பித்தப்பூ
க.நா.சுப்ரமண்யம் அவர்களின் 'பித்தப்பூ' குறுநாவல் வாசித்தேன். இதுவே நான் வாசிக்கும் க.நா.சு வின் முதல் நாவல். மனநலம் பற்றிய நாவல் இது. 'பைத்தியம்' என்பதன் அர்த்தத்தை அறிய முயலும் முயற்சியே இந்நாவல்.
கதை தியாகராஜன் (எ) தியாகுவைப் பற்றியது. கதை கூறுபவர் (க.நா.சு) தியாகுவின் குடும்ப நண்பர். தியாகுவிற்கும், கதை கூறுபவருக்கும் (க.நா.சு) நடக்கும் உரையாடல்கள் ஒரு பகுதி விட்டு விட்டு வருகிறது. முதல் பகுதியில் உரையாடல் என்றல் இரண்டாம் பகுதியில் காட்சிகளும், சம்பவங்களும் , பிறகு மீண்டும் மூன்றாம் பகுதியில் உரையாடல்கள். இந்த உரையாடல்கள் பெரும்பாலும் தியாகு தன் மனவோட்டங்களையும், தன் மீது பிறர் வைத்திருக்கும் அபிப்பிராயத்தையும் உடையது.
கதையில் சில "பைத்தியம்" அடைந்தவர்களின் சூழ்நிலைகள் கூறப்பட்டுள்ளது. தன் மனைவியின் செயலால் திடீரென்று "பைத்தியம்" ஆகுபவர், தந்தி கொடுக்கும் தபால்காரன் பைத்தியம் ஆவது, போன்ற சிறு கிளை கதைகள் வருகின்றன. உண்மையில் பைத்தியம் என்பது என்ன? தியாகுவின் அப்பாவையும் அண்ணனையும் கூட சிலர் பைத்தியம் என்கிறார்கள். பொதுவான மனித செயல்களை செய்யாமல் தனியே செய்பவரை உலகம் காலம் தோறும் பைத்தியம் என்று தான் சொல்லிக்கொண்டு வருகிறது. மக்கள் தன்னால் செய்ய இயலாததை, பிறர் செய்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அதை செய்வோரை பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுகிறது. இது ஒரு வகையான "பைத்தியத்தின்" வரையறை.
அவனின் தந்தை பெரிய பணக்காரராக இருந்து தான தர்மத்தால் தன் சொத்தினை முக்கால்வாசிக்கும் மேல் இழந்தவர். அவரின் இரண்டாம் மனைவியின் கடைசி மகன் தான் தியாகு (பத்தாவது பிள்ளை). தன சிறு வயது முதலே படிப்பிலும், ஓவியத்திலும் படு சுட்டி. காலேஜ் படிக்கும் போது அவன் கலை இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டான். அதிலேயே அவன் எப்போதும் திளைத்திருந்தான்.
கதை கூறுபவரும்(க.நா.சு) ஒரு பைத்தியம் என்றே மக்கள் நினைப்பர். தன் வாழ்நாள் முழுதும் "எழுத்து" மட்டுமே நம்பி வாழ்பவரை உலகம் எப்படி சொல்லும். தியாகு தான் ஒரு பைத்தியமோ என்று எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு விபத்தில் சிக்கி அவன் காதலியயை இழந்த பின்னர் அவன் இன்னும் அந்த எண்ணத்தில் மூழ்கிவிட்டான். அவன் தொடர்ச்சியாக "தான் ஒரு பைத்தியமா இல்லையா" என்பதைப் பற்றியே தன் வாழ்நாள் முழுதும் போராடிக்கொண்டிருந்தான்.
தியாகு இறுதியில் "electric shock" மருத்துவத்தின் கொடுமையால் உயிரிழக்கிறான். தன் மனைவியும் மகளும் வெளியூரில் இருக்க, தான் மட்டும் தனியே வாழ்ந்து மனச்சோர்வுடனே இறந்தும் போனான்.
"நான் பைத்தியமா?" என்ற கேள்வி பெரும்பாலும் தன் வாழ்க்கையில் எல்லோரும் ஒருமுறையாவது சிந்தித்திருப்போம். மனச் சோர்வு உடையவர்கள், அதில் உள்ளே சென்று தங்களை இழக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக அவரவர் சுற்றமும் நட்பும் எப்போதும் இருக்க வேண்டும். இன்று "மனநோய்" பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மேலை நாடுகளில் இருந்தாலும், இன்றளவும் நம்மிடையே அதை ஒரு stereotype செய்து ஒதுக்கியே வைத்துள்ளோம். மனம் குன்றினாலும், மனம் இல்லாவிட்டாலும் அனைவரும் ஓர் உயிரினமே. அடிப்படை அன்பும், பரிவுமே நாம் கொடுக்கும் மருந்து.