கங்களையும், அது எழுத முற்பட்ட காரணங்களையும் கேட்டார். அந்த கட்டுரையில் அவன் "சாமானியர்கள் மற்றும் சிறப்பு மக்கள்" என்ற வாதத்தை கொண்டு வருகிறான். "சிறப்பு மக்கள்" (extraordinary people) தாங்கள் சிறப்பானவர்கள் என்பதால் ஒரு சமூக கட்டுப்பாட்டு எல்லையை மீறலாம் என்றும், அந்த நோக்கில் கொலை கூட புரியலாம் என்றும் விவாத பொருளாக இருந்தது. இதனை பல்வேறு எடுத்துக்காட்டு (நெப்போலியன்) வழியாக அவன் விவாதம் செய்தான். அவர்கள் தங்கள் சம காலத்தில் இருந்த எல்லைகளை கடந்து தங்களுக்கென்று ஒரு எல்லையை (அல்லது எல்லையின்மையை) உருவாக்கிக் கொண்டார்கள். அதை சாமானியர்கள் நோக்கிற்காக செய்தார்கள். "Cause for the larger good" என்ற விவாதமே அது.
மேலே உள்ள பேசு பொருளை சிந்திக்கும் போது, அது ஒரு வகையில் உண்மையாகவும் தோன்றலாம். அதை விட்டால் வேறு வழியும் இல்லை. சாதாரண மக்கள் கோட்டிற்குள்ளாகவே வாழ்வார்கள். அதை தாண்டி போகும் சிறப்பு மக்கள் போகும் வழியில் ஓரிரு குற்றங்கள் செய்வது பெரும் பிழை இல்லை என்றும் தோன்றும். இது என்றுமுள்ள சிந்தனை "Law of the collateral damage". ஆனால் சிறப்பு மக்கள் என யார் ஒருவரை முடிவு செய்வது. அப்படி ஒருவன் செய்தால், தன் சுயநலத்திற்காக குற்றம் செய்தால், அதன் விளைவு என்ன? அப்படி ஒரு நிலைமையை சமூகம் எவ்வாறு பார்க்கும்?
கதை நடக்கும் நூற்றாண்டு ஐரோப்பிய பின்னணியில் பல்வேறு புதிய கருத்துக்கள் ஒன்றோடொன்று மோதி விளையாடிக் கொண்டிருந்த காலம். Nihilism என்னும் மறுப்புவாதம் பரவலாக பேசிக் கொண்டிருந்த கால கட்டம். வாழ்க்கையின் அர்த்தமின்மையை வரையறுக்கும் தத்துவங்கள் மக்களை பலவாறு ஆட்கொண்டன. அவர்களின் பண்பாட்டுப் பின்னணிகளுடன் இதனை மோத விட்டு, ஒன்றுக்கு எதிராகவும் , ஆதரவாகவும் கருத்துக்கள் மேலோங்கின. அந்த பின்னணியிலிருந்து நாம் Raskolnikovயும், அவனது குற்றம் மற்றும் அதன் பின்னணியையும் நோக்க வேண்டும்.
காவல் அதிகாரி zametovவிடம் அவன் ஒரு சந்திப்பில், அவன் தான் அந்த கொலையை செய்ததாக விளையாட்டாக சொல்வான். அவன் 'மயக்க' நிலையில் இருந்ததால் அதை அந்த அதிகாரி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.அவனுக்கு பல்வேறு சமயங்களில் இதை வெளிப்பபடையாக யாரிடமாவது சொல்ல முற்பட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். அதுவே அவனுக்கு ஒரு பெரிய "தண்டனை"யாகவும் இருந்தது. அவன் தன குற்றத்திற்கு "அங்கீகாரம்" தேடியே அலைந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஏன் அவன் அதைக் கோர வேண்டும்? அவன் தன்னை ஒரு சிறப்பு மக்களாக கற்பனை செய்து கொண்டான். அவனும் ஒரு நெப்போலியனாக தன்னை உருவகித்துக் கொண்டான். அதை தனக்கு தானே நிரூபிக்கவே அவன் அந்த கொலையை செய்தான்.
வீதியில் ஒருவன் குதிரை வண்டியில் அடிபட்டு சாகக் கிடப்பதைக் கண்டு, அவன் சென்று பார்க்கையில் அது Marmeladov என அறிந்து, அவனைத் தூக்கிக் கொண்டு அவன் வீட்டிற்கு செல்கிறான். அங்கு Marmeladov இறந்து விடுகிறான். அவனின் இரண்டாம் மனைவியின் நிலமையைக் கண்டு, தன அன்னை அவனுக்கு அனுப்பிய பணம் இருபத்தைந்தை அவளிடம் எந்த ஒரு யோசனையும் செய்யமல் கொடுத்து விடுகிறான். அவனிடம் அடுத்த வேலைக்கு ஒரு பணமும் இல்லை. Marmeladov வின் மூத்த மகளை அங்கு அவன் காண்கிறான். அந்த குடியிருப்பில் தான் அவன் தங்கை மாப்பிள்ளையும் வாடகைக்கு வசிக்கிறான். அவனும் அதை பார்த்து விடுகிறான்.
