Saturday, 19 June 2021

பச்சோந்தி - அந்தோன் செகாவ்

             "அந்தோன் செகாவ்" அவர்களின்  "சிறுகதைகளும் குறுநாவல்களும்" தொகுதியில் உள்ள "பச்சோந்தி" சிறுகதை வாசித்தேன். கதை முழுவதும் சிரித்துக் கொண்டே வாசிக்க வாய்த்த சிறுகதை. வாசித்து முடித்த பிறகு ஒரு எதார்த்தத்தின் அவலை நிலையை, அடிமை மனதின் ஊசலாட்டங்களை அற்புதமாய் நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார் செகாவ் என்று புரிந்தது.

            ஒரு சிறு நகர சந்தையில், ஒரு தொழிலாளியின் சுண்டு விரலை ஒரு சிறு நாய் கடித்து விடுகிறது. அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு இன்ஸ்பெக்டரும் ஒரு கான்ஸ்டபிளும் மக்கள்  கூட்டமாக இருப்பதைப்  பார்த்து அங்கு வருகிறார்கள். கடி வாங்கியவன் அந்த இன்ஸ்பெக்டரிடம் இந்த தெரு நாய் தன்னை கடித்து விட்டது என்று சொல்லி அதை பிடித்து வைத்திருந்தான். அதற்கு அந்த இன்ஸ்பெக்டர், அந்த நாயைக் கொல்ல வேண்டும் என்றும், அவனுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

            தீடிரென்று கூட்டத்தில் ஒருவன் அந்த நாயினை ஜெனரல் வீட்டில் பார்த்ததாகச்  சொன்னான். தன் உயரதிகாரியின் நாயாய் இருக்கும் என்று நினைத்து, அந்த இன்ஸ்பெக்டர் சட்டென்று மாறி அந்த கடி பட்டவனை கடுமையாக திட்டினார். நாய் தானாக கடிக்காது, நீ தான் அதனிடம் ஏதோ செய்திருக்கிறாய் என்றும் கூறினார். மறுபடியும் இன்னொருவன் அந்த நாய் ஜெனெரலுடையது இல்லை என்று சொல்கிறான். மறுபடியும் அந்த இன்ஸ்பெக்டர் அந்த தொழிலாளியை சமாதானம் செய்கிறார்.

            அப்பொழுது அங்கு வரும் ஜெனரல் வீட்டின் சமையற்காரன்  இந்த நாய் ஜெனெரலுடையது இல்லை என்றும் ஆனால் இது ஜெனரல் தம்பியடையது  என்றும் கூறுகிறான். இதனைக்  கேட்டு அதிர்ந்த இன்ஸ்பெக்டர்,  தன் கான்ஸ்டபிளிடம் அந்த நாயினை அதன் உரிமையாளரிடம் கொண்டு ஒப்படைக்கச்  சொல்லிவிட்டு, கடி வாங்கியவனை கடுமையாக வசை பாடுகிறார். குற்றம் புரிந்தது அவன் தான் என்றும், அவன்தான்  நாயின் வாயில் பட்டாசு வைத்து விளையாடி துன்புறுத்தினான் என்றும்  அவனை விளாசுகிறார்.

            கதையில் ஒவ்வொரு முறை இன்ஸ்பெக்டர் தன்  நிலையினை மாற்றிக் கொள்ளும் போதும், அதை தான் நம்பும் பொருட்டோ அல்லது மக்கள் அதனை நம்பும் பொருட்டோ அவர் தன் "மேல் கோட்டினை கலட்டியோ அல்லது திரும்பவும் போட்டோ" அதைச் சொல்கிறார். இரு முரண்பட்ட வாக்கியங்கள் அடுத்தடுத்து வரும் போது, அதற்கான காரணமாக இருப்பது அங்கு நிலவும் அதீத வெப்பமாகவோ அல்லது குளிராகவோ இருக்கும் என்று தன் இயலாமையை வெப்ப மாறுதலின் மேல் ஏற்றுகிறார். தான் செய்யும் தவறுக்கு ஏதாவொதொரு காரணம் இருக்கும் அல்லவே. காரணம் கண்டுபிடிப்பது தானே மனிதனின் வேலை.

            இக்கதை எழுதி 125 வருடங்களுக்கு மேல்  ஆனாலும், இன்றும் இது பல இடங்களில் மிகவும் பொருத்தமாகவே அமைகிறது. "அமைப்பு சார்ந்த" அத்தனை தொழிலும் இதனை கண் கூடாகவே பார்க்க முடிகிறது. மேல் அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க எவ்வளவு தன்மானம் இல்லாத காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டி உள்ளது. இது காலப் போக்கில் பழகியும் போய்விட்டது. அதுவும் அடிமைப்பட்டு மீண்ட நாடுகளில், மக்களின் DNAவில் இது என்றோ கலந்துவிட்டது. இது மற்ற அடிமை முறைக்கும், இதற்கும் வேறுபாடு உள்ளது என்றே நினைக்கிறேன்.

            மற்ற அடிமை முறைகள் பொதுவாக வெளிப்படையானவை. ஆனால் இது வெளிப்படைத்தன்மை அற்றவை. ஒரு எழுதப்படாத ஆணை. ஆனால் ஏட்டில் எழுதிய சட்டங்களை மீறுவோர்களை விட இந்த எழுதாத சட்டங்களை மீறுவோர் மிகக்குறைவே. தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில், தன் ஓய்வு வரை இதை செய்வோரின் மன நிலையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ஏன் இவ்வாறு நடைபெறுகிறது? இங்கு நிலவும் மற்ற அடிமை முறைகளின் தாக்கம், வேலையின்மை, தாழ்வு மனப்பான்மை, குடும்பச்சுமை போன்ற எத்தனையோ காரணங்கள் உள்ளன. 

            இந்த நிலையை "அமைப்பு சாரா" தொழிலில் காண்பது குறைவு என்றே நினைக்கிறேன். அங்கு ஒரு வேலை இல்லை என்றால் இன்னொரு வேலை என்று போய் விடுகிறார்கள். ஆனால் அங்கும் இது முழுமையாக இல்லை என்று சொல்லி விட முடியாது.

            இந்நிலை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக  குறைந்து வருகிறது என்றே நினைக்கிறேன். சமூக மாற்றம், கல்வி, தாராளமயமாக்குதல் போன்றவை சென்ற கால் நூற்றாண்டுகளாக மாற்றத்தை  ஏற்பட்டுள்ளது. இவற்றால் வேறு பிரச்சனைகள் இருந்தாலும், "அதிகார அடுக்கு" அடிமை முறையின் அளவு குறைந்து வருகிறது என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment