Friday, 4 December 2020

விஷ்ணுபுரம்

                                                               விஷ்ணுபுரம் 

    விஷ்ணுபுரம் நாவலின் முதல் வாசிப்பு முடித்து விட்டேன். வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளுக்கு தர்க ரீதியாகவும் தரிசன ரீதியாகவும் விடை காண மேற்கொண்ட பெருமுயற்சியே இந்நாவல். தமிழின் மிகச்சிறந்தப் படைப்புகளில் இந்நாவலுக்கான தனி இடம் உண்டு.

    நாவல் மூன்று பாகங்களாக பிரித்து வாசிக்க வேண்டும். வரலாற்று பின்புலமுடன் கற்பனாவாதத்தையும் சேர்த்து வாசித்தால் இந்நாவலின் மொழி பிடி வரும். வாசிக்க தொடங்கிய ஆரம்ப பக்கங்கள் சற்று கடினமாக இருந்தாலும் அதன் மொழியும் கற்பனையும் விஷ்ணுபுரத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். சம்ஸ்க்ருத வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பகுதி கதையின் போக்கிலோ அல்லது கதை மாந்தரின் சொல்லாடிலோ அர்த்தப்பட்டுவிடும். 

    நாவல் நேர் கால வரிசையில் தொகுக்கப்படவில்லை. இருந்தாலும், வாசிப்பனுபத்தில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும். இரண்டாம் பாகத்தை முதல் பாகமா வாசித்து பிறகு முதல் பாகத்தை வாசித்தால் கூட, பொருள் முறை மாறாது என்றே நினைக்கிறேன்.

    நாவல் வாசிக்க தொடங்கியதுமே நம்மை ஆட்கொள்வது விஷ்ணுபுரத்தின் பிரம்மாண்டம். அதன் பேருருவும், வானுயர்ந்த  கோபுரங்கழும், சிற்பங்கழும் வாசிக்கும் போதே நம்மை அண்ணாந்து  பார்க்கச் செய்யும். "விஷ்ணுபுரத்தின் மைய கோபுரத்தை நகரின் உள்ளிலிருந்து பார்க்க முடியாது". இதுவே நாவல் உள்ளடங்கிய  அனைத்து தத்துவ, ஞான விவாதங்களுக்கும் தொடக்கமான இடமாக நான் காண்கிறேன்.

    விஷ்ணுபுரத்தின் ஒழுங்கையும், மக்களின் சமூக கட்டமைப்பையும் விவரிக்கும்போது  அது ஒரு கனவு நகரமாக காட்சியளிக்கிறது. அதே சமயம், அந்நகரம் கொண்டிருக்கும் அழுக்கையும், பேதங்களையும் மக்கள் எண்ணாமல் அதன் சிறப்பை மட்டுமே போற்றிக் கொண்டிருந்தனர். அந்தணர்களின் ஒருவனான பிங்கலனுக்கு மட்டும் இந்நகரம் ஏதோ உவப்பாக இல்லை. மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே, முன்னோர் கூறுவனவற்றை ஏற்காமல் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கோயில் வாசலில் ஒரு பெருநோயாளியின் காலினை திருவடி என்பவன் மிதித்ததைக் கண்ட பிங்கலன், தன் மனதில் மிகப்பெரும் ஒவ்வாமையால் ஆட்கொண்டு விடுகிறான். 

    கிட்டத்தட்ட ஒவ்வொரு கதைமாந்தரும் ஏதாவதொரு புள்ளியில் தத்துவ கேள்விகளில் ஈடுபடுகின்றனர். அனைத்து மானிட அகம் சார்ந்த கேள்விகளும் விவாத பொருளாக வருகின்றன.  வாழ்வின் பொருளை, பிரபஞ்சத்தின் உண்மையை எங்காவது ஒரு இடத்தில தொட்டு, மொண்டு பருகிவிட நினைக்கும் ஒரு பேரிலக்கியம் இது. பல்வேறு மறுவாசிப்புகள் அவசியம் நிகழ வேண்டிய நூல் இது.

