இப்பொழுது AI க்கு வருவோம். AI மனிதன் போலவே சொந்தமாக சிந்திக்கிறது என்று சொல்வதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். AI என்பது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. அதனால் உருவாக்கப்படும் பொருட்களோ, செயலிகளோ சொந்தமாக சிந்தனை செய்கிறது என்று சொல்லும் போது நாம் தர்க்கத்தை, கற்பனையை, உள்ளுணர்வை எதை சொல்கிறோம் என்று கூறியாக வேண்டும். அதற்கு முன்னை AI எப்படி செயல்படுகிறது , அதன் அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.
நம் சிந்தனைக்கு எப்படி இயற்கையோ அதே போல் AI க்கு நம் மொழி. அதாவது தரவுகள். ஒரு AI கருவியை உருவாக்க தேவையானது தரவுகளே. தரவுகளைக் கொண்டு எப்படி அது சொந்தமாக முடிவெடுக்கிறது என்பது தான் AI இன் அற்புதம். ஒரு குழந்தைக்கு மொழி கற்று கொடுக்கும் பொது நாம் என்ன செய்வோமோ அதையே தான் AI க்கும் செய்கிறோம். குழந்தையின் மூளை மரபுகளின் வழியாக மொழியினை கற்கிறது. AI யும் அப்படிதான். ஆனால் குழந்தை என்பது ஒரு உயிர். அதுபல கோடி வருடம் உயிரியல் மாற்றம் கொண்டு, இந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. ஒரு AI எப்படி சிந்திக்க முடியும்?
இங்கு தான் நமக்கு கணிதமும், நிகழ்தகவும் உதவிக்கு வருகின்றன. இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். "இவன் மரம் ஏறி மாம்பழம் பறித்தான்" என்று முதல் முறையாக AI யிடம் தரவுகள் கொடுக்கும் போது, அது இந்த ஐந்து சொற்களையும் எண்களாக மாற்றி, ஒவ்வொரு சொல்லுக்கும் பல ஆயிரம் பரிமாணங்களை கணக்கிட்டு அந்த பரிமாணங்கள் அந்த சொல்லுக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்று ஒரு கணக்கீடு செய்கிறது. உதாரணமாக மாம்பழம் என்ற சொல்லுக்கு அதன் நிறம், அளவு என்று பல்வேறு பரிமாணங்களை அது கணக்கிடுகிறது. அதே போல், ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள நெருக்கத்தையும் அது கணக்கிட்டு வைத்து கொள்கிறது. அவ்வாறு அதற்கு கொடுக்கப்படும் பல கோடி தரவுகளை பல்வேறு பரிமாணங்களுடன், கணக்கிட்டு கொண்டு சேகரித்து வைத்து கொள்கிறது. எண்களின் நிகழ்தகவின் வித்தையே AI.
இப்பொழுது புதிதாக ஏதோ ஒரு கேள்வியை அதனிடம் கேட்டால், அந்த கேள்விக்கான பதில் அதனிடம் முன்னரே இல்லாமல் இருந்தாலும் கூட அது ஏற்கனவே கொண்ட தரவுகளின் மூலம் ஒரு யூகத்தை பதிலாக சொல்கிறது. இன்று ஐ வெளிப்படுத்தும் ஒவ்வொரு பதிலும் யூகமே. அதனால் யூகிக்க மட்டும் தான் முடியும். இங்கு நாம் இந்த யூகத்தையே AI யின் சிந்தனை என்று சொல்கிறோம். அதனால் தான் அதனிடம் இல்லாத ஒரு விடையையும் அது 'சிந்தித்து' தருகிறது.
இங்கு நாம் பேசி கொண்டிருப்பது LLM (Large Language Models) ஐ பற்றித்தான். இது AI யின் ஒரு அங்கம். மொழியை (Language) துணை கொண்டு மட்டுமேஇது செயல்படுகிறது. நாம் இன்று பயன்படுத்தும் CHATGPT, GROK, PERPLEXITY, GOOGLE AI என்று அனைத்து செயலிகளுக்கும் காரணம் 2017 லில் வெளிவந்த "Attention Is All You Need" என்ற கோட்பாடு மட்டுமே. இந்த AI அடிப்படையில் ஒன்றே ஒன்று தான் செய்கிறது. அடுத்த சொல்லை யூகிப்பது. எல்லா AI யும், இது மட்டுமே செய்கின்றன. அடுத்த சொல்லை யூகித்தல். இந்த யூகித்தல் என்பது நிகழ்தகவின் மூலம் நடைபெறுகிறது. நம்முடைய மூளை நரம்புகளில் இது தன்னிச்சையாக நடைபெறும் என்றால், இந்த யூகத்தினை AI வெளிப்படுத்த அதி நவீன computing சக்தி கொண்ட chip கள் வேண்டும்.
சரி, வெறும் யூகம் மட்டும் தான் AI செய்கிறதா? அப்படி என்றால் அதனை நம்பலாமா என்ற கேள்விகள் நம்மிடம் எழலாம். ஆமாம், வெறும் யூகம் மட்டும் தான் AI செய்கிறது. ஒரு சாதாரண கால்குலேட்டரிடன் நாம் 3+4 எவ்வளவு என்று கேட்டால் அது கொடுக்கும் விடையை நாம் நூறு சதவிதம் நம்பலாம். ஏனென்றால் அது deterministic கொள்கை படி வேலை செய்யும் ஒரு பொருள். AI யிடம் இதே கேள்வியை கேட்டால் அது 7 என்று பதில் சொல்லுமா என்று அறுதியிட்டு கூறி விட முடியாது. அப்போது எதற்கு இந்த AI?
இதெல்லாம் தொடங்கியது " Predict the next word " என்ற கேள்வியில் இருந்தே. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மனிதன் இன்று வரை இதை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறான். அடுத்த வார்த்தையை யூகிப்பது. அது இலக்கியத்தில் ஆனாலும், அறிவியலில் ஆனாலும், எந்த ஒரு துறையிலும். இங்கு வார்த்தை என்பது அறிவாக மாறும் போது, சிந்தனையின் உச்சங்களை அடைகிறோம். அடுத்த வார்த்தையை உருவாக்குவது ஒரு படைப்பே. அது கடவுளுக்கு சற்றும் குறைவில்லாத செயல். அது AI செய்ய தொடங்கியது என்றாலும் அதற்கு எல்லைகள் உள்ளது. அதனால் மொழியிலிருந்தும், கணித விதிகளிலிருந்தும் அதனால் வரும் நிகழ்தகவிலிருந்தும் வெளி வர முடியாது.
இங்கு நாம் மனிதனின் சிந்தனைக்கும், AI யின் யூகத்திருக்கும் இருக்கும் ஒற்றுமையும், வேறுபாடுகளையும் பார்க்க வேண்டும். நம் சிந்தனையும் நிகழ்தகவின் ஒரு புள்ளியே. ஆனால் அதற்கு மூலப்பொருள் இப்பிரபஞ்சம். ஆனால் AI க்கு மூலப்பொருள் சொற்கள் மட்டுமே. மொழியாக்கிய மனித உணர்வுகளை மட்டுமே AI யால் யூகிக்க முடியும். அதனால் தான் நாம் அது நம்மை போல் சிந்திக்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் அது யூகிக்கிறது. மொழியாக்கப்படாத எந்த ஒன்றையும் அதனால் யூகிக்க முடியாது. அல்லது தவறான யூகங்களை கொடுக்கும். ஒரு எலி என்ன சிந்திக்கிறது என்று அதனால் சொல்ல முடுயாது. ஆனால் ஒரு மனிதன் ஒரு தருணத்தில் என்ன செய்வான் என்று அதனால் ஓரளவிற்கு யூகிக்க முடியும்.
இந்த Transformer (CHAT GPT யில் இருக்கும் T) கொள்கையை உருவாக்கிய ஒருவரிடம் "why do LLMs work? " என்று கேட்ட போது.' Maybe God's Benevolence ' என்று பதில் சொன்னார். அதை நான் முன்னே கூறியது போல நிகழ்தகவாகிய 'கடவுளின் கை' என்றே கூறுவேன்.
இன்று GPT யை வைத்து எழுதிய கதைகளும், AI யை கருப்பொருளாக நாம் எழுதிய கதைகளும் வந்து கொண்டிருக்கிறது. அறிவை சொற்களால் ஏதோ ஒரு நிகழ்தகவின் மூலம் அது யூகித்தாலும், அதை உணரும் மனிதனாலேயே , அந்த யூகம் முழுமை கொள்கிறது.