அவரவர் வழி - நடன மங்கை சிறுகதை தொகுப்புகள்
'சுரேஷ்குமார் இந்திரஜித்' அவர்களின் 'அவரவர் வழி' மற்றும் 'நடன மங்கை' ஆகிய சிறுகதை தொகுப்புகளை வாசித்தேன். கதைகள் அத்தனையும் யதார்த்தங்களின் சித்தரிப்பில் மனித மனங்களையும் செயல்களையும் வலைப்பின்னல்களாக மோதவிட்டுள்ளார்.
"அவன் மன உலைச்சல் வரும் போதெல்லாம் கோயில் பிரகாரத்தில் காராசேவ் சாப்பிட்டுக்கொண்டிருப்பான்", இதை வாசித்துவிட்டு ஒரு நாள் பூராவும் அதை கற்பனை செய்து சிரித்துக்கொண்டிருந்தேன். தன் இன்பத்தினை அடுத்தவர் கைகளில் பார்க்கும் எளிய மனிதர்களின் கதை. எப்பொழுதும், கிடைக்காத நன்மைக்காக புலம்பி காலம் தள்ளும் சாமானியர்கள். ஒருவேளை கிடைத்திருந்தால் ஏற்படும் தீமையை நாம் என்றும் நினைக்க மாட்டோம். நமக்கு வேண்டியதெல்லாம் 'புலம்பல்'.
ஒரு நடிகை காரைக்கால் அம்மையாரைப்பற்றி அறிந்ததுமே, தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறார். அந்த நடிகையின் மகளும், எதோ ஒரு பயணத்தில் தன் கார் டிரைவர் சொல்லிய சிறு தத்துவத்தைக் கேட்டு தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறார். இந்த டிரைவரின் அப்பா தான், தன் அம்மாவின் வாழ்க்கையை மாற்றியது என்பது மகளுக்கு தெரியாது. தற்செயல்களின் ஊடாட்டம். 'புதிர் வழிப் பயணம்' கதையிலும், இந்த தற்செயலின் பின்னலைப் பார்க்கலாம்.
ஆசைக்கும், பேராசைக்கும் சடங்குக்கும், நம்பிக்கைக்குமான முடிச்சி 'பங்குப்பணம்'. ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாத குற்றவாளிகளை தன், 'படைப்பும் குழந்தையும்' உரையில் அனைவரையும் ஒரு சரடில் கோர்த்து எடுக்கும் விதம் அருமை. அவர்களின் இளமையின் ஏதோ ஒரு செயலின் நீட்சியே அவர்களின் குற்றப்பின்னணி.
ஒரு சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைத்து காரணங்களும், அந்த சம்பவத்தை வேறு விதமாக மாற்றிவிடுகிறது. 'சம்பவத்தை' ஒரு தனிப்பட்ட செயலாகப் பார்க்காமல், அது முளைத்த வேர் வரை சென்று தேடி, வேருக்கு போகும் வழியில் உள்ள கிளைகளையும் ஆராய்வது பெரும்பான்மையான கதைகளில் உள்ளது. சில இடங்களில் வேருக்கும் பூவுக்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அதை ஆராய்தல் மட்டுமே நம் வேலை.
ஒரு காரில் பயணம் செய்யும் ஐந்து நபர்கள் கார் ஓட்டுபவரை குறை கூறிக்கொண்டே உள்ளனர். அவர் காரை ஒழுங்காக ஒட்டவில்லை என்று நினைக்கின்றனர். அதற்கு அவரின் மேல் உள்ள வெறுப்பே காரணமாக உள்ளது. அவருக்கும் மிகுந்த மனக்குழப்பம் ஏற்படுகிறது. காரில் உள்ள அனைவரும் ஒரு எதிர்மறை எண்ணத்திடனும் பயத்துடனும் உள்ளனர். திடீரென்று கார் ஒரு குலுங்கு குலுங்குகிறது. முன்சீட்டில் உள்ள தனது மகள் காரை நிறுத்தச் சொல்லி அவளே காரை ஓட்டத் தொடங்குகிறாள். அனைவரும் பெருமூச்சு விட்டு அமைதியடைகின்றனர். மிகவும் தீர்க்க முடியாத சிக்கலான முடிச்சுகளுக்கு ஏதோ ஒரு சிறிய அவிழ்ப்பே உதவுகிறது. அந்த அவிழ்ப்பு ஒரு எதிர்பாராத தற்செயலாகவே பெரும்பாலும் உள்ளது.
