Saturday, 19 June 2021

பச்சோந்தி - அந்தோன் செகாவ்

             "அந்தோன் செகாவ்" அவர்களின்  "சிறுகதைகளும் குறுநாவல்களும்" தொகுதியில் உள்ள "பச்சோந்தி" சிறுகதை வாசித்தேன். கதை முழுவதும் சிரித்துக் கொண்டே வாசிக்க வாய்த்த சிறுகதை. வாசித்து முடித்த பிறகு ஒரு எதார்த்தத்தின் அவலை நிலையை, அடிமை மனதின் ஊசலாட்டங்களை அற்புதமாய் நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார் செகாவ் என்று புரிந்தது.

            ஒரு சிறு நகர சந்தையில், ஒரு தொழிலாளியின் சுண்டு விரலை ஒரு சிறு நாய் கடித்து விடுகிறது. அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு இன்ஸ்பெக்டரும் ஒரு கான்ஸ்டபிளும் மக்கள்  கூட்டமாக இருப்பதைப்  பார்த்து அங்கு வருகிறார்கள். கடி வாங்கியவன் அந்த இன்ஸ்பெக்டரிடம் இந்த தெரு நாய் தன்னை கடித்து விட்டது என்று சொல்லி அதை பிடித்து வைத்திருந்தான். அதற்கு அந்த இன்ஸ்பெக்டர், அந்த நாயைக் கொல்ல வேண்டும் என்றும், அவனுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

            தீடிரென்று கூட்டத்தில் ஒருவன் அந்த நாயினை ஜெனரல் வீட்டில் பார்த்ததாகச்  சொன்னான். தன் உயரதிகாரியின் நாயாய் இருக்கும் என்று நினைத்து, அந்த இன்ஸ்பெக்டர் சட்டென்று மாறி அந்த கடி பட்டவனை கடுமையாக திட்டினார். நாய் தானாக கடிக்காது, நீ தான் அதனிடம் ஏதோ செய்திருக்கிறாய் என்றும் கூறினார். மறுபடியும் இன்னொருவன் அந்த நாய் ஜெனெரலுடையது இல்லை என்று சொல்கிறான். மறுபடியும் அந்த இன்ஸ்பெக்டர் அந்த தொழிலாளியை சமாதானம் செய்கிறார்.

            அப்பொழுது அங்கு வரும் ஜெனரல் வீட்டின் சமையற்காரன்  இந்த நாய் ஜெனெரலுடையது இல்லை என்றும் ஆனால் இது ஜெனரல் தம்பியடையது  என்றும் கூறுகிறான். இதனைக்  கேட்டு அதிர்ந்த இன்ஸ்பெக்டர்,  தன் கான்ஸ்டபிளிடம் அந்த நாயினை அதன் உரிமையாளரிடம் கொண்டு ஒப்படைக்கச்  சொல்லிவிட்டு, கடி வாங்கியவனை கடுமையாக வசை பாடுகிறார். குற்றம் புரிந்தது அவன் தான் என்றும், அவன்தான்  நாயின் வாயில் பட்டாசு வைத்து விளையாடி துன்புறுத்தினான் என்றும்  அவனை விளாசுகிறார்.

            கதையில் ஒவ்வொரு முறை இன்ஸ்பெக்டர் தன்  நிலையினை மாற்றிக் கொள்ளும் போதும், அதை தான் நம்பும் பொருட்டோ அல்லது மக்கள் அதனை நம்பும் பொருட்டோ அவர் தன் "மேல் கோட்டினை கலட்டியோ அல்லது திரும்பவும் போட்டோ" அதைச் சொல்கிறார். இரு முரண்பட்ட வாக்கியங்கள் அடுத்தடுத்து வரும் போது, அதற்கான காரணமாக இருப்பது அங்கு நிலவும் அதீத வெப்பமாகவோ அல்லது குளிராகவோ இருக்கும் என்று தன் இயலாமையை வெப்ப மாறுதலின் மேல் ஏற்றுகிறார். தான் செய்யும் தவறுக்கு ஏதாவொதொரு காரணம் இருக்கும் அல்லவே. காரணம் கண்டுபிடிப்பது தானே மனிதனின் வேலை.

            இக்கதை எழுதி 125 வருடங்களுக்கு மேல்  ஆனாலும், இன்றும் இது பல இடங்களில் மிகவும் பொருத்தமாகவே அமைகிறது. "அமைப்பு சார்ந்த" அத்தனை தொழிலும் இதனை கண் கூடாகவே பார்க்க முடிகிறது. மேல் அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க எவ்வளவு தன்மானம் இல்லாத காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டி உள்ளது. இது காலப் போக்கில் பழகியும் போய்விட்டது. அதுவும் அடிமைப்பட்டு மீண்ட நாடுகளில், மக்களின் DNAவில் இது என்றோ கலந்துவிட்டது. இது மற்ற அடிமை முறைக்கும், இதற்கும் வேறுபாடு உள்ளது என்றே நினைக்கிறேன்.

            மற்ற அடிமை முறைகள் பொதுவாக வெளிப்படையானவை. ஆனால் இது வெளிப்படைத்தன்மை அற்றவை. ஒரு எழுதப்படாத ஆணை. ஆனால் ஏட்டில் எழுதிய சட்டங்களை மீறுவோர்களை விட இந்த எழுதாத சட்டங்களை மீறுவோர் மிகக்குறைவே. தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில், தன் ஓய்வு வரை இதை செய்வோரின் மன நிலையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ஏன் இவ்வாறு நடைபெறுகிறது? இங்கு நிலவும் மற்ற அடிமை முறைகளின் தாக்கம், வேலையின்மை, தாழ்வு மனப்பான்மை, குடும்பச்சுமை போன்ற எத்தனையோ காரணங்கள் உள்ளன. 

            இந்த நிலையை "அமைப்பு சாரா" தொழிலில் காண்பது குறைவு என்றே நினைக்கிறேன். அங்கு ஒரு வேலை இல்லை என்றால் இன்னொரு வேலை என்று போய் விடுகிறார்கள். ஆனால் அங்கும் இது முழுமையாக இல்லை என்று சொல்லி விட முடியாது.

            இந்நிலை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக  குறைந்து வருகிறது என்றே நினைக்கிறேன். சமூக மாற்றம், கல்வி, தாராளமயமாக்குதல் போன்றவை சென்ற கால் நூற்றாண்டுகளாக மாற்றத்தை  ஏற்பட்டுள்ளது. இவற்றால் வேறு பிரச்சனைகள் இருந்தாலும், "அதிகார அடுக்கு" அடிமை முறையின் அளவு குறைந்து வருகிறது என்றே தோன்றுகிறது.

Friday, 18 June 2021

ஊழல் - கடிதம்

                                                    ஊழல் - கடிதம் 

அன்புள்ள ஜெயமோகன், 

    தங்களின் 'ராஜாம்பாள்' கட்டுரை வாசித்தேன். ஆங்கிலேயே ஆட்சியில் இருந்த ஊழல் பிரமிக்க வைக்கிறது. ஒரு சொற்பொழிவிலும் நீங்கள் அதனை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். தாங்கள் நாடாள ஊழலினை பெரிதும் ஊக்குவித்து வந்திருக்கின்றனர் ஆங்கிலேயர்கள். அதனை இங்குள்ள மேட்டிமை வர்கத்தினர் மிகவும் பயன்படுத்தி உள்ளனர்.

    கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல, இவ்வகையான ஊழலின் மேல் எந்தஒரு குற்ற உணர்வே இல்லாத ஒரு சமூகமாக நாம் இருந்திருக்கிறோம். அல்லது அதனை எதிர்க்கவோ யாரும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஊழலும் ஒரு படிமமாக  மாறியதோ என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு சமூகத்தில் ஒரு விஷயம் படிமமாக மாறுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்றே நினைக்கிறேன். அது எதுவாயினும். அது மக்களின் அன்றாடத்தில் ஆழமாக சென்று விட்டு படிமமாகிறது. நாம் இன்று கொண்டாடும் பல்வேறு நல்ல விஷயங்களும் சரி, தெய்வங்களும் சரி படிமமாகவோ ஆழ்படிமமாகவோ மாறியே இன்று நம்மிடம் இருக்கிறது.

    அப்படி இருக்க 'ஊழல்' என்ற படிமத்தை உடைக்க அதை நம் அன்றாடங்களில் இருந்து நீக்க வேண்டும். மக்களிடம் குற்ற உணர்வு இல்லாத வரையில் அது அப்படியே தான் இருக்கும். இன்றும் நாம் அப்படியே தான் வாழ்கிறோம். ஆனால் இன்று அதை விட ஒரு படி கீழே போய், ஊழல் செய்த அதிகாரியோ/அரசியல்வாதியோ கைதான செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியடையும் நாம், ஓட்டுக்கு காசு கொடுத்தால்  வரிசையில் நிற்கிறோம். இது என்றுமுள்ள மனநிலையே ஆனாலும், 'ஊழல்' படிமத்தில் இருந்து 'ஆழ்படிமமாக' மாற இது வழி வகுக்கும்.

    இதனை எப்போதும் ஒரு அசட்டு விவாதமாக, "அவன் கொடுக்கிறான், நான் வாங்குறேன்", "ஊரு உலகத்துல நடக்காததா", என்று நம்மிடம் 'ஊழல்' மீது வரும் குற்ற உணர்வை திசை திருப்பி நமக்கு நாமே ஒரு சமாதானம் தேடிக்கொள்கிறோம். இது மிகவும் அபாயகரமானது. 'மேலும் கீழும்', 'கீழும் மேலும்'  காரணம் சொல்லி இத்தீயை நாம் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.

    நான் பலமுறை யோசிப்பது உண்டு. ஏன் இப்படி களை மட்டும் இவ்வளவு வேகமாக பரவி விடுகிறது என்று. அது பார்த்தீனியம் போன்ற பூண்டானாளும் சரி. அதன் வீரியம் பயனுள்ள/அறமுள்ளவற்றை விட பலமடங்கு அதிகமாக உள்ளது. அல்லது உலகில் மனிதன் பயன் கொள்ளும் செயல்கள் மிகவும் சொற்பமானவையே. அதனால் தான் அவன் சாதாரணமாக அறமில்லாவற்றை நாடிவிடுகிறானோ என்னவோ. 

    இவ்வளவும் இருக்க அன்பும், அறமும் இல்லாமல் இருந்தால் எதுவுமே நிலைத்திருக்காது. அப்படி நிலைத்திருந்தாலும் பொருளற்று இருக்கும். அப்பொருளின் மதிப்பினாலேயே அறம் என்றும் நிலைத்து நிற்கிறது. சமூகத்தில் அறமுள்ளோர் இருப்பதாலே ஒரு சமன் நிலை ஏற்படுகிறது. தங்களின் 'அறம்' சிறுகதை தொகுப்பில் போன்றோர்கள் இருப்பதால்தான் நம்மில் அந்த நம்பிக்கை என்றும் அணையாமல் உள்ளது. அவர்களைப் போலும் அவர்கள் செய்த செயலைப் போலும் நாம் நம் சமூகத்தில், அதனை என்று ஒரு ஆழ்படிமமாக மாற்றுவோமோ அன்று அறம் உச்சத்தில் நிலைத்து நிற்கும்.

    'தஸ்தயேவ்ஸ்கி'யின் 'கேலிக்குரிய மனிதனின் கனவு' சிறுகதையில் வருவது போல, அவன் ஒரு புதிய உலகிற்கு போய் அங்குள்ளவர்களை(அறமோடு வாழ்ந்தவர்களை) மாற்றி அனைத்து குற்றமும் செய்ய வைக்கிறான். ஏனோ அவர்கள் தாங்கள் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என்பதனை ஏற்காமலும், அதனை கேலிசெய்தும் வாழ்கின்றனர். எதுவானாலும் அது படிமமாக மாறினால் சமூகத்தில் வேரூன்றி கிளைவிட்டு விடுகிறது. அதனை அன்பினால் மட்டுமே சமன் செய்ய முடியும்.

அன்புடன்,

பிரவின்,

தர்மபுரி 

அவரவர் வழி - நடன மங்கை சிறுகதை தொகுப்புகள்

                                                            அவரவர் வழி - நடன மங்கை சிறுகதை தொகுப்புகள் 

    'சுரேஷ்குமார் இந்திரஜித்' அவர்களின் 'அவரவர் வழி' மற்றும்  'நடன மங்கை' ஆகிய சிறுகதை தொகுப்புகளை வாசித்தேன். கதைகள் அத்தனையும் யதார்த்தங்களின் சித்தரிப்பில் மனித மனங்களையும் செயல்களையும் வலைப்பின்னல்களாக மோதவிட்டுள்ளார். 

    "அவன் மன உலைச்சல் வரும் போதெல்லாம் கோயில் பிரகாரத்தில் காராசேவ் சாப்பிட்டுக்கொண்டிருப்பான்", இதை வாசித்துவிட்டு ஒரு நாள் பூராவும் அதை கற்பனை செய்து சிரித்துக்கொண்டிருந்தேன். தன் இன்பத்தினை அடுத்தவர் கைகளில் பார்க்கும் எளிய மனிதர்களின் கதை. எப்பொழுதும், கிடைக்காத நன்மைக்காக புலம்பி காலம் தள்ளும் சாமானியர்கள். ஒருவேளை கிடைத்திருந்தால் ஏற்படும் தீமையை நாம் என்றும் நினைக்க மாட்டோம். நமக்கு வேண்டியதெல்லாம் 'புலம்பல்'.

    ஒரு நடிகை காரைக்கால் அம்மையாரைப்பற்றி அறிந்ததுமே, தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறார். அந்த நடிகையின் மகளும், எதோ ஒரு பயணத்தில் தன் கார் டிரைவர் சொல்லிய சிறு தத்துவத்தைக் கேட்டு தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறார். இந்த டிரைவரின் அப்பா தான், தன்  அம்மாவின் வாழ்க்கையை மாற்றியது என்பது மகளுக்கு தெரியாது. தற்செயல்களின் ஊடாட்டம். 'புதிர் வழிப் பயணம்' கதையிலும், இந்த தற்செயலின் பின்னலைப் பார்க்கலாம்.

    ஆசைக்கும், பேராசைக்கும் சடங்குக்கும், நம்பிக்கைக்குமான முடிச்சி 'பங்குப்பணம்'. ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாத குற்றவாளிகளை தன், 'படைப்பும் குழந்தையும்' உரையில் அனைவரையும் ஒரு சரடில் கோர்த்து எடுக்கும் விதம் அருமை. அவர்களின் இளமையின் ஏதோ ஒரு செயலின் நீட்சியே அவர்களின் குற்றப்பின்னணி.  

    ஒரு சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைத்து காரணங்களும், அந்த சம்பவத்தை வேறு விதமாக மாற்றிவிடுகிறது. 'சம்பவத்தை' ஒரு தனிப்பட்ட செயலாகப் பார்க்காமல், அது முளைத்த வேர் வரை சென்று தேடி, வேருக்கு போகும் வழியில் உள்ள கிளைகளையும் ஆராய்வது பெரும்பான்மையான கதைகளில் உள்ளது. சில இடங்களில் வேருக்கும் பூவுக்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அதை ஆராய்தல் மட்டுமே நம் வேலை.

