Thursday 29 August 2024

'காவிரிக்கரை' பயணம் - 2

 காவிரியின் வடகரை வழியாக வந்து, திரும்பி செல்லும்போது தென்கரை வழியாக போக திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவிரியின் மேல் நிறைய இடங்களில் பாலம் இருந்ததால், நாங்கள் குறுக்கும் நெடுக்குமாக காவிரியோடு சென்று கொண்டிருந்தோம். மோகனூரில் காலையில் "அசல தீபேஸ்வரர்" கோவிலுக்கு சென்றோம். காவிரி கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள தீபம் அனயா தீபம் என்றொரு ஐதீகம். காலையில் மழை தூறிக்கொண்டிருந்தது. முந்தைய நாள் முழுவதும் ஜெயவேல் வண்டி ஓட்டியதால், நான் வண்டியை ஓட்டினேன். மோகனூரிலிருந்து, ஸ்ரீராமசமுத்திரம் வழியாக சென்றோம்.

நேற்று நாங்கள் பார்த்த காவிரிக் கரையின் வளம் இங்கிருந்து குறைய ஆரம்பித்தது. ஓட்டு வீடுகளும், குடிசை  வீடுகளும் தென்பட்டன. சில இடங்களில் சாலை நன்றாக இல்லை. அதே காவிரி கரை ஒரு இடத்தில வளமுடனும், ஒரு இடத்தில் வளமில்லாமலும் இருந்தது. வீடுகளின் அடர்த்தியும் அதிகமாக  இருந்தது. மாயனூர் பெரிய பாலத்தில் வண்டியை நிறுத்தி காவிரியை பார்த்துக் கொண்டிருந்தோம். நண்பர் தானே வண்டியை ஓட்டிக் கொள்வதாகச் சொன்னார்.

மாயனூரிலிருந்து NH வழியாக காவிரியின் தென்கரையில் சென்று கொண்டிருந்தோம். பெரியார் பாலத்தின் வழியாக திரும்பவும் வடகரைக்கு இறங்கி, முசிறியில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து முக்கொம்பு சென்றோம். நண்பகல் நேரமாதலால் வெய்யில் ஏறிக்கொண்டிருந்தது. காவிரியின் முதல் கிளைநதியான (தமிழ்நாட்டில்) கொள்ளிடம் இங்கு தான் பிரிகிறது. நாங்கள் பார்த்த போது காவிரியை விட கொள்ளிடத்தில் மிகவும் குறைவாகவே நீர் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்த காவிரி பாலத்தின் மேல் சிறிது நேரம் மர நிழலில் வண்டியை நிறுத்தி ஓய்வெடுத்தோம். முக்கொம்பு ஒரு சுற்றுலா தலமாக நன்றாக பராமரித்து வருகின்றனர். நம் ஊரில், சுற்றுலா என்றால் பொதுவாக இருக்கும் ஒரு பூங்காவும் (அல்லது ஒரு பூங்கா இருந்தாலே அது சுற்றுலா தலமாக ஆகி விடுமோ?) இங்கு இருந்தது. நாங்கள் உள்ளே சென்று பார்க்கவில்லை.


                                                        முக்கொம்பு - மேலணை 

சமீபத்தில் சுற்றுலா என்ற சொல்லாடலே என்ன பொருள் கொள்கிறது என்று தெரியவில்லை. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்துவிட்டால் மொத்த ஊரும் காலி செய்து வேறு ஊருக்கு சென்று, சொந்த ஊரில் எப்படி இருக்கிறார்களோ அதே வசதிகளுடன், அதே அன்றாட செயல்களுடன் தான் இருக்கிறார்கள். பொதுவாக நாம் நம் அன்றாடத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, புதிய ஒன்றை அனுபவிக்க சுற்றுலா செல்வோம். ஆனால் இன்று வெறும் புகைப்படம் எடுப்பதற்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கும் நாம் சுற்றுலா செல்கிறோம். மேலும் விடுமுறை நாட்களில் எந்த சுற்றுலா தலமும் திருப்பதி ஏழுமலையான் கோவில் போல ஜனத் திரள்களால் நிரம்பி வழியும். அங்கு இயற்கையை இயற்கையாக காண முடியாது. அல்லது அதற்கான மனம் நம்மிடம்  எளிதில் அமையாது. 

இந்தியாவில் கடந்த இருபது வருடங்களின் அபாரமான வளர்ச்சி அடைந்த துறை சுற்றுலா. எல்லோரிடமும் இப்போது பணப் புழக்கம் இருப்பதால், கார் என்பது நடுத்தர வர்க்கத்தின் அவசியமான ஒரு பொருளாகி விட்டதால், காரை வாங்கி விட்டு, கார் வாங்கி விட்டோம் என்பதற்காக வெளியே எடுத்து கிளம்பி விடுகிறோம். ஹோட்டல்களில் ரூம்களும், பேருந்து / ரயில் / விமான பயண சீட்டுகளும் முன்பதிவு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் முன்னரே செய்து விட வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான சூழல் தான். ஆனால் இது மட்டும் போதாது என்றே நினைக்கிறேன். நம்மிடம் பண்பாட்டு பயிற்சி இல்லையென்றால் இதனை எல்லாம் ஒழுங்காக பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. 

