Friday 30 April 2021

குற்றமும் தண்டனையும்

                                                    குற்றமும் தண்டனையும்

        'தஸ்தயேவ்ஸ்கி' அவர்களின் 'குற்றமும் தண்டனையும்' நாவலின் முதல் வாசிப்பை முடித்து விட்டேன். Wordsworth classics பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பிலேயே வாசித்தேன். தமிழ் மொழிபெயர்ப்பில் இன்னொரு முறை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

        19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் மிக முக்கியமான நூற்றாண்டு. அறிவியலில்  மட்டுமில்லாமல் கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிகுந்த பங்களிப்புகள் நிறைந்த நூற்றாண்டு. சமூகவியல் மாற்றங்கள், மக்களின் விடுதலை சிந்தனைகள், மனிதன் என்னும் சுய நோக்கு ஆகிய அனைத்தும் மேலோங்கி இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் ருஷ்ய சமுக, இலக்கியத்திலும் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செகோவ் அவர்களின் நூற்றாண்டு.

        தஸ்தயேவ்ஸ்கியின் சுய வாழ்க்கைச் சித்திரத்தை பின்னணியாய்க் கொண்டு,  'குற்றமும் தண்டனையும்' வாசித்தால், அவர் வாழ்ந்த கால கட்டத்தின் எழுச்சிகள், அவரின் சிறை அனுபவங்கள், மற்ற சிந்தனையாளர்களினால் தான் அடைந்த எண்ணங்கள், தன் சொந்த வாழ்க்கையின் அத்தனை இன்னல்கள், இந்நாவல் மேலும் ஒரு திறப்பாக இருக்கும்.

        நாவலின் நாயகன் 'Raskolnikov'. சட்டம் படிக்கும் ஒரு மாணவன். தன்  சொந்த ஊரை விட்டுவிட்டு, st. petersberg நகரில் சட்டம் படித்து வருகிறான். படிப்பும் பாதியில் நின்று விடுகிறது, தான் மேற்கொண்ட வேலையும் இப்போது இல்லாததால், மிகுந்த வறுமையில் உள்ளான். தான் குடியிருக்கும் சிறு அறைக்கு வாடகை கூட பல மாதங்களாக கொடுக்க இயலாமல் இருக்கும் நிலை.

        தன்னுள்  ஏன் அந்த எண்ணம் தோன்றியது என்றே அவனுக்கு தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணத்தோடு தான் அவன் கடந்த சில மாதங்களாகவே அலைந்து கொண்டிருந்தான். இந்த எண்ணத்தின் அர்த்தம் என்ன? ஏன் அந்த எண்ணம் தன்னுள் முளைத்தது என்று அவனுக்கு தெரியவில்லை. அந்த எண்ணம் அவனுக்கு ஒரு கனவு போல் எப்போதும் தோன்றியது அதை அவன் பூர்த்தி செய்வான் என்று அவனே நம்பவில்லை. ஆனால் அந்தக் கனவின்  பின்னாலேயே அவன் அதற்கு தேவையான அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருக்கிறான். அவனை அறியாமல் அந்த கனவை நோக்கி சென்றுகொண்டிருந்தான்.

        அந்த வயதான அடகுப் பெண்மணியை அவன் கொலை செய்ய எண்ணியதே அவனுடைய எண்ணம். அவன் எப்போதுமே எங்கு போகிறான் என்று அவனுக்கே தெரியாது, எப்போதும் சிந்தனையிலேயே இருப்பான். அவன் தற்செயலாக அந்தப் பெண்மணியின் தங்கை, மார்க்கெட்டில், வேறு யாரோ ஒரு கடைக்காரரிடம் நாளைக்கு இரவு 7 மணிக்கு வந்து பொருளை வாங்கிக் கொள்வதாக பேசிக்கொண்டிருக்கிறாள். அதை இவன் ஒற்றுக் கேட்டு விடுகிறான்.

