வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் வாழும் ஒருவருக்கும், எந்தவொரு பெரும் நிகழ்வுகளுக்கும் தன்னை முழுவதும் கொடுக்காமல் வெறும் தர்க்கங்களினால் அனைத்தையும் அறிந்து விட முயலும் ஒருவருக்கும் ஏற்படும் நட்பும், வாழ்க்கையும் சொல்வதாக இருப்பது "சோர்பா எனும் கிரேக்கன்" நூல். ஐரோப்பாவின் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டது. கதை முழுவதும் 'கிரீட்' என்னும் கிரேக்கத் தீவில் அமைந்துள்ளது.
ஒரு கடற்கரை தேநீர் விடுதியில் கதை ஆரம்பமாகிறது. தன் நண்பன் தன் தாய் நாட்டு மக்களை காக்கும் பொருட்டு தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தருணங்களையும், அப்போது அவனுக்கும் தனக்கும் ஏற்பட்ட விவாதங்களையும் நினைத்தவாறே அமர்திருக்கிறார் கதைசொல்லி. அப்போது திடீரென்று அவரிடம் ஒரு முதியவர் வந்து பேசுகிறார். தன்னையும் அவர் செல்லும் கிரீட் தீவுக்கு அழைத்து செல்லுமாறும், அங்கு நிலக்கரி சுரங்கத்தில் அவரே தலைமைப் பொறுப்பு ஏற்பதாகவும் சொல்கிறார். அது மட்டுமல்லாமல் தனக்கு நன்றாக சமைக்கவும், காய்கறி சூப் வைக்கவும் தெரியும் என்று சொல்கிறார். அவரும் சோர்பா என்ற அந்த அறுபது வயதிருக்கும் முதியவரை தன்னுடன் அழைத்து செல்கிறார்.
கப்பல் பயணத்தின் போதும், 'கிரீட்' தீவினை நெருங்கும் போதும், சோர்பா அவருடன் பேசிக்கொண்டே வருகிறார். தான் சந்தூரி இசைப்பேன் என்றும், ஆனால் அது எப்போதும் தன்னிச்சையாகவே நிகழும் என்றும் சொல்கிறார். அவர்கள் கடற்கரையில் இறங்கி கிராமத்திற்குள் நடந்து சென்று அங்கிருக்கும் ஒரு "காஃபியக - இறைச்சிக் கடை"க்குள் நுழைகிறார்கள். அங்கு அவ்வூர் மக்களிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு , நிலக்கரி சுரங்கம் அமைத்து ஊர் மக்களுக்கு வேலை அமைத்து கொடுப்பதாகவும் சொல்கிறார் கதைசொல்லி.
அவர்கள் "ஹார்டென்ஸ்" என்ற முதிய கைம்பெண்ணின் வீட்டில் கடற்கரையோரம் தங்குகிறார்கள். சோர்பாவிற்கும் கதைசொல்லிக்கும் கதை முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒருமுறை தன் தாத்தாவிடம் நடந்த உரையாடலை கதைசொல்லியிடம் சொல்கிறார் சோர்பா. ஒரு பாதாம் மரச் செடியை நடும் போது , சோர்பா "எதற்காக இதை நடுங்குறீர்கள்" என்று கேட்கிறார். அதற்கு அவர் தாத்தா "நான் சாகாமல் இருப்பதற்காக இதை நடுகிறேன், இதன் மூலம் நான் உயிர் வாழ்ந்து கொண்டே இருப்பேன்" என்று சொல்கிறார். அப்போது சோர்பா "நீங்கள் ஒரு நாளும் சாகக் கூடாது என்று வாழ்கிறீர்கள், ஆனால் நான் ஒவ்வொரு நொடியும் இறந்து விடுவேன் என்றே வாழ்கிறேன்" என்று சொல்கிறார்.