    ஒரு காரில் பயணம் செய்யும் ஐந்து நபர்கள் கார் ஓட்டுபவரை குறை கூறிக்கொண்டே உள்ளனர். அவர் காரை ஒழுங்காக ஒட்டவில்லை என்று நினைக்கின்றனர். அதற்கு அவரின் மேல் உள்ள வெறுப்பே காரணமாக உள்ளது. அவருக்கும் மிகுந்த மனக்குழப்பம் ஏற்படுகிறது. காரில் உள்ள அனைவரும் ஒரு எதிர்மறை எண்ணத்திடனும் பயத்துடனும்  உள்ளனர். திடீரென்று கார் ஒரு குலுங்கு குலுங்குகிறது. முன்சீட்டில் உள்ள தனது மகள் காரை நிறுத்தச் சொல்லி அவளே காரை ஓட்டத் தொடங்குகிறாள். அனைவரும் பெருமூச்சு விட்டு அமைதியடைகின்றனர். மிகவும் தீர்க்க முடியாத சிக்கலான முடிச்சுகளுக்கு ஏதோ ஒரு சிறிய அவிழ்ப்பே உதவுகிறது. அந்த அவிழ்ப்பு ஒரு எதிர்பாராத தற்செயலாகவே பெரும்பாலும் உள்ளது.

    மனதின் கற்பனைகளுக்கு தூல வடிவம் கொடுத்து, அதை அனுபவிப்பதே ஒரு இனிய இன்பம். பெரும்பான்மையான மக்கள் அதையே தன் வாழ்நாள் முழுக்க செய்து கொண்டுள்ளனர். கடைத்தெருவில் பார்த்த பெண்ணிடம் ஒரு நிமிடம் கற்பனையில் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர் ஏராளம். சிறு சிறு இன்பங்களில் தன்னை போர்த்திக் கொண்டு சதா கற்பனை உலகத்தில் திளைப்பது சாமானியருக்கு தன் அகப் பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்கு வழியாக உள்ளது. 'நடன மங்கை' , 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து..' போன்ற கதைகள் அந்த அழியாத ஏக்கத்தினை சொல்கிறது.

    சில கதைகளில் பெரியாரின் தாக்கங்கள் உள்ளன. முக்கியமாக பெண் திருமணம், மறுமணம்  விஷயங்களில். தன் சிறுவயது விதவை மகளுக்கு மறுமணம் செய்ய பெரியாரின் வார்த்தைகள் உதவி செய்கின்றன.  பழைய தேவையற்ற ஆசாரங்களை உதறி மேலெழ கால மாற்றத்தை கொண்டுசெல்ல தந்தையின் அன்பும் பெரியாரின் சொல்லும் கைகோர்த்து உதவி செய்கின்றன. அறிவால் முன்னகர்ந்து சென்றாலும் சில நேரங்களில் பழைய வடுக்களில் மனம் சிக்கித் தவிக்கிறது. 

    ஈழப்போர் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம், 'அனுமன்' வந்து கலந்துரையாடலில் கலந்து கொண்டு மக்களின் விவாதங்களைக் கண்டு மிரண்டுபோகிரதைப் படிக்கும் போது புன்னகையும் வேதனையும் வருகிறது . எந்த ஒரு அரசியல் கருத்தும் வன்முறையிலேயே பெரும்பாலும் எதிர்கொள்ளப்படுகிறது என்பதே நிதர்சன உண்மை. 

    நில உச்சவரம்பு சட்டத்தால் ஏற்பட்ட நன்மைகள் இருந்தாலும், நிலமிழந்தோருக்கு ஏற்பட்ட அநீதியும் இக்கதைத் தொகுப்பில் உள்ளது. நிலம் உழுதோர் நிலம் உடையார் ஆன பிறகு, நிலமிழந்தோரை தங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் செல்வ உயர்வும் சமூக உயர்வும் ஏறும் போது, நிலமிழந்தோர் இகழ்ந்து நகையாடப்படுகின்றனர். அவர்களின் எதிர்பாராத வீழ்ச்சியினால் உறவுகளை இழந்தனர். தற்கொலையிலும் தங்களை முடித்துக்கொண்டனர்.  

    மனிதன் கலையின் ரசிகன் எப்போதுமே. ஆனால் அக்கலை தன்  வாழ்க்கையே போராட்டமாக மாற்றினாலும் அவற்றிலிருந்து அவனால் விடுபடமுடிவதில்லை. ஏனோ அப்படி விடுபட்டால் அவன் அன்றே இறந்தவனாகிறான். அவன் கால்பந்து விளையாடும் அழகைக் கண்ட அவள் தன் வாழ்க்கையை அவனுடன் அர்பணிக்கிறாள். தன் வாழ்நாள் முழுவதும் அந்த கால்பந்திடம் அவன் விளையாடாவிட்டாலும் அவள் விளையாடிக்கொண்டே இருந்தாள். அவள் மகனைப் பொறுத்த வரையில் அவள் தாய்,  கால்பந்து - தந்தை 

    கதைகளின் வடிவமும் மொழியும் நேரடியாக இருந்தாலும், கதைகளின் ஆழமும், மனித மனங்களின் சிந்தனையும் செயல்முறையும் சில நேரங்களில் விசித்திரமாகவே உள்ளது.  

