Sunday, 29 May 2022

வெள்ளை யானை

தங்களின் "வெள்ளை யானை" நாவலை வாசித்தேன். 

நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருக்கும் மக்களின் முதல் உரிமை போராட்டமும், இந்தியாவில் நடந்த முதல் தொழில் வேலை நிறுத்தமும் சொல்லும் நாவல். 1870-களில் நடக்கும் சம்பவங்களாக நாவல் செல்கிறது. அப்பொழுது ஆங்கிலேயர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்களால் கோடிக்கணக்கான மக்கள் பசியால் இறந்துள்ளனர். அதன் பின்னணியில், இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களாக ஆயிரம் ஆண்டுகளாக இருந்தவர்களின் ஒரு உரிமைப்போராட்டத்தையும், ஏய்டன் என்னும் ஒரு ஐரிஷ் கேப்டனின்  (சென்னை மாகாணத்தில் கடற்கரை பகுதிக்கு கேப்டன்) உளப் போராட்டத்தின் வழியாக ஆங்கிலேயர்களின் அறமீறல்களையும், இங்கு இருந்த மேல்சாதி மக்களின் கொடுமைகளையும் சொல்லும் நாவல். 

உலகத்தின் ஆண்டைக்கும், உள்ளூர் ஆண்டைக்கும் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதில் யார் மேலானவர்கள் என்னும் போட்டியே இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்களால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பசியால் இறந்துள்ளனர்.  இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த சமூக மக்கள். இவற்றுக்கு எந்த ஒரு பொறுப்பும் ஏற்காமல் மாறாக இவர்களையே பயன்படுத்திக் கொண்டு உலகம் வியக்கும் பல்வேறு கட்டிடங்களையும் கட்டியுள்ளனர் ஆங்கிலேயர்கள்.

'ஐஸ் ஹவுஸ்' என்று சென்னையில் இருக்கும் தொழிற்சாலையில் அமெரிக்காவில் இருந்து பனிமலைகள் கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டு, அதை உடைத்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த பனிக்கட்டிகளை பெரும்பாலும் வெள்ளையர்கள் மது குடிக்கும் போது பயன்படுத்துவர். அந்த தொழிற்சாலையில் கூலிகளாக தாழ்த்தப்பட்ட மக்களே உழைத்தனர். அவர்களை கொடுமைப்படுத்தி வேலை வாங்குவதற்காக மேல்சாதிகளை  சேர்ந்த கங்காணிகள் இருந்தனர். ஏய்டன், ஒரு கங்காணி இருவரை சவுக்கால் அடிப்பதை பார்க்கிறான். தன் கால்கள் ஐஸ் ஹவுசில் வேலை செய்து செயலிழந்து விட்டதனை அவன் சொல்லியும், கீழே விழுந்த அவனை அந்த கங்காணி தூக்க மறுக்கிறான். அது ஏய்டனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. தான் என்ன தான் ஒரு கேப்டனாக இருந்தாலும், இவர்களை ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனை தொட வைக்க முடியாது. அதற்காக இவர்கள் செத்தாலும் கூட சாவார்கள் ஆனால் அதைச் செய்ய மாட்டார்கள். 

ஐஸ் ஹவுஸில் மக்கள் வெறும் கைகளால் வேலை செய்கிறரர்கள். அதனால் அவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. அவர்கள் ஒரு புழுக்களாகவே நடத்தப்படுகிறார்கள். நாட்டில் இருக்கும் பஞ்ச நிலையை பயன்படுத்திக் கொண்டு, முதலாளிகளும் மிகவும் குறைந்த கூலியியையே கொடுத்தனர். பனி மலை திடீர் என்று உருகி பக்கத்தில் உள்ள அனைவரையும் நசுக்கும். அதில் உயிர் பிழைத்தால் அதிர்ஷ்டம். அது எப்போது கால்கள் கொண்டு மக்களை கொல்லும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு வகையில் இது அந்த மக்களின் ஆண்டையின் மனநிலையும் கூட. ஒவ்வொரு பனி மலையும் ஒரு வெள்ளை யானை. அது உருகி கால்கள் கொண்டு, எதிரில் இருக்கும் அனைவரையும் நசுக்கிவிடும்.  

சிப்பாய்க்கழகத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் கற்றுக்கொண்ட பாடம், இந்தியாவின் சாதி மத அமைப்புகளில் கை வைக்க கூடாதென்று. ஏனெனில் அதை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. மற்றும் இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தினாலும் அவர்களின் வழியாக இங்குள்ள மேல் சமூகத்தினர் தான் ஆட்சி செலுத்துகின்றனர். அவர்கள் வழியாகவே இங்கு ஆட்சி நடத்த முடியும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து உள்ளது. கேப்டன் ஏய்டனின் குதிரை வண்டியை ஒரு தீண்டத்தகாதவன் ஒட்டியதனால், அதனை அவன் வண்டி ஓட்டி (மேல் சமூகத்தினை சேர்ந்தவன்) முதலில் கழுவிவிட்டு ஓட்டுகிறான். ஏய்டன் அவன் ஹவில்தார் மற்றும் அவன் படைப்பிரிவில் உள்ள அனைவரும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

நாவலில்  ஏய்டனுக்கும் காத்தவராயனுக்கும் நடக்கும் உரையாடல்கள் மிக முக்கியமானவை.  காத்தவராயன் அடிமை சமூகத்தில் நன்கு படித்த ஒருவன். 'வெள்ளையர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்களால் கோடிக்கணக்கில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள், அப்படி இருந்தும் ஏன் அவர்களை நீ நம்புகிறாய்?' என்ற ஏய்டனின் கேள்விக்கு அவன் கூறும் பதில், இந்தியாவின் ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டியது. ஒரு மனிதன் அடிமையாக பிறப்பதில்லை, அவன் நூற்றாண்டுகளாக அடிமையாக இருந்து, அவன் அடிமை என்பதற்கு மேல் வேறெதுவும் யோசிப்பதில்லை. அவன் அடிமை என்று அவனிடம் சொல்ல, ஒரு வெளியாள் அவனுக்கு தேவை படுகிறது. அது ஆங்கிலேயர்களின் மொழியும், கல்வியுமே.

வெள்ளையர்கள் இவர்களை மீட்க அவர்களை மதம் மாற்றுகின்றனர். மதம் மாறினாலும் அவர்களின் சாதி, அவர்களோடு தான் வந்துகொண்டிருக்கிறது. வெள்ளைய மதவாதிகள்  இவர்களை சுயநலத்திற்காக மதம் மாற்றுகின்றனர். வெள்ளைய அரசியல்வாதிகள் இவர்களின் சோற்றில் கால் வைத்து பசியால் சாகவைக்கின்றனர். இந்திய மேல் சமூகத்தினர் இவர்களை புழுக்கள் போல நசுக்குகின்றனர்.

ஏய்டன் ஐயர்லாந்தை சேர்ந்தவன். அவன் இங்கிலாந்துக்காக, தன் நாட்டை விட்டு வேறு ஒரு வெப்பமண்டல  நாட்டில் ஒரு கேப்டனாக பணியாற்றி வருகிறான். ஆங்கிலேய நிர்வாகத்தில் அவன் ஒரு கண்ணி மட்டுமே என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனால் வார்த்து எடுக்கப்பட்ட ஒரு நிர்வாகி. அதன் அனைத்து பலன்களும், பலவீனங்களும் அவனுக்கு தெரியும். ஒரு வேலை ஆங்கிலேயர் தங்களுடைய போதாமைகளை நன்கு  தெரிந்து கொண்டு அதனை கையாள பழகிக்கொண்டதனால் தான் அவர்கள் கண்டங்களை ஆள முடிந்தது. 

இங்கு நடக்கும் எந்த ஒரு கொடுமையையும் ஆங்கிலேயே அரசால் தர்க்கபூர்வமாக விளக்கவும், நியாயப்படுத்தவும் முடியும். இந்த கொடுமைகளின் மேல் தன் தர்க்கங்களை ஏற்றி, அதை உலகம் பார்த்து வியக்கும்  பெரு கட்டிங்களாகவும், கால்வாய்களாகவும் மாற்ற முடியும். மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்க, தானியங்களை தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருப்பதை  அவர்கள் நியாயப்படுத்தும் விதம் அபாரம். பஞ்ச காலத்தில் மக்கள் கூலிகளாக தங்களை விற்று கொண்டிருப்பதை பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் தங்கள் சுயநல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். கோட்டைகள் கட்டுகிறார்கள், கால்வாய்கள் அமைக்கிறார்கள். அதில் குத்தகை தாரர்களாக மேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவே இருக்கிறார்கள். அதில் வரும் லஞ்சங்களை தங்கள் சுயநலத்துக்காகவும் , அரசியல் நோக்கங்களுக்ககவும் செயல்படுத்துகிறார்கள்.

ஐஸ் ஹவுஸில் வேலை செய்யும் இருவர் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களை கொலை செய்தது யார் என்று கேப்டன் ஏய்டனுக்கு நன்றாக தெரியும், ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஏய்டன் பல்வேறு சமயங்களில் தன்னை அந்த அடிமை மக்களோடு ஒருவராக நினைத்துக் கொள்கிறான். 

அவ்விருவரின் உடல்கள் கரை ஒதுங்குகிறது. காத்தவராயன் ஏய்டனிடம் இந்த இருவரின் உடல்களையும் ஐஸ் ஹவுஸ் கொண்டு வர கேட்கிறான். இவர்களை காண்பித்து அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிடம் தங்களின் உரிமை உணர்வை கொஞ்சமாவது வர வைக்க வேண்டும் என்று எண்ணி, அங்கு ஒரு தற்காலிக  வேலை நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறான். அதனால், அவர்கள் தொழில்முறை கொஞ்சம் மேம்படும் என்றும், ஊதியம் கொஞ்சம் ஏறும் என்றும் எண்ணுகிறான். ஆனால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எப்படி படைகள், அந்த மக்களை நசுக்கியது என்றெண்ணவே கூசுகிறது. ஏய்டன், தான் ஆணையிடாமலேயே, அங்கிருந்த ஒவ்வொரு சிப்பாயும் அவனின் அந்த நெருக்கடி நேரத்தை பயன்படுத்தி, தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கொள்கிறர்கள்.