    ஸ்ரீபாத பாகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும், மணிமுடியில் விளக்கம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, பிரம்மராயர் குருட்டு யானையை சரியாக பரிசோதிக்காததால் தண்டிக்கப்படுகிறார். ஆனால் அவரை பழி வாங்கவே, அவர் சோதித்த குருட்டு யானையின் கண்மணிகளில் வந்தமர்ந்து அவரை ஏமாற்றினர் விண்ணவர் என்று அதனூடாக ஒரு கதை விரிந்தோடுகிறது. இப்படியாக ஒவ்வொரு கிளையிலும் கதைகள் முளைத்துக்கொண்டே போவது, இந்நூலின் பிரம்மாண்டத்தையும் வாசகனின் கற்பனையையும் கூட்டிகொண்டே போகிறது.

    சோனா நதியில் இருந்து கிளம்பும் காற்று இனிய இசையாக விஷ்ணுபுர மண்டபத்தில் எதிரொலிப்பது, இயற்கையின் இசை மனிதன் அறிந்த அனைத்து தாளங்களை விடவும் இனிமையானதாக தோன்றுகிறது. யானைகளை மனிதன் எல்லா நிலைகளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறான்.யானைகளின்றி அன்று எதுவுமே சாத்தியப்பட்டு இருக்காது. 

    தான் கண்ட பெண் மேல் முடிவிலா ஆசை கொண்டு பித்துப் பிடித்துப் பிறகு ஒரு துறவியாக மாறும் திருவடி. பிங்கலன், சங்கர்ஷணன், திருவடி அனைவரும் பெண்ணின் மீது கொண்ட காமத்துடன் சேர்ந்து தன் ஞான கேள்விகளுக்கு விடை தேடவும் முயற்சிக்கின்றனர்.

    அக்கால சிற்பக்கலையின் சிறப்பும், நேர்த்தியும் அதன் கணித ஒழுங்கும் விஷ்ணுபுரமெங்கும் வருகிறது. விண்ணைத்தொடும் கோபுரங்கள் விண்ணவர் மண்ணில் இறங்கும் ஊர்திகள். மேகத்திற்கு மேலே வானில் உள்ளன கோபுர உச்சிகள். அதன் பிரம்மாண்டமே விஷ்ணுபுர வாசிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதுவே மக்களிடம் ஒரு அமைப்பையும், ஒழுங்கையும் நிர்மாணிக்கும். 

    விஷ்ணுபுரம் 'அக்னிதத்தனால்' உருவாக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகிறது. அவரது சந்ததிகளே அதன் ஞானாதிபதியான 'சர்வக்ஞர்' என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணுபுரம் பல்வேறு முறை முழுவதுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் உருவாகும் போது அங்கே விஷ்ணு 'நிர்மால்ய'மாக படுத்திருப்பார். அங்கிருந்தே விஷ்ணுபுரம் மீண்டும் தன்னை வளர்த்துக்கொள்ளும்.

    மனதினை கட்டுப்படுத்துவது என்றால்  என்ன? மனம் மனமற்ற பொழுதில் என்னவாக இருக்கும். அதுவே ஞானத்தின் கடைசிப் படியா? அனுபவத்தை அறிய முடியுமா? அறியும் பொருட்டு அது முழுமையான அனுபவமா இருக்குமா? போகத்தின் உச்சம் தான் என்ன? காமமா? காமவிடுதலை ஞானத்தின் திறப்பா? அல்லது காமத்தினை அப்படியே ஏற்றல் ஞானத்தை பெருக்குமா? பிரம்மம் என்பது எது? அதை அறிய முடியுமா? பிரபஞ்ச உண்மை என்று ஒன்று உள்ளதா? அல்லது அனைத்தும் தற்செயலின் பேரமைப்பா? பிரபஞ்ச அமைப்பின் விதிகளை யார் உருவாக்கியது? அல்லது அவ்விதிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட வெறும் பிரமையா? மனமற்ற நிலையிலேயே பிரபஞ்ச உண்மையை அறிய முடியுமா? அனைத்திற்குமான ஆதி எது? அல்லது ஆதியற்ற அனாதையா இப்பிரபஞ்சம்? 

    மேலே உள்ள கேள்விகள் இந்நூல் முழுவதும் வரும் விவாதங்களின் ஒரு சிறு தொகுப்பே. இவை குரு-சிஷ்ய போதனைகள், பொதுவான பேச்சுக்கள், அனைத்துலக ஞானிகள் மத்தியில் நிகழும் விவாதங்கள் என்று எந்த ஒரு பேதமும் அன்றி அனைத்து இடத்திலும் நூல் பூராவும் வந்துகொண்டே உள்ளது.  

    தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றும் பொருட்டு குடும்பத்துடன் விஷ்ணுபுரம் வந்து, தன் மகனை இழந்து, குடும்பத்தைப் பிரிந்து தாசித் தெருக்களில் தஞ்சம் அடைகிறான், சங்கர்ஷணன். தன்  மனைவியால் வெறுக்கப்படுகிறான். பித்துப் பிடித்து அலைந்து இறுதியில் மகாபுராணமான 'பத்மபுராணத்தை' பாண்டிய மன்னன் முன்னிலையில் அரங்கேற்றுகிறான்.  விஷ்ணுபுரத்தின் அத்தனை வரலாற்றையும் கூறுவது பத்மபுராணம். அதன் இறுதி பிரளயம் பாகத்தை முடிக்காமலேயே அதனை அரங்கேற்றினான் சங்கர்ஷணன். அதுவே காலம் காலமாய் விஷ்ணுபுர வரலாற்றை திரும்ப திரும்ப சொல்லும் பெரும் காவியமாகும்.

   கவிஞர்களை பகடி செய்யும் வகையில் நிறைய இடத்தில வருகிறது. "விஷ்ணுபுரத்தில் கவிஞர்களுக்கா பஞ்சம், இங்கு அனைவரும் கவிஞரே" என்று ஒருவர் சங்கர்ஷணனிடம் கூறுவது உச்சம். சங்கர்ஷணன் "ஆழ்வாருக்கு" மருத்துவனாக வேடமிட்டதனாலே, அரசவைக்குள் புகுந்து காவியத்தை அரங்கேற்றினான். அரசவைக் கவிஞரின் "கவிப்பெருமை" பகடிகளுள் ஒன்று. 

    பாண்டியனின் போக வாழ்க்கையம் அவனை சுற்றி நடக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டும், வல்லாளன் விஷ்ணுபுரத்தை கைப்பற்றும் சூழ்ச்சியும் விவரிக்கப்பட்டுள்ளது. 

    "மக்கள் மரபுகளை வழிபடுகிறவர்கள். எதிர்காலம் பற்றிய அச்சத்திற்கு மாற்றாக  வாழ்க்கையைச் சடங்காக மாற்றி வைத்திருக்கிறார்கள். புதிதாக ஏதும் நிகழ விடக்கூடாது".   மனிதன்  அச்சப்பட்டுக் கொண்டே இருக்கிறான். வாழ்க்கையை ஒரு சடங்காக மாற்றும் போது  அது ஒரு பேரமைதியையும் அதற்கு மேல் ஏதும் சிந்திக்க இல்லை  என்னும் உணர்வையும் தரும் போது , அவன் வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்கிறான். மனிதன் எப்போதுமே சிந்திக்க பயந்தவன். அல்லது சிந்தனைகளை குறுக்கிக் கொண்டவன். எல்லாம் எழுத்தப்பட்டவை என்பதனாலே மக்கள் அமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் எதிர்வினையாகவே தத்துவம் பிறக்கிறது. அச்சத்தை மிதித்து வேறு திசையில் எழ அது உதவுகிறது. அந்த தத்துவத்தின் பல்வேறு கண்டடைதலே மதங்களாகவும், மார்க்கமாகவும் உருப்பெறுகிறது. மீண்டும் இதனை அவன் சடங்காக்கி அதன் மேல் நின்று சிந்தித்து புதியவற்றை அடைகிறான்  இதற்கு என்றுமே எல்லை இல்லை.

    விஷ்ணுபுரத்தை அழிக்க ஒரு சாரார் எப்போதும் முயற்சி எடுத்துக்கொண்டே உள்ளனர். மகாகாசியபரின் ஆணைப்படி சிற்பியினை தன் வசப்படுத்தி இந்த மிகப்பெரும் விஷ்ணுபுரத்தையே ஸ்ரீபாத விழாவின் இறுதி நாளன்று அழிக்க நினைக்கிறார்கள். அந்த சிற்பி பெரும் சேதம் விளைவிக்கும்  பொருட்டு  மைய கோபுரத்தின் மீது ஏறினான். அங்கு மிகவும் மனம் சஞ்சலப்பட்டு உச்சியிலிருந்து கீழே விழுந்து மாண்டு விடுகிறான். அவன் மனம் ஆட்கொள்ளப்பட்டது.

