ஆமென்பது... கடிதம்
அன்புள்ள ஜெ,
தங்களின் "ஆமென்பது..." சிறுகதை வாசித்தேன். முதல் வாக்கியத்திலேயே ஆவலோடு உள்நுழைந்துவிட்டேன். "எண்ணங்கள், சொற்கள், எழுத்துக்கள்". ஆம், நாம் "எண்ணுவது" கோடி என்றால் , சொல்வது லட்சம், எழுதுவது வெறும் ஆயிரம் கூட இருக்காது.
நாம் எதை எழுத வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கலாம். அதை எழுதலாம் அல்லது எழுதாமல் இருக்கலாம். அதைப்போலவே சொல்வதையும். ஆனால் நாம் எதை நினைக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியுமா. ஒரு எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் உள்ள பாலம் எது. அந்த பாலம் எதனால் ஆனது. யார் கட்டுப்படுத்துவது. எண்ணங்களுக்கு இடையில் தொடர்பு உண்டா? அல்லது அவை தனித்தனி உலகத்தில் உள்ளவையா. சில சமயம் நினைத்துபப் பார்த்தால், நாம் காலமெனும் சட்டத்தில் மட்டுமே எண்ணங்களை ஏற்றுகிறோம் என்றே தோன்றுகிறது. காலம் என்பது இல்லை என்றால் எண்ணங்களுக்கு எந்த பொருளும் இல்லை.
கே.வி.ஜயானன் அவர்கள் தன் வாழ்க்கை பூராவும் ஒரு பிடிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். நோயுற்ற பிறப்பு, தாயின் இறப்பு, தந்தையின் புறக்கணிப்பு. இவை அனைத்தும் தனக்கு கிடைக்காததால், இவற்றை புறக்கணிக்கும் அனைத்து செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக்க்கொள்கிறார். திருமணம் செய்து கொள்ளும்போது கூட, அதை வெறும் ஒப்பந்தமாகவே நினைத்தார். கதையில் அவரும் அவர் மனைவியும் பிரியும் தருணம் தான் உண்மையில் அவர் அனைத்தையும் தன் ஆழ் மனதில் இருத்திவைத்து அதற்கு நேர் எதிராகவே அனைத்து செயலையும்செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அப்படி செய்யவில்லை என்றால் அவரால் எந்த ஒரு செயலையும் செய்திருக்க முடியாது.
அவரை வாழ வைத்தது எல்லாம் "இரு ஸ்டாலின்"கள் மட்டுமே. அதுவே அவரின் வாழ்க்கையின், சிந்தனையின், எழுத்தின் ஆணிவேர். அதனால் தான் சோவியத் ருஷ்ய உடைந்தபோது தானும் உடைந்து விட்டார். அந்த பிம்பம் நேர்மறையாக இருந்தாலும் , எதிர்மறையாக இருந்தாலும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அதுவே ஒருவரின் வேர். அப்பிம்பம் உடையும் போது, தானும் உடைந்து போகிறான்.
சிறு வயது முதலே கண்ட புறக்ககணிப்பு அவரை அனைத்தின் மீதும் ஒரு பகடிப் பார்வைக் கொள்ள வைக்கிறது. அதுவும் ஒரு இருத்தலியியலே. பிடிப்பு இருந்தால் தானே ஏமாற்றம் வரும். உறவுகளின் , உணர்வுகளின் மேல் மீது எழும் அவ நம்பிக்கை, வேறு ஒரு தூணைப் (பகடி) பற்றிக்கொண்டு தன் இருப்பை காட்டிக்கொள்கிறது. அது அவருடைய தடித்த கண்ணாடியின் உணர்வு. அந்த தடிமம் தன் இருப்பை காப்பாற்றிக் கொள்ள தேவையாக உள்ளது. ஆனால் ஆழ்மனதில் வெறும் சிறகாகவே அது உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏங்கிக்கொள்கிறது. தன் மகன் கையால் செய்யும் இறுதிச் சடங்கே அவரை அந்த ஏக்கத்திலிருந்து விடுபட வைக்கும்.
அவரின் மகனுக்கு அவர் மேல் பிடிப்பில்லை. தன் தந்தைக்கு செய்யும் சடங்கில் நம்பிக்கை இல்லை. தந்தையைப் போலவே அவனும். அவன் அப்படி ஆக இவரும் ஒரு காரணம். தனக்குக் கிடைக்காத தந்தையின் பாசத்தை (தன் இருத்தலியல் காரணமாக) தன் பிள்ளைக்கு இவர் கொடுக்கவில்லை. ஆனால் அதையே அவர் அவனிடம் கடைசியில் எதிர்பார்க்கிறார். இவரின் தந்தை கடைசியில் இவரை எண்ணி ஏங்கியது போல. ஏன் இவ்வாறு சக்கரமாக புறக்கணிப்புகளும் எதிர்பார்ப்புககும் நடந்து கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் "தான்" என்னும் எண்ணதிலிருந்தே தொடங்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படி `தான்` என்ற எண்ணத்தை விடுத்து உலகியலில் ஒன்றி இருக்க முடியும் என்றும் தோன்றவில்லை. அனைத்தும் "பிரதிகிரகை" தலை அசைப்பில்தான் உள்ளதோ.
நம் செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே "நாம்" என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன் உள்ள "எண்ணங்களே" இவற்றுக்கு காரணம். அந்த எண்ணங்களை தீர்மானிப்பதும் நம் "செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே" ஆகும். இது ஒரு சக்கரம் போன்றது என்றே தோன்றுகிறது.
அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி