திரு. நக்கீரன் அவர்களின் "காடோடி" நாவலை வாசித்தேன். காடு சார்ந்த உணர்வும், அறிவும் ஒரு காடோடியிடமிருந்து ஒரு காடுவெட்டி உணர்கிறான். காட்டில் உள்ள கோடானு கோடி உயிர்களில் ஒருவனாக தன்னை உணரும் போதே அவன் இயற்கையை அறிய தொடங்குகிறான். கடலின் துளி தானும் ஒரு கடலே என்று உணர்வது போல. தானும் இயற்கையின் ஒரு அங்கமே என்று உணரும் நிலை.
காடோடி வாசித்து முடித்ததும் ஒரு காட்டுக்குள் சென்று வாழ்ந்து வந்த அனுபவம். காட்டின் அத்தனை உணர்வுகளையும் உணர்ந்து, அறிந்து கிடைக்கும் ஒரு உச்ச நிலை. இதில் வரும் கதை சொல்லியின் வழியாக நம்மை கினபத்தாங்கன் நதிக்கும், அதைச் சுற்றியுள்ள மழைக்காடுகளுக்கும் அழைத்துச் செல்கிறார். காட்டை அழித்து கட்டையாக்கி வணிகம் செய்யும் நிறுவனத்தின் ஊழியர் நம் கதைசொல்லி என்பது நகைமுரண்.
கதை சொல்லியின் கண்கள் வழியாக நாம் காட்டைக் காண்கிறோம். இன்றளவில் நாம் காடு/மலை பற்றி நினைப்பதெல்லாம் ஒரு நுகர்வு சார்ந்தே. ஒரு அழகான மலையயையோ நீர் வீழிச்சியையோ கண்டால், நாம் அதை ரசிக்கிறோம். அந்த இயற்கை ரசனைக்கு அப்பாற்பட்டு, அதற்கும் ஒரு உயிர் உண்டென்றும், உணர்வுண்டென்றும் அதனுடன் நாம் உரையாட முடியும் என்றும் , அதனுடன் நாம் கை கோர்த்து சுற்றித் திரிய முடியும் என்றும் உணர்வதே நாம் அதனை உணரும் முதல் படி.
ஒரு காடுவெட்டும் தொழிலில் உள்ள அத்தனை நுண் தகவல்களையும் சொல்லும் வேலையில் அதில் ஈடுபட்ட அந்த மக்களின் பின்னணிகளையும், சூழல்களையும் விவரிக்கிறது இந்நாவல். பல்வேறு இன, மத, மொழி கொண்டவர்கள் முகாமில் நட்போடு உள்ளனர்.
கினபத்தாங்கன் நதியும், அதன் கிளை ஆறுகளும் நதி வெட்டிச் செல்லும் மழைக்காடுகளும் அக்காடுகளில் வசிக்கும் பல்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும் இந்நாவலில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகை விலங்கினை பற்றியோ , பறவை பற்றியோ கூறும்போது அதன் உடல் அமைப்புகளும், மற்றும் அதன் செயல்பாடுகளும் அது நடமாடும் அழகினையும், பறக்கும் விதத்தினையும் , நிற வேறுபாடுகளின் அழகினையும், காட்டில் அணுவணுவாய் வாழ்ந்த ஒருவரால் தான் இவ்வளவு துல்லியமாக விவரணைகள் கொடுக்க முடியும். உதாரணமாக, ஒரு இடத்தில் வௌவால்கள் இரவில் குகை விட்டுப் போகும் நேர்த்தியினை விவரிக்கும்போது , ஒவ்வொரு முறையும் ஐந்து அல்லது ஆறு வௌவால்களாக வானமே ஒரு மிகப்பெறும் வௌவால் அடுக்குகளாக மாறின என்று கூறுகிறார்.
காடு சென்ற முதல் நாளே காட்டில் ஓமரும், கதை சொல்லியும் தொலைந்து விடுகிறாரகள். அவர்கள் அவ்விரவில் மழையில் திசைகள் தொலைத்து எங்கோ ஒரு பாறை இடுக்கில் தங்கி விடுகின்றனர். ஓமருக்கும், கதை சொல்லிக்கும் அங்கிருந்தே நல்ல நட்பு உருவாகிறது. ஒரு தகப்பன் போல ஓமர் அவரைப் பார்த்துக் கொள்கிறார். காட்டில் தொலைந்து மறுநாள் தன் சக ஊழியர்களை தேடி , இறுதியில் சந்தித்த போது அவர்களிடம் இருந்த அந்த உணர்வினை, பிள்ளை அன்னையை தொலைத்துவிட்டு, மீண்டும் கண்டுபிடிக்கும் போது உருவாகும் உணர்வு.
அந்த காட்டில் மட்டும் தான் பத்து வகையான பிரைமேட்கள் இருப்பதாக அறிந்தவுடன், தான் இந்த காட்டை விட்டு போவதற்குள், எப்படியாவது அத்தனையும் பார்த்து விட ஆசைப்படுகிறார். அவர் ஒவ்வொன்றாக எதிர்பாக்காத தருணங்களில் பார்க்கிறார். காடு நினைப்பதைத்தான் நாம் காண முடியும். ஓரங் ஊத்தான், துபையா, பறக்கும் லீமர் போன்ற பல்வேறு பிரைமேட்களை அங்கு காண்கிறார். ஒவ்வொரு விலங்கும் தன் உடலமைப்பில், தான் உண்ணும் உணவில் வேறுபடுகின்றன. அதனை துல்லியமாக பதிவு செய்கிறார்.
நாவலின் தொடக்கத்தில் இருந்தே நம்முடன் பயணிக்கும் ஒரு பறவை இருவாசி. காட்டின் முதல் மரம் வெட்டுப்பட்டதும், அந்த இருவாசிப் பறவைகளின் குமுறல்கள் காதில் கேட்டுக்கொண்டே உள்ளது. அவை காட்டின் முதல் நிலை காவலர்கள் போலும். அந்த இருவாசிப் பறவைகளின் கூடு கட்டும் திறன் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. அவை தன் எச்சலைக் கொண்டு கூடு கட்டி அதில் குஞ்சுகளை வைக்கிறது.
மனிதன் எங்கு வாழ்ந்தாலும் தன் பண்பாட்டுப் படிமங்களினாலே வாழ்கிறான். அவன் தன்னுள் உள்ள பயம், ஆசை, பற்று, அன்பு, குரோதம் ஆகிய அனைத்தையும் தன்னுடன் எப்போதும் சுமந்துக் கொண்டு தான் இருக்கிறான். முகாமில் பலருக்கு இரவில் யாரோ ஒருவர் தன்னை எழுப்புவதாக தோன்றுகிறது. அந்த முதியவர் தோற்றத்தில் இருப்பவர் ஒரு பேய் என்று அவர்கள் அஞ்சினர். அவர்களிடம் அதை மறுத்து நான் தனியாக தூங்குவேன் என்று பங்கலானில் தனியாக தூங்கும் போது, ஒரு சிறு படகில் ஒரு முதியவர் வந்திறங்குகிரர். நாவல் முழுதும் இம்முதியவர் தான் பல்வேறு கட்டத்தில் அங்கு இருப்பவர்களுக்கு உதவி செய்கிறார். ஒரு எளிமையான காட்டு வாழ் உயிரி தான் அந்த பிலியவ்.
நாவலில் பல்வேறு தொல்குடி மக்களைப் பற்றியும் அவர்கள் சடங்குகள், நம்பிக்கைகளையும் பேசப்படுகிறது. முருட் , தொரோஜா இனங்களை சேர்ந்தவர் தான் முறையே ஜோஸும், யோகன்னாவும். இவர்கள் இன வரலாறுகளையும், தொன்மங்களையும் பேசும் பல்வேறு கிளை கதைகள் நாவலில் உள்ளன.
ஜோஸ் கதை சொல்லிக்கு மிகவும் நெருங்கிய நண்பனாகிறான். அவன் கம்போங்கிற்கு சென்று இரு நாட்கள் தங்குகிறார். அவருக்கு விருந்தளிக்க ஒரு நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் ஜோஸ் தன் பூர்வ குடி உடை அணிந்து அற்புதமாக நடனம் ஆடுகிறான். அங்கு ரலாவும் இனிமையாகப் பாடுகிறாள். அவர்களின் தூய அன்பினால் ஆட்கொள்ளப்படுகிறார். ரலாவுக்கும் அவருக்கும் காதல் மலர்கிறது. அவள் பாடும் இன்னிசையை துளி துளியாக தன்னுள் ஏற்றுகிறார். அவள் மொழி வேறு, அவர் மொழி வேறு.
