Friday, 4 October 2024

புன்னகை

'உள்ள போங்கணா'  என்று பின்னாடிருந்து சொல்லிக்கொண்டே இருந்தான் கோல்காரன். உள்ள போய்  கடைசி சீட்டில் உட்கார்ந்து தலையில் கட்டின துண்டை எடுத்து துடைத்துக் கொண்டான் வேடி. இந்த புரட்டாசி மாசத்துலயும் அக்னி வெயில் கணக்கா அடிக்குதே, என்று நினைத்துக் கொண்டான். 

அந்த ஊரில் இருப்பவர்கள் வண்டிவைத்துக் கொண்டு குல தெய்வ கோவிலுக்கு போவது வழக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படி போக முடியவில்லை. ஏதோ ஒரு காரணம் தடங்கலாக வந்து கொண்டே இருந்தது. அதனால் தான் இந்த வருடம் மொத சனிக்கிழமையே போய்விடலாம் என்று ஊர்காரர்கள் ஒரு மனதாக முடிவு செய்திருந்தனர்.

நெல்லு வெளஞ்சாலும், இல்லனாலும், கூழு குடிச்சாலும் குடிக்கலனாலும் இத மட்டும் பண்ணணுமடா என்று ஊர் கிழவிகள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருந்தும் அஞ்சு வருஷம் போகாம போனது, எல்லார் மனசுலயும் ஒரு உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது. அதனால் இந்த வருஷம் சின்ன புள்ளயங்களிலிருந்து கிழவன், கிழவி வரைக்கும் எல்லாரும் சந்தோசமாக பழைய துணியா இருந்தாலும் நல்லா தொவச்சு கட்டி போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். 

ஊரென்றால் பெரிய ஊர் ஒன்றும் இல்லை. பதினைந்து குடும்பங்கள் மட்டுமே. அதனால் ஒரு பஸ்ஸிலேயே அடைத்துக் கொண்டு போக வேண்டியது தான் என்று முடிவு செய்தனர். ஊருக்கு ரோடெல்லாம் ஒன்றும் இல்லை. மண் சாலை தான். ஊருக்கு இன்னும் கவர்மெண்ட் பஸ் கூட வரவில்லை. அனைத்தும் சிறிய ஓட்டு வீடுகள். ஒரே ஒரு காரை வீடு. ரெண்டு குடிசை வீடு.

வேடிக்கு எப்படியாவது இந்த வருஷம் மண்ணுல போட்டதெல்லாம் வெளஞ்சருணும்னு ஆசை. ரெண்டு மூணு வருசமா எது வெரைச்சாலும், நட்டாலும் ஒண்ணமில்லாம போயிடுது. மூணு வேல கஞ்சிக்கே சில நாளு அல்லாட வேண்டியதா இருக்கு. அவனும் என்னென்னவோ செஞ்சி பாத்தான். ஒன்னும் பிரயஜோன படல. இயற்கையா இருக்கற உரமும் போட்டு பார்த்தான். ஆபீஸ் மருந்தும் அடிச்சி பார்த்தான். ஒன்னும் சரிப்பட்டு வரல. மழையும் பட்டத்துக்கு தவுந்தாப்புல வர்ரதுல்ல.

ஒரு முறை நல்லா வெளைஞ்சி வந்த நெல்லயும் எலியே கத்தரிச்சு போட்டுருச்சு. மழ பேஞ்சி தண்ணி இருக்கறப்ப வெளஞ்சதும் இப்படி ஆயிடுச்சேன்னு அவன் அதில இருந்து மனசே ஒடஞ்சி போய்ட்டான். பத்து வயசுலையும், அஞ்சு வயசுலயும் பசங்க மூக்கொழிகிகிட்டு அம்மணமா ரோட்ல நெஞ்சு பரி எலும்பு தெரிய நோஞ்சானுங்க மாதிரி விளையாடிட்டு இருக்கறது பாக்குற போது அவனை அறியாமலே கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு கீழ எறங்கி வந்துரும்.  

பஸ்ஸில் கடைசி சீட்டில் உட்கார்ந்து இதையெல்லாம் யோசித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் வேடி. அனைவரும் ஏறிய பிறகு புழுதியை கிளப்பிக்கொண்டு ஆலமர வளைவில் மேடேறி போய்க்கொண்டிருந்தது பஸ். காலை ஐந்து மணிக்கே கிளம்பியதுனால் தூக்க கலக்கமாகவும், குழந்தைகள் அழுது கொண்டும், அம்மாமார்கள் அவர்களை அதட்டிக்  கொண்டும் இருந்தார்கள். முக்கால் மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு கரட்டில் பஸ் நின்றது. அனைவரும் கீழே இறங்கினர். அவர்களைப் போலவே வேறு ஊர் காரர்களும் பஸ் பிடித்துக் கொண்டு வந்திருந்தார்கள். 

இவர்கள் ஊர் போல் இல்லாமல் மத்த ஊர் காரங்க கொஞ்சம் பரவால்ல. ஒத்தக் கல்லா இருந்த சாமிக்கு ஒரு கோயில் கட்டி இருக்காங்க. ஏதோ மத்த ஊர் காரங்க கொடுக்குற பணத்தால சாமிக்கு காரைல கோயிலும் எழுப்பியாச்சு. கோயில் எழுந்து மூணு வருஷம் ஆகியும் இந்த வருஷம் தான் அவுங்க ஊர் கண்களுக்கு கோயில பாக்கறதுக்கு குடுத்து வச்சிருக்கு. 

காலை ஆறு மணிக்கு வெயில் வரத் தொடங்கியது. குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான் விக்கிறவன், ஐஸ் விக்கிறவன், வளையல் விக்கிறவன் என்று ஒரே கூச்சலாக வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள், அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து கடை முன்னாடி நிற்க வைத்து நகர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரே ஒரு அடுக்கு கொண்ட காரை கட்டிடம் தான் கோவில். ஒரு சின்ன கல்லா இருந்த சாமிய சுற்றி இந்த கட்டிடத்தை கட்டி இருந்தார்கள். வேடி உள்ளே சென்று சாமியை கும்பிட்டான். சாமிக்கு வெட்ட வெளில இருந்தப்போ இருந்த உக்கிரம், கட்டடத்துக்குள்ள வச்சப்புறம் கொஞ்சம் கொறஞ்ச மாறி தோணிச்சு அவனுக்கு. உள்ள ஒரு பக்கம் மின்-விசிறி  ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் சாமிக்கு போட்ட மாலை காற்றில் ஆடி கொண்டிருந்தது. இந்த வருஷம் நல்லா பயிர் வெளைஞ்சி சாப்பாட்டுக்கு வழி பண்ணுனு சாமி என்று வேண்டிக்கிட்டான். 

வெளியே வந்து கோவிலை சுற்றிக் வந்து கொண்டிருந்தான். ஒரு மூலையில் கோவிலின் மேற்கு பக்கம் காரை கூரையில் ஒரு மாஞ்செடி இள மஞ்சள் நிறத்தில் இலைகளோடு காற்றில் அசைந்து கொண்டிருந்தது. காரையில் அந்தரத்தில் அசைந்து கொண்டிருந்த செடியையே அவன் ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை அறியாமலேயே அவன் உதட்டில் புன்னகை மலர்ந்தது. 

சத்தம்

உள்ளங்கையில் வைத்து கட்டை விரலால் மொபைலை நோண்டிக்கொண்டே 'ஊம்' கொட்டிட்டிருந்தான் தேவராஜன்.  

"என்ன மச்சி, மொபைலையே பாத்துட்டு இருக்க" என்றான் அருண். இருவரும் தினமும் வேலைக்கு இந்த இரண்டு மணி நேர ரயில் பயணத்தில் சேர்ந்தே செல்வார்கள். கூடவே மற்ற இளைஞர்களும் அவர்களுடன் அடுத்தடுத்த ஸ்டாப்பில் ஏறிக்கொள்வார்கள்.

"என்ன மச்சான் இவன் போனயே பாத்துட்ருக்கான், யார்ட்டயும் பேசாம" விக்கி, அருணிடம் கேட்டான். "போன வாரம்  நடந்த சம்பவத்துலுருந்து , இப்டி தாண்டா இருக்கான்" என்றான் அருண்.

'ஆளுமா, டோலுமா' என்று ராகம் இழுத்து கோரஸாக பாடிக்கொண்டிருந்தார்கள். கையில் ஒரு கறுப்பு   ப்ளூடூத் ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு போகுமிடம் எல்லாம் இசையை தூக்கிக்கொண்டு போகும் கூட்டம். தேவராஜனுக்கு குத்துப் பாட்டுன்னா ஒரே குஷிதான். எதிரில், பக்கத்தில் யார் உட்கார்ந்திருந்தாலும் எந்த கவலையும் இல்லை.

காலைல வேலைக்கு போற இந்த ரெண்டு மணி நேரத்தை இசையால நிரப்பி அதை அந்த பெட்டில இருக்கும் எல்லாருக்கும் இலவசமா கொடுக்கறதுல இந்த பசங்க கில்லாடி. ஒவ்வொருத்தருக்கு ஒரு பாட்டு. ஒரு சுற்று முடிந்ததும் திரும்பவும் இன்னொரு சுற்று ஆரம்பிக்கும்.

ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மூட்ல பாட்டு போடுவான். காலையில் காதலி கிட்ட சண்டை போட்டவன் சோக பாட்டும், செல்லம் கொஞ்சனவன் குஷி பாட்டும் போடுவான். வெறும் வாய் பார்ப்பவன் அந்த சமயத்தில் ஹிட் ஆன பாடலை போட்டு கேட்பான். இவர்கள் கேட்கும் பாடலை வைத்தே எவன் என்னன்ன மூட்ல இருக்காங்கனு தெரிஞ்சிரும்.  

காலைல ஏழு  மணிக்கு வர வேண்டிய வண்டி, ஏழரை மணிக்கு தான் வந்தது, ஒன்பது மணிக்கு முன்னால லாகின் செய்யவில்லை என்றால் அரை நாள் சம்பளம் கட் ஆகிடுமே என்ற கவலையில் இருந்தான் தேவராஜன். ஒரு தனியார் கம்பெனியில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் உள்ளான். எப்போதும் வாடிக்கையாளர்களுடன் பேசும் வேலை. வெட்டிய தலையும், திருத்தி அழகுபடுத்தப்பட்ட தாடியும் வைத்திருந்தான். அவன் தான் அந்த கூட்டத்தில்  இருக்கும் alpha male. அருண் எப்போதும் தேவராஜனாக ஆக துடித்துக் கொண்டிருப்பவன். 

"மேஸ்திரி, வந்துட்டுருக்கன், கெலமங்கலம் வந்துட்டன். இன்னும் கால் மணி நேரத்துல வந்துருவன்" போனில் பேசினான் பச்சை சட்டை போட்டு படியோரம் நின்றிருந்தவன். பக்கத்தில், அவனை மாறியே முகத்தோற்றத்துடன், கையில் மதிய உணவு கொண்டு போகும் wire கூடையை வைத்திருந்தான் ஒருவன் . திரும்பவும் பச்சை சட்டை காரனுக்கு போன் வந்தது.

"இல்லனா, வந்துருவன். ரயில் லேட்டாயிடுச்சு. ஒரு 10 நிமிசம் தான. வேற எடத்துக்கு போல. அங்கேயே வந்துர்ரன். என்ன விட்டுட்டு போய்டாதீங்க." முகத்தில் வெறுப்புடன் படியிலிருந்து எச்சி மூஞ்சான். அவன் நின்று கொண்டிருந்த எதிர் இருக்கையில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பாட்டை போட்டு விட்டுட்டு அவனவன் போன் பார்த்துக் கொண்டிருந்தான்கள். 

"ஏன்டா சௌண்டு கம்மியா வச்சி கேட்க கூடாதா. பக்கத்தூரு வரிக்கும் கேக்குது." பச்சைசட்டைக்காரன் அருணைப் பார்த்து கேட்டான். "பாட்டு நல்லா தான இருக்கு" என்றான் அவன். "டேய் சௌண்ட கம்மியா வைங்கடான்னா பாட்டு நல்லாருக்கு, நாறிருக்குனு".