வெண்ணிற இரவுகள்

            'தஸ்தயேவ்ஸ்கி' அவர்களின் மூன்று குறுநாவல்கள் தொகுப்பான "உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்" புத்தகத்தினை வாசித்தேன். இது "பாரதி புத்தகாலயம்" வெளியீடு. அதில் உள்ள "வெண்ணிற இரவுகள்" குறுநாவல் வாசிக்கையில் என்னுடைய அனுபவங்களை கீழே தொகுத்துள்ளேன்.
            
            இது ஒரு கனவுலகவாசியைப் பற்றிய அதி அற்புத காதல் கதையாகும். பீட்டர்ஸ்பர்க் நகரில் நம் கனவுலகவாசி, வாழ்க்கையில் எப்போதுமே ஒரு கனவுலகத்தில் வாழ்பவர். நகரத்து மக்கள் எல்லாம் வேலை முடிந்து அவரவர் கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கையில், இவர் மட்டும் கால் போன போக்கிலே நகரை சுற்றி வந்து கொண்டிருப்பார். நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவருக்கு ஒரு நண்பர் கூட இல்லை. அந்நகரதில் உள்ள அத்தனை தெருக்களிலும் அவர் நடந்துள்ளார். அவ்வீடுகழும் தெருக்களும் தான் அவரின் நண்பர்கள்.
           
            இப்படி ஒரு முறை அவர் நகரத்துக்கு வெளியில் சென்று விட்டு வரும் போது , பாலத்தின் ஓரம் ஒரு இளம்பெண் அழுதுகொண்டு இருப்பதைக் கண்டார். அப்பெண்ணை பார்த்ததுமே தன் தனிமையின் வேதனைகளை அனுபவிப்பவளாக தெரிந்தாள். அதனால் அவளிடம் இவருக்கு ஒரு இனம் புரியா அன்பு மலர்ந்தது. அவளை ஒரு குடிகாரனிடமிருந்து அன்று இவர் காப்பாற்றுகிறார். அவளைத்  தன்னிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். 
            
            இருவரும் அன்றைய முதல் நாள் சந்திப்பில் பேசிக் கொள்கின்றனர். நம் கனவுலகவாசி, தன் அக எண்ணங்களை எல்லாம் அவளிடம் கூறுகிறார். அவர் இந்த நகரில் வாழும் தனிமை வாழ்க்கையைப் பற்றி. தன கனவுலகத்தில் அவர் காணும் அற்புத காதலைப் பற்றி. அந்தப் புனிதமான காதலை வெறும் கனவாகவே அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் காதல் என்னும் கனவின் மீது தீராக் காதல் கொண்டுள்ளார். 'நாஸ்தன்கா'வும் அவரிடம் நட்பு பாராட்டுகிறாள். 
            
            அவள் தன் கதையை கூறுமுன் அவரிடம் ஒரு சத்தியம் செய்து வாங்கிக் கொள்கிறாள். அவர் அவளின் மேல் காதல் கொள்ளக் கூடாது என்று.  அவள் தன் கண் தெரியாத பாட்டியிடம் தனியாக வாழ்கிறாள். அவள் ஒரு முறை செய்த ஏதோ ஒரு தப்பிற்காக,  அவள் சட்டையையும் தன் சட்டையையும் சேர்த்து ஒரு ஊக்கு போட்டு எப்போதும் வைத்துள்ளார் அவள் பாட்டி. இவள் அதனை எப்போதும் வெறுத்தாள் . தான் நினைத்த இடத்திற்கு போக முடியவில்லயே என்று இவள் எப்போதும் விடுதலைக்காக ஏங்குவாள். அப்போது அவர்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவனிடம் இவள் காதல் கொண்டு விடுகிறாள். ஒரு வருடம் முன்பு அவன் இந்நகரை விட்டு போய் விடுகிறான். போகும் முன் தான் இன்னும் ஒரு வருடத்தில் வந்து அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான் .
            
            ஒரு வருடம் முடிந்து விட்டது. அவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது தான் நம் கனவுலகவாசி அவளைக் பாலமருகே காண்கிறான். அவளும் அவனும் இதையெல்லாம் அந்த வெண்ணிற இரவில், வெளியில் ஒரு பெஞ்சின் மீதமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் இரவில், அவள் தனது இந்தக் கதையினை அவரிடம் சொல்லி முடித்துவிட்டு, அவன் மீண்டும் வந்து விட்டதாகவும் அது தமக்கு தெரியும் என்றும், அவன் என்னைப் பார்க்க வராதது மிகவும் கவலை அளிப்பதாகவும் அவரிடம் கூறுகிறாள்.  
        
            நம் கனவுலகவாசி அவள்மீது தீராக் காதல் கொண்டு விடுகிறார். இது வரையில் கனவில் மட்டுமே காதலித்து வந்தவர் இப்பொழுது நிஜத்தில் காதலிக்கிறார் அவளை. அனால் அவளிடம் அவர் செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவர் இதை அவளிடம் சொல்லவில்லை. 
            