முக்கொம்பில் இருந்து  தென்கரை வழியாக ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டோம். ஸ்ரீரங்கம் நான் செல்வது இதுவே முதல் முறை. காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் தீவு போல் அமைந்துள்ளது ஸ்ரீரங்கம். மதிய நேர வெயில் சுட்டெரித்தது. ஸ்ரீரங்கம் கோபுரம் வெகு முன்னரே தெரிந்தது.  கோவிலுக்கு அருகில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறிது நேரம் யோசித்துவிட்டு, அடுத்த முறை கோவிலுக்குள்ளே சென்று பார்க்கலாம் என்று கோவிலின் வெளி மதில் சுவரை சுற்றி அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருக்கும் காவிரியை காண ஒரு ஆஷ்ரமத்தில் நுழைந்தோம். சில பிராமணர்கள் ஏதோ சடங்கு செய்து கொண்டிருந்தனர். உள்ளே சென்று கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிந்தது அது தனியார் இடம் என்று. அங்கிருக்கும் படித்துறையில் காவிரியை பார்த்து விட்டு, சிறிது நேரம்  ஓய்வெடுத்துவிட்டு கல்லணை நோக்கி கிளம்பினோம்.

கல்லணை என்றதுமே ஏதோ ஒரு பெருமிதம் நம்மை அறியாமல் நம்மிடம் வந்து விடுகிறது. பல ஆயிரம் போலி பெருமிதங்களைக் கொண்டு நமக்கு நாமே பெருமை அடித்துக் கொள்வதை விட, கல்லணை உண்மையில் ஒரு பெருமைப்பட வேண்டிய பொறியியல் அற்புதம் என்றே நினைக்கிறேன். முக்கொம்பில் காவிரியில் பிரிந்த கொள்ளிடம், கல்லணையில் காவிரியின் நீரை மீண்டும் பெற்று, வடகிழக்கு நோக்கி பாய்கிறது. கல்லணையிலிருந்து காவிரி வேணாறாக பிரிந்து காவிரிக்கு தெற்கில் செல்கிறது. காவிரிக்கு வடக்கில் கொள்ளிடமும், தெற்கில் வேணாரும் பாய்கிறது. 




                                                       கல்லணை - பாலம் மேல் 

முக்கொம்பில் கொள்ளிடம் பிரிந்து செல்லுமிடத்தில் இருக்கும் அணை மேலணை என்றும், கல்லணையில் கட்டப்பட்டது கீழணை என்றும் குறிப்பிடப்படுகிறது. கல்லணை கரிகால சோழனால் கட்டப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அதில் மாற்றம் கொண்டு வந்து, இப்பொழுது இருக்கும் அணையாக உள்ளது. காவிரியின் நீர் டெல்டா பகுதிகளுக்கு இவ்வணைக்கட்டு மூலமாகவே பிரிந்து வாய்க்கால் வழியாக செல்கிறது. வேணாற்றிருக்கு தெற்கே இந்த வாய்க்கால் வழியாக டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் பாய்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து பூம்புகார் வரை காவிரியின் பல்வேறு இடங்களில் சிறிய வாய்க்கால்கள் அமைத்து நீரினை பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ஜேடர்பாளையத்தில் காவிரிக்கு வடக்கில் ராஜ வாய்க்கால் பிரிந்து செல்கிறது. தெற்கிலும் ஒரு வாய்க்கால் பாசனத்திற்காக பயன்படுத்துகின்றனர். தெற்கில் செல்லும் வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்காலுடன் இணைகிறது. வடக்கில் பிரிந்த ராஜ வாய்க்கால், மேலும் இரண்டாக பிரிந்து செல்கிறது. மேலும் மாயனூரில் ஒரு வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இது மட்டுமில்லாமல் பல்வேறு சிறு வாய்க்கால்கள் காவிரியின் கிளை நதி போலவே செல்கிறது. கல்லணையிலிருந்து பிரியும் வாய்க்கால் ஒரு நதி போலவே டெல்டா பகுதிகளுக்கு நீரினை கொண்டு செல்கிறது. 

கல்லணையில் குளிக்கலாம் என்ற எங்கள் எண்ணம் காவிரியின் வேகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. கல்லணை ஒரு முட்கரண்டியில் (fork) இருக்கும் நான்கு முட்கள் போல, காவிரி நீரை நான்கு திசைகளில் பிரித்து அனுப்புகிறது. அதில் ஒன்றே புதுக் காவிரியாக பூம்புகார் வரை பாய்கிறது. ஏன் நான் புதுக் காவிரி என்று சொல்கிறேன் என்றால், கல்லணைக்கு மேலே வேறு பண்பாடாகவும், கல்லணைக்கு கீழே வேறு பண்பாடாகவும் இருக்கிறது.



                                                    காவிரி - மேலணை - கீழணை (கல்லணை)

                                          source - http://www.thanjavurtourism.com/kallanai-dam.html

கல்லணையிலிருந்து திருவையாறு நோக்கி கிளம்பினோம். மதிய சாப்பாட்டினை ஒரு சிறு  கடையில் முடித்துக்கொண்டு சென்றோம். காவிரியின் இடது புறமாக நாங்கள் சென்று கொண்டிருந்தோம். முக்கொம்பில் இருக்கும் போதே நண்பர் தண்டபாணி மொபைலில் அழைத்து இன்று இரவு ஆடுதுறை வந்துவிடுங்கள் என்று சொன்னார். நாங்களும் சரி என்று சொன்னோம். காவிரி கரையோரம் பூவரச மரங்கள் தென்பட ஆரம்பித்தது. செல்லும் வழியில் திருக்காட்டுப்பள்ளியில் வண்டியினை நிறுத்தி குடமுருட்டி ஆறு காவிரியிலிருந்து பிரிந்து செல்லும் பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தோம். காவிரிக்கு தெற்கில் குடமுருட்டி பிரிந்து செல்கிறது. 



அங்கு குளிக்கலாம் ஒரு படித்துறையில் இறங்கினோம். அங்கு ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு எங்கள் பின்னால் வந்தார். 

"இங்க ஆழம் எத்தன அடி இருக்கும், ணா" என்று கேட்டேன்.

"நானும் ஊருக்கு புதுசு தான். தஞ்சாவூர் பக்கத்துல. ஆத்த பாத்த ஒடனே குளிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அத்தான் படிதொறக்கி வந்தன்" என்று சொன்னார்.

நாங்களும் அங்கு படித்துறையில் கணுக்கால் அளவு நீரில் குளித்தோம். நீர் பயங்கர வேகமாக வந்து கொண்டிருந்ததால், உள்ளே சென்று குளிக்க முடியவில்லை. நீர் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருந்தது. ஆலமரத்தடியில் படித்துறையில் நான்கு, ஐந்து பேர் லுங்கி கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். நாங்கள் இறங்குவதை பார்த்த ஒருவர், பக்கத்தில் இருக்கும் சுவற்றிற்கு இப்பால் வந்து குளிக்கும் படி சொன்னார். அவரிடம் பேசிக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று கெட்ட வார்த்தையில் திட்டுவது கேட்டது. நாங்கள் திரும்பி பார்த்தபோது அவர்  மொபைலில் யாரையோ கெட்ட வார்த்தைகளில் ஒரு இரண்டு நிமிடம் விடாமல் பயங்கர கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு நிமிடம் கழித்து "தம்பி, உள்ள போகாதீங்க  மேலயே குளிங்க, தண்ணீல அடிச்சிட்டு போயிடுவீங்க" என்று எதுவுமே நடக்காதது போல் எங்களிடம் அமைதியாக பேசினார். அவ்வளவு கோபத்தையும் எப்படி விட்டுவிட்டு சாதாரணமாக பேசுகிறார் என்று ஆச்சரியப்பட்டோம். அப்படி பேசுவதே அந்த கோபத்தில் இருந்து வெளியே வருவதற்காக கூட இருக்கலாம்.




                                                          காவிரி - குடமுருட்டி பாலம் 

அரை மணி நேரம் நன்றாக குளித்து விட்டு, குடமுருட்டி ஆற்றுக்கும், காவிரிக்கும் இடையில் உள்ள வழியில் திருவையாறு நோக்கி கிளம்பினோம். நெல்லும், கரும்பும், வாழையும் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆனால் மக்களிடம் பெரிய வசதிகள் இல்லை. ஓட்டு வீடுகளும், சிறு மாடி வீடுகளும் இருந்தன. மொத்த ஊர்களுமே காவிரியை நம்பியே இருக்கிறது. பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இரண்டு புறமும் மர நிழலோடு நாங்கள் செல்லும் போது ஏதோ கேரளாவிற்குள் தவறி வந்து விட்டோமா என்றே நினைத்தோம். எங்கு பார்த்தாலும் நீரின்  வாசமும்,மரங்களும் இருந்தன. அங்கங்கே காவிரி ரோட்டிற்கு மிக அருகில் செல்கிறாள். ஆண்கள் பெரும்பாலும் லுங்கிகளிலேயே இருந்தனர். ரோட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அங்கங்கே காவிரியின் படித்துறைகளில் குளித்துக் கொண்டே இருக்கின்றனர். 

ஒரு இடத்தில் நடு ரோட்டில் ஒரு இளம் பெண்ணும் ஒரு முதியவரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆடு மேய்ப்பவர்கள். அப்பெண்ணை வண்டி போகிற வேகத்தில் சட்டென்று ஒரு நொடி பார்த்தேன. ஒரு இருபது வயது இருக்கும் இளம் பெண். கருப்பாக இருந்தாள். கையில் ஆடு ஓட்டும் குச்சுடன் இருந்தாள். அவள் கண்களில் இருந்த கள்ளமின்மை அவளை மிகவும் அழகாக காட்டியது. கல்லணைக்கு மேலிருக்கும் பெண்களிடம் இந்த கள்ளமின்மையும், அழகும் இல்லை. கல்லணைக்கு கீழிருந்து பெண்கள் கருப்பாகவும், அழகாகவும் இருந்தனர். உயரமும் சற்று குறைவாகவே இருந்தனர். 

இங்கு வாழை இலைகளை கட்டி ஏற்றிக்கொண்டிருந்தனர். தலைவாழை இலைகளை நன்றாக சுருட்டி வாழைக் தண்டுகளை கொண்டே மூடி எடுத்து செல்கின்றனர். 