இந்தியாவில் நடந்த முதல் வேலை நிறுத்தம் இப்படி நொறுக்கப்பட்டது. ஆனால் காத்தவராயன் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம், தாழ்த்தப்பட்டோரின் உரிமை உணர்வையும், சகமனித இருப்பையும் வெளிப்படுத்தி தங்கள் நலனுக்காக தாங்களே போராட முடியும் என்று காட்டியது. 

காத்தவராயன் இறுதியில் தன் சமயம், மதத்தை துறக்கிறான். இந்த கொலைவெறி தாக்குதலை முரஹரி ஐயங்காரின் நெற்றியில் உள்ள விஷ்ணு, அவர்கள் கொல்லப்படுவதை பரவச நிலையில் பேரானந்தத்துடன் பார்க்கிறார். அதை அவனால் சகிக்க முடியவில்லை. அதனால் அவன் பௌத்தத்திற்கு மாறுகிறான். 

 ஏய்டன் பஞ்சத்தினால் ஐஸ் ஹவுஸ் பகுதியில் குடியேறிய மக்களின் வாழ்விடங்களை பார்க்க கத்தவராயனால் கூட்டிச் செல்ல படுகிறான். அவன் அங்கு மக்கள் எலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் சடலங்களாக. நோயிலும், வறுமையிலும், பயத்திலும்  அவர்கள் ஆன்மா அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாக அவன் உணர்கிறான். அவன் திரும்பிச் செல்லும் போது, அங்கிருந்த ஒரு மூதாட்டி, அவனிடம் ஒரு நுங்கினை கொடுத்து சாப்பிடச் சொல்கிறாள். அது எப்போதும் அவன் மனதில் ஒரு ஈட்டியாகக் குத்திக் கொண்டே இருந்தது. அந்த மூதாட்டி தானே வறுமையில் செத்துக் கொண்டிருக்கும் போது, அந்த நுங்கினை ஏன் அவனுக்கு கொடுத்தாள் என்று கேட்க, அது அவளுடைய "தர்மம்" என்றாள். மக்களின் தீரா சோகத்திலும், கொடும் பசியிலும் பீறிட்டு வரும் கருணையை சொற்களால் அள்ளிவிட முடியாது என்றே நினைக்கிறேன். அந்த ஊற்றின் அடியில் தான் மனித குளம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

ஏய்டன் தன்னை மீட்க மரிசாவிடம் செல்கிறான். அவன் கவிதைகளை வாசிக்கும் ஒரே வாசகி அவள் தான். அவன் ஷெல்லியின் கவிதைகளில் வாழ்கிறான். ஷெல்லியின் எழுத்துகளில், அந்த விடுதலை உணர்வில் மிதக்கிறான். அவன் ஒரு கேப்டனாக இருந்த போதும், அவனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது அவன் ஒரு 'அதிகார அடிமை' மட்டுமே என்று. இங்கு இருக்கும் மக்களுக்கும் அவனுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஏய்டன் குற்ற உணர்வால் தற்கொலை செய்ய முயல்கிறான். 

ஏய்டன் இந்த பஞ்சத்தினை ஆவணப்படுத்தி, எப்படியாவது ஏற்றுமதியாகும் தானியங்களை நிறுத்தி, பஞ்சத்தினை போக்க முடியும் என்று நினைக்கிறான். அவன் பஞ்சத்தின் கொடுமைகளை பார்க்க சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு குதிரை வண்டியில் செல்கிறான். அந்த பஞ்ச சித்தரிப்புளை கண்ணீர் வராமல் யாராலும் வாசித்து விட முடியாது. மனிதனுக்கு வரும் கொடுமைகளின் உச்சம் பசி. பசி சாகடிப்பது முதலில் ஆன்மாவைதான். அடுத்து அவனை ஒரு புள், பூண்டாக, சருகாக அலைய  விட்டு கொள்கிறது. அவன் யாரென்று தெரியாமலே இறப்பான். பஞ்சத்தினையம், பசியையும்  உணரவே முடியாது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் அனைவரும் ஒரேகூட்டமாக , ஒருவர் இருப்பினை இன்னொருவரால் உணர முடியாது. இதனை வாசித்து முடித்தபின், இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கையிக்கு பின்னாலும் வரலாற்றில், ஆயிரமாயிரம் மக்கள் செத்தொழிந்துள்ளனர். இந்த பருக்கை , இதனை உருவாக்கிய கைகளுக்கும், வாய்க்காலுக்கும் சென்று சேரவே இல்லை. 

அன்புடன்,

பிரவின்