            அவளை இந்த கவலையிலிருந்து போக்க அவளிடம் பல சமாதானங்கள் கூறுகிறார். அவள் அதையெல்லாம் உண்மை என்பது போலவே நினைத்து சமாதானம் அடைகிறாள். இது அவருக்கு வியப்பாக இருக்கிறது. இந்தப்பெண் உண்மையிலே நாம் சொன்னவற்றை எல்லாம் நம்பிவிட்டு சமாதானம் அடைந்துவிட்டாளா? இவ்வளவு அப்பாவிப் பெண்ணாக அல்லவே இருக்கிறாள். அவர் அவளிடம் அவனுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லி கேட்கிறார். அவள் அக்கடிதத்தினை எழுதி, அவனிடம் கொண்டு சேர்க்கும்படி மன்றாடுகிறாள். அவரும் சரியென்று, அதைச் செய்வதாய்ச் சொன்னார். 
            
            அடுத்த நாள் இரவு பெருமழையில் இருவரும் சந்திக்க முடியவில்லை. ஆனால் அவளின் வீட்டின் பக்கம் இவர் சென்று பார்க்கிறார். ஏதோ சொல்லவொண்ணா ஏக்கம் அவரின் நெஞ்சடைக்கவே  திரும்பவும் தன் வீட்டிற்கு வந்து படுத்துறங்குகிறார். அடுத்த நாள் மூன்றாம் இரவில், அவள் இவருக்கு முன்னாடியே வந்தமர்ந்து இவருக்காகக்  காத்துக் கொண்டிருக்கிறாள். தான் அந்த கடிதத்தை சேர்த்து விட்டதாகவும், அவன் நிச்சயம் இன்று உன்னை வந்து சந்திக்கப் போகிறான் என்றும் அவளிடம் சொன்னார். அவள் அவரின் கையைபப்  பிடித்துக் கொண்டு ஆனந்தம் அடைந்தாள். அவள் அவரிடம், நாம் இருவரும் இப்படியே ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்றும் எப்போதும் பிரியக் கூடாது என்றும் கூறினாள்.
            
            அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தினருகே யாரோ ஒருவர் தென்படவே, அவர் தன் கையை அவளிடமிருந்து எடுத்துக் கொள்கிறார். ஆனால் அதற்குள் அது வேறு யாரோ ஒருவர் என்று தெரிகிறது. அவள் அவரிடம, ஏன் நீ கையை எடுக்க வேண்டும், அவன் வந்தாலும் கூட இப்படடியே நாம் கைகோர்த்துத் தான் அவனை வரவேற்போம்என்று சொன்னாள். அவர்கள் ரொம்ப நேரம் அங்கேயே அவனுக்காக காத்துக்கொண்டிருக்கிறாரகள். அவள் அழத் தொடங்குகிறாள். அவர் நிறைய சமாதானம் சொல்கிறார். இறுதியில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தன் காதலை அவளிடம் சொல்லிவிடுகிறார். அவளும் முதல் அதிர்ச்சி  முடிந்த உடனேயே அவரை கட்டி அணைத்துக்கொள்கிறார். அவள் அதற்கு தனக்கு தானே பல்வேறு சமாதானங்கள் சொல்லிக் கொள்கிறாள். அவர் தான் தன்னை உண்மையாக  காதலிக்கிறார் என்றும், அவன் அவளை காதல் செய்யவே இல்லை என்றும், தான் தான் அவன் மீது காதல் கொண்டனென்றும், இனிமேல் அவனை காதலிக்க போவதில்லை என்றும், அவரைத்தான் காதலிக்கப்  போவதுமாகச் சொன்னாள். அவரும் தன் காதல் கைகூடியதை நினைத்து மிதமிஞ்சிய இன்பம் கொள்கிறார். அவர்கள் இருவரும் நெடு நேரும் இரவு முழுவதும் நடந்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவரும், அவளும் காதலித்தார்கள். அவள் அத்தனையும் மறந்து அவரிடம் மிகவும் இன்பமாக பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் அழுதார்கள், சிரித்தார்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். செல்ல சண்டைகள் போட்டார்கள்.
            
            அப்பொழுது திடீரென்று அங்கு ஒரு உருவம் வந்து நிற்கிறது. அது யாரென அவர் யோசிக்குமுன், நாஸ்தென்கா அவர் பிடியிலிருந்து விலகி அவனைப் போய்  கட்டிக்கொண்டாள். திரும்ப அவரை நோக்கி வந்து அவரை ஒரு முறை கட்டிதழுவிவிட்டு அவனிடம் அவள் சென்று விட்டாள்.
            
            அடுத்த நாள் அவர் அவளிடம் தான் கொண்ட காதலினை பற்றி யோசித்துக் கொண்டுருக்கையில், அவளிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதை அவர் படித்துவிட்டு அமைதியாக அவரும் அவளும் காதல் கொண்ட அந்த ஒரு சில கணங்களையே எண்ணி கொண்டிருந்தார். 
            