       சுடுகாட்டுச் சித்தன் ஒருவன் பட்டாச்சாரியாரை அவரின் சீடர்கள் முன் விவாதத்தில் தோற்கடித்த ஒரு சிறுவனை தன் சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு அனைத்து போதனைகளையும் கற்பிக்கிறான். அவனை காஸ்யபன் என்று பெயர் வைக்கிறான். அவர்கள் இருவரும் புரியும் ஆனந்தத் தாண்டவத்தை வாசிக்கும்போது நாமும் எல்லாமும் விட்டு ஆட தோன்றுகிறது. அவனும் அவன் சீடனும் மகாஞான சபையில் பங்குகொள்கிறார்கள்.

      அஜிதன் என்னும் பௌத்த மார்க்கம் கொண்டவன் விஷ்ணுபுரத்தின் மகாஞான சபையை கூட்ட சவால் விடுகிறான். பாண்டியனின் ஆணைக்கு இணங்க சபை கூட்டப்படுகிறது. 

    இந்திய ஞான மரபில் இத்தனை மார்க்கங்களும், மரபுகளும் உள்ளது என்பதை ஞான சபையில் நடக்கும் பெரும் தர்க்கங்களையும், தத்துவ விவாதங்களையும் வைத்து தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. அந்த மார்க்கங்களின் உள்ளே செல்ல, இது ஒரு நுழைவாயிலாக இருக்கும். கற்பனை செய்யமுடியாத அளவு எண்ணிக்கையில் மிகுந்தவை. 

    ஒவ்வொரு தர்க்கமும் இன்னொன்றை விட சிறந்ததாகவும், ஏற்றுக்கொள்ளும் படியும் இருக்கும். அதனை எதிர்த்து சமன் செய்யும் தர்க்கமும் அவ்வாறே இருக்கும். ஒவ்வொரு மார்க்கமும் தங்கள் வாதத்தைத் வைத்து கொண்டிருக்கையில் விஷ்ணுபுர மகாசபையின் சர்வைக்ஞர்(பவதத்தர்) சரியான சந்தர்ப்பத்தில் வாதியின் தர்க்கத்தை உடைக்கும் பொருட்டு அல்லது வாதத்தினை விஷ்ணுபுரத்தின் கோட்பாட்டிற்கிணங்க பதில் கூற முடியாதளவுக்கு சமன் செய்து விடுவார்.

    பிரம்மம் என்பதே சத் மற்ற அனைத்தும் அசத். ஏழு வகை உடலை உதறி ஆத்ம, தூய நிலையானா பிரம்மத்தை நோக்கி பயணிப்பதே முக்தி என்று பவதத்தர் பல்வேறு வாதங்களில் நிறுவுகிறார்.  

    வேதங்களில் இருந்து பல்வேறு மேற்கோள்களும், விவாதங்களும் வந்த வண்ணமே உள்ளன. வேதத்தினை ஏற்றும் மறுத்தும் செய்யும் விவாதங்கள் நிரம்பி உள்ளன. 

        விஷ்ணுபுரத்தின் ஞானசபையில் நடந்த விவாதங்களில் பல்வேறு மார்க்கம் கொண்டவர்களும் பங்கு கொண்டு தங்கள் தரப்பின் தர்கத்தினை முன்வைத்தனர். இந்திய பெருநிலப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பும் பங்கு கொண்டு விவாதித்தனர். அவ்விவாதங்கள் மட்டுமே தனியாக ஒரு நூலாக கொண்டு வரலாம். இதை மட்டுமே நிறைய முறை வாசிக்க வேண்டும். நமது சிந்தனை ஆழத்தினை சோதிக்கும் பல நூறு கேள்விகளும் தர்க்கங்களும் இதில் அடங்கி உள்ளது. நம்மை மேலும் சிந்திக்க வைக்க இது உதவும். அஜிதரின் தர்க்கங்களை அனைத்து பிரிவினரும் சோதனை செய்து தோல்வியுற்றனர். அணைத்து மார்க்கத்திலும் தர்க்கங்கள் தரிசனங்கலாக தாவும்  நேரம் வரும்போது , பவதத்தர் அதனை உடைக்கும் வகையில் கேள்விகளை தொடுத்து விஷ்ணுபுர கோட்பாட்டினை நிலை நாட்டுவார். அதே முறையை அஜிதர் பவததத்தருக்குக் கையாண்டு ஞானசபையில் வெற்றி கொள்ளகிறார்.

