Sunday, 30 April 2023

மகாராஷ்டிரா பயணம் (5)



செதுக்கப்பட்ட சிலைகளும், சிலையாகிக்கொண்டிருக்கும் கற்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலையின் வளைவுகளில் நெளிந்து உள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. கீழிருந்து மேலே துள்ளி மீண்டும் கீழே அமர்ந்தேன். குலுங்களின் அசைவில் கண்கள் திறந்து பார்த்தேன். அஜந்தாவிற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காலை ஆறு மணிக்கு அஜந்தாவிற்கு அவுரங்காபாத்தில் இருந்து பஸ் ஏறினோம். 

காலையில் குளிர் இதமாக இருந்தது. பேருந்தில் ஒன்றிரண்டு இருக்கைகள் தவிர அனைத்திலும் ஆட்கள் இருந்தனர். நடுவில் உள்ள ஒரு ஊரின் பேருந்து நிலையத்தில் பஸ் நின்ற போது, இறங்கி டீ குடித்தோம். சூரியன் காலைக் கரங்களை நீட்டிக் கொண்டிருந்தான். இந்த பயணம் முழுவதும், இரண்டு இரவுகள் ஒரே இடத்தில் தங்கியதில்லை. சில நேரம், காலைப் பயணத்தில் இருக்கும் போது, திசைகளை காட்ட வேண்டியே, சூரியன் உதிப்பது போல் தோன்றும்.

எட்டு மணிக்கு அஜந்தா குகைகள் செல்லும் வாசல் முன் பேருந்தில் இருந்து இறங்கினோம். பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே கடைகளை திறந்து கொண்டிருந்தனர். யாரிடமும் ஏதாவது கேட்டால், அவர்கள் பதில் சொல்லி விட்டு, உடனே அவர்களின் கடை எண்ணைச் சொல்லி, திரும்ப வரும் வழியில், கடையினை பார்த்து விட்டு போகும்படி சொல்வர். குறிப்பாக கடை எண்ணை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளும்படி கூறினர். அங்கு ஒரு சிறு கடையில் வழக்கம் போல் வடாபாவ் சாப்பிட்டோம். ஒரு தண்ணீர் போத்தல் வாங்கிக் கொண்டு குகைகளுக்கருகில் கூட்டி செல்லும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தோம்.

ஒரு பஸ் வந்து நின்றது. அதன் முன், பயணச்சீட்டு வாங்கி உள்ளே செல்ல வரிசையாக நின்றிருந்தோம். கூட்டம் அதிகமாக இல்லை. எங்களுக்கு முன்னே மூன்று வெளிநாட்டு இளம் பெண்கள் நின்றிருந்தனர். டிக்கெட் வாங்கும் போது, தனித்தனியே தான் டிக்கெட் வாங்கினர். நாங்கள் அவர்கள் ஒன்றாக வந்திருப்பார்கள் என்று எண்ணினோம். கடைசி பெண்ணிடம் சில்லறை இல்லாததால், அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு நடத்துனர் ஐந்து ரூபாய் சில்லறை கொடுக்காமல் டிக்கெட் மட்டுமே கொடுத்தார்.





ஒரு பத்து நிமிட சிறு மலை ஏற்ற பயணத்தில் அஜந்தா குகைகள் இருக்குமிடத்திற்கு வந்தோம். எங்கள் பைகளை அங்கிருந்த லாக்கர் அறையில் வைத்து விட்டு உள்ளே செல்ல 40 ரூபாய் டிக்கெட்டுடன், அஜந்தா ASI புத்தகமும் வாங்கிக் கொண்டோம்அங்கிருந்து கொஞ்சம் படிக்கட்டுகள் மேலே ஏற வேண்டும். அங்கு சக்கர நாற்காலி செல்ல சரிவுப் பாதை அமைத்திருந்தார்கள். இப்பாதை எனக்கு எப்போதும் ஒரு குறியீடாகத் தெரியும். ஊனமுற்றோரை ஒரு சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை பொது இடங்களில் அவர்களுக்கு அளிக்கும் சேவைகளை பொறுத்தே அளவிட முடியும். நான் வேலை நிமித்தமாக லண்டனில் ஓராண்டு இருக்க வேண்டியிருந்தது. அங்கு டவுன் பஸ்களில் கூட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியோடு  செல்ல வசதி உள்ளது. அஜாந்தாவில் வெளிநாட்டினர் அதிகம் வருவதாலும் இது ஓர் உலக பண்பாட்டுச் சின்னம் என்பதாலும், இங்கு அந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், நான்கு பேர் தூக்கிக் கொண்டு செல்லும் சிறு பல்லக்குகளையும் பார்த்தோம். இதை 1983 ஆம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.


படிகள் ஏறி குகைகள் தெரியும் இடத்திற்கு வந்தோம். வெயில் ஏறத்தொடங்கியிருந்தது. ஆங்கில எழுத்து U வடிவத்தில் இருக்கும் மலைப்பாறைகளை குடைந்து குகைகள் உருவாக்கியிருக்கிறார்கள்.வகோரா ஆற்றிற்கு மேலே அமைந்துள்ளன இக்குகைகள். 

நாங்கள் ஒவ்வொரு குகைகளாக பார்த்துக் கொண்டு வந்தோம். இங்கு மொத்தம் 29 குகைகள் உள்ளன. இரு வேறு காலகட்டத்தில் இக்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன. கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 1 ஆம் நூற்றாண்டு வரை உள்ள 9, 10, 12, 13 and 15A குகைகள் சாதவாகன ஆட்சிக்காலத்திலும் மௌரியக் காலத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. பிற்கால குகைகள் கிபி நான்காம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றான்று வரை வாகடக ஆட்சியிலும் பிற மன்னர்கள் ஆட்சி காலத்திலும் செதுக்கப்பட்டதாகும்.





1819 இல், ஜான் ஸ்மித் என்ற வெள்ளைக்காரர் புலி வேட்டை போகும் போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டவையே அஜந்தா குகைகள்அதன் பிறகு இவற்றின் வரலாறுசிற்பம், ஓவியம் தொடர்பாக எண்ணற்ற அறிஞர்களால் ஆராயப்பட்டுள்ளதுஇன்றும் இதில் உள்ள அழியா ஓவியங்களும்சிற்ப நேர்த்தியும் காண்போரை பரவசமும் ஆச்சரியமும் அடையச் செய்யும்.


இரண்டு காலகட்ட குகைகளிலும் ஓவியங்கள் உள்ளன. மொத்தம் ஐந்து குகைகளில் ஓவியங்கள் உள்ளன. பௌத்த ஜாதகக் கதைகளில் வரும் காட்சிகளாகவே பெரும்பாலான ஓவியங்கள் உள்ளன. புத்தரின் முற்கால வாழ்கையினை காட்டும் ஓவியங்களும் உள்ளன. ஒருசில ஓவியங்கள் காலத்தால் சிதிலம் அடைந்தாலும், சில ஓவியங்கள் நூற்றாண்டுகளாக சிதலம் அடையாமல் இன்றும் நன்றாகவே உள்ளன. பெண்களின் ஓவியங்கள் கலை நுட்பத்துடன் அழகாக வரையப்பட்டுள்ளது. பெண்களின் பல்வேறு உணர்வு நிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓவியங்கள் தரையைத் தவிர அனைத்து இடங்களிலும் வரையப்பட்டுள்ளன. 


ஒவ்வொரு குகைக்குள்ளாக  சென்று பார்த்துக் கொண்டிருந்தோம். புத்தரின் சிலைகள் இருக்கும் குகைகளில் காலணிகளை வெளியே விட்டுச் செல்லவேண்டும். புத்தர் பல்வேறு சிலைகளில் ஞான முத்திரையில் காட்சி அளிக்கிறார். எந்த புத்தரின் சிற்பத்தை காணும்போதும், முதலில் நம்மை ஈர்ப்பது அதனுடைய அமைதியே. சலனமற்ற அந்த குமிழ் புன்னகையில் நம்மை உள்ளே இழுக்கும் பேரமைதி உள்ளது. 




ஒவ்வொரு குகைக்குள் சென்று பார்க்கும் போதும் நான் ASI அஜந்தா புத்தகத்தில் உள்ளதை வாசித்து, சிற்பங்களையும் ஓவியங்களையும் குகை அமைப்பினையும் பார்த்து கொண்டிருந்தோம். குகையின் வெளிப்புறங்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் முன் மண்டபம் உள்ளது. எல்லோராவைப் போல் இல்லாமல் இங்கு இருக்கும் அனைத்து குகைகளுமே பௌத்தக் குகைகளாகும். 


பெரும்பாலான குகைகள் விஹாரங்களாகவும் , சில குகைகள் சைத்யங்களாகவும் உள்ளனசைத்யங்களின் அமைப்பு குகைக்குக் குகை மாறுபடுகிறது. விகாரங்களின் அமைப்பும் அதன் கலை நுட்பமும், பிரம்மாண்டமும்  கூட குகைக்குக் குகை வேறுபடுகிறது. சில குகைகள் முழுமை அடையாமல் உள்ளன.


குகை 26 இல் பிரம்மாண்டமாக புத்தர் படுத்திருப்பது போல ஒரு சிலை உள்ளது. அது புத்தர் நிர்வாண நிலையினை குறிக்கும் சிலையாகும். குகைக்குள்ளே சென்று இடது புற சுவரில் இதைக் காணலாம். பார்த்த உடனேயே என்னை மிகவும் ஈர்த்த பௌத்த சிலை இது. 


அனைத்து குகைகளையும் பார்த்து விட்டு, அங்கிருந்து வரும் வழியில், புத்த சிலைகளை கூடையில் விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு சிலை 850 ரூபாயென்று சொன்னார். நான் நூறு ரூபாய்க்கு கேட்டு இறுதியில் 150 ரூபாய்க்கு பேரம் பேசி முடித்தேன். கிளம்பும் போது 4 சிலைகள் 450 ரூபாய்க்கு பேசி வாங்கிக்கொண்டு வந்தேன். வெயில் அதிகமாக அடித்தது. கால் வலி எடுக்க ஆரம்பித்தது. டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஒரு உணவகம் உள்ளது. ஆளுக்கொரு சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டோம். உணவு நன்றாகவே இருந்தது. கையில் பணம் இல்லை. ஆதலால் Google pay செய்யலாம் என்றாலும் போனில்  டவர் இல்லை. உணவக காசாளர் வெளியில் டவர் கிடைக்கும் என்று சொன்னார். வெளியில் ஸ்கேன் அட்டையோடு சென்று ஒரு ஐந்து நிமிட முயற்சிக்குப்பிறகு பணம் அனுப்பினேன்.


அங்கிருந்து கீழே இறங்க பஸ் டிக்கெட்டிற்கு மட்டும் தான் கையில்  40 ரூபாய் இருந்தது.டிக்கெட்  எடுத்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம். பஸ்ஸில் ஒரு இளஞனிடம் Google pay செய்து 400 ரூபாய் பணமாக வாங்கினேன். அஜந்தா குகை பேருந்து நிறுத்த வாசலில் இருந்து ஆட்டோவில் அடுத்த பஸ் நிறுத்தத்திற்கு சென்றோம். அங்கிருந்து 'ஜல்கான்' சென்று, அங்கிருந்து 'நாசிக்' செல்ல திட்டம். 


பஸ் ஏறி ஒரு மணி நேர பயணத்தில் 3:30 மணிக்கு ஜல்கான் வந்தோம்ஜல்கான் ரயில் நிலையத்திலிருந்து நாசிக் செல்லும்  ரயில்கள் அந்த சமயத்தில் இருந்தன. நாங்கள் அவசர அவசரமாக பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் சென்றோம். அனைத்து முக்கியமான ரயில் நிலையங்கள் போலவே, இதுவும் மிகவும் கூட்டமாக இருந்தது. கையில் பணம் இல்லாததால் ATM சென்று பணம் எடுத்து வர சென்றேன். 


பணப்பையில் ATMஐ தேடிப் பார்த்தேன். அப்பொழுது தான் நினைவு வந்தது கிரெடிட் கார்டு மட்டும் தான் எடுத்து வைத்தேன், டெபிட் கார்டை எடுத்து வைக்கவில்லை என்று. நண்பரிடம்  டெபிட் கார்டு வாங்கி அவர் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அவரிடம் சென்று இதைச்  சொன்னேன். அவர் அதிர்ச்சியடைந்து நானும் ATM கார்டு எடுத்து வரவில்லை என்று சொன்னார்


கையில் கார்டு இல்லை, பணமும் இல்லை. போனிலும் சார்ஜ் குறைவாகவே இருந்தது. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தேன்நண்பர் பதற்றமாக இருந்தார். ஒரு யோசனையில் வெளியில் கடைக்கு சென்று Google payவில் பணம் அனுப்பி கையில் பணம் பெற்று கொள்ளலாம் என்று சொன்னேன். அவரும் சரி என்றார். இரண்டு மூன்று கடைகள் கேட்டுப்பார்தோம். அப்படி தர முடியாது என்று கூறினர். ஒரு கடையில் 1000 ரூபாய்க்கு 1100  அனுப்பினால் தருகிறேன் என்றார். வேறுவழி இல்லாமல், அவரிடம் இருந்து 1000 ரூபாய் பெற்றுதிரும்ப ரயில் நிலையம் வந்தோம். 


அப்பொழுது இருந்த ஒரு ரயில் கிளம்பி விட்டது. திரும்பவும் பஸ் நிலையம் சென்று பஸ்ஸில் நாசிக் போகலாம் என்று சொன்னார் நண்பர். அப்பொழுது ரயில் வருகையை அறிவிக்கும் எலக்ட்ரானிக் போர்டில் ஹௌரா இரயில் தாமதமாக இன்னும் 10 நிமிடத்தில் இரயில் நிலையம் வந்தடையும் என்றிருந்தது. நான் நொடிப் பொழுதில் யோசித்து நாம் அந்த ரயிலிற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று சொன்னேன்நண்பரும் சரி என்றார். டிக்கெட் எடுத்து நடைமேடை சென்றோம். இரயில் வந்து நின்றது . பெட்டியின் உள்ளே நிற்க கூட இடமில்லாமல் மக்கள் கூட்டம் இருந்தது. நான் எப்படியாவது உள்ளே நுழைந்து சென்று விடலாம் என்று யோசித்தேன். அவர்  ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். இந்த ரயிலில் செல்ல வாய்பில்லை என்றாயிற்றுஅவர் வட இந்தியாவில் முன்பதிவில்லா டிக்கெட்டில் செல்ல வாய்ப்பே இல்லை என்று கூறினார். இதை முன்பே சொல்லி இருந்தால் நாம் அப்போவே பஸ்ஸில் போயிருக்கலாம் என்றேன். நான் இதை  முன்னாடியே சொல்லி இருந்தால் அதை நான் ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன் என்றும், அனுபவத்தால் மட்டுமே இதை ஏற்க முடியும் என்றார். 


அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு திரும்பவும் ஆட்டோவில் சென்றோம். அவசர அவசரமாக முடிவெடுக்காதீர்கள் என்று திட்டினார். பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தோம். ஒரு மணி நேர காதிருப்புக்குப் பின் ஒரு பேருந்து வந்தது. அது வரையில் எந்த பேருந்து வந்தாலும்,அது நாசிக் செல்லுமா என்று கேட்டு கொண்டே இருந்தேன். பஸ்ஸில் ஏற கூட்டம் அதிகமாக இருந்தது.


ஒரு பஸ் வந்து நின்றது. நான் என் கைகுட்டையை எடுத்து ஒரு சீட்டில் போட்டேன்நண்பர் கடைசி இருக்கையில் தன் துண்டைப் போட்டார். ஒரு 5 நிமிட நெருக்கடிக்குப் பின், பஸ் உள்ளே சென்றேன். நான் போட்ட இடத்தில் கைக்குட்டை அங்கேயே இருந்தது. நான் அதையெடுத்து அமர்ந்தேன். பஸ் இருக்கைகள் நிரம்பியது. நண்பர் அப்பொழுதான் ஏறினார். உள்ளே சென்று கடைசி இருக்கையில் தான் போட்ட துண்டினை எடுத்து அவரும் அமர்ந்து கொண்டார். நான் ஆச்சரியப்பட்டேன். இதே, தமிழ் நாட்டில் இவ்வளவு கூட்டத்தில் துண்டு போட்டிருந்தால், பஸ் உள்ளே ஏறி சென்று பார்த்தால் துண்டும் இருக்காது சீட்டும் இருக்காது. 


மாலை 5:30 மணிக்கு பஸ் கிளம்ப தயாராகியது. திடீரென்று ஒரு பரபரப்பு நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னே இருந்தவர்களிடம் இருந்து வந்தது. யாரோ ஒரு பயணியின் மொபைல் திருடுபோய்விட்டதாம் . அவருடைய எண்ணிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் கால் செய்து பார்த்தனர்.மொபைல் கிடைக்கவில்லை. பத்து நிமிடம் கழித்து பஸ் புறப்பட்டது.

நடத்துனரிடம் பஸ் டிக்கெட் எடுத்தேன். பஸ் கட்டணம் தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. கையில் இருந்த பணம் முழுவதும் காலியாகியது. திரும்பவும் யாரிடமாவது ஆன்லைனில் பணம் அனுப்பி பெற வேண்டும். அல்லது இன்னொரு யோசனையும் என்னிடம் இருந்தது. எதுவாக இருந்தாலும் நாசிக் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன். 


நான் ஜன்னலோரம் அமர்ந்திருந்தேன். வழியில் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். வழியில் சோளப்பயிர்கள் தான் பெரும்பாலும் பயிருட்டிருந்தார்கள். பேருந்து ஒரு பெரிய ஆற்றுப் பாலத்தைக் கடந்து சென்றது. பக்கத்தில் இருந்தவர் அந்த ஆற்றின் பெயரைக் கூறினார். சாலை சில இடங்களில் மோசமாக இருந்தது. சூரிய காந்தி பயிர் வகைகள் பல இடங்களில் விளைவித்திருந்தனர். அதைப் பார்க்கும் போது ஒரு பெரும் இராணுவ அமைப்பு போல தோன்றும். அதன் தலைகளும் ஒரு தலைவனை எதிர்நோக்கி எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும். ஓரிடத்தில் மொத்த தோட்டமும் வெயிலில் கருகி தலை குனிந்து இருந்தது. ஆயிரம் மனித கல்லறைகளை ஓரிடத்தில் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. அதைக் காணும் போது மனதிற்குள் ஏதோ இனம்புரியாத  வேதனை உண்டாயிற்று. 


ஒரு நிறுத்தத்தில் நிறைய பேர் இறங்கினர். அப்பொழுது பின்னாடி இடம் இருந்ததால் ஒரு இருக்கையில் நானும் நண்பரும் அமர்ந்து கொண்டோம். சூரியன் மறையத் தொடங்கியது. லேசான காற்று வீசியதால் நான் தூங்கிவிட்டேன். பேருந்து மலேகான் பஸ் நிலையத்தில் நின்றது. கீழிறங்கி உலாவிக் கொண்டிருந்தோம். அன்று முழுவதும் வெயிலில் நடந்ததால், திரும்பவும் தூங்கிவிட்டேன். இரவு 11:30 மணி அளவில் நாசிக் வந்தடைந்தோம். பஸ் ஸ்டான்ட் பக்கத்திலேயே ஒரு விடுதி இருந்தது. அங்கேயே அறை எடுத்து உறங்கினோம். பணம் Google pay மூலமே செலுத்தினோம். இப்பவும் கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. ATM அட்டையும் இல்லை. நாளை அதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து வைத்திருந்தேன்.