            காதலுக்காக ஏங்கும் ஒரு இளம்பெண்ணும், கனவிலே காதல் கொண்ட ஒரு ஆணும் இதற்கு மேல் காதல் செய்ய ஏதும் இல்லை. அவளின் செய்கைகள் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையானவையோ அவ்வளவுக்கு அவ்வளவு சமூகத்தில் சேராதவை. இங்கு சமூக கட்டமைப்பினால் காதலை ஒரு வடிகட்டிய பொட்டலம் போன்றெ அணுக வேண்டியுள்ளது. அல்லது இந்த சமூக கட்டமைப்பு இருப்பதால்தான் இந்த மாறி காதல்கள் உருவாகிறதா என்றும் தெரியவில்லை. ஊழின் வசத்தால் மனங்கள் செய்வதறியாது திக்குமுக்காடுகிறது. ஒன்றை மறுத்து எழும் காதல் உண்மையில் காதலே இல்லை. அது தன்னிச்சையாக நிகழ்வது. அவளின் முடிவுகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு பிள்ளையின் செயலாகவே உள்ளது.ஆனால் அது தான் உண்மையான உணர்களோ? அதற்கு மேல் நாம் கட்டி அமைத்த நாகரிகம் நம்மை தர்க்கத்தில் கொண்டு வந்து கணக்கு போட வைத்து விடுகிறது.
            
            நாகரிகம் வளர்ந்து நம் உணர்வுகளை வகைமைப்படுத்தி பொட்டலமாக்கிவிட்டோம். அதனால் முரண்களினால் வரும் உணர்வுகள் ஒன்று சண்டையினால் அல்லது தியாகத்தினால் முடிவடைகிறது.  இதற்கு எங்கும் விதிவிலக்கே இல்லை என்றே தோன்றுகிறது. இது அப்படித்தான் நடக்கும், வேறு வழியே இல்லை என்றும் நினைக்கிறேன்.

Saturday, 5 June 2021

The Social Dilemma - ஒரு தொடக்கம்

            'The Social Dilemma" என்ற ஆவணப்படம் பார்த்தேன். அதன் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

https://www.youtube.com/watch?v=uaaC57tcci0

https://www.netflix.com/in/title/81254224

            பொதுவாக நாம்  ஒரு செயலை செய்து கொண்டே இருப்போம், அது நமக்கு நல்லது இல்லை என்று தெரிந்தும் கூட. உதாரணமாக, காலையில் எழுந்து முதலில் மொபைல் பார்ப்பது நல்லதல்ல என்று தெரிந்தும் அதை நாம் எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். திடீரென்று ஒரு நாள் ஏதாவதொரு நிகழ்வு நடக்கும் போதோ அல்லது யாரவது நம் பின் மண்டையில் அடித்து சொல்லும் போதோ தான், அந்த தவறின் விளைவுகளை பற்றி தெரிந்து அதை கைவிட முயல்வோம்.

            அப்படி ஒரு பின் மண்டையில் அடித்து சொல்லும் ஆவணப்படம் தான் 'The Social Dilemma'. நாம் இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரன்டு வகையாகவே அதன் உபயோகத்தை வைத்து பிரிப்போம். ஒன்று அது நிகழ்த்தி இருக்கும் சாதனைகளை. அடுத்து அது மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவை.ஒன்று அதை முழுமையாக ஏற்போம் அல்லது அதனை வசைபாடுவோம்.

            `இந்த "cellphone" வந்ததிலிருந்து, எல்லாம் நாசமா போச்சு` போன்ற வசைகள். `இந்த செல்போன் வந்து நம் அன்றாட வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக்கியது`, போன்ற புகழ்ச்சியை. ஆனால்  நாம் உண்மையிலே அதன் நன்மை/தீமைகளை பட்டியலிட்டு ஒரு விவாதப்பொருளாக்கி அதில் இருக்கும் ethical/moral சவால்களை நாம் சீண்டியதே இல்லை.

            அந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறது இந்த ஆவணப்படம். ஒருவன் ஒரு சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் போது, அவன் மொபைலுக்கு பின்னால், ஒரு மிகப்பெரும் `செயற்கை நுண்ணறிவுடன்` விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பது தெரியாது. இந்த `செயற்கை நுண்ணறிவு` நாம் கற்பனை செய்ய முடியாத அளவு மிகவும் பெரியது. நம் ஒவ்வொரு ரகசியமும் அதற்குத் தெரியும். அதை வைத்து நாம்  என்ன செய்வோம் என்றும் அதற்குத் தெரியும். அதன் அடிப்படையிலேயே அது நமக்கு 'Suggestions'ஐ சொல்கிறது.

            இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கும். இந்த சமூக ஊடகங்கத்தின் நோக்கம் என்ன? ஒன்றே ஒன்று தான். "நம் ScreenTimeஐ அதிகரிப்பது". இது தான்  இங்கு சந்தை. நம்முடைய நேரம் தான் சந்தைப்பொருள். இந்த சந்தைப்பொருளுக்குத்தான் எல்லா சமூக ஊடகங்களும் போட்டி போடுகின்றன. 

         “If you are not buying any product, then you are the product”

            அடுத்து நமக்கு இரு முக்கியமான கேள்விகள் வருகிறது.