திருவையாறு வந்து, ஒரு படித்துறையில் அமர்ந்து பேசி பேசிக்கொண்டிருந்தோம். திருவையாற்றில் காவிரி முழுவதும் தளும்பி  செல்கிறாள். நாங்கள் அமர்ந்த படித்துறைக்கு ஐந்தடி பக்கத்தில் வீடுகள் உள்ளன.திடீரென்று ஐந்து இளைஞர்கள் வந்து குளித்து செல்கின்றனர்.  திருவையாற்றில் அசோகா என்னும் இனிப்பு பிரபலம் என்று நண்பர் சொன்னார். அங்கு குளித்துக் கொண்டிருந்த  ஒருவரிடம் கேட்டோம். அவர் ரெண்டு கடை இருப்பதாக சொன்னார். பங்காளிகளா என்று தெரியவில்லை. ஒரு கடையில் சுத்த நெய்யில் அசோகா கிடைக்கும் என்றும், மற்றோரு கடையில் டால்டா அசோகா கிடைக்கும் என்றும் கடையின் பெயர்களை சொன்னார். நாங்கள் அவற்றைக் கேட்டுக்கொண்டு வழக்கம் போல் பெயரினை மாற்றி டால்டா அசோகாவினை வாங்கிச் சென்றோம்.

பதினெட்டு / பத்தொம்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த  இசை மேதை தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்ந்த வீடு இப்படித்துறையின் சாலையில் தான் உள்ளது.  வீட்டின் அருகிலேயே இசைப்பள்ளியும் ஒன்று உள்ளது. அவற்றை கடந்து ஆடுதுறை நோக்கி புறப்பட்டோம்.

"இந்த தேக்கு மரமெல்லாத்தையும் அரசாங்கமே வெட்டி மாற சாமான்கள் செய்து வித்தா நல்லாருக்குமில்ல" என்று காவிரியின் கரையோரம் நிறைய வளர்ந்திருந்த தேக்கு மரங்களை பார்த்துக் கொண்டே நண்பருடன் சொன்னேன்.

"அது பெரிய ஊழலாயிடும்" என்று நண்பர் சொன்னார்.

"ஊழல் நடக்காதுன்னு முடிவு செஞ்சு தான் ஒரு துறைய உருவாக்கணும்னா, எந்த ஒண்ணுத்தையும் உருவாக்கவே முடியாது" என்று சொன்னேன். தேக்கு மரங்களும், பூவரசு மரங்களும் ஒட்டி, முழு அளவோடு ஓடும் காவிரியை பார்த்துக் கொண்டு சென்றோம். 

இன்னொரு பொதுவான ஒரு அம்சம் மயில்கள். பவானியை தாண்டியதிலிருந்தே மயில்கள் அதிகமாக தென்பட்டன. முசிறியில் ஒரு இடத்தில் ஆண் மயில் ஒன்று அழகாக தோகை விரித்திரிந்தது. ஆனால் நண்பர் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டதால், ஒழுங்காக பார்க்க முடியவில்லை. ஒரு இடத்தில் காவிரிக் கரையின் மிக அருகில், மைல் கல்லில் மேல் தன் நீலக் கழுத்தினை ஒரு பக்கம் திருப்பிப் பார்த்துக் கொண்டு நீண்ட தோகைகளை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்த காட்சி ஒரு ஓவியம் போல் மனதில் பதிந்தது. 

திருவையாறிலிருந்து ஆடுதுறைக்கு சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து ஆடுதுறைக்கு கூகுள் மேப் போட்டுக்  கொண்டு சென்றோம். காவிரிக்கரை ஒட்டியே மாநில நெடுஞ்சாலை உள்ளதால் வழியில் காவிரியை விட்டு பிரிந்தும் சேர்ந்தும் சென்று கொண்டிருந்தோம். காவிரியுடன் செல்வது ஒரு ஒளிந்து விளையாடும் ஆட்டம் போலவே இருந்தது. கல்லணைக்கு கீழே காவிரியின் அகலம் குறைந்து கொண்டே செல்கிறது. மெத்திட்டாரு என்ற இடத்தில் அரசலாறு என்னும் ஆறு பிரிந்து காவிரியின் தெற்கே செல்கிறது. ஒரு இடத்தில் டீக்குடிக்க நிறுத்தினோம். மாலை நேரமானதால் டீக்கடையில் கூட்டம் இருந்தது. 

நான்கைந்து இளைஞர்கள் 'பொட்டணம்' வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். 18 முதல் 20 வரை வயதுள்ள இளைஞர்கள். ஐந்தாறு  பேர் இருந்தனர். எவரும் சிகரெட்டு அடிக்கவில்லை. அவர்கள் பேச்சும், கிண்டலும் கேலியாக இருந்தது. எங்கள் ஊரில் மட்டும் ஏன் நாலைந்து நண்பர்கள் சேர்ந்தால்  சிகரெட்டும், சினிமாவும் மட்டுமில்லாமல் ஏதோ ஒரு பெரிய சாதனை புரிவது போல் ஆளுக்கொரு வண்டியில் முறுக்கிக்கொண்டு போகிறார்கள் என்றே தெரியவில்லை. அல்லது நாங்கள் பார்த்த இளைஞர்கள் விதி விலக்குகலா என்று தெரியவில்லை. நாங்களும் பொட்டணம் வாங்கி சாப்பிட்டோம். எங்கள் ஊர் பக்கடா அளவில் ஒரு  பொட்டலத்தில் மடித்து கொடுத்தனர். நன்றாக இருந்தது.



திருப்பழனம், கபிஸ்தலம், சுவாமிமலை, திருவிசநல்லூ வழியாக சென்று கொண்டிருந்தோம். மேற்கே சூரியன் மறையும் மாலை ஒளி பக்கவாட்டில் காவிரியின் மேல் விழுந்து, வெள்ளி மின்னுவது போல் நீர் பிரதிபலித்தது. வண்டியில் சென்று கொண்டே இதை எல்லாம் பார்த்துச் சென்றதால், அந்த நொடியின் காட்சி அப்படியே ஒரு புகைப்படம் போல் மனதில் பதிந்து விடிகிறது. பைக்கில் திறந்த வெளியில் காற்றையும் , ஒளியையும்  நேரடியாக நாம் உணர்வதால் இது போன்றவற்றை அறிய முடிகிறது. காரில் பயணிக்கும் போது இந்த அனுப்பவும் நமக்கு ஏற்படுவதில்லை. காரில் செல்வதால் வேறு பயன்கள் இருந்தாலும், இது போன்ற சில அனுபவங்கள் கிட்டுவதில்லை.

ஆடுதுறைக்குள் காவிரியையும் , வீரசோழ ஆற்றையும் (காவிரியின் இன்னொரு கிளை ஆறு) கடந்து உள்ளே சென்றோம். ஆடுதுறை ஒரு சிறு டவுன். நண்பர் தண்டபாணியிடம் கால் செய்து வந்து விட்டதாக கூறினோம். அவரும் சிறிது நேரத்தில் வந்தார். ஒரு டீ குடித்துவிட்டு, அவரது வீட்டிற்கு  சென்றோம். ஆடுதுறை ரயில் நிலையம் அருகிலேயே அவருடைய பணியிடமும், வீடும் உள்ளது. இரவு நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 

Sunday 25 August 2024

'காவிரிக்கரை' பயணம் - 1


 

"ஜி, எப்போ காவிரி பயணம் போலாம்" என்று நான் கேட்டேன்.

"அட, போற போக்குல சொன்னதெல்லாம் seriousa  எடுத்து கிட்ட" என்று நண்பர் சொன்னார்.

சிட்டி - தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய "நடந்தாய் வாழி - காவிரி" நூலினை வாசிக்கும் போது, இந்த உரையாடல்கள் நிகழ்ந்தன.

இப்படி ஆரம்பித்தது தான் எங்கள் 'காவிரிக்கரை' பயணம். 

காவிரியை ஒட்டியே, அதன் கூடவே முடிந்த வரை பயணம் செல்வது தான் எங்கள் திட்டம். இறுதியில் நாங்கள் இருவர் மட்டுமே (நானும், நண்பர் ஜெயவேலுவும்) பயணம் செய்வதாக முடிவானதால், பைக்கில் போகலாம் என்று முடிவு செய்தோம். பைக்கில் சென்றால் காரில் செல்ல முடியாத இடங்களுக்கும் காவிரியோடு சேர்ந்து செல்லலாம் என்ற ஆசையும் கூட.

எங்கிருந்து தொடங்குவது என்று ஒரு குழப்பம். தலைகாவிரியிலிருந்து தொடங்கினால் தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தென்-மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருந்ததால், நாங்கள் ஹொகேனக்கல்லிலிருந்து தொடங்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அங்கும் நீர் அதிகம் போவதால், உள்ளே அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டு, சரி, ஓடும் காவிரியை முதலில் பார்க்காமல், அடைந்திருக்கும் காவிரியை மேட்டூர் அணையில் பார்க்க புறப்பட்டோம்.

 NH ரோடுகளை தவிர்த்து, கிராம சாலைகளிலும், SH சாலைகளிலும் செல்வதே எங்கள் திட்டம். காலை ஆறு மணிக்கு தர்மபுரியில் இருந்து இன்னொரு நண்பரின் royal enfield பைக்கில் கிளம்பினோம். நண்பர் வண்டி ஓட்ட, நான் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு பின்னாடி அமர்ந்திருந்தேன். செல்லும் வழியில் நாகாவதி அணைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். 

கடந்த பதினைந்து தினங்களாக, நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால், வழியெங்கும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது. நண்பர் அவருடைய கல்லூரி நண்பனின் வீடுகளை காட்டி கொண்டு சென்றார். 
"அபாரமான வளர்ச்சி, இந்த இடம். வெறும் குடிசை வீடுகளும், ஒட்டு வீடுகளும் தான் இருந்தது. இப்போ வேற லெவல்ல இருக்கு" என்றார் நண்பர்.

"ஆமாம், கடந்த இருபது வருடங்களில் தர்மபுரி சுற்று வட்டாரங்களில் பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சி. முக்கால்வாசி வெளியூர் பணம். Bangalore NH-ல் முக்கியமான இடமாகிறதனால தர்மபுரியிலிருந்து - ஓசூர் வரை real estate exponential growth" என்று சொன்னேன்.

சாலை குறுகி இருந்தாலும் நன்றாக இருத்தது. தொப்பூர் மலை தொடர்களை பார்த்துக் கொண்டே சென்றோம். நாகாவதி அணைக்கு அருகில் புலம் பெயர் ஈழ குடியிருப்புகள் இருந்தன. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. ஒரு 50 நீர்காகங்களின் கூட்டம் மேலே பறந்து சென்றது. இளவெயில் அடிக்க தொடங்கியது. <படம்>

மேட்டூர் செல்லும் வழியில் பெரும்பாலையில் அகழ்வு இடம் இருப்பதாக முன்னர் படித்ததால், அங்கு செல்லலாம் என்று கூகிள் மேப்பில் வழி போட்டுக் கொண்டு சென்றோம். அங்கு அகழ்வு பணிகள் முடிந்து விட்டதாக அங்கு சென்ற பின் தெரிந்து கொண்டு, பக்கத்திலே ஒரு நடுகல் இடத்திற்கு சென்று பார்த்தோம். மூன்று நடுகற்கள் மூன்று திசையிலும் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டு கிழக்கு பக்கம் மட்டும் திறந்திருப்பது போன்று வைத்திருந்தனர். மேற்கு புறமும், தெற்கு புறமும் இருந்த நடுகற்கள் போர்  காட்சிகளாக செதுக்கப்பட்டிருந்தன. காலை சூரிய ஒளியில் அந்த கல்வெட்டுகள் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது. குதிரையில் இருந்து ஒரு போர் வீரன் சண்டையிடுவது போன்று அற்புதமாக செதுக்கப்பட்டிருந்தது. வடக்கில் இருந்த கல்லில் கல்வெட்டுகள் இருந்தன. 



மேச்சேரியில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு மேட்டூருக்கு சென்றோம். மேட்டூர் நீர்தேக்கத்திலிருந்து ஒரு கண்மாயில் மட்டும் நீர் திறந்து விடப்பட்டு பொங்கி வந்து கொண்டிருந்தது. அதனை பார்த்துக்கொண்டே மேலே மேட்டூர் அணைக்கு சென்றோம். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று பார்வை மண்டபத்தில் ஏறி பைனாகுலரில் மேட்டூர் அணையின் நீர்தேக்கத்தினை கண்டோம். 

அங்கிருந்து கீழே இறங்கி ஒரு நினைவுத்தூணுக்கு அருகில் இருந்து, பைனாகுலரில் நீர் கண்மாயிலிருந்து பொங்கி வருவதை கண்டோம். நீர் இறங்கி செல்லும் கால்வாயில், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் வரையில் வரிசையாக நீர்காகங்கள் வெயில் காய்ந்து கொண்டிருந்தன. நீர் காகங்களை இவ்வளவு எண்ணிக்கையில் நான் பார்த்ததே இல்லை. அதுவும் அனைத்து காகங்களும் வரிசையில் ஏதோ ராணுவ ஒழுங்கில் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தேன். நம் கண்ணுக்கு நாம் காணும் காட்சிகள், நாம் ஏற்கனவே அறிந்திருந்த ஒரு கணித அமைப்புக்குள் வந்தால் தான் அதனை நாம் அழகென்று ஏற்கிறோம். அப்படி வடிவமே இல்லாத ஒன்றை நம்மால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. நாம் இயற்கையை முதலில் அணுகுவது அதன் வடிவத்தைத் தான் என்று நினைக்கிறேன். நமக்கு முன்பே தெரிந்திருக்கும் வடிவத்திருந்து பார்க்கும் காட்சியினை ஒப்பிட்டுப் பார்த்து அர்த்தம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். 



நீர்காகங்களையே ரொம்ப நேரம் மாறி மாறி பைனாகுலரில் பார்த்துக் கொண்டிருந்தோம். வெளியில் கிளம்பி வந்து வண்டி பக்கத்தில் நண்பருக்கு காத்து கொண்டிருந்தேன். நண்பர் பக்கத்தில் இருந்த கருவேல மரத்தருகில் சென்று பார்த்து கொண்டிருந்தார். பக்கம் வந்து "கருவேல மரம் முழுக்க பூத்திருக்கிறது, நீ பார்த்தாயா?" என்றார். நான் இல்லை என்று சொல்லி அதன் அருகில் சென்று பார்த்தேன். இதுவரை நான் கருவேல மரம்  பூக்களை பார்த்தது இல்லை. பார்த்திருந்தாலும் நினைவில் ஏற்றியது இல்லை. மரம் முழுக்க பூத்திருந்தது. பூக்களை சுற்றி தேனீக்கள் மகரந்தம் குடிக்க ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. மகரந்த வாசனை காற்றில் மிதந்து கொண்டிருந்தது.



மேட்டூரிலிருந்து கிளம்பும் போது மீன்கூடைகளையும், மீன்கடைகளையும் திறந்து கொண்டிருந்தனர். எங்கள் இடது புறத்தில் காவிரி ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்கும் இடையில், காவிரியின் மேல் இரு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு பாலம் உள்ளது. காவிரி கிராஸ் என்ற இடத்தில நாங்கள் மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் நுழைந்து ஒரு பாலத்தின் பக்கம் வந்தோம். அங்கு ஒரு காவல் ஷெட் போல ஒன்று இருந்தது. அதில் உள்ளேயும் வெளியேயும் குட்டி நாய்களும், குட்டி பூனைகளும் இருந்தது. பாலத்தின் மேலே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தோம்.  திடீரென்று ஒரு பையன் வண்டியில் வந்து , ஒரு தட்டில் தீனிகளை வைத்தான். அந்த பூனைகளும், நாய்களும் ஒரே தட்டில் அவற்றை உண்டன. ஒரு நாய்க்குட்டிக்கு காலில் மருந்து  போட்டு விட்டான். அந்த ஷெட்டில் இருந்த அனைத்து குட்டிகளையும் வெளியே தூக்கி வைத்து அதனை கழுவி விட்டான். நாய்களும், பூனைகளும் உண்ட பிறகு தட்டினை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். அவன் கொஞ்ச தூரம் செல்லும் வரையில் சில பூனைகளும், நாய்குட்டிகளும் ஒன்றாக அவனை துரத்தின. 



 நண்பர் யுவராஜ் பவானி செல்லும் வழியில் அவருடைய ஊர் இருப்பதால் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தார். அவரை சந்தித்து காவிரியின் இன்னொரு குறுக்கணை  வழியாக சென்றோம். ஆற்றோர மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் ஜெயவேல் பேசிக் கொண்டே இருந்தார். யுவராஜ் அவரை சேலம் பாலம் சந்திப்பில் சில வருடங்களுக்கு முன் சந்தித்தது பற்றியும், அவர் "ஆரோக்கிய நிகேதன்" நூலினை அறிமுகப் படுத்தி பேசியதை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்று அவர் அந்நூலினை பற்றி அற்புதமாக பேசியதால், அன்றே அவர் அந்த நூலினை வாங்கியதாகவும் சொன்னார். தீவிரமாக அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். (பேசி கொண்டிருந்தார்). நண்பர் ஜெயவேல் பேசி கொண்டிருப்பதை பார்த்தபோது, எப்படி ஒருவரால் அவ்வளவு தீவிரமாகும் சரளமாகவும் பேச முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். முற்றிலும் இலக்கியம் சார்ந்தே பேசிக் கொண்டிருந்தோம்.

நண்பர் யுவராஜ் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரின் அப்பா இறந்து விட்டதால், துக்கம் விசாரிக்க அவரது வீடு தேடிச்சென்றபோது, எப்படி பக்கத்து வீட்டு காரர்களுக்குக் கூட அங்கு ஒரு சாவு ஏற்பட்டது தெரியாமல் இருந்தது என்றும், அந்த சாவு வீட்டிற்கு சென்றால், அனைவரும் குளித்து முடித்து இவர்களை நன்றாக உபசரித்து அனுப்பி வைத்தனர் என்றும் ஆச்சரித்தோடு சொன்னார். இத்தனைக்கும் சாவு நடந்தது காலையில், இவர்கள் சென்றது மதியத்தில். ஒரு ஆறு மணி நேரத்தில் ஒரு தந்தையின்  இல்லாமையின் வெற்றிடத்தை மறந்து, குளித்து முடித்து மேலுமொரு நாள் போல இருந்தனர் என்று சொன்னார். இது நகரத்தில் அல்ல. காவிரி கரையோர கிராமத்தில். எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. சடங்குகள் அற்ற வாழ்வு இருக்க முடியுமானால் அது அறிவின் உச்சத்தில் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நிலையை அடைய ஒரு சதவீத அளவுக்குக் கூட ஒரு சமூகமாக நாம் வளரவில்லை. 



மேட்டூரிலிருந்து பவானி செல்லும் வரை  எங்கு பார்த்தாலும் கரும்பும், வாழையும், பாக்கு மரங்களுமாக இருந்தன. காவிரியின் கருணை பச்சை வயல்களாக மாறி இருந்தது. நாங்கள் காவிரி கூடவே செல்ல விரும்பியதால், கூகிள் மேப் சொல்லும் வழியினை பின்பற்றாமல், மேப்பில் காவிரியின் ஓரமாக சிறு வழி இருந்தாலும் அதனை ஒட்டியே சென்றோம். சில இடத்தில அகன்றும், சில  இடத்தில குறுகியும், வேகம் குறைந்தும், வேகமாகவும் காவிரி சென்று கொண்டிருந்தாள். இருபது நாட்களுக்கு முன், காவிரியில் நீர் அதிகமாக சென்றதன் காட்சிகளை சில கரைகளில் கண்டோம். 

பவானியில் வந்து மதிய உணவு முடித்து பவானி சங்கமேஸ்வர் கோவில் அருகில் உள்ள படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தோம். குளிப்பதற்கு கம்பி கட்டி வைத்துள்ளனர். அந்த இடம் முழுவதும் சடங்கு செய்வதற்கு மக்கள் வந்து கொண்டே இருந்தனர். சடங்குகள் என்ற பெயரில் ஆறுகளை நாசம் செய்து கொண்டிருக்கிறோம். உடுத்திய உடைகள் அனைத்தையும் அப்படியே ஆற்றில் விட்டு விடுகிறார்கள். இத்தனைக்கும் அங்கேயே படிக்கட்டுகளில் ஒரு தொட்டி போன்று வைத்து துணிகளை தொட்டியில் போடவும் என்று எழுதி வைத்திருக்கின்றனர். நமக்கு ஏன் சடங்கின் மேல் இவ்வளவு மோகம் என்று தெரியவில்லை. நண்பர், ஒரு நடுத்தர பெண்மணி சேலையை ஆற்றில் போட முயலும் போது, அங்கே தொட்டியில் போடுங்கள் என்று சொன்னார், ஆனால் அந்த பெண்மணி கேட்காமல் ஆற்றில் போட்டு போனார். 