        அடுத்த நாள் இரவு 7 மணிக்கு அவன் தன்னை தயார் செய்து கொண்டு இருந்தான். ஒரு கோடாரி  அவனுக்கு தேவைப்பட்டது அதை லாவகமாக இன்னொரு அறையிலிருந்து களவாடிக் கொண்டு விட்டான். அதை தன்கோட்டில்  வைத்து மறைத்துக்கொண்டு அந்த வயதான அடகு  பெண்மணி வீட்டிற்கு சென்றான். வீட்டிற்குச்  சென்று அவள்  வீட்டின் முகப்பில் இருக்கும் அழைப்பு மணியை அழுத்தினான். அந்த வயதான பெண்மணி கொஞ்ச நேரம் கழித்து கதவை மிகவும் எச்சரிக்கையுடன் திறந்தாள். அவன் சட்டென்று உள்ளே புகுந்தான். அவள் ஒரு நிமிடம் திமிரி விட்டாள். இவன் தன்னிடம் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து இதை அடகு வைக்க வந்திருப்பதாகவும் இதற்கு பணம் கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டான். அந்த பொருளை அவள் கையில் வாங்கி பார்த்துக் கொண்டிருக்கையில் கோடாரியை  எடுத்து அவள் மேல் மண்டையில் ஓங்கி அடித்து அவளை கொலை செய்கிறான். பின்பு அவளின் உள்ளறையில் சென்று அங்கிருக்கும் பெரிய பீரோவில்  கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்து க்கொண்டான்.

        அப்பொழுது திடீரென்று முன் அறையில் யாரோ இருப்பது போல் உணர்ந்ததால் அங்கு வந்து பார்த்தபோது , "Lizavetta" தன்  அக்காவின் பிணத்தை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளின் முகத்தின் மேல் கோடாரியை எடுத்துச் சென்ற பொது, அவள் ஒரு சிறு சத்தம் கூட போடாமல் , உணர்வுகளற்று கிடந்தாள். அந்த தருணத்தில் அவனுக்கு ஏற்பட்ட உணர்வினை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கிருந்து அவன் ஓட எண்ணினான். ஆனால் அவன் அந்த கோடாரியை அவளின் தலையில் பாய்ச்சினான்.

        அவன் அந்த 'குற்ற'த்தை செய்து முடித்தான்.

        குற்றம் செய்து முடித்து பல நாட்களும் அவன் ஒரு மயக்க நிலையிலேயே காணப்பட்டான். அவனின் செயல்கள் அனைத்தும் ஒரு வகையான மயக்க நிலையிலேயே செய்து கொண்டிருந்தான். ஆனால் அந்த குற்றத்தைப் பற்றி யாரவது பேசும்போது  மட்டும் மிகுந்த கவனிப்புடனும், ஒரு எச்சரிக்கை உடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தான். அந்த குற்றம் அவனை தன்னில் இழுத்துக்கொண்டது. அதில் அவன் தினமும் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் களவாண்டப் பொருட்களை அவன் முழுதாகக்கூட பார்க்கவில்லை. எல்லாவற்றயும் ஒரு பெரிய கல்லின் அடியில் புதைத்து வைத்துவிட்டான்.

        அவன் அந்த கொலை புரிவதற்கு முன்னால், Marmeladov என்னும் அரசு அதிதாரியை ஒரு உணவகத்தில் சந்திக்கிறான்.  Marmeladovவே  இவனிடம் வந்து பேச ஆரம்பிக்கிறான். தன்னுடைய வாழ்க்கையும், தான் எப்படி அரசு அதிகாரியாக இருந்து குடிக்கு அடிமையாகி அதை இழந்துவிட்டிருப்பதையும் சொல்கிறான். வறுமையின் காரணமாக தன் குழந்தைகள் பசியால் வாடுகின்றன எனவும், அவனின் இரண்டாம் மனைவி எப்படி ஒரு நாள் தன் மகளின் (இவனின் மூத்த மனைவிக்கு பிறந்த பெண்) உபயோகமற்ற நிலையைக் கண்டு வசை பாடினால் என்றும்,   அதற்கு அவள் தன் சின்னஞ்சிறு வயதில் எப்படி ஒரு விபச்சாரியாகி தன் வீட்டை பார்த்துக் கொள்கிறாள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பெரிய மகள் Soniya தன் இளம் வயதில் தன சகோதரர்களுக்காக விபச்சாரியாகி, தன்னை தியாகம் செய்கிறாள். 

        அவனின் மயக்க நிலை அவனை ஒரு இடத்தில இருக்க விடாமல் அலைந்து திரிய வைக்கிறது. St. petersbergஇன் வீதிகளில் அவன் அலைந்து  திரிகிறான். அவனின் கால்கள் போகுமிடம் எல்லாம் தானும் செல்கிறான். மனம் திடீரென்று நல்ல நிலைக்கு வரும் தான் எப்படி இங்கு வந்தோம் என்பதே தெரியாமல் திரும்பவும் 'மயக்க' நிலைக்கு செல்கிறான். அப்படி ஒரு தருணத்தில் ஒரு இளம் பெண்ணை சாலையோரம் சந்திக்கிறான். அவள் மயக்க நிலைமையில் உள்ளாள். தன உணர்வுகள் அற்ற நிலையில். அவளை அங்கு இருக்கும் ஒரு காமுகன் உபயோகப்படுத்தி கொள்வான் என்ற அச்சத்தால், இவன் அவனிடம் சென்று சண்டை இடுகிறான். ஒரு காவல் அதிகாரி அங்கு வரவே, அவன் நடந்தவற்றை கூறி அந்த பெண்ணை அவள்  இருப்பிடத்திற்கு அழைத்து செல்ல முற்படுகிறான்.ஆனால் அந்த காமுகன் அவளை திரும்பவும் பின்தொடர்ந்து வருகிறான். இதை கண்ட அவன் திடீரென்று தான் எதற்கு அவளை காப்பாற்ற வேண்டும் என நினைத்து அப்படியே விட்டு செல்கிறான். அவளை காப்பாற்றுவதில் அவன் என்ன பயன் என்று யோசிக்கையில், அப்படியே மனம் அதை விட்டு விடுகிறது. அவளை அவன் அப்போது காப்பாற்றி விட்டால், அடுத்த கொஞ்ச நேரத்தில் வேறு ஒருவனால் சீரழிக்கப் படுவாள். இதை எல்லாம் அந்த பெண்ணும் விரும்பக் கூடும். தன் செயலால் ஒரு பயனும் இல்லை என்றே நினைக்கிறன்.  செயலின் அர்த்தமின்மையில் தன்னை இழந்துவிடுகிறான்.

        தன் அன்னை அவனுக்கெழுதிய கடிதத்தில், அவனின் தங்கை ஒரு பணக்கார வக்கீலை (Pyotr Petrovich) திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அது நம் அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு நற்செயல் எனவும் எழுதி இருந்தாள்.அந்த வக்கீலின்  மேட்டிமை எண்ணங்களும், பெண்ணடிமை எண்ணங்களும் ஓரிரு வரிகளில் எழுதி இருந்ததைக் கண்டு கொதிப்படைந்தான். அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் பொருட்டு அவன் தங்கை வாழ்க்கையை தியாகம் செய்கிறாள் என்பதை அவனால் சீரணிக்க முடியவில்லை. 

        அவனுடைய நண்பன் Razumihin அவன் மயக்க நிலையில் இருந்த எல்லா தருணங்களிலும் அவனுக்கு உறுதுணையாகவே இருந்தான். அவனின் மருத்துவ நண்பன் zossimovவும் Raskolnikovஐ தங்களால் முடிந்த வரை பார்த்துக்கொண்டனர். தன தங்கையின் மாப்பிள்ளை அவனைக் காண அறைக்கு வந்தபோது அவனை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான். 

        Porfiryயும், Raskolnikovவும் தங்களின் முதல் சந்திப்பில் விவாதம் செய்தது ஒரு தத்துவார்த்தமானதாகும். அவன் எழுதிய ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டி Porfiry அதன் விளக்கங்களையும், அது எழுத முற்பட்ட காரணங்களையும் கேட்டார். அந்த கட்டுரையில் அவன் "சாமானியர்கள் மற்றும் சிறப்பு மக்கள்" என்ற வாதத்தை கொண்டு வருகிறான். "சிறப்பு மக்கள்" (extraordinary people) தாங்கள் சிறப்பானவர்கள் என்பதால் ஒரு சமூக கட்டுப்பாட்டு எல்லையை மீறலாம் என்றும், அந்த நோக்கில் கொலை கூட புரியலாம் என்றும் விவாத பொருளாக இருந்தது. இதனை பல்வேறு எடுத்துக்காட்டு (நெப்போலியன்) வழியாக அவன் விவாதம் செய்தான். அவர்கள் தங்கள் சம காலத்தில் இருந்த எல்லைகளை கடந்து தங்களுக்கென்று ஒரு எல்லையை (அல்லது எல்லையின்மையை) உருவாக்கிக் கொண்டார்கள். அதை சாமானியர்கள் நோக்கிற்காக செய்தார்கள். "Cause for the larger good" என்ற விவாதமே அது.

        மேலே உள்ள பேசு பொருளை சிந்திக்கும் போது, அது ஒரு வகையில் உண்மையாகவும் தோன்றலாம். அதை விட்டால் வேறு வழியும் இல்லை. சாதாரண மக்கள் கோட்டிற்குள்ளாகவே வாழ்வார்கள். அதை தாண்டி போகும் சிறப்பு மக்கள் போகும் வழியில் ஓரிரு குற்றங்கள் செய்வது பெரும் பிழை இல்லை என்றும் தோன்றும். இது என்றுமுள்ள சிந்தனை "Law of the collateral damage". ஆனால் சிறப்பு மக்கள் என யார் ஒருவரை முடிவு செய்வது. அப்படி ஒருவன் செய்தால்,   தன்  சுயநலத்திற்காக குற்றம் செய்தால், அதன் விளைவு என்ன? அப்படி ஒரு நிலைமையை சமூகம் எவ்வாறு பார்க்கும்?

        கதை நடக்கும் நூற்றாண்டு ஐரோப்பிய பின்னணியில் பல்வேறு புதிய கருத்துக்கள் ஒன்றோடொன்று மோதி விளையாடிக் கொண்டிருந்த காலம். Nihilism என்னும் மறுப்புவாதம் பரவலாக பேசிக் கொண்டிருந்த கால கட்டம். வாழ்க்கையின் அர்த்தமின்மையை வரையறுக்கும் தத்துவங்கள் மக்களை பலவாறு ஆட்கொண்டன. அவர்களின் பண்பாட்டுப் பின்னணிகளுடன் இதனை மோத விட்டு, ஒன்றுக்கு எதிராகவும் , ஆதரவாகவும் கருத்துக்கள் மேலோங்கின. அந்த பின்னணியிலிருந்து நாம்  Raskolnikovயும்,  அவனது குற்றம் மற்றும் அதன் பின்னணியையும் நோக்க வேண்டும்.

        காவல் அதிகாரி zametovவிடம் அவன் ஒரு சந்திப்பில், அவன் தான் அந்த கொலையை  செய்ததாக விளையாட்டாக சொல்வான். அவன் 'மயக்க' நிலையில் இருந்ததால் அதை அந்த அதிகாரி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.அவனுக்கு பல்வேறு சமயங்களில் இதை வெளிப்பபடையாக யாரிடமாவது சொல்ல முற்பட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். அதுவே அவனுக்கு ஒரு பெரிய "தண்டனை"யாகவும் இருந்தது. அவன் தன குற்றத்திற்கு "அங்கீகாரம்" தேடியே அலைந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஏன் அவன் அதைக் கோர வேண்டும்? அவன் தன்னை ஒரு சிறப்பு மக்களாக கற்பனை செய்து கொண்டான். அவனும் ஒரு நெப்போலியனாக தன்னை உருவகித்துக் கொண்டான். அதை தனக்கு தானே நிரூபிக்கவே அவன் அந்த கொலையை செய்தான்.    

