Thursday, 30 March 2023

மகாராஷ்டிரா பயணம் (1)

வாழ்க்கையின் முதல் பெரிய பயணம் என்பதால், பயணத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஒரு பதட்டம் கலந்த இனிமை இருந்தது. இதற்கு முன்னாலும் பல்வேறு பயணங்கள் போயிருந்தாலும், அதெல்லாம் வேலை நிமித்தமாகவோ அல்லது வழக்கமான சிறு பயணங்களாவோ தான் இருந்துள்ளது. இந்த பயணம் என்னளவில் முக்கியமானது. ஏனென்றால், இது நான் என்னை எடை போடவும், என் உடலை சோதித்துப் பார்க்கவும் தேவையான ஒரு பயணம். மற்றபடி இந்தப் பயணத்தில் எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் அற்றே கிளம்ப தயாரானேன்.

மார்ச் பதினெட்டாம் தேதி, மதியம் 12:45க்கு தர்மபுரியிலிருந்து புனாவுக்கு ரயிலில் பயணம் உறுதியானது. வீட்டில் அனைவருக்கும் சொல்லிவிட்டு தம்பியுடன் சென்று ரயில் நிலையத்தில் இறங்கினேன். ஒரு ஷார்ட்ஸும் , டி ஷர்ட்டும் ஒரு பையுமே எனது உடமைகள். 

ரயில் நிலையத்தில் அரை மணி நேரம் காத்திருந்த பின்பு, 1:15 மணி அளவில் ரயில் வந்தது. ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்ததும் பயணம் தொடங்கியது. மனம் அமைதியாகவும், வெறுமையாகவும் எந்த ஒரு எண்ணங்களும் இன்றி சிறிது நேரம் இருந்தது. ஒரு மணி பயணத்தில் ராயக்கோட்டை வந்த பிறகு, ரயில் ஒரு மணி நேரம் மேலாகவே நின்றது. 

நண்பர் ஜெயவேல் ஓசூரிலிருந்து ரயிலில் இணைந்து கொள்ள இருந்தார். அவரிடம் மொபைலில் பேசினேன். அவர் ஓசூர் ரயில் நிலத்திற்கு வந்து காத்திருப்பதாக சொன்னார். ரயில் ரொம்ப நேரம் நின்றிருந்ததால் அவரை மதிய உணவு சாப்பிடச்சொல்லி நானும் வாழை இலையில் கட்டி எடுத்து வந்திருந்த காய் சாதத்தினையும், அவித்த முட்டையையும் சாப்பிட்டேன். 

அடுத்த ஏழு நாட்களுக்கு சென்று பார்க்கும் இடங்களை மொபைலில் தேடிக் கொண்டிருந்தேன். வெளியே இருக்கும் வெயில் தெரியாமல் A/C பெட்டியில் குளிர் இதமாக இருந்தது. பக்கத்து சீட்டில் ஒரு இளம் ஜோடி 2010 வரை வந்த ஹாரிஸ் ஜெயராஜ் காதல் பாடல்களைக் கேட்டுக் கொண்டும், காதல் பாடல்  வரிகளின் அர்த்தங்களை பேசி சிரித்துக் கொண்டும் வந்தனர். ஓசூருக்கு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக 3:30 மணிக்கு வந்தடையந்தது. 

நண்பர் ஓசூரில் ரயிலில் ஏறிக் கொண்டார். மிகவும் உற்சாகமாக இருந்தார். கே.ஏ. மீரா அவர்களின் கபர் புத்தகமும், மிர்தாத்தின் புத்தகமும் கொண்டு வந்திருந்தார். சப்பாத்தி/குருமா கட்டி எடுத்து வந்திருந்தார். 

சுமார் ஐந்து மணியளவில் ரயில் பெங்களூரு  ரயில் நிலையத்திற்கு சென்றது. நிறையபேர் இங்கு ரயிலில் ஏறினர். எங்கள் பெர்த்திற்கு எதிரில் ஒரு குடும்பம் வந்தமர்ந்தது. நடுத்தர வயது கணவன், மனைவி மற்றும் ஒரு மூன்று வயது குழந்தை. 