ஜோஸ் ஒரு முறை, தான் ஒரு இன்னிசையை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி கட்டையின், மேல் சாய்ந்து கொண்டிருந்தான். எந்த ஒரு கருவியும் இல்லாமல் எப்படி இசையை கேட்க முடியும் என்று அவர் கேட்க, அவன் அதற்கு 'ஒவ்வொரு இலையும் காற்றில் மோதும் சத்தமே ஒரு பண்ணிசை, ஒவ்வொரு இலையும் வெவ்வேறு இசையினை உருவாக்குகிறது. மெலிந்த, தட்டையான, சொரசொரப்பான என்று வெவ்வேறு இலைகள் வெவ்வேறு இசையினை வாசிக்கிறது'. என்று கூறினான். இதனை கேட்டவர் , இதனை அனுபவிக்க தனக்கு ஒரு தொல்குடி மனம் இருந்தால் தான் முடியும் என்றார்.
காட்டில் நடக்கும் வேட்டையின் நியதிகளை பிலியவ் கூறுகிறார். அது அத்தியாவசிய/ஆடம்பர வேட்டைக்கும் , மற்றும் தொல்குடி/ துப்பாக்கிக்குடி வேட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறது. எந்த பருவத்தில், எந்த விலங்கை எப்படி வேட்டையாட வேண்டும் என்று விளக்குகிறார். கடமான் , பன்றிகள், தென்படாவ் என்ற காட்டுமாட்டு இனம் முதலியவை வேட்டையாடப்படுகின்றன. அதில் தென்படாவ் வேட்டை மிகவும் சுவாரசியமாக சொல்லப்படுகிறது.
பிலியவ், தான் காட்டில் கண்ட ஒரு "மூதாய் மரம்" , தன்னுடன் பேசியதைக் கூறுகிறார். அந்த "சிலாங்கன் பத்து" மூதாய் மரத்தினை வெட்ட வேண்டாம் என்று ஓமர் முடிவெடுத்தாலும், அது வெட்டப்படுகிறது. இதனால் மனம் உடைந்து ஓமர் வேலையை விட்டுச் செல்கிறார். மனிதன் ஒரு நடமாடும் இயந்திரமாக மாறினாலும் அவனுக்குள் இருக்கும் முரண்களும், கோபங்களும் என்றோ ஒரு நாள், ஒரு புள்ளியில் வெளிப்படுகிறது. அந்த வெளிப்பாட்டின் ஒரு தூண்டுகோல் தான் வெட்டப்பட்ட அந்த மூதாய் மரம். அந்த காட்டிற்கே அது தான் தொல்மரம்.அங்குள்ள அனைத்து உயிர்களும் அதன் குடிகளே. அதன் கனியில் விளைந்த காட்டின் ஆணி வேர் வெட்டப்பட்டது.
பிலியவ் ஒரு சாகச மனிதராகவே எப்போதும் இருக்கிறார். அவருக்கு அந்த காட்டில் தெரியாதது ஏதும் இல்லை என்பது போன்றே தோன்றுகிறது. அவர் எப்போது வருகிறார், எங்கு தங்குகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒவ்வொரு செயலையும் அறத்தோடு செய்கிறார். அறம் என்னும் விழுமியம் இருப்பதும் அவருக்கு தெரியாது. இறுதியாக கதை சொல்லி தான் அங்கு வந்து உழைத்த அத்தனை பணத்தையும் இழந்த பிறகு, "தான் செய்த மரம் வெட்டும் தொழிலில் கிடைத்த பாவங்கள் அனைத்தும் அந்த பணத்தோடு தொலைந்து போனது" என்று சொன்னபோது, பிலியவ் "நீ இன்னும் காட்டு மனம் அடையவில்லை" என்று கூறுகிறார்.
மனிதர்களின் அத்தனை மனக்கணக்கினையும் காடு இல்லாமல் ஆக்குகிறது. ஆனால் நகரத்தில் வாழ்ந்த ஒரு மனிதனால் திரும்பவும் ஒரு காட்டின் நியதிகளையும், கணக்குகளையும் முற்றிலும் உணரவே முடியாது. அது நம்மிடமிருந்து அறுந்து பல காலம் ஆகிறது. நாம் அதனை உணர காட்டிலேயே தவம் இருந்தால்கூட முடியாது. வெட்டப்பட்ட மரம் வேர் காணுவதில்லை. நாம் வெட்டிய-மரத்தினினுள்ள ஒட்டிய வேரையே மரம் என்றெண்ணுகிறோம். ஆனால் உண்மையான வேர் காட்டின் ஆழத்தில் கிளை பிரிந்து , கைகள் கோர்த்து பிரமாண்டமாய் உள்ளது. அது மானிடக் கண்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை. ஆனால் நாம் அதனை ஏன் காண வேண்டும். கண்டால் மட்டும் அதனை நாம் உணர்ந்து விடுவோமா என்ன? அவ்வேரினை உணர இக்காடோடி ஒரு தொடக்கம்.