        வீதியில் ஒருவன் குதிரை வண்டியில் அடிபட்டு சாகக் கிடப்பதைக் கண்டு, அவன் சென்று பார்க்கையில் அது Marmeladov என அறிந்து, அவனைத் தூக்கிக்  கொண்டு அவன் வீட்டிற்கு செல்கிறான். அங்கு Marmeladov இறந்து விடுகிறான். அவனின் இரண்டாம் மனைவியின் நிலமையைக் கண்டு, தன அன்னை அவனுக்கு அனுப்பிய பணம் இருபத்தைந்தை அவளிடம் எந்த ஒரு யோசனையும் செய்யமல் கொடுத்து விடுகிறான். அவனிடம் அடுத்த வேலைக்கு ஒரு பணமும் இல்லை. Marmeladov வின் மூத்த மகளை அங்கு அவன் காண்கிறான். அந்த குடியிருப்பில் தான் அவன் தங்கை மாப்பிள்ளையும் வாடகைக்கு வசிக்கிறான். அவனும் அதை பார்த்து விடுகிறான். 

        கொலை புரிந்த இரு நாட்கள் கழிந்து, அதே அறைக்கு சென்று அவன் பார்க்கிறான். அவன் மனம் கலங்கி இருந்தது. அந்த அறையில் வேலை செய்பவனிடம் "ரத்தம்" பற்றி விசாரிக்கிறான். அவன் ஏன் அங்கு சென்றான், எதை அங்கு எதிர்பார்த்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவனின் இந்த செயல், அவன் மேல் ஒரு சந்தேகத்தை உண்டு பண்ணியது. இதைக்கண்டு  ஒரு வயதானவன், அவனைப் பின்தொடர்ந்து அவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனை ஒரு கொலையாளி என்று கூறிவிட்டுச் செல்கிறான். இதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் கொலை புரிந்ததை தன் மூலமாகவே உலகிற்கு தெரிய வேண்டும் என்று அவன் தன்னுள் நினைத்துக் கொண்டிருந்தான். அவனே அந்த கொலையை தான் தான் செய்தது என்று சொன்னாலும் அதை கேட்பவர் நம்பவில்லை. ஆனால் இன்னொருவன் தன்னை கொலையாளி என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

        Porfiryயை இரண்டாம் முறை அவரது அலுவலகத்தில் சந்திக்கிறான். அவர்கள் இருவருக்கும் ஒரு மானசீகமான 'மனப்போர்' உழன்றுகொண்டே இருக்கிறது. Porfiry இவனை மனரீதியாக மிகவும் சோதிக்கிறார். அந்த "ரத்த" சம்பவத்தை அவனிடம் கேட்கும் போது , அவன் அதற்கு தான் ஒரு நிலையில் இல்லை எனவும், ஒரு 'மயக்க' நிலையில் காய்ச்சலுடன் அங்கு சென்றதாகவும் சொல்கிறான். அங்கு வேலை செய்பவர்களைப் பற்றிய ஒரு கேள்விக்கு, அவன் ஒரு கணப்பொழுதில் அத்தனை சாத்தியங்களையும் யோசித்து அவருக்கு பதில் கூறுகிறான். அவன் அவரிடம் அந்த கொலையை அவன்  தான் செய்தேன் என்பதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. இந்த 'மனப்போரில்' அவன் மூழ்கி விடுகிறான். இது நடந்து கொண்டிருக்கும் போது, தன சுய நிலையை இழந்து அவரிடம் அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் நேரத்தில், எதிர்பாராத விதமாக Nikolay ( பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி) Porfiry அறைக்குள் வந்து அவன் தான் கொலை செய்ததாகவும் , தன்னை கைது செய்து தண்டனை கொடுக்கும் படியும் கெஞ்சுகிறான். 

        நாவலின் ஒரு முக்கியமான கருத்தியல் விவாதமாக Nikolayயின் சுய தண்டனை ஏற்றலை குறிப்பிடலாம். அதனையே Porfiryயும் Raskolnikovவிடம் விவாதம் செய்கிறார. Nikolay ஒரு பழமைவாதி. பழைய கிருத்துவத்தின் மேல் நம்பிக்கை உடையவன். அவன் 'சுயவதை' என்பது கடவுளை அடையும் ஒரு வழியாகவே பார்க்கிறான். இது ருஷ்ய மட்டும் அல்லாமல் அனைத்து சமூகங்களிலும் மதங்களிலும் உள்ளது. நாம் 'நேர்த்திக்கடன்' என்று உடலை வருத்தும் செயல்களில் ஈடுபடுவதும் அதுவே. ஒரு சாமானிய மனிதனுக்கு அதுவே கடவுளை அடையும் வழி. தன்னை வருத்தி அர்பணித்தல். அதில் ஆணித்தரமாக இருத்தல். அவர்கள் வாழ அது ஒரு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. 

        Raskolnikovவின் தங்கை அவன் பொருட்டு தியாகம் செய்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாவலில் முழுவதும் எந்த தியாகத்தையும் அவனால் புரிந்து கொள்ளவும், ஏற்று கொள்ளவும் முடியவில்லை. தன் தங்கையின், Marmelodov இரண்டாவது மனைவியின், Marmelodovவின் மூத்த மகள் Soniyaவின், இவை அனைத்தும் அவனுக்கு மேலும் உளக் கொந்தளிப்பை மட்டுமே அளித்தது.  ஏன் ஒரு மனிதன் தியாகம் செய்ய வேண்டும், மற்றவரின் பொருட்டு. தியாகம் ஒரு அன்பின் வெளிப்பாடு, கருணையின் உச்சமாகவே எனக்கு தோன்றுகிறது. சட்டென்று, Amitav Ghosh அவர்களின் 'The Shadow Lines' நாவலின் இறுதியில் அவர் கூறும் ஒரு வரி நினைவுக்கு வருகிறது. 'Sacrifice is a real mystry'. 

        சோசியலிச "கம்யூன்" சிந்தனைகளும் அவற்றின் கருத்தியல் மோதல்களும் நாவலில் மேலோட்டமாக வந்து செல்கிறது. தஸ்தயேவ்ஸ்கி பார்வையில் "கம்யூன்" வழியாக உணர்வுகளற்ற, பண்பாடற்ற  ஒரு செங்கல் மனிதர்களை சோசியலிசம் உருவாக்க முற்படுகிறது என்றே சொல்லலாம். அவர்கள் வரலாற்றை அப்படியே நிறுத்தி, வெறும் கொள்கை வழியாக ஒரு சமூக கட்டுமானத்தை நிறுவ மேற்கொள்கிறார்கள். குடும்பம், திருமணம், உறவு, தொழில்  போன்றவற்றில் திறந்த மனப்பான்மை கொண்டால் மனிதன் அடையும் துன்பங்களில் பெரும்பாலானவை தவிர்க்கப்படும் என்பதே அவர்களின் வாதம். ஆனால் மனிதன் என்றுமே தன் பண்பாட்டை விடுத்து வாழ இயலாது, அப்படியே வாழ்தலும் அது வெறும் செயற்கை வாழ்வே என்ற எண்ணமே தோன்றுகிறது. பண்பாட்டுக் கூர்களினால் ஆனதே மனித மனம். 

        St. Petersbergன்அமைப்பு, மக்களின் பொது வாழ்க்கை, விழாக்கள் போன்றவை விரிவாக இல்லாமல் இருந்தாலும், கதையின் தத்துவ தளத்திற்கு போதுமானதாக உள்ளது. நகரத்தின் தெருக்கள், கேளிக்கை விடுதிகள், உணவுக்கூடங்கள், உழைக்கும் மக்களின் சாதாரண கேளிக்கைகள் போன்றவை வந்து செல்கின்றன. 

        தன் தங்கை  முன்னாள் வேலை செய்த வீட்டின் உரிமையாளன் St. Peterberg வருவது, கதையில் ஒரு திருப்பமாக உள்ளது. Svidrigailov நகரத்துக்கு வந்ததும் Soniyaவின் பக்கத்து வீட்டில் குடிஅமர்வது, Raskolnikovஐ பின் தொடர்வது, ஒரு புதிராக அமைந்துள்ளது. தன் தங்கையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததற்காக அவன் மேல் Raskolnikovவுக்கு ஒரு காழ்ப்பு உண்டானது. நகரத்துக்கு அவன் வந்த காரணமே அவன் தங்கையிடம் பேசுவதற்காக என்றும், அவளுக்கு பத்தாயிரம் rouble உயிலாக எழுதி வைத்திருப்பதாகவும் அவன் சொன்னான். பயனாக தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், ஒரேயொரு முறை மட்டும் அவளிடம் பேசினால் போதும் என்றும் அவனிடம் கூறினான். 

        Raskolnikov Soniyaவை, அவளின் தந்தை இறுதிச் சடங்கில், அவள்மேல் திருட்டுப் பழி சுமத்திய pyotr petrovichவிடம்  (தன் தங்கையின்  மாப்பிள்ளை) இருந்து காப்பாற்றுகிறான். தன் தங்கையின் பொருட்டு அவனை தான் கடிந்ததனால், தன்னை பழி வாங்கவே அவன் உன் மேல் திருட்டு பட்டம் கட்டினான் என்று பின் Soniyaவின் அறைக்குச் சென்று அவன் அதை அவளிடம் விளக்கினான். அப்போது அவன் தன்னுள்ளே வைத்திருந்த அந்த ரகசியத்தை அவளிடம் கூறினான். அவன்தான்  அந்த இரு கொலைகளை செய்ததாக சொன்னான். அதை கேட்டு அவளால் நம்ப முடியவில்லை. பிறர் துன்பத்தில் , தன் கையில் இருப்பதை அப்படியே அள்ளிக் கொடுக்கும் இவர் எப்படி கொலை செய்ய முடியும் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். 

        தன் அறையில் வைத்திருந்த பைபிளை எடுத்து "லாசர்" உயிர்த்தெழும் சம்பவத்தை வாசிக்கிறாள். அது அவனுக்கு தான் உயிர்த்தெழுவது போன்ற  எண்ணத்தை அளித்தது. தன் அனைத்து துன்பங்களின் தீர்வையும் கடவுளிடம் மன்றாடும் மனிதர்களிடம் இரக்கமும், கருணையும் இருக்கிறது. அவனுக்கு அப்போதே நன்றாக தெரிந்தது, அவள் அவனை விட்டு இனிமேல் ஒருபோதும் பிரியமாட்டாள் என்று. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். அவன் இதை எண்ணியதும் அவனால் அந்த அறையில் இருக்க முடியாமலே வெளியே செல்கிறான்.

        Svidrigailov, இதை எல்லாம் பக்கத்து அறையில் இருந்து ஒற்றுக் கேட்டு, Raskolnikovவின்  தங்கையை தனிமையில் வரவழைத்து அவளை மிரட்டுகிறான். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன். அவள் பயந்து தன்னிடம் இருந்த பழைய கைத்துப்பாக்கியை எடுத்து சுட முற்படுகிறாள். குண்டு அவன்மேல் உரசிச் செல்கிறது. அவன் அவளை நோக்கி முன்னேறும்  போது அவள் சட்டென்று அனைத்தையும் தூக்கி எரிந்து, அனாதையாக நிற்கிறாள். அந்த ஒரு நொடியை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சட்டென்று அவளை போய்  விடும்படி சொல்கிறான். அவளும் சென்று விடுகிறாள். அவன் கீழே இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொள்கிறான்.  