நானும் நண்பரும் இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் வாசித்தோம். எதிரே இருந்த மூன்று வயது குழந்தை மிகவும் அட்டகாசம் செய்தது. அதற்கு ஒன்று வீடியோ போட்டுத் தரவேண்டும், அப்படி இல்லை என்றால் அதனுடன் விளையாட வேண்டும். ரயிலின் ஒவ்வொரு A/C பெட்டிகளுக்காக ஒரு தனி பணியாள் எப்போதும் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். அவர் தரையினை சுத்தம் செய்வது , பயணர்களுக்கு போர்வை, தலையணை கொடுப்பது ஆகிய வேலைகளை செய்கிறார். 

இரவு 9:30 அளவில் நான் நடு பெர்த்தில் தூங்கச் சென்றேன். ஒரு முப்பது நிமிடத்திற்கெல்லாம் நான் தூங்கி விட்டேன். 

நாள் 2:

காலை 4 30 மணிக்கு விழித்துக் கொண்டேன். காலையிலேயே கழிவறை உபயோகித்து, பல் துலக்கிவிட்டு அமர்ந்து கொண்டிருந்தேன். ஆறு மணியளவில் வெளியே விடிய ஆரம்பித்தது. இப்பொழுது தான் ஒரு விடுதலை உணர்வு மனதிற்குள் மெல்ல உருவானது.

ரயில் மகாராஷ்டிரா எல்லைக்குள் போய்க் கொண்டிருந்தது. வெளியில் பெரும்பாலும் பொட்டல் காடுகளாகவே இருந்தது. சோளப்பயிர்கள் தான் பெரும்பான்மையான பயிர் வகைகள். மண் கருப்பு நிற வண்டல். புதிய நிலக் காட்சிகளை கண்டவாறு சென்று கொண்டிருந்தோம். ஒரு பிரம்மாண்டமான இரண்டடுக்கு ஓட்டு வீட்டினை கண்டேன். அந்த அளவில் நான் எங்கும் ஒரு ஒட்டு வீட்டினை கண்டதில்லை.

காலையில் எட்டு மணியளவில் எதிர் பெர்த்தில் குழந்தை விழித்துக் கொண்டது. அந்த குழந்தை இரவெல்லாம் ஒரே அட்டகாசம் செய்தது என்று காலையில் நண்பர் சொன்னார். நான் நன்றாக தூங்கியதால் , எனக்கு ஏதும் தெரியவில்லை. நாங்கள் கொண்டு போன ஆரஞ்சு பழத்தை குழந்தைப் பார்த்துக்கொண்டிருந்ததால், ஒரு பழத்தை அவளுக்குக் கொடுத்தோம். அவள் வாங்கி தன் அம்மாவிடம் உடனே உரித்துக் கொடுக்கச் சொல்லி சாப்பிட்டாள். சாப்பிடுவதில் எந்த வஞ்சனையும் இல்லாமல் குழந்தைகளுக்கே உரிய வகையில் அலைந்து தின்றது. ஜெயமோகனின் புழு உவமை தான் ஞாபகம் வந்தது. தன்னிடம் கிடைக்கும் அனைத்தையும் தின்று வளரும் ஒரு உயிர். 

புனே:

காலை 11 மணியளவில் புனே ரயில் நிலையத்தில் இறங்கினோம். ரயில் நிலையத்தில் சுற்றுலா மைய்யத்தினை தேடிக் கொண்டிருந்தோம். எனக்கு அது இருக்கும் என்று சந்தேகம் தான். ஆனால் நண்பர் தான் கண்டிப்பாக இருக்கும் என்று சொன்னார். பின்னர் விசாரித்தபோது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று சொன்னார்கள். புனே ரயில் நிலையம் ரொம்ப பெரியதும் இல்லாமல், சிறியதும் இல்லாமல் ஒரு நடுத்தர அளவிலான ரயில் நிலையம். 

வெளியே வழக்கம் போல ஆட்டோக்காரர்களின் 'உபச்சாரம்'.  ஒரு ஆட்டோக்காரர் தமிழில் கூட சவாரி கேட்டார். நாங்கள் ரயில் நிலையத்திற்கு எதிரில் ஒரு தேநீர் கடையில் டீ அருந்தினோம். டீ நன்றாகவே  இருந்தது. 