கொலை புரிந்த இரு நாட்கள் கழிந்து, அதே அறைக்கு சென்று அவன் பார்க்கிறான். அவன் மனம் கலங்கி இருந்தது. அந்த அறையில் வேலை செய்பவனிடம் "ரத்தம்" பற்றி விசாரிக்கிறான். அவன் ஏன் அங்கு சென்றான், எதை அங்கு எதிர்பார்த்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவனின் இந்த செயல், அவன் மேல் ஒரு சந்தேகத்தை உண்டு பண்ணியது. இதைக்கண்டு ஒரு வயதானவன், அவனைப் பின்தொடர்ந்து அவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனை ஒரு கொலையாளி என்று கூறிவிட்டுச் செல்கிறான். இதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் கொலை புரிந்ததை தன் மூலமாகவே உலகிற்கு தெரிய வேண்டும் என்று அவன் தன்னுள் நினைத்துக் கொண்டிருந்தான். அவனே அந்த கொலையை தான் தான் செய்தது என்று சொன்னாலும் அதை கேட்பவர் நம்பவில்லை. ஆனால் இன்னொருவன் தன்னை கொலையாளி என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
Porfiryயை இரண்டாம் முறை அவரது அலுவலகத்தில் சந்திக்கிறான். அவர்கள் இருவருக்கும் ஒரு மானசீகமான 'மனப்போர்' உழன்றுகொண்டே இருக்கிறது. Porfiry இவனை மனரீதியாக மிகவும் சோதிக்கிறார். அந்த "ரத்த" சம்பவத்தை அவனிடம் கேட்கும் போது , அவன் அதற்கு தான் ஒரு நிலையில் இல்லை எனவும், ஒரு 'மயக்க' நிலையில் காய்ச்சலுடன் அங்கு சென்றதாகவும் சொல்கிறான். அங்கு வேலை செய்பவர்களைப் பற்றிய ஒரு கேள்விக்கு, அவன் ஒரு கணப்பொழுதில் அத்தனை சாத்தியங்களையும் யோசித்து அவருக்கு பதில் கூறுகிறான். அவன் அவரிடம் அந்த கொலையை அவன் தான் செய்தேன் என்பதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. இந்த 'மனப்போரில்' அவன் மூழ்கி விடுகிறான். இது நடந்து கொண்டிருக்கும் போது, தன சுய நிலையை இழந்து அவரிடம் அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் நேரத்தில், எதிர்பாராத விதமாக Nikolay ( பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி) Porfiry அறைக்குள் வந்து அவன் தான் கொலை செய்ததாகவும் , தன்னை கைது செய்து தண்டனை கொடுக்கும் படியும் கெஞ்சுகிறான்.
நாவலின் ஒரு முக்கியமான கருத்தியல் விவாதமாக Nikolayயின் சுய தண்டனை ஏற்றலை குறிப்பிடலாம். அதனையே Porfiryயும் Raskolnikovவிடம் விவாதம் செய்கிறார. Nikolay ஒரு பழமைவாதி. பழைய கிருத்துவத்தின் மேல் நம்பிக்கை உடையவன். அவன் 'சுயவதை' என்பது கடவுளை அடையும் ஒரு வழியாகவே பார்க்கிறான். இது ருஷ்ய மட்டும் அல்லாமல் அனைத்து சமூகங்களிலும் மதங்களிலும் உள்ளது. நாம் 'நேர்த்திக்கடன்' என்று உடலை வருத்தும் செயல்களில் ஈடுபடுவதும் அதுவே. ஒரு சாமானிய மனிதனுக்கு அதுவே கடவுளை அடையும் வழி. தன்னை வருத்தி அர்பணித்தல். அதில் ஆணித்தரமாக இருத்தல். அவர்கள் வாழ அது ஒரு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
Raskolnikovவின் தங்கை அவன் பொருட்டு தியாகம் செய்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாவலில் முழுவதும் எந்த தியாகத்தையும் அவனால் புரிந்து கொள்ளவும், ஏற்று கொள்ளவும் முடியவில்லை. தன் தங்கையின், Marmelodov இரண்டாவது மனைவியின், Marmelodovவின் மூத்த மகள் Soniyaவின், இவை அனைத்தும் அவனுக்கு மேலும் உளக் கொந்தளிப்பை மட்டுமே அளித்தது. ஏன் ஒரு மனிதன் தியாகம் செய்ய வேண்டும், மற்றவரின் பொருட்டு. தியாகம் ஒரு அன்பின் வெளிப்பாடு, கருணையின் உச்சமாகவே எனக்கு தோன்றுகிறது. சட்டென்று, Amitav Ghosh அவர்களின் 'The Shadow Lines' நாவலின் இறுதியில் அவர் கூறும் ஒரு வரி நினைவுக்கு வருகிறது. 'Sacrifice is a real mystry'.
சோசியலிச "கம்யூன்" சிந்தனைகளும் அவற்றின் கருத்தியல் மோதல்களும் நாவலில் மேலோட்டமாக வந்து செல்கிறது. தஸ்தயேவ்ஸ்கி பார்வையில் "கம்யூன்" வழியாக உணர்வுகளற்ற, பண்பாடற்ற ஒரு செங்கல் மனிதர்களை சோசியலிசம் உருவாக்க முற்படுகிறது என்றே சொல்லலாம். அவர்கள் வரலாற்றை அப்படியே நிறுத்தி, வெறும் கொள்கை வழியாக ஒரு சமூக கட்டுமானத்தை நிறுவ மேற்கொள்கிறார்கள். குடும்பம், திருமணம், உறவு, தொழில் போன்றவற்றில் திறந்த மனப்பான்மை கொண்டால் மனிதன் அடையும் துன்பங்களில் பெரும்பாலானவை தவிர்க்கப்படும் என்பதே அவர்களின் வாதம். ஆனால் மனிதன் என்றுமே தன் பண்பாட்டை விடுத்து வாழ இயலாது, அப்படியே வாழ்தலும் அது வெறும் செயற்கை வாழ்வே என்ற எண்ணமே தோன்றுகிறது. பண்பாட்டுக் கூர்களினால் ஆனதே மனித மனம்.
St. Petersbergன்அமைப்பு, மக்களின் பொது வாழ்க்கை, விழாக்கள் போன்றவை விரிவாக இல்லாமல் இருந்தாலும், கதையின் தத்துவ தளத்திற்கு போதுமானதாக உள்ளது. நகரத்தின் தெருக்கள், கேளிக்கை விடுதிகள், உணவுக்கூடங்கள், உழைக்கும் மக்களின் சாதாரண கேளிக்கைகள் போன்றவை வந்து செல்கின்றன.
தன் தங்கை முன்னாள் வேலை செய்த வீட்டின் உரிமையாளன் St. Peterberg வருவது, கதையில் ஒரு திருப்பமாக உள்ளது. Svidrigailov நகரத்துக்கு வந்ததும் Soniyaவின் பக்கத்து வீட்டில் குடிஅமர்வது, Raskolnikovஐ பின் தொடர்வது, ஒரு புதிராக அமைந்துள்ளது. தன் தங்கையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததற்காக அவன் மேல் Raskolnikovவுக்கு ஒரு காழ்ப்பு உண்டானது. நகரத்துக்கு அவன் வந்த காரணமே அவன் தங்கையிடம் பேசுவதற்காக என்றும், அவளுக்கு பத்தாயிரம் rouble உயிலாக எழுதி வைத்திருப்பதாகவும் அவன் சொன்னான். பயனாக தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், ஒரேயொரு முறை மட்டும் அவளிடம் பேசினால் போதும் என்றும் அவனிடம் கூறினான்.
