நானும் என் நண்பனும் எங்கள் ஆசிரியர் ஒருவரை சென்று சந்தித்தோம்.
தன் மொத்த வாழ்க்கையையுமே மாணவர்களின் நலனுக்காக அர்பணித்தவர் அவர். இன்று வரை அதனை தொடர்ந்தும் வருகிறார். "சோற்றுக் கணக்கில்" வரும் கெத்தல் சாஹிப் அவர்களைப் போல. அவர் அன்னதில், இவர் கல்வியில். தன் வாழ்க்கை முழுக்க மாணவர்களுக்கு இலவசமாகவே கல்வியினை கற்பித்தார். அவரிடம் பன்னிரெண்டாம் வகுப்பு tuition சென்று, டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் வேறு பல துறைகளில் இன்று இருப்போர் கணக்கில் அடங்கா. அவர் இன்னும் ஒற்றை வேட்டி சட்டையோடு, தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாற்றை எல்லாம் அவர் ஒரு சேவையாக தன்னளவில் நினைக்காமல் , கடமையாக இன்றும் செய்து கொண்டிருப்பது பிரமிக்க வைக்கிறது.
அவரை நான் கடந்த ஒரு வருடமாக அவ்வப்பொழுது சென்று சந்தித்து வருகிறேன். அவரின் அருகாமையும், அவரின் ஆசியும் என்னை ஏதோ ஒரு பாதையில் ஓர் நேர்நிலை எண்ணங்களை மட்டுமே உருவாக்கும் என்று எண்ணினேன்.
அவரை பல வருடங்கள் கழித்து சென்ற வருடம் சந்தித்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். தங்களிடம் நான் 2004-2005 பன்னிரெண்டாம் வகுப்பு tuition படித்ததாக கூறினேன். அவர் இன்றும் ஒரு வாடகை வீட்டில் தனியாக சமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னை சேவைக்காக மட்டுமே அர்பணித்தவர்களுக்கு அது சாதாரணமாக இருக்கும். அவரின் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து , அவரிடம் என் வாசிப்பை பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பேன்.
அவரும் பேசுவார். முக்கியமாக அவர் இராமலிங்க அடிகளார் அவர்களின் தீவிரமான பற்றாளர். அவரின் புலால் உண்ணாமை கொள்கைகளைப் பற்றி நிறைய பேசுவார். எனக்கும் அதனை அவ்வப்போது போதித்துக் கொண்டே இருப்பார். அவரின் மாணவர் ஒருவர் அவர் இந்த மாதிரி புலால் உண்ணமையைப் பற்றி ஒரு முப்பது நிமிடம் பேசியதைக் கேட்டு , அவர் அன்று முதல் அதனை பின்பற்றியதாகவும், அவரின் குடும்பமும் அதனை பின்பற்ற தொடங்கியதாகவும் சொல்வார்.
அவரை பல முறை அவரது வீட்டில் சென்று சந்தித்து வந்திருக்கிறேன். நான் என்னுடைய ஆர்வமான இலக்கியம் நோக்கியே பேசுவேன். அவர் வாசிப்பு பழக்கம் உடையவர் என்பதால் மட்டுமே இதனை அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் இலக்கிய வாசனை இல்லவதவர்களிடம் இலக்கியம் பேசினால் செவிடன் காதில் சங்கூதுவது போலத்தான். ஊதுபவனுக்கும் பயனில்லை, கேட்பவன் அப்படி ஒன்று இருப்பதாகவே நினைக்க மாட்டான்.
அவர் எப்பொழுதும் திருக்குறளையும், திருவாசகத்தையும், திருவருட்பா பற்றியும் சொல்வார்.
அவற்றிற்கு மேல் எவரும் இல்லை என்பார். அவற்றை மட்டுமே வாசித்தால் போதும் என்பார். நான் அப்பொழுதெல்லாம் ஏன் இவ்வாறு சொல்கிறார் என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.
அவை நிச்சயமாக மனித வரலாற்றில் இடம்பெற்ற உயர் விழுமியங்களை வலியுறுத்தியவை.
இராமலிங்க ஸ்வாமிகளின் "வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வரி தரும் பொருளினை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அதனை செயலாக்குவதன் மூலமாகவே அறிய முடியும். அதனை வெறுமனே வாசித்து அறிந்து வைப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை. திருக்குறளுக்கும், திருவருட்பாவிற்கும் மேலான இலக்கியங்கள் உலகத்தில் இல்லையா? மனிதனின் மொத்த ஆன்மீக தேடலும் அதனோடு நின்று விட வேண்டுமா? ஒருவர் தன்னளவில் இவற்றை வாசிக்கவில்லை என்றால் அவர் பிறவற்றை வாசிப்பது வெறும் பிழையா?
இக்கேள்விகளுக்கு விடை "அப்படி இல்லை" என்றே சொல்வேன். இவை ஒருவரை ஆன்மிகமான தேடலிலோ வாழ்க்கையின் அறங்களை உணர்த்தும் வழியிலோ இட்டுச்செல்லும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருதும் இல்லை. ஆனால் இவையே முதலும் , முடிவும் என்று கொள்வது எவ்வளவு பெரிய மானிட அபத்தம். அப்படி கொள்வோமென்றால், ஒட்டு மொத்த மனித வரலாற்றிலும் அறியப்படும் ஞானிகளை, இலக்கியவாதிகளை, தத்துவவாதிகளை, ஆன்மீக சிந்தனையாளர்களை, அறிஞர்களை, விஞ்ஞானிகளை நாம் அவமதிப்பதாகவே அர்த்தம். அவர்களை அவமதிப்பதால் அவர்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் எளிய மனித உறவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் நாம் அடைந்த ஞானம் ஒரு தேங்கிய குட்டையாகவே மாறி விடும்.
என்னை பொறுத்த வரை மானுட வரலாறு என்பது ஒரு பெரும் நதி போல. அது என்றும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் நதி. அதன் ஊற்றுகளும், வேர்களும் பல்வேறு இடத்திலிருந்து முளைத்திருக்கலாம். அதன் அத்தனை கிளைகளும் முக்கியம். அது சென்று அடைவதும் பல கடல்களாக இருக்கலாம். இங்கு நாம் அதன் அலையில் உள்ளோம் என்பதே முக்கியம். அல்லது நதி அது சென்று சேர வேண்டிய இடத்தை தொட்டுவிட்டது , இனிமேல் அடைவதற்கு ஒன்றுமில்லை என்று நினைக்கும் போதே அது வெறும் குட்டையாக மாறிவிடுகிறது. அதற்கு ஒரு மதிப்பும் இல்லை.
நாம் நம்மை வரலாற்றின் ஒரு பகுதியாக, அந்த நதியில் ஓடும் ஒரு சிறு துளியாக நினைக்கிறோமோ அன்று தான் நம் பார்வையில் அனைத்தும் விசாலமாக தோன்றும். இப்பிரபஞ்சத்தில் தன்னை ஒரு துளியாக உணரும் போது ஏற்படும் ஆனந்தம் அதுவே.
எங்கள் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் வள்ளுவர், புத்தர், வள்ளலார் அவர்களை மட்டும் வாசித்தால் போதும் என்றார். இதை தான் முதலில் வாசிக்க வேண்டும் என்றார். அவையே மானிடத்தின் உச்சம் என்றார்.ஆம் அது மானிடத்தின் உச்சம் தான். அவ்விழுமியங்கள் இருந்தும்,அவைகளை வாசிப்போர் இருந்தும் ஏன் இந்த உலகில் போர்களும், பஞ்சங்களும், அடக்குமுறைகளும் இன்றும் உள்ளன. "அறம் செய்ய விரும்பு" என்று கற்பதினால் மட்டும் போதுமா. அந்த அறம் ஏன் பின்பற்ற முடியவில்லை. ஏன் மனித சமுதாயத்தில் அறமற்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அதை கற்பவர் அறம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறாரா? என்ற கேள்விகள் என் மனதில் எழுந்தது. ஆனால் நான் அவரிடம் கேட்கவில்லை. அவர் தன்னை மூடிக் கொண்டு விட்டார்.
இனிமேல் அவரிடம் எந்த ஒரு புதிய கருத்துகளும், அறிவும் உள்ளே செல்ல முடியாது. மேலும் எங்கள் ஆசிரியர் "yes sir" சொல்பவர்களையும், ஆமாஞ்சாமி சொல்பவர்களையுமே விரும்புவார்.
வாழ்க்கை என்பதே முரண்களால் ஆனது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. கருப்பு வெள்ளைக்கு மேல், உண்மை பொய்களுக்கு என்ற இருமைக்குள் மட்டுமே உலகம் உள்ளது என்று நினைப்பது எப்படி பட்ட அபத்தம். அப்படி அனைத்தும் அறிந்து கொள்ளவும், வாழவும் எளிதாக இருந்தால் எதற்கு நாம் ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்கிறோம்.
ஏன் இவ்வுலகில் வள்ளுவருக்குப் பிறகும், வள்ளலாருக்குப் பிறகும் இப்படி அழிவுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு bottleல் ஒரு கருத்தை சொல்லி குடிக்கச் செய்துவிட்டால், அறத்தோடு வாழ்ந்து விட முடியுமா? ஏன் அவ்வாறு மனித வரலாறு இல்லை. இவை எல்லாவற்றிற்கும் பதில் தஸ்தயெவ்ஸ்கியிலும், டால்ஸ்டாய் போன்றோரிடமும், தத்துவ ஞானிகளிடமும் உள்ளது. அதற்காகவே அவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களும் முக்கியம், இவர்களும் முக்கியம்.
அப்படி புலால் உண்ணாமல், இவற்றை வாசித்தால் மட்டும் வாழ்க்கையில் மேன்மை அடைய முடியுமா? கண்டிப்பாக அடையாளம். அதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அது மட்டும் தான் வழி என்பது தான் அறியாமையின் உச்சம். இதனை பேசி கொண்டிருக்கையில் என் மருத்துவ நண்பன் திடீரென்று தன் மருத்துவ அனுபவத்தையும், எப்படி ஒரு அடிப்படைகளை படிக்காமல் மாணவர்கள் கஷ்டப்படுவதாகவும் கூறினான். எனக்கு அவனை பார்க்க முதலில் ஆச்சரியமாகவும் , பிறகு பரிதாபமாகவும் இருந்தது. எங்கள் ஆசிரியர் "வெள்ளை யானை" மற்றும் குமரித்துறைவியை (நான் அவருக்கும் படிக்கச் சொல்லி கொடுத்தது) வாசித்து விட்டு, அதன் ஆசிரியர் எப்படி காசிற்க்காக மாற்றி மாற்றி எழுகிறார் என்று சொன்ன போது என் நண்பன் ஆமாம் என்று ஒத்து ஊதியதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.
எப்படி ஒரு புத்தகத்தில் ஒரு வரியைக் கூட படிக்காமல் ஒரு கருத்தை ஏற்கவோ/மறுக்கவோ முடியும் என்று புரியவில்லை. அவர்கள் தங்களை தங்கள் தொழில் சார்ந்த எல்லையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். உலகியலில் வெற்றி கொண்டால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். அதற்கு மேல் எதுவுமே இல்லை என்று நினைக்கிறாரகள்.அதன் எல்லை ஒரு கார்ப்பரேட் CEOஆக இருக்கலாம், ஒரு அரசியல் வெற்றியாக இருக்கலாம், ஒரு colletor ஆக இருக்கலாம், வணிகத்தில் பெரு வெற்றியாக இருக்கலாம், ஒரு உலகப்புகழ் அறுவை சிகிழ்ச்சை நிபுணராக இருக்கலாம். அதற்கு மேல் உலகம் இல்லை என்று நினைப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இது ஒரு வகையில் இப்படித்தான் இருக்க முடியும். ஏனென்றால் வேறொரு உலகம் உள்ளது என்று நினைத்தால் இந்த உலகத்தில் நாம் செய்பவை பொருட்டில்லை என்று நினைக்கும் போது, அதில் முழு மனதோடு ஈடுபட முடியாது. அதற்கு ஒரு எல்லையினை போட்டுக் கொண்டு தான் மேலேற முடியும். அதுதான் நியாயமும் கூட. எங்கள் ஆசிரியர் போன்றோர் வார்த்தைகளை அப்படியே "எஸ் சார்" என்று இரு வகையினர் கேட்பர். ஒருவர் அறிவில்லாதவர். மற்றோருவர், அவரின் ஆசி ஏதோ ஒரு வகையில் தம் உலகியல் வெற்றிகளுக்கு வேண்டும் என்று நினைப்பவர். இது தான் உலக யதார்த்தம். இது இப்படி தான் நிகழும்.
நான் ஏன் இதை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். ஏன் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் என்னால் இவர்கள் போல் இருக்க முடியவில்லை. "எஸ் சார்" என்று ஏன் என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு போதும் நான் உணராத, உள்ளத்தில் படியாதவற்றை எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். அப்படி ஏற்றுக் கொண்டு எங்கள் ஆசிரியர் எனக்களிக்கும் ஆசி உண்மையில் நிலைக்குமா. அது என்னளவில் ஒரு ஏமாற்று வேலையாகவே இருக்கும். என்னை நானே ஏமாற்றிக் கொண்டு இந்த உலகத்தில் நான் எதை வாழ்ந்து காட்ட முடியும்.
என்னை போட்டு அடித்த, என்னை தோலுரித்து நிர்வாணம் செய்த இலக்கியங்களை வாசித்து விட்டு நான் மீண்டும் ஒரு பாவனைக்குள் சென்று என்னை போர்த்திக் கொள்ள விரும்பவில்லை. அது வெறும் பாவனையே. ஒரு பாசாங்கு மட்டுமே. வெறும் உலகியல் வெற்றிகளுக்காக மட்டும் என் ஆன்மாவை நான் இழக்க விரும்பவில்லை. அந்த ஆன்ம ஜோதி தான் என்னை இயக்கி கொண்டிருக்கிறது. அது வள்ளலாரின் ஜோதியாகவும் இருக்கலாம். வள்ளுவரின் ஜோதியாகவும் இருக்கலாம். தஸ்தயெவ்ஸ்கியின் ஜோதியாகவும் இருக்கலாம்.
இதனால் மற்றவர்கள் எல்லாரும் பொய்யாக வாழ்வதாக நான் சொல்லவில்லை. அவரவர்கள் வாழ்க்கை லட்சியங்களுக்கேற்ப வாழ்க்கை ஓடிக்கொண்டுதானிருக்கும். ஆனால் ஒரு போதும் தன் சுயத்தை, தானறிந்த உண்மையை மறைத்து வாழ வேண்டாம் என்றே கூறுகிறேன். ஏனென்றால் அறுபது வயதிற்கு மேல் நாம் திரும்பி பார்க்கும் போது நாம் உண்மையாக வாழ்ந்தோம் என்ற நிறைவு தான் முக்கியம். ஒன்றே கால் கோடியில் வீடு வாங்கி, பிள்ளையினை DAVயில் சேர்த்து cultured குழந்தையாக வளர்ப்பதும் முக்கியம், அதை விட நம் ஆன்மாவை பாவனைகளால் போர்த்திக் கொண்டு வாழாமல் இருப்பதும் முக்கியம்.
இவை எல்லாம் நான் ஏன் ஆசிரியரின் மேல் வைக்கும் குறைகளாக இருப்பதாக நினைக்கவில்லை. ஒரு வேலை நான் உணராத வேறொரு தளத்தில் கூட அவர் பேசி இருக்கலாம். ஆனால் "அதை" நான் உணராமல் எப்படி என்னால் "எஸ் சார்" சொல்ல முடியும். இவை எல்லாவற்றிற்கும் மேல் அவர் கூறியது போல், நான் அவர் மேல் வைத்திருக்கும் மரியாதையோ , மரியாதை இன்மையே அவருக்கு முக்கியம் இல்லாமல் இருக்கலாம். நானே ஒரு பொருட்டாக அவர் முன் என்னை நினைக்கவில்லை. அவரின் ஆசி எனக்கு கிடைக்க வில்லை என்றால் அது என்னுடைய துரதிர்ஷ்டம் தான். நான் அதற்கு தகுதி இல்லாதவன் தான். எனக்கு அவரின் அருகாமை முக்கியம். அவரின் ஆசி முக்கியம். அதை எப்போதும் எனக்கு இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நான் கணக்கினை போட்டுப் பார்த்து விடையினை அறிய விரும்புபவன். அவர் சொல்லும் விடைக்கு என்னால் கணக்கினை போட முடியவில்லை. ஒரு வேலை என்னால் விடை கண்டு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் நான் உண்மையாக வாழ்ந்தேன் என்ற திருப்தியே எனக்கு போதுமானதாக நினைக்கிறேன். அப்படி வாழ்க்கை ஒன்றும் விடை கண்டுபிடிக்கும் புதிராக நான் நினைக்கவில்லை. அது நமக்கு கொடுத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உண்மையாக வாழ்ந்தோம் என்பதே முக்கியமாக நினைக்கிறேன். அதற்கு நான் அறிவால் சேவையை வெல்ல முடியுமா என்ன?
அவர் தன் வாழ்க்கையையே மாணவர்களுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரின் மற்ற அனைத்து செயல்களும் இதனை வளர்க்க மட்டுமே பயன்படுமென்றால். அது அப்படி இருப்பதில் தவறொன்றுமில்லை. அவரின் கால் தூசிற்கு சமானமாகாது நான் எவ்வளவு தான் இலக்கியங்களும், மற்ற அனைத்தும் படித்தாலும்.
அவரின் "தனிப்பெருங்கருணை" அவர் சொல் கேட்பவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா என்ன?
No comments:
Post a Comment