எங்கள் பயணம் முழுவதும் ஒரு ஊரில் இறங்கி அந்த ஊரைச் சுற்றி பார்க்க rental bike எடுத்துக் கொண்டு சுற்றலாம் என்று ஒரு யோசனை. அப்படி போவது இதுவே முதல் முறை. நான் கூகுளில் தேடி ஒரு rental bike அலுவலகத்திற்கு வழி போட்டேன். அங்கிருந்து 3.8 கிமீ காட்டியது. ஒரு ஆட்டோக்காரரிடம் மேப்பை காட்டி 80 ரூபாய்க்கு பேரம் பேசி ஏறினோம். அது one-way என்பதால் மேப் திசைமாறி 5கிமீ காட்டியது. ஆட்டோக்காரர் 120 ருபாய் கேட்டார். நாங்கள் இறங்கி விட்டோம். வேறு வழியில் நடந்து சென்றோம். அங்கு பேருந்து நிலையம் அருகில் ஒரு ஆட்டோவைப் பிடித்து 80 ரூபாய்க்கு எறிக் கொண்டோம். 

ஒரு 10 நிமிடத்தில் rental bike அலுவலகத்திற்கு வந்து விட்டோம். இது காரேகான் ரோட்டில் அமைந்துள்ளது. அலுவலகம் என்று சொல்ல முடியாது. ஐந்தாறு வண்டிகள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு அபார்ட்மெண்ட் பின்புறம் பார்க்கிங் இடத்திலே, ஒரு நாற்காலியும், மேசையும் போட்டுக்கொண்டு உரிமையாளர் சுதிர் இருந்தார். அடிப்படை ஆங்கிலம் பேசினார். நாங்கள் ஒரு Activa வண்டியினை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். 

Activaவில்  பெட்ரோல் போட்டுக்கொண்டு புனேவைச் சுற்ற ஆரம்பித்தோம். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக பின்னாடி ஆனது. நாம் இங்கு ஒரு சுற்றுலாப் பயணி இல்லை. இந்த மக்களோடு மக்களாக இருப்பவர்கள் என்ற எண்ணம். ஒரு அருமையான 'வடா பாவும்', பாணி பூரியும் சாப்பிட்டுவிட்டு முதலில் 'ஷநிவர் வாடா'விற்குச் சென்றோம். 

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. முகப்பு கோட்டையின் கதவு, கோட்டைகளுக்கே உரிய பிரம்மாண்டமாக இருந்தது. டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். மதிய வெயில் அவ்வளவு கடுமையாக இல்லை. கோட்டைக்குள் நுழைந்ததுமே அதன் வரலாற்றை பறைசாற்றும் எழுத்துப் பலகை ஒன்று ASI யால் பொறிக்கப்பட்டிருந்தது. அதை வாசித்துக் கொண்டு கோட்டையில் நடந்தோம்.



மராட்டிய அரசின் பேஷ்வாக்கள் வாழ்ந்த அரண்மனை ஷநிவர் வாடா. இது ஏழு அடுக்கு கோட்டையாக  இருந்துள்ளது. ஆனால் இப்பொழுது முற்றிலும் சிதிலம் அடைந்து வெறும் சுற்று சுவர்களும், கோட்டைக்குள் சிறு எச்சங்களுமே பாக்கி உள்ளது.  நம் கற்பனையில் அதன் அடுக்குகளை கட்டிக்கொள்ளலாம். கோட்டை உட்புற பகுதிகளிலே அது முன்பு என்னவாக இருந்தது என்று எழுதிவைத்திருக்கிறார்கள். ஒரு இடத்தில பேஷ்வா நாராயணராவ் அடைத்து வைத்திருந்த இடம் என்று எழுதி இருந்தது. அங்கு அவரின் குரல் கேட்கும் என்றும் உள்ளது. 




கோட்டையினை மூன்று சுற்றுகளாக பிரிக்கலாம். நடுச் சுற்று ஏறத்தாழ சதுரமானதாகும். அது கிட்டத்தட்ட ஒரு அடுக்கு உயரம் கொண்டது. அதைச் சுற்றிலும் உள்ள இடங்கள் தரை மட்டத்திற்கு தாழ்வானது. அங்கே பல்வேறு தொட்டிகள், அறைகள் இருந்திருக்கின்றன. ஒரு கலை அரங்கும் இருந்துள்ளது. மூன்றாம் சுற்று, மதில் சுவர் கொண்டது. அனைத்தும் கருங்கற்களால் கட்டபட்டது. மதில் சுவரின் நான்கு மூலையிலும் கண்கணிப்பு காவலர் மாடங்கள் உள்ளது. மொத்தம் கோட்டைக்கு ஐந்து கதவுகள் உள்ளன. ஒவ்வொரு கதவிர்க்கும் ஒரு 'தர்வாஜா' (பெயர்) உள்ளது. 



ஷநிவர் வாடா முடித்துவிட்டு "ராஜா திங்கர் கேல்கர் மியூசியம்" சென்றோம். ஒரு உட்புற தெருவில் ஒரு வண்டி மெக்கானிக் கடைக்கு எதிரில் இருக்கிறது. இங்கு பண்டைய கலைப்பொருட்கள், சிலைகள், அன்றாடம் பயன்படுத்தப்படும்  பழங்கால பொருட்கள், ஓவியங்கள், இசைக் கருவிகள், துணிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தந்ததால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், மர வேலைப்பாடு கொண்டவை என வெவ்வேறு வகையான பொருட்கள் இருந்தன. பெரும்பாலும் இவை கடந்த 200 முதல் 300 ஆண்டுகள் பழமையானவை ஆகும். 

பாதி பார்த்துக் கொண்டிருக்கும் போதே பசி எடுத்ததால், மியூசியம் மேலாளரிடம் கேட்டுக்கொண்டு, அவர் சொன்னபடி, பக்கத்தில் இருக்கும் ஒரு நல்ல உணவகத்துக்கு சென்றோம். உணவகத்தின் பெயர் "ககன்ராஜ்" உணவகம். சைவ உணவகம். காத்திருப்பு நேரம் 10 நிமிடம் என்றார்கள்.  நாங்கள் வெளியில் காத்திருந்தோம். இப்படி ஒரு உணவகத்தில் காத்திருந்து சாப்பிட்டு பல வருடங்கள் ஆனது.  காத்திருப்புக்கு ஏற்ற மாதிரி உணவு மிகவும் சுவையானதாக இருந்தது. "இரண்டு சாப்பாடுகள்" வாங்கி சாப்பிட்டோம். ஒரு "குளோப் ஜாமூனும், பழ சாலடும்" சாப்பாட்டுடன் வந்தது. 

நன்றாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் மியூசியம் போனோம். மீதி உள்ளவை அனைத்தையும் பார்த்துவிட்டு, அங்கிருந்து 'பாடலேஸ்வர் குகைக் கோயிலுக்கு' சென்றோம். வழியில் ஒரு பூங்கா, அதைத் தாண்டிச் சென்றதும்  இக்குகை கோவில் அமைந்துள்ளது. ஒற்றை பாறையின் அடியில் குடைந்து உருவாக்கப்பட்டது. எதிரே உள்ள நந்தி மண்டபமும் ஒற்றை கல்லால் செதுக்கியது. இந்த குகைக் கோயில் நகரத்தின் மையத்தில் இருப்பதால், குகையின் அருகே இருக்கும்போது வேறு நூற்றாண்டில் இருப்பது போல ஒரு பிரமிப்பு ஏற்படும். ஆனால் ஒரு 100 அடிக்கு முன்னாள் ஒரு பெரு நகரம் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த கற்குகைக்கு  மட்டும் காலம் நின்றுவிட்டது போல. 

அங்கிருந்து "சதுரஷிங்கி கோவிலுக்கு" சென்றோம்.ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது கோவில். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினால் நிர்வகிக்கப்படும் கோவில் இது. முக்கிய தெய்வம் காளி. இங்குள்ள தெய்வங்களுக்கு காவியால் வண்ணம் பூசுகிறார்கள். முதன்முறையாக இம்மாதிரி நான் பார்க்கிறேன். 

சாயங்காலம் 5 மணியளவில் ரோட்டோரத்தில் இருக்கும் ஒரு கடையில் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டே அடுத்து எங்க போலாம், எங்கு அறை எடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் கோட்டைகளுக்குச்  செல்வதனால், அங்கு போகும் வழியில் ஏதாவது ஒரு அறை எடுக்கலாம் என்று சொன்னேன். நண்பர் தன்  மனைவியிடம் சொல்லி இணையத்தில் தேடி ஒரு அறை உறுதி செய்தார். 

புனேவின் சாலைகள் நன்றாக அகலமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அவ்வளவாக இல்லை. மற்ற ஊர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் சாலைகள் நன்றாகவே  இருந்தன. வெப்பநிலையும் மிதமாகவே இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பிரதேசமாக அமைந்துள்ளதால் சாலைகளும், இடங்களும் பெரும்பாலும் ஏற்ற இறக்கமாகவே உள்ளது.  

இரவு 8 மணியளவில் அறைக்குச் சென்றோம். குளிக்க ஷாம்பு இல்லாததால் அதை வாங்க பல கடைகள் அலைந்து, இறுதியில் வாங்கி அறைக்கு வந்து குளித்துவிட்டு உறங்கினோம். அடுத்தநாள் கோட்டையில் ஏற காலையில் சீக்கிரம் எழவேண்டும் என்று மொபைலில் விழிப்பொலி வைத்து உறங்கினோம்.

Friday, 10 March 2023

பறந்துபோய்விட்டான்


 

எட்கர் கீரத் அவர்களின் 'Fly Already' சிறுகதைத் தொகுப்பை , தமிழில் செங்கதிர் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார். நூல் வனம் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

'பறந்துபோய்விட்டான்' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாசிப்பைக் கோரும் கதைகள். சில கதைகள் நேரடியாகவும் , சில கதைகள் பல்வேறு தளங்கள் கொண்ட கதைகளாகவும் உள்ளன. 

உள்ளடுக்குகள் கொண்டும், பல்வேறு யுக்திகள் கொண்டும் பெரும்பாலான கதைகள் உள்ளது. தற்கால இஸ்ரேல் மனதின் ஒருவகைச்  சாட்சிகளாகவே இக்கதைகள் உள்ளன. விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருசேர பயன்படுத்தி சில கதைகள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அடியில் மனிதனின் அடிப்படை உணர்வுகளே பேசப்பட்டுள்ளதால் இது பெரும்பாலும் அனைத்து இடத்துக்கும் பொதுவாகவே உள்ளது.

மனித குரூரங்களையும், பழி உணர்ச்சியையும் சொல்லும் 'தபுலா ரஸா' ('எழுதாப் பலகை'  லத்தீன்)முதல் சிறுகதை. ஹிட்லர் போன்றே cloneஐ உருவாக்கி பழி தீர்க்கும் ஒருவன், clone பொண்டாட்டியை கொன்று நிஜப் பொண்டாட்டியோடு இன்பமாக வாழ நினைக்கும் கணவன். ஆனால் அந்த cloneஇற்கு தங்கள் எதிராளியின் குணாதியசங்களை வரவழைத்த பின்பே அவர்களை பழி தீர்க்கின்றனர். பழி தீர்த்தப் பின்னும் பழி எஞ்சியே உள்ளது. எந்தப் பழியையும் முழுமையாக தீர்க்க முடியுமா என்ன? அதனால் தான் மனிதன் இந்த 'எழுதாப் பலகை'யில் எழுதி எழுதி வரலாறு முழுவதும் அழித்துக் கொண்டே இருக்கிறான் போலும்.