"வேண்ணா, நீ பக்கத்துக்கு பொட்டிக்கு போ" என்றான் தேவராஜன்,  மொபைலை ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே. பச்சை சட்டைக்காரன் "இவங்கப்பன் ஊட்டு ரயிலு, இவன் சொல்றான்" என்று எகிறினான். பாட்டு சத்தத்திலும் , இவர்கள் வாக்கு வாதத்திலும் அங்கு ஒரே இரைச்சலாக இருந்தது. திடீரென்று பச்சை சட்டை ப்ளூடூத் ஸ்பீக்கரை புடுங்கி கீழ போட்டான்.

"தேவிடியா பயா, என்ன மயிருக்கு ஸ்பீக்கர் மேல கைய வக்கிர" சீட்டில்  இருந்து எழுந்து அவனுக்கு முன்னாள் வந்தான் தேவராஜன். அவனுடைய தலை ஆடிக்கொண்டே இருந்தது. பச்சை சட்டக்காரன் அவன் இடது கன்னத்தில் சடாரென்று ஒரு அரை விட்டான். தேவராஜன் ஒரு நொடி கலங்கி, சுதாரித்து, அவனை அடிக்க கை ஓங்கினான். அதற்குள் அவன் நண்பர்கள் அவனை பிடித்து பின்னுக்கு தள்ளினார். பச்சை சட்டகாரனை அவன் கூட வந்தவன் இழுத்துக் கொண்டு பக்கத்துக்கு பெட்டியை நோக்கி சென்றான். ஓசூர் ரயில் நிலையத்திற்குள் வண்டி மெதுவாக வந்து கொண்டிருந்தது. 

"மச்சான், ஏன்டா இப்டி இருக்க, அதான் புது ஹெட்போன்ஸ் வச்சிருக்க இல்ல. அதுல பாட்டு கேளு. சும்மா போனயா நோண்டிட்டிருக்க" என்றான் அருண். 

"எனக்கு தெரியும், நீ கொஞ்சம் மூடு" என்றான் தேவராஜன் பதிலுக்கு. "மச்சி இந்த சனி, ஞாயிறு எங்கியாவது அமைதியான எடத்துக்கு போலாமா, பசங்களோட" என்றான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு.

"ஆமா, மச்சி, தெகினிக்கோட்ட பக்கத்துல யாருமே போகாத எடம்  ஒன்னுருக்கு. அங்க போலாம்" என்றான் அருண்.

ரெண்டு வண்டியில் சனி காலையில் அவர்கள் நான்கு பேர் அந்த இடத்திற்கு சென்றனர். சுற்றிலும் சிறிய சிறிய குன்றுகள். அதில் ஒரு குன்றின் மேல் ஏறிச்  சென்றனர். அங்கு  இருப்பதிலேயே அது தான் பெரிய குன்று. மேல செல்வது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. வழியென்று ஒன்றும் இல்லை.  முற்றிலும் ஆள் அரவமற்று இருந்தது. காட்டு மரங்கள் இருந்தாலும், அடர்த்தியாக இல்லை. பாறைகள் அங்கொன்று இங்கொன்றுமாக இருந்தது. கையில் ஆளுக்கொரு கோல் வைத்துக் கொண்டு மேலே  ஏறினார். அரை மணி நேரத்தில் உச்சிக்கு வந்துவிட்டனர்.

மேலே ஒரு சமதள புல்வெளி இருந்தது. அங்கிருந்து, அருகிலிருக்கும் சிறு கிராமங்களும் தூரத்தில் இருக்கும் நகரமும் தெரிந்தன. எங்கோ தூரத்தில் ஒரு அணை இருந்தது. காற்று ஆளை தள்ளும் அளவுக்கு வீசிக் கொண்டிருந்தது. மேகங்கள் இருந்ததால் வெயில் இல்லாமல் இதமாக இருந்தது.

"மச்சி, அருமையான எடம் டா, பயங்கர அமைதியா இருக்கு மச்சி. டேய் அந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் எடுத்துட்டு வந்துருக்க இல்ல" என்றான் தேவராஜன்.


Thursday, 29 August 2024

'காவிரிக்கரை' பயணம் - 2

 காவிரியின் வடகரை வழியாக வந்து, திரும்பி செல்லும்போது தென்கரை வழியாக போக திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவிரியின் மேல் நிறைய இடங்களில் பாலம் இருந்ததால், நாங்கள் குறுக்கும் நெடுக்குமாக காவிரியோடு சென்று கொண்டிருந்தோம். மோகனூரில் காலையில் "அசல தீபேஸ்வரர்" கோவிலுக்கு சென்றோம். காவிரி கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள தீபம் அனயா தீபம் என்றொரு ஐதீகம். காலையில் மழை தூறிக்கொண்டிருந்தது. முந்தைய நாள் முழுவதும் ஜெயவேல் வண்டி ஓட்டியதால், நான் வண்டியை ஓட்டினேன். மோகனூரிலிருந்து, ஸ்ரீராமசமுத்திரம் வழியாக சென்றோம்.

நேற்று நாங்கள் பார்த்த காவிரிக் கரையின் வளம் இங்கிருந்து குறைய ஆரம்பித்தது. ஓட்டு வீடுகளும், குடிசை  வீடுகளும் தென்பட்டன. சில இடங்களில் சாலை நன்றாக இல்லை. அதே காவிரி கரை ஒரு இடத்தில வளமுடனும், ஒரு இடத்தில் வளமில்லாமலும் இருந்தது. வீடுகளின் அடர்த்தியும் அதிகமாக  இருந்தது. மாயனூர் பெரிய பாலத்தில் வண்டியை நிறுத்தி காவிரியை பார்த்துக் கொண்டிருந்தோம். நண்பர் தானே வண்டியை ஓட்டிக் கொள்வதாகச் சொன்னார்.

மாயனூரிலிருந்து NH வழியாக காவிரியின் தென்கரையில் சென்று கொண்டிருந்தோம். பெரியார் பாலத்தின் வழியாக திரும்பவும் வடகரைக்கு இறங்கி, முசிறியில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து முக்கொம்பு சென்றோம். நண்பகல் நேரமாதலால் வெய்யில் ஏறிக்கொண்டிருந்தது. காவிரியின் முதல் கிளைநதியான (தமிழ்நாட்டில்) கொள்ளிடம் இங்கு தான் பிரிகிறது. நாங்கள் பார்த்த போது காவிரியை விட கொள்ளிடத்தில் மிகவும் குறைவாகவே நீர் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்த காவிரி பாலத்தின் மேல் சிறிது நேரம் மர நிழலில் வண்டியை நிறுத்தி ஓய்வெடுத்தோம். முக்கொம்பு ஒரு சுற்றுலா தலமாக நன்றாக பராமரித்து வருகின்றனர். நம் ஊரில், சுற்றுலா என்றால் பொதுவாக இருக்கும் ஒரு பூங்காவும் (அல்லது ஒரு பூங்கா இருந்தாலே அது சுற்றுலா தலமாக ஆகி விடுமோ?) இங்கு இருந்தது. நாங்கள் உள்ளே சென்று பார்க்கவில்லை.


                                                        முக்கொம்பு - மேலணை 

சமீபத்தில் சுற்றுலா என்ற சொல்லாடலே என்ன பொருள் கொள்கிறது என்று தெரியவில்லை. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்துவிட்டால் மொத்த ஊரும் காலி செய்து வேறு ஊருக்கு சென்று, சொந்த ஊரில் எப்படி இருக்கிறார்களோ அதே வசதிகளுடன், அதே அன்றாட செயல்களுடன் தான் இருக்கிறார்கள். பொதுவாக நாம் நம் அன்றாடத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, புதிய ஒன்றை அனுபவிக்க சுற்றுலா செல்வோம். ஆனால் இன்று வெறும் புகைப்படம் எடுப்பதற்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கும் நாம் சுற்றுலா செல்கிறோம். மேலும் விடுமுறை நாட்களில் எந்த சுற்றுலா தலமும் திருப்பதி ஏழுமலையான் கோவில் போல ஜனத் திரள்களால் நிரம்பி வழியும். அங்கு இயற்கையை இயற்கையாக காண முடியாது. அல்லது அதற்கான மனம் நம்மிடம்  எளிதில் அமையாது. 

இந்தியாவில் கடந்த இருபது வருடங்களின் அபாரமான வளர்ச்சி அடைந்த துறை சுற்றுலா. எல்லோரிடமும் இப்போது பணப் புழக்கம் இருப்பதால், கார் என்பது நடுத்தர வர்க்கத்தின் அவசியமான ஒரு பொருளாகி விட்டதால், காரை வாங்கி விட்டு, கார் வாங்கி விட்டோம் என்பதற்காக வெளியே எடுத்து கிளம்பி விடுகிறோம். ஹோட்டல்களில் ரூம்களும், பேருந்து / ரயில் / விமான பயண சீட்டுகளும் முன்பதிவு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் முன்னரே செய்து விட வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான சூழல் தான். ஆனால் இது மட்டும் போதாது என்றே நினைக்கிறேன். நம்மிடம் பண்பாட்டு பயிற்சி இல்லையென்றால் இதனை எல்லாம் ஒழுங்காக பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. 

முக்கொம்பில் இருந்து  தென்கரை வழியாக ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டோம். ஸ்ரீரங்கம் நான் செல்வது இதுவே முதல் முறை. காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் தீவு போல் அமைந்துள்ளது ஸ்ரீரங்கம். மதிய நேர வெயில் சுட்டெரித்தது. ஸ்ரீரங்கம் கோபுரம் வெகு முன்னரே தெரிந்தது.  கோவிலுக்கு அருகில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறிது நேரம் யோசித்துவிட்டு, அடுத்த முறை கோவிலுக்குள்ளே சென்று பார்க்கலாம் என்று கோவிலின் வெளி மதில் சுவரை சுற்றி அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருக்கும் காவிரியை காண ஒரு ஆஷ்ரமத்தில் நுழைந்தோம். சில பிராமணர்கள் ஏதோ சடங்கு செய்து கொண்டிருந்தனர். உள்ளே சென்று கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிந்தது அது தனியார் இடம் என்று. அங்கிருக்கும் படித்துறையில் காவிரியை பார்த்து விட்டு, சிறிது நேரம்  ஓய்வெடுத்துவிட்டு கல்லணை நோக்கி கிளம்பினோம்.

கல்லணை என்றதுமே ஏதோ ஒரு பெருமிதம் நம்மை அறியாமல் நம்மிடம் வந்து விடுகிறது. பல ஆயிரம் போலி பெருமிதங்களைக் கொண்டு நமக்கு நாமே பெருமை அடித்துக் கொள்வதை விட, கல்லணை உண்மையில் ஒரு பெருமைப்பட வேண்டிய பொறியியல் அற்புதம் என்றே நினைக்கிறேன். முக்கொம்பில் காவிரியில் பிரிந்த கொள்ளிடம், கல்லணையில் காவிரியின் நீரை மீண்டும் பெற்று, வடகிழக்கு நோக்கி பாய்கிறது. கல்லணையிலிருந்து காவிரி வேணாறாக பிரிந்து காவிரிக்கு தெற்கில் செல்கிறது. காவிரிக்கு வடக்கில் கொள்ளிடமும், தெற்கில் வேணாரும் பாய்கிறது. 




                                                       கல்லணை - பாலம் மேல் 

முக்கொம்பில் கொள்ளிடம் பிரிந்து செல்லுமிடத்தில் இருக்கும் அணை மேலணை என்றும், கல்லணையில் கட்டப்பட்டது கீழணை என்றும் குறிப்பிடப்படுகிறது. கல்லணை கரிகால சோழனால் கட்டப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அதில் மாற்றம் கொண்டு வந்து, இப்பொழுது இருக்கும் அணையாக உள்ளது. காவிரியின் நீர் டெல்டா பகுதிகளுக்கு இவ்வணைக்கட்டு மூலமாகவே பிரிந்து வாய்க்கால் வழியாக செல்கிறது. வேணாற்றிருக்கு தெற்கே இந்த வாய்க்கால் வழியாக டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் பாய்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து பூம்புகார் வரை காவிரியின் பல்வேறு இடங்களில் சிறிய வாய்க்கால்கள் அமைத்து நீரினை பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ஜேடர்பாளையத்தில் காவிரிக்கு வடக்கில் ராஜ வாய்க்கால் பிரிந்து செல்கிறது. தெற்கிலும் ஒரு வாய்க்கால் பாசனத்திற்காக பயன்படுத்துகின்றனர். தெற்கில் செல்லும் வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்காலுடன் இணைகிறது. வடக்கில் பிரிந்த ராஜ வாய்க்கால், மேலும் இரண்டாக பிரிந்து செல்கிறது. மேலும் மாயனூரில் ஒரு வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இது மட்டுமில்லாமல் பல்வேறு சிறு வாய்க்கால்கள் காவிரியின் கிளை நதி போலவே செல்கிறது. கல்லணையிலிருந்து பிரியும் வாய்க்கால் ஒரு நதி போலவே டெல்டா பகுதிகளுக்கு நீரினை கொண்டு செல்கிறது. 

கல்லணையில் குளிக்கலாம் என்ற எங்கள் எண்ணம் காவிரியின் வேகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. கல்லணை ஒரு முட்கரண்டியில் (fork) இருக்கும் நான்கு முட்கள் போல, காவிரி நீரை நான்கு திசைகளில் பிரித்து அனுப்புகிறது. அதில் ஒன்றே புதுக் காவிரியாக பூம்புகார் வரை பாய்கிறது. ஏன் நான் புதுக் காவிரி என்று சொல்கிறேன் என்றால், கல்லணைக்கு மேலே வேறு பண்பாடாகவும், கல்லணைக்கு கீழே வேறு பண்பாடாகவும் இருக்கிறது.



                                                    காவிரி - மேலணை - கீழணை (கல்லணை)

                                          source - http://www.thanjavurtourism.com/kallanai-dam.html

கல்லணையிலிருந்து திருவையாறு நோக்கி கிளம்பினோம். மதிய சாப்பாட்டினை ஒரு சிறு  கடையில் முடித்துக்கொண்டு சென்றோம். காவிரியின் இடது புறமாக நாங்கள் சென்று கொண்டிருந்தோம். முக்கொம்பில் இருக்கும் போதே நண்பர் தண்டபாணி மொபைலில் அழைத்து இன்று இரவு ஆடுதுறை வந்துவிடுங்கள் என்று சொன்னார். நாங்களும் சரி என்று சொன்னோம். காவிரி கரையோரம் பூவரச மரங்கள் தென்பட ஆரம்பித்தது. செல்லும் வழியில் திருக்காட்டுப்பள்ளியில் வண்டியினை நிறுத்தி குடமுருட்டி ஆறு காவிரியிலிருந்து பிரிந்து செல்லும் பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தோம். காவிரிக்கு தெற்கில் குடமுருட்டி பிரிந்து செல்கிறது. 



அங்கு குளிக்கலாம் ஒரு படித்துறையில் இறங்கினோம். அங்கு ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு எங்கள் பின்னால் வந்தார். 

"இங்க ஆழம் எத்தன அடி இருக்கும், ணா" என்று கேட்டேன்.

"நானும் ஊருக்கு புதுசு தான். தஞ்சாவூர் பக்கத்துல. ஆத்த பாத்த ஒடனே குளிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அத்தான் படிதொறக்கி வந்தன்" என்று சொன்னார்.

நாங்களும் அங்கு படித்துறையில் கணுக்கால் அளவு நீரில் குளித்தோம். நீர் பயங்கர வேகமாக வந்து கொண்டிருந்ததால், உள்ளே சென்று குளிக்க முடியவில்லை. நீர் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருந்தது. ஆலமரத்தடியில் படித்துறையில் நான்கு, ஐந்து பேர் லுங்கி கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். நாங்கள் இறங்குவதை பார்த்த ஒருவர், பக்கத்தில் இருக்கும் சுவற்றிற்கு இப்பால் வந்து குளிக்கும் படி சொன்னார். அவரிடம் பேசிக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று கெட்ட வார்த்தையில் திட்டுவது கேட்டது. நாங்கள் திரும்பி பார்த்தபோது அவர்  மொபைலில் யாரையோ கெட்ட வார்த்தைகளில் ஒரு இரண்டு நிமிடம் விடாமல் பயங்கர கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு நிமிடம் கழித்து "தம்பி, உள்ள போகாதீங்க  மேலயே குளிங்க, தண்ணீல அடிச்சிட்டு போயிடுவீங்க" என்று எதுவுமே நடக்காதது போல் எங்களிடம் அமைதியாக பேசினார். அவ்வளவு கோபத்தையும் எப்படி விட்டுவிட்டு சாதாரணமாக பேசுகிறார் என்று ஆச்சரியப்பட்டோம். அப்படி பேசுவதே அந்த கோபத்தில் இருந்து வெளியே வருவதற்காக கூட இருக்கலாம்.




                                                          காவிரி - குடமுருட்டி பாலம் 

அரை மணி நேரம் நன்றாக குளித்து விட்டு, குடமுருட்டி ஆற்றுக்கும், காவிரிக்கும் இடையில் உள்ள வழியில் திருவையாறு நோக்கி கிளம்பினோம். நெல்லும், கரும்பும், வாழையும் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆனால் மக்களிடம் பெரிய வசதிகள் இல்லை. ஓட்டு வீடுகளும், சிறு மாடி வீடுகளும் இருந்தன. மொத்த ஊர்களுமே காவிரியை நம்பியே இருக்கிறது. பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இரண்டு புறமும் மர நிழலோடு நாங்கள் செல்லும் போது ஏதோ கேரளாவிற்குள் தவறி வந்து விட்டோமா என்றே நினைத்தோம். எங்கு பார்த்தாலும் நீரின்  வாசமும்,மரங்களும் இருந்தன. அங்கங்கே காவிரி ரோட்டிற்கு மிக அருகில் செல்கிறாள். ஆண்கள் பெரும்பாலும் லுங்கிகளிலேயே இருந்தனர். ரோட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அங்கங்கே காவிரியின் படித்துறைகளில் குளித்துக் கொண்டே இருக்கின்றனர். 

ஒரு இடத்தில் நடு ரோட்டில் ஒரு இளம் பெண்ணும் ஒரு முதியவரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆடு மேய்ப்பவர்கள். அப்பெண்ணை வண்டி போகிற வேகத்தில் சட்டென்று ஒரு நொடி பார்த்தேன. ஒரு இருபது வயது இருக்கும் இளம் பெண். கருப்பாக இருந்தாள். கையில் ஆடு ஓட்டும் குச்சுடன் இருந்தாள். அவள் கண்களில் இருந்த கள்ளமின்மை அவளை மிகவும் அழகாக காட்டியது. கல்லணைக்கு மேலிருக்கும் பெண்களிடம் இந்த கள்ளமின்மையும், அழகும் இல்லை. கல்லணைக்கு கீழிருந்து பெண்கள் கருப்பாகவும், அழகாகவும் இருந்தனர். உயரமும் சற்று குறைவாகவே இருந்தனர். 

இங்கு வாழை இலைகளை கட்டி ஏற்றிக்கொண்டிருந்தனர். தலைவாழை இலைகளை நன்றாக சுருட்டி வாழைக் தண்டுகளை கொண்டே மூடி எடுத்து செல்கின்றனர். 



திருவையாறு வந்து, ஒரு படித்துறையில் அமர்ந்து பேசி பேசிக்கொண்டிருந்தோம். திருவையாற்றில் காவிரி முழுவதும் தளும்பி  செல்கிறாள். நாங்கள் அமர்ந்த படித்துறைக்கு ஐந்தடி பக்கத்தில் வீடுகள் உள்ளன.திடீரென்று ஐந்து இளைஞர்கள் வந்து குளித்து செல்கின்றனர்.  திருவையாற்றில் அசோகா என்னும் இனிப்பு பிரபலம் என்று நண்பர் சொன்னார். அங்கு குளித்துக் கொண்டிருந்த  ஒருவரிடம் கேட்டோம். அவர் ரெண்டு கடை இருப்பதாக சொன்னார். பங்காளிகளா என்று தெரியவில்லை. ஒரு கடையில் சுத்த நெய்யில் அசோகா கிடைக்கும் என்றும், மற்றோரு கடையில் டால்டா அசோகா கிடைக்கும் என்றும் கடையின் பெயர்களை சொன்னார். நாங்கள் அவற்றைக் கேட்டுக்கொண்டு வழக்கம் போல் பெயரினை மாற்றி டால்டா அசோகாவினை வாங்கிச் சென்றோம்.

பதினெட்டு / பத்தொம்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த  இசை மேதை தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்ந்த வீடு இப்படித்துறையின் சாலையில் தான் உள்ளது.  வீட்டின் அருகிலேயே இசைப்பள்ளியும் ஒன்று உள்ளது. அவற்றை கடந்து ஆடுதுறை நோக்கி புறப்பட்டோம்.

"இந்த தேக்கு மரமெல்லாத்தையும் அரசாங்கமே வெட்டி மாற சாமான்கள் செய்து வித்தா நல்லாருக்குமில்ல" என்று காவிரியின் கரையோரம் நிறைய வளர்ந்திருந்த தேக்கு மரங்களை பார்த்துக் கொண்டே நண்பருடன் சொன்னேன்.

"அது பெரிய ஊழலாயிடும்" என்று நண்பர் சொன்னார்.

"ஊழல் நடக்காதுன்னு முடிவு செஞ்சு தான் ஒரு துறைய உருவாக்கணும்னா, எந்த ஒண்ணுத்தையும் உருவாக்கவே முடியாது" என்று சொன்னேன். தேக்கு மரங்களும், பூவரசு மரங்களும் ஒட்டி, முழு அளவோடு ஓடும் காவிரியை பார்த்துக் கொண்டு சென்றோம். 

இன்னொரு பொதுவான ஒரு அம்சம் மயில்கள். பவானியை தாண்டியதிலிருந்தே மயில்கள் அதிகமாக தென்பட்டன. முசிறியில் ஒரு இடத்தில் ஆண் மயில் ஒன்று அழகாக தோகை விரித்திரிந்தது. ஆனால் நண்பர் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டதால், ஒழுங்காக பார்க்க முடியவில்லை. ஒரு இடத்தில் காவிரிக் கரையின் மிக அருகில், மைல் கல்லில் மேல் தன் நீலக் கழுத்தினை ஒரு பக்கம் திருப்பிப் பார்த்துக் கொண்டு நீண்ட தோகைகளை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்த காட்சி ஒரு ஓவியம் போல் மனதில் பதிந்தது. 

திருவையாறிலிருந்து ஆடுதுறைக்கு சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து ஆடுதுறைக்கு கூகுள் மேப் போட்டுக்  கொண்டு சென்றோம். காவிரிக்கரை ஒட்டியே மாநில நெடுஞ்சாலை உள்ளதால் வழியில் காவிரியை விட்டு பிரிந்தும் சேர்ந்தும் சென்று கொண்டிருந்தோம். காவிரியுடன் செல்வது ஒரு ஒளிந்து விளையாடும் ஆட்டம் போலவே இருந்தது. கல்லணைக்கு கீழே காவிரியின் அகலம் குறைந்து கொண்டே செல்கிறது. மெத்திட்டாரு என்ற இடத்தில் அரசலாறு என்னும் ஆறு பிரிந்து காவிரியின் தெற்கே செல்கிறது. ஒரு இடத்தில் டீக்குடிக்க நிறுத்தினோம். மாலை நேரமானதால் டீக்கடையில் கூட்டம் இருந்தது. 

நான்கைந்து இளைஞர்கள் 'பொட்டணம்' வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். 18 முதல் 20 வரை வயதுள்ள இளைஞர்கள். ஐந்தாறு  பேர் இருந்தனர். எவரும் சிகரெட்டு அடிக்கவில்லை. அவர்கள் பேச்சும், கிண்டலும் கேலியாக இருந்தது. எங்கள் ஊரில் மட்டும் ஏன் நாலைந்து நண்பர்கள் சேர்ந்தால்  சிகரெட்டும், சினிமாவும் மட்டுமில்லாமல் ஏதோ ஒரு பெரிய சாதனை புரிவது போல் ஆளுக்கொரு வண்டியில் முறுக்கிக்கொண்டு போகிறார்கள் என்றே தெரியவில்லை. அல்லது நாங்கள் பார்த்த இளைஞர்கள் விதி விலக்குகலா என்று தெரியவில்லை. நாங்களும் பொட்டணம் வாங்கி சாப்பிட்டோம். எங்கள் ஊர் பக்கடா அளவில் ஒரு  பொட்டலத்தில் மடித்து கொடுத்தனர். நன்றாக இருந்தது.



திருப்பழனம், கபிஸ்தலம், சுவாமிமலை, திருவிசநல்லூ வழியாக சென்று கொண்டிருந்தோம். மேற்கே சூரியன் மறையும் மாலை ஒளி பக்கவாட்டில் காவிரியின் மேல் விழுந்து, வெள்ளி மின்னுவது போல் நீர் பிரதிபலித்தது. வண்டியில் சென்று கொண்டே இதை எல்லாம் பார்த்துச் சென்றதால், அந்த நொடியின் காட்சி அப்படியே ஒரு புகைப்படம் போல் மனதில் பதிந்து விடிகிறது. பைக்கில் திறந்த வெளியில் காற்றையும் , ஒளியையும்  நேரடியாக நாம் உணர்வதால் இது போன்றவற்றை அறிய முடிகிறது. காரில் பயணிக்கும் போது இந்த அனுப்பவும் நமக்கு ஏற்படுவதில்லை. காரில் செல்வதால் வேறு பயன்கள் இருந்தாலும், இது போன்ற சில அனுபவங்கள் கிட்டுவதில்லை.

ஆடுதுறைக்குள் காவிரியையும் , வீரசோழ ஆற்றையும் (காவிரியின் இன்னொரு கிளை ஆறு) கடந்து உள்ளே சென்றோம். ஆடுதுறை ஒரு சிறு டவுன். நண்பர் தண்டபாணியிடம் கால் செய்து வந்து விட்டதாக கூறினோம். அவரும் சிறிது நேரத்தில் வந்தார். ஒரு டீ குடித்துவிட்டு, அவரது வீட்டிற்கு  சென்றோம். ஆடுதுறை ரயில் நிலையம் அருகிலேயே அவருடைய பணியிடமும், வீடும் உள்ளது. இரவு நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 

Sunday, 25 August 2024

'காவிரிக்கரை' பயணம் - 1


 

"ஜி, எப்போ காவிரி பயணம் போலாம்" என்று நான் கேட்டேன்.

"அட, போற போக்குல சொன்னதெல்லாம் seriousa  எடுத்து கிட்ட" என்று நண்பர் சொன்னார்.

சிட்டி - தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய "நடந்தாய் வாழி - காவிரி" நூலினை வாசிக்கும் போது, இந்த உரையாடல்கள் நிகழ்ந்தன.

இப்படி ஆரம்பித்தது தான் எங்கள் 'காவிரிக்கரை' பயணம். 

காவிரியை ஒட்டியே, அதன் கூடவே முடிந்த வரை பயணம் செல்வது தான் எங்கள் திட்டம். இறுதியில் நாங்கள் இருவர் மட்டுமே (நானும், நண்பர் ஜெயவேலுவும்) பயணம் செய்வதாக முடிவானதால், பைக்கில் போகலாம் என்று முடிவு செய்தோம். பைக்கில் சென்றால் காரில் செல்ல முடியாத இடங்களுக்கும் காவிரியோடு சேர்ந்து செல்லலாம் என்ற ஆசையும் கூட.

எங்கிருந்து தொடங்குவது என்று ஒரு குழப்பம். தலைகாவிரியிலிருந்து தொடங்கினால் தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தென்-மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருந்ததால், நாங்கள் ஹொகேனக்கல்லிலிருந்து தொடங்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அங்கும் நீர் அதிகம் போவதால், உள்ளே அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டு, சரி, ஓடும் காவிரியை முதலில் பார்க்காமல், அடைந்திருக்கும் காவிரியை மேட்டூர் அணையில் பார்க்க புறப்பட்டோம்.

 NH ரோடுகளை தவிர்த்து, கிராம சாலைகளிலும், SH சாலைகளிலும் செல்வதே எங்கள் திட்டம். காலை ஆறு மணிக்கு தர்மபுரியில் இருந்து இன்னொரு நண்பரின் royal enfield பைக்கில் கிளம்பினோம். நண்பர் வண்டி ஓட்ட, நான் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு பின்னாடி அமர்ந்திருந்தேன். செல்லும் வழியில் நாகாவதி அணைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். 

கடந்த பதினைந்து தினங்களாக, நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால், வழியெங்கும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது. நண்பர் அவருடைய கல்லூரி நண்பனின் வீடுகளை காட்டி கொண்டு சென்றார். 
"அபாரமான வளர்ச்சி, இந்த இடம். வெறும் குடிசை வீடுகளும், ஒட்டு வீடுகளும் தான் இருந்தது. இப்போ வேற லெவல்ல இருக்கு" என்றார் நண்பர்.

"ஆமாம், கடந்த இருபது வருடங்களில் தர்மபுரி சுற்று வட்டாரங்களில் பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சி. முக்கால்வாசி வெளியூர் பணம். Bangalore NH-ல் முக்கியமான இடமாகிறதனால தர்மபுரியிலிருந்து - ஓசூர் வரை real estate exponential growth" என்று சொன்னேன்.

சாலை குறுகி இருந்தாலும் நன்றாக இருத்தது. தொப்பூர் மலை தொடர்களை பார்த்துக் கொண்டே சென்றோம். நாகாவதி அணைக்கு அருகில் புலம் பெயர் ஈழ குடியிருப்புகள் இருந்தன. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. ஒரு 50 நீர்காகங்களின் கூட்டம் மேலே பறந்து சென்றது. இளவெயில் அடிக்க தொடங்கியது. <படம்>

மேட்டூர் செல்லும் வழியில் பெரும்பாலையில் அகழ்வு இடம் இருப்பதாக முன்னர் படித்ததால், அங்கு செல்லலாம் என்று கூகிள் மேப்பில் வழி போட்டுக் கொண்டு சென்றோம். அங்கு அகழ்வு பணிகள் முடிந்து விட்டதாக அங்கு சென்ற பின் தெரிந்து கொண்டு, பக்கத்திலே ஒரு நடுகல் இடத்திற்கு சென்று பார்த்தோம். மூன்று நடுகற்கள் மூன்று திசையிலும் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டு கிழக்கு பக்கம் மட்டும் திறந்திருப்பது போன்று வைத்திருந்தனர். மேற்கு புறமும், தெற்கு புறமும் இருந்த நடுகற்கள் போர்  காட்சிகளாக செதுக்கப்பட்டிருந்தன. காலை சூரிய ஒளியில் அந்த கல்வெட்டுகள் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது. குதிரையில் இருந்து ஒரு போர் வீரன் சண்டையிடுவது போன்று அற்புதமாக செதுக்கப்பட்டிருந்தது. வடக்கில் இருந்த கல்லில் கல்வெட்டுகள் இருந்தன. 



மேச்சேரியில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு மேட்டூருக்கு சென்றோம். மேட்டூர் நீர்தேக்கத்திலிருந்து ஒரு கண்மாயில் மட்டும் நீர் திறந்து விடப்பட்டு பொங்கி வந்து கொண்டிருந்தது. அதனை பார்த்துக்கொண்டே மேலே மேட்டூர் அணைக்கு சென்றோம். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று பார்வை மண்டபத்தில் ஏறி பைனாகுலரில் மேட்டூர் அணையின் நீர்தேக்கத்தினை கண்டோம். 

அங்கிருந்து கீழே இறங்கி ஒரு நினைவுத்தூணுக்கு அருகில் இருந்து, பைனாகுலரில் நீர் கண்மாயிலிருந்து பொங்கி வருவதை கண்டோம். நீர் இறங்கி செல்லும் கால்வாயில், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் வரையில் வரிசையாக நீர்காகங்கள் வெயில் காய்ந்து கொண்டிருந்தன. நீர் காகங்களை இவ்வளவு எண்ணிக்கையில் நான் பார்த்ததே இல்லை. அதுவும் அனைத்து காகங்களும் வரிசையில் ஏதோ ராணுவ ஒழுங்கில் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தேன். நம் கண்ணுக்கு நாம் காணும் காட்சிகள், நாம் ஏற்கனவே அறிந்திருந்த ஒரு கணித அமைப்புக்குள் வந்தால் தான் அதனை நாம் அழகென்று ஏற்கிறோம். அப்படி வடிவமே இல்லாத ஒன்றை நம்மால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. நாம் இயற்கையை முதலில் அணுகுவது அதன் வடிவத்தைத் தான் என்று நினைக்கிறேன். நமக்கு முன்பே தெரிந்திருக்கும் வடிவத்திருந்து பார்க்கும் காட்சியினை ஒப்பிட்டுப் பார்த்து அர்த்தம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். 



நீர்காகங்களையே ரொம்ப நேரம் மாறி மாறி பைனாகுலரில் பார்த்துக் கொண்டிருந்தோம். வெளியில் கிளம்பி வந்து வண்டி பக்கத்தில் நண்பருக்கு காத்து கொண்டிருந்தேன். நண்பர் பக்கத்தில் இருந்த கருவேல மரத்தருகில் சென்று பார்த்து கொண்டிருந்தார். பக்கம் வந்து "கருவேல மரம் முழுக்க பூத்திருக்கிறது, நீ பார்த்தாயா?" என்றார். நான் இல்லை என்று சொல்லி அதன் அருகில் சென்று பார்த்தேன். இதுவரை நான் கருவேல மரம்  பூக்களை பார்த்தது இல்லை. பார்த்திருந்தாலும் நினைவில் ஏற்றியது இல்லை. மரம் முழுக்க பூத்திருந்தது. பூக்களை சுற்றி தேனீக்கள் மகரந்தம் குடிக்க ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. மகரந்த வாசனை காற்றில் மிதந்து கொண்டிருந்தது.



மேட்டூரிலிருந்து கிளம்பும் போது மீன்கூடைகளையும், மீன்கடைகளையும் திறந்து கொண்டிருந்தனர். எங்கள் இடது புறத்தில் காவிரி ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்கும் இடையில், காவிரியின் மேல் இரு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு பாலம் உள்ளது. காவிரி கிராஸ் என்ற இடத்தில நாங்கள் மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் நுழைந்து ஒரு பாலத்தின் பக்கம் வந்தோம். அங்கு ஒரு காவல் ஷெட் போல ஒன்று இருந்தது. அதில் உள்ளேயும் வெளியேயும் குட்டி நாய்களும், குட்டி பூனைகளும் இருந்தது. பாலத்தின் மேலே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தோம்.  திடீரென்று ஒரு பையன் வண்டியில் வந்து , ஒரு தட்டில் தீனிகளை வைத்தான். அந்த பூனைகளும், நாய்களும் ஒரே தட்டில் அவற்றை உண்டன. ஒரு நாய்க்குட்டிக்கு காலில் மருந்து  போட்டு விட்டான். அந்த ஷெட்டில் இருந்த அனைத்து குட்டிகளையும் வெளியே தூக்கி வைத்து அதனை கழுவி விட்டான். நாய்களும், பூனைகளும் உண்ட பிறகு தட்டினை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். அவன் கொஞ்ச தூரம் செல்லும் வரையில் சில பூனைகளும், நாய்குட்டிகளும் ஒன்றாக அவனை துரத்தின. 



 நண்பர் யுவராஜ் பவானி செல்லும் வழியில் அவருடைய ஊர் இருப்பதால் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தார். அவரை சந்தித்து காவிரியின் இன்னொரு குறுக்கணை  வழியாக சென்றோம். ஆற்றோர மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் ஜெயவேல் பேசிக் கொண்டே இருந்தார். யுவராஜ் அவரை சேலம் பாலம் சந்திப்பில் சில வருடங்களுக்கு முன் சந்தித்தது பற்றியும், அவர் "ஆரோக்கிய நிகேதன்" நூலினை அறிமுகப் படுத்தி பேசியதை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்று அவர் அந்நூலினை பற்றி அற்புதமாக பேசியதால், அன்றே அவர் அந்த நூலினை வாங்கியதாகவும் சொன்னார். தீவிரமாக அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். (பேசி கொண்டிருந்தார்). நண்பர் ஜெயவேல் பேசி கொண்டிருப்பதை பார்த்தபோது, எப்படி ஒருவரால் அவ்வளவு தீவிரமாகும் சரளமாகவும் பேச முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். முற்றிலும் இலக்கியம் சார்ந்தே பேசிக் கொண்டிருந்தோம்.