    அஜிதர், அனைத்தையும் அனுமானமாகவும், அறிய முடியாமையாகவும் கொண்டு தன் தர்க்கத்தை நிலைநாட்டுகிறார். பிரபஞ்சத்தின் ஆதி காரணத்தை நம்மால் அறிய முடியாது என்கிறார். "அறியமுடியாதென்பதை அறிவதே ஆகப் பெரிய மானுட ஞானம்." நாம் அறிந்தது "காலம்" ஒன்றை மட்டுமே. காலத்தினை சக்கரமாக உருவகம் செய்து அதன் மைய புள்ளியே மகாதர்மம் என்று நிலைநாட்டுகிறார். மகாதர்மம் எங்கும் என்றும் நிரம்பி உள்ளது. அது எதுவாகவும் மாறுவது இல்லை. இந்திய ஞானமரபில் பௌத்தம் தான் கொண்ட பெரும் பங்கினை இதில் காணலாம்.

    அஜிதர் ஞானசபையை வென்ற பிறகு, மிகவும் சோர்வடைகிறார். அவருக்கு அந்த வெற்றியில் உள்ளூர மகிழ்ச்சி இல்லை. இவை அனைத்தும் மனிதன் தன் அகங்காரத்தை பூர்த்தி செய்யும் செயல்களன்றி வேறில்லை என்று மனம் சஞ்சலப்படுகிறார். விஷ்ணுபுரத்தில் "அஜிதரை" சுற்றி நிறுவனங்கள் எழுப்பப்பட்டு, சமூகம் உருவாக்கப்படுகிறது. 

    நூலின் இறுதி பாகமான "மணிமுடி"யில் விஷ்ணுபுரத்தின் "பிரளயம்" வருகிறது.   பல நூறாண்டுகள் கழித்து வருவதாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் வந்த திருவடி, பிங்கலர், ஸ்ரீதரர், சங்கர்ஷணன்   ஆகியோருக்கு தனியாக மார்க்கமும், அவரை பின்பற்றுவோரும் வருகின்றனர். 

    பிரம்மாண்டங்களுக்கு பேர்போன விஷ்ணுபுரம் சிதைந்து அழிவின் விளிம்பில் தத்தளிக்கிறது.  போர்களால் கோபுரங்கழும் சிற்பங்களும் சிதைக்கப்பட்டு பெரும் காடாக விஷ்ணுபுறம் காட்சி அளிக்கிறது. ஊரில் நூற்றுக்கும் குறைவான மக்களே வாழ்ந்தனர். அனைவரும் மதுரை போன்று ஊர்களுக்கு பெயர்ந்து  கொண்டே இருந்தனர்.  

    இமயமலை முகடுகளில் மகா அஜிதரையும் விஷ்ணுபுரம் என்ற ஊரையும் கேள்விப்பட்டு "யோகவிரதன்" என்னும் பௌத்தன் விஷ்ணுபிரத்திற்கு  வந்து "ஸ்ரீசக்கரம்" பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.  அவனுடன் சங்கர்ஷணன் மார்க்கம் கொண்டவனான "பாவகன்" பல்வேறு தர்க்கங்களில் ஈடுபடுகிறான். 

    செம்பர்களைப் பற்றியும், அவர்களின் மூப்பனானஆதிமூப்பனே விஷ்ணு என்றும் ஒரு மாற்று வரலாறு சொல்லப்படுகிறது. விஷ்ணுபுரம் காடாகி கோலம் கொண்டுள்ளதால், காட்டின் வர்ணனைகள் நிறைய இடம்பெற்றுள்ளது. வேதத்ததன் (கடைசி சர்வஞர்) சோலைபைத்தியமாக காடுகளில் மலைகளில் நதிகளில் சுற்றி அலைகிறார். மனம் மட்டுமே உடைய ஒரு தூய ஆத்மாவாக, எந்த ஒரு தர்க்க ஞானமும் , மனிதன் கட்டி அமைத்த பல்வேறு நெறிமுறைகளும் அன்றி வருவது, மனிதனின் ஏக்கத்தையும், சுதந்திரத்தின் தூய்மையையும் மனம் அற்ற நிலையின் மனிதத் தன்மையும் இருப்பதாக அமைகிறது.

    ஹரிததுங்காவின் இருப்பே இதில் எப்போதும் உள்ள இருப்பாகும். அதுவே விஷ்ணுபுரத்தின் அசையாத சாட்சி. அதன் தோற்றமும், வாழ்க்கையும், அழிவும் அச்சிகரம் மட்டுமே அறியும்.

    நூலினை வாசிக்க வாசிக்க பல்வேறு இடங்களில் நம்மை அறியாமலேயே மயிர்கூச்சு அடைகிறோம். சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, அதில் சில தர்க்கத்தின் முடிச்சினை நாம் அறிந்த உவகையினாலும் , சில தரிசினத்தின் தொடக்க புள்ளியைக் கண்ட பொழுதுமாக உள்ளது. தர்க்கத்திருக்கும் தரிசினத்திற்கும் நடக்கும் இடைவிடாத கண்ணாமூச்சி ஆட்டமாக இந்நூல் உள்ளதோ என்ற சிந்தனையும் எழுகிறது. அல்லது மனித மனதிற்கு அப்பாற்பட்ட வேறொன்றை தொட முயலும் ஒரு பெரும் முயற்சியாக நான் இதைப் பார்க்கிறேன். 


Wednesday, 2 December 2020

காந்தி - கடிதம்

 

அன்புள்ள ஜெ,

            தங்களின் 'தகடூர் புத்தகப் பேரவையின்' காந்தியிடம் செல்ல வழிகாட்டியவர்கள் சிறப்புரையை  நேரலையில் கண்டேன். மேலும் தங்களின் காந்தி பற்றிய கடிதங்களும் (உங்களின் வலைதளத்தில்), தங்களின் 'உரையாடும் காந்தி'  புத்தகமும் வாசிக்கும் பொழுது, நம் பாடப்  புத்தகத்திற்கு அப்பால் உள்ள ஒரு காந்தியினை புரிந்து கொள்ள உதவி புரிகிறது. 

            காந்தியத்தின் தேவை முன் எப்பொழுதையும் விட இன்று மிகவும் தேவைப்படுகிறது. காந்தியை சொல்லால் முழுவதுமாக விவரிக்க முடியாது என்றே தோன்றுகிறது. எவ்வளவு விவரித்தாலும் காந்தியத்தை  செயலால் மட்டுமே முழுமைப் பெற வைக்க முடியும். தன் வாழ்நாள் முழுவதும்,  'இலட்சிய செயலாற்றிக்கொண்டே' இருந்தவர்கள் வரலாற்றில் மிகவும் குறைவு. செயலே சொல்லாகவும், சொல்லே செயலாகவும் தன் வாழ்க்கையை  அர்ப்பணித்தார் காந்தி.

            உண்மையில் காந்தியை எதிர்த்தலும் ஒரு வகையான காந்தியமே. அவரின் ஏதோ ஒரு கூற்று நம்மை நிலைகொள்ள செய்யாமல் ஆழ் மனதில் உறுத்திக்  கொண்டே இருக்கிறது என்றால் , அதனை சரி செய்ய நாம் அந்த கூற்றுக்கு ஒரு எதிர்வினையை செய்து பார்ப்போம். அது அவர் கூறியதற்கு மாற்று கருத்தாக இருந்தாலும் அச்செயலும் காந்தியத்தினால் முளைத்த விதையே. அவற்றில் நாம் வெற்றி கண்டாலும் தோல்வி கண்டாலும் அதன் வேர் காந்தியத்தில் உள்ளது. செயலாற்றிக்கொண்டே இருப்பதன் முக்கியதுவத்தை அது உணர்த்துகிறது.

            தாங்கள் ஒரு வாசகர் கேள்விக்கு (இவ்வளவு அரசியல் திரிப்புகள் உங்கள் சொல்லின் மேல் சொல்லப்பபட்டாலும் , நீங்கள் ஏன் சலிக்காமல் திரும்ப திரும்ப உரையாடிக்கொண்டே இருக்குறீர்கள்? என்ற வகையான கேள்விக்கு), 'உரையாடிக்கொண்டே இருப்பது என் கடமை, அதை ஏற்பதும் ஏற்காததும் வாசகர் மனதில் உள்ளது. வாசகனுக்காக நான் உரையாடவில்லை, எனக்காக உரையாடுகிறேன்'   என்ற வகையில் பதில் கூறினீர்கள். அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காந்தியின் கூற்றே.

அன்புடன் ,

பிரவின்,

தர்மபுரி