சா. பாலுசாமி அவர்கள் எழுதிய "நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்" புத்தகத்தில் வரும் நெல்லையைச் சுற்றியுள்ள கோவில்களுக்கு செல்வது என்பது திட்டம்.
சனிக்கிழமை காலை நான்கு மணிக்கு தர்மபுரியில் இருந்து நெல்லை பயணம் ஆரம்பித்தோம். வழியில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவிலுக்குச் சென்று பார்த்துவிட்டு போகலாம் என்று முடிவு செய்தோம் .
கோவிலின் கோபுர சிற்பங்களை வழக்கம் போல் விதமிதமாக வண்ணம் பூசி வைத்திருந்தனர். கோவில் வளாகத்தினுள் உள்ளே சென்றோம். முக மண்டபத்தில் ஆளுயர சிற்பங்கள் அணி ஒட்டிய ஸ்தம்பத்தில் வரிசையாக இருந்தன. மன்மதன் ரதியும் எதிரெதிர் ஸ்தம்பத்தில் செதுக்கப்பட்டிருந்தன. மன்மதன் கையில் இருக்கும் கரும்பின் கணுவினைக் கூட தத்ரூபமாக செதுக்கி இருந்தனர். நரசிம்மர் இரணியனை வதம் செய்வது மிகவும் உயிர் துடிப்பாக இருந்தது. இரணியனின் குடலை கையில் கொண்டு மிகுந்த ஆவேசத்துடன் நரசிம்மர் இருந்தார்.
அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றோம். தாடிக்கொம்பு கோவிலில் பார்த்தது தான் பிரம்மாண்டம் என்று நினைத்தால், ஸ்ரீவில்லிபுத்தூர் முக மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் அதனை விட பிரம்மாண்டமாய், தத்ரூபமாய் இருந்தன. உள்ளே சென்றவுடன் யாளிகளின் பிரம்மாண்ட அணிவரிசை நம்மை வரவேற்கும். அங்கிருந்து உள்ளே முக மண்டபத்தில் அர்ஜுனன் - கூரிய தாடியுடன், கர்ணன் - கையில் நாக பாசனத்துடன், வீரபத்திரர் பல்வேறு நிலைகளில் காட்சியளிக்கின்றனர். இங்கும் மன்மதன் சிலையும், எதிரில் அன்னத்தில் ரதியின் அழகிய சிலையும் உள்ளது. ஆண்டாளை தரிசித்து விட்டு உட்பிரகார சுற்றில் எழுதி வைத்துள்ள ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை பார்த்துக் கொண்டு வந்தோம். ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
வெளியில் வந்து நுங்கும் தெளுவும் வாங்கிக் குடித்துவிட்டு (சக்கரை கலப்படம்), பால்கோவாக்களை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு சென்றோம். அங்கிருந்து கழுகுமலை செல்ல புறப்பட்டோம். செல்லும் வழியில் சங்கரன் கோவில் என்ற இடத்தில் சாப்பிடலாம் என்று உணவகம் தேடிக் கொண்டிருந்தோம். அங்கிருந்த அண்ணாமலையார் ஹோட்டலில் ஆளுக்கொரு சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். சாப்பாட்டிற்கு அவியல், பொரியல், கூட்டு என்று மூன்று வகையாக வைத்திருந்தனர். நான் இங்கு தான் முதல் முதலாக அவியல் சாப்பிடுகிறேன் (அல்லது இது தான் அவியல் என்று தெரிந்து சாப்பிடுகிறேன்). உணவு மிகவும் சுவையாக இருந்தது. அவியல் காரமில்லாமல் நன்றாக இருந்தது. சாப்பிட்டு விட்டு கழுகுமலைக்கு கிளம்பினோம்.
கழுகுமலை தூத்துக்குடியில் உள்ள ஊராகும். அங்கு முடிவு பெறாத ஒரு குடைவரைக் கோவிலும், ஒரு சமணப்பள்ளியும் உள்ளது. கீழே ஒரு குளம் உள்ளது. அங்கு ஒரு நீர்காகம் றெக்கைகளை விரித்து வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். நாங்கள் மேலே ஏறி சென்றோம். இடது புறம் உள்ள குடைவரை கோவிலுக்கு முதலில் சென்றோம். மேலிருந்து அதன் அமைப்பை பார்த்தோம். கோவில் விமானத்தில் வீணாதார சிவனின் சிற்பம் உள்ளது. எல்லோராவில் இருக்கும் கைலாச நாதர் கோவிலின் உருவ ஒற்றுமை கொண்டது இக்கோவில். கீழே இறங்கி கோவிலை சுற்றி பார்த்தோம். இங்குள்ள கற்களின் அமைப்பால் இக்கோவிலை பாதியில் நிறுத்தி விட்டார்களோ என்று தோன்றியது. அங்கங்கே சிலைகள் விரிசல் கொண்டிருந்தன.
அங்கிருந்து வலது புறம் சென்று சமணப் பள்ளியினை பார்த்தோம். பார்சவநாதரும், பாகுபலி கோமதீஸ்வரரும் சிற்பங்களாக இருந்தனர்.
அங்கிருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டோம். காற்றாடிகள் தோன்ற ஆரம்பித்தது. செல்லும் வழியில் அன்றில் பறவைகளை பார்த்தோம். நகரத்தை நெருங்க சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. நயினார் குளத்தில் பறவைகள் இருந்தன. ஒரு காலத்தில் நெல்லை கோவிலின் ஒரு முன் மண்டபமாக இருந்திருக்கும் ஒரு மண்டபத்தின் ஊடாக சாலை இருந்தது. கோவில் எதிரிலேயே உள்ள இருட்டுக் கடை அல்வாவிற்கு மக்கள் அலை மோதிக்கொண்டிருந்தனர். அங்கு பண ஸ்கேன் வசதி இல்லை. கையில் பணம் மட்டுமே கொடுக்க வேண்டும்.
நெல்லையப்பர் கோவிலை சுற்றி அனைத்து பெரிய கடைகளும் உள்ளதால் கோவிலுக்கு வருபவர்களை விட, ஷாப்பிங் செய்ய வருபவர்களே அதிகம் என்று நினைக்கிறேன். நெல்லையப்பரைப் பார்த்து விட்டு ஷாப்பிங் செய்து செல்பவர்களும் உண்டு. தெருக்களும் அகலமானதாக இல்லாததால், ஷாப்பிங் செய்ய வருபவர்களின் வாகனங்கள் தெருக்களை அடைத்து கொண்டு, செல்லும் வழி குறுகியதாக உள்ளது. ஆனால் காவல் துறை வாகனம் ரோந்து வந்துகொண்டே தான் இருக்கிறது.
மாலை ஆறு மணியளவில் காரினை நயினார் குளம் ஓரம் உள்ள இடத்தினில் பார்க் செய்து விட்டு நடந்து வந்தோம். நெல்லையப்பர் கோவிலுக்குள் செல்லும் முன் மண்டபத்தின் மேற்கூரையில் இருபக்கமும் மரத்தாலான ஆண் - பெண் காமத்தில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. உள்ளே செல்பவர்கள் மேலே பார்த்தால் நன்றாக தெரியும். உள்ளே முக மண்டபத்தில் இடது புறம் உள்ள தூண்களில் ஆளுயர சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வீரபத்திரர் சிலைகள், கர்ணன், அர்ஜுனன், மன்மதன், ரதி ஆகிய சிலைகள் தென் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் உள்ளது. இவற்றில் சில சிலைகள் நெல்லையப்பர் கோவிலிலும் உள்ளது.
இரவு நெருங்கியதால் நாளை காலை வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பிவிட்டோம். செல்லும் வழியில் இருட்டு கடை அல்வாக்களை வீட்டுக்கு வாங்கிக் கொண்டோம். அங்கு வாழை இலையில் சுற்றி அல்வா விற்கிறார்கள். ஒரு இலை இருபத்தி ஐந்து ருபாய். வாங்கி சாப்பிட்டு விட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு பாக்கெட்களில் அல்வா வாங்கிக் கொண்டோம். பணம் கொடுத்து, கேட்ட அடுத்த நொடியில் பில் தயாராகிறது, அடுத்த நொடியில், உங்கள் கையில் நீங்கள் கேட்ட அல்வா பாக்கெட்டுகள் இருக்கும். யார் பணம் வாங்கி, எப்படி பில் அடித்து, அதற்குள் எப்படி பாக்கெட்டுகளை உங்கள் கையில் யார் கொடுத்தார்கள் என்று யோசிப்பதர்க்குள் பின்னாலிருந்து உங்களை தள்ளி அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள். மின்னல் பொழுதில் ஒரு வியாபாரத்தினை முடித்து விடுகிறார்கள்.
இந்த பயணம் முழுக்க நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளில், சாலை ஓரங்களில் உள்ள வயல்களில் அன்றில்களை அடிக்கடி கண்டோம். அன்றில் என்கிற அரிவாள் மூக்கன் பறவையினை முதன் முதலில் அங்கு தான் பார்த்தேன். அது செங்கொண்டையும், கருப்பு உடலும் , நீண்ட அலகும் கொண்டது.காரினை நிறுத்தி , பைனாகுலரில் அதனை பார்த்து கொண்டிருப்போம். தனது நீண்ட அரிவால் போன்ற அலகினால் இறை தேடி தின்று கொண்டிருக்கும்.
இரவு உணவு தேடி பாளையங்கோட்டை அருகே சுற்றிக் கொண்டிருந்தோம். அங்கு ஒரு சாலையில், நிறைய தள்ளு வண்டி கடைகள் இருந்தன. ஒவ்வொரு கடை சுற்றியும் மூன்று, நான்கு டேபிள்களை போட்டு சுற்றி அமர்ந்து மக்கள் கல்யாண பந்திகளில் இருப்பது போன்று சாப்பிட்டு கொண்டிருந்தனர். நாங்கள் பார்ஸல் கேட்டபோது, அங்கிருந்து சாப்பிடுபவர்களே நிறைய பேர் இருந்ததால் லேட்டாகும் என்று சொன்னார்கள். நாங்கள் அங்கிருந்து கிளம்பி ரூமிற்க்கு வந்தோம். இரவு பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தோம்.
நெல்லையப்பர் கோவிலுக்கு காலை ஏழு மணியளவில் மீண்டும் சென்றோம். உள்ளே பெரியதாக கூட்டம் இல்லை.சிற்பங்களை பார்த்துக் கொண்டு வந்தோம். குறத்தி தன் தோலின் மேல் ஒரு குழந்தைக்கு ஒரு பாத்திரத்தில் உணவு கொடுப்பதும் அக்குழந்தை அதனை எடுத்து சாப்பிடுவது போன்ற சிலை மிகவும் அற்புதமாக இருந்தது. தெற்கில் உள்ள கோவில்களில் மிகவும் முக்கியமானது அதன் பிரம்மாண்டம். சிலைகளின் அளவிலும், தூண்களின் எண்ணிக்கையிலும், அளவிலும், மண்டபத்தின் சுற்று அளவிலும் அனைத்தும் பெரிதாகவும், பிரம்மாண்டமாகவும் உள்ளது. பெரும்பாலும் மண்டபத்தில் உள்ள சிலைகள் நாயக்கர் காலத்தில் செதுக்கப்பட்டவை. நாயக்கர்களின் பங்கு கோவில்களுக்கு பிரம்மாண்டத்தை கொடுத்தது. அதுவரை நுணுக்கமாக, அளவில் சிறியதான இருந்த சிலைகள், நாயக்கர்கள் காலத்தில் பெரியனவாகவும், மேலும் நுணுக்கமாகவும் மாறின. மண்டப தூண்கள் பிரம்மாண்டமானது.
காந்திமதி அம்மையார் கோவிலுக்கு உள்சுற்று வளாகத்தில் இடதுப்புறமாக செல்ல வேண்டும். பிரகார சுற்று வழியில் நாயக்கர்களின் ஆளுயர உருவ சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இடது புறமாக சென்றால், பெரும் சிலைகள் கொண்ட மண்டபம் உள்ளது. இதில் குரங்கு தன் குட்டியை பிடித்துக்கொண்டிருப்பது போன்ற சிற்பம் உள்ளது. சிற்பங்களை பார்த்துக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது வசந்த மண்டபத்திற்கு செல்லும் வழி என்று வலது புறமாக போடப்பட்டிருந்தது. ஆனால் அதனை பூட்டி வைத்திருந்தனர். உள்ளே சென்று காந்திமதி அம்மையாரை தரிசனம் செய்து முடித்து விட்டு வரும் போது, அந்த மண்டப கதவு திறந்திருந்தது.
வசந்த மண்டபத்திற்கு செல்லும் வழியில் தென்னை மரங்களும் பிற மரங்களும் இருந்தன. ஒரு சிறு மண்டபத்தின் மேலே ஒரு அய்யர் தனது துவைத்த துணிகளை பிழிந்து போட்டுக்கொண்டிருந்தார். அங்கே நீச்சல் குளம் போல் ஒரு புதிய அமைப்பு இருந்தது. ஆனால் அது என்ன என்று தெரியவில்லை. அங்கு ஒருபெயர் தெரியாத பறவையினை கண்டோம். வசந்த மண்டபம் சற்று பழுதடைந்து காணப்பட்டது. அதனால் தான் அங்கு யாரையும் விடுவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தோம்.
அக்காலத்தில் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கும் இசைக் கச்சேரிகளையும், நடன நிகழ்வுகளையும் கற்பனை செய்து பார்த்தேன். பிரகார மண்டபத்தில் சிலையாக நிற்கும் நாயக்கர்களின் முன்னிலையில், சிற்பமாக நிற்கும் பெண்களின் நடனங்கள் அரங்கேறி இருக்கலாம்.
நெல்லையப்பர் கோவிலை முடித்துக் கொண்டு கிருஷ்ணாபுரத்தில் உள்ள வேங்கடசாமி கோவிலுக்கு சென்றோம். அரச மரத்தடியில் காரினை நிறுத்திவிட்டு கோவிலுக்கு உள்ளே சென்றோம். இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. முக மண்டபத்தில் வலது புறத்தில் உள்ள சிலைகள் உள்ள தூண்களில் ஒவ்வொன்றிலும் ஒரு காட்சி முழுமையாக செதுக்கப்பட்டிருக்கும். குறவன் இளவரசியை கடத்திக்கொண்டு போவதும், இளவரிசியை மீட்க பின்னால் குதிரையில் அரசன் வருவதும் என்று ஒரு தூணை சுற்றிலும் சிலைகள் உள்ளது. இது போன்று ஒரு குறத்தி இளவரசனை கடத்துவது போன்ற சிற்பமும் உள்ளது. உள் மண்டபத்தில் பீமன் இன்னொருவரோடு கதை யுத்தம் செய்யும் காட்சியும், தர்மனின் சிலையும் உள்ளது.
அங்கிருந்து திருவாலீஸ்வரசும் மற்றும் திருப்புடைமருதூர் கோவிலுக்கு செல்லலாம் என்று கிளம்பினோம். இரண்டு கோவில்களும் மாலை 4 30 மணிக்கு தான் திறக்கும் என்று சொல்லி விட்டார்கள். திருப்புடைமருதூர் நெருங்கிய உடனே, பெரிய மரங்களில் நிறைய பறவைகளின் சத்தம் எங்களை வரவேற்றது. கோவிலுக்கு எதிரிலேயே காரினை நிறுத்தி விட்டு, பறவைகளை பைனாகுலரில் பார்த்தோம். கூழைக்கடா மற்றும் மஞ்சள் மூக்கு நாரைகள் தான் அதிகமாக இருந்தன. அவைகள் மரத்தினால் கூடு கட்டி குஞ்சி பொரித்து, அந்த குஞ்சிகளையும் கண்டோம். அவை வெள்ளை நிறமாக இருந்தன.
கோவிலுக்கு அருகிலேயே இரண்டு படித்துறைகள் இருந்தன. இரண்டிலும் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் நாங்கள் ஒரு குளியலை போட்டோம். இடுப்பளவு கூட தண்ணீர் இல்லை. ஆனால் ஓடும் தண்ணீர் என்றதால் குளிப்பதற்கு நன்றாக இருந்தது. நடு ஆற்றில் மீன் கிள்ளல்களினால் அவ்வப்பொழுது துள்ளி குதித்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்தோம்.
மதியம் பிரம்மதேசத்தில் சாப்பிட்டுவிட்டு அகஸ்தியர் அருவிக்கு சென்றோம். நாங்கள் செல்லும் போது, கூட்டம் குறைய தொடங்கியது. ஆனாலும் மேலே அருவியில் குளிப்பதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் முண்டியடித்துக் கொண்டு குளித்து கொண்டிருந்தனர். பெண்களுக்கு தனியாக குளிப்பதற்கு நடுவில் ஒரு சுவர் எழுப்பி இருந்தனர். மக்கள் கத்திக்கொண்டும், ஆடிக்கொண்டும் குளித்து கொண்டிருந்தனர். சிறுவரும் பெரியவர்களும் தள்ளிக்கொண்டு குளித்துக் கொண்டிருந்தனர்.
நாங்கள் குளிக்க உள்ளே சென்றோம். உள்ளே செல்வதற்கு இரண்டு ஆள் சாப்பாடு சாப்பிடணும். கொஞ்சம் கவனமாக இல்லாமல் இருந்தால் கூட, காலினை மீதிப்பதோ அல்லது தள்ளி விட்டோ மற்றவர்கள் உள்ளே புகுந்து விடுவார்கள். அதனால் மிகவும் கவனமாக உள்ளே சென்று , திரும்பவும் வெளியே வந்து என்று மாறி மாறி ஒரு மணி நேரத்துக்கு மேலாக குளித்தோம். நீரின் சுவை தித்திப்பாக இருந்தது.
இது ஒரு கோவில் பயணம் என்பதை விட, பறவைகள் பயணம் என்றே சொல்லலாம். நெல்லையை சுற்றியுள்ள குளம், ஏரிகளில் இதுவரை நாங்கள் பார்த்திராத நிறைய பறவைகளை கண்டோம். அன்றில் என்கிற அரிவாள் மூக்கன், தாழைக்கோழி, கூழைக்கடா, பாம்புத்தாரா, மஞ்சள் மூக்கு நாரை போன்ற பறவைகளை கண்டோம். எங்கெங்கு நீர் நிலைகள் இருக்கிறதோ அங்கே காரினை நிறுத்தி, பறவைகளை பார்ப்போம்.