நண்பர் யுவராஜ் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரின் அப்பா இறந்து விட்டதால், துக்கம் விசாரிக்க அவரது வீடு தேடிச்சென்றபோது, எப்படி பக்கத்து வீட்டு காரர்களுக்குக் கூட அங்கு ஒரு சாவு ஏற்பட்டது தெரியாமல் இருந்தது என்றும், அந்த சாவு வீட்டிற்கு சென்றால், அனைவரும் குளித்து முடித்து இவர்களை நன்றாக உபசரித்து அனுப்பி வைத்தனர் என்றும் ஆச்சரித்தோடு சொன்னார். இத்தனைக்கும் சாவு நடந்தது காலையில், இவர்கள் சென்றது மதியத்தில். ஒரு ஆறு மணி நேரத்தில் ஒரு தந்தையின்  இல்லாமையின் வெற்றிடத்தை மறந்து, குளித்து முடித்து மேலுமொரு நாள் போல இருந்தனர் என்று சொன்னார். இது நகரத்தில் அல்ல. காவிரி கரையோர கிராமத்தில். எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. சடங்குகள் அற்ற வாழ்வு இருக்க முடியுமானால் அது அறிவின் உச்சத்தில் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நிலையை அடைய ஒரு சதவீத அளவுக்குக் கூட ஒரு சமூகமாக நாம் வளரவில்லை. 



மேட்டூரிலிருந்து பவானி செல்லும் வரை  எங்கு பார்த்தாலும் கரும்பும், வாழையும், பாக்கு மரங்களுமாக இருந்தன. காவிரியின் கருணை பச்சை வயல்களாக மாறி இருந்தது. நாங்கள் காவிரி கூடவே செல்ல விரும்பியதால், கூகிள் மேப் சொல்லும் வழியினை பின்பற்றாமல், மேப்பில் காவிரியின் ஓரமாக சிறு வழி இருந்தாலும் அதனை ஒட்டியே சென்றோம். சில இடத்தில அகன்றும், சில  இடத்தில குறுகியும், வேகம் குறைந்தும், வேகமாகவும் காவிரி சென்று கொண்டிருந்தாள். இருபது நாட்களுக்கு முன், காவிரியில் நீர் அதிகமாக சென்றதன் காட்சிகளை சில கரைகளில் கண்டோம். 

பவானியில் வந்து மதிய உணவு முடித்து பவானி சங்கமேஸ்வர் கோவில் அருகில் உள்ள படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தோம். குளிப்பதற்கு கம்பி கட்டி வைத்துள்ளனர். அந்த இடம் முழுவதும் சடங்கு செய்வதற்கு மக்கள் வந்து கொண்டே இருந்தனர். சடங்குகள் என்ற பெயரில் ஆறுகளை நாசம் செய்து கொண்டிருக்கிறோம். உடுத்திய உடைகள் அனைத்தையும் அப்படியே ஆற்றில் விட்டு விடுகிறார்கள். இத்தனைக்கும் அங்கேயே படிக்கட்டுகளில் ஒரு தொட்டி போன்று வைத்து துணிகளை தொட்டியில் போடவும் என்று எழுதி வைத்திருக்கின்றனர். நமக்கு ஏன் சடங்கின் மேல் இவ்வளவு மோகம் என்று தெரியவில்லை. நண்பர், ஒரு நடுத்தர பெண்மணி சேலையை ஆற்றில் போட முயலும் போது, அங்கே தொட்டியில் போடுங்கள் என்று சொன்னார், ஆனால் அந்த பெண்மணி கேட்காமல் ஆற்றில் போட்டு போனார். 

ஏன் நதிகள் மேல் இந்த உதாசீனம் என்றே தெரியவில்ல. ஒரு புறம் தண்ணீர் வரவில்லையெனில் கர்நாடகாவிடம் சண்டை பிடிக்கிறோம்.  ஆடி 18 அன்று, காவிரி முழுக்க பூ போட்டு கொண்டாடுகிறோம். ஆனால் அதிலேயே கண்டதையும் போட்டு நாசம் செய்கிறோம். ஏன் நமக்கு இந்த ரெட்டை வேஷம் என்றே தெரியவில்லை. சடங்குகள் ஒரு காலத்தில் செய்ததை நாம் அப்படியே பின்பற்றுவதால், நம் நதிகள் நாசம் அடைகின்றன. ஒரு காலத்தில் அனைத்து துணிகளும், மற்ற பொருட்களும் மட்கும் (கரிம) பொருட்களால் ஆனவை.ஆனால் நாம் இப்பொழுது பயன்படுத்தும் அனைத்தும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வது. மேலும் எங்குமே பிளாஸ்டிக் மயமாகிவிட்ட காலத்தில், இச்சடங்குகள் தேவை தானா? வனத்துறை சட்டங்கள் போன்று, ஆறுகளுக்கும் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் தான் இதனை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும் என்று நண்பரிடம்பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் நாங்கள் ரொம்ப நேரம் அங்கேயே குளித்துக் கொண்டிருந்தோம். பவானியும், காவிரியும் சங்கமிக்கும் இடத்தில காவிரி படித்துறையில் குளுமையான நீரில் குளித்துக் கொண்டிருந்தோம். மார்பளவு நீர் சென்று கொண்டிருந்ததால், குளிப்பதற்கு நன்றாக இருந்தது. நீரும் வேகமாக சென்று கொண்டிருந்தது. பவானி ஆறு வெறும் குப்பைகளாகவும், சாக்கடைகளாகவும் காவிரியுடன் கலக்கிறது. இதனை திரிவேணி சங்கமம் என்று சொல்கின்றனர். பூமிக்கு அடியில் இன்னொரு ஆறு செல்வதாக இருக்கும் ஐதீகத்தினால் இப்பெயர். 

குளித்து முடித்து காவிரி கரையோரமே சென்று கொண்டிருந்தோம். குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம் என்று சென்று கொண்டிருந்தோம். எங்கு காவிரியின் மேல் பாலம் வந்தாலும் உள்ளே சென்று பாலத்தின் மேல் வண்டியை நிறுத்தி, காவிரியை பார்த்துவிட்டு செல்வோம். பெரும்பாலான பாலங்களில் குறுக்கு அணைகள் அமைத்து காவிரியின் வேகத்தினை கட்டுப்படுத்தி ஒரே கண்மாயில் நீர் வேகமாக திறந்து விடுகின்றனர். அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். அப்படி மொத்த வேகமும் ஒரே கண்மாயில் வருவத்தால் நீர் நுரைத்துக் கொண்டு வேகமாக வெளியேறுவதை பைனாகுலரில் பார்த்து கடல் பொங்குவது போன்று ஒரு நொடி தோன்றியது. 

உள் கிராமங்களில் அங்குள்ள வீடுகளை பார்த்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தோம். பெரும்பாலும்  எங்கும் ஓட்டு வீடுகளையோ, குடிசை வீடுகளையோ பார்க்க முடியவில்லை. அனைத்தும் மாடி வீடுகளே. அதே போன்று சாதாரணமான மாடி வீடுகள் இல்லை. பெரிய பெரிய மாளிகை வீடுகளாகவே இருந்தன. வீடுகளின் நெருக்கமும் அதிகம் இல்லை. வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. பரமத்தி வேலூர்  அருகே கோரை புற்கள் சாகுபடி செய்து கொண்டிருந்தனர். நெல் போன்றே உயரத்திலும், வண்ணத்திலும் உள்ளது. கோரைப் பாய் அதிலிருந்து தான் செய்கின்றனர். 



நிறைய இடங்களில் வாத்துக் கறி கடைகள் இருந்தன. ஆனால் எங்களுக்கு தான் அதனை ருசிக்க நேரம் இருக்கவில்லை. ஒரு பாலத்தில் சாயங்கால வேளையில் நின்று கொண்டிருந்தோம். திடீரென்று பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது. ஒரு நாற்பது வயது பெண்மணி காரில் இருந்து இறங்கி, ஒரு கட்டப்பையில் வைத்திருந்தவற்றை ஆற்றில் அப்படியே பையோடு தூக்கி போட்டார். கெட்ட வார்த்தை மனதில் நினைத்துக் கொண்டு அவர்களை திட்டிக் கொண்டிருந்தோம். இவர்களின் நடு வீட்டில் யாராவது மலம் கழித்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இவர்கள் ஆறுகளுக்கு செய்வது. யாராவது உண்மையிலேயே அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இப்படி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அப்படி கூட இவர்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை. மனதினை வேறு திசையில் மாற்ற பைனாகுலரில் தூரத்தில் இருக்கும் நீர்க் காகங்களை பார்க்க  தொடங்கினேன். 

சாலைகள் அனைத்து இடங்களிலும் நன்றாக இருந்தது. கிராமங்களில் கூட. ஒரு இடத்தின் பொருளாதார முன்னேற்றத்தின் முதல் படியே அங்கு இருக்கும் சாலைகளின் வழியாகவே தெரிந்து கொள்ளலாம். வழியில் பல இடங்களில் சந்தைகளை கண்டோம். மோகனுர் சக்கரை ஆலையை கடந்து சென்று கொண்டிருந்தோம். வெளிச்சம் குறைந்து இரவானதால், ஒரு விடுதிக்கு சென்று A/C அறை போட்டு தங்கினோம். 



Tuesday, 21 May 2024

அன்றில் பயணம்

சா. பாலுசாமி அவர்கள் எழுதிய "நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்" புத்தகத்தில் வரும் நெல்லையைச் சுற்றியுள்ள கோவில்களுக்கு செல்வது என்பது திட்டம். 

சனிக்கிழமை காலை நான்கு மணிக்கு தர்மபுரியில் இருந்து நெல்லை பயணம் ஆரம்பித்தோம். வழியில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவிலுக்குச் சென்று பார்த்துவிட்டு போகலாம் என்று முடிவு செய்தோம் .

கோவிலின் கோபுர சிற்பங்களை வழக்கம் போல் விதமிதமாக வண்ணம் பூசி வைத்திருந்தனர். கோவில்  வளாகத்தினுள் உள்ளே சென்றோம்.  முக மண்டபத்தில் ஆளுயர சிற்பங்கள் அணி ஒட்டிய ஸ்தம்பத்தில் வரிசையாக இருந்தன. மன்மதன் ரதியும் எதிரெதிர் ஸ்தம்பத்தில் செதுக்கப்பட்டிருந்தன. மன்மதன் கையில் இருக்கும் கரும்பின் கணுவினைக் கூட தத்ரூபமாக செதுக்கி இருந்தனர். நரசிம்மர் இரணியனை வதம் செய்வது மிகவும் உயிர் துடிப்பாக இருந்தது. இரணியனின் குடலை கையில் கொண்டு மிகுந்த ஆவேசத்துடன் நரசிம்மர்  இருந்தார். 





அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றோம். தாடிக்கொம்பு கோவிலில் பார்த்தது தான் பிரம்மாண்டம் என்று நினைத்தால்,  ஸ்ரீவில்லிபுத்தூர் முக மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் அதனை விட பிரம்மாண்டமாய், தத்ரூபமாய் இருந்தன. உள்ளே சென்றவுடன் யாளிகளின் பிரம்மாண்ட அணிவரிசை நம்மை வரவேற்கும். அங்கிருந்து உள்ளே முக மண்டபத்தில் அர்ஜுனன் - கூரிய தாடியுடன், கர்ணன் - கையில் நாக பாசனத்துடன், வீரபத்திரர் பல்வேறு நிலைகளில் காட்சியளிக்கின்றனர். இங்கும் மன்மதன் சிலையும், எதிரில் அன்னத்தில் ரதியின் அழகிய சிலையும் உள்ளது.  ஆண்டாளை தரிசித்து விட்டு உட்பிரகார சுற்றில் எழுதி வைத்துள்ள ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை பார்த்துக் கொண்டு வந்தோம். ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.




வெளியில் வந்து நுங்கும் தெளுவும் வாங்கிக் குடித்துவிட்டு (சக்கரை கலப்படம்), பால்கோவாக்களை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு சென்றோம். அங்கிருந்து கழுகுமலை செல்ல புறப்பட்டோம். செல்லும் வழியில் சங்கரன் கோவில் என்ற இடத்தில் சாப்பிடலாம் என்று உணவகம் தேடிக் கொண்டிருந்தோம்.  அங்கிருந்த அண்ணாமலையார் ஹோட்டலில் ஆளுக்கொரு சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். சாப்பாட்டிற்கு அவியல், பொரியல், கூட்டு என்று மூன்று வகையாக வைத்திருந்தனர். நான் இங்கு தான் முதல் முதலாக அவியல் சாப்பிடுகிறேன் (அல்லது இது தான் அவியல் என்று தெரிந்து சாப்பிடுகிறேன்). உணவு மிகவும் சுவையாக இருந்தது. அவியல் காரமில்லாமல் நன்றாக இருந்தது. சாப்பிட்டு விட்டு கழுகுமலைக்கு கிளம்பினோம்.

கழுகுமலை தூத்துக்குடியில் உள்ள ஊராகும். அங்கு முடிவு பெறாத ஒரு குடைவரைக் கோவிலும், ஒரு சமணப்பள்ளியும் உள்ளது. கீழே ஒரு குளம் உள்ளது. அங்கு ஒரு நீர்காகம் றெக்கைகளை விரித்து வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். நாங்கள் மேலே ஏறி சென்றோம். இடது புறம் உள்ள குடைவரை கோவிலுக்கு முதலில் சென்றோம். மேலிருந்து அதன் அமைப்பை பார்த்தோம். கோவில் விமானத்தில் வீணாதார சிவனின் சிற்பம் உள்ளது. எல்லோராவில் இருக்கும் கைலாச நாதர் கோவிலின் உருவ ஒற்றுமை கொண்டது இக்கோவில். கீழே இறங்கி கோவிலை சுற்றி பார்த்தோம். இங்குள்ள கற்களின் அமைப்பால் இக்கோவிலை பாதியில் நிறுத்தி விட்டார்களோ என்று தோன்றியது. அங்கங்கே சிலைகள் விரிசல் கொண்டிருந்தன. 





அங்கிருந்து வலது புறம் சென்று சமணப் பள்ளியினை பார்த்தோம்.  பார்சவநாதரும், பாகுபலி கோமதீஸ்வரரும் சிற்பங்களாக இருந்தனர்.


அங்கிருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டோம். காற்றாடிகள்  தோன்ற ஆரம்பித்தது. செல்லும் வழியில் அன்றில் பறவைகளை பார்த்தோம். நகரத்தை நெருங்க சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. நயினார் குளத்தில் பறவைகள் இருந்தன. ஒரு காலத்தில் நெல்லை கோவிலின் ஒரு முன் மண்டபமாக இருந்திருக்கும் ஒரு மண்டபத்தின் ஊடாக சாலை இருந்தது. கோவில் எதிரிலேயே உள்ள இருட்டுக் கடை அல்வாவிற்கு மக்கள் அலை மோதிக்கொண்டிருந்தனர். அங்கு பண ஸ்கேன் வசதி இல்லை. கையில் பணம் மட்டுமே கொடுக்க வேண்டும். 





நெல்லையப்பர் கோவிலை சுற்றி அனைத்து பெரிய கடைகளும் உள்ளதால் கோவிலுக்கு வருபவர்களை விட, ஷாப்பிங் செய்ய வருபவர்களே அதிகம் என்று நினைக்கிறேன். நெல்லையப்பரைப் பார்த்து விட்டு ஷாப்பிங் செய்து செல்பவர்களும் உண்டு. தெருக்களும் அகலமானதாக இல்லாததால், ஷாப்பிங் செய்ய வருபவர்களின் வாகனங்கள் தெருக்களை அடைத்து கொண்டு, செல்லும் வழி குறுகியதாக உள்ளது. ஆனால் காவல் துறை வாகனம் ரோந்து வந்துகொண்டே தான் இருக்கிறது.

மாலை ஆறு மணியளவில் காரினை நயினார் குளம் ஓரம் உள்ள இடத்தினில் பார்க் செய்து விட்டு நடந்து வந்தோம். நெல்லையப்பர் கோவிலுக்குள் செல்லும் முன் மண்டபத்தின் மேற்கூரையில் இருபக்கமும் மரத்தாலான ஆண் - பெண் காமத்தில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. உள்ளே செல்பவர்கள் மேலே பார்த்தால் நன்றாக தெரியும். உள்ளே முக மண்டபத்தில் இடது புறம் உள்ள தூண்களில் ஆளுயர சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வீரபத்திரர் சிலைகள், கர்ணன், அர்ஜுனன், மன்மதன், ரதி ஆகிய சிலைகள் தென் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் உள்ளது. இவற்றில் சில சிலைகள் நெல்லையப்பர் கோவிலிலும் உள்ளது.



இரவு நெருங்கியதால் நாளை காலை வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பிவிட்டோம். செல்லும் வழியில் இருட்டு கடை அல்வாக்களை வீட்டுக்கு வாங்கிக் கொண்டோம். அங்கு வாழை இலையில் சுற்றி அல்வா விற்கிறார்கள். ஒரு இலை இருபத்தி ஐந்து ருபாய். வாங்கி சாப்பிட்டு விட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு பாக்கெட்களில் அல்வா வாங்கிக் கொண்டோம். பணம் கொடுத்து, கேட்ட அடுத்த நொடியில் பில் தயாராகிறது, அடுத்த நொடியில், உங்கள் கையில் நீங்கள் கேட்ட அல்வா பாக்கெட்டுகள் இருக்கும். யார் பணம் வாங்கி, எப்படி பில் அடித்து, அதற்குள் எப்படி பாக்கெட்டுகளை உங்கள் கையில் யார் கொடுத்தார்கள் என்று யோசிப்பதர்க்குள் பின்னாலிருந்து உங்களை தள்ளி அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள். மின்னல் பொழுதில் ஒரு வியாபாரத்தினை முடித்து விடுகிறார்கள். 

இந்த பயணம் முழுக்க நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளில், சாலை ஓரங்களில் உள்ள வயல்களில் அன்றில்களை அடிக்கடி கண்டோம். அன்றில் என்கிற அரிவாள் மூக்கன் பறவையினை முதன் முதலில் அங்கு தான் பார்த்தேன். அது செங்கொண்டையும், கருப்பு  உடலும் , நீண்ட அலகும் கொண்டது.காரினை நிறுத்தி , பைனாகுலரில்  அதனை பார்த்து கொண்டிருப்போம். தனது நீண்ட அரிவால் போன்ற அலகினால் இறை தேடி தின்று கொண்டிருக்கும். 



இரவு உணவு தேடி பாளையங்கோட்டை அருகே சுற்றிக் கொண்டிருந்தோம். அங்கு ஒரு சாலையில், நிறைய தள்ளு வண்டி கடைகள் இருந்தன. ஒவ்வொரு கடை சுற்றியும் மூன்று, நான்கு டேபிள்களை போட்டு சுற்றி அமர்ந்து மக்கள் கல்யாண பந்திகளில் இருப்பது போன்று சாப்பிட்டு கொண்டிருந்தனர். நாங்கள் பார்ஸல் கேட்டபோது, அங்கிருந்து சாப்பிடுபவர்களே நிறைய பேர் இருந்ததால் லேட்டாகும் என்று சொன்னார்கள். நாங்கள் அங்கிருந்து கிளம்பி ரூமிற்க்கு வந்தோம். இரவு பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தோம்.

நெல்லையப்பர் கோவிலுக்கு காலை ஏழு மணியளவில் மீண்டும் சென்றோம். உள்ளே பெரியதாக கூட்டம் இல்லை.சிற்பங்களை பார்த்துக் கொண்டு வந்தோம். குறத்தி தன் தோலின் மேல் ஒரு குழந்தைக்கு ஒரு பாத்திரத்தில் உணவு கொடுப்பதும் அக்குழந்தை அதனை எடுத்து சாப்பிடுவது போன்ற சிலை மிகவும் அற்புதமாக இருந்தது. தெற்கில் உள்ள கோவில்களில் மிகவும் முக்கியமானது அதன் பிரம்மாண்டம். சிலைகளின் அளவிலும், தூண்களின் எண்ணிக்கையிலும், அளவிலும், மண்டபத்தின் சுற்று அளவிலும் அனைத்தும் பெரிதாகவும், பிரம்மாண்டமாகவும் உள்ளது. பெரும்பாலும் மண்டபத்தில் உள்ள சிலைகள் நாயக்கர் காலத்தில் செதுக்கப்பட்டவை. நாயக்கர்களின் பங்கு கோவில்களுக்கு பிரம்மாண்டத்தை கொடுத்தது. அதுவரை நுணுக்கமாக, அளவில் சிறியதான இருந்த சிலைகள், நாயக்கர்கள் காலத்தில் பெரியனவாகவும், மேலும் நுணுக்கமாகவும் மாறின. மண்டப தூண்கள் பிரம்மாண்டமானது.

காந்திமதி அம்மையார் கோவிலுக்கு உள்சுற்று வளாகத்தில் இடதுப்புறமாக செல்ல வேண்டும். பிரகார சுற்று வழியில் நாயக்கர்களின் ஆளுயர உருவ சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இடது புறமாக சென்றால், பெரும் சிலைகள் கொண்ட மண்டபம் உள்ளது. இதில் குரங்கு தன் குட்டியை பிடித்துக்கொண்டிருப்பது போன்ற சிற்பம் உள்ளது. சிற்பங்களை பார்த்துக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது வசந்த மண்டபத்திற்கு செல்லும் வழி என்று வலது புறமாக போடப்பட்டிருந்தது. ஆனால் அதனை பூட்டி வைத்திருந்தனர். உள்ளே சென்று காந்திமதி அம்மையாரை தரிசனம் செய்து முடித்து விட்டு வரும் போது, அந்த மண்டப கதவு திறந்திருந்தது. 

வசந்த மண்டபத்திற்கு செல்லும் வழியில் தென்னை மரங்களும் பிற மரங்களும் இருந்தன. ஒரு சிறு மண்டபத்தின் மேலே ஒரு அய்யர் தனது துவைத்த துணிகளை பிழிந்து போட்டுக்கொண்டிருந்தார். அங்கே நீச்சல் குளம் போல் ஒரு புதிய அமைப்பு இருந்தது. ஆனால் அது என்ன என்று தெரியவில்லை. அங்கு ஒருபெயர் தெரியாத பறவையினை கண்டோம். வசந்த மண்டபம் சற்று பழுதடைந்து காணப்பட்டது. அதனால் தான் அங்கு யாரையும் விடுவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அக்காலத்தில் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கும் இசைக் கச்சேரிகளையும், நடன நிகழ்வுகளையும் கற்பனை செய்து பார்த்தேன். பிரகார மண்டபத்தில்  சிலையாக நிற்கும் நாயக்கர்களின் முன்னிலையில், சிற்பமாக நிற்கும் பெண்களின் நடனங்கள் அரங்கேறி இருக்கலாம். 

நெல்லையப்பர் கோவிலை முடித்துக் கொண்டு கிருஷ்ணாபுரத்தில் உள்ள வேங்கடசாமி கோவிலுக்கு சென்றோம். அரச மரத்தடியில் காரினை நிறுத்திவிட்டு கோவிலுக்கு உள்ளே சென்றோம். இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. முக மண்டபத்தில் வலது புறத்தில் உள்ள சிலைகள் உள்ள தூண்களில் ஒவ்வொன்றிலும் ஒரு காட்சி முழுமையாக செதுக்கப்பட்டிருக்கும். குறவன் இளவரசியை கடத்திக்கொண்டு போவதும், இளவரிசியை மீட்க பின்னால் குதிரையில் அரசன் வருவதும் என்று ஒரு தூணை சுற்றிலும் சிலைகள் உள்ளது. இது போன்று ஒரு குறத்தி இளவரசனை கடத்துவது போன்ற சிற்பமும் உள்ளது. உள் மண்டபத்தில் பீமன் இன்னொருவரோடு கதை யுத்தம் செய்யும் காட்சியும், தர்மனின் சிலையும் உள்ளது. 



அங்கிருந்து திருவாலீஸ்வரசும் மற்றும் திருப்புடைமருதூர் கோவிலுக்கு செல்லலாம் என்று கிளம்பினோம். இரண்டு கோவில்களும் மாலை 4 30 மணிக்கு தான் திறக்கும் என்று சொல்லி விட்டார்கள். திருப்புடைமருதூர் நெருங்கிய உடனே, பெரிய மரங்களில் நிறைய பறவைகளின் சத்தம் எங்களை வரவேற்றது. கோவிலுக்கு எதிரிலேயே காரினை நிறுத்தி விட்டு, பறவைகளை பைனாகுலரில் பார்த்தோம். கூழைக்கடா மற்றும் மஞ்சள் மூக்கு நாரைகள் தான் அதிகமாக இருந்தன. அவைகள் மரத்தினால் கூடு கட்டி குஞ்சி பொரித்து, அந்த குஞ்சிகளையும் கண்டோம். அவை வெள்ளை நிறமாக இருந்தன. 





கோவிலுக்கு அருகிலேயே இரண்டு படித்துறைகள் இருந்தன. இரண்டிலும் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் நாங்கள் ஒரு குளியலை போட்டோம். இடுப்பளவு கூட தண்ணீர் இல்லை. ஆனால் ஓடும் தண்ணீர் என்றதால் குளிப்பதற்கு நன்றாக இருந்தது. நடு ஆற்றில் மீன் கிள்ளல்களினால் அவ்வப்பொழுது துள்ளி குதித்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்தோம். 

மதியம் பிரம்மதேசத்தில் சாப்பிட்டுவிட்டு அகஸ்தியர் அருவிக்கு சென்றோம். நாங்கள் செல்லும் போது, கூட்டம் குறைய தொடங்கியது. ஆனாலும் மேலே அருவியில் குளிப்பதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் முண்டியடித்துக் கொண்டு குளித்து கொண்டிருந்தனர். பெண்களுக்கு தனியாக குளிப்பதற்கு  நடுவில் ஒரு சுவர் எழுப்பி இருந்தனர்.  மக்கள் கத்திக்கொண்டும், ஆடிக்கொண்டும் குளித்து கொண்டிருந்தனர். சிறுவரும் பெரியவர்களும் தள்ளிக்கொண்டு குளித்துக் கொண்டிருந்தனர்.

நாங்கள் குளிக்க உள்ளே சென்றோம். உள்ளே செல்வதற்கு இரண்டு ஆள் சாப்பாடு சாப்பிடணும். கொஞ்சம் கவனமாக இல்லாமல் இருந்தால் கூட, காலினை மீதிப்பதோ அல்லது தள்ளி விட்டோ  மற்றவர்கள் உள்ளே புகுந்து விடுவார்கள். அதனால் மிகவும் கவனமாக உள்ளே சென்று , திரும்பவும் வெளியே வந்து என்று மாறி மாறி ஒரு மணி நேரத்துக்கு மேலாக குளித்தோம். நீரின் சுவை தித்திப்பாக இருந்தது.

இது ஒரு கோவில் பயணம் என்பதை விட, பறவைகள் பயணம் என்றே சொல்லலாம். நெல்லையை சுற்றியுள்ள குளம், ஏரிகளில் இதுவரை நாங்கள் பார்த்திராத  நிறைய பறவைகளை கண்டோம். அன்றில் என்கிற அரிவாள் மூக்கன், தாழைக்கோழி, கூழைக்கடா, பாம்புத்தாரா, மஞ்சள் மூக்கு நாரை போன்ற பறவைகளை கண்டோம். எங்கெங்கு நீர் நிலைகள் இருக்கிறதோ அங்கே காரினை நிறுத்தி, பறவைகளை பார்ப்போம்.







Tuesday, 2 January 2024

கிளிக்கோயில்

                                                             

கோபுரத்தை பார்த்தவுடன் கண்ணில் பட்டது கிளிகள் தான். என்னடா இந்த கோபுரத்தில் இவ்வளவு கிளிகள் உள்ளது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஐந்து அடுக்கு மாடம் கொண்ட கோபுரமாக இருந்தது. உள்ளே நுழையும் போதே கோவிலின் உள்ளே மரத்தில் கிளிகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு கிளிக் கூட்டமே அந்த கோபுரத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. சிற்பக் கிளிகளையும், பறக்கும் கிளைகளையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தேன்.



கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ளது சோமேஸ்வரர் கோவில். அதனுடைய கூகுள் இணைப்பு https://maps.app.goo.gl/jfkYA1qqB2wAbSCy6. சோழர்களால் முதலில் கட்டப்பெற்ற இக்கோவில் பின்பு விஜயநகர அரசர்களால் விரிவாக்கம் செய்யப்பெற்றது. கிழக்கு நோக்கி உள்ளது இக்கோவில். சிற்பக்கலையில் விஜயநகர அரசர்களின் பெரும் பங்கு என்று கூறப்படுவது, அவர்கள் காலத்தில் தான் கோவிலினுள் அம்மனுக்கென்று தனி சந்நிதியும் (பிரதான கடவுளின் துணைத் தெய்வமாகவே எழுப்பப்படும். கருவறைக்கு வலது புறத்தில் இருக்கும் ), கல்யாண மண்டபமும் (கோவிலின் தென் மேற்கில்) வடிக்கப்பட்டது.  

கோவில் கோபுரங்களில் கிளிகளின் சிற்பங்களை காணலாம். கோவிலின் முக மண்டபத்தின் எதிரில் நந்தி உள்ளது. முக மண்டபத்தின் தூண்களில் உள்ள சிற்பங்கள் வெயிலில் பட்டு பொன்னால் செய்யப்பட்டவை போல காட்சியளித்தன. பொன் நகரத்தில் ஒரு பொற் கோவில். 



முக மண்டபத்தின் நுழைவாயிலிலும், உள்ளே செல்லும் வழியிலும்,  முக மண்டபத்தின் சுற்று தூண்களிலும்  அணி ஒட்டிய ஸ்தம்பம் முறையில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் புராணக் காட்சிகளும், மிதுன சிற்பங்களும், கடவுளர்களும், போர் காட்சிகளும், முனிவர்களும், பாம்பாட்டி சிற்பம் போன்ற வட்டார நாட்டார் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.  பொதுவாக நாங்கள் கோவில்களுக்கு சிற்பங்களை காண செல்லும் போது, இந்த கோவிலில் ஏதேனும் புதுமையான சிற்பம் உள்ளதா என்று பார்ப்போம். அது நாங்கள் இது வரை வேறு எந்த கோவிலிலும் பார்க்காத சிற்பமாக இருக்கலாம். அப்படி என் கண்ணில் புதுமையாக பட்டவை.

    1. சிங்கம் ஒரு போர் வீரனை முழுவதுமாக தலையை கடிப்பது.

    2. வேட்டுவன் ஒரு விலங்கினை தோல் மேல் வைத்திருக்கும் சிற்பம்.  

    3. இரண்டு குரங்குகள் ஒன்றை ஒன்று தலை கீழாக பிடித்து நடனம் ஆடுவது போன்ற சிற்பம்



முக மண்டபத்தின் உள்ளே அர்த்த மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் கார்த்திகேயரின் சிற்பம் மிகவும் அற்புதமாக உள்ளது.



பிரதான கோவிலின் வெளியே கருவறைக்கு வடக்கே, பார்வதி மண்டபம் உள்ளது. இங்கிருக்கும் அர்த்த மண்டப நுழைவாயிலிலும், உள்ளேயும் தூண்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. 

இக்கோவிலின் தனி சிறப்பே தென் மேற்கு பகுதியில் உள்ள கல்யாண மண்டபமாகும். அதனை சுற்றி உள்ளே போக கூடாதென்று கயிறு கட்டி வைத்திருந்தனர். வெளியில் நின்று மட்டுமே பார்க்க முடிந்தது. மண்டபத்தின் சுற்றுப்புற தூண்களில் சிற்பங்கள் உள்ளது. ஆனால் நம்மை ஆட்கொள்ள வைப்பது உள்ளே க்ரானைட் கரற்களால் செதுக்கப்பட்ட உள் மண்டபமாகும். ஒரு இடத்தில கூட சிற்பியின் உளி படாத இடமே இருக்காது. அனைத்தும் சிற்பமே. மிகவும் நுண்ணிய அளவு சிற்பங்கள் முழுமையாகவே உள்ளன. மூன்று  cmக்கும் குறைவாக கொண்ட முழு யானை சிற்பத்தை பார்க்க முடியும். திடீரென்று பார்த்தால் ஒரு நகை கடையில் உள்ளோமோ என்றே தோன்ற வைக்கும் அளவுக்கு அவ்வளவு நுண் வேலைப்பாடுகளுடன் சிற்பங்கள் உள்ளன. உள் மண்டபத்தின் மேல் வரிகளில் ஒன்றில்  நான்கு பக்கமும் வரிசையாக கிளிகள் உள்ளன. நான்கு பக்கமும் அணி ஒட்டிய தூண்களுடன், அலங்கார போத்திகை உள்ளது. தூண்களில் சிற்பங்களில் கூட கூர்ந்து பார்த்தால் நிறைய இடத்தில கிளிகள் செதுக்கப்பட்டுள்ளது தெரியும். 





பிரதான கருவறையின் விமானத்தில் தெற்குப்புறமும், மேற்குப்புறமும் பிச்சாடனர், விஷ்ணு, சூரியன் ஆகிய சிற்பங்கள் உள்ளது. வெயிலில் பட்டு இவை போன் நிறத்தில் காட்சியளித்தன. வடக்கில் மூன்று இடங்களிலும் பிரம்மா செதுக்கப்பட்டுள்ளது.

உள்ளே முக மண்டபத்தின் உயரிய மேடைகளில் சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தோம். சிற்பங்களை அமர்ந்து பொறுமையாக பார்ப்பதுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே இரண்டு குரங்குகள் தலை கீழாக பிடித்து விளையாடிகே கொண்டிருந்தன. 

கோவிலினை சுற்றி இருக்கும் ஆதிஷ்டானத்தின் குமுதப் பகுதியில், யானைகளின் வரிசையும், பூத கணங்கழும், சிங்கமும் செதுக்கப்பட்டுள்ளது.

 



Tuesday, 14 November 2023

மல்லச்சந்திரம் கற்திட்டைகள்


கிருஷ்ணகிரி அருகில் உள்ள Dolmens என்கிற கற்திட்டைகள் பற்றிய யூடியூப் காணொளி இணைப்பை  நண்பர்  ஜெயவேல் அனுப்பினார். தீபாவளியன்று அங்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.  தீபாவளி அன்று செல்ல முடியாததால் அடுத்த நாள் செல்வதாக திட்டம். காலை பதினோரு மணியளவில் நண்பர்கள் அரூரிலிருந்து காரில் வந்தனர். நான் தர்மபுரியில் ஏறிக்கொண்டேன். 

கற்திட்டைகளை நான் முன்பு எப்போதும் பார்த்தது இல்லை. அல்லது பார்த்திருந்தாலும் அது தான் கல்திட்டை என்று தெரிந்திருக்காது. கூகுளில் அதைப்பற்றி சிறிது படித்தேன். 

கல்திட்டை என்பது மூன்று அல்லது நான்கு செங்குத்தான கற்களை வைத்து அதன் மேல் ஒரு பெரிய கற்பலகை கொண்ட அமைப்பாகும. இது எதற்காக அமைக்கப்பட்டது என்று இன்றுவரை அறுதியிட்டு கூறமுடியவில்லை. பொதுவாக ஏற்கப்பட்ட ஒரு காரணம், இது இறந்தவர்களின் நினைவு சின்னங்கள் என்பது தான். இந்த அமைப்பு வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்தது. கிருஷ்ணகிரியில் காணப்பட்ட அதே போன்ற அமைப்பு ருசியாவிலும் உள்ளது. உலகம் முழுக்கவே இந்த கற்திட்டைகள் ஐரோப்பா முதல் கொரியா வரை பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் ஒரே அமைப்பு கொண்டே அனைத்து  இடங்களிலும் உள்ளது. கொரியாவில் தான் உலகத்தில் இருக்கும் கற்திட்டைகளில் 50 சதவீதம் உள்ளது.

தர்மபுரியிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் கிருஷ்ணகிரி - ஓசூர் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மல்லச்சந்திரம் என்ற ஊரில் இவை உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து செல்லும் போது 15km தொலைவில் நெடுஞ்சாலையிலிருந்து வலதுபுரம் திரும்பி ஒரு 2 km செல்ல வேண்டும். கூகுள் மேப்பில் "Mallachandram Dolmens" என்று பதிவிட்டால் அது நேராக இந்த இடத்திற்கு கொண்டு செல்லும். (https://maps.app.goo.gl/Qk9V54Qv1FXyau4R6

இந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் ஒரு ஆட்டு கொட்டகையினில் இருந்த ஒரு பாட்டியிடம் "இங்க கல்திட்டைங்க பாக்குறதுக்கு  எப்படி போனும்" என்று வழி கேட்டோம். எனக்கு அந்த பாட்டிக்கு அது பற்றி தெரிந்திருக்காது என்று நினைத்தேன். ஏனென்றால் பெரும்பாலும் இந்தியாவில் பக்கத்தில் இருக்கும் வரலாறு/பண்பாடு சார்ந்த இடத்தைப் பற்றி அருகில் வசிப்பவர்களுக்கு தெரிந்திருக்காது. ஒரு கர்நாடக பதிவு எண் கொண்ட காரும் அங்கு நின்றிருந்தது. அந்த பாட்டி "மேல மாடு கட்டி வெச்சிருக்க வழியா நேரா நடந்து போங்க. இப்பதான் ரெண்டு பேர் ஒரு ஆம்பளையும், பொம்பளையும் போனாங்க, வழி நல்லா போது போங்க" என்று சொன்னார்.