        Soniyaவின் சின்னன்னை இறந்த பிறகு, Svidrigailov தன் சொந்த செலவில் அவளின் குழந்தைகளை  ஒரு விடுதியில் சேர்க்கிறான். அவன் வாழ்ந்ததற்கு ஒரு அடையாளமாகவே அதை அவன் செய்தான் என்றே  நினைக்கிறேன். அவன் அந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறான், ஒரு சாட்சியின் பார்வையில். 

        தஸ்தயேவ்ஸ்கி கதையில் 'தற்செயல்'களை பல இடங்களில் தொட்டுச் செல்கிறார். Lizavettaவை Hay மார்க்கெட்டில் பார்த்து அவள் பேசியதை ஒற்றுக் கேட்டதனால் தான் அவனால் அன்று சென்று கொலை செய்ய முடிந்தது. அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் தருவாயில் Nikolay வந்து தான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொள்கிறான். Svidrigailov Soniya வின் பக்கத்துக்கு அறையில் இருப்பது. Pyotr Petrovitch, Marmeladov வீட்டின் குடியிருப்பில் வசிப்பது.  Marmeladov விபத்தை இவன் பார்ப்பது. தற்செயல்களின் ஊடாட்டமாகவே கதை செல்கிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்வுக்கும், அந்த நிகழ்வு மனிதர்களின் எண்ணங்களுக்கும் ஒரு கோடு இழுக்கும் போது, இது வெறும் தற்செயல் என்றும் கூறி விட முடியாது.

        Epilogueல், Raskolnikov குற்றத்தை ஒப்புக் கொண்டு ஒன்பது வருடம் சைபீரியாவிற்கு சென்ற பொது, Soniya அவனை பின்தொடர்ந்து அங்கு குடியேறுகிறாள். அவனுக்கு தெரியும் அவன் நிழலாக அவள் என்றும் இருப்பாள் என்று. அதை அவன் ஒருவாறு ஏற்றுக் கொண்டான். அன்பும், கருணையும் கொண்டவர்களால் மட்டுமே அத்தகைய செயலை செய்ய இயலும். அவளிடம் இருந்து அவன் பிரிகையில், அவள் கொடுத்த சிலுவையை தன்னுடனேயே அவன் வைத்துக் கொண்டிருந்தான்.

        தஸ்தயேவ்ஸ்கி அக்கால கட்டத்தின் எழுச்சிகளையும், Nihilism மேல் தனக்கு இருந்த அவ நம்பிக்கைகளையும், சோசியலிச செயல்பாட்டையும், தன் பண்பாட்டு வேர்களையும் ஒன்று திரட்டி அதன் மேல் கதையை கட்டமைத்திருக்கிறார். பல தருணங்கள், அவரின் சொந்த வாழ்வில் எடுத்தவையாகவே உள்ளன. நாவலில் பல பகுதிகள்  குறுங்கதைகளாகவும், விவாதங்களாகவும் நீட்டிச் செல்லலாம். மனித மனங்களின் எண்ணற்ற சிந்தனைகளை மொழியின் ஊடே கடைந்து நமக்கு அளித்திருக்கிறார். 




6 comments:

  1. வணக்கம்.
    நன்றாக எழுதியுள்ளீர். வாழ்த்துகள்.
    நன்றி.
    - முனைவர் ப. சரவணன், மதுரை.

    ReplyDelete
  2. arumai... nandraaga ennangalai kurippitulleergal.

    ReplyDelete
  3. Good
    I am from Dharmapuri
    I want to meet you in person
    If you are interested send an email my email address pallavan123@gmail.com

    ReplyDelete
  4. நாவல் படித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை ஒத்திருந்தது இந்த கதைச்சுருக்கம்.அருமையான தொகுப்பு .வாழ்த்துக்கள்...

    ReplyDelete