1. இதனால் அந்த ஊடகங்களுக்கு என்ன லாபம்?

2. இதனால் நமக்கு என்ன நஷ்டம்?

            சமூக ஊடகங்கள் லாபம் அடைவது "Advertisement" வழியாகவே. நீங்கள் பார்க்கும் விடீயோவையோ, போடும் போஸ்டாயோ வைத்து, உங்கள் விருப்பங்களை அது ஊகிக்கும். அதன் பொருட்டு, Advertisement வரும். உதாரணமாக, நீங்கள் "How to cook gulab jamun" என்று Search செய்தால், அதற்கு தகுந்தவாறே "Jamun" கம்பெனி விளம்பரங்கள் வரும். அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போதும், அது சம்பந்தபட்ட வீடியோக்களே வரும். நீங்கள் ஒரு சந்தைப் பொருள் ஆகிறீர்கள்.

           நாம் ஒரு போஸ்ட்ஐ, ஒரு போட்டோவை போடுகிறோம் என்றால், நாம் அதற்கு "likes" எதிர்பார்ப்போம். நம் எதிர்பார்ப்பு தான் இங்கே சந்தைப்பொருள். நம்மை மேலும் மேலும் இந்த எதிர்பார்ப்பை தூண்டிக்கிட்டே இருக்க செய்வது தான் அந்த செயற்கை நுண்ணறிவு programsஇன் வேலை. நம்மை அதற்கு அடிமை ஆக்குவது. இது தான் இங்கு நிகழ்வது. நாம் இதனை மறக்கச் செய்தால் கூட "Notifications" மூலம் நம் ஆசையினை கிளறச்செய்வது.

            நாம் இதற்கு அடிமை ஆகிறோம் என்பது நம்மை அறியாமலேயே நடக்கும். மிகவும் கொஞ்சம் கொஞ்சமாக இது நடக்கும். நம் அரசியல் நிலைப்பாட்டை, காதலை, அன்றாட விருப்பங்களை, என்று அனைத்தும் அதற்குத் தெரியும்.  இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

            மேலும் இந்த சமூக ஊடகங்கள் நம் "Data"வை  விற்கலாம். ஆனால் அதனை விற்காமலே நம் அனைத்து விருப்ப/வெறுப்புகளை பயன்படுத்தி, நம் எந்த ஒரு நிலைப்பாட்டினையும்  மாற்றலாம். உதாரணமாக, நம் அரசியல் நிலைப்பாட்டினை. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த சமூக ஊடகங்கள் நேர்முகமாக, இதில் ஈடுபடுவதில்லை. அது ஒரு "platform"ஐ நமக்குத் தருகிறது. அதில் நம் அத்தனை வெறுப்புகளையும் , காள்புகளையும் நாம் ஏற்றுகிறோம். இதனால் ஒரு மெய்நிகர் தளத்தில் நடக்கும் வெறுப்புகளை, நம் அன்றாட பொதுவெளிக்கு மாற்றி சண்டையிடுகிறோம். 

            சமூக ஊடகத்தினால் ஏற்படும் சமூகம்,அறம், உளவியல்   சார்ந்த சிக்கல்களின் ஆய்வுகள் நடக்கத் தொடங்கிவிட்டன. இது இங்கே வந்து 10 வருடங்கள் தான் ஆகின்றன என்றாலும், அதன் தாக்கம் எந்த ஒரு தொழில்நுட்பமும் செய்யாத அளவு மிகவும் பெரியது. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக நம்மை அதற்கு அடிமை அடையச்செய்கிறது. நம் குழந்தைகளின் நேரத்தை நம்மிடமிருந்து பிரிக்கிறது. நாம் என்ன பார்க்க வேண்டும் எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. நாம் நம் கையில் வைத்திருப்பது (Mobiles) நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம், அதன் சாத்தியங்கள் எல்லையற்றது. அதனாலே அது மிகவும் பயங்கரமானது.

            எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதனுக்கு உதவவே உருவாக்கப்படுகிறது. அதை யாரும் இங்கே மறுக்க முடியாது. இந்த தகவல் தொழில்நுட்பமும் அவ்வாறே. ஆனால் இது வளர்ந்து வளர்ந்து மனிதனை ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது.  நம் ஒவ்வொரு clickஉம் சேமிக்கக்ப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகிறது. நாம் அதனை கையாள்வதாக நினைத்துக் கொண்டாலும், உண்மையில் அதுவே நம்மை கையாளுகிறது. 

            இந்த ஆவணப்படத்தில், இதை ஒரு விவாதமாகவே கொண்டு செல்கிறார்கள். இது ஒரு தொடக்கமே. நாம் உருவாக்கிய பொருள் நம் கையையே கடிக்கும் போது, அதன் தேவையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாம் என்ன தான் முற்றிலும் இதனை தவிர்க்க முடியாமல் போனாலும், நமக்கு உகந்தவாரு நாம் அதனை பயன்படுத்த தொடங்க வேண்டும். நம் குடும்பத்துடன் உரையாடி, நமக்கு நாமே ஒரு கொள்கையினை வைத்துக் கொண்டு தான் இதனை இப்போது சமாளிக்க தொடங்க வேண்டும்.