நாங்கள் பாட்டி சொன்ன வழியிலேயே ஒற்றையடி பாதையில் நடக்க ஆரம்பித்தோம். ஒற்றையடி பாதை பெரும்பாலும் சமதளமாகவே இருந்தது. ஒரு பெரிய புற்று இடது புறத்தில் இருந்தது. உனிமுள் செடிகள் பாதையில் ஆங்காங்கே நீண்டு கொண்டு இருந்தது. கீழே இருந்து ஒரு கம்பை எடுத்து கொண்டேன். செடிகளை கம்பால் விலகி நடந்து சென்றோம்.

10 நிமிடத்தில் ஒரு இடத்தில் பாதை வலது புறத்தில் பிரிந்தது. ஆனால் அந்த பாதை நேராக செல்லும் பாதையை விட அதிகம் பயன்படுத்தபட்டது போலில்லாமல் இருந்ததால் நாங்கள் நேராக சென்றோம். இன்னொரு 10 நிமிட நடைக்கு பின்னர் ஒரு வெட்ட வெளி வந்தது. அதிலிருந்து செல்லும் பாதை ஆடு மட்டுமே செல்லும் அளவுக்கு குறுகி இருந்ததால், மீண்டும் வந்த வழியாகவே வந்து அந்த வலதுபுற பிரிவில் நின்றோம். அங்கு பாதை பிரியும் இடத்தில் ஒரு புங்க மரத்தில் அந்த இடத்தின் "அச்சுத்தூரங்கள்" (அட்சரேகை, தீர்க்கரேகை அளவுகள்) சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. யாரோ ஒரு நல்லுள்ளம் கற்திட்டைகள் செல்லும் வழி காட்ட அதை எழுதி இருக்கிறார். அப்பொழுது ஒரு ஆணும், பெண்ணும் பேசும் குரல் கேட்டது. 

கீழே நின்றிருந்த காரில் வந்தவர்கள் கற்திட்டைகளை பார்த்துவிட்டு கீழிறங்கி வந்து கொண்டிருந்தனர். 45 வயது மதிக்கத்தக்க ஆணும், அவரின் மனைவியும்,  13-14 வயதான பெண்ணும், பையனும் இறங்கி வந்து கொண்டிருந்தனர். வட நாட்டு குடும்பம் போல இருந்தது. கொஞ்சம் ஆச்சரியமாகவும்  இருந்தது. அந்த பெண் 'மேலே சென்றால் இரண்டு இடங்களில் கற்திட்டைகள் உள்ளது என்றும். ஒன்று வலது புறம், மற்றொன்று இடது புறம்'  என்றும் கூறினார். நாங்கள் நன்றி சொல்லிவிட்டு மேலே ஏறினோம். ஒரு 50 அடிக்குள்ளாகவே ஒரு பெரும் பாறை மேலிருந்து சரிந்திறங்கியது. அடி பாறையிலிருந்து மேலேறினோம். 

கொஞ்ச தொலைவிலேயே காலுக்கு கீழே பாறையில் அதே சிவப்பு மையில் வழிகாட்டப்பட்டிருந்தது. நாங்கள் அதை பின்பற்றி இடப்பக்க கற் திட்டைகளை நோக்கி சென்றோம். முதலில் பார்ப்பதற்கு ஒரு நான்கு கற்களை மட்டும் அடுக்கி மேலே ஒரு பெரிய கல்லை வைத்து மூடியது போல் இருந்தது. ஒவ்வொரு கற்திட்டைகளாக பார்த்து கொண்டே சென்றோம்.



சிறியதாகவும், பெரியதாகவும் நிறைய இருந்தன. அனைத்திலும், வடக்கு பக்கம் உள்ள செங்குத்தான கல்லின் நடுவில் ஒரு பெரிய வட்ட வடிவ ஓட்டை இருந்தது. அங்கிருந்த அனைத்து கல் திட்டையிலும் அதே போன்று வட்ட வடிவில் ஒரு துளை இருந்தது. ஒரு மனித தலை மட்டும் உள்ளே போகும் அளவிற்கு இருந்தது அந்த துளை. அது எதற்காக என்று சொல்ல முடியவில்லை. உள்ளே இறந்தவர்களை இருத்திவிட்டு நான்கு பக்கமும் செங்குத்தான கற்களை நட்டு வைத்து, மேலே ஒரு பெரிய கல்லை மூடிவிட்டு, ஏன் ஒரு பக்க கல்லில் மட்டும் ஓட்டை போட வேண்டும். அதுவும் வடக்கு நோக்கி இருக்கும் கல்லில் மட்டும். சிறு குழந்தை எட்டி பார்க்கும் அளவு உயரத்தில் அந்த துளை உள்ளது. விலங்குகள் உள்ளே செல்லாமல் இருப்பதர்காகவா? 

ஒரு சில கற்திட்டைகள் காலத்தால் அப்படியே இறங்கி, கீழிருந்த கற்கள் உடைந்து, மேலே உள்ள கல் அப்படியே இறங்கி இருந்தது. இந்த கற்திட்டை குவியல்களின் நடுவே, ஒரு பெரிய கற்திட்டை இருந்தது. அதுவே அந்த கற்திட்டை குழுவில் அளவில் பெரியது. அதனை சுற்றி வட்ட வடிவில், அளவில் இரண்டு அல்லது மூன்று மடங்கு உயரமுள்ள பெரும் கற்களை செங்குத்தாக நிறுத்தி இருந்தது. அந்த உயரமான கல் வளையங்களை சுற்றி இன்னொரு சுற்று சிறிய அளவிலான  செங்குத்தான கற்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் நின்று சுற்றி பார்த்தால், பெரும்பாலும் அனைத்து கற்திட்டைகளிலும் இந்த மூன்று சுற்று அடுக்கு உள்ளது. பல அதில் சிதைத்திருந்தது.

இந்த மூன்று சுற்று அமைப்பை பார்ப்பதற்கு ஒரு காம்பௌண்ட் கட்டிய மாளிகையின் டெம்ப்லேட் போல நினைத்து கொண்டேன். இன்றைய நவீன கட்டிடக் கலையின் முன்னோடி என்று ஒரு வகையில் சொல்லலாம். இந்த கற்திட்டைகள் யாரால், எதற்காக எப்போது அமைக்கப்பட்டது என்று சொல்லிவிட முடையது. சிலர் இதை 5000 வருடத்திற்கும் முன்பிருந்தே இருக்கலாம் என்றும், சிலர் 3000 வருடம் முன்பிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். 

அந்த ஆதி மனிதனின் எண்ணங்களை நம் கற்பனை கொண்டு மட்டுமே நிரப்ப முடியும். அப்படி நிரப்புவதும் நம் அறிவை நிறைத்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். வட்ட வடிவ துளைகளை தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு முழுநிலவைப் போலவே இருக்கும். ஏன் வட்டத்தினை அமைத்தார்கள். ஒரு செவ்வகமோ, சதுரமோ கூட அமைத்திருக்கலாம். வட்டம் தான் பார்ப்பதற்கு அழகாக இருந்தனவோ? அப்படியென்றால் மனிதனின் அழகியல் உணர்வு அங்கிருந்தே தொடங்கி விட்டதோ? ஒரு செவ்வக கல்லில் நடுவில் வட்டம்! அல்லது இது வேறு ஏதாவது குறியீடாகவும் இருக்கலாம்.

இந்த வட்ட துளை உள்ள கல் தான் வாசல் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு கற்திட்டையில் வாசலுக்கு முன் இரு கற்கள் 'போர்டிகோ' தூண்கள் போன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்றுள்ளவற்றை வைத்து மட்டும்தானே நாம் பழையவற்றை அறிய முடியும்.  இந்த வாசல் வடக்கு நோக்கி மட்டும் தான் எல்லா கற்திட்டைகளிலும் இருந்தது. இதிலிருந்து தான் "வடக்கிருத்தல்"  (வட திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பது) என்பது கூட வந்திருக்கலாம்.  பண்பாட்டு வேர்களை நாம் அவ்வளவு அறுதியிட்டு கைகளில் பற்றி  விட முடியாது. 

என் மனைவியிடம் பிற்பாடு இதை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது "அது ஒரு வேளை வயதானவர்கள், நோய் கொண்டவர்களை உள்ளே விட்டு உணவு அளிக்கும் துளையாக கூட இருக்கலாம்" என்று சொன்னார். 

அங்கிருந்து எதிரில் உள்ள இன்னொரு கற்திட்டை குவியலைக் கண்டோம். இங்கிருந்து அங்கு பார்ப்பதற்கு அது வெறும் கற்குவியலாகவே இருந்தது. அருகில் சென்று பார்த்தோம். முதலில் பார்த்தவற்றிற்கு தென் திசையில் இது உள்ளது. இங்கு பல கற்திட்டைகள் நொறுங்கி இருந்தன. எஞ்சியவை மிகக்குறைவாகவே இருந்தன. இங்கும் நடுவில் ஒரு பெரிய கற்திட்டை. அதனை சுற்றி உயரமான செங்குத்தான வட்டச்சுற்று. அதற்கு வெளிப்புறம் உயரத்தில் சிறியதான ஒரு கற்சுற்று. ஒவ்வொரு குழுவிலும் இது போன்ற நடுவில் இருக்கும் பெரிய கற்திட்டை அந்த குழு தலைவனுடையதாக இருக்கலாம். 

தெற்கு மூலையில் ஒரு சிறிய கற்திட்டையினிலுள்ளே இரண்டு ஓவியங்கள் இருந்தன. ஒன்று புலி போன்ற ஒரு உருவம், அதன் மேலே குச்சி போன்ற மனித உருவம் நின்றிருப்பது போல இருந்தது. இன்னொரு ஓவியம் என்னவென்று தெரியவில்லை. ஒரு மரவட்டை போல ஒரு உருவத்தின் மேல் குச்சி போன்ற ஒரு மனிதன் சவாரி செய்வது போல் இருந்தது. அது என்ன விலங்கு என்றே தெரியவில்லை. எதற்காக இதனை வரைந்தான் என்றும் தெரியவில்லை. இரண்டு உருவங்களும் நேர் நேர் நின்று இருப்பது போல இருந்தது. ஓவியத்தில் பிரதானமாக தெரிந்தவை கோடுகள். சிறு சிறு கோடுகள் நன்றாகவே தெரிந்தன. புலியின் நகத்தில். மரவட்டையின் கால்களில். 



சிறிது நேரம் மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இதற்கு தென்புறமும் இன்னொரு கற்திட்டை குவியல் உள்ளது. அதன் நடுவில் அமைந்த கற்திட்டை தான் இருப்பதிலேயே சுற்று அளவில் பெரியது. ஆனால் அதன் சுற்று கற்கள் எல்லாம் விழுந்து விட்டன. அந்த அமைப்பும் நடுவில் உள்ள கற்திட்டையும் அப்படியே உள்ளது.

அங்கிருந்து கீழிறங்கும் வழியில் ஒரு பாம்பின் படிம அச்சு ஒரு பாறையின் மேல்  இருந்தது. ஒரு முள்ளம்பன்றி முள்ளை எடுத்து நண்பர் காட்டினார். கவுதாரி றெக்கையினை எடுத்து காண்பித்தார். அப்படியே கீழிறங்கி வந்தோம். மேலே செல்ல வழி சொன்ன பாட்டி உச்சி வெயிலில் ஆடுகளை ஓட்டிக்  கொண்டு மேய விட்டிருந்தார். 




சில ருஷ்ய கற்திட்டை யூடிடூப் காணொளிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். கிருஷ்ணகிரியில் இருப்பது போன்றே அதே மாதிரியான கற்திட்டைகள் அங்கேயும் உள்ளது. நடுவில் உள்ள அந்த துளையும் அப்படியே! இதைப் பற்றி வாசிக்க வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள மற்ற இது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும்.