கிருஷ்ணகிரி அருகில் உள்ள Dolmens என்கிற கற்திட்டைகள் பற்றிய யூடியூப் காணொளி இணைப்பை நண்பர் ஜெயவேல் அனுப்பினார். தீபாவளியன்று அங்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். தீபாவளி அன்று செல்ல முடியாததால் அடுத்த நாள் செல்வதாக திட்டம். காலை பதினோரு மணியளவில் நண்பர்கள் அரூரிலிருந்து காரில் வந்தனர். நான் தர்மபுரியில் ஏறிக்கொண்டேன்.
கற்திட்டைகளை நான் முன்பு எப்போதும் பார்த்தது இல்லை. அல்லது பார்த்திருந்தாலும் அது தான் கல்திட்டை என்று தெரிந்திருக்காது. கூகுளில் அதைப்பற்றி சிறிது படித்தேன்.
கல்திட்டை என்பது மூன்று அல்லது நான்கு செங்குத்தான கற்களை வைத்து அதன் மேல் ஒரு பெரிய கற்பலகை கொண்ட அமைப்பாகும. இது எதற்காக அமைக்கப்பட்டது என்று இன்றுவரை அறுதியிட்டு கூறமுடியவில்லை. பொதுவாக ஏற்கப்பட்ட ஒரு காரணம், இது இறந்தவர்களின் நினைவு சின்னங்கள் என்பது தான். இந்த அமைப்பு வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்தது. கிருஷ்ணகிரியில் காணப்பட்ட அதே போன்ற அமைப்பு ருசியாவிலும் உள்ளது. உலகம் முழுக்கவே இந்த கற்திட்டைகள் ஐரோப்பா முதல் கொரியா வரை பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் ஒரே அமைப்பு கொண்டே அனைத்து இடங்களிலும் உள்ளது. கொரியாவில் தான் உலகத்தில் இருக்கும் கற்திட்டைகளில் 50 சதவீதம் உள்ளது.
தர்மபுரியிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் கிருஷ்ணகிரி - ஓசூர் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மல்லச்சந்திரம் என்ற ஊரில் இவை உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து செல்லும் போது 15km தொலைவில் நெடுஞ்சாலையிலிருந்து வலதுபுரம் திரும்பி ஒரு 2 km செல்ல வேண்டும். கூகுள் மேப்பில் "Mallachandram Dolmens" என்று பதிவிட்டால் அது நேராக இந்த இடத்திற்கு கொண்டு செல்லும். (https://maps.app.goo.gl/Qk9V54Qv1FXyau4R6)
இந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் ஒரு ஆட்டு கொட்டகையினில் இருந்த ஒரு பாட்டியிடம் "இங்க கல்திட்டைங்க பாக்குறதுக்கு எப்படி போனும்" என்று வழி கேட்டோம். எனக்கு அந்த பாட்டிக்கு அது பற்றி தெரிந்திருக்காது என்று நினைத்தேன். ஏனென்றால் பெரும்பாலும் இந்தியாவில் பக்கத்தில் இருக்கும் வரலாறு/பண்பாடு சார்ந்த இடத்தைப் பற்றி அருகில் வசிப்பவர்களுக்கு தெரிந்திருக்காது. ஒரு கர்நாடக பதிவு எண் கொண்ட காரும் அங்கு நின்றிருந்தது. அந்த பாட்டி "மேல மாடு கட்டி வெச்சிருக்க வழியா நேரா நடந்து போங்க. இப்பதான் ரெண்டு பேர் ஒரு ஆம்பளையும், பொம்பளையும் போனாங்க, வழி நல்லா போது போங்க" என்று சொன்னார்.
நாங்கள் பாட்டி சொன்ன வழியிலேயே ஒற்றையடி பாதையில் நடக்க ஆரம்பித்தோம். ஒற்றையடி பாதை பெரும்பாலும் சமதளமாகவே இருந்தது. ஒரு பெரிய புற்று இடது புறத்தில் இருந்தது. உனிமுள் செடிகள் பாதையில் ஆங்காங்கே நீண்டு கொண்டு இருந்தது. கீழே இருந்து ஒரு கம்பை எடுத்து கொண்டேன். செடிகளை கம்பால் விலகி நடந்து சென்றோம்.
10 நிமிடத்தில் ஒரு இடத்தில் பாதை வலது புறத்தில் பிரிந்தது. ஆனால் அந்த பாதை நேராக செல்லும் பாதையை விட அதிகம் பயன்படுத்தபட்டது போலில்லாமல் இருந்ததால் நாங்கள் நேராக சென்றோம். இன்னொரு 10 நிமிட நடைக்கு பின்னர் ஒரு வெட்ட வெளி வந்தது. அதிலிருந்து செல்லும் பாதை ஆடு மட்டுமே செல்லும் அளவுக்கு குறுகி இருந்ததால், மீண்டும் வந்த வழியாகவே வந்து அந்த வலதுபுற பிரிவில் நின்றோம். அங்கு பாதை பிரியும் இடத்தில் ஒரு புங்க மரத்தில் அந்த இடத்தின் "அச்சுத்தூரங்கள்" (அட்சரேகை, தீர்க்கரேகை அளவுகள்) சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. யாரோ ஒரு நல்லுள்ளம் கற்திட்டைகள் செல்லும் வழி காட்ட அதை எழுதி இருக்கிறார். அப்பொழுது ஒரு ஆணும், பெண்ணும் பேசும் குரல் கேட்டது.
கீழே நின்றிருந்த காரில் வந்தவர்கள் கற்திட்டைகளை பார்த்துவிட்டு கீழிறங்கி வந்து கொண்டிருந்தனர். 45 வயது மதிக்கத்தக்க ஆணும், அவரின் மனைவியும், 13-14 வயதான பெண்ணும், பையனும் இறங்கி வந்து கொண்டிருந்தனர். வட நாட்டு குடும்பம் போல இருந்தது. கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது. அந்த பெண் 'மேலே சென்றால் இரண்டு இடங்களில் கற்திட்டைகள் உள்ளது என்றும். ஒன்று வலது புறம், மற்றொன்று இடது புறம்' என்றும் கூறினார். நாங்கள் நன்றி சொல்லிவிட்டு மேலே ஏறினோம். ஒரு 50 அடிக்குள்ளாகவே ஒரு பெரும் பாறை மேலிருந்து சரிந்திறங்கியது. அடி பாறையிலிருந்து மேலேறினோம்.
கொஞ்ச தொலைவிலேயே காலுக்கு கீழே பாறையில் அதே சிவப்பு மையில் வழிகாட்டப்பட்டிருந்தது. நாங்கள் அதை பின்பற்றி இடப்பக்க கற் திட்டைகளை நோக்கி சென்றோம். முதலில் பார்ப்பதற்கு ஒரு நான்கு கற்களை மட்டும் அடுக்கி மேலே ஒரு பெரிய கல்லை வைத்து மூடியது போல் இருந்தது. ஒவ்வொரு கற்திட்டைகளாக பார்த்து கொண்டே சென்றோம்.
சிறியதாகவும், பெரியதாகவும் நிறைய இருந்தன. அனைத்திலும், வடக்கு பக்கம் உள்ள செங்குத்தான கல்லின் நடுவில் ஒரு பெரிய வட்ட வடிவ ஓட்டை இருந்தது. அங்கிருந்த அனைத்து கல் திட்டையிலும் அதே போன்று வட்ட வடிவில் ஒரு துளை இருந்தது. ஒரு மனித தலை மட்டும் உள்ளே போகும் அளவிற்கு இருந்தது அந்த துளை. அது எதற்காக என்று சொல்ல முடியவில்லை. உள்ளே இறந்தவர்களை இருத்திவிட்டு நான்கு பக்கமும் செங்குத்தான கற்களை நட்டு வைத்து, மேலே ஒரு பெரிய கல்லை மூடிவிட்டு, ஏன் ஒரு பக்க கல்லில் மட்டும் ஓட்டை போட வேண்டும். அதுவும் வடக்கு நோக்கி இருக்கும் கல்லில் மட்டும். சிறு குழந்தை எட்டி பார்க்கும் அளவு உயரத்தில் அந்த துளை உள்ளது. விலங்குகள் உள்ளே செல்லாமல் இருப்பதர்காகவா?
ஒரு சில கற்திட்டைகள் காலத்தால் அப்படியே இறங்கி, கீழிருந்த கற்கள் உடைந்து, மேலே உள்ள கல் அப்படியே இறங்கி இருந்தது. இந்த கற்திட்டை குவியல்களின் நடுவே, ஒரு பெரிய கற்திட்டை இருந்தது. அதுவே அந்த கற்திட்டை குழுவில் அளவில் பெரியது. அதனை சுற்றி வட்ட வடிவில், அளவில் இரண்டு அல்லது மூன்று மடங்கு உயரமுள்ள பெரும் கற்களை செங்குத்தாக நிறுத்தி இருந்தது. அந்த உயரமான கல் வளையங்களை சுற்றி இன்னொரு சுற்று சிறிய அளவிலான செங்குத்தான கற்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் நின்று சுற்றி பார்த்தால், பெரும்பாலும் அனைத்து கற்திட்டைகளிலும் இந்த மூன்று சுற்று அடுக்கு உள்ளது. பல அதில் சிதைத்திருந்தது.
இந்த மூன்று சுற்று அமைப்பை பார்ப்பதற்கு ஒரு காம்பௌண்ட் கட்டிய மாளிகையின் டெம்ப்லேட் போல நினைத்து கொண்டேன். இன்றைய நவீன கட்டிடக் கலையின் முன்னோடி என்று ஒரு வகையில் சொல்லலாம். இந்த கற்திட்டைகள் யாரால், எதற்காக எப்போது அமைக்கப்பட்டது என்று சொல்லிவிட முடையது. சிலர் இதை 5000 வருடத்திற்கும் முன்பிருந்தே இருக்கலாம் என்றும், சிலர் 3000 வருடம் முன்பிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அந்த ஆதி மனிதனின் எண்ணங்களை நம் கற்பனை கொண்டு மட்டுமே நிரப்ப முடியும். அப்படி நிரப்புவதும் நம் அறிவை நிறைத்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். வட்ட வடிவ துளைகளை தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு முழுநிலவைப் போலவே இருக்கும். ஏன் வட்டத்தினை அமைத்தார்கள். ஒரு செவ்வகமோ, சதுரமோ கூட அமைத்திருக்கலாம். வட்டம் தான் பார்ப்பதற்கு அழகாக இருந்தனவோ? அப்படியென்றால் மனிதனின் அழகியல் உணர்வு அங்கிருந்தே தொடங்கி விட்டதோ? ஒரு செவ்வக கல்லில் நடுவில் வட்டம்! அல்லது இது வேறு ஏதாவது குறியீடாகவும் இருக்கலாம்.
இந்த வட்ட துளை உள்ள கல் தான் வாசல் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு கற்திட்டையில் வாசலுக்கு முன் இரு கற்கள் 'போர்டிகோ' தூண்கள் போன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்றுள்ளவற்றை வைத்து மட்டும்தானே நாம் பழையவற்றை அறிய முடியும். இந்த வாசல் வடக்கு நோக்கி மட்டும் தான் எல்லா கற்திட்டைகளிலும் இருந்தது. இதிலிருந்து தான் "வடக்கிருத்தல்" (வட திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பது) என்பது கூட வந்திருக்கலாம். பண்பாட்டு வேர்களை நாம் அவ்வளவு அறுதியிட்டு கைகளில் பற்றி விட முடியாது.
என் மனைவியிடம் பிற்பாடு இதை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது "அது ஒரு வேளை வயதானவர்கள், நோய் கொண்டவர்களை உள்ளே விட்டு உணவு அளிக்கும் துளையாக கூட இருக்கலாம்" என்று சொன்னார்.
அங்கிருந்து எதிரில் உள்ள இன்னொரு கற்திட்டை குவியலைக் கண்டோம். இங்கிருந்து அங்கு பார்ப்பதற்கு அது வெறும் கற்குவியலாகவே இருந்தது. அருகில் சென்று பார்த்தோம். முதலில் பார்த்தவற்றிற்கு தென் திசையில் இது உள்ளது. இங்கு பல கற்திட்டைகள் நொறுங்கி இருந்தன. எஞ்சியவை மிகக்குறைவாகவே இருந்தன. இங்கும் நடுவில் ஒரு பெரிய கற்திட்டை. அதனை சுற்றி உயரமான செங்குத்தான வட்டச்சுற்று. அதற்கு வெளிப்புறம் உயரத்தில் சிறியதான ஒரு கற்சுற்று. ஒவ்வொரு குழுவிலும் இது போன்ற நடுவில் இருக்கும் பெரிய கற்திட்டை அந்த குழு தலைவனுடையதாக இருக்கலாம்.
தெற்கு மூலையில் ஒரு சிறிய கற்திட்டையினிலுள்ளே இரண்டு ஓவியங்கள் இருந்தன. ஒன்று புலி போன்ற ஒரு உருவம், அதன் மேலே குச்சி போன்ற மனித உருவம் நின்றிருப்பது போல இருந்தது. இன்னொரு ஓவியம் என்னவென்று தெரியவில்லை. ஒரு மரவட்டை போல ஒரு உருவத்தின் மேல் குச்சி போன்ற ஒரு மனிதன் சவாரி செய்வது போல் இருந்தது. அது என்ன விலங்கு என்றே தெரியவில்லை. எதற்காக இதனை வரைந்தான் என்றும் தெரியவில்லை. இரண்டு உருவங்களும் நேர் நேர் நின்று இருப்பது போல இருந்தது. ஓவியத்தில் பிரதானமாக தெரிந்தவை கோடுகள். சிறு சிறு கோடுகள் நன்றாகவே தெரிந்தன. புலியின் நகத்தில். மரவட்டையின் கால்களில்.
சிறிது நேரம் மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இதற்கு தென்புறமும் இன்னொரு கற்திட்டை குவியல் உள்ளது. அதன் நடுவில் அமைந்த கற்திட்டை தான் இருப்பதிலேயே சுற்று அளவில் பெரியது. ஆனால் அதன் சுற்று கற்கள் எல்லாம் விழுந்து விட்டன. அந்த அமைப்பும் நடுவில் உள்ள கற்திட்டையும் அப்படியே உள்ளது.
அங்கிருந்து கீழிறங்கும் வழியில் ஒரு பாம்பின் படிம அச்சு ஒரு பாறையின் மேல் இருந்தது. ஒரு முள்ளம்பன்றி முள்ளை எடுத்து நண்பர் காட்டினார். கவுதாரி றெக்கையினை எடுத்து காண்பித்தார். அப்படியே கீழிறங்கி வந்தோம். மேலே செல்ல வழி சொன்ன பாட்டி உச்சி வெயிலில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு மேய விட்டிருந்தார்.
சில ருஷ்ய கற்திட்டை யூடிடூப் காணொளிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். கிருஷ்ணகிரியில் இருப்பது போன்றே அதே மாதிரியான கற்திட்டைகள் அங்கேயும் உள்ளது. நடுவில் உள்ள அந்த துளையும் அப்படியே! இதைப் பற்றி வாசிக்க வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள மற்ற இது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும்.