உணவின் மகத்துவம்:
மனித இருத்தலில் மிகவும் மேன்மையானதும் , அடிப்படையானதும் உணவு. உணவினை எப்போதும் சுவைத்து, அதில் தன்னை இழந்து உண்கிறார் சோர்பா. அவருக்கு இந்த நொடி தன் முன் இருக்கும் வறுத்த பன்றியின் சுவைக்கு தன்னை முழுவதும் ஒப்படைப்பார். உணவும், ஒயினும் வாழ்வின் இன்பங்கள்.
அதே சமயத்தில் நாம் உண்ணும் உணவை நாம் எவ்வாறு மாற்றிக் கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. ஒரு முறை அவர் "சிலர் உணவினை கொழுப்பாக, சிலர் நகைச்சுவையாக , சிலர் கடவுளாக மாற்றிக் கொள்கிறார்கள்" என்று சொல்கிறார். உணவினை ஆன்மாவாக்குதல். பொருண்மையிலிருந்து ஆன்மாவாக மாற்றுதல். நாம் உணவினை தினமும் எவ்வாறாக மாற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே அவனுடைய வாழ்க்கையும் அக விடுதலையும் முடிவாகிறது என்றே எண்ணுகிறேன். கதைசொல்லி கடவுளாக மாற்ற நினைக்கிறார். சோர்பாவோ நகைச்சுவையாக மாற்ற முற்படுகிறார்.
சோர்பா எப்போதும் அந்நொடியில் வாழ்வதால் வாழ்வின் நடைமுறை சாத்தியங்களோடுதான் அனைத்தையும் அணுகுவார். கதைசொல்லி தன் பணியாளர்களிடம் அன்பு பாராட்டும் போது, அதை சோர்பா கடுமையாக எதிர்த்தார். "நீங்கள் அன்பு காட்டினால் அவர்கள் தங்கள் வேலையை உங்கள் மீது கட்டிவிடுவார்கள். இவர்களிடம் ஒரு எல்லையோடு தான் பழக வேண்டும்" என்று கூறுகிறார். இது எப்போதும் ஒரு முரணாகவே மணித வரலாற்றில் அமைந்துள்ளது. நடைமுறையில் வாழ்பவர் புதிய கொள்கைகளில் எப்போதும் ஒரு சந்தேகப் பார்வையுடன் தான் பார்ப்பர். ஆனால் உண்மையில் கொள்கையில் வாழ்பவனே, வரலாற்றில் மக்களுக்கு விடுதலைப் படிகளை அளித்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன். அது அவ்வரலாறு நடக்கும் போது தெரிவதில்லை.
சோர்பா கதையின் பல்வேறு பகுதிகளில் பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பது, பெண்களை ஒரு காம பொருளாகவே பார்க்கிறார். அது அவர்களின் மேல் உள்ள கருணையால் அவ்வாறு நடந்து கொள்வதாகச் சொல்கிறார். அவருக்கு பெண்கள் சுய விடுதலையை விரும்பாதவர்கள். அவர்கள் ஆண் என்னும் ஊன்றுகோல் கொண்டே அவர்கள் இங்கு வாழ்கிறார்கள். அவர்களின் ஆசைகளையும் இச்சைகளையும் தீர்த்து வைப்பதே ஆணின் கடமை.
விடுதலை என்றால் என்ன?
மனித விடுதலை குறித்து வரும் விவாதங்கள் ஒவ்வொன்றும் ஒரு திறப்பை அளிக்கின்றன.
ஒரு சிலையில் கடவுளின் கையில் நடனமாடும் இரு காதலர்களைப் பற்றி பேசுகையில்,ஒரு பெண் "அவ்விரு காதலர்களும் அக்கையிலிருந்து தப்பிச் சென்றாலே உன்னதமான விடுதலை" என்று சொன்னாள். அதற்கு கதைசொல்லி "ஒருவேளை அந்த கடவுளின் கைக்கு கீழ்ப்படிதலே விடுதலை என்று சிலருக்கு இருக்கலாம்" என்றார். ஏதோ ஒரு விடுதலையின் தீரா வட்டத்திற்குள் சிக்கித் தவிக்கிறது மனம். ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை அடைந்து சென்று கொண்டே இருக்கும் மனம், உண்மையில் விடுதலை தான் அடைகிறதா, இல்லை ஒரு சொல்லில் இருந்து இன்னொரு சொல்லுக்கு தாவிக் கொண்டே செல்கிறதா? அனைத்தையும் தாவித்தாவி இறுதியில் எஞ்சுவது தான் என்ன?
ஒரு முறை சோர்பா "கிரீட்" கிளர்ச்சியில் பங்கி கொண்டு பல உயிர்களை கொள்கிறார். அப்போது அங்கு வந்த அரசர், "கிரீட்" மக்களுக்கு விடுதலை கொடுக்கிறார். அப்போது அங்கு இருந்த ஒருவன் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் கிழித்து "விடுதலை, விடுதலை" என்று கத்துகிறான். அவருக்கு இதுவே விடுதலை. ஆனால் 'கொலைகள்' விடுதலை அழித்ததால் அதற்கு உண்மையான பொருள் தான் என்ன?
சோர்பா தன முதலாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு கம்பி, வடம் போன்ற பொருட்களை வாங்க 'காண்டியாகா' செல்கிறார். அங்கு ஒரு பெண் இவரை தாத்தா என்று சொல்லி விடுகிறாள். அதனைக் கேட்டு மனம் வெம்பி விடுகிறார். அவளைக் கவர இவர் பணம் நிறைய செலவு செய்கிறார். அவளும் இவரின் பின்னால் வந்து விடுகிறாள். ஆனால் உண்மையில் அவள் இவருடன் இருக்கும் போதும், அவருக்கு அவள் "தாத்தா" என்று அழைத்ததையும், அவர்கள் இருவரும் தெருக்களில் நடந்து செல்லும் போதும், ஒருவர் இவரை பெரியவர் என்று சொன்னதற்கும் சோர்பாவிற்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. உண்மையில் இவர் தன் முதுமையைக் கண்டு அஞ்சுகிறார். முதுமை, மனிதன் வென்றெடுக்க முடியாத ஒரே பொருள்.
கதைசொல்லி, அனோனஸ்தி மாமாவிடம் (வாழ்வில் நிம்மதியாக பெயரப் பிள்ளைகள் எடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்) பேசிக்கொண்டிருக்கும் போது, "ஒவ்வொரு மனிதனும் தளைகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் மனதிடம் அதைக் கேட்டால் சொல்லும் என்கிறார்".
இசை, நடனம்:
சோர்பா சந்தூரி என்னும் இசைக்கருவியை வாசிக்கத் தெரிந்தவர். அவர் அதை ஒரு வனவிலங்கு என்று தான் எப்போதும் சொல்வார். அது நாம் நினைக்கும் போதெல்லாம் இசையை தராது, அது நினைத்தாள் மட்டும் தான் அதிலிருந்து இசை உருவாகும். ஒரு வகையில், அந்த சந்தூரியே சோர்பாவின் ஒரு உருவகம் என்றே நினைக்கிறேன். அதைப் போலவே அவரும் ஒரு வனத்தில் வாழும் ஆதி மனிதன் போலத்தான் எல்லா இடத்திலும் நடந்து கொள்கிறார். ஆதி மனிதனின் கண் கொண்டே அனைத்தையும் பார்க்கிறார்.
சோர்பா நடனத்தால் தான் சொல்ல வந்ததை சொல்லும் திறன் கொண்டவர். ஒரு போரின் போது , தன் சக வீரனும் (அவனின் மொழி இவருக்குத் தெரியாது) , சோர்பாவும் பேசிக்கொண்டிருக்கையில், அவன் பேசுவது இவருக்குப் புரியாமல் போகவே, புரியாதவற்றை அவனிடம் நடனம் ஆடி காட்டச் சொல்கிறார். அவனும் அவர்கள் செய்த போர் சாகசங்களை (மக்களை தீயிட்டு கொளுத்துதல், பெண்களை வன்புணர்வு கொள்ளல், போன்றவற்றை ) நடனமிட்டு காட்டுகிறான். அவர் நடனம் மூலமாக உலகின் அத்தனை உணர்வுகளையும் சொல்ல முடியும் என்று நம்புகிறார்.
அவர் கதைசொல்லியோடு இருக்கும்போது ஒருமுறை தன்னிலை மறந்து உச்ச நடனம் ஆடுகிறார். அவர் சன்னதம் வந்தவர் போல ஆடுவதைக் கண்டு அவர் அஞ்சுகிறார். ஆனால் சோர்பாவோ தன்னை மறந்து எம்பி குதித்து பரவச நடனம் ஆடுகிறார். அந்த எம்புதலில் அவர் இவ்வுலகைகே கடந்து, காற்று வெளியினைத் தாண்டி எங்கோ செல்ல விருப்பப்படுபவர் போன்று நடனத்தில் மிதக்கிறார். அப்போது கதைசொல்லி தான் ஒருபோதும் இவ்வாறு தன்னை மறந்து ஒரு நடனம் ஆட முடியாது என்று எண்ணுகிறார்.
சோர்பாவின் நடனம் எனக்கு பல்வேறு எண்ணங்களை உருவாக்கியது. உண்மையில் கலை தர்க்கதினை உடைக்கும்போது தான் அது கலையாகிறது. அது நடக்கும் தருணத்தில் தர்க்கம் இல்லை. உண்மையில் கலை தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்கிறது.அதற்கு மனிதன் ஒரு கருவி மட்டுமே. அது கலையாக உணர்ந்தாலும், உணராவிட்டாலும் அது நிகழ்ந்த கணம் மீளப்போவதில்லை. நாம் பிற்பாடு பார்ப்பதெல்லாம் அதன் பிம்பத்தை மட்டும் தானோ?
நம்பிக்கை என்னும் கலங்கரை விளக்கம்:
சோர்பா காண்டியாகாவிற்கு சென்ற பொழுது, 'ஹார்டென்ஸ்' அம்மையார் கதைசொல்லியிடம் அவரைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர், "சோர்பா உங்களைப்பற்றி நலம் விசாரித்ததாகவும் , அவர் என்றும் உங்கள் நினைவாகவே இருப்பதாகவும், கடிதத்தில் காதல் வார்த்தைகள் எழுதி இருப்பதாகவும்" அவளிடம் சொல்கிறார். அதற்கு 'ஹார்டென்ஸ்' அம்மையார் "வேறெதுவும் இல்லையா" என்று கேட்கிறார். தன் இளமைப் பருவத்தில் பல நாட்டு சேனாதிபதிகளின் ஆசை ராணியாக இருந்த அவளுக்கு "ஆசை வார்த்தைக்கும், நடைமுறைக்கும்" உள்ள வேறுபாடு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால், கதைசொல்லி, "சோர்பா உங்களை மனம் செய்து கொள்ள மாலைகள் வாங்கிவருவதாக எழுதியுள்ளார்" என்று சொல்கிறார். ராஜ்யங்களைக் கட்டி போட்ட பேரழகியானாலும் வயது முதிரும்போது, ஒரு தோல் சாய துணை தேவைப்படுகிறது.
ஒரு முறை சோர்பா தன் முதலாளியிடம், "இத்தீவிற்கு நீங்கள் வந்த உண்மையான காரணம் நிலக்கரி தொழில் இல்லை" என்று சொல்கிறார். கதைசொல்லியும் அதை ஒற்றுக்கொள்கிறார். நண்பனின் பிரிவால், தான் இவ்வுலகை ரத்தமும் சதையுமுமாக வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற முடிவோடு தான் வந்ததாக சொல்கிறார். அவர் ஆழ்மனம் நம்பியது போல, சோர்பா அவருக்கு நெருங்கிய நண்பராகவும் அவரின் வாழ்வில், நம்பிக்கையில் மாற்றம் ஏற்படுத்தும் ஒருவராகவும் இருக்கிறார்.
தத்துவ விவாதங்கள்:
ஒவ்வொரு முறையும் சோர்பா செயலால் ஏதாவதொரு உச்சத்தை நிகழ்த்தும் போதும், கதைசொல்லி அவரை வியந்து பார்க்கிறார். அவரைப் பொறுத்தவரை, சோர்பாவினுள் இன்னும் அந்த ஆதி மனிதனின் எச்சம் , இயற்கையோடு உறவாடும் மனம் உள்ளது.
ஒரு முறை சுரங்கத்தினுள் ஏற்படும் ஒரு பேராபத்தில் இருந்து முன்னமே அதை உணர்ந்து எல்லோரையும் காப்பாற்றுகிறார் சோர்பா. யாராலும் அறிய முடியாத சிறு மண் அசைவுகளையும் கூர்ந்து நோக்கும் திறன் கொண்டவர் அவர். அவர் மண் மீது மண்ணாக வாழ்வதால் தான் அவறால் அதை செய்ய முடிந்தது என்றே நினைக்கிறேன். அனைவரும் அடிப்படையில் மண் தானே. மண்ணின் வெவ்வேறு உருவங்கள் தான் நாம் அனைவரும். சோர்பாவிடம் இன்னும் அந்த ஆதித்துகள் உயிருடன் உள்ளது.
கதைசொல்லி அறிவைக் கொண்டு உலகத்தைப் பார்ப்பதால் தான், அவர் சோர்பாவைப் போல் இருக்க முடியவில்லை. சோர்பா தன் ஆன்மாவை கொண்டும், அனுபவத்தைக் கொண்டும் உலகத்தைப் பார்க்கிறார். அவருக்கு ஒவ்வொரு செயலும் பெருவியப்பே. ஒவ்வொரு காட்சியும் பேரின்பம். ஒரு முறை நடந்து செல்கையில் ஒரு கல் உருண்டோடுகிறது. அதைக் கண்ட சோர்பா, "பள்ளத்தில் போகும்போது மட்டும் கல்லிற்கு உயிர் வந்து விடுகிறது" என்கிறார். இதுபோல பல்வேறு தருணங்களில் இயல்பாக நடக்கும் ஒரு சின்ன அசைவையும் பெரு வியப்பாக காண்கிறார்.
கதையின் பல்வேறு இடங்களில் "மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்? மனித வாழ்வின் பொருள் என்ன?" போன்ற கேள்விகள் வந்து கொண்டே உள்ளன. சோர்பாவின் கேள்விகளுக்கு கதைசொல்லியால் பலமுறை பதில் கூற முடியவில்லை. அதற்கு சோர்பா "நீங்கள் இது வரை ஒரு டன் எடை உள்ள தாள்களை விழுங்கி இருப்பீர்கள், ஆனால் எந்தக் கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை தெரியவில்லை என்றால் இந்த நூல்களினால் என்ன தான் பயன் ?" என்று கேட்கிறார் . அதற்கு கதைசொல்லி "இந்நூல்கள் விடை அறியா கேள்விகளுக்கு, விடை காண முயலும் மானுட சிடுக்குகளை கூறுகிறது" என்று பதில் சொல்கிறார். உண்மையில் நூல்களினால் எந்த ஒரு விடையும் நேரடியா அறிய முடியாது என்றே நானும் நினைக்கிறேன். அவை சொல்லும் தர்க்கங்களை, உணர்வுகளால் அனுபவங்களாக மாற்றிக் கொள்ளாத வரை அவை வெறும் சொற்களாகவே எஞ்சும் என்றே நினைக்கிறேன். அந்த அனுபவங்கள் வழியாகத்தான் ஒருவருக்கு விடை கிடைக்கும்.
கதைசொல்லி புத்தரைப் பற்றி புத்தகம் எழுதுவதும், அவரின் சொற்களால் தன்னை ஆராய்ந்து பார்பதுவமாகவே கதை முழுவதும் இருக்கிறார். மானுட உச்சத்தைத்தொட்ட "கடைசி மனிதன்" புத்தர் தான் என்றும் நினைக்கிறார். அவர் கடைசியாக வாழ்ந்து விட்டார். ஆனால் இவரோ இன்னும் ஆரம்பத்திலேயே இருக்கிறார். புத்தர் அனைத்தையும் விளக்கியது போல, கதைசொல்லிக்கு புத்தரை தன் மனதிலிருந்து விலக்கினாள் மட்டுமே அவர் அகம் விடுதலை அடையும் என்று நினைக்கிறார். அது அவர் புத்தரைப் பற்றி எழுதிய புத்தகத்தை முடித்தவுடன் மட்டுமே, அவருக்கு கிடைத்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
தனக்கும் சோர்பாவுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடாக கதைசொல்லி பார்ப்பது, "சுய உரையாடல்". சோர்பா எப்போதும் உரையாடிக்கொண்டோ கேள்விகளைக் கேட்டு கொண்டோ இருக்கிறார். ஆனால் இவர் எப்போதும் தன் அறிவினால் மட்டுமே அனைத்திற்கும் விடை காண விரும்புகிறார். சோர்பாவிற்கு அக்கேள்வியின் விடைகள்கூட அவ்வளவு முக்கியமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு போதும் அறிவினால் உலகத்தைப் பார்க்கவில்லை.
நித்திய லயம்:
இயற்கையின் நித்திய லயத்தில் எப்போதும் ஒத்திசைவோடு இருப்பவர் சோர்பா. வாழ்க்கையின் இன்பங்களில் ஆனந்தம் கொண்டு , துன்பத்தில் கண்ணீர் சிந்தி , அதை கடந்து செல்பவர் சோர்பா. ஆனால் கதைசொல்லி எந்த ஒரு செயலின் பின்னாலும் தர்க்கங்களை அடுக்கி , அந்த தர்க்கத்தின் மேல் படுத்து வாழ்பவர். தான் காதல் கொண்ட கைம்பெண் கொடூரமான முறையில் தன் கண்ணெதிரே கொலை செய்யப்படுகிறாள். அந்த சம்பவத்தினை தர்க்கப் பூர்வமாக ஏற்று, அதற்கு தனக்கு ஏற்றவாறு விளக்கம் கொடுத்து தன்னால் கடந்து சென்று போக முடியும் என்றே கதைசொல்லி தன்னைப்பற்றி நினைக்கிறார்.
ஒரு முறை கூண்டைவிட்டு வெளியே வந்து தன் சிறு சிறகுகளை அடிக்கத்துடிக்கும் பட்டாம்பூச்சியை பார்க்கிறார் கதைசொல்லி. அது தன் கூட்டை விட்டு கஷ்டப்பட்டு வெளிவருவதை பார்த்ததால், அதற்கு உதவி செய்யும் பொருட்டு அந்த கூட்டினை கொஞ்சம் கையால் இழுத்து விடுகிறார். இதனால் அந்தப் புழு சட்டென்று வெளியே வந்ததால் அதன் சிறகுகளில் போதிய வெப்பம் சக்தியும் இல்லாததால், அது பறக்கத் துடித்து பரிதாபமாக இறந்துவிடுகிறது. அவர் எப்போதும் தன் அறிவால் உலகத்தைப் பார்ப்பதால் அவரால் இயற்கையின் நடைமுறைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.
கதைசொல்லி தனிமையில் காட்டில் ஒரு இடையனை காண்கிறார். இடையன் கேட்ட ஒரு சிகரெட் இல்லாததால் ,அவனுக்கு பணம் தருகிறார். அதற்கு அவன் அதனை மறுத்து விடுகிறான். அவர் ஆன்மாவினைபி பற்றி சிந்தித்தவாறே வஞ்சினக் கன்னி மரியாள் கோவிலுக்கு செல்கிறார். தன் கால்கள் தன் ஆழ்மனம் தேவை செய்ய அனிச்சையாக கோவிலை நோக்கி செல்கிறது.
அற்புதங்களில் மனம்:
வனத்தில் கம்பி வழித்தடம் அமைத்து மரத்தொழில் செய்வதற்காக மதகுருவிடம் கையொப்பம் வாங்குவதற்காக மடாலயம் செல்கிறார்கள் சோர்பாவும், கதைசொல்லியும். அப்பொழுது அங்கு ஸஹாரியா என்றொரு பாதிரி வழித்துணையாக வருகிறார். அங்கு அவர்கள் பாதிரிமார்களின் ஊழலையும், அயோக்கியத்தனத்தையும் காண்கிறார்கள். அவர்கள் அங்கிருக்கும் போது, ஒரு கொலை நடக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு சோர்பா அந்த வனத்தினை பாதி விலைக்கு வாங்குகிறார். தன் முதலாளியின் பணத்தை காண்டியாகவில் செலவு செய்வதை ஈடுகட்ட இதை அவர் செய்ததாக கூறுகிறார். வஞ்சினக் கன்னி மரியாள் பெயரை வைத்து இதை அவர் செய்து முடிக்கிறார்.
ஸஹாரியா மடாலயத்தை தீயிட்டு கொழுத்திவிட்டு கீழிறங்கி கடற்கரையோரம் வருகிறார். அவரைக் கண்டவுடன் சோர்பா அங்கே என்ன நடந்தது என்று புரிந்து கொள்கிறார். அவரை அழைத்து ஊன் உணவையும், ஒயினையும் கொடுக்கிறார், ஆனால் அவர் வேண்டாம் என்கிறார். அதற்கு சோர்பா "உனக்கு இல்லை என்றாலும், உன்னுள் இருக்கும் சாத்தனான ஜோசேப்புக்கு சாப்பிடு" என்று சொல்கிறார். ஆனால் அதற்கு அவர் "மடாலயத்தை எரிக்கும் போதே , ஜோசேப்பும் சேர்ந்து எரிந்து விட்டான்" என்று பதில் கூறுகிறார்.
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு புள்ளியில் இவை அனைத்தும் அர்த்தமற்றவை என்று உணர்கிறான் என்றே நினைக்கிறன். ஆனாலும் அதற்கு மேல் செல்ல பெரும்பான்மை மக்களால் முடிவதில்லை. ஆதலால் அவன் என்றுமே அற்புதங்களை எதிர்பார்க்கிறான். தன் நம்பிக்கையை உடைக்கும் அற்புதத்தை. அதுவே அவனின் மீட்சி. இவ்வுலகில் அவன் ஊன்றி நிற்பதற்கு அது தேவைப்படுகிறது. கடலருகே இறந்த ஸஹாரியாவை சோர்பா மடாலயத்திற்கு தூக்கிச் சென்று "வஞ்சினங் கன்னி மரியாளின் ஈட்டிக்கு" கீழே இட்டுச் செல்கிறார். துறவிகள் இதைக் கண்டதும் அற்புதமாக நினைத்து மரியாளை மன்றாடுகின்றனர்.
நான் வாசித்ததிலேயே (அணைத்து புத்தகத்தையும் சேர்த்து) கண்ணில் நீர் வர, வயிறு வழிக்கச் சிரித்த பாகம் "கம்பிவடத் தடம்" திறந்து, மரங்களை அதன் வழியே மலை மீதிருந்து இறக்குதல். பாதிரிகளும், ஊர் மக்களும், தொழிலாளர்களும் பார்க்க அது அரங்கேறுகிறது. அன்னை மரியாளின் அற்புதன் தான் இந்தக் கம்பித்தடம் என்று ஆரம்பித்து சோதனை ஓட்டங்களை செய்கிறார்கள். பாதிரிமார்கள் அருள, சோர்பா கையசைக்க ஒவ்வொரு முறையும் மரம் கம்பிதத்தில் வர மறுக்கிறது. சோர்பா , தன் முதலாளிக்கு ஒட்டு மொத்தமாக அனைத்தையும் ஒரு காலைப்பொழுதிலே நட்டம் செய்துவிடுகிறார். பின்னர் இவர்கள் மட்டும் அதனை நினைத்து நினைத்து தனிமையில் வெடித்துச் சிரிக்கின்றனர்.
விடுதலை என்பது இன்றிமையாதவற்றின் தோல்வியிலிருந்து உருவாகிறது என்று உணர்கிறார் கதைசொல்லி. அனைத்தும் கிடைக்கப்பெற்றாலும் நாம் சுதந்திரமானவர்களா என்ற கேள்வி எப்போதும் உள்ளது. ஒரு தோல்வியில் நாம் நம் காலடி நிலத்தை விட்டு மேல செல்கிறோம். ஏனென்றால் அந்த தோல்வியை நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம் கைக்கு அப்பாற்பட்டது. அங்கு நம் கால்களை தூக்கி விடுதலையானவர்களாக உணர்கிறோம் என்றே நினைக்கிறன்.
தன் நண்பனை விட்டு கதைசொல்லி பிரியும் பொது "ஒருவருக்கு ஆபத்து வருமாயின் இன்னொருவர் அதனை குறிப்பால் உணர்த்தும் பொருட்டு சிந்திக்க வேண்டும்" என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் இருவருக்குமே அதில் துளியும் நம்பிக்கை இல்லை. ஒரு நாள் ஸுரிச்சில் கதைசொல்லி இருக்கும்போது , ஒரு தீக்கனா காண்கிறார். அதன் பிறகு சிலநாட்கள் கழித்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அதைப் பிரித்து பார்க்காமலே அதில் உள்ளது என்ன என்று அவருக்குத் தெரிகிறது.
மனிதனின் உச்ச செயலாக இருப்பது "களங்கமற்ற வியப்பு". அது இருப்பதனால் தான் சோர்பா எப்போதும் மகிழ்வாக உள்ளார். அவர் எதைப் பார்த்தாலும் அதில் உள்ள வியப்பினை ஒரு போதும் விடுவதில்லை.
சோர்பா தன் முதலாளியால் ஒரு போதும் விடுதலை அடைய முடியாது என்றே சொல்வார். விடுதலைக்கு தேவை மடமை. அது அவரிடம் கொஞ்சம் கூட இல்லை என்று சொல்வார். ஆனால் அது சோர்பாவிற்கு செர்ரி போல, கதைசொல்லிக்கு மசியும், தாள்களும் எழுத்தும். அவர் கண்டடைந்தது அதுவே. "ஒரு வாசிக்கப்படாத இறை இசைக்கருவி எப்படி பக்தியை உருவாக்காமல் வெறும் கலையை உருவாக்குமோ அதைப்போல என் இறை உணர்வுகள் அனைத்தும் கலையாக எழுத்தாக உருவாகியுள்ளது". இதுவே அவர் அவரையே கண்டடைந்த நேரம் என்று நினைக்கிறேன்.
இறுதியில் சோர்பாவும், கதைசொல்லியும் பிரியும் நேரம் வருகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்த வாழ்க்கை இன்பமயமாதக இருந்தது. சோர்பா அதன் பிறகு வேறு வேறு நாட்டில் வேலை செய்கிறார். கதைசொல்லிக்கு கடிதமும் அவ்வப்போது எழுதுகிறார்.
இறுதியில் சோர்பாவும் ஒரு நாள் இவ்வுலகை விட்டு மறைகிறார். கதைசொல்லிக்கு அப்பொழுதும் ஒரு கடிதம் வருகிறது. சோர்பாவின் இளம் மனைவி அவரது சந்தூரியை எடுத்து செல்லும்படி அதில் எழுதி இருந்தது.
பல வாசிப்புகளுக்கு உரிய புத்தகம் இது. ஒரு வாசிப்பில் நாம் இதில் கொஞ்சம் தான் பருக முடியும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு கல் புரண்டோடும் போதும் சோர்பா நம் கண் முன்னாள் மின்னல் கீற்றாக வந்து செல்வார். வாழ்வின் பல்வேறு தருணத்தில் ஆழ்மனதில் இருந்து தானாக சோர்பா வெளிப்படுவார். ஒவ்வொரு அனுபவங்களும் ஒரு தனித்துவமான மனித அடிப்படையை நோக்கி கேள்வியாகவும், சில சமயம் பதிலாகவும் ,சில சமயம் மனித மனங்களின் முரணாகவும் வெளிப்படுகிறது. மீள் வாசிப்பின் ஊடே மனதில் விரிந்து செல்லக்கூடிய புத்தகம் இது.