Raskolnikov Soniyaவை, அவளின் தந்தை இறுதிச் சடங்கில், அவள்மேல் திருட்டுப் பழி சுமத்திய pyotr petrovichவிடம் (தன் தங்கையின் மாப்பிள்ளை) இருந்து காப்பாற்றுகிறான். தன் தங்கையின் பொருட்டு அவனை தான் கடிந்ததனால், தன்னை பழி வாங்கவே அவன் உன் மேல் திருட்டு பட்டம் கட்டினான் என்று பின் Soniyaவின் அறைக்குச் சென்று அவன் அதை அவளிடம் விளக்கினான். அப்போது அவன் தன்னுள்ளே வைத்திருந்த அந்த ரகசியத்தை அவளிடம் கூறினான். அவன்தான் அந்த இரு கொலைகளை செய்ததாக சொன்னான். அதை கேட்டு அவளால் நம்ப முடியவில்லை. பிறர் துன்பத்தில் , தன் கையில் இருப்பதை அப்படியே அள்ளிக் கொடுக்கும் இவர் எப்படி கொலை செய்ய முடியும் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.
தன் அறையில் வைத்திருந்த பைபிளை எடுத்து "லாசர்" உயிர்த்தெழும் சம்பவத்தை வாசிக்கிறாள். அது அவனுக்கு தான் உயிர்த்தெழுவது போன்ற எண்ணத்தை அளித்தது. தன் அனைத்து துன்பங்களின் தீர்வையும் கடவுளிடம் மன்றாடும் மனிதர்களிடம் இரக்கமும், கருணையும் இருக்கிறது. அவனுக்கு அப்போதே நன்றாக தெரிந்தது, அவள் அவனை விட்டு இனிமேல் ஒருபோதும் பிரியமாட்டாள் என்று. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். அவன் இதை எண்ணியதும் அவனால் அந்த அறையில் இருக்க முடியாமலே வெளியே செல்கிறான்.
Svidrigailov, இதை எல்லாம் பக்கத்து அறையில் இருந்து ஒற்றுக் கேட்டு, Raskolnikovவின் தங்கையை தனிமையில் வரவழைத்து அவளை மிரட்டுகிறான். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன். அவள் பயந்து தன்னிடம் இருந்த பழைய கைத்துப்பாக்கியை எடுத்து சுட முற்படுகிறாள். குண்டு அவன்மேல் உரசிச் செல்கிறது. அவன் அவளை நோக்கி முன்னேறும் போது அவள் சட்டென்று அனைத்தையும் தூக்கி எரிந்து, அனாதையாக நிற்கிறாள். அந்த ஒரு நொடியை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சட்டென்று அவளை போய் விடும்படி சொல்கிறான். அவளும் சென்று விடுகிறாள். அவன் கீழே இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொள்கிறான்.
Soniyaவின் சின்னன்னை இறந்த பிறகு, Svidrigailov தன் சொந்த செலவில் அவளின் குழந்தைகளை ஒரு விடுதியில் சேர்க்கிறான். அவன் வாழ்ந்ததற்கு ஒரு அடையாளமாகவே அதை அவன் செய்தான் என்றே நினைக்கிறேன். அவன் அந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறான், ஒரு சாட்சியின் பார்வையில்.
தஸ்தயேவ்ஸ்கி கதையில் 'தற்செயல்'களை பல இடங்களில் தொட்டுச் செல்கிறார். Lizavettaவை Hay மார்க்கெட்டில் பார்த்து அவள் பேசியதை ஒற்றுக் கேட்டதனால் தான் அவனால் அன்று சென்று கொலை செய்ய முடிந்தது. அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் தருவாயில் Nikolay வந்து தான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொள்கிறான். Svidrigailov Soniya வின் பக்கத்துக்கு அறையில் இருப்பது. Pyotr Petrovitch, Marmeladov வீட்டின் குடியிருப்பில் வசிப்பது. Marmeladov விபத்தை இவன் பார்ப்பது. தற்செயல்களின் ஊடாட்டமாகவே கதை செல்கிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்வுக்கும், அந்த நிகழ்வு மனிதர்களின் எண்ணங்களுக்கும் ஒரு கோடு இழுக்கும் போது, இது வெறும் தற்செயல் என்றும் கூறி விட முடியாது.
Epilogueல், Raskolnikov குற்றத்தை ஒப்புக் கொண்டு ஒன்பது வருடம் சைபீரியாவிற்கு சென்ற பொது, Soniya அவனை பின்தொடர்ந்து அங்கு குடியேறுகிறாள். அவனுக்கு தெரியும் அவன் நிழலாக அவள் என்றும் இருப்பாள் என்று. அதை அவன் ஒருவாறு ஏற்றுக் கொண்டான். அன்பும், கருணையும் கொண்டவர்களால் மட்டுமே அத்தகைய செயலை செய்ய இயலும். அவளிடம் இருந்து அவன் பிரிகையில், அவள் கொடுத்த சிலுவையை தன்னுடனேயே அவன் வைத்துக் கொண்டிருந்தான்.
தஸ்தயேவ்ஸ்கி அக்கால கட்டத்தின் எழுச்சிகளையும், Nihilism மேல் தனக்கு இருந்த அவ நம்பிக்கைகளையும், சோசியலிச செயல்பாட்டையும், தன் பண்பாட்டு வேர்களையும் ஒன்று திரட்டி அதன் மேல் கதையை கட்டமைத்திருக்கிறார். பல தருணங்கள், அவரின் சொந்த வாழ்வில் எடுத்தவையாகவே உள்ளன. நாவலில் பல பகுதிகள் குறுங்கதைகளாகவும், விவாதங்களாகவும் நீட்டிச் செல்லலாம். மனித மனங்களின் எண்ணற்ற சிந்தனைகளை மொழியின் ஊடே கடைந்து நமக்கு அளித்திருக்கிறார்.
Thursday, 11 March 2021
ஆமென்பது…
ஆமென்பது... கடிதம்
அன்புள்ள ஜெ,
தங்களின் "ஆமென்பது..." சிறுகதை வாசித்தேன். முதல் வாக்கியத்திலேயே ஆவலோடு உள்நுழைந்துவிட்டேன். "எண்ணங்கள், சொற்கள், எழுத்துக்கள்". ஆம், நாம் "எண்ணுவது" கோடி என்றால் , சொல்வது லட்சம், எழுதுவது வெறும் ஆயிரம் கூட இருக்காது.
நாம் எதை எழுத வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கலாம். அதை எழுதலாம் அல்லது எழுதாமல் இருக்கலாம். அதைப்போலவே சொல்வதையும். ஆனால் நாம் எதை நினைக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியுமா. ஒரு எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் உள்ள பாலம் எது. அந்த பாலம் எதனால் ஆனது. யார் கட்டுப்படுத்துவது. எண்ணங்களுக்கு இடையில் தொடர்பு உண்டா? அல்லது அவை தனித்தனி உலகத்தில் உள்ளவையா. சில சமயம் நினைத்துபப் பார்த்தால், நாம் காலமெனும் சட்டத்தில் மட்டுமே எண்ணங்களை ஏற்றுகிறோம் என்றே தோன்றுகிறது. காலம் என்பது இல்லை என்றால் எண்ணங்களுக்கு எந்த பொருளும் இல்லை.
கே.வி.ஜயானன் அவர்கள் தன் வாழ்க்கை பூராவும் ஒரு பிடிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். நோயுற்ற பிறப்பு, தாயின் இறப்பு, தந்தையின் புறக்கணிப்பு. இவை அனைத்தும் தனக்கு கிடைக்காததால், இவற்றை புறக்கணிக்கும் அனைத்து செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக்க்கொள்கிறார். திருமணம் செய்து கொள்ளும்போது கூட, அதை வெறும் ஒப்பந்தமாகவே நினைத்தார். கதையில் அவரும் அவர் மனைவியும் பிரியும் தருணம் தான் உண்மையில் அவர் அனைத்தையும் தன் ஆழ் மனதில் இருத்திவைத்து அதற்கு நேர் எதிராகவே அனைத்து செயலையும்செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அப்படி செய்யவில்லை என்றால் அவரால் எந்த ஒரு செயலையும் செய்திருக்க முடியாது.
அவரை வாழ வைத்தது எல்லாம் "இரு ஸ்டாலின்"கள் மட்டுமே. அதுவே அவரின் வாழ்க்கையின், சிந்தனையின், எழுத்தின் ஆணிவேர். அதனால் தான் சோவியத் ருஷ்ய உடைந்தபோது தானும் உடைந்து விட்டார். அந்த பிம்பம் நேர்மறையாக இருந்தாலும் , எதிர்மறையாக இருந்தாலும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அதுவே ஒருவரின் வேர். அப்பிம்பம் உடையும் போது, தானும் உடைந்து போகிறான்.
சிறு வயது முதலே கண்ட புறக்ககணிப்பு அவரை அனைத்தின் மீதும் ஒரு பகடிப் பார்வைக் கொள்ள வைக்கிறது. அதுவும் ஒரு இருத்தலியியலே. பிடிப்பு இருந்தால் தானே ஏமாற்றம் வரும். உறவுகளின் , உணர்வுகளின் மேல் மீது எழும் அவ நம்பிக்கை, வேறு ஒரு தூணைப் (பகடி) பற்றிக்கொண்டு தன் இருப்பை காட்டிக்கொள்கிறது. அது அவருடைய தடித்த கண்ணாடியின் உணர்வு. அந்த தடிமம் தன் இருப்பை காப்பாற்றிக் கொள்ள தேவையாக உள்ளது. ஆனால் ஆழ்மனதில் வெறும் சிறகாகவே அது உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏங்கிக்கொள்கிறது. தன் மகன் கையால் செய்யும் இறுதிச் சடங்கே அவரை அந்த ஏக்கத்திலிருந்து விடுபட வைக்கும்.
அவரின் மகனுக்கு அவர் மேல் பிடிப்பில்லை. தன் தந்தைக்கு செய்யும் சடங்கில் நம்பிக்கை இல்லை. தந்தையைப் போலவே அவனும். அவன் அப்படி ஆக இவரும் ஒரு காரணம். தனக்குக் கிடைக்காத தந்தையின் பாசத்தை (தன் இருத்தலியல் காரணமாக) தன் பிள்ளைக்கு இவர் கொடுக்கவில்லை. ஆனால் அதையே அவர் அவனிடம் கடைசியில் எதிர்பார்க்கிறார். இவரின் தந்தை கடைசியில் இவரை எண்ணி ஏங்கியது போல. ஏன் இவ்வாறு சக்கரமாக புறக்கணிப்புகளும் எதிர்பார்ப்புககும் நடந்து கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் "தான்" என்னும் எண்ணதிலிருந்தே தொடங்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படி `தான்` என்ற எண்ணத்தை விடுத்து உலகியலில் ஒன்றி இருக்க முடியும் என்றும் தோன்றவில்லை. அனைத்தும் "பிரதிகிரகை" தலை அசைப்பில்தான் உள்ளதோ.
நம் செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே "நாம்" என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன் உள்ள "எண்ணங்களே" இவற்றுக்கு காரணம். அந்த எண்ணங்களை தீர்மானிப்பதும் நம் "செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே" ஆகும். இது ஒரு சக்கரம் போன்றது என்றே தோன்றுகிறது.
அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி
Friday, 4 December 2020
விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் நாவலின் முதல் வாசிப்பு முடித்து விட்டேன். வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளுக்கு தர்க ரீதியாகவும் தரிசன ரீதியாகவும் விடை காண மேற்கொண்ட பெருமுயற்சியே இந்நாவல். தமிழின் மிகச்சிறந்தப் படைப்புகளில் இந்நாவலுக்கான தனி இடம் உண்டு.
நாவல் மூன்று பாகங்களாக பிரித்து வாசிக்க வேண்டும். வரலாற்று பின்புலமுடன் கற்பனாவாதத்தையும் சேர்த்து வாசித்தால் இந்நாவலின் மொழி பிடி வரும். வாசிக்க தொடங்கிய ஆரம்ப பக்கங்கள் சற்று கடினமாக இருந்தாலும் அதன் மொழியும் கற்பனையும் விஷ்ணுபுரத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். சம்ஸ்க்ருத வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பகுதி கதையின் போக்கிலோ அல்லது கதை மாந்தரின் சொல்லாடிலோ அர்த்தப்பட்டுவிடும்.
நாவல் நேர் கால வரிசையில் தொகுக்கப்படவில்லை. இருந்தாலும், வாசிப்பனுபத்தில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும். இரண்டாம் பாகத்தை முதல் பாகமா வாசித்து பிறகு முதல் பாகத்தை வாசித்தால் கூட, பொருள் முறை மாறாது என்றே நினைக்கிறேன்.
நாவல் வாசிக்க தொடங்கியதுமே நம்மை ஆட்கொள்வது விஷ்ணுபுரத்தின் பிரம்மாண்டம். அதன் பேருருவும், வானுயர்ந்த கோபுரங்கழும், சிற்பங்கழும் வாசிக்கும் போதே நம்மை அண்ணாந்து பார்க்கச் செய்யும். "விஷ்ணுபுரத்தின் மைய கோபுரத்தை நகரின் உள்ளிலிருந்து பார்க்க முடியாது". இதுவே நாவல் உள்ளடங்கிய அனைத்து தத்துவ, ஞான விவாதங்களுக்கும் தொடக்கமான இடமாக நான் காண்கிறேன்.
விஷ்ணுபுரத்தின் ஒழுங்கையும், மக்களின் சமூக கட்டமைப்பையும் விவரிக்கும்போது அது ஒரு கனவு நகரமாக காட்சியளிக்கிறது. அதே சமயம், அந்நகரம் கொண்டிருக்கும் அழுக்கையும், பேதங்களையும் மக்கள் எண்ணாமல் அதன் சிறப்பை மட்டுமே போற்றிக் கொண்டிருந்தனர். அந்தணர்களின் ஒருவனான பிங்கலனுக்கு மட்டும் இந்நகரம் ஏதோ உவப்பாக இல்லை. மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே, முன்னோர் கூறுவனவற்றை ஏற்காமல் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கோயில் வாசலில் ஒரு பெருநோயாளியின் காலினை திருவடி என்பவன் மிதித்ததைக் கண்ட பிங்கலன், தன் மனதில் மிகப்பெரும் ஒவ்வாமையால் ஆட்கொண்டு விடுகிறான்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு கதைமாந்தரும் ஏதாவதொரு புள்ளியில் தத்துவ கேள்விகளில் ஈடுபடுகின்றனர். அனைத்து மானிட அகம் சார்ந்த கேள்விகளும் விவாத பொருளாக வருகின்றன. வாழ்வின் பொருளை, பிரபஞ்சத்தின் உண்மையை எங்காவது ஒரு இடத்தில தொட்டு, மொண்டு பருகிவிட நினைக்கும் ஒரு பேரிலக்கியம் இது. பல்வேறு மறுவாசிப்புகள் அவசியம் நிகழ வேண்டிய நூல் இது.
ஸ்ரீபாத பாகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும், மணிமுடியில் விளக்கம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, பிரம்மராயர் குருட்டு யானையை சரியாக பரிசோதிக்காததால் தண்டிக்கப்படுகிறார். ஆனால் அவரை பழி வாங்கவே, அவர் சோதித்த குருட்டு யானையின் கண்மணிகளில் வந்தமர்ந்து அவரை ஏமாற்றினர் விண்ணவர் என்று அதனூடாக ஒரு கதை விரிந்தோடுகிறது. இப்படியாக ஒவ்வொரு கிளையிலும் கதைகள் முளைத்துக்கொண்டே போவது, இந்நூலின் பிரம்மாண்டத்தையும் வாசகனின் கற்பனையையும் கூட்டிகொண்டே போகிறது.
சோனா நதியில் இருந்து கிளம்பும் காற்று இனிய இசையாக விஷ்ணுபுர மண்டபத்தில் எதிரொலிப்பது, இயற்கையின் இசை மனிதன் அறிந்த அனைத்து தாளங்களை விடவும் இனிமையானதாக தோன்றுகிறது. யானைகளை மனிதன் எல்லா நிலைகளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறான்.யானைகளின்றி அன்று எதுவுமே சாத்தியப்பட்டு இருக்காது.
தான் கண்ட பெண் மேல் முடிவிலா ஆசை கொண்டு பித்துப் பிடித்துப் பிறகு ஒரு துறவியாக மாறும் திருவடி. பிங்கலன், சங்கர்ஷணன், திருவடி அனைவரும் பெண்ணின் மீது கொண்ட காமத்துடன் சேர்ந்து தன் ஞான கேள்விகளுக்கு விடை தேடவும் முயற்சிக்கின்றனர்.
அக்கால சிற்பக்கலையின் சிறப்பும், நேர்த்தியும் அதன் கணித ஒழுங்கும் விஷ்ணுபுரமெங்கும் வருகிறது. விண்ணைத்தொடும் கோபுரங்கள் விண்ணவர் மண்ணில் இறங்கும் ஊர்திகள். மேகத்திற்கு மேலே வானில் உள்ளன கோபுர உச்சிகள். அதன் பிரம்மாண்டமே விஷ்ணுபுர வாசிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதுவே மக்களிடம் ஒரு அமைப்பையும், ஒழுங்கையும் நிர்மாணிக்கும்.
விஷ்ணுபுரம் 'அக்னிதத்தனால்' உருவாக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகிறது. அவரது சந்ததிகளே அதன் ஞானாதிபதியான 'சர்வக்ஞர்' என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணுபுரம் பல்வேறு முறை முழுவதுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் உருவாகும் போது அங்கே விஷ்ணு 'நிர்மால்ய'மாக படுத்திருப்பார். அங்கிருந்தே விஷ்ணுபுரம் மீண்டும் தன்னை வளர்த்துக்கொள்ளும்.
மனதினை கட்டுப்படுத்துவது என்றால் என்ன? மனம் மனமற்ற பொழுதில் என்னவாக இருக்கும். அதுவே ஞானத்தின் கடைசிப் படியா? அனுபவத்தை அறிய முடியுமா? அறியும் பொருட்டு அது முழுமையான அனுபவமா இருக்குமா? போகத்தின் உச்சம் தான் என்ன? காமமா? காமவிடுதலை ஞானத்தின் திறப்பா? அல்லது காமத்தினை அப்படியே ஏற்றல் ஞானத்தை பெருக்குமா? பிரம்மம் என்பது எது? அதை அறிய முடியுமா? பிரபஞ்ச உண்மை என்று ஒன்று உள்ளதா? அல்லது அனைத்தும் தற்செயலின் பேரமைப்பா? பிரபஞ்ச அமைப்பின் விதிகளை யார் உருவாக்கியது? அல்லது அவ்விதிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட வெறும் பிரமையா? மனமற்ற நிலையிலேயே பிரபஞ்ச உண்மையை அறிய முடியுமா? அனைத்திற்குமான ஆதி எது? அல்லது ஆதியற்ற அனாதையா இப்பிரபஞ்சம்?
மேலே உள்ள கேள்விகள் இந்நூல் முழுவதும் வரும் விவாதங்களின் ஒரு சிறு தொகுப்பே. இவை குரு-சிஷ்ய போதனைகள், பொதுவான பேச்சுக்கள், அனைத்துலக ஞானிகள் மத்தியில் நிகழும் விவாதங்கள் என்று எந்த ஒரு பேதமும் அன்றி அனைத்து இடத்திலும் நூல் பூராவும் வந்துகொண்டே உள்ளது.
தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றும் பொருட்டு குடும்பத்துடன் விஷ்ணுபுரம் வந்து, தன் மகனை இழந்து, குடும்பத்தைப் பிரிந்து தாசித் தெருக்களில் தஞ்சம் அடைகிறான், சங்கர்ஷணன். தன் மனைவியால் வெறுக்கப்படுகிறான். பித்துப் பிடித்து அலைந்து இறுதியில் மகாபுராணமான 'பத்மபுராணத்தை' பாண்டிய மன்னன் முன்னிலையில் அரங்கேற்றுகிறான். விஷ்ணுபுரத்தின் அத்தனை வரலாற்றையும் கூறுவது பத்மபுராணம். அதன் இறுதி பிரளயம் பாகத்தை முடிக்காமலேயே அதனை அரங்கேற்றினான் சங்கர்ஷணன். அதுவே காலம் காலமாய் விஷ்ணுபுர வரலாற்றை திரும்ப திரும்ப சொல்லும் பெரும் காவியமாகும்.
கவிஞர்களை பகடி செய்யும் வகையில் நிறைய இடத்தில வருகிறது. "விஷ்ணுபுரத்தில் கவிஞர்களுக்கா பஞ்சம், இங்கு அனைவரும் கவிஞரே" என்று ஒருவர் சங்கர்ஷணனிடம் கூறுவது உச்சம். சங்கர்ஷணன் "ஆழ்வாருக்கு" மருத்துவனாக வேடமிட்டதனாலே, அரசவைக்குள் புகுந்து காவியத்தை அரங்கேற்றினான். அரசவைக் கவிஞரின் "கவிப்பெருமை" பகடிகளுள் ஒன்று.
பாண்டியனின் போக வாழ்க்கையம் அவனை சுற்றி நடக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டும், வல்லாளன் விஷ்ணுபுரத்தை கைப்பற்றும் சூழ்ச்சியும் விவரிக்கப்பட்டுள்ளது.
"மக்கள் மரபுகளை வழிபடுகிறவர்கள். எதிர்காலம் பற்றிய அச்சத்திற்கு மாற்றாக வாழ்க்கையைச் சடங்காக மாற்றி வைத்திருக்கிறார்கள். புதிதாக ஏதும் நிகழ விடக்கூடாது". மனிதன் அச்சப்பட்டுக் கொண்டே இருக்கிறான். வாழ்க்கையை ஒரு சடங்காக மாற்றும் போது அது ஒரு பேரமைதியையும் அதற்கு மேல் ஏதும் சிந்திக்க இல்லை என்னும் உணர்வையும் தரும் போது , அவன் வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்கிறான். மனிதன் எப்போதுமே சிந்திக்க பயந்தவன். அல்லது சிந்தனைகளை குறுக்கிக் கொண்டவன். எல்லாம் எழுத்தப்பட்டவை என்பதனாலே மக்கள் அமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் எதிர்வினையாகவே தத்துவம் பிறக்கிறது. அச்சத்தை மிதித்து வேறு திசையில் எழ அது உதவுகிறது. அந்த தத்துவத்தின் பல்வேறு கண்டடைதலே மதங்களாகவும், மார்க்கமாகவும் உருப்பெறுகிறது. மீண்டும் இதனை அவன் சடங்காக்கி அதன் மேல் நின்று சிந்தித்து புதியவற்றை அடைகிறான் இதற்கு என்றுமே எல்லை இல்லை.
விஷ்ணுபுரத்தை அழிக்க ஒரு சாரார் எப்போதும் முயற்சி எடுத்துக்கொண்டே உள்ளனர். மகாகாசியபரின் ஆணைப்படி சிற்பியினை தன் வசப்படுத்தி இந்த மிகப்பெரும் விஷ்ணுபுரத்தையே ஸ்ரீபாத விழாவின் இறுதி நாளன்று அழிக்க நினைக்கிறார்கள். அந்த சிற்பி பெரும் சேதம் விளைவிக்கும் பொருட்டு மைய கோபுரத்தின் மீது ஏறினான். அங்கு மிகவும் மனம் சஞ்சலப்பட்டு உச்சியிலிருந்து கீழே விழுந்து மாண்டு விடுகிறான். அவன் மனம் ஆட்கொள்ளப்பட்டது.
சுடுகாட்டுச் சித்தன் ஒருவன் பட்டாச்சாரியாரை அவரின் சீடர்கள் முன் விவாதத்தில் தோற்கடித்த ஒரு சிறுவனை தன் சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு அனைத்து போதனைகளையும் கற்பிக்கிறான். அவனை காஸ்யபன் என்று பெயர் வைக்கிறான். அவர்கள் இருவரும் புரியும் ஆனந்தத் தாண்டவத்தை வாசிக்கும்போது நாமும் எல்லாமும் விட்டு ஆட தோன்றுகிறது. அவனும் அவன் சீடனும் மகாஞான சபையில் பங்குகொள்கிறார்கள்.
அஜிதன் என்னும் பௌத்த மார்க்கம் கொண்டவன் விஷ்ணுபுரத்தின் மகாஞான சபையை கூட்ட சவால் விடுகிறான். பாண்டியனின் ஆணைக்கு இணங்க சபை கூட்டப்படுகிறது.
இந்திய ஞான மரபில் இத்தனை மார்க்கங்களும், மரபுகளும் உள்ளது என்பதை ஞான சபையில் நடக்கும் பெரும் தர்க்கங்களையும், தத்துவ விவாதங்களையும் வைத்து தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. அந்த மார்க்கங்களின் உள்ளே செல்ல, இது ஒரு நுழைவாயிலாக இருக்கும். கற்பனை செய்யமுடியாத அளவு எண்ணிக்கையில் மிகுந்தவை.
ஒவ்வொரு தர்க்கமும் இன்னொன்றை விட சிறந்ததாகவும், ஏற்றுக்கொள்ளும் படியும் இருக்கும். அதனை எதிர்த்து சமன் செய்யும் தர்க்கமும் அவ்வாறே இருக்கும். ஒவ்வொரு மார்க்கமும் தங்கள் வாதத்தைத் வைத்து கொண்டிருக்கையில் விஷ்ணுபுர மகாசபையின் சர்வைக்ஞர்(பவதத்தர்) சரியான சந்தர்ப்பத்தில் வாதியின் தர்க்கத்தை உடைக்கும் பொருட்டு அல்லது வாதத்தினை விஷ்ணுபுரத்தின் கோட்பாட்டிற்கிணங்க பதில் கூற முடியாதளவுக்கு சமன் செய்து விடுவார்.
பிரம்மம் என்பதே சத் மற்ற அனைத்தும் அசத். ஏழு வகை உடலை உதறி ஆத்ம, தூய நிலையானா பிரம்மத்தை நோக்கி பயணிப்பதே முக்தி என்று பவதத்தர் பல்வேறு வாதங்களில் நிறுவுகிறார்.
வேதங்களில் இருந்து பல்வேறு மேற்கோள்களும், விவாதங்களும் வந்த வண்ணமே உள்ளன. வேதத்தினை ஏற்றும் மறுத்தும் செய்யும் விவாதங்கள் நிரம்பி உள்ளன.
விஷ்ணுபுரத்தின் ஞானசபையில் நடந்த விவாதங்களில் பல்வேறு மார்க்கம் கொண்டவர்களும் பங்கு கொண்டு தங்கள் தரப்பின் தர்கத்தினை முன்வைத்தனர். இந்திய பெருநிலப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பும் பங்கு கொண்டு விவாதித்தனர். அவ்விவாதங்கள் மட்டுமே தனியாக ஒரு நூலாக கொண்டு வரலாம். இதை மட்டுமே நிறைய முறை வாசிக்க வேண்டும். நமது சிந்தனை ஆழத்தினை சோதிக்கும் பல நூறு கேள்விகளும் தர்க்கங்களும் இதில் அடங்கி உள்ளது. நம்மை மேலும் சிந்திக்க வைக்க இது உதவும். அஜிதரின் தர்க்கங்களை அனைத்து பிரிவினரும் சோதனை செய்து தோல்வியுற்றனர். அணைத்து மார்க்கத்திலும் தர்க்கங்கள் தரிசனங்கலாக தாவும் நேரம் வரும்போது , பவதத்தர் அதனை உடைக்கும் வகையில் கேள்விகளை தொடுத்து விஷ்ணுபுர கோட்பாட்டினை நிலை நாட்டுவார். அதே முறையை அஜிதர் பவததத்தருக்குக் கையாண்டு ஞானசபையில் வெற்றி கொள்ளகிறார்.
அஜிதர், அனைத்தையும் அனுமானமாகவும், அறிய முடியாமையாகவும் கொண்டு தன் தர்க்கத்தை நிலைநாட்டுகிறார். பிரபஞ்சத்தின் ஆதி காரணத்தை நம்மால் அறிய முடியாது என்கிறார். "அறியமுடியாதென்பதை அறிவதே ஆகப் பெரிய மானுட ஞானம்." நாம் அறிந்தது "காலம்" ஒன்றை மட்டுமே. காலத்தினை சக்கரமாக உருவகம் செய்து அதன் மைய புள்ளியே மகாதர்மம் என்று நிலைநாட்டுகிறார். மகாதர்மம் எங்கும் என்றும் நிரம்பி உள்ளது. அது எதுவாகவும் மாறுவது இல்லை. இந்திய ஞானமரபில் பௌத்தம் தான் கொண்ட பெரும் பங்கினை இதில் காணலாம்.
அஜிதர் ஞானசபையை வென்ற பிறகு, மிகவும் சோர்வடைகிறார். அவருக்கு அந்த வெற்றியில் உள்ளூர மகிழ்ச்சி இல்லை. இவை அனைத்தும் மனிதன் தன் அகங்காரத்தை பூர்த்தி செய்யும் செயல்களன்றி வேறில்லை என்று மனம் சஞ்சலப்படுகிறார். விஷ்ணுபுரத்தில் "அஜிதரை" சுற்றி நிறுவனங்கள் எழுப்பப்பட்டு, சமூகம் உருவாக்கப்படுகிறது.
நூலின் இறுதி பாகமான "மணிமுடி"யில் விஷ்ணுபுரத்தின் "பிரளயம்" வருகிறது. பல நூறாண்டுகள் கழித்து வருவதாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் வந்த திருவடி, பிங்கலர், ஸ்ரீதரர், சங்கர்ஷணன் ஆகியோருக்கு தனியாக மார்க்கமும், அவரை பின்பற்றுவோரும் வருகின்றனர்.
பிரம்மாண்டங்களுக்கு பேர்போன விஷ்ணுபுரம் சிதைந்து அழிவின் விளிம்பில் தத்தளிக்கிறது. போர்களால் கோபுரங்கழும் சிற்பங்களும் சிதைக்கப்பட்டு பெரும் காடாக விஷ்ணுபுறம் காட்சி அளிக்கிறது. ஊரில் நூற்றுக்கும் குறைவான மக்களே வாழ்ந்தனர். அனைவரும் மதுரை போன்று ஊர்களுக்கு பெயர்ந்து கொண்டே இருந்தனர்.
இமயமலை முகடுகளில் மகா அஜிதரையும் விஷ்ணுபுரம் என்ற ஊரையும் கேள்விப்பட்டு "யோகவிரதன்" என்னும் பௌத்தன் விஷ்ணுபிரத்திற்கு வந்து "ஸ்ரீசக்கரம்" பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறான். அவனுடன் சங்கர்ஷணன் மார்க்கம் கொண்டவனான "பாவகன்" பல்வேறு தர்க்கங்களில் ஈடுபடுகிறான்.
செம்பர்களைப் பற்றியும், அவர்களின் மூப்பனானஆதிமூப்பனே விஷ்ணு என்றும் ஒரு மாற்று வரலாறு சொல்லப்படுகிறது. விஷ்ணுபுரம் காடாகி கோலம் கொண்டுள்ளதால், காட்டின் வர்ணனைகள் நிறைய இடம்பெற்றுள்ளது. வேதத்ததன் (கடைசி சர்வஞர்) சோலைபைத்தியமாக காடுகளில் மலைகளில் நதிகளில் சுற்றி அலைகிறார். மனம் மட்டுமே உடைய ஒரு தூய ஆத்மாவாக, எந்த ஒரு தர்க்க ஞானமும் , மனிதன் கட்டி அமைத்த பல்வேறு நெறிமுறைகளும் அன்றி வருவது, மனிதனின் ஏக்கத்தையும், சுதந்திரத்தின் தூய்மையையும் மனம் அற்ற நிலையின் மனிதத் தன்மையும் இருப்பதாக அமைகிறது.
ஹரிததுங்காவின் இருப்பே இதில் எப்போதும் உள்ள இருப்பாகும். அதுவே விஷ்ணுபுரத்தின் அசையாத சாட்சி. அதன் தோற்றமும், வாழ்க்கையும், அழிவும் அச்சிகரம் மட்டுமே அறியும்.
நூலினை வாசிக்க வாசிக்க பல்வேறு இடங்களில் நம்மை அறியாமலேயே மயிர்கூச்சு அடைகிறோம். சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, அதில் சில தர்க்கத்தின் முடிச்சினை நாம் அறிந்த உவகையினாலும் , சில தரிசினத்தின் தொடக்க புள்ளியைக் கண்ட பொழுதுமாக உள்ளது. தர்க்கத்திருக்கும் தரிசினத்திற்கும் நடக்கும் இடைவிடாத கண்ணாமூச்சி ஆட்டமாக இந்நூல் உள்ளதோ என்ற சிந்தனையும் எழுகிறது. அல்லது மனித மனதிற்கு அப்பாற்பட்ட வேறொன்றை தொட முயலும் ஒரு பெரும் முயற்சியாக நான் இதைப் பார்க்கிறேன்.
Wednesday, 2 December 2020
காந்தி - கடிதம்
அன்புள்ள ஜெ,
தங்களின் 'தகடூர் புத்தகப் பேரவையின்' காந்தியிடம் செல்ல வழிகாட்டியவர்கள் சிறப்புரையை நேரலையில் கண்டேன். மேலும் தங்களின் காந்தி பற்றிய கடிதங்களும் (உங்களின் வலைதளத்தில்), தங்களின் 'உரையாடும் காந்தி' புத்தகமும் வாசிக்கும் பொழுது, நம் பாடப் புத்தகத்திற்கு அப்பால் உள்ள ஒரு காந்தியினை புரிந்து கொள்ள உதவி புரிகிறது.
காந்தியத்தின் தேவை முன் எப்பொழுதையும் விட இன்று மிகவும் தேவைப்படுகிறது. காந்தியை சொல்லால் முழுவதுமாக விவரிக்க முடியாது என்றே தோன்றுகிறது. எவ்வளவு விவரித்தாலும் காந்தியத்தை செயலால் மட்டுமே முழுமைப் பெற வைக்க முடியும். தன் வாழ்நாள் முழுவதும், 'இலட்சிய செயலாற்றிக்கொண்டே' இருந்தவர்கள் வரலாற்றில் மிகவும் குறைவு. செயலே சொல்லாகவும், சொல்லே செயலாகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் காந்தி.
உண்மையில் காந்தியை எதிர்த்தலும் ஒரு வகையான காந்தியமே. அவரின் ஏதோ ஒரு கூற்று நம்மை நிலைகொள்ள செய்யாமல் ஆழ் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது என்றால் , அதனை சரி செய்ய நாம் அந்த கூற்றுக்கு ஒரு எதிர்வினையை செய்து பார்ப்போம். அது அவர் கூறியதற்கு மாற்று கருத்தாக இருந்தாலும் அச்செயலும் காந்தியத்தினால் முளைத்த விதையே. அவற்றில் நாம் வெற்றி கண்டாலும் தோல்வி கண்டாலும் அதன் வேர் காந்தியத்தில் உள்ளது. செயலாற்றிக்கொண்டே இருப்பதன் முக்கியதுவத்தை அது உணர்த்துகிறது.
தாங்கள் ஒரு வாசகர் கேள்விக்கு (இவ்வளவு அரசியல் திரிப்புகள் உங்கள் சொல்லின் மேல் சொல்லப்பபட்டாலும் , நீங்கள் ஏன் சலிக்காமல் திரும்ப திரும்ப உரையாடிக்கொண்டே இருக்குறீர்கள்? என்ற வகையான கேள்விக்கு), 'உரையாடிக்கொண்டே இருப்பது என் கடமை, அதை ஏற்பதும் ஏற்காததும் வாசகர் மனதில் உள்ளது. வாசகனுக்காக நான் உரையாடவில்லை, எனக்காக உரையாடுகிறேன்' என்ற வகையில் பதில் கூறினீர்கள். அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காந்தியின் கூற்றே.
அன்புடன் ,
பிரவின்,
தர்மபுரி