மனதின் கற்பனைகளுக்கு தூல வடிவம் கொடுத்து, அதை அனுபவிப்பதே ஒரு இனிய இன்பம். பெரும்பான்மையான மக்கள் அதையே தன் வாழ்நாள் முழுக்க செய்து கொண்டுள்ளனர். கடைத்தெருவில் பார்த்த பெண்ணிடம் ஒரு நிமிடம் கற்பனையில் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர் ஏராளம். சிறு சிறு இன்பங்களில் தன்னை போர்த்திக் கொண்டு சதா கற்பனை உலகத்தில் திளைப்பது சாமானியருக்கு தன் அகப் பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்கு வழியாக உள்ளது. 'நடன மங்கை' , 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து..' போன்ற கதைகள் அந்த அழியாத ஏக்கத்தினை சொல்கிறது.
சில கதைகளில் பெரியாரின் தாக்கங்கள் உள்ளன. முக்கியமாக பெண் திருமணம், மறுமணம் விஷயங்களில். தன் சிறுவயது விதவை மகளுக்கு மறுமணம் செய்ய பெரியாரின் வார்த்தைகள் உதவி செய்கின்றன. பழைய தேவையற்ற ஆசாரங்களை உதறி மேலெழ கால மாற்றத்தை கொண்டுசெல்ல தந்தையின் அன்பும் பெரியாரின் சொல்லும் கைகோர்த்து உதவி செய்கின்றன. அறிவால் முன்னகர்ந்து சென்றாலும் சில நேரங்களில் பழைய வடுக்களில் மனம் சிக்கித் தவிக்கிறது.
ஈழப்போர் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம், 'அனுமன்' வந்து கலந்துரையாடலில் கலந்து கொண்டு மக்களின் விவாதங்களைக் கண்டு மிரண்டுபோகிரதைப் படிக்கும் போது புன்னகையும் வேதனையும் வருகிறது . எந்த ஒரு அரசியல் கருத்தும் வன்முறையிலேயே பெரும்பாலும் எதிர்கொள்ளப்படுகிறது என்பதே நிதர்சன உண்மை.
நில உச்சவரம்பு சட்டத்தால் ஏற்பட்ட நன்மைகள் இருந்தாலும், நிலமிழந்தோருக்கு ஏற்பட்ட அநீதியும் இக்கதைத் தொகுப்பில் உள்ளது. நிலம் உழுதோர் நிலம் உடையார் ஆன பிறகு, நிலமிழந்தோரை தங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் செல்வ உயர்வும் சமூக உயர்வும் ஏறும் போது, நிலமிழந்தோர் இகழ்ந்து நகையாடப்படுகின்றனர். அவர்களின் எதிர்பாராத வீழ்ச்சியினால் உறவுகளை இழந்தனர். தற்கொலையிலும் தங்களை முடித்துக்கொண்டனர்.
மனிதன் கலையின் ரசிகன் எப்போதுமே. ஆனால் அக்கலை தன் வாழ்க்கையே போராட்டமாக மாற்றினாலும் அவற்றிலிருந்து அவனால் விடுபடமுடிவதில்லை. ஏனோ அப்படி விடுபட்டால் அவன் அன்றே இறந்தவனாகிறான். அவன் கால்பந்து விளையாடும் அழகைக் கண்ட அவள் தன் வாழ்க்கையை அவனுடன் அர்பணிக்கிறாள். தன் வாழ்நாள் முழுவதும் அந்த கால்பந்திடம் அவன் விளையாடாவிட்டாலும் அவள் விளையாடிக்கொண்டே இருந்தாள். அவள் மகனைப் பொறுத்த வரையில் அவள் தாய், கால்பந்து - தந்தை
கதைகளின் வடிவமும் மொழியும் நேரடியாக இருந்தாலும், கதைகளின் ஆழமும், மனித மனங்களின் சிந்தனையும் செயல்முறையும் சில நேரங்களில் விசித்திரமாகவே உள்ளது.
No comments:
Post a Comment