ஏன் நதிகள் மேல் இந்த உதாசீனம் என்றே தெரியவில்ல. ஒரு புறம் தண்ணீர் வரவில்லையெனில் கர்நாடகாவிடம் சண்டை பிடிக்கிறோம்.  ஆடி 18 அன்று, காவிரி முழுக்க பூ போட்டு கொண்டாடுகிறோம். ஆனால் அதிலேயே கண்டதையும் போட்டு நாசம் செய்கிறோம். ஏன் நமக்கு இந்த ரெட்டை வேஷம் என்றே தெரியவில்லை. சடங்குகள் ஒரு காலத்தில் செய்ததை நாம் அப்படியே பின்பற்றுவதால், நம் நதிகள் நாசம் அடைகின்றன. ஒரு காலத்தில் அனைத்து துணிகளும், மற்ற பொருட்களும் மட்கும் (கரிம) பொருட்களால் ஆனவை.ஆனால் நாம் இப்பொழுது பயன்படுத்தும் அனைத்தும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வது. மேலும் எங்குமே பிளாஸ்டிக் மயமாகிவிட்ட காலத்தில், இச்சடங்குகள் தேவை தானா? வனத்துறை சட்டங்கள் போன்று, ஆறுகளுக்கும் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் தான் இதனை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும் என்று நண்பரிடம்பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் நாங்கள் ரொம்ப நேரம் அங்கேயே குளித்துக் கொண்டிருந்தோம். பவானியும், காவிரியும் சங்கமிக்கும் இடத்தில காவிரி படித்துறையில் குளுமையான நீரில் குளித்துக் கொண்டிருந்தோம். மார்பளவு நீர் சென்று கொண்டிருந்ததால், குளிப்பதற்கு நன்றாக இருந்தது. நீரும் வேகமாக சென்று கொண்டிருந்தது. பவானி ஆறு வெறும் குப்பைகளாகவும், சாக்கடைகளாகவும் காவிரியுடன் கலக்கிறது. இதனை திரிவேணி சங்கமம் என்று சொல்கின்றனர். பூமிக்கு அடியில் இன்னொரு ஆறு செல்வதாக இருக்கும் ஐதீகத்தினால் இப்பெயர். 

குளித்து முடித்து காவிரி கரையோரமே சென்று கொண்டிருந்தோம். குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம் என்று சென்று கொண்டிருந்தோம். எங்கு காவிரியின் மேல் பாலம் வந்தாலும் உள்ளே சென்று பாலத்தின் மேல் வண்டியை நிறுத்தி, காவிரியை பார்த்துவிட்டு செல்வோம். பெரும்பாலான பாலங்களில் குறுக்கு அணைகள் அமைத்து காவிரியின் வேகத்தினை கட்டுப்படுத்தி ஒரே கண்மாயில் நீர் வேகமாக திறந்து விடுகின்றனர். அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். அப்படி மொத்த வேகமும் ஒரே கண்மாயில் வருவத்தால் நீர் நுரைத்துக் கொண்டு வேகமாக வெளியேறுவதை பைனாகுலரில் பார்த்து கடல் பொங்குவது போன்று ஒரு நொடி தோன்றியது. 

உள் கிராமங்களில் அங்குள்ள வீடுகளை பார்த்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தோம். பெரும்பாலும்  எங்கும் ஓட்டு வீடுகளையோ, குடிசை வீடுகளையோ பார்க்க முடியவில்லை. அனைத்தும் மாடி வீடுகளே. அதே போன்று சாதாரணமான மாடி வீடுகள் இல்லை. பெரிய பெரிய மாளிகை வீடுகளாகவே இருந்தன. வீடுகளின் நெருக்கமும் அதிகம் இல்லை. வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. பரமத்தி வேலூர்  அருகே கோரை புற்கள் சாகுபடி செய்து கொண்டிருந்தனர். நெல் போன்றே உயரத்திலும், வண்ணத்திலும் உள்ளது. கோரைப் பாய் அதிலிருந்து தான் செய்கின்றனர். 



நிறைய இடங்களில் வாத்துக் கறி கடைகள் இருந்தன. ஆனால் எங்களுக்கு தான் அதனை ருசிக்க நேரம் இருக்கவில்லை. ஒரு பாலத்தில் சாயங்கால வேளையில் நின்று கொண்டிருந்தோம். திடீரென்று பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது. ஒரு நாற்பது வயது பெண்மணி காரில் இருந்து இறங்கி, ஒரு கட்டப்பையில் வைத்திருந்தவற்றை ஆற்றில் அப்படியே பையோடு தூக்கி போட்டார். கெட்ட வார்த்தை மனதில் நினைத்துக் கொண்டு அவர்களை திட்டிக் கொண்டிருந்தோம். இவர்களின் நடு வீட்டில் யாராவது மலம் கழித்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இவர்கள் ஆறுகளுக்கு செய்வது. யாராவது உண்மையிலேயே அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இப்படி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அப்படி கூட இவர்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை. மனதினை வேறு திசையில் மாற்ற பைனாகுலரில் தூரத்தில் இருக்கும் நீர்க் காகங்களை பார்க்க  தொடங்கினேன். 

சாலைகள் அனைத்து இடங்களிலும் நன்றாக இருந்தது. கிராமங்களில் கூட. ஒரு இடத்தின் பொருளாதார முன்னேற்றத்தின் முதல் படியே அங்கு இருக்கும் சாலைகளின் வழியாகவே தெரிந்து கொள்ளலாம். வழியில் பல இடங்களில் சந்தைகளை கண்டோம். மோகனுர் சக்கரை ஆலையை கடந்து சென்று கொண்டிருந்தோம். வெளிச்சம் குறைந்து இரவானதால், ஒரு விடுதிக்கு சென்று A/C அறை போட்டு தங்கினோம்.