ஊழல் - கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களின் 'ராஜாம்பாள்' கட்டுரை வாசித்தேன். ஆங்கிலேயே ஆட்சியில் இருந்த ஊழல் பிரமிக்க வைக்கிறது. ஒரு சொற்பொழிவிலும் நீங்கள் அதனை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். தாங்கள் நாடாள ஊழலினை பெரிதும் ஊக்குவித்து வந்திருக்கின்றனர் ஆங்கிலேயர்கள். அதனை இங்குள்ள மேட்டிமை வர்கத்தினர் மிகவும் பயன்படுத்தி உள்ளனர்.
கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல, இவ்வகையான ஊழலின் மேல் எந்தஒரு குற்ற உணர்வே இல்லாத ஒரு சமூகமாக நாம் இருந்திருக்கிறோம். அல்லது அதனை எதிர்க்கவோ யாரும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஊழலும் ஒரு படிமமாக மாறியதோ என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு சமூகத்தில் ஒரு விஷயம் படிமமாக மாறுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்றே நினைக்கிறேன். அது எதுவாயினும். அது மக்களின் அன்றாடத்தில் ஆழமாக சென்று விட்டு படிமமாகிறது. நாம் இன்று கொண்டாடும் பல்வேறு நல்ல விஷயங்களும் சரி, தெய்வங்களும் சரி படிமமாகவோ ஆழ்படிமமாகவோ மாறியே இன்று நம்மிடம் இருக்கிறது.
அப்படி இருக்க 'ஊழல்' என்ற படிமத்தை உடைக்க அதை நம் அன்றாடங்களில் இருந்து நீக்க வேண்டும். மக்களிடம் குற்ற உணர்வு இல்லாத வரையில் அது அப்படியே தான் இருக்கும். இன்றும் நாம் அப்படியே தான் வாழ்கிறோம். ஆனால் இன்று அதை விட ஒரு படி கீழே போய், ஊழல் செய்த அதிகாரியோ/அரசியல்வாதியோ கைதான செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியடையும் நாம், ஓட்டுக்கு காசு கொடுத்தால் வரிசையில் நிற்கிறோம். இது என்றுமுள்ள மனநிலையே ஆனாலும், 'ஊழல்' படிமத்தில் இருந்து 'ஆழ்படிமமாக' மாற இது வழி வகுக்கும்.
இதனை எப்போதும் ஒரு அசட்டு விவாதமாக, "அவன் கொடுக்கிறான், நான் வாங்குறேன்", "ஊரு உலகத்துல நடக்காததா", என்று நம்மிடம் 'ஊழல்' மீது வரும் குற்ற உணர்வை திசை திருப்பி நமக்கு நாமே ஒரு சமாதானம் தேடிக்கொள்கிறோம். இது மிகவும் அபாயகரமானது. 'மேலும் கீழும்', 'கீழும் மேலும்' காரணம் சொல்லி இத்தீயை நாம் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.
நான் பலமுறை யோசிப்பது உண்டு. ஏன் இப்படி களை மட்டும் இவ்வளவு வேகமாக பரவி விடுகிறது என்று. அது பார்த்தீனியம் போன்ற பூண்டானாளும் சரி. அதன் வீரியம் பயனுள்ள/அறமுள்ளவற்றை விட பலமடங்கு அதிகமாக உள்ளது. அல்லது உலகில் மனிதன் பயன் கொள்ளும் செயல்கள் மிகவும் சொற்பமானவையே. அதனால் தான் அவன் சாதாரணமாக அறமில்லாவற்றை நாடிவிடுகிறானோ என்னவோ.
இவ்வளவும் இருக்க அன்பும், அறமும் இல்லாமல் இருந்தால் எதுவுமே நிலைத்திருக்காது. அப்படி நிலைத்திருந்தாலும் பொருளற்று இருக்கும். அப்பொருளின் மதிப்பினாலேயே அறம் என்றும் நிலைத்து நிற்கிறது. சமூகத்தில் அறமுள்ளோர் இருப்பதாலே ஒரு சமன் நிலை ஏற்படுகிறது. தங்களின் 'அறம்' சிறுகதை தொகுப்பில் போன்றோர்கள் இருப்பதால்தான் நம்மில் அந்த நம்பிக்கை என்றும் அணையாமல் உள்ளது. அவர்களைப் போலும் அவர்கள் செய்த செயலைப் போலும் நாம் நம் சமூகத்தில், அதனை என்று ஒரு ஆழ்படிமமாக மாற்றுவோமோ அன்று அறம் உச்சத்தில் நிலைத்து நிற்கும்.
'தஸ்தயேவ்ஸ்கி'யின் 'கேலிக்குரிய மனிதனின் கனவு' சிறுகதையில் வருவது போல, அவன் ஒரு புதிய உலகிற்கு போய் அங்குள்ளவர்களை(அறமோடு வாழ்ந்தவர்களை) மாற்றி அனைத்து குற்றமும் செய்ய வைக்கிறான். ஏனோ அவர்கள் தாங்கள் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என்பதனை ஏற்காமலும், அதனை கேலிசெய்தும் வாழ்கின்றனர். எதுவானாலும் அது படிமமாக மாறினால் சமூகத்தில் வேரூன்றி கிளைவிட்டு விடுகிறது. அதனை அன்பினால் மட்டுமே சமன் செய்ய முடியும்.
அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி
No comments:
Post a Comment