தர்மபுரியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பினும், இவ்வூரின் வரலாறு பொதுவாக, அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் ஆண்டது என்பதைத் தாண்டி வேறு எதுவும் தெரியாமல் இருந்தது.
'தருமபுரி பூர்வ சரித்திரம்' என்னும் நூல் D. கோபால செட்டியார் அவர்களால் 1939ல் எழுதப்பட்டது. இந்நூலின் பிரதிகள் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நூலினைப் பற்றி 'தருமபுரி மண்ணும் மக்களும்' என்ற நூலில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அதனை வைத்துக் கொண்டு இந்த நூலினை எவரிடமாவது கேட்டுத் தெரிந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அலைந்து, அதனை ஒரு நூலகத்தில் கண்டு பிடித்து, அதனை பிரதி எடுத்து, ஒரு புதிய பதிப்பாக பதிப்பித்த ஆசிரியர் தங்கமணி அய்யாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
இந்நூலில் D. கோபால செட்டியார் அவர்களின் ஆளுமைச் சித்திரத்தையும், அவர் லேவ் டால்ஸ்டாய் உடன் கடிதத் தொடர்பில் இருந்துள்ளார் என்பதையும் வாசிக்கும் போது, இப்படியொரு ஆளுமையை நாம் அறியாமல் இருந்தது ஒரு பேரிழப்பே என்பதில் ஐயமில்லை. அவர் எழுதிய இன்னும் பிற நூல்களான 'New Light Upon Indian Philosphy' என்ற நூலினை லண்டனில் 100 ஆண்டுக்கு முன்னரே வெளியிட்டுள்ளார். இவர் சைவ சித்தாந்தத்தில் ஒரு நூலையும் , இன்ன பிற பூர்வ சரித்திர நூல்களையும் எழுதியுள்ளார்.
'சங்க இலக்கிய பாடல்களை வைத்து இன்றைய தர்மபுரி என்பது தகடூர் தான் என்றும், அதனை ஆண்டவன் அதியமான் என்றும், அவனது போர் வல்லமைகளை விவரிக்கிறது இந்நூல். அதே சமயம் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை எரித்தான் என்றும், அதற்கு பின்பு, சேரர்களாலும், சோழர்களாழும் ஆட்சி செய்யப்பட்டு, இதனை விஜயநகர அரசனின் மருமகன் ஜகதேவராயர் ஆட்சி செலுத்தி வந்துள்ளான். இப்பொழுது சேலம் என்று சொல்லப்படுகிற பாராமஹாலுக்கு அவனே அரசன். அவனே தகடூருக்கு தர்மபுரி என்று பெயர் மாற்றம் செய்தான்.
பின்பு இது நாயக்கர்களிடம், திப்பு சுல்தான் கைவசமிடமும் இருந்து ஆங்கிலேயர்களிடம் சென்றது. 1792 முதல் 1798 வரை தர்மபுரிக்கு சப் கலெக்டராக இருந்தவர் 'சார் தாமஸ் மன்றோ'. இவர் ஒரு வரலாற்று நாயகர். இவர் பெயர் கொண்ட கல்லால் அடித்த சாசனம் ஒன்று தர்மபுரியில் இன்றும் உள்ளது என்று கூறுகிறார் கோபால செட்டியார். இவருக்கு பின் வந்த சப் கலெக்டர் காலத்தில் ஒரு குளம் வெட்டியதும், அந்த குளம் இன்றும் உள்ளதும் அவற்றினை சென்று பார்க்க ஆவலைக் கூட்டுகிறது.
வாசிப்பதற்கு 30 பக்கங்கள் கொண்ட நூலே ஆனாலும், வரலாற்றுப் பார்வையுடன் எழுதிய இந்நூல் தர்மபுரி மக்களுக்கு ஒரு பொக்கிஷமாகும். இதிலிருந்து இன்னும் பல நூல்களையும், ஆராய்ச்சிகளையும் நாம் சென்று சேரலாம்.
வரலாற்றில் நாம் மறந்த பல்வேறு மனிதர்கள், எங்கோ உறங்கிக் கொண்டுத்தானிருக்கிறார்கள். அவர்கள் உறக்கத்தை வரலாற்றின் ஊடாக அவர்களே திரும்பிப் பார்த்துக் கொள்கிறார்கள் நம் கண்களின் வழியாக. ஒரு வழியில் நாம் அவர்களை பார்ப்பது இல்லை, அவர்களே தான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். நாம் என்பது அவர்களின் நீட்சி தானே.
No comments:
Post a Comment