நிழல்காகம் - கடிதம்
அன்புள்ள ஜெ,
மூலம் - போலி, உண்மை - நாடகம், shake - drape, பொருள் - நிழல்.
அசிதரின் சந்ததி நெடுக காகம் அவர்களை கொத்துகின்றது. இது உண்மை. இது ஏன், எதற்கு நடைபெறுகிறது என்பதைக் கடந்து, இது நடக்கிறது, இதனை எப்படி எதிர்கொள்வோம் என நினைத்து, அசிதர் தன்னை அந்த செயலுக்குள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்படி அந்த கொத்தல் நிகழ்வு,கொத்தல் விளையாட்டாக மாறியது. 'அது' 'தானா'கும் போது, அதிலிருந்து நாம் அதை கடந்து செல்கிறோம்.
இங்கே காலத்திற்கு காகத்தை உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. நம் பூர்வ கால செயல்களின் வினை, காகம் கொத்துவது போல தொடர்ந்து வந்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு அதனுடன் விளையாட பழகவில்லை என்றால் வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்ற பொருளும் உள்ளது. 'பொருள் அற்ற ஏற்றல்' - என்ற தத்துவத்தை கூறுவதாகவும் ஒரு விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
அசிதர் எங்கு சென்றாலும், காகங்கள் அவரை கொத்துவது வியப்பாகவும் விந்தையாகவும் உள்ளது. ஆனால் உலகமே இவ்வாறு விந்தையான நிகழ்வுகள் கொண்டதே என்றே நான் நினைக்கிறேன். சில விந்தைகளை நாம் பகுத்தறிந்து பொருள் கொண்டோம். சிலவற்றை நம்மால் பொருள் கொள்ள முடியவில்லை அல்லது அதற்கு பொருள் ஏதும் இல்லை என விட்டு விட்டோம். ஒருவேளை நடப்பவை அனைத்திற்கும் பொருள் ஏதும் இல்லை என்றே சில சமயம் தோன்றுகிறது. நாம் பொருள் கண்டவற்றிற்குக் கூட, நம் மனத்திருப்திக்காக பொருளை ஏற்று கொண்டோம் என்றே நினைக்கிறேன். அல்லது நேர் மாறாக அனைத்திற்கும் பொருள் உள்ளதோ?
உலகில் உள்ள அனைத்து காகங்களும் அவரை அடையாளம் கண்டு கொத்துவது, அவை அனைத்தும் ஒரே மனதால் கோர்க்கப்படுவது போல உள்ளது. பல உயிர்கள் ஒரே மனம். அவைகள் ஏன் அவரை கொத்துது என அவைகளுக்கே தெரியாது. அல்லது அவைகளுக்கு தெரியும் என நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தெரியாத, புரியாத ஒரு செயலை செய்வதில் ஏன் அதற்கு அப்படி ஒரு ஆவல். அச்செயல் அதன் கடமை. தன் கடமையை யாரோ ஆணையிட அது செய்து கொண்டே போகிறது. அப்படி அது செய்து கொண்டே போகும் வேளையில், அச்செயலை அவர் ஏற்றுக்கொண்ட போது, அவரைக் கொத்தும் உக்கிரமும் குறைந்து அது ஒரு தொடும் விளையாட்டாக மாறிப்போகிறது. அது காகத்தின் கருணையாகவும் கொள்ளலாம். 'ஏற்றுக்கொண்ட தண்டனைகள் அதன் பொருளை இழக்கிறது'. இங்கே அசிதர், காகங்கள் தன்னை தண்டிப்பதை ஏற்றுக்கொண்டதால் அந்த செயலே காகத்திற்கு பொருள் அற்று போனது.
உலகில் அனைத்தும் காம வடிவமே. அனைத்து புலன்களும் காமத்தின் செயல்பாடுகள். இதில் 'இன்பமும், துன்பமும்', 'ஆசையும், கோபமும்' அனைத்தும் காமம். ஆனால் கலையின் காணும் காமம், நம்மை அந்த கலையின் ஊடே இட்டுச்சென்று புதிய மலர்தலை அளிக்கிறது. அந்த மலர்தலில் நாம் அதனில் ஒன்றாக உள்ளோம், மனமே கலையாக, கலையே மனமாக. மாறாக அதை முழுமையாக அறியாத மனம், கலையை தன்னுடன் பிரித்துப் பார்த்து அதனை அடைய முயன்று தோற்கிறது. 'காமம்-பிரம்மம்', இவை இரண்டிற்கும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு சிந்தனை வழிகள். பரதநாட்டியம் ஒரு காம நடிப்பு. அப்படி நாம் அதை நடிப்பதால் தான் அதிலிருந்து நாம் விடுபடுகிறோம். அந்த விடுதலை அளிப்பதாலேயே அது மிகப்பெரும் கலை ஆகிறது. 'மனதை விடுதலை செய்ய முடியாத எதுவும் கலை அல்ல' என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அசிதரும்-காகமும் அந்த கொத்தல் விளையாட்டை விளையாடுவதும் ஒரு நடிப்பே.
மூலத்தை அறியவும் கடக்கவும் போலி உதவும் என்பதை யோசிக்க யோசிக்க மலைப்பாக இருக்கிறது. ஆனால் அறிந்து கடக்கிறோமா இல்லை அறியாமல் போகிறோமா என்பதே இங்கே முக்கியமானது. 'அறிதல்' நடக்குமிடத்திலே நாம் அதை கடக்கிறோம் என்றே எனக்கு தோன்றுகிறது.
அன்புடன்,
பிரவின்
தர்மபுரி