குழந்தையின் பார்வையில் பறக்கும் சூப்பர்மேனாக தெரிகிறான் தற்கொலை செய்து கொள்ளும் ஒருவன். தங்கள் கொடை உள்ளத்தை வெளிக்காட்ட 'செயலி' செய்து ஆதரவற்றோரைக் காக்க நினைக்கும் மேல் வர்க்கத்தினர். ஆதரவற்றோர் இல்லாமல் போனால், தாங்களே ஆதரவற்றோராக நிற்கும் அவர்களின் முரண். உறவு முறிந்தவனின் தனிமை சொல்லும் கதை என்று ஒவ்வொரு கதையும்  வடிவிலும் தொட்டுச் செல்லும் உணர்விலும் வெவ்வேறு கோணங்களைக் கொண்டுள்ளது.

வாழ்க்கையில் 365 நாட்களும் பிறந்தநாள் கொண்டாடி இன்பமாய் இருக்க, மற்றவர்களின்  பிறந்தநாட்களை விலை கொடுத்து வாங்குகிறான் ஒரு செல்வந்தன். ஒரு மனிதனின் ஒரு நொடி அவனின் மொத்த வரலாறும் அந்த இடத்தில கூடும் ஒரு புள்ளியாகவே இருக்கும். அதில் இன்பமும், வன்மமும், குரூரமும் அனைத்துமே கலந்து தான் இருக்கும். அவ்வாறு 'தோற்றுப்போன புரட்சியாளனின் பிறந்தநாள்'ஐ வாங்கும் செல்வந்தன் என்னவாகிறான் என்கிறது ஒரு கதை. 

தங்கள் நாயின் ஒவ்வாமைகள் வழியாக, மனிதன் கட்டமைக்கப்பட்ட சமூக விழுமியங்களை எல்லாம் ஒவ்வொன்றாக துறந்து கற்காலத்துக்கே செல்லும் தம்பதிகள். இக்கதை குறைந்தபட்சம் இரண்டு வாசிப்புகள் தேவை. 

'சாளரங்கள்' சிறுகதை என்னை மிகவும் பாதித்த சிறுகதை. மிகவும் நுட்பமாகவும், ஒரு சொல் பிழையாக புரிந்து கொண்டால் கூட கதை முற்றிலும் வேறு ஒன்றாக மாறும் கதையாகவும் இருக்கிறது. இக்கதை நேரடியாகவே இரண்டு விதமான வாசிப்புப் புரிதல்களைக் கொள்ளலாம். 

'செங்கதிர்' அவர்களின் மொழிபெயர்ப்பினைப் பற்றி கூறியாக வேண்டும். அனைத்து சிறுகதைகளும் மிகவும் நுட்பமாகவும் அதே சமயம் உணர்வுகளை மிகச்சிறந்த வகையில் கடத்துவதாகவும் மொழி பெயர்த்துள்ளார்.  'சாளரங்கள்' சிறுகதை நான் தமிழிலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வாசித்தேன்.  இக்கதையில் 'neighour' என்னும் சொல் வருகிறது. அதை 'அண்டைவீட்டான்' என்று சுலபமாக கதை போகிற போக்கில் மொழிபெயர்த்துவிடலாம். ஆனால் அவ்வாறு செய்தால் கதையினை எவ்வளவு முறை வாசித்தாலும் புரிந்துக் கொள்ள முடியாது. அதை  'அண்டைவீட்டார்' என்று மொழிபெயர்த்தால் மட்டுமே அந்தக் கதையை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஒவ்வொரு சொல்லிற்குள்ளும் அர்த்தங்களை புதைத்துக் கட்டி கதையின் அழகியலும், கூறுமுறையும், நுட்பமும் மாறாமல் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்  செங்கதிர்.

படித்து முடித்துப் பிறகு இக்கதைகள் வெறும் தொழில் நுட்ப கட்டுமானங்கள் மட்டும் தானோ என்று யோசித்துப் பார்க்கையில்,  கதையின் வடிவத்திலும், யுக்தியிலும்  மனிதனின் உணர்வுகளை படிப்படியாக வடித்துள்ளார் எட்கர் கீரத்.  ஒவ்வொரு தீவிர இலக்கிய வாசகனும் கண்டிப்பாக பல முறை வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு இது.  

நான்கு , ஐந்து முறை வாசித்தாலும் பிடி கிடைக்காத சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளது.