Monday 1 May 2023

மகாராஷ்டிரா பயணம் (6)

ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தை எதிர்நோக்கி அறையின் பால்கனி இருந்தது. காலையில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்பக்கத்தில் ஒரு மருத்துவ அல்லது செவிலியக் கல்லூரி இருக்குமென்று நினைக்கிறேன். நாங்கள் எங்கள் விடுதிக்கு கீழே உள்ள 'உடுப்பி' உணவகத்தில் சாப்பிடும் போதுஏதோ ஒரு விழிப்புணர்வு ஊர்வலத்தில் மருத்துவ சீருடையுடன் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

விடுதிக்கு பக்கத்திலேயே நிறைய கடைகளும், வளாகங்களும் இருந்தன. அங்கிருந்து வாடகை வண்டி வாங்குவதற்காக ஒரு ஆட்டோ பிடித்து சென்றோம். 'பஜாஜ் டிஸ்கவர்' வண்டியெடுத்துக் கொண்டோம். இந்த உரிமையாளர் வண்டியையும், எங்களையும் படம் பிடித்துக் கொண்டார். மிகவும் தொழில்முறை நோக்கிலேயே பேசிக் கொண்டிருந்தார். வண்டியில் திரிம்பகேஸ்வரர் கோவிலுக்குப் புறப்பட்டோம். சாலைகள் அகலமாகவும் நன்றாகவும் போடப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசல் அவ்வளவாக இல்லை.


இரண்டு கிலோமீட்டர் சென்றதும் நகரின் புறச்சாலைக்கு வந்துவிட்டோம். கையில் இப்போதும் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. அனைத்தும் Google pay வழியாகவே ஓடிக்கொண்டிருந்தது. 'ATM அட்டை இல்லாமல்' பணம் எடுக்கும் வசதியைப் பற்றி நேற்றே யோசித்து வைத்திருந்தேன்.  என்னுடைய அக்கவுண்டில் அந்த வசதி இருந்தது. அதை நான் பயன்படுத்தியது இல்லை. இந்த சமயத்தில் அது அவசியானது என்பதால் அதனை பயன்படுத்தி பார்க்கலாம் என்று ஒரு ATM சென்று பணம் எடுத்து வந்தேன். அப்பொழுது தான் மனம் சற்று நிம்மதியடைந்தது. வங்கிக் கணக்கில் பணம்  வைத்திருந்தாலும் கையில் காசு இல்லை என்றால் பதற்றம் அடைந்து விடுகிறோம். அன்றைய தேவையினை தீர்ப்பது ஒரு காகிதம் மட்டுமே. 


45 நிமிட பயணத்திற்குப்பின் திரிம்பகேஸ்வரர் கோயில் வந்தடைந்தோம். நெருக்கடியான கோவில் சாலையில் வண்டியினை உருட்டிகொண்டே கடைகளின் மீதும் மனிதர்களின் மீதும் இடிக்காமல் ஒரு நிறுத்துமிடத்தில் வண்டியை விட்டோம்.கோவிலுக்கு உள்ளே மக்கள் கூட்டம் சுமாராக இருந்தது. போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். உள்ளே வரிசையாக திருப்பதியில் இருப்பது போன்று அமர்வதற்கு பெஞ்ச்கள் இருந்தன. முப்பது நிமிடம் கழித்து கோவில் உள்மண்டபதிற்குள் நுழைந்தோம். 




திரிம்பகேஸ்வரர் ஆலயம் பன்னிரண்டு ஜோதிர்லிங்க தளங்களில் ஒன்றாகும். மூன்று மலைகளுக்கு நடுவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. கருங்கற்களினால் கட்டப்பட்ட இவ்வாலயத்தைச் சுற்றியுள்ள நான்கு மதில்களிலும் வாயில்கள் உள்ளது. கருவறையில் லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் பிரம்மனும் விஷ்ணுவும் சிவனும் குறிக்கும் வகையில் மூன்று சிறு லிங்கங்கள் அமைந்திருப்பது இத்தளத்தின் சிறப்பாகும். கூம்பு வடிவத்தில் கோபுரமும், விமானமும் கட்டப்பட்டுள்ளது. நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கோபுரங்கள் செதுக்கப்பட்டுள்ளது. 




கோவிலிலிருந்து வெளியே கோதாவரி குளம் என்ற ஒன்று உள்ளது. அங்கு சென்றோம். பித்ரு கடன்கள் போன்ற சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். குளத்தில் இறங்கி நீர் தெளித்துக் கொண்டும், கால் நனைத்துக் கொண்டும், முடிமழித்துக் கொண்டும் மக்கள் இருந்தனர். நாங்கள் நீரில் கால் நனைத்துக் கொண்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தோம்.





திரிம்பகேஸ்வரர் கோவிலுக்கு முன் வந்து கொண்டிருக்கையில், மேல தாளங்களின் ஒலி கேட்டது. இசை வரும் திசை நோக்கி பார்த்தால், அங்கு பெண்கள் வட்ட வடிவில் நின்று இசைக்கேற்ப தலையில் கரகம் போன்று ஒன்றை வைத்து நடனமாடிக் கொண்டிருந்தனர். 10 வயது முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் அதிலிருந்தனர்அதில் என்ன சிறப்பு என்றால், ஒரு ஆண் கூட அந்த குழுவில் இல்லை. மொத்த சடங்கும் பெண்களால் நடத்தப்படுவது. மேளம் அடிப்பவர்கள் மட்டுமே ஆண்கள். நாங்கள் அந்த தாளத்தில் எங்களையும் மீறி அசைந்துகொண்டிருந்தோம். அனைத்து பெண்களும் கூலிங்க் க்ளாஸ் அணிந்திருந்தனர். மார்வாடி பெண்கள் என்று நானும் நண்பரும் பேசிக் கொண்டிருந்தோம்.


நாங்கள் மொபைலில் அவர்கள் நடனமாடுவதை வீடியோ எடுப்பதைப் பார்த்த, அந்த குழுவினரின் தலைவி போன்றிருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து , கைகளை அசைத்து வீடியோ எடுக்கக் கூடாது என்றார். நாங்கள் வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டோம். ஆனால் பக்கத்தில் இருந்த சிலர் வீடியோ எடுப்பதை நிறுத்தாதலால் அவர்களை கோபமாக பேசிவிட்டு, அடுத்த வினாடியே அந்த கும்மியடிப்பது போன்ற வட்டத்தில் கலந்து கொண்டு இன்பமாக ஆடிக்கொண்டிருந்தார். அங்கிருந்து கிளம்ப மனமே இல்லாமல் அவர்கள் நடனம் முடியும் வரை வெயிலில் நின்று  நடனத்தின் அசைவுகளில் மனதை ஒப்புக்கொடுத்து பார்த்துக்கொண்டிருந்தோம். அரை மணி நேரம் கழித்து அவர்கள் நடனம் முடிய, நாங்களும் திரும்ப நடந்தோம்.





அங்கிருந்து கிளம்பி கோதாவரி உற்பத்தி ஆகும் இடமான பிரம்மகிரி மலைக்குப் புறப்பட்டோம். மலை மேலே செல்ல செல்ல பாதை மோசமாக இருந்ததுஜல்லிகள் பெயர்ந்து வண்டி தடுமாறியது. கடைசி இரண்டு கிலோமீட்டர் தொலைவு வெறும் மண்பாதை தான். மலையின் கீழ் முகட்டில் சிறு கடைகள் இருந்தன. 'நிம்பு பாணி' என்று கூவிக்கொண்டிருந்தனர். நாங்கள் பொரி பாக்கெட்டுகளை வாங்கிகொண்டு மேலே ஏ ஆரம்பித்தோம். கல் படிகள் இருந்ததால்  ஏறுவதற்குச் சிரமம் இல்லாமல் இருந்தது. 200 படிகளுக்குள் கோதாவரியின் ஊற்று முகத்திற்கு வந்தோம்


அங்கு ஒரு பிராமணர் ஒரு சிலையின் முன் பூஜை செய்து கொண்டிருந்தார். இரண்டுக்கு இரண்டடி கொண்ட ஒரு சிறு கருங்கல் தொட்டியில் நீர் இருந்தது. அதுதான் ஊற்றுமுகம் என்றனர். ஆனால் மேலே பாறைகளில் இருந்து ஒழுகும் நீரை சிலையின் மேல் விழுமாறு செய்திருந்தனர். அதனால் ஊற்று இன்னும் உச்சியில் இருக்கும் மலை மேல் இருக்கும் என்று நினைத்தேன். ரிஷி மூலமும் நதிமூலமும் கண்டுபிடிக்க முடியாது என்ற சொலவடையை நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து கீழே பார்த்தால் திரிம்பகேஸ்வரர் கோவிலும் அதைச் சுற்றியுள்ள ஒரு பெரிய குளமும் தெரிந்தது. மூன்று பக்கம் மலைகள் சூழ நடுவில் ஆலயம் தெரிந்தது. நாங்கள் கல் படிகளில் ஏறி இடது புறம் வந்து இவ்விடதிற்கு வந்தோம். வலதுபுறம் சென்றால் இன்னும் இரண்டு சிறு கோவில்கள் இருந்தன. நாங்கள் அங்கு செல்லவில்லை. 


மலையிலிருந்து கீழிறங்கி வந்து கொண்டிருக்கையில் இரண்டு மூங்கில்களில் கூடை போன்ற பல்லக்கில் ஒரு வயதானவரை நான்கு பேர் தூக்கிக்கொண்டு வந்தனர்கோதாவரியைக் காண வேண்டுதலாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். 




கீழிறங்கி ஒரு கடையில் வடாபாவும் போண்டா ஒரு தட்டும் வாங்கி சாப்பிட்டோம். அங்கிருந்து நாசிக் செல்லும் வழியில் உள்ள 'பாண்டவ் லேனி'  குகைகளைக் காண  கிளம்பினோம். மதியம் ஒரு மணி அளவில் குகைகள் இருக்கும் மலை அடிவாரத்திற்கு வந்தோம். நகரின் பக்கத்திலேயே இவ்விடம் உள்ளது. அல்லது இம்மலையின் பக்கம் வரை நகரம் தன் கரங்களை நீட்டிக் கொண்டு வந்துள்ளது. பாண்டவ் என்று இருப்பதால் புராதன இடமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது ஒரு பௌத்த குகையாகும்இப்பயணம் ஒரு பௌத்த தள பயணமாக மாரியதோ என்றெண்ணி 

மனதிற்குள் புன்னகை புரிந்து கொண்டேன்.


மலை அடிவாரம் மரங்கள் செரிந்த இடமாக இருந்ததால், நிறைய குடும்பங்கள் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தைகள் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருந்தனர்.  ஒரு வெள்ளரிக்காயும் ஒரு மக்காசோளக் கதிரும் வாங்கிகொண்டு மேலேறினோம். இத்தளமும் ASI பராமரிப்பில் உள்ளது. மேலே செல்லும் வரை இருபதடிக்கு ஒரு இடத்தில் இரும்புப் பலகையில் ஒவ்வொரு குகையின் வரலாறும், அக்குகையினை செதுக்க கொடை அளித்தோரின் பெயர்களும் பொரித்து வைத்திருந்தனர். 





'லேனி' என்றால் மராத்தியில் குகை என்று பொருள். மொத்தம் 24 குகைகள் இங்குள்ளது. கிமு ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டிற்குள் செதுக்கபட்டவயாக இக்குகைகள் உள்ளது. ஒரு குகையில் மட்டுமே சைத்யம் உள்ளது. மற்ற அனைத்தும் விகாரங்கள் கொண்டவை. குகைகள் அனைத்தும் வடகிழக்கு நோக்கி உள்ளதால்மலையாலும், காற்றாலும் அதிக சேதம் ஆகாதபடி உள்ளது. ஒவ்வொரு குகையாக பார்த்துகொண்டு வந்தோம். போதிசட்வர்களின் சிலைகள் நிறைய குகைகளில் இருந்தன. இக்குகைகள் 'ஹினயான' புத்த மரபைச் சேர்ந்தவை ஆகும்.


ஒரு குகையினுள் உள்ளே சென்று பார்த்தோம்.  புத்தர் சிலையினைப் பார்க்க  உள்மண்டப வாசலில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனை தாண்டி உள்ளே சென்றேன். சூரிய வெளிச்சம் இல்லாததால் உள்ளே இருட்டாக இருந்ததுபுத்தரைப் பார்ப்பதற்காக மொபைலில் டார்ச்சைப் போட்டேன். புத்தர் வியாக்கியான முத்திரையில் இருந்தார். மொபைல் டார்ச்சை சற்று திருப்பும் போது அதிர்ச்சி அடைந்தேன். அங்கே ஒரு பெண் உருவம் தெரிந்தது. பிரமையோ என்று மீண்டும் பார்த்தால் அங்கு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அங்கிருந்து பக்கத்தில் இருந்த அந்த இளைஞனைக் கடந்து வெளியே வந்தேன். நாற்பது ரூபாய்க்கு காதல் செய்ய இருள் சூழ்ந்த புத்தரின் மடியே கிடைப்பது நம் இளைஞர்களுக்கு அதிர்ஷ்டம் தான் போலும். நம் சமூகத்தின் ஆண்-பெண் உறவின் இருக்கத்தினைக் கண்டு வெட்கப்படத் தான் வேண்டும்.


அங்கிருந்து மதிய உணவு உண்ண பக்கத்தில் ஏதாவது உணவகம் உள்ளதா என்று மேப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். ஒரு சிறு கடையில் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டோம். உணவு அருமையாக இருந்தது. மசாலா இருந்தாலும் காரம் அளவாக இருந்தது. நாங்கள் தான் கடைசி வாடிக்கையாளர். நாங்கள் சென்ற பிறகு உணவகத்தை மூடினார்கள். திரும்பவும் இரவுணவுக்குத் தான் திறப்பார்கள். 


கண்ணில் காணும் காட்சி ஒரு புராதன காலத்திற்கு கூட்டிச் சென்றது. 'பஞ்சவடி' என்னும் இடத்திற்கு வந்தோம். இது நாசிக் நகரின் மத்தியில் உள்ளது. கோதாவரி இங்கு நகரின் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறாள். மாலைச் சூரியக்கதிர்கள் கோதாவரியில் பட்டு மின்னிக் கொண்டிருந்தது. மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். ஆற்றில் அங்கங்கே பாலங்கள் உள்ளதால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். 




மூலிகைப் பொருட்களும் பல்வேறு மர வேர்களும் விற்றுக்கொண்டிருந்தனர். ஒரு நாய் தன்  முதலாளியின் மேல் குப்புறப்பபடுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. யாரோ இருவர் ஒருவரைக்கொருவர் அடித்துக் கொண்டிருந்தனர். அதனைச் சுற்றி மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஓரிடத்தில் நீர் வந்து கீழே குதித்தோடியது. அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் பின்னாலிருந்து ஓடி வந்து ஆற்றில் குதித்தான். நண்பர் அதை தன்னை அறியாமல் புகைப்படம் எடுத்துவிட்டார். அச்சிறுவனின் பறக்கும் காட்சி அழகாக பதிவாகியது.


நண்பர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். நான் அங்கு படிக்கட்டுகளில் அமர்ந்து அங்கிருக்கும் மக்களையும், அந்நதியையும் பார்த்துக் கொண்டிருந்தேன். வேறு ஒரு காலத்தில் வாழும் அனுபவமாக இருந்தது. நான் பார்த்ததிலேயே ஒரு நகரத்தின் நடுவே இவ்வளவு அழகாக ஒரு நதி செல்வது இங்கு மட்டுமே. நதியைச் சுற்றி நகரம் எழுந்தாலும், வீழ்ந்தாலும் நதி தன் போக்கில் சென்று கொண்டே தான் இருக்கிறது. புராதனமாக இவ்விடத்தில் ராமர் நீராடியதாக சொல்லப்படுகிறது. அதனாலும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறார்கள்.


அங்கிருந்து செல்ல மனமில்லாமல் கிளம்பினோம். 'கல்ராம் மந்திர்' என்னும் கோயிலுக்கு கிளம்பினோம். இரண்டு மூன்று சந்துகளில் நுழைந்து ஒரு இடத்தில் வண்டியினை நிறுத்திவிட்டு பக்கத்துக் கடைக்காரரிடம்  சொல்லிவிட்டு கோயிலுக்கு உள்ளே சென்றோம். 'கல்ராம்' என்றல் 'கருமை நிற ராமன்' என்று பொருள். புராதன ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியமான கோவில் இது.


ராமருக்கு இங்கு இருந்த கோவிலை இஸ்லாமிய படையெடுப்பின் போது இடிக்கப்பட்டது. அதன் பின்னர் திரும்பவும் இங்கு கோவில் கட்டப்பட்டது. இதற்கு பக்கத்தில் இருக்கும் பஞ்சவடியில் தான் ராமர் இரண்டரை வருடம் தன் பதினான்கு வருட வன வாசத்தின்போது இருந்தார் என்று சொல்லப்படுகிறது. 


கிபி 1930இல், அண்ணல் அம்பேத்கர் தலைமையில் இக்கோயிலின் முன், தலித்துகள் கோயிலுக்கு உள்ளே செல்லும் உரிமையினை மீட்டெடுக்க சத்தியகிரஹம் நடத்தப்பட்டது. கோவில் வடநாட்டு பாணியில் கட்டப்பட்டுள்ளது. திரிம்பகேஸ்வரர் ஆலயம் போன்றே கூம்பு வடிவத்தில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உள்ளது. 


கோவிலின் உள்ளே ராமர், சீதாதேவி, லட்சுமணர் கடவுள்களாக வழிபடப்படுகின்றனர். நாங்கள் சென்றபோது உள்ளே சுற்று பிரகாரத்தில் ஒரு பக்கம், மேடை மேலிருந்து ஒருவர்  ராமாயணம் ஓதிக் கொண்டிருந்தார். மக்கள் கீழே ஒரு விரிப்பில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். ராமாயண சொற்பொழிவு வடநாட்டில் அதிகமாக நடைபெறும் என்று நினைக்கிறேன்.


அங்கிருந்து கிளம்பி மீண்டும் அறைக்கு வந்தோம். நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று இசையின் பக்கம் பேச்சு போனது. அப்போது மராத்தி 'சைராட்' படத்தில் இடம்பெற்ற சிம்பொனி இசைப்பற்றியும், அதன் இசைக் உருவாக்கம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த இசை உருவாக்க விடியோவை நண்பர் யூடியூபில் காட்டினார். மேலும் இசையைப் பற்றி அவரிடம் நல்ல ரசனை உள்ளதால் அதை பற்றி அவர் பேசிக் கொண்டே இருந்தார்.


இரவு வண்டியினை ஒப்படைத்துவிட்டு, அறைக்கு வந்து உறங்கினோம். அடுத்த நாள் அதிகாலையில் 'கனவு நகரத்தை' நோக்கி செல்ல திட்டம் இருந்தது. 

No comments:

Post a Comment